Thursday, May 11, 2023

சாணக்கியன் 56

 

லெக்ஸாண்டரின் பார்வை தன் மீது நிலைப்பதை கொய்னஸ் கவனித்தான். அவனை மற்ற வீரர்களும் கெஞ்சும் விழிகளுடன் பார்ப்பதையும் பார்த்தான். ’தயவு செய்து நம் உள்ளத் தவிப்பை சக்கரவர்த்தியிடம் நீயாவது சொல்என்ற பிரார்த்தனையை அவர்கள் பார்வையில் அவனுக்குப் படிக்க முடிந்தது. மேலும், யாராவது ஒருவர் பேசியேயாக வேண்டும். ’எண்ணங்களைத் தெரிவியுங்கள்என்று சக்கரவர்த்தியாகவும், சகவீரனாகவும் அலெக்ஸாண்டர் கூடக் கேட்டாகி விட்டது. இந்த ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தத் தவறினால் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்ல இனியொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்பது கொய்னஸுக்குத் தெளிவாகவே தெரிந்தது.

கொய்னஸ் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு உணர்ச்சிபூர்வமாகவும், மிகுந்த கவனத்துடனும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து ஆத்மார்த்தமாகப் பேச ஆரம்பித்தான். “சக்கரவர்த்தி, உங்களைப் போன்றொரு மாவீரனின் தலைமையில் தாயகத்தை விட்டுக் கிளம்பி வந்திருக்கும் நாங்கள் தாங்கள் சொன்னது போல பாக்கியசாலிகளே. வந்த வழியெல்லாம் வென்று கொண்டே வந்திருக்கிறோம். தங்கள் தலைமை எங்களுக்கு மனதில் அசைக்க முடியாத உறுதியும், நாடி நரம்புகளில் வீரத் துடிப்பும், எல்லையில்லாத உற்சாகமும் தந்திருக்கிறது. உங்களிடம் சேர்ந்து கொண்ட பின் எங்களுக்குத் தோல்வியைச் சந்திக்கும் துர்ப்பாக்கியம் ஏற்படவில்லை. வெற்றியும், செல்வமும், புகழும் எங்களுக்குக் கிடைத்திருப்பதை நாங்கள் மறுக்கவுமில்லை. ஆனால் சக்கரவர்த்தி நம் தாயகத்தை விட்டுக் கிளம்புகையில் நாம் எத்தனை பேர் இருந்தோம், இப்போது எத்தனை பேர் இருக்கிறோம் என்பதைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள். எத்தனையோ வீரர்கள் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள், எத்தனையோ வீர்ர்கள் நோய்வாய்ப்பட்டும், காயங்கள் அடைந்தும், வெற்றியடைந்த பகுதிகளைப் பாதுகாக்கும் வேலையை ஏற்றும் அங்கங்கே பின் தங்கியிருக்கிறார்கள்... இறந்தவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் இருப்பவர்கள் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதற்குக் காரணம் இருக்கின்றது...”

நாங்கள் தாயகம் விட்டுக் கிளம்பி ஆண்டுகள் பலவாகி விட்டன. பெற்றோரை விட்டு, மனைவி மக்களை விட்டு, தாய் மண்ணை விட்டு வந்திருக்கும் எங்களுக்கு எந்தப் படைபலத்தைப் பார்த்தும் பயமில்லை. தோல்வியை எதிர்பார்த்தும் பயம் இல்லை. ஏனென்றால் உங்கள் தலைமையில் அந்தப் பயத்திற்கு எங்களுக்கு அவசியம் இருந்ததும் இல்லை, இருக்கப்போவதுமில்லை. ஆனால் தாயகம் திரும்புவோமா, பெற்றோர், பெண்டு பிள்ளைகளைப் பார்ப்போமா என்ற ஏக்கம் எங்களுக்குத் தீவிரமாக வர ஆரம்பித்து விட்டது. நாங்கள் திரும்பிச் செல்லும் போது நீங்கள் சொல்லும் புகழையும், வெற்றியையும், செல்வத்தையும் பகிர்ந்து கொள்ள எத்தனை பேர் எங்கள் வீடுகளிலும், குடும்பங்களிலும் மிச்சமிருப்பார்கள் என்ற கவலை எங்களுக்கு வர ஆரம்பித்து விட்டது.”

