Monday, October 30, 2023

யோகி 20

 

ஷ்ரவனுக்கு பிரம்மானந்தா யோகியெல்லாம் கிடையாது என்று  சேதுமாதவன் உறுதியாகச் சொன்ன விதம் புன்னகையை வரவழைத்தது. “எதனால அப்படிச் சொல்றீங்க சார்?”

 

சில காலமாவது ஆன்மீகத்துல ஆழமாயிருக்கற யாருக்குமே யார் யோகி, யார் யோகியில்லைன்னு தெரியாமப் போகாது தம்பி. அவர் ஆன்மீகத்துல நிறைய படிச்சிருக்கார், பேச்சுத் திறமை இருக்குன்னு வேணும்னா சொல்லலாம். ஆனா யோகிங்கறது எல்லாம் பெரிய வார்த்தை...”

 

நீங்க உங்க கருத்தை சைத்ரா கிட்ட சொல்லியிருக்கீங்களா சார்.”

 

சொல்லியிருக்கேன்.”

 

நீங்க சொன்னதை அவங்க எப்படி எடுத்துகிட்டாங்க?”

 

அவளுக்கு நான் சொன்னது ஏமாற்றமா இருந்துச்சுன்னு நினைக்கிறேன். அவயோகி பிரம்மானந்தா வெளிநாடுகள்ல எல்லாம் போய் நம்ம மதத்தோட பெருமைகளைப் பேசறார் தாத்தா. அங்கேயெல்லாம் கூட அவரைப் பூஜிக்கிறாங்க. அப்படிப்பட்டவரை ஏன் நீங்க யோகியில்லைன்னு சொல்றீங்கன்னு கேட்டா. வெளிநாட்டுல போய் நம்ம மதத்தைப் பேசறவங்க எல்லாம் விவேகானந்தராயிட முடியுமா? விஷய ஞானமோ, பேச்சுத் திறமையோ, ஒருத்தரை யோகியாக்கிடாது, ஆத்மஞானமும், அதற்கேற்ற வாழ்க்கையும் தான் ஒருத்தரை யோகியாய் அடையாளம் காட்ட முடியும்னு சொன்னேன்...”

 

வெளிநாட்டுல போய் நம்ம மதத்தைப் பேசறவங்க எல்லாம் விவேகானந்தராயிட முடியுமா?’ என்று அவர் சொன்னதை ஷ்ரவன் ரசித்தான். கிழவர் மற்றவர்களது புகழை எல்லாம் பெரிதாக லட்சியம் செய்வதில்லை. அவருக்கென்று ஆணித்தரமான கருத்துகளை வைத்திருக்கிறார்...

 

உங்க பேத்தி துறவியாக முடிவெடுத்ததை நீங்களும், உங்க பிள்ளையும் எப்படி எடுத்துகிட்டீங்க?”

 

ரொம்பவே வருத்தமாய் இருந்துச்சு. ஆனா தன்னோட வாழ்க்கை எப்படிப் போகணும்னு முடிவெடுக்க வேண்டியவ அவள் தான். அவளோட எந்த விருப்பத்துக்கும் குறுக்கே நிக்க கிருஷ்ணா விரும்பல. அதனாலஎதையும் யோசிச்சு செய்னு மட்டும் கிருஷ்ணா சொன்னான். அவ அதுல பிடிவாதமா இருந்தா. பிறகு ஒத்துகிட்டோம்...”

 

அவங்க அங்கே போகிறதுக்கு முன்னாடி கடைசியாய் என்ன சொன்னாங்க.”

 

அழுதா. தன்னோட கடமைகளை செய்யத் தவறிட்ட குற்றவுணர்ச்சி இருக்கிறதா சொன்னா. ஆனா துறவியாகிறதுல தான் நிம்மதி கிடைக்கும்னு நம்பறதால போகறதா சொன்னா...” சொல்கையில் சேதுமாதவனின் குரல் கரகரத்தது. மரணத்திலாவது அவளுக்கு நிம்மதி கிடைத்திருக்குமா என்று அவர் தனக்குள் கேட்டுக் கொண்டார்.

 

சைத்ரா யோகாலயம் போய் துறவியானதுக்கப்பறம் நீங்களோ, உங்க பிள்ளையோ போய் அவங்களைப் பார்த்திருக்கீங்களா?”

 

இல்லை. அதற்கு அங்கே அனுமதியில்லை. அவளைப் பிறகு நாங்கள் பார்த்ததே கோர்ட்டில் தான்

 

அங்கே அவங்க உங்க கிட்ட தனியா எதுவும் பேசலையா?”

 

பேசலை..”

 

உங்களுக்கு அவங்க உயிருக்கு ஆபத்திருக்குன்னு சொல்லி வந்த மொட்டைக் கடிதம் இப்ப உங்க கிட்ட இருக்கா?”

 

இல்லை... கிருஷ்ணா யோகாலயத்துக்கு அவளைப் பார்க்கப் போய் அனுமதிக்கலைன்னவுடனே போலீஸ்ல புகார் தந்தோமில்லையா, அப்ப போலீஸ்ல கேட்டாங்கன்னு அந்த மொட்டைக் கடிதத்தை அவங்க கிட்ட கொடுத்துட்டோம். அதைத் திருப்பிக் கேட்டப்ப அது போலீஸ் ரிகார்டுக்கு வேணும்னு சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல திருப்பித் தரலை

 

அந்த மொட்டைக் கடிதம் எப்படி வந்துச்சு? தபால்லயா?”

 

ஆமா. சாதாரண தபால்ல.”

 

தபால் யார் பேருக்கு வந்தது? அந்தக் கடிதத்துல இருந்த வாசகங்களை அப்படியே சொல்ல முடியுமா?” 

 

கிருஷ்ணா பேருக்கு தான் தபால் வந்தது. அதுல “”உங்கள் மகள் உயிருக்கு யோகாலயத்தில் பேராபத்து இருக்கிறது. எப்படியாவது அவளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.”னு எழுதி இருந்துச்சு

 

கடிதம் கையால எழுதப்பட்டதா இல்லை ப்ரிண்ட்டடா

 

கையால எழுதப்பட்டது தான். யாரோ இடது கையால எழுதின மாதிரி இருந்துச்சு,...”

 

தபால்ல போஸ்ட் ஆபிஸ் சீல் இருந்திருக்குமே, அது எந்த போஸ்ட் ஆபிஸ் சீல்னு பார்த்திருக்கீங்களா?”

