Monday, November 6, 2023

யோகி 21

 

சைத்ராவின் முகத்தில் தெரிந்த வேதனையை ஷ்ரவன் ஆராய்ந்தான். தந்தைக்கும் தாத்தாவுக்கும் துக்கத்தைக் கொடுத்து விட்டோம் என்ற வேதனையா இல்லை வேறு ஏதாவதா? அவள் முகத்தில் வேதனையுடன் சோகமும், துக்கமும் கூட சேர்ந்து தெரிவது போல் இருந்தது உண்மையா இல்லை அவனுடைய கற்பனையா? இது தான் கடைசி, இனி இவர்களை நான் காணப்போவதில்லை என்ற வருத்தமா?

 

நடந்திருப்பது கொலை தான் என்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. காதல் திருமணத்திற்காகட்டும், துறவி ஆவதற்காகட்டும் எதற்குமே மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி தந்த அவர்களிடம் அவள் நேரடியாகப் பேசவில்லை என்பதே அதற்கு ஒரு வலுவான ஆதாரமாக அவனுக்குத் தோன்றியது. பிரச்சினையோ ஆபத்தோ இல்லாமலிருந்தால் அவள்நான் நலமாகவும், பாதுகாப்பாகவும் தான் இருக்கிறேன், கவலைப்படாதீர்கள்என்று தந்தையிடம் நேரடியாகவே சொல்லியிருக்க முடியும். பிரச்சினை பூதாகரமாகி, கோர்ட் வரை வந்து சொல்வதை, அதற்கு முன்பே அவள் தந்தையிடம் சொல்லியிருந்தால் இத்தனை பிரச்சினைகள் இல்லை. அப்படி அவள் சொல்லவில்லை என்பதே அவளுக்கு ஆபத்து இருந்திருக்கிறது என்பதையும், அவள் பேச அனுமதிக்கப்படவில்லை என்பதையும் தான் தெளிவுபடுத்துகிறது

 

சரி ஆபத்து அல்லது பிரச்சினை இருந்திருக்கிறது என்றால் அது என்னவாக இருக்கலாம் என்று ஷ்ரவன் யோசித்தான். பெண் என்பதால் பாலியல் ரீதியான பிரச்சினையை அவள் சந்தித்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இது வரை யோகாலயத்தில் அதுபோன்றதொரு புகார் எழுந்ததில்லை. அங்கே அவர்களின் தெரியக்கூடாத ரகசியங்கள் ஏதாவது அவள் அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது அங்கே யாரையோ எந்த விதத்திலாவது அவள் பகைத்துக் கொண்டிருக்கலாம்அப்படி இருந்திருந்தால் ஏன் அவள் உடனடியாகக் கொல்லப்படவில்லை. வாய்ப்புகள் கிடைக்கவில்லையா, இல்லை வேறு காரணங்களா? இதற்கு எல்லாம் பதில் தெரிந்த ஒரு நபர் உண்டு. அது அந்த மொட்டைக் கடிதம் எழுதிய நபர். அந்த நபர் இன்னும் உயிரோடு அங்கேயே இருக்கிறாரா இல்லை கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டும் விட்டாரா? இது வரை வேறொரு மரணம் எதுவும் அங்கே நடந்ததாய் செய்திகள் இல்லை. ஆனால் மிகப் பெரிய நிலப்பரப்பில் இருக்கும் யோகாலயத்தில் அப்படி யாராவது இறந்து அங்கேயே புதைக்கவோ, எரிக்கவோ பட்டாலும் அவர்களாய் வெளியே தெரிவித்தால் தான் உண்டு. இல்லா விட்டால் எப்போதாவது காணாமல் போன நபராக அந்த நபர் அறிவிக்கப்படலாம். தேடப்பட்டு வரும் நபராகவே இறுதி வரை இருந்து விடலாம்

 

ஷ்ரவன் பல சாத்தியக்கூறுகளையும் யோசித்துக் கொண்டே வந்து சிறிது நேரத்துக்கு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான். கடிகாரத்தைப் பார்த்து விட்டு, அமெரிக்காவில் வசிக்கும் சைத்ராவின் நீண்ட கால சிநேகிதிக்குப் போன் செய்தான். அவளுக்கு மெயில் அனுப்பி அவளிடம் பேச முன்கூட்டியே அனுமதி வாங்கியிருந்தான். அவளும் சேதுமாதவன் சொன்னபடியே சைத்ரா புத்திசாலி, சற்று பிடிவாதக்காரி, பாசமானவள், நேர்மையின்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவள் என்பதை எல்லாம் உறுதிப்படுத்தினாள்.

