Monday, June 12, 2023

யாரோ ஒருவன்? 142



ஜீம் அகமது நான்காவது வழித்தடத்தில் செல்ல ஆரம்பித்தவுடனேயே கடைசி நேரத்தில் அவனும் அன்வரும் சேர்ந்து ரா தலைவரிடம் மறைமுக அனுமதி பெற்று மாற்றியிருந்த திட்டத்தை அந்த வழித்தடத்தில் சற்று தொலைவில் நின்றிருந்த காரில் ஒளிந்திருப்பவர்களிடம் நரேந்திரன் தெரிவித்தான். அந்த வழித்தடத்தில் மட்டும் தான் அந்த வசதியும், வாய்ப்பும் இருப்பதோடு அன்வரும் காத்திருக்கிறான் என்பதனால் அவர்கள் திட்டத்தில் செய்திருந்த சிறிய மாற்றத்தை நரேந்திரன் சொன்னவுடன் அவர்கள் சரியென்றார்கள்.

அஜீம் அகமதின் கார் அந்தக் காரைத் தாண்டியவுடன் அந்தக் காரும் கிளம்பியது. அதைக் கண்ட அஜீம் அகமது அதிர்ந்தான். அந்தக் கார்க்காரன் எதாவது முக்கியமான போன் பேச வேண்டியிருந்து காரை நிறுத்திப் பேசி விட்டு அவன் காரைக் கிளப்பியுமிருக்கலாம் என்றும் அவனுக்குத் தோன்றியதுதேவையில்லாமல் அதிர்ச்சி அடைகிறோமா என்ன என்று அவன் தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனாலும் அவன் தயாராகக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டை வீச ஒரு கை தயாராகி ஜன்னல் கண்ணாடியைக் கீழே இறக்கவும் இன்னொரு கை தயாராகியது. ஆனால் சிறிது தூரம் வரை சற்று தொலைவிலேயே வந்து கொண்டிருந்த அந்தக் கார் பின் நின்று விட்டது

அஜீம் அகமதின் சகா நிம்மதியடைந்தவனாய் சொன்னான். “அந்தக் கார்ல எதோ பிரச்சன போல இருக்கு பாஸ். நான் ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...”

அஜீம் அகமது முழுவதுமாக நிம்மதியடைந்து விடவில்லை. அவன் உள்ளுணர்வு மறுபடி எச்சரித்தது. அதனால் திரும்பிப் பார்த்தபடியே இருந்தான். அந்தக் காரின் உள்ளே விளக்கு எதுவும் எரியவில்லை. திடீரென்று வேகமாக அந்தக் கார்க்காரன் ஹாரன் அடித்தான். அந்த நேரத்தில் அஜீம் அகமதின் கார் ஒரு தெருக்கோடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. தெருக்கோடியில் ஒரு பெரிய இரும்புக் குப்பைத்தொட்டி தெரிந்தது. தெருக்கோடி வந்து கார் வலது பக்கம் திரும்ப வேண்டும்அந்தப் பகுதியில் கட்டிடங்கள் எதுவும் இல்லை. வலது பக்கம் திரும்பும் தெருவும் வெறிச்சோடிக் கிடந்தது.

கார் ஹாரன் சிக்னல் கிடைத்தவுடன் தெருக்கோடியில்  இருந்த குப்பைத் தொட்டியிலிருந்து ஒரு உருவம் திடீரென்று எழுந்து நிற்க காரை ஓட்டி வந்து கொண்டிருந்த அஜீம் அகமதின் சகா திகைத்தபடிபாஸ்என்றழைத்தான். அவன் அழைக்கும் வரை பின்னால் திரும்பி தூரத்தில் நின்று விட்டிருந்த காரையே பார்த்துக் கொண்டிருந்த  அஜீம் அகமதுஎன்னஎன்று கேட்டபடி திரும்பவும், குப்பைத் தொட்டியில் நின்று கொண்டிருந்த உருவம் எதையோ குறி பார்த்து எரியவும் சரியாக இருந்தது. அவன் எறிவது வெடிகுண்டு என்று அஜீம் அகமதுவும், சகாவும் உணர்ந்த நேரத்தில் அவர்களுக்குத் தற்காத்துக் கொள்ள எதுவும் செய்ய முடியவில்லை.  ஏனென்றால் அந்த உண்மை உறைத்த அந்த நேரத்தில் அந்த வெடிகுண்டும் அவர்கள் கார் மேல் விழுந்தது. பயங்கரச் சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த போது அஜீம் அகமது உள்ளே வைத்திருந்த வெடிகுண்டும் சேர்ந்து வெடித்துச் சிதறியது. அஜீம் அகமதுவும் அவன் சகாவும் கூடச் சேர்ந்து சிதறினார்கள்     

குப்பைத் தொட்டியிலிருந்து அன்வர் வெற்றிப் புன்னகையுடன் வெளியே வர கண்காணிப்பறையில் நரேந்திரனும் மற்றவர்களும் வெற்றி கோஷமிட்டார்கள்.