 

அதை அவரும் கிருஷ்ணாவும் பார்த்திருக்கிறார்கள். அவர் சொன்னார். “யோகாலயம் இருக்கற ஏரியா போஸ்ட் ஆபிஸ் சீல் தான் அதுல இருந்துச்சு

 

பிறகு ஷ்ரவன் சைத்ராவுக்கு கோவிட் என்று தெரிவித்து யோகாலயத்தில் இருந்து தகவல் வந்ததிலிருந்து டாக்டர் வாசுதேவனின் மரணம் வரையான தகவல்களை விரிவாகக் கேட்டுத் தெரிந்து கொண்டான். செவென் ஸ்டார் மருத்துவமனையில் டாக்டர் வாசுதேவன் கிருஷ்ணமூர்த்தியிடம் சொன்னதைக் கேட்ட போது அவனுக்கே ரத்தம் கொதித்தது. கிருஷ்ணமூர்த்திக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்த போது அவன் மனம் இரங்கியது.

 

அங்கிருந்து கிளம்புவதற்கு முன் ஷ்ரவன் சொன்னான். “சார் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமான ஆளாய் இருந்தாலும் இந்த விசாரணை நடக்கறதைப் பத்தி அவங்க கிட்ட நீங்க எதுவுமே சொல்லிடாதீங்க. இது ரகசியமாய் இருந்தா தான் அவங்க குறுக்கீடு இல்லாம நாம உண்மையைக் கண்டுபிடிக்க முடியும்...”

 

சேதுமாதவன் தலையசைத்தார். “நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்என்று சொன்னவருக்கு ஹாலில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் படம் ஏதோ சொல்வது போல் தோன்றியது. ஒரு கணம் மகனின் படத்தைப் பார்த்து விட்டு, ஷ்ரவனின் கையைப் பிடித்துக் கொண்டு ஆவலோடு அவர் கேட்டார். “தம்பி எப்படியாவது உண்மையைக் கண்டுபிடிச்சுடுவீங்கல்ல.”

 

ஷ்ரவன் நெகிழ்ச்சியுடன் உறுதியாகச் சொன்னான். “கண்டிப்பாய் கண்டுபிடிச்சுடுவோம் சார்.”

 

சேதுமாதவன் லேசாகக் கண்கலங்கியபடி அவனைப் பார்த்துக் கைகூப்பினார்.  அவரை அன்போடு அணைத்தபடி தலையசைத்து ஷ்ரவன் விடைபெற்றான்.

 

ஷ்ரவன் தான் தங்கியிருந்த ஓட்டலுக்குத் திரும்பி வந்தான். ராகவனின் மனைவி அவர்கள் வீட்டிலேயே தங்க வற்புறுத்திய போதும் அவன் மறுத்து விட்டான். ராகவனின் உறவினனாக யாரும் அவனை அறிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லதென்று அவன் நினைத்தான். அதே காரணத்தால் ராகவனும் அவனைத் தங்கள் வீட்டில் தங்க வற்புறுத்தவில்லை.

 

ஓட்டல் அறைக்கு வந்த ஷ்ரவன் சைத்ரா சம்பந்தமான பழைய செய்திகளை எல்லாம் இணையத்தில் தேடித் தேடிப் படித்தான். கிருஷ்ணா போலீஸில் புகார் செய்ததற்குப் பின் தான் சைத்ரா பிரபலமாகியிருந்தாள். அதற்கு முன்பு வரை முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் கூட அவள் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாததால் இணையத்தில் எந்தத் தகவலும் இருக்கவில்லை. 

 

பிரபலமான பின் அவளுடைய முழு வரலாற்றையும் தோண்டியெடுத்து பத்திரிக்கைகள் எழுதியிருந்தன. பின் நடந்த நிகழ்வுகள் உடனுக்குடன் வந்திருந்தன. அருணாச்சலத்திடம் சேதுமாதவன் மனத்தாங்கலுடன் சொன்னது போல் உண்மை என்ன என்பது குறித்த அக்கறை எதிலும் பூரணமாகத் தெரியவில்லை. நிறைய கேள்விக்குறிகள், ஆச்சரியக்குறிகள் எல்லாம் போட்டு  கற்பனைகளை வஞ்சனையில்லாமல் சேர்த்து எழுதியிருந்தார்கள். அதையே தான் தொலைக்காட்சிகளிலும் செய்திருந்தார்கள்.

 

ஷ்ரவன் முக்கியமாய் கோர்ட்டுக்கு சைத்ரா வந்த நியூஸ் வீடியோக்களைக் கூர்ந்து பார்த்தான். அவள் கோர்ட்டுக்கு வந்ததில் இருந்து திரும்பிச் செல்லும் வரை அவளை, காமிராக்கள் மையப் படுத்தியிருந்தன. காமிராக்கள் அடுத்தபடியாக சேதுமாதவனையும், கிருஷ்ணாமூர்த்தியையும் அதிகம் காட்டின. இருவர் முகத்திலும் சோகம் தெரிந்தாலும் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் வேதனையும் சோகமும் பல மடங்காய் தெரிந்தது. ஒரு தந்தையின் தவிப்பை ஷ்ரவன் அவர் தோற்றத்தில் அழுத்தமாகவே உணர்ந்தான்.  சைத்ராவுடன் இருந்த இரண்டு துறவிகளும் துறவிகள் போல் தெரியவில்லை. இராணுவத்தில் பணி புரியும் வீரர்கள் போல் அவர்கள் விறைப்பாய் இருந்தார்கள்.

 

கோர்ட்டுக்குள் வீடியோ பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்பதால் உள்ளே நடந்தது பற்றிய வீடியோ பதிவுகள் இருக்கவில்லை. கோர்ட்டில் சைத்ரா தான் பூரண சுதந்திரத்துடன் நலமாக இருப்பதாகச் சொன்னதையும், தனக்கு ஆபத்திருப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மை சிறிதும் இல்லை என்றும் துறவியான பின் உறவுகளைச் சந்திப்பதில் தனக்கு விருப்பமில்லாத காரணத்தால் தான் தந்தை வந்த போது அவரைச் சந்திக்க மறுத்ததாகவும் சொன்னாள் என்பதையும் நிருபர்கள் பரபரப்புடன் ஒளிபரப்பினார்கள். கோர்ட்டுக்குள்ளேயும் அவள் தந்தை, தாத்தா பக்கம் திரும்பவில்லை என்று சொன்னார்கள்.

 

சைத்ரா கோர்ட்டிலிருந்து வெளியே வந்தபின்  காரில் ஏறுவதற்கு முன்பு மட்டும் அவள் கடைசியாக ஒருமுறை தந்தை தாத்தா பக்கம் திரும்பிப் பார்த்தாள். அதுவும் மூன்றே வினாடிகள் தான். பின் காரினுள் அமர்ந்து கொள்ள கார் வேகமாகச் சென்றது. அந்த மூன்று வினாடிகள் வீடியோ ஓட்டத்தை நிறுத்தி ஷ்ரவன் கூர்ந்து பார்த்தான். அவள் முகத்தில் தெரிந்த வேதனை அவனை என்னவோ செய்தது.


