Thursday, June 15, 2023

சாணக்கியன் 61

 

ம்பி குமாரனுக்கு ஆச்சாரியர் விஷ்ணுகுப்தர் என்றாலே பிரச்சினை என்று பொருள் கொள்வது பொருத்தமாகத் தோன்றியது. அவர் இங்கே இருந்து மகதம் போய் மகத மன்னனிடம் என்ன பிரச்சினை செய்து கொண்டு வந்திருக்கிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவனுக்கு மகத மன்னன் மீது பெரிய மதிப்பொன்றும் இல்லை என்றாலும் ஆச்சாரியரைப் போன்ற ஒரு சாதாரண ஆசிரியர் மகதம் போன்ற வலிமை வாய்ந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தின் மன்னனிடம் போய் ஏதோ பிரச்சினை செய்து சபதமிட்டும் வருவது அதிகப்பிரசங்கித்தனமாகவே தோன்றியது. ஆம்பி குமாரன் கேட்டான். “என்ன பிரச்சினை? என்ன சபதம்?”

 

ஒற்றர் தலைவர் சொன்னார். “பிரச்சினை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால் மகத மன்னரை ஆட்சியிலிருந்து இறக்கி மகத மண்ணிலிருந்து துரத்தி விடுவதாகச் சொல்லி தான் ஆச்சாரியர் சபதம் செய்திருப்பதாகக் கேள்வி”

 

ஆம்பி குமாரன் திகைத்தான். அவன் தன் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு பைத்தியக்காரத்தனத்தைக் கேள்விப்பட்டதில்லை. மகதப் படைவலிமையைக் கண்டு ஆனானப்பட்ட அலெக்ஸாண்டரின் வீரர்களே அச்சம் கொண்டு மேற்கொண்டு போரிட மறுத்து அலெக்ஸாண்டரிடம் தாயகம் திரும்ப கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்கிற போது இந்தத் தனிமனிதர் அந்த மகத மன்னனிடமே இப்படிச் சபதமிட்டு வருவது அதிகம் படித்திருப்பதால் ஏற்படும் கர்வத்தினாலேயே இருக்க வேண்டுமென்று தோன்றியது. படிப்பது அதிகமானாலும் இப்படிப் பைத்தியம் பிடிக்கும் என்று அவன் எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறான். எதற்கும் தன் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள ஆம்பி குமாரன் ஒற்றர் தலைவரிடம் கேட்டான். “ஒருவேளை ஆச்சாரியருக்குப் புத்தி பேதலித்து விட்டதோ?”

 

ஒற்றர் தலைவர் சொன்னார். “அப்படித் தெரியவில்லை அரசே. பல பேருக்குப் பைத்தியம் பிடிக்க வைக்குமளவு அறிவும் சாமர்த்தியமும் கொண்ட மனிதராகவே நான் அவரைப் பார்க்கிறேன்.”

 

ஆம்பி குமாரன் பெருமூச்சு விட்டான். அதுவும் வாஸ்தவம் தான். எத்தனையோ முறை அந்த மனிதரின் சாமர்த்தியத்தையும், அசாத்திய அறிவு கூர்மையையும் நேரில் கண்டவன் அவன். மனத்தாங்கலுடன் அவன் ஒற்றர் தலைவரிடம் கேட்டான். “சபதமிட்டு வந்திருக்கும் ஆச்சாரியரை எப்படி தனநந்தன் தண்டிக்காமல் விட்டான்?”

 

“குழந்தைகளும், பண்டிதர்களும் என்ன தான் அதிகப்பிரசங்கித் தனமாக நடந்து கொண்டாலும் அரசர் போன்ற உயர்நிலையில் இருப்பவர்கள் அப்படி உணர்ச்சி வசப்பட்டு தண்டித்துவிட முடியாது அரசே.  அவர்களைப் போய் தண்டிப்பதா என்றே எல்லோரும் கேட்பார்கள். மேலும் விஷ்ணுகுப்தர் தங்களைப் போன்ற அரச குமாரர்களுக்கும், அமைச்சர்கள், சேனாதிபதிகளின் பிள்ளைகளுக்கும் ஆசிரியராக இருந்திருப்பவர். அதனால் மகத மன்னர் அவச்சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க எதிர்வினை ஆற்றாமலிருந்திருக்கலாம். மேலும் அவரது பிரதம அமைச்சர் ராக்‌ஷசரும் மிக நிதானமானவர். எல்லாம் யோசித்து அவர்கள் பொறுமை காத்திருக்கலாம்....”

 

“ஆனால் அப்படி எல்லோரும் விட்டு தான் ஆச்சாரியர் இங்கே நமக்கு பிரச்சினை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். ஆயுதங்களைத் திருட அவர் மாணவர்களை ஊக்குவிக்கிறார் என்பதற்கு நம்மிடம் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?”

