Monday, May 8, 2023

யாரோ ஒருவன்? 137


ரந்தாமன் இரண்டு முறை வீட்டுக்குள்ளே போய் வந்து விட்டார். இன்னும் அலமேலு எழுந்திருக்கவில்லை. எப்போதுமே அவள் அவருக்கு முன்பே எழுந்து விடக்கூடியவள். இன்று ஏனோ இன்னும் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறாள். அசதி அதிகமாகியிருக்கும் போல என்று பரந்தாமன் எண்ணிக் கொண்டார்.  பாவம் அவளுக்கும் வயதாகி விட்டது. அவளானதால் இந்த வயதிலும் இப்படி ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்கிறாள். ஒரு நாளும் அவள் சலித்துக் கொண்டதில்லை. களைத்துப் போனாலும் வாய்விட்டுச் சொன்னதில்லை... அவருக்காவது பேச்சுத்துணைக்கு நாதமுனி இருக்கிறார். வாக்கிங் போய் விட்டு வருகிறார்... செய்தித்தாளில் வரும் செய்திகளை வரிக்கு வரி படிக்கிறார். இடையிடையே குட்டித் தூக்கம் போடுகிறார்.  அவளுக்குக் காலையில் எழுந்தால் இரவு வரை வேலை, வேலை, வேலை தான்.....

மூன்றாவது முறை உள்ளே போன போதும் அவள் எழாமல் இருக்கவே அவருக்குப் பயம் வந்து விட்டது. அவள் இல்லாத வாழ்க்கையை அவரால் கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை மெல்ல அவள் அருகே போய் மூக்கின் அருகில் விரலை வைத்துப் பார்த்தார். மூச்சுக் காற்று வந்து கொண்டுதான் இருக்கிறது. அவருக்கு நிம்மதியாக இருந்தது.... தளர்ச்சியுடன் போய் வெளியே கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார்.

ஐந்து நிமிடம் கழித்து அவள் வெளியே வந்தாள். “என்னங்க மாதவன் இன்னிக்கு என் கனவுல வந்தான்ங்க...” அவள் குரலில் மகனே நேரில் வந்த மாதிரி ஒரு ஆனந்தம்.

பரந்தாமன் மனைவியை இரக்கத்துடன் பார்த்தார். அவள் சொன்னாள். “நான் போறேன்ம்மா, அப்பா கிட்டயும் சொல்லிடுங்கன்னு சொன்னான்.... எங்கேடா போறேன்னு கேட்கணும்னு நினைச்சேன். எதாவது முக்கியமான வேலைக்கு அவன் போறதா இருந்தா அது அபசகுனமா இருக்கும்னு விட்டுட்டேன்.”

இறந்தவனுக்கு என்ன அபசகுனம்என்று விரக்தியுடன் நினைத்தாலும் மனைவியின் எண்ண ஓட்டத்தை எண்ணி அவர் புன்னகை செய்தார்.

அலமேலு கணவரின் அருகே வந்து சொன்னாள். “ஆனா ஒன்னு மட்டும் புரியல. கடைசியா அவன் இனி எதுவானாலும் உங்க பேரன் பார்த்துக்குவான்னு சொன்னான்... என்னடா சொல்றேன்னு கேட்க வாயைத் திறந்தேன். அதுக்குள்ளே முழிப்பாயிடுச்சு

பேரன் என்று சொன்னதைப் பரந்தாமன் பெரிதுபடுத்தவில்லை. அவள் அன்று ஒருநாள் சில இளைஞர்கள் அவர்கள் வீட்டுக்கு வந்து போனதில் இருந்து அந்த டாக்டருக்குப் படிக்கும் பையனைப் பார்த்ததில் இருந்து சொல்லிக் கொண்டிருக்கிறாள். “நம்ம மாதவனுக்கு ஒரு மகன் இருந்தால் இந்த மாதிரி இருந்திருப்பான்னு ஏனோ தோணுது.” அந்த நினைவிலேயே தூங்கியிருப்பாள். அப்படிக் கனவு வந்திருக்கும். பரந்தாமன் மனைவியைக் கிண்டல் செய்தார். “உன் பையன் கனவுல வந்ததால் நீ அதிகமா தூங்கிட்டே போலருக்கு...” இப்போது கிண்டல் செய்யும் அவர் சற்று முன் பயந்து போனதை அவளிடம் தெரிவிக்கவில்லை.

