Monday, May 1, 2023

யாரோ ஒருவன்? 136



ல்யாணும் வேலாயுதமும் அன்றிரவு உறங்கவில்லை. கல்யாண் அவனுக்குத் தெரிந்த ரவுடி ஒருவனுக்குப் போன் செய்து அவனுடைய குடும்ப ரத்தினக்கல்லை எடுத்து அவனுடைய நண்பன் ஒருவன் ஒரு பாம்பாட்டிக்குத் தானமாகக் கொடுத்து விட்டான் என்றும் அந்தப் பாம்பாட்டியிடமிருந்து அதை மீட்க வேண்டும் என்றும் சொன்னான். சாதாரணமாகப் போய்க் கேட்டால் அந்தப் பாம்பாட்டி அதைத் தர மறுக்கலாம் என்றும், இது விஷயமாகப் போலீஸுக்குப் போக அவனுக்கு விருப்பமில்லை என்றும். கொஞ்சம் மிரட்டி வாங்க முடியும் என்று நினைப்பதாகவும் சொன்னான்.

ரவுடி “ஒன்னும் கவலைப்படாதீங்க சார். போய் மிரட்டி வாங்கிக் கொடுக்கிறது என் பொறுப்பு. அந்த பாம்பாட்டி விலாசம் உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டான்.

“புலியகுளத்தில் இருக்கிறான்னு தெரியும். சரியான விலாசம் தெரியலை”

“ஏரியா தெரியுமில்ல. அது போதும் சார். நாளைக்கு காலைல வேற ரெண்டு பேரையும் கூட்டிகிட்டு வர்றேன்... போய் பேசுவோம்”

“அவன் எங்கேயாவது போயிடறதுக்கு வாய்ப்பிருக்கு. அதனால காலைல சீக்கிரமே போனா நல்லாயிருக்கும்.”

“கவலைப்படாதீங்க சார். காலைல ஆறு மணிக்கு உங்க வீட்டுல இருப்போம். நீங்களும் தயாராய் இருங்க. போயிடுவோம்”

ரவுடி சொன்னது போலவே காலை ஆறு மணிக்கு வேறு இருவரையும் கூட்டிக் கொண்டு வந்தான். அவர்கள் குடி போதையில் கண்கள் சிவந்திருந்தார்கள். மிரட்டப் போகும் போது இது போன்ற ஆட்களும் கூட இருப்பது பயமுறுத்துவதற்கு  உதவும் என்று வேலாயுதம் மனதினுள் சொல்லிக் கொண்டார். அவர்கள் கிளம்பிப் போய்ப் புலியகுளத்தில் அந்தப் பாம்பாட்டியின் வீட்டை அரை மணி நேரத்தில் கண்டுபிடித்து விட்டார்கள். ஆனால் பாம்பாட்டியின் வீடு பூட்டிக் கிடந்தது.

பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாள். “நேத்து ராத்திரியே அந்த ஆள் வீட்டைக் காலி செஞ்சுட்டுப் போயிட்டாரே....”

அதிர்ச்சியுடன் வேலாயுதம் கேட்டார். “எங்கே போனான்னு சொன்னானா?”

“இல்லையே. அவசர அவசரமா தான் காலி பண்ணிட்டுப் போனார். கேட்டதுக்கு சொந்த ஊருக்கே போறதாய் சொன்னார்.”

பாம்பாட்டியின் சொந்த ஊர் எது என்று அந்தப் பாட்டிக்கும் தெரிந்திருக்கவில்லை. வேலாயுதம் நேற்றிரவே வந்து பார்க்கும் புத்தி வரவில்லையே என்று நொந்து கொண்டார்.

கூட்டிக் கொண்டு வந்ததற்கு ரவுடிகளுக்குப் பணத்தைத் தந்து விட்டு அவர்கள் சோர்வோடு வீடு திரும்பிய போது மேகலாவும் தர்ஷினியும் தங்கள் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டு வெளியேறத் தயாராய் இருந்தார்கள்.

அதிர்ச்சியுடன் கல்யாண் கேட்டான். “எங்கே கிளம்பிட்டீங்க?”

“எங்கண்ணா வீட்டுக்கு” என்றாள் மேகலா. அவள் அண்ணா என்றது அவளது பெரியம்மா மகனை. அவன் பத்து மைல் தொலைவில் தான் இருக்கிறான்.

“ஏன்?”

“வயசுப் பொண்ணை வெச்சுகிட்டு இந்த வீட்டுல இருக்க முடியாது”

கல்யாண் கோபத்தோடு கேட்டான். “ஏன்?”

