Monday, December 18, 2023

யோகி 28

 

முரளிதரன் சொன்னதற்கு அந்த மனிதர் தலையை ஆட்டினாலும் உடனடியாக நகரவில்லை. யோசித்தவராகச் சொன்னார். “நிறைய கேஸ்கள் இருக்கே சார். எப்படி நீங்க...?”

 

முரளிதரன் சொன்னார். “அதுல சிலத தேர்ந்தெடுத்து முழுமையாய் செக் பண்ணச் சொல்லியிருக்காங்க. உங்க கம்ப்யூட்டர்லயும் எல்லாம் இருக்குமில்லயா? முதல்ல நோயாளியோட பெயர், வயசு, விலாசம், அட்மிட் ஆன தேதி, டிஸ்சார்ஜ் ஆன தேதி, ட்ரீட்மெண்ட் பார்த்த டாக்டர், உயிரோட டிஸ்சார்ஜ் ஆனாங்களா, இறந்து டிஸ்சார்ஜ் ஆனாங்களாங்கற ரிப்போர்ட்ட ரெடி பண்ணி கொடுங்க..... அதுல சிலத மட்டும் நான் தேர்ந்தெடுத்து முழுசா எல்லாத்தையும் செக் பண்ண வேண்டியிருக்கும்....”

 

தலையசைத்து விட்டு அந்த மனிதர் மெல்ல எழுந்தார். “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க சார். ரிப்போர்ட்டோட வர்றேன்...” என்று சொல்லி விட்டு வெளியே வந்தவர் சில அறைகள் தள்ளி இருந்த ஆட்களில்லாத காலி அறை ஒன்றில் நுழைந்து இன்னொரு எண்ணுக்குப் போன் செய்தார். முரளிதரன் வந்த விஷயத்தைத் தெரிவித்து விட்டுக் கேட்டார். “நிஜமாவே இப்படி ஒரு இன்ஸ்பெக்ஷன் இருக்கா?”

 

மறுமுனை சொன்னது. “மானியம் கேட்கறதுல முறைகேடுகள் சில இடங்கள்ல இருக்குன்னு புகார் நிறைய இருக்கு. அதுக்கு மத்திய அரசு சில ஆஸ்பத்திரிகள்ல திடீர் சோதனைகள் செய்யப்போறதா நானும் கேள்விப்பட்டேன். ஆனா தமிழ்நாட்டுல எங்கேயும் சோதனைக்கு வந்ததா தெரியல.”

 

வந்திருக்கற ஆள் பேர் ஆர். முரளிதரன். அந்த டிபார்ட்மெண்ட்ல இப்படி ஒரு ஆள் இருக்காரா, அந்த ஆள் இங்கே வந்திருக்கிறது அதிகாரபூர்வமா தானான்னு செக் பண்ணிச் சொல்ல முடியுமா?”

 

பத்து நிமிஷம் பொறு. நான் கேட்டுச் சொல்றேன்.”

 

மருத்துவமனை பொறுப்பாளர் சரியென்று சொல்லி விட்டு மறுபடி தனதறைக்கு வந்தார். முரளிதரன் தன் செல்போனில் வாட்சப் தகவல்களைப் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவரிடம் மிக பவ்யமாக பொறுப்பாளர் சொன்னார். “ரிப்போர்ட் ஜெனெரேட் பண்ணச் சொல்லியிருக்கேன் சார். நீங்க என்ன சாப்டறீங்க... காபி, டீ, ஜூஸ்...”

 

முரளிதரன் சொன்னார். “எதுவும் வேண்டாம்....”

 

சற்று தயங்கி அங்கே சில வினாடிகள் நின்று விட்டு மறுபடியும் பொறுப்பாளர் வெளியே வந்து லேசான பதற்றத்துடன் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டே முன்பு பேசிய காலி அறைக்குள் போய் அமர்ந்து கொண்டார். சில நிமிடங்கள் கழித்து அவர் முன்பு பேசிய ஆள் அழைத்துச் சொன்னார்.

 

அந்த ஆள் டிபார்ட்மெண்ட்ல இருந்து அனுப்பப்பட்டவர் தான். டில்லி, மும்பை, கல்கத்தாலயும் சில ஆஸ்பத்திரிகளுக்கு இது மாதிரி தணிக்கை செய்யப் போயிருக்காங்களாம். சென்னையில உங்க ஆஸ்பத்திரிக்கு மட்டும் தான் முதல்ல அனுப்பியிருக்காங்க. காரணம் பேர்லயே செவென் ஸ்டார் இருக்கறதால இருக்கலாம்...” என்று சொல்லி தன் நகைச்சுவைக்குத் தானே அந்த நபர் சிரித்துக் கொண்டார். 