அஜீம் அகமது நரேந்திரனின் தாயை வெடிகுண்டு வைத்துக் கொல்ல முயற்சி செய்தவுடன் அன்வர் நரேந்திரனிடம் சொல்லியிருந்தான். “அவங்க வழியிலயே அவங்கள கொன்னா என்ன? துப்பாக்கிச் சூட்டுல அவன் எப்படியாவது தப்பிக்கவும் வழியிருக்கு. ஆனா வெடிகுண்டு வீசினா அந்த இடத்துலயே ஆள் காலியாயிடுவான்.”

சட்டபூர்வமாக அது சரியல்ல என்றாலும் நரேந்திரனுக்கும் அது நல்ல வழியாகவும் சரியான நீதியாகவும் தோன்றியது. அவன் தலைவரிடம் சொன்ன போது அவரும் அப்படியே நினைப்பதாகச் சொன்னார்அங்குள்ள போக்குவரத்து குறைவையும், ஒளிந்து கொள்ள ஒதுக்குப்புறமான வீடுகளும் அதிகமுள்ள பகுதி அருகில் இருப்பதையும் அன்வர் சுட்டிக் காட்டி, அஜீம் அகமது போகும் வழித்தடம் இதுவாக இருக்கும் என்று அனுமானித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பை தனக்கே தரும்படியும் கேட்டுக் கொண்டிருந்தான்.

கண்காணிப்பு அறையில் அத்தனை பதிவுகளும் கவனமாக உடனடியாக அழிக்கப்பட்டன. எதிர்காலத்தில் இந்தப் பதிவுகள் கசிந்து பிரச்னையாவதை அவர்கள் யாரும் விரும்பவில்லை.

அதிகாலையில் டெல்லி உயர் போலீஸ் அதிகாரி பத்திரிக்கையாளர்களிடம் சொன்னார். “உலக நாடுகள் பலவும் தேடி வந்த சர்வதேசத் தீவிரவாதி அஜீம் அகமது இந்தியாவிற்கு வந்திருக்கும் செய்தி உளவுத்துறைக்கு சில நாட்களுக்கு முன் எட்டியது. உடனே அவனைப் பிடிக்கஆபரேஷன் ஏஸ்கொயர்என்ற ரகசியத் திட்டத்தை உயர்மட்டக் குழு ஒன்று உருவாக்கியது. மிகவும் இரகசியமாகச் செயல்பட்டு அவன் தங்கியிருக்கும் இடத்தை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அதை எப்படியோ அறிந்து விட்ட அஜீம் அகமது அங்கிருந்து தன்னுடைய கூட்டாளியுடன் ஒரு கருப்புக் காரில் தப்பியோடினான். அப்படித் தப்பி ஓடுகையில் நோய்டாவின் புறநகர்ப்பகுதியில் ஆபரேஷன் ஏஸ்கொயர் செயல்திட்ட வீரர்கள் அவன் காரைச் சுற்றி வளைத்தார்கள். போலீஸில் பிடிபட விரும்பாத அஜீம் அகமதுவும், அவன் சகாவும் தங்களிடமிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்துக் கொண்டு பலியானார்கள். நரேந்திரன் ஐபிஎஸ் தலைமையில் நடந்த இந்த ஆபரேஷனில் துணிச்சலாகச் செயல்பட்ட செயல்வீரர் அன்வரின் பங்கு மகத்தானது…. பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த அஜீம் அகமதை வீழ்த்திய இந்தியச் செயல்வீரர்களுக்கு உலக நாடுகளிலிருந்து பாராட்டு குவிந்து வருகிறது…”

டிவியில் இந்தச் செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த ஜனார்தன் த்ரிவேதி பதறிப்போய் காளிங்க சுவாமியின் சீடர்களுக்குப் போன் செய்தார். இரண்டு மணி நேரம் கழித்து தான் தொடர்பு கிடைத்தது. காளிங்க சுவாமியின் சீடன் அந்த ரத்தினக்கல் விஷயத்தில் சுவாமிஜி ஏமாந்து விட்டதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதாகச் சொன்னான். அவன் குரலிலும் உண்மையாகவே வருத்தம் தெரிந்தது. ஜனார்தன் த்ரிவேதி தன் காதுகளை நம்ப முடியாமல் திகைத்தார்.

