Monday, October 23, 2023

யோகி 19


 சேதுமாதவனை ஷ்ரவன் மறுநாளே சந்தித்தான். முதுமையில் குடும்பத்தினர் அனைவரையும் பறிகொடுத்து விட்டுத் தனிமையில் இருந்தாலும் சோகங்களைச் சமாளித்துக் கொண்டு வாழும் அவர் மீது அவனுக்கு மிகுந்த மதிப்பிருந்தது. அவன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் அவரும் அவனை மரியாதையுடன் வரவேற்றார். அருணாச்சலம் வாக்களித்தபடி காலம் தாழ்த்தாமல்  விசாரணைக்கு ஏற்பாடு செய்தது அவருக்கு மனநிறைவாக இருந்தது.


ஷ்ரவன்  ஆரம்பத்திலேயே அவரிடம் சொன்னான். “சார், உங்களுக்குப் பழைய கசப்பான அனுபவங்களையும், அதை ஞாபகப்படுத்தற விஷயங்களையும் திரும்பச் சொல்றது கஷ்டமாயிருக்கலாம். ஆனால் அதை  உங்க கேட்டு முழுசா உள்வாங்கிகிட்டா தான் நான் அதுக்கேத்த மாதிரி நடந்துகிட்டு உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியும். அதனால என்னடா சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்ல வேண்டி வருதேன்னு தயவு செஞ்சு நினைச்சுக்காதீங்க.”


சேதுமாதவன் வேதனையுடன் புன்னகைத்தார். “புரியுது தம்பி. என்ன வேணும்னாலும் கேளுங்க... பின்னே கஷ்டங்க அதிகமா வர வர மனசு ஒரு கட்டத்துல மரத்துப் போய் வைராக்கியம் வந்துடுது. இனியும் ஆக ஒன்னுமில்லைன்னு தைரியம் வந்துடுது. எனக்கு அப்படி வர ஆரம்பிச்சிடுச்சு” 


அந்த வார்த்தைகளைக் கேட்டு மனம் நெகிழ்ந்த ஷ்ரவன் தன் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான். “சைத்ராவைப் பத்தி சொல்லுங்க சார். அவங்க எப்படிப்பட்டவங்க, அவங்க விருப்பு வெறுப்புகள் என்னென்ன, பலம் பலவீனம் எல்லாம் என்னங்கற மாதிரி தகவல்கள் எல்லாம் சொல்லுங்க.”


பேத்தியைப் பற்றி என்னவெல்லாம் சொல்வது என்று சிறிது யோசித்து விட்டு சேதுமாதவன் சொல்ல ஆரம்பித்தார். “சின்ன வயசுல இருந்தே சைத்ரா சுறுசுறுப்பான பொண்ணு தம்பி. நிறைய தெரிஞ்சுக்கணும், நிறைய சாதிக்கணும்னு நினைக்கிற ரகம்... ரொம்ப நல்லா படிப்பா... படிக்கறப்ப வகுப்புல முதல் மூனு ரேங்குக்குள்ளே இருப்பா...  பாசமான பொண்ணு... அவளோட பதினைஞ்சாவது வயசுல அவ அம்மா இறந்து போனா. அதுல அவ ரொம்ப பாதிக்கப்படுவான்னு நானும் கிருஷ்ணாவும் பயந்தோம். ஆனா ரெண்டு நாள் அழுது தீர்ந்து மூனாவது நாள் இயல்பான நிலைமைக்கு வந்துட்டா. அவங்கப்பாவுக்கு ஆறுதல் சொல்ற அளவுக்கு பக்குவமானவளாய் இருந்தா. “நாம துக்கத்துலயே இருந்துட்டா அம்மா ஆத்மா சாந்தியடையாதுப்பா. நீங்களும், நானும் அதுக்காகவாவது பழையபடி ஆகணும்.”னு சொன்னா. தினம் ஸ்கூல், காலேஜுக்குப் போறப்ப அப்பாவுக்கும், தாத்தாவுக்கும் ‘பை’ சொல்ற மாதிரி அம்மா போட்டோக்கும் ‘பை’ சொல்லிட்டு போவா. அம்மா இந்த வீட்டுல இன்னும் இருக்கறதா சொல்வா....”


சேதுமாதவன்  உணர்ச்சிவசப்பட்டு நிறுத்தி மனதை திடப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார். “... அப்படி பாசமும், பக்குவமும் இருக்கிற பொண்ணு அவ. பலவீனம்னு சொல்லணும்னா யார் கிட்டயும் ஏமாறுறது அவளால ஜீரணிக்க முடியாத விஷயம். எல்லாரும் நியாயமாவும், நேர்மையாயும் இருக்கணும்னு எதிர்பார்ப்பா. அப்படி இல்லைன்னா அவங்க கிட்ட இருந்து தயவு தாட்சணியம் பார்க்காம விலகிப் போயிடுவா. யாராவது ஏதாவது சந்தர்ப்பத்துல சரியாய் நடந்துக்கலைன்னா அவ விலகிடுவாங்கறதாலேயே அவளுக்கு தோழிகள் குறைவு. ஒரே ஒரு பொண்ணு தான் கடைசி வரைக்கும் அவளுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தா. அவளும் இன்ஜீனியரிங் படிச்சு முடிச்சதும் கல்யாணமாகி அமெரிக்கா போய் செட்டிலாயிட்டா...”