 

மருத்துவமனை பொறுப்பாளருக்குச் சிரிப்பு வரவில்லை. இனி என்ன செய்வது என்று அவர் சிறிது நேரம் யோசித்தார். முக்கியமாய் மேனேஜிங் டைரக்டரை அழைத்து முரளிதரன் என்று ஒரு தணிக்கை அதிகாரி வந்திருப்பதைச் சொல்வதா வேண்டாமா என்று சிறிது நேரம் யோசித்தார். பல வேலைகள், பல பிரச்சினைகள் உள்ள மேனேஜிங் டைரக்டர் இந்த சில்லறை விஷயத்திற்கு அழைத்துப் பேசினால் கோபித்துக் கொள்ளவும் கூடும் என்று பின்பு தோன்றியதால் அவரை அழைக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார்.

 

பின் ஒரு நர்சை அழைத்துசதீஷை உடனடியாய் வரச் சொல்லும்மாஎன்று சொன்னார். அவள் போனவுடன் மெல்ல நடந்து போய் தனதறையை எட்டிப் பார்த்தார். இப்போதும் முரளிதரன் தன் செல்போனில் சாவகாசமாய் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார். இவர் எட்டிப் பார்ப்பதைக் கூட அவர் கவனிக்கவில்லை.  பொறுப்பாளர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

 

சதீஷ் என்ற இளைஞன் வரும் வரை பொறுமையில்லாமல் அவர் அந்தக் காலி அறையில் காத்திருந்தார். சதீஷ் அந்த அறையைக் கடந்து போவது தெரிந்தது. அவர் அவருடைய அறையில் இருப்பதாய் நினைத்து அவன் அங்கு போகிறான் என்று புரிந்ததும் அவசரமாக எழுந்து வெளியே வந்து அவனை அழைத்தார். அவன் திரும்பிப் பார்த்ததும் அந்த அறைக்கு வருமாறு சைகை செய்தார்.

 

அவன் வந்ததும் அவர் தாழ்ந்த குரலில், முரளிதரன் என்ற தணிக்கை அதிகாரி தரச் சொல்லிக் கேட்கும் ரிப்போர்ட்டைப் பற்றிய விவரங்களைச் சொன்னார். அவன் சொன்னான். “அதொன்னும் பிரச்சினை இல்லை சார். பத்து நிமிஷத்துல ஜெனரேட் பண்ணித் தந்துடலாம்.”

 

பொறுப்பாளர் கவலையுடன் சொன்னார். “அதில் சிலதை அவர் தேர்ந்தெடுத்து அந்தச் சிலதோட முழு ஃபைல்களும் பார்ப்பார் போலத் தெரியுது.” 

 

சதீஷ் யோசனையுடன் தலையசைத்தான். “ரிப்போர்ட்ல சைத்ரா...”

 

அதைக் கண்டிப்பா சேர்க்கணும். அந்த ரெக்கார்ட்ஸ் நம்ம கிட்ட சரியா இருக்குஎன்று அவர் திருப்தியுடன் சொன்னார். சைத்ராவின் தந்தை ஒரு டாக்டர் என்பதாலும் அந்த ஆள் ஏற்கெனவே கோர்ட்டுக்குப் போனவர் என்பதாலும் அவள் மரணத்தில் சந்தேகம் கொண்டு எப்போது வேண்டுமானாலும் பிரச்சினை உருவாக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்ததால் அந்த ஆவணங்களை மிகவும் கச்சிதமாகத் தான் அவர்கள் வைத்திருந்தார்கள். சுப்ரீம் கோர்ட்டுக்கே சென்றாலும் அந்த ஆவணங்களில் யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியாது.

 

சதீஷ் மெல்லக் கேட்டான்.  டாக்டர் வாசுதேவன்?”

 

பொறுப்பாளர் அதில் பிரச்சினையை உணர்ந்தார்.

 

 

சைத்ரா சம்பந்தப்பட்ட ஆவணங்களைத் தயார் செய்தது போல் கச்சிதமாக வாசுதேவன் விஷயத்தில்  அவர்கள் அக்கறை காட்டியிருக்கவில்லை. வாசுதேவன் குடும்பத்தினர் பிரச்னை செய்பவர்களாக இருந்திருந்தால் அவர் மரணம் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் கச்சிதமாகத் தயார் செய்திருக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கும். வாசுதேவன் குடும்பத்தினர் சந்தேகப்படாமல் இருந்ததால் அது சம்பந்தமான போலி ஆவணங்கள் தயார்ப்படுத்தாமல் அப்படியே விடப்பட்டிருந்தன.