“எதாவது நாகரத்தினக்கல் கிடைக்கும்னா பெத்த பொண்ணைக் கூட வித்துடக் கூடிய ஆளுக நீங்கன்னு நேத்தே தெரிஞ்சுடுச்சு. உங்கள நம்பி இந்த வீட்டுல நாங்க இருக்க முடியாது. அதுவுமில்லாம ஒரு பாவப்பட்டவன் சாபம் இருக்கற இடத்துல வாழ நாங்க விரும்பல”

கோபத்தில் கொதித்த கல்யாண் மகளைப் பார்த்தான். தர்ஷினி எங்கேயோ பார்த்தாள். மகள் மீது உயிரையே வைத்திருந்த கல்யாண் என்ன செய்வது என்று தெரியாமல் நடுங்கியபடி வேலாயுதத்தைப் பார்த்தான்.

வேலாயுதம் மருமகளிடம் சொன்னார். “பக்கத்து வீட்டுக்காரன் அவனுக்கிருக்கற சக்திகளை வெச்சு எப்படியும் படம் காட்ட முடிஞ்சவன். அவன் சொன்னதை நம்பி முட்டாள்தனமான வேலை எதுவும் செய்யாதேம்மா...”

மேகலா சொன்னாள். “இங்கேயே இருந்தா சாப்பாட்டுல விஷம் வெச்சுடுவேன்”

வேலாயுதம் வாயடைத்துப் போய் நின்றார். வெளியே கால்டாக்ஸி வந்து நிற்க தாயும், மகளும் தங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள்.   

தலையில் கைகளை வைத்துக் கொண்டு கல்யாண் உட்கார்ந்து கொண்டான். நிறைய நேரம் அப்படியே உட்கார்ந்திருந்த மகனுக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று புரியாமல் விழித்த வேலாயுதம் யதேச்சையாக ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பக்கத்து வீட்டின் உரிமையாளரிடம் வீட்டு சாவியைத் தந்து விட்டு நாகராஜும், சுதர்ஷனும் கார் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

“பக்கத்து வீட்டுக்காரன் வீட்டைக் காலி பண்ணிட்டு கார் ஏறிகிட்டிருக்காண்டா” வேலாயுதம் சொன்னார்.  அவருக்கு அவன் மாதவனும் அல்ல. நாகராஜும் அல்ல. என்றுமே பக்கத்து வீட்டுக்காரன் தான்.

கல்யாண் விரக்தியுடன் சொன்னான். “மன்னிச்சுட்டேன்னு சொல்லி சொல்லியே வந்த வேலையைக் கச்சிதமா முடிச்சுட்டுப் போறான்...”

வேலாயுதத்திற்கு அவன் பாம்புகளை என்ன செய்திருப்பான் என்ற சந்தேகம் எழுந்தது. இந்தக் காரில் அவையும் போயிருக்குமோ என்ற கேள்வி எழ மகனிடம் அந்தக் கேள்வியைக் கேட்க நினைத்தவர் மகன் முகத்தைப் பார்த்து வாயை மூடிக் கொண்டார்.


பீம்சிங் ஒரு காரில் கொச்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். அவன் கோயமுத்தூரிலிருந்தே விமானத்தில் கிளம்பியிருக்கலாம் என்றாலும் திட்டம் போடுகையில் அது ஆபத்தானதாக அவனுக்குத் தோன்றியிருந்தது. காளிங்க சுவாமி ஒரு மணி பன்னிரண்டு நிமிடங்கள் நாகராஜைத் தன் மந்திர சக்தியால் கட்டிப் போடுவது அந்த ரத்தினக்கல்லைத் திருடுவதைச் சுலபமாக்கும் என்றாலும்  அது முடிந்தவுடன் நாகராஜ் சும்மா இருக்க மாட்டான் என்றும் பீம்சிங்கை உடனடியாகத் தேடுவான், பின்தொடர்ந்து வருவான் என்றும் பீம்சிங் எதிர்பார்த்திருந்தான். பீம்சிங் எங்கிருக்கிறான் என்பதை நாகசக்தி மூலம் கண்டுபிடிப்பது நாகராஜுக்குச் சுலபமான வேலை என்பதால் எவ்வளவு தூரத்தில் இருக்கிறோமோ அவ்வளவு நல்லது என்று பீம்சிங் கணக்குப் போட்டான். அதனால் தான் கோயமுத்தூரிலிருந்து எவ்வளவு விரைவாக வெளியேற முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியேறத் திட்டமிட்டு அவன் கொச்சிக்குப் போக, முன்பே காரை ஏற்பாடு செய்திருந்தான். கொச்சியிலிருந்து புதுடெல்லி போவதற்கும் அவன் விமான டிக்கெட்டும் வாங்கி வைத்திருந்தான்.

