Thursday, December 7, 2023

சாணக்கியன் 86


சாணக்கியருடன் ரகசியமாக சமாதான உடன்படிக்கை செய்து கொண்ட பிறகு ஆம்பி குமாரன் வாழ்க்கை அமைதி நிலைக்குத் திரும்பியது. அவன் தூதன் மூலம் அனுப்பிய செய்திக்கு யூடெமஸிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. சாணக்கியர் சொன்னது போல யூடெமஸ் புரட்சிக்காரர்கள் பறித்துக் கொண்ட பகுதியை மீட்க அவனே படையுடன் வர வேண்டுமென்று ஆம்பி குமாரன் சொல்லி விட்டதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் ஆம்பி குமாரன் நிம்மதியாக உறங்க முடிந்தது. வாழ்க்கை எத்தனையோ படிப்பினைகளை அவனுக்குத் தந்திருந்ததால் அமைதிக்கு மேல் எதற்கும் ஆசைப்படாத ஒரு மனநிலைக்கு ஆம்பி குமாரன் வந்து சேர்ந்திருந்தான்.  காலம் வேகமாக உருண்டோடியது.

 

ஒரு நாள் அலெக்ஸாண்டரின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது. பாபிலோனில் இருக்கையில் ஏதோ விஷக்காய்ச்சல் வந்து அலெக்ஸாண்டர் பன்னிரண்டு நாள் உடல்நலமில்லாமல் படுத்திருந்தான் என்றும் சிகிச்சை எதுவும் பலன் அளிக்காமல் அவன் இறந்து போனான் என்றும் கேள்விப்பட்ட போது ஆம்பி குமாரனால் அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. யவனர்கள் அலெக்ஸாண்டரைத் தெய்வாம்சம் பொருந்தியவனாகவும், கடவுளின் அவதாரமாகவும் நம்பியிருந்தார்கள். சிலர் அவன் போர்க்கடவுளின் புத்திரன் என்றார்கள். அதற்கேற்ற மாதிரி அலெக்ஸாண்டரின் வெற்றிகளும் அமைந்து இருந்தன. அப்படிப் பட்டவன் இளம் வயதில் இப்படி மரணமடைந்தான் என்பதை ஜீரணிக்க யவனர்களுக்கு மட்டுமல்லாமல் ஆம்பி குமாரனுக்கும் கூடக் கஷ்டமாக இருந்தது.

 

ஆம்பி குமாரன் உண்மையாகவே ஒருவித சோகத்தை உணர்ந்தான். அலெக்ஸாண்டர் அவனை வாயார நண்பா என்றழைத்ததும், எல்லா விதங்களிலும் அவன் மேலான நிலையில் இருந்த போதும் ஆம்பி குமாரனை எப்போதும் மரியாதைக் குறைவாக நடத்தாததும் ஆம்பி குமாரனுக்கு நினைவுக்கு வந்தன. எத்தனையோ  சமயங்களில் எதிர்பார்ப்பது போல நடக்கா விட்டாலும் கூட அவமானப்படுத்துகிற மாதிரி அலெக்ஸாண்டர் அவனிடம் நடந்து கொண்டதில்லை. யோசித்துப் பார்த்தால் பிலிப் கூட சில சமயங்களில் கர்வம் காட்டியிருக்கிறான். ஆனால் அலெக்ஸாண்டர் கர்வம் காட்டியதில்லை. கடைசியில் ஆம்பி குமாரனை சத்ரப் ஆக நியமித்து கௌரவப்படுத்தியும் இருக்கிறான். இந்த எண்ணங்களால் சோகத்தை உணர்ந்த ஆம்பி குமாரன் க்ளைக்டஸை அழைத்து யவனர்கள் வழக்கப்படி அலெக்ஸாண்டர் நினைவாக என்ன சடங்குகள், வழிபாடுகள், பூஜைகள் செய்ய வேண்டுமோ அதற்கான ஏற்பாடுகளை எந்தக் குறையுமில்லாமல் செய்ய உத்தரவிட்டான்.

 

க்ளைக்டஸும் யவன வீரர்களும் பெரும் துக்கத்தை உணர்ந்தார்கள். யவன முறைப்படி நடந்த வழிபாடுகளில் தாங்க முடியாத துக்கத்தோடு அவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் அந்தத் துக்கம் அவர்களையும், ஆம்பி குமாரனையும் தாண்டி வெளியே எங்கும் பரவவில்லை. மாறாக சிலரிடம் அலட்சியமும், பலரிடம் மகிழ்ச்சியும் தெரிந்தன. மக்கள் புரட்சி சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததால் அலெக்ஸாண்டரின் மரணச் செய்தியைக் கேட்டதும் விழா போல் கொண்டாடினார்கள்.     

