Thursday, August 31, 2023

சாணக்கியன் 72

 

க்ளைக்டஸ் வாயுவேகத்தில் தட்சசீலம் வந்து சேர்ந்தான். ஆம்பிகுமாரனிடம் உடனடியாகப் பேச வேண்டும் என்று அவனுடைய காவலனை நிர்ப்பந்தித்து மதிய வேளையில் ஓய்வெடுத்துக் கொண்டு இருந்த ஆம்பி குமாரனை எழுப்பி வரவழைத்தான். ஆம்பி குமாரனுக்குக் கோபம் வந்தது.  அலெக்ஸாண்டரைப் போல பிலிப் நடந்து கொள்கிறான். பிலிப் போல் க்ளைக்டஸ் நடந்து கொள்கிறான். இப்படியே விட்டால் சாதாரண யவன வீரன் கூட அலெக்ஸாண்டர் போல் நடந்து கொள்ள அனுமதிப்பது போல் ஆகிவிடும் என்று தோன்றியதால் க்ளைக்டஸுக்கு அவன் இருக்கும் நிலையை உணர்த்த வேண்டும் என்று முடிவெடுத்தபடி வந்தான்.

 

க்ளைக்டஸ் ஆம்பி குமாரனுக்கு வணக்கம் தெரிவித்து விட்டுச் சொன்னான். “காந்தார அரசே. நிலைமை பல இடங்களிலும் விபரீதமாகிக் கொண்டே வருகின்றன. தட்சசீலத்தில் இருக்கும் சதிகாரர்கள் தூரப்பகுதிகளுக்கும் போய் சதியை விதைத்து விட்டு வந்திருக்கிறார்கள். பல இடங்களிலும் புரட்சி வெடிக்கிற நிலைமையில் இருக்கின்றது. அதனால் தான் கேகயத்தில் இருந்து இங்கு வரக் கிளம்பியிருந்த சத்ரப் பிலிப் தன் திட்டத்தை மாற்றிக் கொண்டு மாளவத்திற்குச் சென்று விட்டார். அந்தச் சதிகாரர்களை உடனே சிறைப்படுத்த வேண்டும் என்று தங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். இதில் சிறிது தாமதமும் கூடாது என்று எச்சரித்துள்ளார்”

 

ஆம்பி குமாரனுக்கு க்ளைக்டஸ் தட்சசீலத்தில் சதிகாரர்கள் என்று சொன்னதும், பிலிப் கட்டளையிட்டுள்ளார் என்று சொன்னதும் சிறிதும் பிடிக்கவில்லை. கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு அவன் கேட்டான். “யாரந்த சதிகாரர்கள்?”

 

“உங்கள் ஆசிரியர் ஆச்சாரியர் விஷ்ணுகுப்தரும், அவரது மாணவர்களும்”

 

ஆம்பி குமாரனுக்கு உங்கள் ஆசிரியர் என்று சொன்னதும் பிடிக்கவில்லை. ஆச்சாரியர் அவனுக்கு மட்டுமா ஆசிரியர் எத்தனையோ பேருக்கு ஆசிரியர். சதிகாரர் என்றதும் அவனுடைய ஆசிரியர் ஆகி விட்டாரா அவர் என்று நினைத்து எரிச்சலடைந்த அவன் சொன்னான். “அவரை என் ஆசிரியர் என்று சொல்வது தவறு. அது அவருக்கும் பிடிக்கவில்லை, எனக்கும் பிடிக்கவில்லை என்பதால் என்றோ படிப்பைப் பாதியில் விட்டு வந்தவன் நான்.”

 

க்ளைக்டஸ் ஆம்பி குமாரனை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டுச் சொன்னான். “அவரை உங்களுக்குப் பிடிக்காதது மிக நல்லதாகப் போயிற்று அரசே. அப்படியானால் அவரைச் சிறைப்படுத்துவதில் உங்களுக்குத் தயக்கமோ, தர்மசங்கடமோ ஏற்பட வழியில்லை. நீங்கள் அவரையும், சதியில் அவருக்கு ஒத்துழைத்த மாணவர்களையும் உடனடியாகக் கைது செய்யுங்கள்”

 

ஆம்பி குமாரன் சொன்னான். “அவர் தட்சசீலத்தில் இருந்திருந்தால் பிலிப்பின் கட்டளையை மிக மகிழ்ச்சியாக நிறைவேற்றியிருப்பேன் க்ளைக்டஸ். அவரும் அவர் சதிகார மாணவர்களும் முந்தாநாள் அதிகாலையில் இங்கிருந்து போய் விட்டார்கள். அவர்களைக் கண்காணித்து வந்த ஒற்றன் அந்தத் தகவலைச் சொன்னவுடன்,  ’விட்டது சனியன்’ என்று நான் இருந்து விட்டேன்.”

