Thursday, October 26, 2023

சாணக்கியன் 80

 

சூரசேனன் பதற்றத்துடன் என்ன நடக்கின்றது என்று பார்த்துக் கொண்டிருந்தான். திரும்பி வந்திருக்கும் அவன் அண்ணனை ஏன் சேனாதிபதி உள்ளே அழைக்காமல் வெளியிலேயே நிறுத்திப் பேசிக் கொண்டிருக்கிறான் என்பது ஆரம்பத்தில் அவனுக்குப் புரியவில்லை. பின் வீரசேனனை அங்கேயே நிறுத்தி விட்டு சேனாதிபதி மட்டும் சத்ரப்பின் கூடாரம் நோக்கிச் செல்வதைப் பார்த்தவுடன் மெள்ளப் புரிந்தது. “சத்ரப்பின் அனுமதி பெற்றுத் தான் உள்ளே அனுமதிப்பேன்என்று சேனாதிபதி சொல்லியிருக்க வேண்டும். இவர்களுக்காகப் போரிட்டு எதிரிகளிடமிருந்து தப்பித்து வந்தால் சந்தோஷமாக வரவேற்காமல் இப்படிச் செய்கிறார்களே என்ற வெறுப்பு அவன் மனதில் எழுந்து வளரத் தொடங்கியது. தான் ஊழியம் புரியும் இடத்திலேயே அன்னியனைப் போல் வெளியே நிற்கும் தமையனைப் பார்க்க அவனுக்குத் தாங்க முடியவில்லை.  

 

சேனாதிபதி சத்ரப்பின் அறையிலிருந்து உடனடியாக வெளியே வரவில்லை. அவன் வெளியில் வராத வரை சூரசேனனுக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது. அந்த நேரமாகப் பார்த்து தொலைவில் அவன் படைவீரர்களில் ஒருவன் சிறுநீர் கழிக்க கூடாரத்திலிருந்து வெளியே வருவது தெரிந்தது. சூரசேனன் காவல் வீரர்களைப் பார்த்தான். மூவரும் வீரசேனனைப் பார்த்தபடியே முகாமின் வாயிலருகே நின்றிருந்தார்கள். வீரசேனன் என்னேரத்திலும் பாய்ந்து உள்ளே நுழைந்து விடுவான் அல்லது அவர்களைத் தாக்க ஆரம்பித்து விடுவான் என்று அவர்கள் பயப்பட்டது போல் வைத்த கண்களை அவன் மீதிருந்து எடுக்காமல் மூன்று வீரர்களும் நின்றிருந்தார்கள்.

 

சூரசேனன் பதுங்கிப் பதுங்கி வேகமாகச் சென்று அவன் படைவீரனை அடைந்தான். அந்தச் சமயத்தில் அப்படி வரும் தங்கள் தலைவனை அவன் படைவீரன் திகைப்புடன் பார்த்தான்.  சூரசேனன் அவனிடம் வீரசேனனுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அநீதியைச் சுருக்கமாகத் தெரிவித்துச் சொன்னான். “நாம் யவனர்களுக்காக நம் உயிரையும் விடச் சித்தமாய் இருக்கையில் இப்படி யவனர்கள் நம்மிடம் நன்றிகெட்டத்தனமாயும், நியாயம் இல்லாமலும் நடந்து கொண்டால் நாம் பொறுக்க முடியுமா? கலவரக்காரர்கள் குற்றம் சாட்டுவது நிஜம் தான் என்கிறபடியல்லவா யவனர்கள் நடந்து கொள்கிறார்கள்? வீரசேனன் திரும்பி வந்தும் ஏதோ குற்றவாளி போல் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறான். போகிற போக்கைப் பார்த்தால்     ஏதாவது அசம்பாவிதம் இங்கே நடக்கலாம் என்று எதிர்பார்க்கிறேன்.  இதனை நீ வீரசேனனின் படைவீரர்களுக்கும் இரகசியமாகத் தெரிவிக்க வேண்டும். இப்போது யாரும் வெளியே வர வேண்டாம். அது ஆபத்து. ஆனால் ஏதாவது அநீதி நடந்தால் அதைத் தடுக்கவும், கண்டிக்கவும் தயார் நிலையில் உள்ளேயே இருக்கச் சொல். குரல் கொடுத்தால் வந்தால் போதும். நம் வீரர்களுக்கும் சொல். நம்மவர்களும் தயாராக இருக்கட்டும்

 

