Monday, September 4, 2023

யோகி 12

 

சேதுமாதவன் மூன்றாவது நாள் முதல்வரின் காரியதரிசிக்குப் போன் செய்தார். முதல்வரின் இளம் காரியதரிசியிடம் அவர் தன்னை முதல்வரின் பால்ய நண்பனாக அறிமுகப்படுத்திக் கொண்ட போது, அது அந்தக் காரியதரிசியை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அவன் இதுபோல் தினமும் நிறையக் கேட்டிருக்கிறான். அதனால் பேச்சை வளர்த்தாமல், முதல்வர் ஓய்வில் இருப்பதால் இனி இரண்டு மாதங்களுக்கு அவரைச் சந்திக்க வாய்ப்பில்லை என்று கூறி அவன் போனை வைத்து விட்டான். சிறிது யோசித்து விட்டு சேதுமாதவன் மறுபடியும் போன் செய்தார். இந்த முறை அந்தக் காரியதரிசி பொறுமையிழந்து, “சொன்னாப் புரிஞ்சுக்கோங்க சார். அமைச்சர்களுக்கே சந்திக்க அனுமதியில்லை. தயவு செய்து தொந்தரவு செய்யாதீங்கஎன்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தான்.

 

மறுபடியும் அன்றே போன் செய்து அவன் பொறுமையைச் சோதிக்க வேண்டாம் என்று நினைத்து சேதுமாதவன் அன்று மறுபடி முயற்சிக்கவில்லை.  மறுநாள் அவனுக்கு போன் செய்தார். அவன் எதுவும் சொல்வதற்கு முன் அவசரமாக முந்திக் கொண்டு சேதுமாதவன் சொன்னார். “தம்பி தயவு செய்து தப்பா நினைக்க வேண்டாம். நான் அருணாச்சலத்தோட மிக நெருங்கிய நண்பன். ஒன்னாம் க்ளாஸ்ல இருந்து காலேஜ்ல பட்டப்படிப்பு வரைக்கும் நாங்க ஒன்னா படிச்ச நண்பர்கள். அவரைக் கண்டிப்பாகப் பார்த்தே ஆக வேண்டிய ஒரு அவசரமான நிலைமையில் இருக்கறேன். இல்லாட்டி இவ்வளவு காலம் அவரை தொந்தரவு செய்யாத நான், அவருக்கு உடம்பு சரியில்லாத இந்த சமயத்துல கண்டிப்பா தொந்தரவு செய்திருக்க மாட்டேன். நீங்க எனக்காக அவரிடம் ஒரே தடவை சொல்லிப் பாருங்க. அவர் என்னைச் சந்திக்க விருப்பப்படாட்டியோ, என்னை சந்திக்கறது அந்த அளவு முக்கியமில்லைன்னோ நினைச்சா, பிறகு நான் கண்டிப்பா இனி எப்பவுமே உங்களைக் கூப்பிட்டுத் தொந்தரவு செய்ய மாட்டேன். இது சத்தியம்....” சொல்லச் சொல்ல, துக்கத்தில் அவர் குரல் உடைந்தது. அவர் இதுவரை யாரிடமும் இந்த அளவு கெஞ்சி உதவி கேட்டவரல்ல.

 

அவருடைய வார்த்தைகளும், துக்கமும் அவன் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். அவன் அரைமனதுடன் அவர் பெயர், விலாசம், அலைபேசி எண் அனைத்தையும் குறித்துக் கொண்டான். ”சமயம் கிடைக்கறப்ப முதல்வர் கிட்ட சொல்லிப் பார்க்கறேன். அவர் ஒத்துகிட்டு எப்பவாவது சந்திக்க அப்பாயின்மெண்ட் தந்தால் நானே கூப்பிடறேன். இனி நீங்களாக கூப்பிட வேண்டாம்.”

 

அவராக இனி அழைத்தால் அவன் பதிலளிக்கப் போவதில்லை என்ற கறார் தொனி அவன் பேசியதில் இருந்தது. ஆனாலும் அவன் முதல்வரிடம் சமயம் கிடைக்கையில் சொல்கிறேன் என்று சொன்ன வாக்குறுதியில் சேதுமாதவன் திருப்தியடைந்தார்.   இனி அவர் எதுவும் செய்வதற்கில்லை. இறைவன் சித்தம் என்னவோ அது நடக்கட்டும் என்று எண்ணிக் கொண்டார். ஆனாலும் கூட, அவன் முதல்வரிடம் சொல்வானா, எப்போது சொல்வான், சொன்னால் அதைக் கேட்டு அருணாச்சலத்தின் எதிர்வினை எப்படி இருக்கும், என்ற கேள்விகள் சேதுமாதவன் மனதில் எழுந்தன.  எதற்கும் அவருக்கு ஒரு உறுதியான பதில் கிடைக்கவில்லை….