 

அலெக்ஸாண்டர் மரணமடைந்த செய்தியைக் கேட்டு ஒரு நாள் முழுவதும் துக்கம் தாளாமல் அழுத க்ளைக்டஸ் மக்களின் கொண்டாட்டத்தைத் தாங்க முடியாமல் கோபத்தோடு ஆம்பி குமாரனிடம் வந்தான். “சத்ரப். சக்கரவர்த்தியின் மரணத்தைக் கொண்டாடும் மக்களை உடனடியாகத் தண்டிக்க வேண்டும்.”

 

ஆம்பி குமாரன் அவனைப் போல் கோபமும் அடையவில்லை. பதற்றமும் அடையவில்லை. அமைதியாக அவன் சொன்னான். “க்ளைக்டஸ். மக்கள் இந்தச் செய்தியை இன்று கொண்டாடுகிறார்கள். நாம் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டால் இன்றோடு அந்தக் கொண்டாட்டம் முடிந்து விடும். மக்கள் நாளை இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் நாம் அவர்களைத் தண்டித்தாலோ, கண்டித்தாலோ அது பல நாள் புரட்சியாக வெடிக்கும் வாய்ப்பிருக்கிறது. அது சிறு நெருப்பை ஊதிப் பெரிதாக்கி விடுவது போல் ஆகி விடும். அதனால் இதை அலட்சியப்படுத்துவது தான் நல்லது

 

க்ளைக்டஸ் திகைத்தான். அலெக்ஸாண்டர் பெயர் சொல்லி ஆளும் மண்ணில் அவன் மரணம் கொண்டாடப்படுவது அவனுக்குச் சரியாகத் தோன்றவில்லை. அதை அனுமதிப்பதும் சரியெனத் தோன்றவில்லை.  ஆனால் உணர்ச்சிவசப்படாமல் யோசித்துப் பார்த்தால் ஆம்பி குமாரன் சொல்வதிலும் தவறேதும் தெரியவில்லை. அவன் சொல்வது முற்றிலும் உண்மையே.

 

அவன் அறிந்த வரையில் ஆம்பி குமாரன் இப்படி அறிவுபூர்வமாக யோசிப்பவனோ, பேசுபவனோ அல்ல. அவனிடம் சமீப காலமாகத் தெரியும் மாற்றங்களில் பக்குவமும், முதிர்ச்சியும் தெரிகிறது. அதனாலேயோ என்னவோ ஆம்பி குமாரன் க்ளைக்டஸுக்குப் புதிராகவும், அன்னியமாகவும் தெரிந்தான்.   அலெக்ஸாண்டர் மரணத்தில் ஆம்பி குமாரனும் சோகம் அடைந்ததைக் கவனித்திருக்கா விட்டால் க்ளைக்டஸ் ஆம்பி குமாரனும் எதிரிகளுடன் இணைந்து விட்டதாகச் சந்தேகப்பட்டிருப்பான்.  அவன் சோகம் அடைந்ததைக் கவனித்திருந்ததால் ஆம்பி குமாரனின் போக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. யோசித்துப் பார்க்கையில் பிலிப்புக்கு நேர்ந்த கதி தனக்கு வர வேண்டாம் என்று எச்சரிக்கை உணர்வோடு ஆம்பி குமாரன் செயல்படுவது போல் தோன்றியது.

 

புரட்சிக்கு முக்கிய காரணம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷ்ணுகுப்தர் இங்கே தட்சசீலத்தில் சில நாட்கள் தைரியமாக வந்திருந்து விட்டுப் போயிருக்கிறார். அவரைச் சிறைப்படுத்தும் முயற்சி கூட இங்கு நடக்கவில்லை.

 

அவர் தட்ச சீலத்திற்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டு க்ளைக்டஸ் ஆம்பி குமாரனிடம் தெரிவித்தான். ஆம்பி குமாரன் ஏற்கெனவே ரகசியமாய் போய் அவரைச் சந்தித்து வந்திருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை. அப்படி அவன் தெரிவித்த போதும் அவன் எதிர்பார்த்தபடி சீறி நடவடிக்கை எடுக்கத் துணியாமல் ஆம்பி குமாரன் சொன்னான். “க்ளைக்டஸ். அந்த ஆள் வேண்டுமென்று தான் இங்கே வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அவரை நாம் சிறைப்படுத்துவோம், அதற்குப் பதிலடி தரும் வகையில் இங்கேயும் புரட்சி வெடிக்கச் செய்யலாம் என்று புரட்சியாளர்கள் காத்திருக்கிறார்கள் என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது…”

 

அப்போதும் க்ளைக்டஸ் மனத்தாங்கலுடன் கேட்டான். “இப்படி நாம் பயந்து பயந்து பதுங்கினால் அது நமக்கு பலவீனம் அல்லவா?”

