Monday, December 4, 2023

யோகி 26

 

தற்குப் பின் அந்தத் துறவி பிரம்மானந்தாவை மேற்கோள் காட்டிய போதெல்லாம் லேசான பதற்றத்துடன் ஸ்ரீகாந்தைப் பார்ப்பதை ஷ்ரவன் புன்னகையுடன் கவனித்தான். ஆனால் ஸ்ரீகாந்த் முன்பு போல இடைமறித்து எதுவும் சொல்லா விட்டாலும் அவர்களுக்கு குறிப்புகள் எடுத்துக் கொள்ளக் கொடுத்திருந்த சிறிய நோட்டுப் புத்தகத்தில் அந்த மேற்கோள்களை முதலில் யார் சொன்னது என்று ஷ்ரவனுக்கு எழுதிக் காண்பித்தான். ’ரமணர், விவேகானந்தர், ஓஷோ, நீட்ஷே

 

மற்றபடி மாலை வரை வகுப்புகள் இயல்பாகப் போயின. இடைவேளைகளில் டீ, காபிக்குப் பதிலாக சுக்குக் காபியும், க்ரீன் டீயும் இருந்தன. மதிய வேளைச் சாப்பாடு எளிமையாகவும், ருசியாகவும் இருந்தது. ஷ்ரவன் டைனிங் ஹாலிலும் கண்காணிப்பு காமிராக்கள் இருப்பதைப் பார்த்தான். இப்போதெல்லாம் எல்லா இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் இருப்பது சகஜம் என்றாலும் சைத்ராவின் மரணத்தைத் துப்பு துலக்க வந்திருப்பதால் ஷ்ரவனுக்கு அந்த சாதாரண விஷயம் கூட சந்தேகத்தை ஏற்படுத்தியது.

 

மாலையில் யோகா சம்பந்தமாக பிரம்மானந்தா பேசிய ஒரு வீடியோவைப் போட்டுக் காண்பித்தார்கள். அதில் பிரம்மானந்தா சிறப்பாகவே பேசியிருந்தார். ஸ்ரீகாந்த் அந்த வகுப்பை நடத்திய துறவியுடம் கேட்டான். “இந்த ஒரு வார வகுப்பில் எங்களுக்கு எதையாவது கற்றுத் தர பிரம்மானந்தா வருவாரா?”

 

அமெரிக்க ஜனாதிபதி என் வீட்டுக்கு டீ சாப்பிட வருவாரா/’ என்று ஸ்ரீகாந்த் கேட்டது  போல்  அந்தத் துறவி அவனைப் பார்த்தார். பிறகு அவர் மெல்லச் சொன்னார். “யோகி பிரம்மானந்தா வகுப்புகள் நடத்த வருவதில்லை. ஆனால் யோகி பிரம்மானந்தா அவர்களின் பிரதம சிஷ்யையான சுவாமினி கல்பனானந்தா கடைசி நாள் கடைசி வகுப்புக்கு வந்து வழிநடத்துவார்கள்.”

 

அந்தத் துறவி, ஸ்ரீகாந்த் யோகி என்ற அடைமொழி இல்லாமல் பிரம்மானந்தா என்று வெறுமனே அழைத்ததையும் ரசிக்கவில்லை என்பதை ஷ்ரவன் புரிந்து கொண்டான். அவர்யோகி பிரம்மானந்தாஎன்று சொல்கையில் யோகிக்கு அழுத்தம் தந்து ஸ்ரீகாந்தைப் பார்த்த விதம், ’இப்படி அழைப்பது தான் மரியாதைஎன்று கற்றுத் தருவது போல் இருந்தது. ஆனால் அதை ஸ்ரீகாந்த் கவனித்தது போல் தெரியவில்லை. ஷ்ரவன் மிகவும் சிரமப்பட்டு தான் சிரிப்பை அடக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. 

 

அவனுக்கு இது வரை பிரம்மானந்தாவின் பிரதம சிஷ்யை சுவாமினி கல்பனானந்தா பற்றி எங்கேயும் கேள்விப்பட்டதாகவோ, படித்ததாகவோ நினைவில்லை. அதனால் முதல் முறையாகக் கேள்விப்படும் இந்த நபர் ஆராயப்பட வேண்டிய நபர் என்று அவனுக்குத் தோன்றியது. பிரம்மானந்தாவைச் சந்திக்க முடியா விட்டாலும் சுவாமினி கல்பனானந்தாவை இவ்வார இறுதி வகுப்பில் சந்திக்கப் போகிறோம் என்பது ஆர்வம் மிகுந்த எதிர்பார்ப்பை அவன் மனதில் ஏற்படுத்தியது.

