Thursday, November 2, 2023

சாணக்கியன் 81

 

வீரசேனன் பிலிப் சேனாதிபதியைப் பார்த்த பார்வையில் ஆபத்தை உணர்ந்தான். இந்தக் கணம் வரை யவனர்களுக்கு எதிராக செயல்படும் எண்ணம் அவனுக்கு முழுமையாய் ஏற்பட்டிருக்கவில்லை. ஆச்சாரியர் என்ன தான் காட்டுக்குள் அவனுக்குப் பாடம் நடத்தியிருந்தாலும் ஒருவரின் கீழ் ஊழியம் செய்து வாழும் போது அவருக்குத் துரோகம் செய்யாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணமே அவனிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் ஆச்சாரியர் என்று அனைவரும் அழைத்த அந்தணர் அவன் உயிருக்கு நிச்சயமாய் ஆபத்து உண்டாக வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்திருந்தார். “பிலிப் கண்டிப்பாக உன்னைச் சந்தேகப்படுவான், நீ என்ன சொன்னாலும் நம்ப மாட்டான், உன்னைத் தண்டிப்பது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்றும், உன்னைத் தண்டிக்காமல் இருப்பது மற்றவர்களுக்கும் கட்டுப்பாட்டை மீறுவதற்கு முன்னுதாரணமாக  அனுமதிப்பது போல் ஆகி விடும் என்றும் நினைப்பான். ஆனால் உன்னை மற்றவர்கள் அறியக் கொல்லவும் மாட்டான். அது உன் தம்பியையும், உங்கள் படைவீரர்களையும் எதிர்க்கத் தூண்டிவிடும் என்று நினைப்பான். அதனால் உன்னை வஞ்சகமாகக் கொல்ல அவன் திட்டமிடலாம். நீ சற்று கவனக்குறைவாய் இருந்தாலும் உன்னைக் கொன்று விடுவார்கள். நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...”

 

அவர் சொன்னது போன்ற நிலைமையே உருவாகிக் கொண்டிருப்பது போல் வீரசேனனுக்குத் தோன்றியது. வீரசேனன் வேகமாக யோசித்தான். சூரசேனன் விழித்துக் கொண்டு சற்று தொலைவில் தான் இருக்கிறான். இங்கே ஏதாவது விபரீதமான சத்தம் கேட்டால் அவன் கண்டிப்பாக ஓடி வருவான். ஆனால் அது முகாமில் மற்றவர்களையும் எழுப்பி விடும் அபாயம் இருக்கிறது. சேனாதிபதி வீரசேனனை நெருங்க முதல் காலடி எடுத்து வைத்த போது வெளியே காவல் வீரன் குரல் கேட்டது.

 

“இன்னேரத்தில் தங்களை உள்ளே அனுமதிக்க முடியது படைத்தலைவரே. சத்ரப் உறங்கிக் கொண்டிருக்கிறார்”

 

“சேனாதிபதியும் என் அண்ணனும் சற்று முன் உள்ளே சென்றதை நான் பார்த்து விட்டேன் காவலனே. நான் உள்ளே போக வேண்டும்” என்று சூரசேனன் சொல்வதும் கேட்டது.      

 

சேனாதிபதி முன் வைத்த காலைப் பின் வைத்து விட்டு பிலிப்பைப் பார்த்தான். பிலிப் நிலைமை சிக்கலாவதை உணர்ந்தான். வீரசேனன் அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஏதாவது முடிவெடுத்துச் செயல்பட்டால் தான் தங்களைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்று உணர்ந்தவனாகச் சத்தமாகச் சொன்னான். “உள்ளே வா தம்பி.”

 

பிலிப்பின் கோபம் உச்சத்தைத் தொட்டது. ’என்னவொரு நெஞ்சழுத்தம். என்னுடைய கூடாரத்திற்குள் வர இன்னொருவனை அனுமதிக்க இவன் யார்?’ அவன் பார்வையாலேயே சேனாதிபதிக்குக் கட்டளையிட சேனாதிபதி அதைப் புரிந்து கொண்டு வேகமாகத் தன் இடுப்பிலிருந்து குறுவாளை உருவினான். சிறிது தாமதித்தாலும் சேனாதிபதி அவனைக் கொன்று விடுவான் என்று உணர்ந்த வீரசேனன் “நல்ல நேரத்தில் வந்தாய் தம்பி” என்று கத்தியபடியே சேனாதிபதி மீது பாய்ந்தான்.