அலமேலு சிறு ஆச்சரியத்துடன் கண்கள் ஈரமாகச் சொன்னாள். “ஆமா…. எனக்கு நேரமாயிடுச்சுன்னு உள்மனசு சொல்லுது. ஆனாலும் அவன் கனவுல வந்த பிறகு கண் திறக்க மனசு வரல. இந்த தடவை கனவுல அவனை நேர்ல பாக்கற மாதிரியே தத்ரூபமா இருந்துச்சு. பேரன்னு சொன்னது தான் ஒன்னும் புரியல…”


பீம்சிங் கொச்சி விமானநிலையத்தில் அமர்ந்திருந்தான். முக்கால் மணி நேரத்திற்கு முன்  கார் டிரைவர் டயரை மாற்றி விட்டு, பஞ்சர் ஆன டயரை ஆச்சரியத்துடன் திருப்பித் திருப்பிப் பார்த்த காட்சி இப்போதும் அவன் கண்களில் நிற்கின்றது. அவன் உணர்ந்த ஆச்சரியத்தை காளிங்க சுவாமியும் உணர்ந்தது போல் தோன்றினாலும் அவர் அவனுக்குள்ளிருந்து எதையும் சொல்லவில்லை.  

பீம்சிங்குக்கு இந்த வேலை அனுபவம் மிகச் சுலபமானதாக இருந்தாலும் திருப்திகரமானதாக இல்லை. நாகராஜ் அவனுக்காகக் காத்திருந்ததும், தேவையில்லாமல் அனுமாரைப் பற்றிச் சொன்னது அவனுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை.  பாவத்தில் அனுமாருக்குப் பங்கு என்பதெல்லாம் அனாவசிய தர்மசங்கடத்தை அவனுக்குத் தந்தது. கடவுளுக்கு பாவ புண்ணியம் எல்லாம் கிடையாது என்று தான் அவன் இது வரைக்கும் நினைத்திருக்கிறான். சிறு வயதில் இருந்தே அனுமாரின் பக்தனாக இருக்கும் பீம்சிங்குக்கு அவனுக்கு அருளும் இறைவனுக்கு அவன் பாவத்தில் பங்கு தருவதாக நாகராஜ் சொல்வது உறுத்தலாக இருந்தது. கடைசியில்திருட்டு வேலைக்குக் கூட உனக்கு அனுக்கிரகம் செய்யும் கடவுள் நீ வேண்டினால்  நல்ல வழிக்கு அனுக்கிரகம் செய்ய மாட்டாரா. எதற்கும் அனுமாருக்கு ஒரு வாய்ப்பு தந்து பார் பீம்சிங்என்று நாகராஜ் சொன்னது அவனுக்கு அவன் தந்தையை நினைவுபடுத்தியது. அவன் அவர் சொல்வதைக் கேட்கிறானோ இல்லையோ அவர் சொல்ல நினைக்கும் அறிவுரைகளைச் சொல்லாமல் இருந்தது கிடையாது. போன வருடம் தான் அவர் இறந்து போனார்.... நல்ல மனிதர்.....

அவரிடமிருந்து மட்டுமல்ல, மற்றவர்களிடமிருந்தும் அவன் ஏராளமான அறிவுரைகள் கேட்டிருக்கிறான். இலவசமாய் அனைவருமே தாராளமாய் தருவது அறிவுரைகளைத் தானே. ஆனால் நாகராஜ் சொன்ன அறிவுரை ஏனோ அந்தராத்மாவை எட்டியது. காரணம் காளிங்க சுவாமி ஏற்படுத்தியிருந்த அந்த மந்திரக்கவசம் அவனுடைய நுண்ணுணர்வுகளை கூர்மைப்படுத்தியதனாலாக இருக்கலாம். அந்த ரத்தினக்கல் அவனிடம் வந்த பின் ஏற்பட்டிருக்கும் எதோ ஒன்றாகவும் இருக்கலாம். அந்த ஏதோ ஒன்றுக்கு அவன் இன்னும் பெயர் வைக்கவில்லை.

டெல்லி விமானம் இன்னும் அரை மணி நேரத்தில் வந்து விடும் என்ற அறிவிப்பு வர, பீம்சிங் பலவந்தமாக மனதை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். குறிப்பிட்ட நேரத்தில் விமானம் கிளம்பி டெல்லி போய்ச் சேர்ந்தால் அதன் பின் டேராடூன் விமானமும் அப்படியே சரியான சமயத்தில் போய்ச் சேர்ந்தால் அவன் இந்த ரத்தினக்கல்லை காளிங்க சுவாமியிடம் இருட்டுவதற்குள் ஒப்படைத்து விட்டு ஏழு லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு நள்ளிரவுக்குள் வீடு திரும்பலாம்.

சில சமயங்களில் எதிர்பாராத சில்லறைக் காரணங்களாலும் எல்லாமே தாமதமாகி விடுகின்றன. ஒரு முறை அவன் கல்கத்தாவில் ஒரு வேலைக்குப் போய்த் திரும்பி வருகையில் அவன் கிளம்பவிருந்த விமானத்தில் யாரோ வெடிகுண்டு வைத்திருப்பதாக போன் செய்து சொல்லி வைக்க அது வெறும் புரளி, வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிந்து விமானம் கிளம்புவதற்கே நாலு மணி நேரம் கால தாமதமாகி விட்டது.