அந்த வீரனும் மறைவிலிருந்து வெளியே பரிதாபமாக நிற்கும் வீரசேனனைப் பார்த்து மனம் கடுத்தான். சூரசேனனிடம் தலையசைத்த அவன் வேகமாக மறைவிடங்களிலேயே பதுங்கியபடி நகர்ந்து செல்ல ஆரம்பித்தான். சூரசேனன் மறுபடி பழைய இடத்திற்கு வந்து சேர்ந்த போது சேனாதிபதி சத்ரப்பின் கூடாரத்திலிருந்து வெளியே வந்தான். வெளியே வந்தவுடன் சேனாதிபதியின் பார்வை நாலா பக்கங்களிலும் சுழன்றது. எல்லா கூடாரங்களும் அமைதியிலேயே மூழ்கியிருந்தன. அவன் திருப்தியுடன் சென்று வீரசேனனிடம் ஏதோ சொல்லி அவனை அழைத்து வருவது தெரிந்தது. மூன்று காவல் வீரர்களில் ஒருவன் அவர்களைப் பின் தொடர்ந்து வர மற்ற இரண்டு காவல் வீரர்கள் பழையபடி காவல் சுற்றைத் தொடர்ந்தார்கள்.

 

சூரசேனன் வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் வீரசேனனையே பார்த்துக் கொண்டிருந்தான். வீரசேனன் தம்பியின் கூடாரத்தைப் பார்ப்பது தெரிந்தது. சற்று அவன் பார்வை நகர்ந்து சூரசேனன் தற்போது மறைந்து நின்று கொண்டிருக்கும் இடம் வந்த போது சூரசேனன் கைகளை அசைத்தான். வீரசேனன் தம்பியைப் பார்த்தாலும் முன்னால் சேனாதிபதியும், பின்னால் ஒரு காவல் வீரனும் இருப்பதால் இயல்பாகவே நடந்தான்.

 

பிலிப் தன் முன்னால் வந்து நின்ற வீரசேனனைக் கண்டிப்பான பார்வை பார்த்தான்.  அவன் கண்கள் வீரசேனனின் காயங்களை ஆராய்ந்தன. வீரசேனன் அவனை வணங்கி நின்ற போது இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் சொன்னான். “நீ சொன்னதை எல்லாம் சேனாதிபதி மூலம் அறிந்தேன். ஆனால் எது எப்படி இருந்தாலும் அதிகாலை நான் கண்விழிக்கும் வரை காத்திருக்க நீ சம்மதிக்காதது என் கீழ் ஒரு படைத்தலைவனாக இருக்கும் உனக்கு சோபை தரவில்லை வீரசேனா

 

பிலிப் கிரேக்க மொழியில் சொன்னதை யவன சேனாதிபதி தான் வீரசேனனுக்கு மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டியிருந்தது. சேனாதிபதி அப்பகுதியில் பேசப்பட்ட மொழியில் நன்றாகவே தேர்ச்சி பெற்றிருந்ததால் வேறொரு மொழி பெயர்ப்பாளனின் அவசியம் அங்கிருக்கவில்லை.

 

வீரசேனன் சொன்னான். “உங்களின் கீழ் படைத்தலைவனாக இருக்கும் என்னை என் கூடாரத்திற்குச் செல்ல சேனாதிபதி அனுமதித்திருந்தால் நான் இந்த அகால வேளையில் தங்களை எழுப்ப வேண்டிய அவசியம் வந்திருக்காது சத்ரப்

 

அவன் சொன்னது பிலிப்பின் கோபத்தை அதிகப்படுத்தியது. அவன் சொன்னான். “நீ கலவரக்காரர்களுக்கு ஆதரவாக இங்கே நடந்து கொண்டு அவர்களைக் கண்டிக்க முயன்ற யவனப்படைத்தலைவனைத் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தால்  உன் மேல் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் சேனாதிபதிக்கும் வந்திருக்காது வீரசேனா.  நீ ஏன் கலவரத்தின் போது அப்படி நடந்து கொண்டாய்?”

 

லவரக்காரர்களாக அந்தக் கோஷமிட்ட சிறுவர்களை நான் நினைக்கவில்லை. அதற்கென்று நான் அவர்கள் செயல்களை அங்கீகரிக்கவும் இல்லை. மிரட்டி விரட்ட வேண்டிய சிறுவர்களைத் தாக்கித் தண்டிப்பது சரி என்று எனக்குத் தோன்றவில்லை. அதனால் தான் அவர்களைத் தாக்க முற்பட்ட யவனப்படைத்தலைவரைத் தடுத்து அந்தச் சிறுவர்களை விரட்டி விட்டேன்.”