அஜீம் அகமது இப்படி தற்கொலை செய்து கொள்வான் என்பதையும் அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் பிறகு சம்பவ இடத்தை ஆராய்ந்த நிபுணர்கள் வெடித்த இரண்டு வெடிகுண்டுகளில் ஒன்றில் அஜீம் அகமதின் தனி முத்திரைகள் இருப்பதைச் சுட்டிக் காட்டி அந்த வெடிகுண்டு அவனே தயாரித்திருக்கக்கூடிய வெடிகுண்டு என்று ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டிய போது அவர் சந்தேகம் தெளிந்தார். மிகவும் வருத்தமாக இருந்தாலும், மரணத்தைக் கூடத் தன் வழியிலேயே  தேடிக் கொண்ட அவனை எண்ணிப் பிரமிக்காமல் அவருக்கு இருக்க முடியவில்லை.


முடிவில்...

·         நரேந்திரன் மற்றும் அன்வர் இருவருக்கும் பதவி உயர்வு கிடைத்தது. உலகநாடுகள் அஜீம் அகமதுக்காக அறிவித்திருந்த பரிசுத் தொகைகள் ஆபரேஷன் ஏஸ்கொயர் செயல்வீரர்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப் பட்டதுதான் தயாரித்த வெடிகுண்டுகளால் ஏராளமானவர்களை மரணமடையச் செய்த அஜீம் அகமதின் மரணமும் அதே வழியில் நடந்ததைஇயற்கையின் நீதிஎன்று பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வர்ணித்தன.

·         நாகராஜ் அவனுடைய குருஜி குறித்துக் கொடுத்திருந்த நாளில் துறவியாக மாறி அந்த ஆசிரமத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அவனுடைய நற்பணிகள் தொடர்ந்தன.

·         ரஞ்சனி சத்தியமங்கலத்திலிருக்கும் பரந்தாமன்-அலமேலு தம்பதியரிடம் தன் மகனை அழைத்துக் கொண்டு போய் அவன் உண்மையிலேயே மாதவனுடைய மகன் என்பதைத் தெரிவித்தாள். திருமணத்திற்கு முன்பு கருத்தரித்ததால் அதை வெளிப்படையாக அவளால் சொல்லியிருக்க முடியவில்லை என்றும், உண்மை தெரிந்தும் அவளைத் திருமணம் செய்து கொண்ட சரத் அதை வெளியே சொல்ல வேண்டாமென்றும் சொன்னதால் இத்தனை காலம் மௌனம் சாதித்ததாகவும், சமீபத்தில் ஒருநாள் திடீரென்று மாதவன் கனவில் வந்துஎன் பெற்றோரிடம் நம் மகனை அறிமுகப்படுத்துஎன்று கட்டளையிட்டதால் இப்போது வந்து சொல்வதாகவும் அவள் ஒரு கதை சொன்னாள்.

முதியவர்கள் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள். அலமேலு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். சில நாட்களுக்கு முன் தன் கனவிலும் மாதவன் வந்ததைத் தெரிவித்த அவள் தீபக்கை முதல் முறை பார்த்த போதே மாதவனுக்கு ஒரு மகன் இருந்தால் இப்படி இருப்பான் என்று அவர்கள் இருவரும் நினைத்ததைச் சொன்னாள். விடுமுறை நாட்களில் ரஞ்சனியும் தீபக்கும் அவர்கள் வீட்டுக்கு வர பரந்தாமனும், அலமேலுவும் பேரனின் அன்பிலும் புத்திசாலித்தனத்திலும் பூரித்துப் போனார்கள்.

ஒருமுறை தீபக் தர்ஷினியையும் அழைத்து வந்து எதிர்கால மனைவியாக அறிமுகப்படுத்த அவளையும் அவர்களுக்குப் பிடித்து விட்டது.    22 வருட துக்கத்திற்கு நஷ்ட ஈடு தருவது போல் கடவுள் கடைசி காலத்தில் இப்படியொரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருப்பதாக உணர்ந்தார்கள். அவர்கள் ஆனந்தத்தில் நாதமுனியும் இணைந்தார். அவருக்கும் தீபக்கை மிகவும் பிடித்திருந்தது.