 

முதல்வரின் காரியதரிசி சேதுமாதவனை முதல்வரின் நெருங்கிய நண்பர் என்று நம்பவில்லை. ஏனென்றால் அவன் காரியதரிசியாக இருக்கும் இந்த ஐந்து வருடங்களில் அந்த ஆள் ஒரு முறை கூட முதல்வரைச் சந்திக்க வந்திருந்ததாய் அவனுக்கு நினைவில்லை. ஒன்றாம் வகுப்பிலிருந்து கல்லூரியில் பட்டப்படிப்பு வரை உடன் படித்த நெருக்கமான நண்பராக இருந்தால், முதல்வரின் தனி அலைபேசி எண் கண்டிப்பாக அவரிடம் இருந்திருக்கும். ஆனாலும் அவர் குரலுடைந்து பேசிய விதம் பொய் சொல்வது போலவும் இருக்கவில்லை. அதனால் தான் எதற்கும் அந்த ஆள் பேசியதை, சரியான சமயம் கிடைக்கையில் முதல்வரிடம் சொல்வதாக அவன் வாக்களித்தான்.

 

முதல்வர் முன்பு போல் அல்லாமல் இப்போதெல்லாம் களைப்பாகவே தெரிகிறார். யாரையும் சந்தித்துப் பேசுவதில் அவர் பெரிய ஆர்வமும் காட்டவில்லை. மூன்று நாட்களுக்கு முன்பு வந்த பிரதமரிடம் கூட அவர் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் பேசவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த வேறு மாநில முதலமைச்சர்களும் கூட அதைவிடக் குறைவான நேரமே முதல்வருடன் இருந்தார்கள்.  நேற்று வந்த இரண்டு அமைச்சர்கள் முதல்வருக்கு மிக நெருங்கியவர்கள். எந்த முன்னறிவிப்பும் இன்றி எப்போது வேண்டுமானாலும் வந்து அவரைச் சந்திக்க முடிந்த செல்வாக்கில் இருப்பவர்கள். அவர்களிடம் அரை மணி நேரம் பேசிய முதல்வர், மிக முக்கியமான விஷயங்களைத் தவிர மற்றதை எல்லாம் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னது காரியதரிசியில் காதுகளில் விழுந்திருந்தது. நிலைமை இப்படி இருக்கையில் சேதுமாதவன் என்ற கிழவர் அழைத்ததை முதல்வரிடம் சொல்வது எந்த அளவு முக்கியமாக இருக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் வாக்களித்து விட்டதால், சமயம் பார்த்துச் சொல்லத் தீர்மானித்தான். அந்தக் கிழவர் சொன்னது உண்மையாக இருந்தால் முதல்வர் அடுத்த மாதமாவது ஒரு நாள் அவருக்கு அப்பாயின்மெண்ட் தரக்கூடும்...

 

அடுத்தடுத்து அழைப்புகளும், வேலைகளும் வந்து கொண்டிருந்ததில் காரியதரிசி சேதுமாதவனை மறந்து போனான். இரவு தலைமைச் செயலர் முதல்வர் பார்வைக்கு என்று அனுப்பிய ஒரு கடிதத்தைத் தந்து விட்டுத் திரும்புகையில் அருணாச்சலம் ஒவ்வொரு நாள் முடிவிலும் கேட்கும் வழக்கமான கேள்வியைக் கேட்டார். “வேறொன்னும் முக்கியமான தகவல் இல்லையே?”

 

அது அவர் தன் காரியதரிசிக்கு நினைவுபடுத்தும் ஒரு சந்தர்ப்பம். சில நேரங்களில் அவசரப்பணிகளில் அவசியமானவை விடுபட்டு விடுகின்றன என்பதால் அப்படியெதுவும் விடுபட்டு விடவில்லையே என்று யோசித்துச் சொல்ல அவர் தினமும் ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். அப்படிப்பட்ட சமயங்களில் அவன் யோசித்து ஏதாவது முக்கியமான ஒன்றை நினைவுபடுத்திச் சொல்வது உண்டு.