 

அன்று மாலை கடைசியாக எளிமையான தியானம் ஒன்றைச் சொல்லித் தந்து தங்கியிருக்கும் அறையில் பயிற்சி செய்து பார்க்கச் சொல்லியனுப்பினார்கள். ஆனால் அறைக்கு வந்த பின் அந்தத் தியானப் பயிற்சி செய்யும் மனநிலையில் ஸ்ரீகாந்த் இருக்கவில்லை. அன்றைய வகுப்பில் சொல்லித் தந்தவை பற்றி அவன் விரிவாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தது ஷ்ரவனுக்கு வேடிக்கையாக இருந்தது.  அவன் பெங்களூரில் கற்றுக் கொண்ட யோகா வகுப்புப் பயிற்சிகளைத் தான் இவர்கள் அப்படியே காப்பியடித்துச் சொல்கிறார்கள் என்றும் பயிற்சிகளின்  பெயர்களை மட்டும் நவீனமாக மாற்றியிருக்கிறார்கள் என்றும் சொன்னான். 

 

ஸ்ரீகாந்த் சொன்னது பத்மநாப நம்பூதிரி உருவாக்கிய யோகா வகுப்புப் பயிற்சிகளை என்பது உடனடியாக ஷ்ரவனுக்குப் புரிந்தாலும் அவன் அதை ஸ்ரீகாந்திடம் சொல்லவில்லை.

 

ஷ்ரவன் புன்னகைத்தபடி சொன்னான். “நீங்க யோகி என்ற அடைமொழியைப் பயன்படுத்தாம பிரம்மானந்தான்னு சொன்னது அந்த துறவிக்குப் பிடிக்கலை போல இருந்துச்சு. கவனிச்சீங்களா?”

 

ஸ்ரீகாந்த் ஆச்சரியப்பட்டான். “அப்படியா? நான் கவனிக்கலை. அந்த ஆளை யோகின்னு நான் சொல்லாமல் இருந்ததுல இவங்களுக்கு என்ன பிரச்சினை?”

 

ஷ்ரவன் வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க கடுமையாக முயற்சி செய்து வென்றான். ஸ்ரீகாந்த் சொன்னான். “இதுவே பிடிக்கலைன்னா அந்த ப்ரொஃபசர் சிவசங்கரன் பேசினதை எல்லாம் முழுசாக் கேட்டா இவங்க என்ன சொல்வாங்களோ தெரியலையே

 

அது யார் ப்ரொஃபசர் சிவசங்கரன்?”

 

சென்னையில தான் இருக்கார் அவர். தத்துவத்துல பேராசிரியர். ரெண்டு அருமையான புஸ்தகங்கள் எழுதியிருக்கார். எல்லா தத்துவங்களையும் கரைச்சுக் குடிச்சவர் அந்த ஆள்.  பிரம்மானந்தா பழைய ப்ரேம் ஆனந்தா இருந்த காலத்துல அடிக்கடி அவர் வீட்டுக்குப் போய்ப் பேசிட்டிருப்பாராம். அப்போ சிவசங்கரன் பேசினதை எல்லாம் ஞாபகம் வெச்சிருந்து இப்ப அப்படியே சொல்றாருன்னு அந்த ஆள் புகார் சொல்றார். “அப்படியே சொல்லட்டும். தப்பில்லே. ஆனால் சொன்னது இன்னாருன்னு ஒப்புக்கணும் இல்லயா. அது தானே நியாயம். திருட்டுப்பய சொந்தக் கருத்து மாதிரி சொல்லிட்டு பெருமையா பாக்கறான் பார்னு சொல்லி பிரம்மானந்தா அப்படிப் பேசின ஒரு யூட்யூப் வீடியோவையும் போட்டுக் காமிச்சார்.”

 

ஷ்ரவன் ஆர்வத்துடன் பேராசிரியர் சிவசங்கரன் எங்கு வசிப்பவர் என்று கேட்க ஸ்ரீகாந்த் அவரது சென்னை விலாசத்தை வீட்டு அடையாளத்தோடு சொன்னான். வேளச்சேரியிலிருக்கும் அந்த வீட்டு விலாசத்தை ஷ்ரவன் மனதில் குறித்துக் கொண்டான். “அவரை நீங்க எப்படி எப்போ சந்தீச்சீங்க?”

 

அவரோட புஸ்தகம் ஒன்னை போன மாசம் தான் படிச்சு முடிச்சேன். சென்னைக்கு போன மாசம் ஒரு பிசினஸ் விஷயமா வந்தப்ப தான் போன்ல அட்ரஸ் கேட்டு நேர்ல போய் சந்திச்சேன். மனுஷன் ஜீனியஸ். எந்த தத்துவ ஞானி பேரை நாம சொன்னாலும் அந்தத் தத்துவ ஞானி சொன்னதை எல்லாம் மளமளன்னு சொல்ல ஆரம்பிச்சுடறார். வயசானவர். வயசு 70க்கு மேல இருக்கும். அவர்கிட்ட பேசிகிட்டிருந்தப்ப தான் நான் பிரம்மானந்தா பத்திக் கேட்டேன். மனுஷன் பிரம்மானந்தாவை கிழி கிழின்னு கிழிச்சுட்டார். இப்ப எல்லாம் நேர்ல பார்க்கக் கிடைச்சாலும் இந்த ஆள் சிவசங்கரனைத் தெரிஞ்ச மாதிரி கூடக் காமிச்சுக்கறதில்லையாம்.”