(தொடரும்)

என்.கணேசன்

Thursday, October 26, 2023

சாணக்கியன் 80

 

சூரசேனன் பதற்றத்துடன் என்ன நடக்கின்றது என்று பார்த்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்திருக்கும் அவன் அண்ணனை ஏன் சேனாதிபதி உள்ளே அழைக்காமல் வெளியிலேயே நிறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறான் என்பது ஆரம்பத்தில் அவனுக்குப் புரியவில்லை. பின் வீரசேனனை அங்கேயே நிறுத்தி விட்டு சேனாதிபதி மட்டும் சத்ரப்பின் கூடாரம் நோக்கிச் செல்வதைப் பார்த்தவுடன் மெள்ளப் புரிந்தது. “சத்ரப்பின் அனுமதி பெற்றுத் தான் உள்ளே அனுமதிப்பேன்என்று சேனாதிபதி சொல்லியிருக்க வேண்டும். இவர்களுக்காகப் போரிட்டு எதிரிகளிடமிருந்து தப்பித்து வந்தால் சந்தோஷமாக வரவேற்காமல் இப்படிச் செய்கிறார்களே என்ற வெறுப்பு அவன் மனதில் எழுந்து வளரத் தொடங்கியது. தான் ஊழியம் புரியும் இடத்திலேயே அன்னியனைப் போல் வெளியே நிற்கும் தமையனைப் பார்க்க அவனுக்குத் தாங்க முடியவில்லை.  

 

சேனாதிபதி சத்ரப்பின் அறையிலிருந்து உடனடியாக வெளியே வரவில்லை. அவன் வெளியில் வராத வரை சூரசேனனுக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. அந்த நேரமாகப் பார்த்து தொலைவில் அவன் படைவீரர்களில் ஒருவன் சிறுநீர் கழிக்க கூடாரத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது. சூரசேனன் காவல் வீரர்களைப் பார்த்தான். மூவரும் வீரசேனனைப் பார்த்தபடியே முகாமின் வாயிலருகே நின்றிருந்தார்கள். வீரசேனன் என்னேரத்திலும் பாய்ந்து உள்ளே நுழைந்து விடுவான் அல்லது அவர்களைத் தாக்க ஆரம்பித்து விடுவான் என்று அவர்கள் பயப்பட்டது போல் வைத்த கண்களை அவன் மீதிருந்து எடுக்காமல் மூன்று வீரர்களும் நின்றிருந்தார்கள்.

 

சூரசேனன் பதுங்கிப் பதுங்கி வேகமாகச் சென்று அவன் படைவீரனை அடைந்தான். அந்தச் சமயத்தில் அப்படி வரும் தங்கள் தலைவனை அவன் படைவீரன் திகைப்புடன் பார்த்தான்.  சூரசேனன் அவனிடம் வீரசேனனுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அநீதியைச் சுருக்கமாகத் தெரிவித்துச் சொன்னான். “நாம் யவனர்களுக்காக நம் உயிரையும் விடச் சித்தமாய் இருக்கையில் இப்படி யவனர்கள் நம்மிடம் நன்றிகெட்டத்தனமாயும், நியாயம் இல்லாமலும் நடந்து கொண்டால் நாம் பொறுக்க முடியுமா? கலவரக்காரர்கள் குற்றம் சாட்டுவது நிஜம் தான் என்கிறபடியல்லவா யவனர்கள் நடந்து கொள்கிறார்கள்? வீரசேனன் திரும்பி வந்தும் ஏதோ குற்றவாளி போல் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறான். போகிற போக்கைப் பார்த்தால்     ஏதாவது அசம்பாவிதம் இங்கே நடக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.  இதனை நீ வீரசேனனின் படைவீரர்களுக்கும் இரகசியமாகத் தெரிவிக்க வேண்டும். இப்போது யாரும் வெளியே வர வேண்டாம். அது ஆபத்து. ஆனால் ஏதாவது அநீதி நடந்தால் அதைத் தடுக்கவும், கண்டிக்கவும் தயார் நிலையில் உள்ளேயே இருக்கச் சொல். குரல் கொடுத்தால் வந்தால் போதும். நம் வீரர்களுக்கும் சொல். நம்மவர்களும் தயாராக இருக்கட்டும்

 

அந்த வீரனும் மறைவிலிருந்து வெளியே பரிதாபமாக நிற்கும் வீரசேனனைப் பார்த்து மனம் கடுத்தான். சூரசேனனிடம் தலையசைத்த அவன் வேகமாக மறைவிடங்களிலேயே பதுங்கியபடி நகர்ந்து செல்ல ஆரம்பித்தான். சூரசேனன் மறுபடி பழைய இடத்திற்கு வந்து சேர்ந்த போது சேனாதிபதி சத்ரப்பின் கூடாரத்திலிருந்து வெளியே வந்தான். வெளியே வந்தவுடன் சேனாதிபதியின் பார்வை நாலா பக்கங்களிலும் சுழன்றது. எல்லா கூடாரங்களும் அமைதியிலேயே மூழ்கியிருந்தன. அவன் திருப்தியுடன் சென்று வீரசேனனிடம் ஏதோ சொல்லி அவனை அழைத்து வருவது தெரிந்தது. மூன்று காவல் வீரர்களில் ஒருவன் அவர்களைப் பின் தொடர்ந்து வர மற்ற இரண்டு காவல் வீரர்கள் பழையபடி காவல் சுற்றைத் தொடர்ந்தார்கள்.

 

சூரசேனன் வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் வீரசேனனையே பார்த்துக் கொண்டிருந்தான். வீரசேனன் தம்பியின் கூடாரத்தைப் பார்ப்பது தெரிந்தது. சற்று அவன் பார்வை நகர்ந்து சூரசேனன் தற்போது மறைந்து நின்று கொண்டிருக்கும் இடம் வந்த போது சூரசேனன் கைகளை அசைத்தான். வீரசேனன் தம்பியைப் பார்த்தாலும் முன்னால் சேனாதிபதியும், பின்னால் ஒரு காவல் வீரனும் இருப்பதால் இயல்பாகவே நடந்தான்.