நியாயம், நேர்மையில் எந்த சமரசமும் செய்து கொள்ளத் தயாராக இருக்காத பெண் என்பதை மனதில் அடிக்கோடிட்டுக் கொண்ட ஷ்ரவன் சொன்னான். “அவங்க யோகாலயம் போக ஆரம்பிச்சது எப்படின்னு சொல்றீங்களா?”


“இன்ஜீனியரிங் படிச்சு முடிச்சவுடனேயே கேம்பஸ் இண்டர்வ்யூலயே நல்ல ஒரு கம்பெனில அவளுக்கு வேலை கிடைச்சுது. வேலை பெங்களூர்ல. மாசத்துக்கு ரெண்டு தடவை வாரக்கடைசிகள்ல வருவா. வேலைல சேர்ந்து ஒரு வருஷம் கழிச்சு கூட வேலை பார்க்கற ஒருத்தன் சிநேகிதமானான். அவங்க ரெண்டு பேரும் காதலிச்சாங்க. அவ காதலை எங்க கிட்ட சொன்னா.  அவ சொல்ற எதுக்கும் கிருஷ்ணா ஆட்சேபம் தெரிவிச்சதில்லை. உனக்குப் பிடிச்சா சரிதான்னு சொல்லிட்டான்.  அந்தப் பையனும் ஒரு தடவை இங்கே வந்தான். நல்லா தான் பேசினான். அவங்க வீட்டுல ஜாதி பார்ப்பாங்கன்னும், நிதானமா சொல்லி சம்மதம் வாங்கறேன்னும் சொன்னான். கொஞ்ச நாள்ல அந்தக் கம்பெனில புதுசா ஒரு பொண்ணு வேலைக்கு சேர்ந்தா. பார்க்க ரொம்ப அழகாய் ஸ்டைலாய் இருந்ததால அந்தப் பையன் மனசுல அந்தப் பொண்ணு இடம் பிடிச்சுட்டா. அதை ஒரு நாள் அவன் சைத்ரா கிட்ட வெளிப்படையாவே சொல்லிட்டான். சொல்லி அவன் ரெண்டே நாள்ல அந்தப் பொண்ணை வீட்டு சம்மதம் வாங்காமலேயே கல்யாணமும் பண்ணிகிட்டான். ஏன்னா அந்தப் பொண்ணு ஜாதி மட்டும் வேற இல்ல. மதமே வேறயாம். அவங்க கல்யாணத்துக்கும் சைத்ரா போய் வாழ்த்திட்டு வந்தா. ஆனா அவளுக்குள்ளே கல்யாணம், குடும்ப வாழ்க்கை பத்தின ஆசை எல்லாம் அதோட நிரந்தரமா செத்துப் போச்சுன்னு தோணுது...”


ஒரு கணம் சொல்வதை நிறுத்தி ஹாலில் மாட்டியிருந்த பேத்தியின் பெரிய புகைப்படத்தை சேதுமாதவன் இரக்கத்துடன் பார்த்து விட்டுத் தொடர்ந்தார். “அதுக்கப்பறம் அவங்கள தினம் பார்த்துகிட்டு வேலை பார்க்க முடியாம சைத்ரா வேலையை ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டா. அந்தக் காதல் தோல்வி அவளை ரொம்பவே பாதிச்சுது. சரியாய் சாப்பிடல. தூங்கல. எங்க கிட்ட கூட அது சம்பந்தமா அவளால மனசு விட்டுப் பேச முடியல. அது கொஞ்சம் கொஞ்சமா டிப்ரஷன்ல கொண்டு போய் முடிஞ்சுது. கிருஷ்ணா அதுக்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட கூட்டிகிட்டு போனான். அங்கே போக ஆரம்பிச்ச கொஞ்ச நாள்ல சைத்ரா பழைய நிலைமைக்கு வர ஆரம்பிச்சா. அப்ப அந்த ஸ்பெஷலிஸ்ட் யோகா தியானம் எல்லாம் அவளுக்கு ரொம்ப உதவியாய் இருக்கும்னு சொன்னார்.  அதுக்கு எங்கே போறதுன்னு யோசிச்சப்ப பலரும் யோகாலயம் பத்திச் சொன்னாங்க. சரின்னு அங்கே அதைக் கத்துக்கறதுக்காக சைத்ரா போக ஆரம்பிச்சா.”