ஆனால் இத்தனை முன்னெச்சரிக்கைக்கு அவசியமேயிருக்கவில்லை.  பீம்சிங் எடுத்து வர வேண்டிய ரத்தினக்கல்லைத் தருவதற்காகவே நாகராஜ் வெள்ளித் தட்டில் அதை வைத்துக் காத்திருப்பான் என்று சிறிதும் பீம்சிங் எதிர்பார்த்திருக்கவில்லை. நாகசக்தி வாய்ந்தவனிடமிருந்து கடும் முயற்சி செய்து கொண்டு போயிருக்க வேண்டிய வேலை அவன் எந்த முயற்சியும் எடுக்காமல், எதிராளியாகவே எடுத்துக் கொடுத்து, அவன் கொண்டு போகும் வினோதமான சிறுபிள்ளைத் தனமான விளையாட்டு போல ஆகி விட்டது. அவன் வாழ்நாளிலேயே இந்த மாதிரியான வேலையைச் செய்ததில்லை. அவனுக்கு மட்டுமல்ல உலகில் எந்தத் திருடனுக்கும் இப்படியொரு வினோத அனுபவம் கிடைத்திருக்காது. எடுத்துக் கொண்டு வெளியே வந்த பின்னால் அவ்வப்போது காளிங்க சுவாமியின் பார்வையை அவன் தனக்குள் உணர்ந்தாலும் அந்தப் பார்வையும் முந்தைய தீட்சண்யத்தில் இருக்கவில்லை. அவரையும் நாகராஜ் நிறையவே குழப்பியிருக்கிறான் போலத் தெரிந்தது.

மைல்கல் ஒன்று கொச்சி 19 கிலோமீட்டர் என்று காட்டியது. இருபது நிமிடத்தில் கார் எப்படியும் போய்ச் சேர்ந்து விடும். டெல்லி விமானம் ஏற இன்னும் மூன்றரை மணி நேரம் இருக்கிறது. அவன் திட்டமிடும் போதே கார் டயர் பஞ்சர் ஆவது போன்ற எதிர்பாராத நிகழ்வுக்கும் சேர்த்தே திட்டமிடுவான். கார் டயர் அதிமுக்கியமான நேரங்களில் பஞ்சர் ஆவது எப்போதும் நடக்கக்கூடியதே. அப்படி பஞ்சர் ஆனால் ஸ்டெப்னி மாற்றி விட்டுப் போவதில் சில நிமிடங்கள் கண்டிப்பாகத் தாமதம் ஆகலாம்....

திடீர் என்று கார் டிரைவர் வண்டியை நிறுத்தினான். பீம்சிங் கேட்டான். “என்ன ஆச்சு?”
                                           
“டயர் பஞ்சர் ஆயிடுச்சு.... போன வாரம் தான் மாத்தினேன். எப்படின்னே தெரியலை” என்றபடி டிரைவர் ஆச்சரியத்துடன் யோசித்தபடி கீழே இறங்க பீம்சிங் தன்னையுமறியாமல் யோசித்தான். “நான் டயர் பஞ்சர் ஆவது பற்றி நினைத்துக் கொண்டிருந்தது தான் உண்மையிலேயே அப்படி ஆகக் காரணமாய் இருக்குமோ?” அவன் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே நினைத்தபடியே அந்த நிகழ்வு நடந்ததும், போன வாரம் தான் புதிய டயர் மாற்றியிருப்பதாக அந்த டிரைவர் சொன்னதும் பீம்சிங் மனதை நெருட ஆரம்பித்தது.     

(தொடரும்)
என்.கணேசன்



10 comments:

  1. பீம்சிங் கையில் விசேச நாகரத்தினம் இருப்பதால் தான் அவன் நினைத்தது நடக்கிறது...என்று நினைக்கிறேன்.... இந்த இடத்தில் இருந்து விஷேஷ நாகரத்தினம் தன் பயணத்தை தொடங்க போகிறது...

    ReplyDelete
  2. Sir
    Please tell me the total chapters of this novel

    ReplyDelete
  3. Sir, you started progressing well. I have to learn many things from you as how you are focusing on what you could do.. it is been a decade I did know you but your progress is impressive wherein I am behind what I had been. It is better not to run behind what we like rather focusing on our energy in learning what we are doing is the best way for a normal person. Gudos for your efforts and I now my head to your dedication. Thank you Sir.

    ReplyDelete
  4. Naga sakthi
    Ninaivae seyalaagum

    ReplyDelete
  5. 'யோகி' - மாய பொன்மான் '- வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  6. டபுள் நாவலா ...நான் ஒரே நாவல் என்று நினைத்தேன்.மகிழ்ச்சியான தகவல்.நன்றி.வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. இங்கயே இருந்தா சாப்பாட்டுல விஷம் வெச்சுடுவேன், megala sonnathum bakkkunu sirichiten,

    நாகரத்தினம் தான் இனிமேல் முடிவு பண்ண போகுது, யார்கிட்ட போகனும் னு..

    ReplyDelete
  8. விசேஷ மானசலிங்கம் & மைத்ரேயன் போல நாகரத்தினமும் யாரோட கைக்கும் கிடைக்க போறதில்ல..

    ReplyDelete
  9. KEDUVAAN KEDU NINAIPPAAN == NINAIPPADUVE NADAKKUM

    ReplyDelete