 

“அவர்களை ஏன் போக அனுமதித்தீர்கள் அரசே?”

 

“அவர்கள் பிரச்சினைக்காரர்கள் என்ற சந்தேகம் ஆரம்பத்திலிருந்தே தெரிந்திருந்தது. ஆனால் சிறைப்படுத்த போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தில் தான் நான் இருந்தேன். அப்படிப்பட்ட பிரச்சினைக்காரர் இங்கிருந்து வெளியேறி வேறெங்காவது பிரச்சினை செய்யப் போகிறார் என்றால் நமக்கு நல்லதல்லவா? மேலும் அவருக்கு இங்கிருந்து வெளியேற என் அனுமதி எதற்கு க்ளைக்டஸ்?”

 

க்ளைக்டஸ் திகைத்தான். “அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கண்காணிக்க ஒற்றர்களை அனுப்பியிருக்கிறீர்களா இல்லையா?”

 

ஆம்பி குமாரன் கோபத்தோடு சொன்னான். “என்னிடம் இருக்கிற ஒற்றர் படையில் பாதி முன்பே எடுத்துக் கொண்டு விட்டீர்கள். மீதி இருப்பதில் நான் எத்தனை விஷயங்களைக் கண்காணிக்க முடியும். ஆனாலும் கூட அவர்கள் இங்கே இருக்கிற வரை அவர்களைக் கண்காணிக்க சிலரை நியமித்திருந்தேன். அவர்கள் போன பிறகு அவர்களைக் கண்காணிக்க வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாக ஏற்கெனவே ஆள் பற்றாக்குறை இருக்கிற எனக்குத் தோன்றவில்லை.”

 

க்ளைக்டஸ் பொறுமையிழந்து சொன்னான். “காந்தார அரசே. அவர்கள் தான்  புரட்சிகளைப் பல இடங்களில் வெடிக்க வைக்கத் திட்டமிட்டு இயக்குகிறார்கள். அப்படி இருக்கையில் அந்தப் புரட்சிகளை நிறுத்த வேண்டும் என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருக்கும் ஆச்சாரியரையும், அந்த மாணவர்களையும் சிறைப்பிடிப்பது முக்கியமல்லவா?”

 

ஆம்பி குமாரனுக்கு க்ளைக்டஸ் பொறுமையிழந்து குரலை உயர்த்திப் பேசியது பிடிக்கவில்லை. அவனும் குரலை உயர்த்திக் கேட்டான். “புரட்சி புரட்சி என்று சொல்கிறாயே க்ளைக்டஸ், அது எங்கே இது வரை வெடித்து இருக்கிறது? நம்மிடம் இப்போது இருப்பது எல்லாமே அனுமானங்களே அல்லவா? அப்படியே வெடித்தாலும் கட்டுப்படுத்தத் தானே நம்மிடம் வீரர்கள் இருக்கிறார்கள்? சர்வ வல்லமையுள்ள நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? ”

 

க்ளைக்டஸ் வாயடைத்துப் போனான். அவன் வார்த்தைகளை விட அவன் வாயடைத்து நின்ற விதம் ஆம்பி குமாரனுக்கு வரவிருக்கும் பிரச்சினைகளை உணர்த்துவது போல் இருந்தது. அவன் க்ளைக்டஸிடம் பொறுமையாகச் சொன்னான். “ஆச்சாரியரைச் சிறைப்படுத்துவது பற்றி நீங்கள் யோசிக்கும் முன்பே அவரை இந்த உலகத்தை விட்டே அனுப்புவதற்கு நான் திட்டமிட்டு இருந்தேன் க்ளைக்டஸ். பிலிப்பிடம் கூட நான் தெரிவித்திருக்காத ரகசியத்தை நான் இப்போது உன்னிடம் தெரிவிக்கிறேன். நாம் ஒன்றைச் செய்யத் திட்டம் போடுவதற்குள் ஆச்சாரியர் அதில் பத்து படிகள் கடந்து யோசிக்கக்கூடிய அறிவாளி என்பதால் அவரைக் கட்டுப்படுத்துவதோ, அவருக்கு மேல் சிந்திப்பதோ கஷ்டம் எனக்குத் தெரிந்திருந்தது. அதனால் நான் அவரை ஒரேயடியாக ஒழிக்கத் திட்டமிட்டு என்ன செய்தேன் தெரியுமா...”