“அங்கே போக ஆரம்பிச்சப்ப அவங்களுக்கு சன்னியாசியாகணும்கிற எண்ணம் இருந்ததா?”


“இல்லை. யோகா, தியானம் ரெண்டையும் கத்துக்கணும், மன அமைதி கிடைக்கணுகிறது தான் அவளோட இலக்காய் இருந்துச்சு. ஒரு வாரம் அங்கேயே இருந்து அதெல்லாம் நல்லா கத்துகிட்டு வந்தா. வீட்டுலயும் தொடர்ந்து அவங்க சொல்லிக் குடுத்த பயிற்சிகள் எல்லாம் செஞ்சா. அப்பவும் சன்னியாசியாகற எண்ணம் அவளுக்கு இருக்கல...”


“முதல் தடவை போயிட்டு வந்தப்ப யோகாலயம் பத்தி அவங்க என்ன எல்லாம் சொன்னாங்க. யாரைப் பத்தியெல்லாம் சொன்னாங்க?”


“அங்கே எல்லாம் ஒழுங்கு முறையோட இருந்தது அவளுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. பிராணாயாமமும் யோகாவோட அடிப்படைகளும் சொல்லிக் கொடுத்தாங்க போலருக்கு. அந்த சுத்தமான இடம், அமைதியான  சூழ்நிலை, சொல்லிக் கொடுத்த பயிற்சிகள் எல்லாமே அவளுக்கு ரொம்பவே பிடிச்சிருந்துச்சுன்னு எங்க கிட்ட சொன்னா. யோகா நம்ம தேசத்தோட உண்மையான பொக்கிஷம்னு மெச்சினா. ரொம்ப உற்சாகமா இருந்தா. என் கிட்ட இருந்த ஆன்மீக புஸ்தகங்களையும் வாங்கிப் படிக்க ஆரம்பிச்சா...”


“என்ன புஸ்தகங்கள் எல்லாம் படிச்சாங்க?”


“பகவத் கீதை, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி புஸ்தகங்கள்...”


ஷ்ரவனும் ஜே.கிருஷ்ணமூர்த்தியின் நூல்களை விரும்பிப் படிப்பான். அவனிடம் அவர் பேச்சுக்களின் வீடியோக்களும் நிறைய இருந்தன. அவற்றையும் பார்த்து அவர் பேச்சுக்களைக் கேட்பான். அதனால் ஜே.கேயின் நூல்களை அவரும் வைத்திருக்கிறார் என்பதே அவரிடம் கூடுதல் சிநேகத்தை அவனுக்கு ஏற்படுத்தியது. அவன் கேட்டான். “அவங்க அடுத்த வகுப்புக்கு எப்ப போனாங்க?”


“அடுத்த மாசமே போனா. அப்பவும் ஒரு வாரம் அந்த வகுப்புகள் இருந்துச்சு. அப்ப போயிட்டு வந்தவ தான் நாலு நாள் கழிச்சு சன்னியாசியாக ஆசைப்படறதா சொன்னா”


“அப்பவாவது குறிப்பா அங்கேயிருக்கற யாரைப் பத்தியாவது அவங்க சொன்னதா நினைவிருக்கா?”


“இல்லை. யாரைப் பத்தியும் குறிப்பா எதுவும் சொல்லலை.”



“அந்த ரெண்டு வகுப்புகள்ல கத்துக் கொடுக்க பிரம்மானந்தா வந்திருந்ததா சைத்ரா சொல்லியிருக்காங்களா?”


“அவர் வரலயாம். வேற ஆட்கள் தான் வந்து கத்துக் கொடுத்தாங்களாம். அவர் பேசின ரெண்டு வீடியோவை தான் இவங்களுக்குப் போட்டுக் காட்டினதா சைத்ரா சொன்னா”


பிரம்மானந்தாவைப் பற்றி சேதுமாதவன் பேசின போது அவர் மீது பெரிய அளவில் மரியாதை தெரியவில்லை. அதற்குக் காரணம் சைத்ராவின் மரணமா, இல்லை முன்கூட்டியே அவருக்கு பிரம்மானந்தா மேல் உயர்ந்த அபிப்பிராயம் இல்லையா என்பதை ஷ்ரவன் அறிந்து கொள்ள விரும்பினான்.


“நீங்க பிரம்மானந்தா பத்தி என்ன நினைக்கிறீங்க?”


“அவர் யோகியெல்லாம் கிடையாது” என்று எந்த சந்தேகமும் இல்லாமல் சேதுமாதவன் சொன்னார்.


(தொடரும்)

என்.கணேசன்




2 comments:

  1. சேதுமாதவன் தன்னுடைய வைராக்கியத்திற்கான விளக்கத்தை கொடுத்த போது வேதனையாக உள்ளது....

    ReplyDelete
  2. I feel chaitra may be alive. The way they have told corona and not showing her dead body is creating doubts in my mind. I wish she is still alive and Shravan will find her.

    ReplyDelete