சக்கரவர்த்தி, குடும்பத்தையும், நேசிப்பவர்களையும் புறக்கணித்து விட்டு, உலகையே வெல்வதில் அர்த்தம் என்ன இருக்கிறது, என்ன பலனடையப் போகிறோம் என்று எங்கள் மனதில் எழும் கேள்வியை எங்களால் அலட்சியம் செய்ய முடியவில்லை. பயணத்தின் ஆரம்பத்தில் இருந்த உற்சாகமும், மன உறுதியும், வெற்றி காணும் துடிப்பும் எங்களுக்குக் குறைந்து கொண்டே வந்து இப்போது காலியாகி விட்டதன் காரணம் பயணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி எங்கள் கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை தெரியவில்லை என்பது தான்.  தாயகம் திரும்ப வேண்டும் என்றாலும் வந்த அளவு தூரமே மறுபடி சென்று கடக்க வேண்டும் என்பதால் இப்போதே கிளம்பினாலும் அங்கு போய்ச் சேரப் பல ஆண்டுகள் இனியும் தேவைப்படும் என்பதெல்லவா உண்மை நிலைமை? அப்படியிருக்கையில் இனியும் தூரச் செல்லும் மனமும், வலிமையும் எங்களிடம் துளியும் இல்லை. போதும் சக்கரவர்த்தி நாம் தாயகம் திரும்புவோம். தேவை என்று பின்பும் தங்களுக்குத் தோன்றினால் சில காலம் கழித்து மறுபடி வேண்டுமானால் வருவோம். ஆனால் இப்போதைக்கு உங்கள் வீரர்கள் தாயகம் திரும்புவதையே விரும்புகிறார்கள். அந்தக் கோரிக்கையையே உங்கள் முன் வைக்கிறார்கள்...”

அலெக்ஸாண்டர் இந்த வார்த்தைகளை சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. கொய்னஸ் பேசி முடித்தவுடன் வீரர்கள் சேர்ந்து செய்த கரகோஷம் அப்பகுதியை அதிர வைத்ததையும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாங்கள் நினைப்பதை கொய்னஸ் வார்த்தைப்படுத்தியிருக்கிறான் என்று அவர்கள் அதன் மூலம் அவனுக்கு உணர்த்தியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

 கரகோஷம் முடிந்த போது கொய்னஸ் மிகுந்த வருத்தத்துடனும், பணிவுடனும் தலைதாழ்த்தியே நின்றான். ஆனால் யவன வீரர்கள் அலெக்ஸாண்டரை ஆவலுடன் பார்த்தார்கள். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள், தாயகம் திரும்புவோம் என்றே அவர்கள் விழிகள் அவனைக் கெஞ்சின. உலகை வெல்லக் கிளம்பியிருந்த அலெக்ஸாண்டருக்கு அவன் வீரர்களே உற்சாகம் இழந்து பாதியில் திரும்பிச் செல்வோம் என்று சொல்வது சகிக்க முடிந்ததாய் இல்லை.

 கொந்தளித்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தத் திணறியவனாய் அலெக்ஸாண்டர் சொன்னான். “தாயகம் திரும்ப வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகத் திரும்பிச் செல்லலாம். தொடர மனமில்லாதவர்களைக் கட்டாயப்படுத்த நான் விரும்பவில்லை. செல்லுங்கள். சென்று எங்கள் சக்கரவர்த்தியை அன்னிய மண்ணில் விட்டு விட்டு பேடிகளாய் உயிர் பிழைத்து வந்திருக்கிறோம் என்று பெருமையாக உங்கள் குடும்பத்தாரிடம் சொல்லுங்கள். அலெக்ஸாண்டர் தான் உத்தேசித்து வந்த பயணத்தைக் கண்டிப்பாகத் தொடர்வான்.  அவன் பின்னால் வர அவன் வென்ற படைகள் தயாராக இருக்கின்றன. அவனை நம்பிப் பின்னால் வர இன்னும் எத்தனையோ வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அப்படியில்லா விட்டாலும் கூட அலெக்ஸாண்டர் பின் வாங்க மாட்டான்.  ஏனென்றால் அவன் கண்ட கனவு உங்கள் பலத்தை நம்பி அவன் கண்டதல்ல. எதையும் யாரும் பெற்றுத் தருவார்கள் என்று நம்பி அவன் இந்தக் கணம் வரை எதற்கும் காத்திருந்தவனும் அல்ல....”