 

பிலிப் தன் முன்னால் வந்து நின்ற வீரசேனனைக் கண்டிப்பான பார்வை பார்த்தான்.  அவன் கண்கள் வீரசேனனின் காயங்களை ஆராய்ந்தன. வீரசேனன் அவனை வணங்கி நின்ற போது இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொன்னான். “நீ சொன்னதை எல்லாம் சேனாதிபதி மூலம் அறிந்தேன். ஆனால் எது எப்படி இருந்தாலும் அதிகாலை நான் கண்விழிக்கும் வரை காத்திருக்க நீ சம்மதிக்காதது என் கீழ் ஒரு படைத்தலைவனாக இருக்கும் உனக்கு சோபை தரவில்லை வீரசேனா

 

பிலிப் கிரேக்க மொழியில் சொன்னதை யவன சேனாதிபதி தான் வீரசேனனுக்கு மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. சேனாதிபதி அப்பகுதியில் பேசப்பட்ட மொழியில் நன்றாகவே தேர்ச்சி பெற்றிருந்ததால் வேறொரு மொழி பெயர்ப்பாளனின் அவசியம் அங்கிருக்கவில்லை.

 

வீரசேனன் சொன்னான். “உங்களின் கீழ் படைத்தலைவனாக இருக்கும் என்னை என் கூடாரத்திற்குச் செல்ல சேனாதிபதி அனுமதித்திருந்தால் நான் இந்த அகால வேளையில் தங்களை எழுப்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது சத்ரப்

 

அவன் சொன்னது பிலிப்பின் கோபத்தை அதிகப்படுத்தியது. அவன் சொன்னான். “நீ கலவரக்காரர்களுக்கு ஆதரவாக இங்கே நடந்து கொண்டு அவர்களைக் கண்டிக்க முயன்ற யவனப்படைத்தலைவனைத் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால்  உன் மேல் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் சேனாதிபதிக்கும் வந்திருக்காது வீரசேனா.  நீ ஏன் கலவரத்தின் போது அப்படி நடந்து கொண்டாய்?”

 

லவரக்காரர்களாக அந்தக் கோஷமிட்ட சிறுவர்களை நான் நினைக்கவில்லை. அதற்கென்று நான் அவர்கள் செயல்களை அங்கீகரிக்கவும் இல்லை. மிரட்டி விரட்ட வேண்டிய சிறுவர்களைத் தாக்கித் தண்டிப்பது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் தான் அவர்களைத் தாக்க முற்பட்ட யவனப்படைத்தலைவரைத் தடுத்து அந்தச் சிறுவர்களை விரட்டி விட்டேன்.”

 

பிலிப் கடுமையான குரலில் சொன்னான். “விளையாட வேண்டிய வயதில் கோஷமிட சிறுவர்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு என்ன தண்டனையோ அதைப் பெறத் தயாராகவும் இருக்க வேண்டும். கோஷமிடுபவர்களை இரக்கப்பட்டு விட்டு விட்டால் அவர்கள் நாளை வன்முறையிலும் தைரியமாக இறங்குவார்கள். அதனால் உன் செயல் சரியானதல்ல வீரசேனா. எதிரிகள் விஷயத்தில் எந்த விதத்திலும் என் படைகளுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வருவதை நான் ரசிக்கவில்லை.”

 

வீரசேனன் சொன்னான். “சிறுவர்களைத் தாக்க வேகமாக முன்வந்த யவனப்படைத்தலைவர் புரட்சிப்படை வீரர்கள் வந்து தாக்கிய போது எந்த அளவு தன் பராக்கிரமத்தைக் காட்டினார் என்றும் நீங்கள் கவனிக்க வேண்டும் சத்ரப். அந்தப் புரட்சிப்படை வீரர்களைக் காட்டுக்குள்ளேயும் கூட வீரத்தோடு பின் தொடர்ந்தவன் நான் தான். அந்த யவனப்படைத்தலைவர் செல்லவில்லை.”

 

பிலிப் ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டான். “அங்கே காட்டுக்குள் எத்தனை வீரர்கள் இருந்தார்கள்?”

அங்கே நான் பார்த்தது சுமார் முப்பது வீரர்களைத் தான். மற்றவர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.”

 

யார் அவர்கள் தலைவன்?”

 

சந்திரகுப்தன் என்ற இளைஞன்.”

 

அவன் தான் உன்னை அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்படி அழைத்தானா?”

 

ஆமாம்.”

 

நீ மறுத்தவுடன் உன்னைப் போக அனுமதித்து விட்டானா அவன்?” பிலிப் சந்தேகத்தோடு கேட்டான். அவன் பார்வை கூர்மையாக வீரசேனன் மீது நிலைத்தது.

 

வீரசேனன் சொன்னான். ”அனுமதி தந்தது அவனல்ல. அங்கே ஒரு அந்தணர் இருந்தார். அவரை எல்லாரும் ஆச்சாரியர் என்று அழைக்கிறார்கள். அவர் தான் அவர்களை வழிநடத்துபவர் போல் தெரிகிறது. அவரிடம் நான் சொன்னேன். ”உங்களுடன் நான் இணைய முடியாது. அதனால் உங்கள் எதிரியான எனக்கு என்ன தண்டனை தருவது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்து விடுங்கள். ஒரு வீரனாக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்என்று. ஆனால் அவர் என்னைப் பெருந்தன்மையுடன் அனுப்பி விட்டார்.”

 

பிலிப்புக்கு விஷ்ணுகுப்தர் அருகிலிருக்கும் காட்டில் இருக்கிறார் என்ற தகவல் அதிர்ச்சியளித்தது. எல்லாரையும் இயக்கும் ஆள் முக்கியமான நிகழ்வுகள் நடக்கவிருக்கும் பகுதியிலேயே இருப்பார். அது தான் இயல்பு. அவருடைய சீடர்களில் சந்திரகுப்தன் தான் அதிமுக்கியமானவன் என்றும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் சேர்ந்து அருகிலிருக்கும் காட்டில் இருக்கிறார்கள் என்றால் இங்கே ஏதோ முக்கிய சதியை அரங்கேற்றம் செய்யவிருக்கிறார்கள் போல் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகக் கூட வீரசேனனை அனுப்பி வைத்தது இருக்கலாம். வீரசேனன் அவர்களுடன் இணைய மறுத்தும் அவனைப் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்த கதையை நம்பும் அளவு பிலிப் முட்டாள் என்று அவர்கள் நினைத்திருப்பது பிலிப்புக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இவனைச் சித்திரவதை செய்து தான் உண்மையை வரவழைக்க வேண்டும் என்று முடிவு செய்தவனாய் சேனாதிபதியை அர்த்தமுள்ள பார்வை பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்       



 
 

Monday, October 23, 2023

யோகி 19


 சேதுமாதவனை ஷ்ரவன் மறுநாளே சந்தித்தான். முதுமையில் குடும்பத்தினர் அனைவரையும் பறிகொடுத்து விட்டுத் தனிமையில் இருந்தாலும் சோகங்களைச் சமாளித்துக் கொண்டு வாழும் அவர் மீது அவனுக்கு மிகுந்த மதிப்பிருந்தது. அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அவரும் அவனை மரியாதையுடன் வரவேற்றார். அருணாச்சலம் வாக்களித்தபடி காலம் தாழ்த்தாமல்  விசாரணைக்கு ஏற்பாடு செய்தது அவருக்கு மனநிறைவாக இருந்தது.