இது போல் போன் செய்து வெடிகுண்டு இருப்பதாய் போன் செய்பவர்களுக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று அவனுக்குப் புரியவில்லை. சில சமயங்களில் அந்த விமானத்தில் அவர்களுடைய எதிரிகள் பயணம் போகிறதைத் தெரிந்து கொண்டு அவர்கள் பயணத்தைத் தாமதப்படுத்தி விட்டு சந்தோஷிக்கும் அற்ப மனிதர்கள் பிறகு கண்டுபிடிக்கப்படுவதுண்டு. அதுகூடப் பரவாயில்லை. இந்த மாதிரி அற்பக்காரணங்கள் கூட இல்லாமல் வெறுமனே போன் செய்து விமான நிலையத்தில் ஒரு பரபரப்பையும், களேபரத்தையும் ஏற்படுத்துவதற்காகவே சிலர் அப்படிப் போன் செய்து சொல்வதும் உண்டு. அதையே ஒரு சாதனையாக நினைத்து குதூகலித்து போலீஸாரால் பிடிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போகும் அடிமுட்டாள்களும் உண்டு. நாட்டில் அவனவன் எத்தனையோ வேலைகள் வைத்துக் கொண்டு எப்படி முடிப்பது என்று திணறிக் கொண்டிருக்கையில் இப்படி போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுமளவு வேலையில்லாமல் போரடித்துக் கொண்டிருக்கிற ஜந்துக்களும் இருக்கவே செய்கிறார்கள்....

திடீரென்று விமானநிலையத்தில் ஒரு பெரிய அதிகாரி மாதிரி தோற்றம் அளித்த ஒருவர் தன் செல்போனில் தாழ்ந்த குரலில் எதையோ சொல்லியபடியே வேகமாக உள்ளே போனார். அடுத்த ஐந்து நிமிடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் அதிகாரிகளும், ஒரு மோப்ப நாயும், நாயைப் பின் தொடர்ந்து சில சிறப்புக் காவல் வீரர்களும் விமான நிலையத்திற்குள் வந்தார்கள். விமான நிலையத்தில் பரபரப்பும், ஓட்டங்களும், களேபரமும் ஆரம்பமாக பீம்சிங் விக்கித்து அமர்ந்திருந்தான்.

அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் சற்று தள்ளி நின்றிருந்த ஒரு காவல் வீரனிடம் கவலையுடன் கேட்டார். “என்ன ஆச்சு?”

”வரப் போகிற டெல்லி விமானத்துல வெடிகுண்டு வெச்சிருக்கிறதா எவனோ ஒருத்தன் போன் பண்ணியிருக்கான். முக்கால் வாசி புரளியாய் தான் இருக்கும். ஆனாலும் அலட்சியமாய் இருக்க முடியாதில்லையா?” என்று காவல் வீரன் அவரிடம் தாழ்ந்த குரலில் சொன்னான்.

பீம்சிங்கும், அவன் உணர்விலிருந்து கவனித்துக் கொண்டிருந்த காளிங்க சுவாமியும் அதிர்ந்தார்கள். காளிங்க சுவாமி பீம்சிங்கிடம் சொன்னார். “தயவு செய்து இனி இந்த மாதிரி எதையும் நினைக்காதே....”

பீம்சிங்குக்கு அந்த ரத்தினக்கல்லை ஏன் எந்த எதிர்ப்புமில்லாமல் நாகராஜ் பெருந்தன்மையாகக் கொடுத்தனுப்பினான் என்று புரிவது போலிருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்

இவ்வார இறுதியில் வெளியாகின்றன...





5 comments:

  1. Beemsingh oda yennangal ah nenachi sirippa control panna mudila.., semmmaa,,,

    Appo beemsingh kaalinga swami kita kodukkaama avane thookkitu poiduvaan oh? Or avanoda viruppa dheivam aana anumaar kovil undiyal la pottuduvaan oh?

    ReplyDelete
  2. The old couple are so nice.

    ReplyDelete
  3. பரந்தாமன் மற்றும் அலமேலு தம்பதியினர் தன் பேரனை சந்திக்கும் காட்சிக்கு தான்‌ காத்திருந்தேன்...வந்து விட்டது....
    ஆரம்பத்தில் அலமேலு எழாமல் தூங்கியதை கண்டு நானும் பயந்து விட்டேன்...

    ReplyDelete
  4. யோகி & மாய்ப்பொன்மான் என்ன விலை

    ReplyDelete
    Replies
    1. யோகி ரூ.800/- மாயப் பொன்மான் ரூ.250/-

      Delete