 

ஷ்ரவன் புன்னகைத்தான். ’இதெல்லாம் தெரிந்தும் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே பல இடங்களில் கற்றுக் கொண்ட யோகாவைக் கற்றுக் கொள்ள இங்கேயும் வந்திருப்பது விமர்சனம் செய்யத் தானோ? வேடிக்கை மனிதன்!’

 

ஸ்ரீகாந்த் திடீரென்று நினைவுக்கு வந்தவனாய் சிரித்துக் கொண்டே சொன்னான்.பிரம்மானந்தா போன ஜென்மத்துல பதஞ்சலியோட பிரதான சீடனாம். இங்கே இருக்கற ஆளுக வரைமுறையே இல்லாம புளுகறாங்க. நான் சொல்லலாம்னு இருந்தேன். ”நான் முற்பிறவியில் பதஞ்சலி முனிவராக அவதரித்தவன். எனக்கு என் முன் ஜென்மத்து பிரதான சீடனை உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது. அழைத்து வாருங்கள் பிள்ளைகளே”. நான் அப்படி சொல்லியிருந்தால் வேடிக்கையாய் இருந்திருக்குமில்லையா?”

 

ஷ்ரவனும் சிரித்தான். அப்படிச் சொல்லியிருந்தால் அவர்கள் இவனைத் தனியாக அழைத்துச் சென்று நையப் புடைத்திருக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்று அவன் எண்ணிக் கொண்டான். இங்கே புளுகுவதற்கு அவர்களுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறது. இங்கே வருபவர்களுக்கு அதற்கு அனுமதி இல்லை

 

அன்று இரவிலும் உறங்குவதற்கு முன் ஸ்ரீகாந்த் நீண்ட நேரம் தனது பல இடங்களின் அனுபவங்களைப் பற்றி ஷ்ரவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். திடீரென்று யாரோ அவர்கள் அறை ஜன்னலருகே நின்று ஒட்டுக் கேட்பது ஷ்ரவனுக்குத் தெரிந்தது. ட்டுக் கேட்கும் நபரின் பாதி முகம் ஒரு கண நேரம் தான் அவனுக்குத் தெரிந்தது என்பதாலும் வெளி வராந்தாவில் வெளிச்சம் அதிகம் இல்லாத காரணத்தாலும் அந்த நபரைப்பற்றி ஷ்ரவனால் அதிகம் அறிய முடியவில்லை.  நல்ல வேளையாக யோகாலயம் பற்றியோ, பிரம்மானந்தா பற்றியோ பேசாமல் அந்த நேரத்தில் ஸ்ரீகாந்த் தனது ரிஷிகேஷ் யோகா வகுப்பு அனுபவங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

 

ஷ்ரவன் ஒட்டுக் கேட்கும் நபர் பற்றி தான் அறிந்ததை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. சில நிமிடங்களில் அந்த நபர் போய் விட்டது தெரிந்தது. நடந்தது எதுவும் தெரியாமல் ஸ்ரீகாந்த் தொடர்ந்து சுவாரசியமாகப் பேசிக் கொண்டேயிருந்தான். 

 

இப்போது ஒட்டுக் கேட்டுச் சென்றது போல மாலையில் அவர்கள் பேச்சை யாரும் ஒட்டுக் கேட்கவில்லை என்பது ஷ்ரவனுக்கு உறுதியாகத் தெரியும். அப்படி யாராவது ஒட்டுக் கேட்டிருந்தால் அக்கணத்திலேயே அவன் அதை உணர்ந்திருப்பான். இந்த விஷயத்தில் அவனுடைய உணர்வுகள் கூர்மையானவை. அதனால் ஒட்டுக் கேட்க ஆணை இங்கிருப்பவர்களுக்கு மாலைக்குப் பிறகு தான் கிடைத்திருக்க வேண்டும்....


(தொடரும்)

என்.கணேசன்

1 comment:

  1. யோகாலையத்துல இருக்குறவங்க தியானிகளா? அல்லது தீவிரவாதிகளா??னு தெரியவில்லை...

    பகவான் ராமகிருஷ்ணரின் சுயசரித்தை சமீப காலமாக கேட்டு வருகிறேன்.... அதற்கு முன் வரை பிரம்மானந்தாவை போல தான் குரு இருப்பார்கள் என்று நினைத்தேன்.....அதை கேட்கும் போது தான் புரிந்தது.... இக்கால தலைமுறையினர் குரு என்ற விசயத்தில் எவ்வளவு ஏமாளியாக உள்ளோம் என்று.....

    ReplyDelete