ஷ்ரவன்  ஆரம்பத்திலேயே அவரிடம் சொன்னான். “சார், உங்களுக்குப் பழைய கசப்பான அனுபவங்களையும், அதை ஞாபகப்படுத்தற விஷயங்களையும் திரும்பச் சொல்றது கஷ்டமாயிருக்கலாம். ஆனால் அதை  உங்க கேட்டு முழுசா உள்வாங்கிகிட்டா தான் நான் அதுக்கேத்த மாதிரி நடந்துகிட்டு உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும். அதனால என்னடா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வருதேன்னு தயவு செஞ்சு நினைச்சுக்காதீங்க.”


சேதுமாதவன் வேதனையுடன் புன்னகைத்தார். “புரியுது தம்பி. என்ன வேணும்னாலும் கேளுங்க... பின்னே கஷ்டங்க அதிகமா வர வர மனசு ஒரு கட்டத்துல மரத்துப் போய் வைராக்கியம் வந்துடுது. இனியும் ஆக ஒன்னுமில்லைன்னு தைரியம் வந்துடுது. எனக்கு அப்படி வர ஆரம்பிச்சிடுச்சு” 


அந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்த ஷ்ரவன் தன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். “சைத்ராவைப் பத்தி சொல்லுங்க சார். அவங்க எப்படிப்பட்டவங்க, அவங்க விருப்பு வெறுப்புகள் என்னென்ன, பலம் பலவீனம் எல்லாம் என்னங்கற மாதிரி தகவல்கள் எல்லாம் சொல்லுங்க.”


பேத்தியைப் பற்றி என்னவெல்லாம் சொல்வது என்று சிறிது யோசித்து விட்டு சேதுமாதவன் சொல்ல ஆரம்பித்தார். “சின்ன வயசுல இருந்தே சைத்ரா சுறுசுறுப்பான பொண்ணு தம்பி. நிறைய தெரிஞ்சுக்கணும், நிறைய சாதிக்கணும்னு நினைக்கிற ரகம்... ரொம்ப நல்லா படிப்பா... படிக்கறப்ப வகுப்புல முதல் மூனு ரேங்குக்குள்ளே இருப்பா...  பாசமான பொண்ணு... அவளோட பதினைஞ்சாவது வயசுல அவ அம்மா இறந்து போனா. அதுல அவ ரொம்ப பாதிக்கப்படுவான்னு நானும் கிருஷ்ணாவும் பயந்தோம். ஆனா ரெண்டு நாள் அழுது தீர்ந்து மூனாவது நாள் இயல்பான நிலைமைக்கு வந்துட்டா. அவங்கப்பாவுக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு பக்குவமானவளாய் இருந்தா. “நாம துக்கத்துலயே இருந்துட்டா அம்மா ஆத்மா சாந்தியடையாதுப்பா. நீங்களும், நானும் அதுக்காகவாவது பழையபடி ஆகணும்.”னு சொன்னா. தினம் ஸ்கூல், காலேஜுக்குப் போறப்ப அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் ‘பை’ சொல்ற மாதிரி அம்மா போட்டோக்கும் ‘பை’ சொல்லிட்டு போவா. அம்மா இந்த வீட்டுல இன்னும் இருக்கறதா சொல்வா....”


சேதுமாதவன்  உணர்ச்சிவசப்பட்டு நிறுத்தி மனதை திடப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். “... அப்படி பாசமும், பக்குவமும் இருக்கிற பொண்ணு அவ. பலவீனம்னு சொல்லணும்னா யார் கிட்டயும் ஏமாறுறது அவளால ஜீரணிக்க முடியாத விஷயம். எல்லாரும் நியாயமாவும், நேர்மையாயும் இருக்கணும்னு எதிர்பார்ப்பா. அப்படி இல்லைன்னா அவங்க கிட்ட இருந்து தயவு தாட்சணியம் பார்க்காம விலகிப் போயிடுவா. யாராவது ஏதாவது சந்தர்ப்பத்துல சரியாய் நடந்துக்கலைன்னா அவ விலகிடுவாங்கறதாலேயே அவளுக்கு தோழிகள் குறைவு. ஒரே ஒரு பொண்ணு தான் கடைசி வரைக்கும் அவளுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தா. அவளும் இன்ஜீனியரிங் படிச்சு முடிச்சதும் கல்யாணமாகி அமெரிக்கா போய் செட்டிலாயிட்டா...”


நியாயம், நேர்மையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இருக்காத பெண் என்பதை மனதில் அடிக்கோடிட்டுக் கொண்ட ஷ்ரவன் சொன்னான். “அவங்க யோகாலயம் போக ஆரம்பிச்சது எப்படின்னு சொல்றீங்களா?”


“இன்ஜீனியரிங் படிச்சு முடிச்சவுடனேயே கேம்பஸ் இண்டர்வ்யூலயே நல்ல ஒரு கம்பெனில அவளுக்கு வேலை கிடைச்சுது. வேலை பெங்களூர்ல. மாசத்துக்கு ரெண்டு தடவை வாரக்கடைசிகள்ல வருவா. வேலைல சேர்ந்து ஒரு வருஷம் கழிச்சு கூட வேலை பார்க்கற ஒருத்தன் சிநேகிதமானான். அவங்க ரெண்டு பேரும் காதலிச்சாங்க. அவ காதலை எங்க கிட்ட சொன்னா.  அவ சொல்ற எதுக்கும் கிருஷ்ணா ஆட்சேபம் தெரிவிச்சதில்லை. உனக்குப் பிடிச்சா சரிதான்னு சொல்லிட்டான்.  அந்தப் பையனும் ஒரு தடவை இங்கே வந்தான். நல்லா தான் பேசினான். அவங்க வீட்டுல ஜாதி பார்ப்பாங்கன்னும், நிதானமா சொல்லி சம்மதம் வாங்கறேன்னும் சொன்னான். கொஞ்ச நாள்ல அந்தக் கம்பெனில புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்தா. பார்க்க ரொம்ப அழகாய் ஸ்டைலாய் இருந்ததால அந்தப் பையன் மனசுல அந்தப் பொண்ணு இடம் பிடிச்சுட்டா. அதை ஒரு நாள் அவன் சைத்ரா கிட்ட வெளிப்படையாவே சொல்லிட்டான். சொல்லி அவன் ரெண்டே நாள்ல அந்தப் பொண்ணை வீட்டு சம்மதம் வாங்காமலேயே கல்யாணமும் பண்ணிகிட்டான். ஏன்னா அந்தப் பொண்ணு ஜாதி மட்டும் வேற இல்ல. மதமே வேறயாம். அவங்க கல்யாணத்துக்கும் சைத்ரா போய் வாழ்த்திட்டு வந்தா. ஆனா அவளுக்குள்ளே கல்யாணம், குடும்ப வாழ்க்கை பத்தின ஆசை எல்லாம் அதோட நிரந்தரமா செத்துப் போச்சுன்னு தோணுது...”