 

“உண்மை தான். அதற்காகத் தான் யூடெமஸை ஒரு கூடுதல் படையுடன் கிளம்பி வரச் சொன்னேன். சேர்ந்து புரட்சிக்காரர்களை ஒடுக்குவோம், இழந்த பகுதிகளை மீட்போம் என்றும் சொன்னேன். சிந்துப் பிரதேசத்தைத் தாண்டி வர யூடெமஸுக்கும் மனமில்லை. நான் என்ன செய்வது? அவசரப்பட்டு முட்டாள்தனமாக எதாவது செய்து விட்டால் பின் நிதானமாக நிறைய காலம் நாம் வருத்தப்படும்படி ஆகி விடும். அதனால் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது.”

 

க்ளைக்டஸ் கேட்டான். “நாம் எதுவும் செய்யாமலேயே கூட அவர்கள் புரட்சி செய்யலாம். அப்போதும் நாம் சும்மா பார்த்துக் கொண்டிருப்போமா?”

 

ஆம்பி குமாரன் உறுதியாகச் சொன்னான். “அப்படி நடந்தால் கண்டிப்பாக முழு உறுதியுடன் புரட்சியை முறியடிப்போம். அதில் சின்னச் சந்தேகமும் வேண்டாம். அப்படி நடக்கும் பட்சத்தில் புரட்சிக்காரர்களுக்கு மக்களின் ஆதரவும், நமக்கு மக்களின் எதிர்ப்பும் முழுவீச்சில் இருக்காது. மக்கள் கோபத்தோடு முழுவீச்சில் சேர்ந்து கொள்ளாத வரை  எந்தப் புரட்சியையும் ஒடுக்குவது நமக்கு எளிது தான்”

 

அப்போதும் சரி, இப்போதும் சரி மக்கள் எதிர்ப்பை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்று  ஆம்பி குமாரன் எச்சரிக்கையாக இருக்கிறான் என்று தான் க்ளைக்டஸ் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த நிலைமைகளை எல்லாம் பார்க்கையில் க்ளைக்டஸ் மனம் வேதனை அடைந்தது. அலெக்ஸாண்டர் உயிரோடிருந்தால் அவன் என்றாவது ஒரு நாள் வரலாம் என்ற பயமாவது பலருக்கு இருந்தது. இப்போது அலெக்ஸாண்டரும் இறந்து விட்ட பின் புரட்சியாளர்களைக் கட்டுப்படுத்துவது கஷ்டம் தான் என்பது புரிகிறது. யூடெமஸ் சிந்துப் பிரதேசத்தைத் தாண்டி வர மாட்டான். அவன் வராமல் ஆம்பி குமாரன் பிலிப்பைக் கொலை செய்தவர்களைத் தண்டிக்கவும் முற்பட மாட்டான். இழந்த பகுதிகளை மீட்கும் ஆர்வமும், தைரியமும் இருவருக்குமில்லை...  

 

இனி யவனர்கள் இங்கு நிம்மதியாக இருப்பது கஷ்டம் என்று க்ளைக்டஸுக்குத் தோன்றியது. புரட்சிக்காரர்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் ஓடி வந்த யவன வீரர்களில் பாதி பேர் தாயகத்திற்குக் கிளம்பிப் போய் விட்டார்கள். மீதமுள்ளவர்கள் காந்தாரம், கேகயம் பகுதிகளின் படைகளுடன் இணைந்து விட்டார்கள்.    

 

அலெக்ஸாண்டர் உயிரைப் பணயம் வைத்து வென்ற பகுதிகள் சில பறி போவதையும், சில பலவீனமாக இருப்பதையும், யவன வீரர்கள் உயிருக்குப் பயந்து பாதுகாப்பான இடம் தேடிப் போகும் நிலை இருப்பதையும் பார்க்கும் போது களைக்டஸுக்கு வேதனையாக இருந்தது. அலெக்ஸாண்டருக்கு அடுத்தபடியாக சக்தி வாய்ந்தவனாக இருக்கும் செல்யூகஸுக்கு  பாரதத்தில் இருக்கும் நிலைமையை விரிவாக எழுதித் தெரிவிக்க அவன் முடிவு செய்தான். செல்யூகஸ் அலெக்ஸாண்டருக்கு இணையானவன் அல்ல என்ற போதிலும் தைரியசாலி, புத்திசாலி. ஏதாவது செய்வான்!

 

(தொடரும்)

என்.கணேசன்

4 comments:

  1. Sattunu Alexander death vanthudichi..

    Yethukka konjam kashtam ah iruku., otherwise superb move...

    How many episodes still have sir..?

    ReplyDelete
  2. இரு வேறு உலகம் நாவலில் கிரிஷ் படிக்கும் nicolas tesla நூல் பெயர் என்ன என சொன்னால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  3. ஆம்பிக்குமாரனின் புத்திசாலித்தனம் ஆச்சரியப்பட வைக்கிறது....

    ReplyDelete