 சொல்லி விட்டு வேகமாக அலெக்ஸாண்டர் அங்கிருந்து சென்று விட்டான். அவன் செல்லும் போதும் மயான அமைதியே அங்கு நிலவியது அவனுக்கு அவமானமாக இருந்தது. ஒருவரும் அவனைத் தடுத்து நிறுத்தவோ, அவனிடம் மன்னிப்பு கேட்கவோ ஓடி வரவில்லை. சற்று முன் கொய்னஸ் பேசி முடித்த போது வீரர்கள் செய்த ஆரவாரத்தையும், இப்போதைய அமைதியையும் அவனையறியாமல் ஒப்பிட்டுப் பார்த்து அவன் உள்ளுக்குள் கூனிக்குறுகினான். உலகமே அவனைப் பிரமிப்புடனும், மரியாதையுடனும், அச்சத்துடனும் பார்க்கிறது. ஆனால் அவன் சொந்த வீரர்களே அவனைக் கைவிட்டு விட்டார்கள்....

 செல்யூகஸும் திகைப்புடன் யவன வீரர்களைப் பார்த்து சில கணங்கள் அங்கு சிலையாக நின்று விட்டுப் பின் அலெக்ஸாண்டரின் பின்னால் ஓடினான். கொய்னஸ் வருத்தத்துடன் அவர்களைப் பார்த்தபடி நின்றான். அவனால் அலெக்ஸாண்டரின் மனவருத்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அலெக்ஸாண்டரால் அவர்களது மனவருத்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் போனது அவனுக்கு வேதனையாக இருந்தது.       

 யவன வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். ஒரு வீரன் கேட்டான். ”இனி நாம் என்ன செய்வது?”

 இன்னொரு வீரன் கேட்டான். “நாம் எப்போது கிளம்புவது?”

 கொய்னஸ் சொன்னான். “சக்கரவர்த்திக்கு நாம் யோசிக்க கால அவகாசம் தர வேண்டும். அவர் யோசிக்கட்டும். பின் முடிவெடுப்போம்

 அவர் தான் முடிவைச் சொல்லி விட்டாரே. போகிறவர்கள் போகலாம் என்றும் சொல்லி விட்டாரேஎன்று ஒரு வீரன் சொன்னான்.

 கொய்னஸ் சொன்னான். “அவர் நாம் இப்படிச் சொல்வோம் என்று சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. நாம் சொன்னது அவரைக் காயப்படுத்தி இருக்கிறது. அந்த வேதனையில், உணர்ச்சி வேகத்தில் உடனடியாகச் சொன்னதை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் அறிவாளி. மறுபடி ஆழமாக யோசிப்பார். நிலைமையை அலசிப் பார்ப்பார். பின் தான் ஒரு முடிவெடுப்பார். அவர் மறுபடி யோசித்து என்ன முடிவெடுக்கிறார் என்று பார்ப்போம். அதுவரை நாம் பொறுத்திருப்போம்

 

ஒருவேளை அவர் தன் முடிவை மாற்றிக் கொள்ளா விட்டால்...? தொடர்ந்து மகதத்துடன் போர் புரிய முன்னேறிச் செல்லத் தீர்மானித்தால் நாம் என்ன செய்வது?”

 கொய்னஸ் மிகுந்த வருத்தத்துடன் சொன்னான். “அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் நாம் திரும்பிச் செல்வோம்.”     

 

(தொடரும்)

என்.கணேசன்    


இந்த வாரத்திலேயே கிடைத்திருக்க வேண்டிய புதிய நாவல்கள் பிரிண்டர்கள் சந்தித்த எதிர்பாராத  சில பிரச்சினைகளால், கிடைக்க தாமதமாகியுள்ளன. யோகி, மாயப் பொன்மான், கீதை மட்டுமல்லாமல் பழைய ஐந்து நூல்களின் அடுத்த பதிப்பும் தந்திருப்பதாலும்,  யோகி போன்ற பெரிய நூல்களைத் தைக்காமல் வெளியிடுவதை நான் விரும்பாததாலும் என்னால் அவர்களை அவசரப்படுத்தவும் முடியவில்லை. அடுத்த வார மத்தியில் கண்டிப்பாக எல்லா நூல்களும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


அன்புடன் 

என்.கணேசன்


ரூ.350/-

ரூ.250/-



                                                    ரூ.800/-


4 comments:

  1. I felt as if I am witnessing the historical event. You have portrayed both sides very well sir.Amazing.

    ReplyDelete
  2. அலெக்சாண்டரை போன்றதொரு வீரனுக்கு மகதத்தை போன்றதொரு சவாலான பகுதியை வெல்ல உற்சாகமாக கிளம்பும் போது... வீரர்கள் இப்படி பின் வாங்குவது சகிக்க முடிந்ததல்ல....

    ReplyDelete
  3. Sir,yogi,Maya ponmam,entha mathiriyana novels?

    ReplyDelete