 

பொறுப்பாளர் மிகத் தாழ்ந்த குரலில் சொன்னார். “டாக்டர் வாசுதேவன் பெயரைச் சேர்க்க வேண்டாம். அதனால கோவிட்ல இறந்த நர்ஸ் ரோஸ்மேரி பெயரையும் சேர்க்காதீங்க. ஒருவேளை அப்புறமா தெரிய வந்தாலும் நாம நோயாளிகள் பத்தி தான் அவர் கேட்டதா நினைச்சோம்னும், ஸ்டாஃப்பும் சேர்த்து கேட்டார்ங்கறது தெரியலைன்னும் சொல்லிக்கலாம்.” 

 

சதீஷ் தலையசைத்தான். பொறுப்பாளர் சொன்னார். “ரிப்போர்ட்டை என் ரூமுக்குக் கொண்டு வாங்க

 

ஓக்கே சார்என்று சதீஷ் சொல்லி விட்டு நகர்ந்தான்.  பொறுப்பாளர் தனதறைக்குத் திரும்பினார்.

 

சாரி சார். கம்யூட்டர் கொஞ்சம் பிரச்சன பண்ணிடுச்சு. ஆனா அத சரி பண்ணிட்டாங்க. அதனால தான் லேட். பத்து நிமிஷத்துல ரிப்போர்ட் வந்துடும்.” என்று சொன்னபடியே பொறுப்பாளர் தன் இருக்கையில் அமர்ந்தார்.

 

முரளிதரன் சங்கடப்படாமல் சொன்னார். “பரவாயில்ல. எல்லா இடத்துலயும் இந்தப் பிரச்சன இருக்கவே இருக்கு. டெக்னாலஜில எத்தனையோ சௌகரியமும் இருக்கு. பிரச்சனையும் கொஞ்சமாவது இருக்கு தான். என்ன பண்றது

 

பொறுப்பாளர் திருப்தியுடன் புன்னகைத்தார். இந்த ஆள் பிரச்சினை செய்யும் ஆளாய் தோன்றவில்லை. அனுசரித்துப் போக முடிந்தவராகவே தெரிகிறார். பொறுப்பாளர் நட்பு தொனியில் கேட்டார். “இந்த இன்ஸ்பெக்ஷன் எல்லா ஆஸ்பத்திரியிலும் செய்வீங்களா சார். இல்லை ஒருசில ஆஸ்பத்திரிகள்ல மட்டும் தான் செய்வீங்களா?’

 

முரளிதரன் சொன்னார். “இப்போதைக்கு ரேண்டமா செலக்ட் பண்ணி சில ஆஸ்பத்திரிகள்ல மட்டும் செய்யச் சொல்லியிருக்காங்க. எங்க ரிப்போர்ட்ஸ வெச்சு மத்த ஆஸ்பத்திரிகள்லயும் செய்ய வேண்டிய அவசியம் இருக்கா இல்லையான்னு முடிவு செய்வாங்க. எனக்கு இங்கே ஒரே நாள் தான் தந்திருக்காங்க. இங்கே முடிச்சுட்டு நாளைக்கு ஹைதராபாத்ல ஒரு ஆஸ்பத்திரிக்குப் போகணும்...”

 

பொறுப்பாளர் நட்புணர்வைக் கூடுதலாகக் காட்டிய புன்னகைத்தபடி கேட்டார். “இது ஒரு அலுப்பான வேலையில்லையா சார்?”

 

முரளிதரனும் புன்னகைத்தார். “நாயாய் பொறந்துட்டு குரைக்காமல் இருக்க முடியுமா?”

 

பொறுப்பாளர் வாய்விட்டுச் சிரித்தார். இந்த ஆள் அகம்பாவியாகவோ, பிரச்னை செய்யும் ஆளாகவோ தெரியவில்லை. சற்று நிம்மதியாயிற்று. ஆனால் அந்த நிம்மதி சீக்கிரமே தொலைந்தது.


(தொடரும்)

என்.கணேசன்




 

3 comments:

  1. எதிர்பார்த்திருந்தேன் தங்களுடைய இடுகைக்கு…

    ReplyDelete
  2. Will the investigator charge the culprits? Going very interesting.

    ReplyDelete
  3. டாக்டர் வாசுதேவன் நிலைமை... விசாரணை அதிகாரிக்கும் வரக்கூடாதுனு தான்... முரளிதரனை போன்ற அதிகாரி வந்திருக்கிறார்...பிறகு சதீஷ் விசாரிக்கப்படலாம்....

    ReplyDelete