 

ஆம்பி குமாரன் தன் புத்திசாலித்தனமான திட்டத்தையும் அது சாம்பலான விதத்தையும் சொல்ல ஆரம்பித்தான்.  அவன் சொல்லி முடித்த பின்பும் க்ளைக்டஸ் பேச்சிழந்து அமர்ந்திருந்தான்.

 

“ஆச்சாரியரே பிலிப் மாளவம் நோக்கி வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது.”

 

சந்திரகுப்தன் சாணக்கியரிடம் தகவலைத் தெரிவித்தான். வனப்பகுதியில் ஒரு பாறை மீது நிமிர்ந்து நேராக அமர்ந்து கொண்டிருந்த அவர் புன்னகைத்தார். அவர் எதிர்பார்த்தது தான் நடந்திருக்கிறது. எந்தத் தகவல் யாருக்குப் போய் சேர வேண்டுமோ, அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டுக் காத்திருந்த அவருக்கு எல்லாம் திட்டப்படி நகர ஆரம்பித்த திருப்தி ஏற்பட்டது.  


சந்திரகுப்தன் அந்தப் பாறையில் சாய்ந்து நின்றிருக்க மற்ற சில மாணவர்களும், பல வீரர்களும், தரையில் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எல்லோருடைய முகத்திலும் வியப்பு தெரிந்தது. ஏனென்றால் சாணக்கியர் பிலிப் மாளவத்திற்கு வருவான் என்று முன்பே தன் யூகத்தைச் சொல்லி இருந்தார்.

 

சாரங்கராவ் கேட்டான். “ஆச்சாரியரே. நீங்கள் எப்படி நிச்சயமாக பிலிப் மாளவம் வருவான் என்று சொல்லியிருந்தீர்கள்?”

 

சாணக்கியர் சொன்னார். “சாரங்கராவ். தலைவன் எவ்வழி அவ்வழி தான் அவன் தேர்ந்தெடுக்கும் மனிதர்களும் இருப்பார்கள். தலைவன் தன்னைப் போலவே செயல்படுகிறவனைத் தான் முக்கியப் பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுப்பான். அலெக்ஸாண்டரின் மிகப்பெரிய பலம் அவன் தைரியமும், எதிலும் முன்சென்று நிற்கும் குணமும் தான். அவன் தன் தற்காப்பையோ, பாதுகாப்பையோ  பற்றி என்றும் கவலைப்பட்டவனல்ல. ஆபத்திலிருந்தோ, பொறுப்பில் இருந்தோ தூர ஓடுபவனல்ல அவன். மாளவத்தில் அவன் காயப்பட்டது கூட அதனால் தான். அப்படிப்பட்டவன் தனக்குப் பிறகு தான் வென்ற பாரதப் பகுதிகளின் சத்ரப் ஆக ஒருவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால் அவனும் ஓரளவாவது அப்படிப்பட்டவனாகத் தான் இருக்க வேண்டும். பிலிப் மாளவத்தில் தான் புரட்சி வெடிக்கப்போகிறது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன் அதை அடக்கிக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கண்டிப்பாக நினைப்பதும், அங்கிருந்து அதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பதும் தான் தலைமைப் பண்பு. ஏனென்றால் அவன் அலெக்ஸாண்டருக்குப் பதில் சொல்ல வேண்டியவன். அதனால் தான் கேள்விப்பட்டவுடனேயே கிளம்பி வருவான் என்று நான் எதிர்பார்த்தேன்.”

 

வியப்புடனும் உற்சாகத்துடனும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களைப் பார்த்து சந்திரகுப்தன் மெல்ல எச்சரித்தான். “நாம் நினைத்தபடியே எல்லாம் நடந்து விடுகிறது என்று நாம் யாரும் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. நம் முதல் திட்டத்தில் நாம் வெற்றியடைய வேண்டியது மிக முக்கியம். நம் சிறு கவனக்குறைவும், அலட்சியமும் முதல் திட்டத்தை மட்டுமல்லாமல் நம் அடுத்தடுத்த திட்டங்களையும் பாதித்து விடும்...”

 

சாணக்கியர் சொன்னார். “உண்மை தான்”

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. பிலிப்பை கொல்லப் போகிறார்களா? அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. சார், மிகவும் போரடிக்க கூடிய சாணக்கியனின் வரலாற்றை, போரடிக்காமல் மிகவும் சுவாரஸ்யமாக எழுதி வருகின்றீர்கள். நன்றி. இதேபோல் தமிழக மன்னர்களின் வீரத்தை பற்றியும் ஒரு வரலாற்று நவீன த்தை தாருங்கள் சார்.குறிப்பாக களப்பிரர்களை முறியடித்த கதையை கூறுங்கள். மீண்டும் நன்றி.

    ReplyDelete