ஒரு கணம் சொல்வதை நிறுத்தி ஹாலில் மாட்டியிருந்த பேத்தியின் பெரிய புகைப்படத்தை சேதுமாதவன் இரக்கத்துடன் பார்த்து விட்டுத் தொடர்ந்தார். “அதுக்கப்பறம் அவங்கள தினம் பார்த்துகிட்டு வேலை பார்க்க முடியாம சைத்ரா வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டா. அந்தக் காதல் தோல்வி அவளை ரொம்பவே பாதிச்சுது. சரியாய் சாப்பிடல. தூங்கல. எங்க கிட்ட கூட அது சம்பந்தமா அவளால மனசு விட்டுப் பேச முடியல. அது கொஞ்சம் கொஞ்சமா டிப்ரஷன்ல கொண்டு போய் முடிஞ்சுது. கிருஷ்ணா அதுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போனான். அங்கே போக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல சைத்ரா பழைய நிலைமைக்கு வர ஆரம்பிச்சா. அப்ப அந்த ஸ்பெஷலிஸ்ட் யோகா தியானம் எல்லாம் அவளுக்கு ரொம்ப உதவியாய் இருக்கும்னு சொன்னார்.  அதுக்கு எங்கே போறதுன்னு யோசிச்சப்ப பலரும் யோகாலயம் பத்திச் சொன்னாங்க. சரின்னு அங்கே அதைக் கத்துக்கறதுக்காக சைத்ரா போக ஆரம்பிச்சா.”


“அங்கே போக ஆரம்பிச்சப்ப அவங்களுக்கு சன்னியாசியாகணும்கிற எண்ணம் இருந்ததா?”


“இல்லை. யோகா, தியானம் ரெண்டையும் கத்துக்கணும், மன அமைதி கிடைக்கணுகிறது தான் அவளோட இலக்காய் இருந்துச்சு. ஒரு வாரம் அங்கேயே இருந்து அதெல்லாம் நல்லா கத்துகிட்டு வந்தா. வீட்டுலயும் தொடர்ந்து அவங்க சொல்லிக் குடுத்த பயிற்சிகள் எல்லாம் செஞ்சா. அப்பவும் சன்னியாசியாகற எண்ணம் அவளுக்கு இருக்கல...”


“முதல் தடவை போயிட்டு வந்தப்ப யோகாலயம் பத்தி அவங்க என்ன எல்லாம் சொன்னாங்க. யாரைப் பத்தியெல்லாம் சொன்னாங்க?”


“அங்கே எல்லாம் ஒழுங்கு முறையோட இருந்தது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. பிராணாயாமமும் யோகாவோட அடிப்படைகளும் சொல்லிக் கொடுத்தாங்க போலருக்கு. அந்த சுத்தமான இடம், அமைதியான  சூழ்நிலை, சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் எல்லாமே அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சுன்னு எங்க கிட்ட சொன்னா. யோகா நம்ம தேசத்தோட உண்மையான பொக்கிஷம்னு மெச்சினா. ரொம்ப உற்சாகமா இருந்தா. என் கிட்ட இருந்த ஆன்மீக புஸ்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சா...”


“என்ன புஸ்தகங்கள் எல்லாம் படிச்சாங்க?”


“பகவத் கீதை, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி புஸ்தகங்கள்...”


ஷ்ரவனும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை விரும்பிப் படிப்பான். அவனிடம் அவர் பேச்சுக்களின் வீடியோக்களும் நிறைய இருந்தன. அவற்றையும் பார்த்து அவர் பேச்சுக்களைக் கேட்பான். அதனால் ஜே.கேயின் நூல்களை அவரும் வைத்திருக்கிறார் என்பதே அவரிடம் கூடுதல் சிநேகத்தை அவனுக்கு ஏற்படுத்தியது. அவன் கேட்டான். “அவங்க அடுத்த வகுப்புக்கு எப்ப போனாங்க?”


“அடுத்த மாசமே போனா. அப்பவும் ஒரு வாரம் அந்த வகுப்புகள் இருந்துச்சு. அப்ப போயிட்டு வந்தவ தான் நாலு நாள் கழிச்சு சன்னியாசியாக ஆசைப்படறதா சொன்னா”


“அப்பவாவது குறிப்பா அங்கேயிருக்கற யாரைப் பத்தியாவது அவங்க சொன்னதா நினைவிருக்கா?”


“இல்லை. யாரைப் பத்தியும் குறிப்பா எதுவும் சொல்லலை.”



“அந்த ரெண்டு வகுப்புகள்ல கத்துக் கொடுக்க பிரம்மானந்தா வந்திருந்ததா சைத்ரா சொல்லியிருக்காங்களா?”


“அவர் வரலயாம். வேற ஆட்கள் தான் வந்து கத்துக் கொடுத்தாங்களாம். அவர் பேசின ரெண்டு வீடியோவை தான் இவங்களுக்குப் போட்டுக் காட்டினதா சைத்ரா சொன்னா”


பிரம்மானந்தாவைப் பற்றி சேதுமாதவன் பேசின போது அவர் மீது பெரிய அளவில் மரியாதை தெரியவில்லை. அதற்குக் காரணம் சைத்ராவின் மரணமா, இல்லை முன்கூட்டியே அவருக்கு பிரம்மானந்தா மேல் உயர்ந்த அபிப்பிராயம் இல்லையா என்பதை ஷ்ரவன் அறிந்து கொள்ள விரும்பினான்.


“நீங்க பிரம்மானந்தா பத்தி என்ன நினைக்கிறீங்க?”


“அவர் யோகியெல்லாம் கிடையாது” என்று எந்த சந்தேகமும் இல்லாமல் சேதுமாதவன் சொன்னார்.