சரத்தும், கல்யாணும் ஏன் வருவதில்லை என்று ஒரு முறை அலமேலு வருத்தத்துடன் கேட்ட போது மாதவனின் நினைவுகள் அவர்கள் மனதை இப்போதும் வேதனைப்படுத்துவதால் தான் வருவதில்லை என்று ரஞ்சனி சமாளித்தாள். என்னவொரு அன்பு என்று அலமேலு கண்கலங்கினாள். சில சமயங்களில் உண்மையை விடப் பொய்யே ஆறுதல், பொய்யே நிம்மதி, பொய்யே வாழ்க்கையைச் சுலபமாக்குகிறது!

·         வாரநாட்களில் தீபக் தினமும் வழக்கமான நேரத்தில் அந்த ரேஸ்கோர்ஸில் தவறாமல் வாக்கிங் செல்கிறான். கூடவே அவன் தந்தையும் வருவதாக உணர்கிறான். தந்தையிடம் சொல்லத் தோன்றுவதை எல்லாம் அவன் மனதுக்குள் சொல்கிறான். தந்தை கேட்பதாகவும் உணர்கிறான். அவன் தந்தையின் கைவிரல்களின் ஸ்பரிசமும் கூட அவன் உணர்கிறான். எல்லாம் அவன் கற்பனையா இல்லை நாகராஜ் தன் சக்தியின் மூலம் அந்த உணர்வை ஏற்படுத்துகிறானா என்பது தெரியவில்லை.

·         சரத் வாழ்க்கையில் இருந்த ஒரே பிடிப்பு தீபக்கின் அன்பாய் தான் இருந்தது. தீபக் மட்டும் முன்பு போலவே அவனிடம் பாசமாய் இருந்தான். ரஞ்சனி அதே வீட்டில் அவனுடன் வாழ்ந்தாலும் அன்னியமாகவே இருந்தாள்.

·         கல்யாணின் தொழில் பிரச்னைகள் தீரவில்லை. பல கோடி நஷ்டத்தைச் சந்தித்த அவனுடைய நிதி நிலைமை முன்பிருந்ததில் கால் பாகமாகக் குறைந்தது. கடனை அடைக்க அவன் ஷாப்பிங் காம்ப்ளக்ஸையும், கோத்தகிரி எஸ்டேட்டையும் விற்க வேண்டி வந்தது. அவன் கெஞ்சிக் கூத்தாடி மனைவி மகளை ஒரு மாதம் கழித்து வீட்டுக்கு வரவழைத்தாலும் அவர்களுக்கு அவன் மீது பழைய அன்பும், மரியாதையும் இல்லாமலேயே போயிற்று. வேலாயுதம் எந்தப் பாம்பாட்டியைப் பார்த்தாலும் ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு, பின் ஏமாற்றத்துடன்   நகர்கிறார்.

·         சஞ்சய் ஷர்மாவும், மதன்லாலும் அரைப்பைத்தியங்களாகவே இருக்கிறார்கள். அவர்களைக் குணமாக்க முடியாமல் ஜனார்தன் த்ரிவேதி அவர்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். அவர்கள் மனைவிகள் அவர்களைச் சமாளிக்க முடியாமல் வீட்டில் கயிற்றால் கட்டிப் போடுவதாகப் பின்பு கேள்விப்பட்டார். நரேந்திரன் அவர்களைக் கட்டிப்போட்ட நேரம் அவர்களுடைய மீதி வாழ்க்கையையும் அப்படியே செய்து விட்டதே என்று மனம் புழுங்குவார். இப்போதெல்லாம் அவர் காளிங்க சுவாமியைத் தரிசிக்கவும் போவதில்லை. இனி அவர் கட்சி ஆட்சிக்கு வரும் அறிகுறியே இல்லை என்பதால் விரக்தியுடன் வாழ்கிறார்.