 

வீரசேனன் கத்தியபின் சேனாதிபதியின் கவனம் அவனையுமறியாமல் வாசலுக்குச் சென்றது. அவன் கவனம் விலகி அவன் குறுவாளைப் பிடித்திருந்த பிடியும் கணநேரத்திற்கு விலக, அந்த நேரத்தில் அவன் மீது பாய்ந்திருந்த வீரசேனன் அந்தக் குறுவாளைப் பிடுங்கி சேனாதிபதியின் அடிவயிற்றில் வேகமாகக் குத்தினான்.

 

தன் கண் முன்னாலேயே தன் சேனாதிபதியைக் குத்தியதைப் பார்த்த பிலிப் கடுங்கோபத்துடன் தன் படுக்கையிலிருந்த வாளை எடுத்து வீரசேனன் மீது வீச யத்தனித்தான். அதற்குள் அண்ணன் “நல்ல நேரத்தில் வந்தாய் தம்பி” என்று கத்தியதைக் கேட்டு உள்ளே எதோ விபரீதமாக நடக்கிறது என்று புரிந்து கொண்டு காவலனைத் தள்ளி விட்டு சூரசேனன் உள்ளே நுழைந்திருந்தான். அவன் பிலிப் தாக்கவிருக்கும் ஆயத்தத்தைப் பார்த்து வேகமாகத் தன் கையிலிருந்த குறுவாளை பிலிப்பின் நெஞ்சை நோக்கி வீசினான். சூரசேனனின் குறுவாள் பிலிப்பின் நெஞ்சைத் துளைக்க அவன் வீச ஓங்கியிருந்த வாள் கைநழுவிக் கீழே விழுந்தது.   

 

சூரசேனன் தள்ளிவிட்டதால் கீழே வெளியில் வீழ்ந்திருந்த காவல்வீரன் சுதாரித்துக் கொண்டு எழுந்து உள்ளே விரைந்து வந்தான். பிலிப்பும், சேனாதிபதியும் இரத்தம் வழியக் கீழே வீழ்ந்திருப்பதைக் கண்டு திகைத்து நின்றான். வீரசேனன் அதற்கு மேல் அவனை யோசிக்க விடாமல் கீழே விழுந்திருந்த பிலிப்பின் வாளை எடுத்து காவல்வீரன் வயிற்றில் குத்தினான். காவல்வீரனும் வீழ்ந்தான்.

 

உயிர் போய்க் கொண்டிருந்த வேளையில் பிலிப்பின் காதுகளில் வீரசேனனிடம் சூரசேனன் கேட்பது விழுந்தது. “இனி என்ன செய்வது அண்ணா?”

 

வீரசேனன் சொன்னான். “இந்த யவனர்கள் இந்த அளவு ஈனர்கள் என்று தெரியாமல் புரட்சி வீரர்களுடன் சேர நான் மறுத்தேன் தம்பி. ஆனால் அவர்கள் இவர்களைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்கள். ”நீ திரும்பிப் போகலாம். ஆனால் அவர்கள் உன்னை ஏற்றுக் கொள்ளாமல் கொல்ல முற்பட்டால் உன்னைத் தற்காத்துக் கொண்டு எங்களை அழை. நாங்கள் உதவிக்கு வருகிறோம் என்றார்கள். அவர்கள் சற்றுத் தொலைவில் மறைவிடங்களில் காத்திருக்கிறார்கள்”

 

“அவர்களை எப்படி அழைப்பது?”

 

“ஒரு தீப்பந்தத்தை வானை நோக்கி வீசச் சொன்னார்கள். அதைப் பார்த்தால் அவர்கள் வந்து விடுவார்கள். எங்கே நம் படைவீரர்கள் நிலை என்ன?”

 

“அவர்கள் நாம் அழைத்தவுடன் வருவார்கள்....”

 

அவர்கள் பேசுவது ஒவ்வொரு வார்த்தையும் புரியா விட்டாலும் மொத்தமாக ஓரளவு புரிந்தது. இறக்கும் வேளையில் பிலிப் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டான். அலெக்ஸாண்டர் இப்போது இங்கே இருந்திருந்தால் தட்சசீல ஆசிரியரின் சூழ்ச்சிகளை எப்படிச் சமாளித்திருப்பான்? அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்காமலேயே பிலிப் இறந்து போனான்.

 

வனர்களின் முகாமுக்குக் கூப்பிடுதூரத்தில் சந்திரகுப்தனும், அவன் படையினரும் காத்திருந்தார்கள். வீரசேனன் போய் நிறைய நேரம் ஆகி விட்டது. ஆனால் அவனிடமிருந்து இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை.