(தொடரும்)

என்.கணேசன்




Thursday, October 19, 2023

சாணக்கியன் 79

சூரசேனன் தன் சிறு கூடாரத்திலிருந்து வெளியே வந்த போது யவன சேனாதிபதியும் தன் கூடாரத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது. ஏதோ ஒரு உள்ளுணர்வு சூரசேனனை எச்சரிக்க வேகமாக அருகே இருந்த ஒரு மரத்தின் பின்னால் அவன் மறைவாய் நின்று கொண்டு கவனிக்க ஆரம்பித்தான். யவன சேனாதிபதி குளம்படிச் சத்தம் வரும் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத் திடீர் என்று சூரசேனன் கூடாரம் பக்கம் பார்வையைத் திருப்பினான். பின் அவன் பார்வை சுற்றும் முற்றும் சுழன்றது. வழக்கமாக முகாமைச் சுற்றியபடி இரவுக் காவல் காக்கும் மூன்று வீரர்கள் சேனாதிபதியைப் பார்த்து விட்டு அவனை நெருங்கினார்கள். அவர்களிடம் சேனாதிபதி மெல்லிய குரலில் எதோ பேசுவது தெரிந்தது. பின் மூவரில் ஒருவன் சேனாதிபதியுடன் நின்று கொள்ள மற்ற இருவரும் வழக்கம் போல் சுற்றியபடி தங்கள் காவல் பணியைத் தொடர்ந்தார்கள்.

 

சேனாதிபதியின் பார்வை குளம்படிச் சத்தம் வரும் திசையில் நிலைத்தாலும் அவ்வப்போது அவன் சூரசேனன் கூடாரத்தையும், சற்று தொலைவில் இருந்த வீரசேனன் படைப்பிரிவினரின் கூடாரத்தையும் பார்த்துக் கொண்டான். அது சூரசேனனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதனால் அவன்  மறைவிலிருந்தபடியே கவனிப்பது என்று முடிவெடுத்தான்.

 

சிறிது நேரத்தில் யவன சேனாதிபதியின் கண்கள் தொலைவில் குதிரை மீதமர்ந்து  வந்து கொண்டிருந்த வீரசேனனைக் கண்டன. யவன சேனாதிபதி கூர்ந்து பார்த்தான். வீரசேனனுடன் யாருமில்லை. யவன சேனாதிபதி முகாமின் வாயிற்பகுதி நோக்கி நடக்க ஆரம்பிப்பதற்கு முன் மறுபடி சூரசேனன் கூடாரத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டான். வாயிற்பகுதியை நோக்கி நடந்த யவன சேனாதிபதியுடன் காவல் வீரனும் நடக்க மற்ற இரு காவல் வீரர்கள் எதுவுமே வித்தியாசமாக நடக்காதது போல் சுற்றி நடந்து கொண்டிருந்தார்கள்.


வீரசேனன் முகாமை அடைந்தவுடன் குதிரையை விட்டிறங்கி வாயிலில் நின்றிருந்த யவன சேனாதிபதியைப் பணிவுடன் வணங்கினான். வணக்கத்தை ஏற்றுக் கொண்ட சேனாதிபதி கேட்டான். “என்ன ஆயிற்று வீரசேனரே?”

 

காயப்பட்டு எதிரிகளிடம் சிக்கிக் கொண்டேன் சேனாதிபதி. அவர்கள் என் காயங்களுக்கு மருந்திட்டு, பின் என்னை அவர்களுடன் சேர்ந்து கொள்ள என்னென்னவோ சொல்லி வற்புறுத்தினார்கள். நான் உறுதியாக மறுத்து விட்டேன். கடைசியில் என்னை அனுப்பி விட்டார்கள்

 

யவன சேனாதிபதி வீரசேனனின் வலது காலிலும் இடது தோளிலும் ஏற்பட்டிருந்த காயங்களைக் கூர்ந்து பார்த்தான். பச்சிலைகளால் கட்டு போடப்பட்டிருந்ததால் உள்ளே காயங்கள் உண்மையாகவே இருக்குமா என்று உறுதியாகத் தெரியவில்லை. பார்வைக்காகப் போடப்பட்டிருந்த கட்டுகளாகக் கூட அவை இருக்கலாம். அவன் சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “சத்ரப் உறங்கிக் கொண்டிருக்கிறார் வீரசேனரே. அவர் அனுமதியில்லாமல் நான் உங்களை முகாமிற்குள் அனுமதிக்க முடியாது.”

 

வீரசேனன் தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கப் பாடுபட்டான். ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் சொன்னது போல இந்த யவனர்கள் சந்தேகப் பேர்வழிகள். இவர்களுக்கு நேர்மையாக இருக்கும் வீரர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. கோபத்தை அடக்கிக் கொண்ட வீரசேனன்ஏன் சேனாதிபதி?” என்று கேட்டான்.

 

சேனாதிபதி என்ன சொல்வதென்று சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “சத்ரப் உறங்கப் போகும் வரை நீங்கள் வந்து விட்டீர்களா என்று கேட்டுக் கொண்டிருந்தார். அதனால் அவரைக் கேட்டுக் கொண்டு உங்களை உள்ளே அனுமதிப்பது சரியென்று நினைக்கிறேன்

 

அன்னியர்கள் அன்னியர்களே என்று ஆச்சாரியர் ஆணித்தரமாகச் சொன்னது மிகச்சரியே என்று நினைத்து மனம் நொந்த வீரசேனன் சொன்னான். “சரி சேனாதிபதி. நீங்கள் என் சகோதரனை அழைத்து வரச் சொல்லுங்கள். அவனும் மிகவும் கவலையோடு இருப்பான். என்னைப் பார்த்தால் அவன் நிம்மதியடைவான்

 

சேனாதிபதி சொன்னான். “வீரசேனரே. நான் சத்ரப்பின் அனுமதியில்லாமல் உங்களை முகாமுக்குள் அனுமதிக்க முடியாதது மட்டுமல்ல யாரையும் நீங்கள் சந்தித்துப் பேசவும் அனுமதிக்க முடியாது.”

 

அப்படியானால் சத்ரப்பிடம் நான் வந்திருக்கும் தகவலைச் சொல்லி அனுமதி கேட்டு வாருங்கள். நான் காத்திருக்கிறேன்.”

 

வீரசேனன் சொன்னதைக் கேட்டு திகைத்த சேனாதிபதி சொன்னான். ”வீரசேனரே, இப்போது நள்ளிரவாகி விட்டது. இந்த நேரத்தில் நான் சென்று சத்ரப்பை எழுப்பினால் அவர் என்னைக் கடிந்து கொள்வார். அதனால் தாங்கள் அருகில் எங்காவது சென்று இளைப்பாறிவிட்டு காலையில் வாருங்கள். அவரிடம் அனுமதி வாங்கிக் கொண்டு நீங்கள் உள்ளே வரலாம்.”