· மதன்லாலையும், சஞ்சய் ஷர்மாவையும் அந்த ஃபேக்டரியில் கண்டுபிடித்தவுடனேயே அஜீம் அகமது தான் கடத்தி வைத்திருந்த க்யான் சந்தை கொன்றிருந்தான். மகேந்திரன் கொலையான விதத்தை அவன் சொல்லி விடக்கூடும் என்பதோடு, சஞ்சய் ஷர்மாவையும், மதன்லாலையும் கடத்திய பழியோடு இந்தப் பழியையும் நரேந்திரன் மீது சுமத்த அஜீம் அகமது எண்ணியிருந்தான். கொலைப்பழியும் சேர்ந்தால் நரேந்திரனுக்குத் தூக்கு தண்டனை நிச்சயம் என்று அவன் குறுக்கு மூளை கணக்குப் போட்டிருந்தது. மதன்லால், சஞ்சய் ஷர்மா இருவரும் பகிரங்கமாக நரேந்திரன் மீது குற்றச்சாட்டு சொன்ன மறுநாளே க்யான் சந்த் உடல் புதைக்கப்பட்ட இடத்தைப் போலீஸுக்குத் தெரிவிக்க எண்ணியிருந்தான். ஆனால் நரேந்திரன் மீது குற்றம் சாட்டும் நிலைமைக்கு மதன்லால், சஞ்சய் வராததால் இவன் இறந்த தகவலும் வெளிவராமலேயே தங்கி விட்டது. இப்போதும் போலீஸார் க்யான் சந்தைத் தேடி வருகிறார்கள்.   

·         பாம்பாட்டியும், பீம்சிங்கும் தங்கள் பழைய வழிகளை மாற்றிக் கொண்டு வியாபாரிகளாக மாறி விட்டார்கள். செல்வம் நல்ல முறையில் அவர்களிடம் சேர்ந்து கொண்டே போனது. பாம்பாட்டி அதற்கு நாகரத்தினக்கல்லைக் காரணமாக நினைக்கிறான். பீம்சிங் அனுமாரின் அனுக்கிரகத்தைக் காரணமாக நினைக்கிறான்.

·         காளிங்க சுவாமியின் ஒரு சீடன் அவரோடிருப்பதில் இனி பெரிய எதிர்காலம் இல்லை என்று எண்ணி அவரை விட்டுப் போய் விட்டான். ஒரு வேளை விசேஷ நாகரத்தினம் அவரிடம் வந்திருந்தால் அதை எடுத்துக் கொண்டு போகிறவன் அவனாகத் தான் இருந்திருப்பானோ என்ற சந்தேகம் அவருக்கு இருக்கிறது. நாகசக்தியால் மற்றவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது போல் விசேஷ நாகரத்தினம் ஏற்படுத்த முடிந்த விளைவுகளை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. விசேஷ நாகரத்தினத்தை முதலில் அடைந்த நாகராஜ் மட்டுமே அதன் விசேஷத் தன்மைகளையும், ரகசியங்களையும் அறிந்தவன். ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை உருவாக முடிந்த விசேஷ நாகரத்தினத்தின் மீதிப்பயணத்தில் தனக்கு இடமில்லை என்று உணர்ந்து அவன் அனுப்பி விட்டான் என்பதை மட்டுமே அவரால் யூகிக்க முடிந்தது. மற்றதை அவன் யாரிடமும் சொல்லவில்லை. காளிங்க சுவாமி மாகாளியிடம் கேட்ட போதும் அது இப்போது சேர வேண்டிய இடமாக கங்கையைக் காட்டியதோடு நிறுத்திக் கொண்டாள். மீதியை அவளும் சொல்லவில்லை. இனி அது எப்போது யார் கைக்குப் போகும், அதன் பின் என்ன ஆகும் என்பதையாவது அறிந்து கொள்ள அவ்வப்போது அவருக்கு ஆர்வம் ஏற்படுவதுண்டு. ஆனால் காலம் தன் ரகசியங்களை ஒரே சமயத்தில் வெளிப்படுத்தி விடுவதில்லை. அப்படி வெளிப்படுத்தி விட்டால் அதன் பின் வரப்போவதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?


முற்றும்.

என்.கணேசன்




(அடுத்த திங்கள் முதல் யோகி நாவல் வாரா வாரம் வெளியாகும்)

22 comments:

  1. மிக மிக சிறப்பாக முடிவு உள்ளது. வாழ்த்துக்கள். தொடர்க உங்கள் பணி. வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. சிறந்த நாவல்களை தொடர்ந்து வழங்கி வருவதற்கு நன்றி. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை! விருவிருப்பான தொடர். திங்கட்கிழமை எப்போது வரும்...... "நரேந்திரன், நாகராஜ் மகராஜ் அடுத்து என்ன செய்வார்கள்" என்று எதிர்பார்க்கும் சுவாரசியம் முடிந்து விட்டது என்று உணருகையில் ஒரு வருத்தம்.