 

“இல்லை அரசே. ஆனால் இத்தனை காலம் இல்லாமல் இப்போது இரவு நேரங்களில் மாணவர்கள் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பதும் கேட்டால் குழப்புவதும் சந்தேகத்தை அதிகரிக்க வைக்கிறது.”

 

“எதனால் இப்படி அவர் செய்கிறார் என்று ஏதேனும் யூகம் இருக்கிறதா?”

 

“இங்கேயோ அல்லது வேறெங்கேயோ புரட்சி செய்ய அவர் திட்டமிட்டு இருப்பதாகத் தோன்றுகிறது….”

 

இங்கே புரட்சி செய்ய என்ன காரணம் அவரிடம் இருக்கக்கூடும்.”

 

“அலெக்ஸாண்டருக்கு நீங்கள் நட்புக்கரம் நீட்டியதை அவர் விரும்பவில்லை என்பதைப் பலரிடம் அவர் பேசியதைக் கேள்விப்பட்ட பின் என்னால் யூகிக்க முடிகிறது அரசே.”

 

ஆம்பி குமாரனுக்குக் கோபம் வந்தது. அரசன் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று எதிர்பார்ப்பதற்கும் விரும்புவதற்கும் அந்த ஆளுக்கு என்ன உரிமை இருக்கிறது. ஆசிரியன் தன் வேலையை ஒழுங்காகச் செய்தால் போதாதா? அரசின் முடிவுகளில் தலையிட அவர் யார்?

 

ஆம்பி குமாரன் கோபத்தோடு சொன்னான். “அவர் தான் இதற்குப் பின்னணியில் இருக்கிறார் என்பதை நம்மால் ஏதாவது விதத்தில் நிரூபிக்க முயன்றால் ராஜ துரோகத்திற்கான மரண தண்டனை கூட நாம் விதித்து விட முடியும். நிரூபணம் இருந்தால் யாரும் நம்மை எதுவும் சொல்ல முடியாது… திருடிச் சென்ற ஆயுதங்களை அவர்கள் எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தால் கூட நாம் நடவடிக்கைகள் எடுக்கலாம். அவர்கள் அதைக் கல்விக்கூடத்திலோ, ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கும் அவர்கள் பயிற்சிக் கூடத்திலோ ஒளித்து வைத்திருந்தால் நமக்கு மிக நல்லது. எதற்கும் நாம் அங்கெல்லாம் சோதனையிட்டுப் பார்த்தால் தான் என்ன?”

 

”அரசே அந்த இரண்டு இடங்களிலும் திருட்டுப் போன ஆயுதங்கள் இருக்க வாய்ப்பே இல்லை. வேறெங்கேயோ தான் அவர்கள் அவற்றை ஒளித்து வைத்திருக்க வேண்டும். ஆச்சாரியர் தந்திரக்காரர். அதனால் நீங்கள் அவரைத் தந்திரமாகத் தான் கையாள வேண்டுமேயொழிய வழக்கமான நடைமுறைகளில் அவரைக் கட்டுப்படுத்த வழியில்லை….”

 

ஆம்பி குமாரன் அந்த அறிவுரையைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்தான். ஒற்றர் தலைவர் சொல்வது சரியாகத் தான் அவனுக்குப் பட்டது. ஏதாவது சூழ்ச்சி வலை பின்னி தான் ஆச்சாரியரைச் சிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்வது இப்போதைய தவறுக்கு அவரைத் தண்டித்தது போலவும் இருக்கும். அதே போல் அவர் அவன் இளமைக்காலத்தில் அவனை நடத்திய விதத்திற்குப் பழி வாங்கியது போலவும் இருக்கும். சொந்த வாழ்க்கை அதிருப்திகரமாக இருக்கையில் இது போல் பழி வாங்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி.  யோசிக்க யோசிக்க அவன் மனம் இனித்தது.