 

பிலிப் கடுமையான குரலில் சொன்னான். “விளையாட வேண்டிய வயதில் கோஷமிட சிறுவர்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு என்ன தண்டனையோ அதைப் பெறத் தயாராகவும் இருக்க வேண்டும். கோஷமிடுபவர்களை இரக்கப்பட்டு விட்டு விட்டால் அவர்கள் நாளை வன்முறையிலும் தைரியமாக இறங்குவார்கள். அதனால் உன் செயல் சரியானதல்ல வீரசேனா. எதிரிகள் விஷயத்தில் எந்த விதத்திலும் என் படைகளுக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் வருவதை நான் ரசிக்கவில்லை.”

 

வீரசேனன் சொன்னான். “சிறுவர்களைத் தாக்க வேகமாக முன்வந்த யவனப்படைத்தலைவர் புரட்சிப்படை வீரர்கள் வந்து தாக்கிய போது எந்த அளவு தன் பராக்கிரமத்தைக் காட்டினார் என்றும் நீங்கள் கவனிக்க வேண்டும் சத்ரப். அந்தப் புரட்சிப்படை வீரர்களைக் காட்டுக்குள்ளேயும் கூட வீரத்தோடு பின் தொடர்ந்தவன் நான் தான். அந்த யவனப்படைத்தலைவர் செல்லவில்லை.”

 

பிலிப் ஒரு கணம் மௌனமாக இருந்து விட்டுக் கேட்டான். “அங்கே காட்டுக்குள் எத்தனை வீரர்கள் இருந்தார்கள்?”

அங்கே நான் பார்த்தது சுமார் முப்பது வீரர்களைத் தான். மற்றவர்கள் உட்பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம்.”

 

யார் அவர்கள் தலைவன்?”

 

சந்திரகுப்தன் என்ற இளைஞன்.”

 

அவன் தான் உன்னை அவர்களுடன் சேர்ந்து கொள்ளும்படி அழைத்தானா?”

 

ஆமாம்.”

 

நீ மறுத்தவுடன் உன்னைப் போக அனுமதித்து விட்டானா அவன்?” பிலிப் சந்தேகத்தோடு கேட்டான். அவன் பார்வை கூர்மையாக வீரசேனன் மீது நிலைத்தது.

 

வீரசேனன் சொன்னான். ”அனுமதி தந்தது அவனல்ல. அங்கே ஒரு அந்தணர் இருந்தார். அவரை எல்லாரும் ஆச்சாரியர் என்று அழைக்கிறார்கள். அவர் தான் அவர்களை வழிநடத்துபவர் போல் தெரிகிறது. அவரிடம் நான் சொன்னேன். ”உங்களுடன் நான் இணைய முடியாது. அதனால் உங்கள் எதிரியான எனக்கு என்ன தண்டனை தருவது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்து விடுங்கள். ஒரு வீரனாக அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்என்று. ஆனால் அவர் என்னைப் பெருந்தன்மையுடன் அனுப்பி விட்டார்.”

 

பிலிப்புக்கு விஷ்ணுகுப்தர் அருகிலிருக்கும் காட்டில் இருக்கிறார் என்ற தகவல் அதிர்ச்சியளித்தது. எல்லாரையும் இயக்கும் ஆள் முக்கியமான நிகழ்வுகள் நடக்கவிருக்கும் பகுதியிலேயே இருப்பார். அது தான் இயல்பு. அவருடைய சீடர்களில் சந்திரகுப்தன் தான் அதிமுக்கியமானவன் என்றும் அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ஆச்சாரியரும் சந்திரகுப்தனும் சேர்ந்து அருகிலிருக்கும் காட்டில் இருக்கிறார்கள் என்றால் இங்கே ஏதோ முக்கிய சதியை அரங்கேற்றம் செய்யவிருக்கிறார்கள் போல் தெரிகிறது. அதன் ஒரு பகுதியாகக் கூட வீரசேனனை அனுப்பி வைத்தது இருக்கலாம். வீரசேனன் அவர்களுடன் இணைய மறுத்தும் அவனைப் பெருந்தன்மையுடன் அனுப்பி வைத்த கதையை நம்பும் அளவு பிலிப் முட்டாள் என்று அவர்கள் நினைத்திருப்பது பிலிப்புக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. இவனைச் சித்திரவதை செய்து தான் உண்மையை வரவழைக்க வேண்டும் என்று முடிவு செய்தவனாய் சேனாதிபதியை அர்த்தமுள்ள பார்வை பார்த்தான்.

 

(தொடரும்)

என்.கணேசன்       



 
 

3 comments:

  1. "அவன் வெளியில் வராத வரை சூரசிம்மனுக்கு ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது"... இதில் சூரசேனன் என்று இடம்பெற வேண்டும் என நினைக்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விட்டேன். நன்றி.

      Delete
  2. பிலிப் வீரசேனனை எதாவது செய்ய ஆரம்பித்து சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறான்... காலை புரட்சி பெரிய அளவில் வெடிக்கப் போகிறது....

    ReplyDelete