 

சேனாதிபதி இப்படிச் சொல்லி விட்டுத் தந்திரமாக யோசித்தான்.  இவன் எங்கே போனாலும் பின்னாலேயே வீரர்களை அனுப்பி இவனைக் கொன்று விட்டால் இவனை புரட்சி வீரர்கள் கொன்று விட்டு பிணத்தை அங்கே வீசியெறிந்து விட்டுப் போய் விட்டார்கள் என்று சொல்லலாம். எல்லோரும் கண்டிப்பாக நம்பி விடுவார்கள். பெரிய பிரச்சினை ஒன்று ஓய்ந்து போகும்.’ இந்த எண்ணம் அவனுக்குத் திருப்தியை அளித்தது.

 

ஆனால் அவன் சிறிதும் எதிர்பாராதவிதமாக வீரசேனன் சொன்னான். “நான் அப்படி எங்காவது சென்று இளைப்பாறுவதற்கு முன்பாக சத்தமிட்டு என் தம்பியையும் என் வீரர்களையும் எழுப்பி என்னை நீங்கள் நடத்தும் விதத்தைத் தெரிவித்து விட்டுத் தான் போவேன் சேனாதிபதி. உங்களுக்காக எதிரிகளுடன் வீரமாகப் போரிட்டு, காயப்பட்டு, அவர்கள் தங்களுடன் சேர்ந்து கொள்ள அழைத்த போதும் மறுத்து விட்டு சிறிதும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் நள்ளிரவில் திரும்பியிருக்கும் ஒரு படைத்தலைவனுக்கு நீங்கள் தரும் கௌரவம் என்ன என்பதை அவர்களுக்குத் தெரிவித்து விட்டுத் தான் போவேன்.”

 

இதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்காத சேனாதிபதி அதிர்ந்து போனான். அவன் முகத்தில் இருந்த இரத்தம் வடிந்து முகம் வெளுத்தது. ”என்ன வீரசேனரே. இப்படிப் பேசுகிறீர்கள்?”

 

வீரசேனன் அமைதியாகச் சொன்னான். “நான் வந்தவுடன் இந்தத் தொனியில் பேசவில்லை சேனாதிபதி. நீங்கள் இப்படிப் பேச நிர்ப்பந்தித்ததால் தான் இப்படிப் பேசுகிறேன். சீக்கிரம் உங்கள் முடிவைச் சொல்லுங்கள்.”

 

சேனாதிபதிக்கு வந்த கோபத்தில் அங்கேயே அவனும் அருகில் இருக்கும் வீரனும் சேர்ந்து வீரசேனனைக் கொன்று விட்டால் என்ன என்று தோன்றியது. ஆனால் வீரசேனனும் மாவீரன். அப்படிக் கொல்வது சுலபமல்ல. அவன் இவர்கள் கொல்ல முயற்சி செய்கிறார்கள் என்று கத்திச் சொன்னால் இங்கேயே ஒரு கலவரம் வெடிக்க வாய்ப்பிருக்கிறது....

 

சேனாதிபதி சிறிது யோசித்து விட்டுச் சொன்னான். “சரி இங்கேயே அமைதியாக நில்லுங்கள் வீரசேனரே. நான் சத்ரப்பை எழுப்பி அவரிடம் பேசி அனுமதி வாங்கி விட்டு வருகிறேன். ஆனால் அதற்கும் முன்பு தாங்கள் இப்போது என்னிடம் சொன்னபடி பைத்தியக்காரத்தனமாக எதுவும் செய்ய மாட்டேன் என்று வாக்கு அளியுங்கள்.”

 

நீங்கள் சத்ரப்பிடம் கேட்டு வரும் வரை நான் அமைதியாகவே இருப்பேன் சேனாதிபதி. இது நான் தங்களுக்கு அளிக்கும் வாக்குஎன்று வீரசேனன் உறுதியாகச் சொன்னான்.

 

காவலனை அவனருகில் நிறுத்தி விட்டு சேனாதிபதி சத்ரப்பின் கூடாரம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். போகும் போது சுற்றிக் கொண்டிருந்த இரண்டு காவல் வீரர்களிடமும் வீரசேனன் மீது அவர்கள் பார்வை இருக்கட்டும் என்று பார்வையாலேயே கட்டளையிட்டுச் சென்றான். அவர்கள் சுற்றுவதை நிறுத்தி விட்டு வீரசேனனை எட்டும் தொலைவிலேயே நின்று கொண்டார்கள்.

 

சேனாதிபதி சத்ரப்பின் கூடாரத்திற்குள் நுழைந்த போது பிலிப் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.  நீண்ட நேரமாகப் பலவிதமான கவலைகளால் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த அவன் சற்று முன் தான் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

 

சேனாதிபதி அவனை அழைத்தான். “சத்ரப்... சத்ரப்

 

சத்ரப் எழவில்லை. மெல்ல சேனாதிபதி அவன் காலைத் தொட்டு அழைக்க பிலிப் உறக்கம் கலைந்து மின்னல் வேகத்தில் தன் அருகே வைத்திருந்த குறுவாளை எடுத்து ஓங்கியபடி எழுந்தான். சேனாதிபதியைப் பார்த்தவுடன் அச்சம் நீங்கி அமைதியடைந்த அவன் குறுவாளை அருகில் வைத்து விட்டுக் கேட்டான். “என்ன சேனாதிபதி?”

 

சேனாதிபதி வீரசேனன் வரவையும் அதன் பின் நடந்ததையும் சொல்ல பிலிப் கடுங்கோபம் அடைந்தான். “என்ன நெஞ்சழுத்தம் அவனுக்கு. அவனைப் போன்றவனை நாம் நம்முடன் இருக்க விட்டால் நம்மை என்ன செய்து விட மாட்டான்?”

 

சேனாதிபதி சொன்னான். “அவன் சொன்னதைக் கேட்டு எனக்கும் ரத்தம் கொதித்தது சத்ரப். ஆனால் வெட்டவெளியில் அவனை ஏதாவது செய்வது நமக்கு ஆபத்து என்று தான் விட்டுவிட்டேன்

 

பிலிப் கோபத்துடன் சொன்னான். “நீ நினைத்தது சரி தான். அவனை நீ இங்கழைத்து வா. அவன் சொல்லும் கதையைக் கேட்டு விட்டுச் செய்ய வேண்டியதை இங்கே செய்து விட்டு பிணத்தை விடியலுக்குள் ரகசியமாக அப்புறப்படுத்துவோம்.”

 

(தொடரும்)

என்.கணேசன்