 

யிற்சிக்கூடத்தில் சின்ஹரனை சந்திரகுப்தனும், சாணக்கியரும் சந்தித்த போது சின்ஹரன் சாணக்கியரிடம் சொன்னான். “இப்போது சில நாட்களாக ஒற்றர்கள் நடமாட்டம் இப்பகுதியில் அதிகமாக இருக்கிறது ஆச்சாரியரே…”

 

சாணக்கியர் அமைதியாகச் சொன்னார். “கல்விக்கூடப் பகுதியிலும் அவர்கள் நடமாட்டம் அதிகமாகத் தான் இருக்கிறது.  இது நாம் முன்பே எதிர்பார்த்தது தான். இதனால் நம் வேலைகள் நின்றுவிடப் போவதில்லை. வேலை செய்யும் இடங்கள் தான் மாறப்போகின்றன. நாம் வெளிப்பகுதிகளில் செய்ய வேண்டிய வேலைகளில் கவனம் செலுத்தப் போகிறோம். சின்ஹரன் நீயும் சந்திரகுப்தனும் நாளையே கிளம்பி விடுங்கள்…”

 

எங்கேயெல்லாம் செல்ல வேண்டும், ஒவ்வொரு இடத்திலும் முக்கியமாக யாரைப் பார்க்க வேண்டும், அவர்கள் மூலமாக ஆக வேண்டியதென்ன என்று சாணக்கியர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த போது வழக்கம் போல் சின்ஹரனுக்குப் பிரமிப்பு தோன்றாமல் இல்லை. இந்த அளவுக்கு இவரால் எப்படித் தகவல்கள் சேர்த்து வைத்திருக்கவும், அதை நினைவுபடுத்தி  வைத்திருந்து கச்சிதமாகத் திட்டமிடவும் முடிகிறது என்று அவன் ஆச்சரியப்பட்டான். ஆச்சாரியர் சொன்னதை மிகவும் கூர்ந்து கவனித்துக் கொண்டே வந்த சந்திரகுப்தனுக்கும் அதை நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருக்கவில்லை. சின்ஹரன் தான் ஓரிரு முறை குழம்பி சந்தேகங்கள் கேட்டான். ஆச்சாரியர் பதில் சொல்வதற்கு முன் சந்திரகுப்தனே அவர் சொன்னதை அதே தெளிவோடு சொன்னது சின்ஹரனுக்குக் கூடுதல் பிரமிப்பாக இருந்தது. எப்படிப்பட்ட ஆசிரியர், எப்படிப்பட்ட மாணவன் என்று பிரமித்தான். இந்தக் கூட்டணி வெற்றி பெற முடியாவிட்டால் தான் ஆச்சரியம் என்று அவனுக்குத் தோன்றியது.

 

சாணக்கியர் அடுத்ததாகத் தான் செல்லவிருக்கும் இடங்களையும் சுருக்கமாகச் சொல்லி விட்டுத் தொடர்ந்தார். “பெரும்பாலான இடங்களில் நான் முக்கியமானவர்களிடம் முன்பே பேசிவிட்டு வந்திருக்கிறேன். நம் வேலைக்கான பிள்ளையார் சுழி முன்பே போட்டிருக்கிறேன். நான் சொன்ன சமயத்தில் அவர்களுக்கு அதன் முக்கியத்துவம் புரிந்திருக்கா விட்டாலும் கூட அலெக்ஸாண்டர் வந்து சென்ற பிறகு அதன் முக்கியத்துவம் கண்டிப்பாகப் புரிந்திருக்கும். பெரும்பாலான மனிதர்கள் அனுபவங்கள், கஷ்டங்கள் மூலமாகவே ஞானம் பெறுகிறார்கள். அதற்கு முன்பே நாம் அவர்களை எச்சரிக்கும் போது அவர்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். அது வருத்தத்திற்குரியது தான் என்றாலும் அதிலும் ஒரு கூடுதல் நன்மை இருக்கவே செய்கிறது. அடிபட்ட பின் ஞானமடைந்தவர்கள் அதன் பிறகு நாம் சொல்லும் வழிக்கு இரட்டிப்பு துடிப்புடன் வருவார்கள். அதனால் இப்போது நாம் அவர்களிடம் செல்லும் போது ஆதரவு அதிகமாகவே கிடைக்கும்…”

 

அவரது திட்டப்படி சின்ஹரனும், சந்திரகுப்தனும் மறுநாளும், சாணக்கியர் அதற்கடுத்த நாளும் வேறு வேறு திசைகளில் பயணித்தார்கள். சாணக்கியர் தட்சசீலத்தை விட்டு வெளியேறிய செய்தி கிடைத்து ஆம்பி குமாரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். விட்டது சனியன் என்று தோன்றியது அவர் தட்சசீலத்திற்குத் திரும்பி வருவதற்குள் அவன் அவருக்காகப் போட்டிருக்கும் திட்டம் தயாராகக் காத்திருக்கும்.

 

(தொடரும்)

என்.கணேசன்

 



1 comment:

  1. இத்தனை பகுதிகளை கடந்தும் சாணக்கியரின் திட்டம் என்னவாக இருக்கும்? என்பதை ஒரு துளிக்கூட கணிக்க முடியவில்லை...

    ஞானத்தைப் பற்றி சாணக்கியர் கூறியது என் அனுபவ உண்மையும் கூட....

    ReplyDelete