 

இன்று அவர் அப்படிக் கேட்டதும் அவன் யோசித்த போது தான் சேதுமாதவன் நினைவுக்கு வந்தார். அவன் எச்சரிக்கையுடன் சொன்னான். “முக்கியமானதா என்னன்னு தெரியல சார். உங்க கூட ஒன்னாம் க்ளாஸ்ல இருந்து காலேஜ் படிப்பு வரைக்கும் படிச்ச நண்பரா ஒருத்தர் தன்னை சொல்லிகிட்டார். அவசரமா உங்களைப் பார்க்கணும்னு சொன்னார். அவர் பெயர்....”

 

பெயர் அவனுக்குச் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. அருணாச்சலம் சொன்னார். “சேது?”

 

... ஆமா சார் .... சேதுமாதவன்னு சொன்னார்.”    

 

ரவு ஒன்பது மணிக்கு முதல்வரின் காரியதரிசியின் அழைப்பு சேதுமாதவனுக்கு வந்தது. அழைப்பது முதல்வரின் காரியதரிசி என்பதைப் பார்த்ததும் சேதுமாதவன் இதயம் படபடக்க கைபேசியை எடுத்தார். அவர் இன்றே ஒரு பதிலை நிச்சயமாக அவனிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  காரியதரிசி மிகவும் பணிவான குரலில், நாளை இரவு ஒன்பது மணிக்கு முதல்வரை அவருடைய இல்லத்தில் சந்திக்கலாம் என்று சொன்னான். ’அருணாச்சலம் அவரை மறந்துவிடவில்லை, அலட்சியப்படுத்தி விடவில்லைஎன்று எண்ணுகையில் சேதுமாதவனின் கண்களில் நீர் கோர்த்தது.   

 

ரொம்ப நன்றி தம்பிஎன்று அவர் குரல் தழுதழுக்கச் சொன்னார்.

 

நீங்க வர்றதுக்கு கார் வேணும்னா அனுப்பச் சொல்லியிருக்கார்…”

 

தேவையில்லை தம்பி. என் கார்லயே வந்துடறேன்..”

 

அவருக்கு ஒரு பெரிய பாரம் மனதிலிருந்து இறங்கியது போல் முதலில் தோன்றினாலும், இனி நடப்பதெல்லாம் சரியாகத் தானிருக்கும் என்று அர்த்தமில்லை என்ற யதார்த்த நிலை அவருக்குப் புரிந்தேயிருந்தது. சேதுமாதவன் சொல்வதை நம்பாமல் அருணாச்சலம் ஒரேயடியாக மறுத்து விடலாம். அல்லது விசாரிக்கிறேன் என்று சொல்லி விட்டு அதோடு விட்டு விடலாம். அல்லதுஇதில் நான் செய்வதற்கொன்றுமில்லை. நீ முறைப்படி போலீஸில் புகார் கொடு, அல்லது நீதிமன்றத்தை அணுகு. அது தான் சரிஎன்று கழன்று கொள்ளலாம். இதில் ஏதோ ஒன்றைச் செய்து விட்டு எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அவரை இனி எப்போதும் சந்திப்பதையும் கூடத் தவிர்த்து விடலாம். இதற்கு எல்லாம் வாய்ப்பிருக்கிறது என்று அவரது அறிவு சுட்டிக்காட்டியது.

 

இது மட்டுமல்லாமல் வேறு சில உண்மைகளும் அனுகூலமாக இல்லை என்பது மறுநாள் தான் தெரிய வந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்



To buy yogi online in Amazon link -

https://www.amazon.in/dp/8195612881

6 comments:

  1. Dhik Dhik moments. Very interesting.

    ReplyDelete
  2. நல்ல மனிதர்கள் எப்போதும், அடுத்தவர்களுக்கு எவ்வளவு தூரம் வேண்டுமானலும் இறங்கி உதவுவார்கள்...அந்த பாய்க்கு உதவி செய்ததை போல....

    ஆனால், தனக்கு உதவி கேட்கும் போது அவர்கள் செய்வார்களோ? மாட்டார்களோ?? என்று குழம்பு வார்கள்....
    ஆனால்... கண்டிப்பாக சேதுமாதவனுக்கு வேண்டிய உதவி எப்படியோ கிடைத்து விடும்.....

    ReplyDelete
  3. Dear Mr. Ganesan, Congrates .. doing great work.. Happy to read all your books. i just want to know that , is your paid books available on PDF format /can read online or download i am interested to buy Yogi and Mayamann . Physical books cant ready by me.. please advice . Regards. Rajesh Gopalakrishnan, New Delhi.

    ReplyDelete
    Replies
    1. Only a few books are available in Amazon Kindle. New novels are only in printed form.

      Delete
  4. yogi and mayamaan is available in printed forms?

    ReplyDelete
    Replies
    1. Yes. You can buy from publisher (94863 09351) or in Amazon online

      Delete