 

சாணக்கியர் அவர்களிடம் சொல்லியிருந்தார். “யவனர்கள் வீரசேனனைக் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவனைத் திருப்பியனுப்பி அவன் செல்லும் வழியில் வஞ்சகமாக அவனைக் கொல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அப்படி நடக்குமானால் அவனைக் காப்பாற்றி நம்முடன் இணைத்துக் கொள்ளுங்கள். அல்லது முகாமுக்குள்ளேயே அவனைக் கொல்லவும் அவர்கள் முயற்சி செய்யலாம். அப்படி செய்தால் தற்காத்துக் கொண்டு தீப்பந்தம் ஒன்றை வானை நோக்கி நாம் வீசச் சொல்லியிருக்கிறோம். அது நடந்தால் உடனடியாகப் போய் முகாமில் யவனர்களைத் தாக்குங்கள். ஒருவேளை இந்த இரண்டும் நடக்காமல் அவர்கள் வீரசேனனைக் கொல்வதில் வெற்றி பெறும் வாய்ப்பும் இருக்கிறது. அப்படி நடந்தால் வீரசேனன் நமக்கு எந்தச் செய்தியும் அனுப்ப முடியாது. நீங்கள் காத்திருந்து பார்த்து விட்டு விடியலுக்கு முன் அவர்கள் முகாமைத் தாக்கிக் கடுமையான சேதம் செய்து விட்டுத் திரும்பி வாருங்கள்”

 

சாரங்கராவ் சந்திரகுப்தனைக் கேட்டான். “அங்கே என்ன நடந்திருக்கும் என்று நீ நினைக்கிறாய்?”

 

சந்திரகுப்தன் சொன்னான். “ஆச்சாரியர் சொன்ன மூன்றில் முதலாவது நடக்க முடிந்த காலம் கடந்து விட்டது. திருப்பி அனுப்புவதாக இருந்தால் முதலிலேயே அனுப்பியிருப்பார்கள். வீரசேனர் போய் இத்தனை காலம் கழிந்து விட்டிருப்பதால் இரண்டாவது அல்லது மூன்றாவது நடக்கலாம்.”  

 

சிறிது நேரம் மௌனமாக இருந்தபடி ஆகாய நட்சத்திரங்களைப் பார்த்திருந்து விட்டு சாரங்கராவ் சொன்னான். “எனக்கென்னவோ நம் ஆச்சாரியர் உன்னிடம் கூடச் சொல்லாத முக்கிய ரகசியங்கள் இருப்பது போல் தோன்றுகிறது சந்திரகுப்தா. அவர் தினமும் அதிகாலையில் எழுந்திருந்து தியானம், ஜபம் பெயரில் ஏதேதோ பயிற்சிகள் செய்கிறார். அவர் அதன் மூலம் சில இரகசிய சக்திகள் கூடப் பெற்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதை வைத்து தான் அவர் நாம் யூகிக்க முடியாததையும் யூகிக்கிறார். அதை வைத்து தான் அவர் சிலவற்றை அவர் விருப்பப்படி நடக்கவும் வைக்கிறார்...”  

 

சந்திரகுப்தன் ஒன்றும் சொல்லாமல் யோசித்தான். சாரங்கராவ் சொல்வது போல அவர் ஏதேதோ தியானப் பயிற்சிகள் செய்கிறார். அவர் அதை அவனுக்கும் விவரித்ததில்லை. அதற்குக் காரணம் அவனுக்குத் தெரியாமல் ரகசியம் காக்க வேண்டும் என்று அவர் நினைப்பதாக அவன் எண்ணவில்லை.. அவனுக்கு அது அவசியமில்லாதது அல்லது அவனால் அது செய்ய முடியாதது என்று கூட அவர் நினைத்திருக்கலாம். அவனுக்குத் தெரிந்து அவரின் அறிவின் ஆழத்தில் இணையாக அவருடன் பயணிக்க முடிந்த ஆட்கள் யாருமில்லை. எத்தனையோ விஷயங்களில் அவனும் அவருக்கு இணையாக யோசிக்க முடிந்திருக்கிறது. ஆனால் சில விஷயங்கள் அவனுக்கும் எட்டியதில்லை...

.

திடீரென்று வானில் ஒரு தீப்பந்தம் வீசப்பட்டு வீழ்வது தெரிந்தது. அவர்கள் வேகமாகத் தயாரானார்கள்.

 

(தொடரும்)

என்.கணேசன்    

1 comment:

  1. சற்றும் எதிர்பாராத திருப்பம் சாணக்கியரின் புரட்சிப்படை தான் பிலிப்பை அழிப்பார்கள் என்று நினைத்தேன்... ஆனால், வீரசேனனும்,சூரசேனனும் அழித்து விட்டார்கள்....
    அங்கு நடந்த நிகழ்வுகளை ஐயா அவர்கள் எழுத்தில் கொண்டு வந்த விதம் அருமை...

    ReplyDelete