    ReplyDelete
  4. அருமையான தங்களின் முத்திரை நாவல். ஆன்மீகம், க்ரைம், அன்பு, பாசம், காதல் எவ்வளவு வகைகள், எல்லாமே இந்த நாவலில் உள்ளது. இது மற்றொறு வகை அமானுசியன். நன்றி வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அற்புதமான முடிவு.... எவ்வித சேதமும் இன்றி அஜும் அகமது கொல்லப்பட்டது மகிழ்ச்சி.... அற்புதமான ஒரு தொடரை தந்து எங்களை நல் உணர்வுகளுடன் பயணிக்க வைத்த என்.கணேசன் ஐயாவுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏.....

    ReplyDelete
  6. Fantastic novel. Big Thanks for the prompt updates.

    ReplyDelete
  7. Very different and wonderful story. Thank you sir

    ReplyDelete
  8. Satisfying end to an amazing novel. Thank you Ganesan sir. My Mondays and Thursdays are never complete without reading your writing. Looking forward to Yogi!

    ReplyDelete
  9. முழு நீள திரைப்படம் பார்த்த திருப்தி...

    ReplyDelete
  10. Wonderful story. Some of the dialogues reflect your high state of mind. They are really elevating. My appreciations to you. Thanks.

    ReplyDelete
  11. முதல் அத்தியாயம் தொடங்கி இந்த இறுதி அத்தியாயம் வரைக்கும் சற்றும் தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்திச் சென்ற விதம் பாராட்டுக்குரியது.... நன்றி ....

    ReplyDelete
  12. arumai arumai... I never missed any of your novels Anna. this is also great one along with others... we are waiting for akshay in upcoming yogi. is akshay in yogi?

    ReplyDelete
  13. Interesting novel hope some.one.will make flim based on this novel

    ReplyDelete
  14. Great Experience. Thanks a lot. Expected more Novels like this.

    ReplyDelete
  15. My monday and thursdays are never complete without reading your novels, great sir! Awaiting for Yogi....
    Adhi, Chennai

    ReplyDelete
  16. Wowww,, semmma finishing sir., ellar oda part um thelivaa conclusion aagidichi,
    Ajeem Ahmad sattunu close pannita pola iruku, but avloo periya terrorist ku konjam avagaasam kedachaalum sedhaaram namaku thaan,
    First episode la நாதமுனி ah paathappo story romba periya role irukkum nu nenachen, but last varai நாகரத்தினத்தினத்தோட thagaval soldra polave mudinjidichi avaroda part..
    Avar nu mattumilla intha story la ellarkum avangaloda role kachithamaa porunthiduchi,
    Yaarum uyarvu nu illa, thaazvu num illa, manithanoda manangala apdiye sitharichiteenga sir.,
    2 and 1/2 years ah yaaro oruvan kooda travel pannathu oru mana niraivaa koduthu iruku,
    We miss yaaro oruvan hereafter,
    Hereafter ella Monday vum enna porom oh.........

    ReplyDelete
  17. Is yogi continuation of this Novel?

    ReplyDelete
  18. சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு வாரமும் அடுத்துள் என்ன, அடுத்து என்ன என்று ஆவலுடன் எதிர்பார்த்த நாவல். எண்டமூரிக்கு பின் தங்களது எழுத்துக்கள் என்னை அதிகம் கவருகின்றன. அதிலும் தங்களது ,பாசிட்டிவ் தாட்ஸ், சூப்பர் பாராட்ட வார்த்தைகளே இல்லை. ஒவ்வொரு இந்தியனும் தங்களது நாவல்களை அவசியம் படிக்க வேண்டும்.

    ReplyDelete
  19. மிக அருமை. நல்லதோர் தொடருக்கு நன்றி...

    ReplyDelete
  20. தொடரா படிக்காமல், முடிந்த பின் படித்தது இன்னும் சுவாரஸ்யமா இருந்தது..அருமையான திரில்லர் ..நன்றி ஜி

    ReplyDelete
  21. நாவல் மிக அருமை. சஞ்சய் சர்மா மற்றும் மதன்லால் சிறை நிகழ்வுகளைக் கொஞ்சம் சுருக்கி இருக்கலாம்.

    ReplyDelete