 

கூடவே சொன்னாள் “… அவ ரொம்ப ப்ராக்டிகலும் கூட சார். எதுலயும் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் சீக்கிரமாவே மீண்டு வந்து அடுத்தது என்னன்னு பார்த்து வாழக்கூடியவள். எனக்குத் தெரிஞ்சு அவளை ரொம்ப பாதிச்சது அவங்கம்மா மரணம் கூட இல்லை. அவளோட காதல் தோல்வி தான் அவளை ரொம்பவே பாதிச்சதுன்னு சொல்வேன். ஆனாலும் கூட அவ அதுலயும் நல்லதையே பார்த்தா. அவள் காதலன் வெளிப்படையா இன்னொருத்தியை விரும்ப ஆரம்பிச்சது பத்திச் சொன்னதையும் அவள் மதிச்சா. கல்யாணத்துக்குப் பிறகு துரோகம் பண்றதை விட அது தேவலைன்னு தோணுச்சுன்னு சொன்னா. அவங்க கல்யாணத்துக்குக்கூட போயிட்டு வந்திருக்கா. ஆனாலும் அதுல இருந்து மீளறது பிறகு அவளுக்குச் சுலபமாய் இருக்கலைடிப்ரஷன் வரைக்கும் அது அவளைக் கொண்டு போச்சு. ஆனாலும் அதுல இருந்தும் மீண்டு வந்தா பாருங்க..”

 

ஷ்ரவன் கேட்டான். “யோகாலயத்துல சன்னியாசியா போறத பத்தி உங்க கிட்ட ஏதாவது சொல்லியிருக்காங்களா?”

 

அங்கே ரெண்டு க்ளாஸ்கள் போனதுல அவங்க சொன்ன விஷயங்கள் எல்லாம் அவளுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு சார். நாம தெரிஞ்சுக்கத் தவறிட்ட முக்கியமான விஷயங்கள் நெறைய இருக்குன்னு என் கிட்ட சொன்னா. அதனால் தான் சன்னியாசியாகப் போறதா சொன்னா.”

 

அங்கே இருக்கற யாரைப் பத்தியாவது ஏதாவது சைத்ரா உங்க கிட்ட சொல்லி இருக்காங்களா

 

இல்லை சார்ரெண்டாவது க்ளாஸ் போயிட்டு வந்த பிறகு யோகி பிரம்மானந்தா ஒரு ஞானக்கடல்னு புகழ்ந்தாள்…”

 

ஷ்ரவன் சந்தேகத்தோடு கேட்டான். “அவங்க அங்கே பிரம்மானந்தாவைச் சந்திச்சுப் பேசியிருக்காங்களோ?”

 

நானும் அதை அவ கிட்டே கேட்டேன். ”சந்திக்கற பாக்கியம் கிடைக்கல. ஆனா அவரோட பேச்சுகளை வீடியோல கேட்டேன். அவர் தொடாத சப்ஜெக்டே இல்லைன்னு பிரமிப்போட சொன்னா

 

அங்கே சன்னியாசியா அவங்க போனதுக்கப்புறம் உங்க கூடப் போன்ல பேசியிருக்காங்களா?”

 

இல்லை சார். சன்னியாசியாய் அங்கே போகிறதுக்கு முந்தின நாள் தான் அவ கூட நான் கடைசியாய் பேசினது. அதுவே கடைசி பேச்சாய் இருந்துடும்னு நான் நினைச்சே பார்க்கலை… ” சொல்லும் போது அவள் உணர்ச்சிவசப்பட்டாள்.

 

தே நேரத்தில் யோகாலயத்தில் ஒரு அறையில் இருவர் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

அந்தக் கடிதம் எழுதினது யாருன்னு கண்டுபிடிச்சுட்டியா?”

 

இன்னும் இல்லை. மூனு பேர் மேல சந்தேகம் இருக்கு. அவர்களை விடாம கண்காணிக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன்…”

 

ரொம்ப நாளாயிடுச்சு. இன்னும் அது யாருன்னு கண்டுபிடிக்க முடியலைங்கறது வெட்கக்கேடான விஷயம்.”

 

ரொம்ப எச்சரிக்கையா அந்த ஆள் நடந்துக்கறதால கண்டுபிடிக்க முடியல. இப்ப சந்தேகப்படற மூனு ஆள்கள்ல ஒரு ஆள் தான் அந்த ஆளான்னும் நிச்சயமாய் சொல்ல முடியல. ஆனாலும் இந்த மூனு பேர்ல ஒருத்தராய் தான் இருக்க வாய்ப்பிருக்கு

 

அந்த ஆளுக்கு என்ன தெரியும், எவ்வளவு தெரியும்னு வேற தெரியல. அது தான் யோசிக்க வெக்குது

 

தெரிஞ்சத வெளியே சொல்லியிருந்தா இன்னேரம் சொல்லி இருக்கணும். இது வரைக்கும் சொல்லலைங்கறதால இனி சொல்லவும் வாய்ப்பு குறைவு. சைத்ராவுக்கு என்ன ஆச்சுன்னு தெரிஞ்சதால அவ்வளவு சீக்கிரம் தைரியமும் வராது…”

 

ஆனாலும் அஜாக்கிரதையாய் இருக்க வேண்டாம்.”

 

சரி

 

சிறிது நேரம் நிசப்தம் நிலவியது.

 

ஆனா சைத்ரா விஷயத்தை நீ ரொம்ப கச்சிதமாய் கையாண்டிருக்கே…”

 

கோவிட் உதவுச்சி.”

 

போஸ்ட் மார்ட்டம் செய்ய முடிஞ்சிருக்கும்னா அவளோட அப்பன் அதுக்கும் கண்டிப்பா முயற்சி பண்ணியிருப்பான். கொஞ்சம் சாம்பலை மட்டும் வெச்சிட்டு அவனால ஒன்னும் பண்ண முடியல…. அந்த ஆஸ்பத்திரி டாக்டர் அவ அப்பன் கிட்ட அதிகமாய் எதுவும் சொல்லியிருக்க வாய்ப்பில்லையே

 

இல்லை… ”உன்னால ஒன்னும் பண்ண முடியாது. அவங்க சக்தி வாய்ந்தவங்க. அதனால் இதோட விட்டுடுன்னு மட்டும் தான் அந்த டாக்டர் அவ அப்பன் கிட்ட சொன்னதாய் தெரிஞ்சுது. அதுக்குப் பிறகு தான் அந்த ஆள் தற்கொலை பண்ணியிருக்கான்…”

 

நல்ல வேளையாய் அந்த டாக்டர் சொன்னதை எழுதி வெச்சுட்டு அந்த ஆள் தற்கொலை பண்ணிக்கலை. அப்படி செஞ்சிருந்தா அது நமக்கு இன்னொரு தலைவலியாய் இருந்திருக்கும்.”

 

எதுவுமே தலைவலி இல்லை. நமக்கு இன்னும் கொஞ்சம் அதிக பணம் செலவாயிருக்கும்.  அவ்வளவு தான்…”

 

ஆனா அவ அப்பன் அந்த டாக்டர் சொன்னதைக் கண்டிப்பாய் தன்னோட அப்பன் கிட்ட சொல்லியிருப்பான்….”

 

சொல்லியிருப்பான். ஆனா தெரிஞ்சும் அந்த எழுபத்தைஞ்சு வயசு கிழவன் என்ன பண்ண முடியும்? அந்த ஆள் ஏடாகூடமாய் வாய் எதுவும் திறக்கல. மகனுக்கு இல்லாத மூளை அப்பனுக்கு இருக்குன்னு நினைக்கிறேன்…”

 

ஆனா செத்துப் போன அந்த ஆஸ்பத்திரி டாக்டர் தன் வீட்டுல எதையும் சொல்லி இருக்க வாய்ப்பில்லையே

 

இல்லை. அப்படிச் சொல்லியிருந்தா அவன் பொண்டாட்டி தன் புருஷன் செத்ததுல சந்தேகப்பட்டு கலாட்டா செஞ்சிருப்பா. தினம் பேப்பர்ல இந்த மாதிரி டாக்டர்கள் சாகற செய்திகள் வந்துட்டே இருக்கறதால அந்த மாதிரி கேஸ்ல தன் புருஷன் கேஸும் ஒன்னுன்னு நினைச்சிட்ட மாதிரி தான் தெரியுது...”

 

எல்லாம் நமக்கு சாதகமா தான் இருக்கு. ஆனாலும் இங்கே இருக்கற கருப்பு ஆட்டைக் கண்டுபிடிச்சு ஒழிக்காம நாம பாதுகாப்பாய் இருக்க முடியாது.”

 

(தொடரும்) 

என்.கணேசன்


(தீபாவளி போனஸாக சனிக்கிழமை மாலையிலேயே அடுத்த அத்தியாயம் பதியப்படும். அதற்கு அடுத்த அத்தியாயம் எப்போதும் போல் அடுத்த திங்களன்று வரும்)




6 comments:

  1. Touching and very interesting. Thanks for the bonus announcement.

    ReplyDelete
  2. Getting more interesting…

    ReplyDelete
  3. பிரம்மானந்தா, சேதுமாதவன் முதல்வரை சந்திக்க சென்ற போது இடையூறு செய்ய முயற்சி செய்தார்..,

    ஆனால், யோகாலாயத்தில் கொலையில் ஈடுபட்ட இரு நபர்கள், சேதுமாதவன் சும்மா இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்....

    ஒரே குழப்பமாக உள்ளது....

    ReplyDelete
    Replies
    1. முதல்வர் அவர் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் தான் பிரம்மானந்தா அறிவார். அந்த நண்பர் சேதுமாதவன் என்று அவருக்குத் தெரியாது.

      Delete
  4. story rompa short ah irku

    ReplyDelete
  5. anda irandu peyarillatha kolaialikalil brammananda oruvaraaka irukkalamo ?

    ReplyDelete