Thursday, April 27, 2023

சாணக்கியன் 54

லெக்ஸாண்டர் அடுத்ததாக எங்கே யார் மீது போர் தொடுப்பது என்பது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தான். இடது புறம் செல்வதா, வலது புறம் செல்வதா, இல்லை தெற்கு நோக்கிச் செல்வதா என்று அவர்கள் கருத்தை அறிய விரும்பினான். இது போன்ற ஆலோசனைகளில் எப்போதும் ஓரிரு புதியவர்களாவது இருப்பது வழக்கம். புதிதாக வென்ற பகுதிகளைச் சார்ந்தவர்களாகவோ, அந்தப் பகுதிகளுக்கு அடுத்துள்ளவர்களாகவோ அந்தப் புதியவர்கள் இருப்பார்கள். அவர்கள் அதற்கடுத்து உள்ள பகுதிகளின் நிதி, படை நிலவரங்களை நன்றாக அறிந்தவர்களாகவும், பலம், பலவீனங்களைச் சரியாக சொல்ல முடிந்தவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப் பட்டவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுத்து அலெக்ஸாண்டர் அவர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வான். இந்த முறை அப்படிப் புதியவராக அவர்களுடன் சேர்ந்திருந்தவன் ஒரு சிற்றரசனான பாகலன்.

 

பாகலன் அலெக்ஸாண்டரிடம் மகதத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். “... சக்கரவர்த்தி. ஏராளமான செல்வமும், எப்பகுதியையும் வெல்ல முடிந்த படைபலமும் கொண்ட பகுதியாக மகதம் இருக்கிறது. ஆனால் ஒரு உண்மையை நான் உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். படைபலமென்று பார்த்தால் தங்களிடம் இப்போதிருக்கும் படைபலத்திற்கு ஐந்து மடங்காவது மகதத்தின் படைபலம் இருக்கும். பெரும்படையும், பெருஞ்செல்வமும் மகதத்தின் பலம் என்று சொன்னால் குடிமக்களின் கடும் அதிருப்தி மகத மன்னனின் பலவீனம் என்று சொல்லலாம்.  ஆனாலும் மகதத்தை வெல்வது சுலபமல்ல...”

 

பாகலன் சொன்ன விஷயங்கள் அலெக்ஸாண்டரின் ஆர்வத்தைத் தூண்டி விட்டன. சுலபமல்ல என்ற தகவல் இதுவரை அவனை எப்போதும் தடுத்து நிறுத்தியதில்லை. சுலபமாக எதையும் அவன் பெற்று விடவில்லை. சுலபமானதைச் செய்து முடிக்க அலெக்ஸாண்டர் தேவையில்லை... அவன் புருஷோத்தமனைப் பார்த்தான்.

 

புருஷோத்தமன் அலெக்ஸாண்டரிடம் சொல்ல ஆரம்பித்தார். “பாகலன் சொன்னதில் மிகைப்படுத்தல் இல்லை. மகதத்தில் பெருஞ்செல்வமும், பெரும்படையும், மக்களின் கடும் அதிருப்தியும் உண்மையே. தற்போது அரியணையில் இருக்கும் தனநந்தனின் தந்தை மகாபத்மநந்தன் முன்னொரு காலத்தில் மகத அரசனுக்கு நாவிதனாக இருந்தவன். தோற்றத்தில் அழகாய் இருந்த அவன் அரசிக்கு நெருக்கமாகி அரசனிடம் செல்வாக்கு பெற்றவன். பின் சிறிது காலத்தில் அரசனையே கொன்று அரசனின் இரண்டு பிள்ளைகள் சிறுவர்கள் என்பதால் அவர்கள் பெயரில் பாதுகாவலனாக ஆட்சி புரிகிறேன் என்று சொல்லி அரசாட்சியைக் கையில் எடுத்துக் கொண்டவன். மேலும் சில காலம் சென்ற பிறகு அந்தப் பிள்ளைகளையும் கொன்று விட்டு தானே முடிசூடிக் கொண்டவன். வஞ்சகனாக இருந்த போதிலும் சாமர்த்தியமும், அறிவும் கூட இருந்ததால் தன் நிலைமையை வலுப்படுத்திக் கொண்டு, அவன் ஆண்டு, இறந்து போன பின் அவன் மகன்கள் வரிசையாக அரசாண்டார்கள். இப்போதுள்ள தனநந்தன் அவனுடைய கடைசி மகன்.  தனநந்தன் ஆணவம் பிடித்தவன். தன் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பவன். அவனுடைய அதிர்ஷ்டம் அவனுக்குத் திறமையான அமைச்சர்கள் கிடைத்திருக்கிறார்கள். அவர்கள் திறமையால் நிர்வாகம் சிறப்பாக இருக்கிறது. ஆனால் அவர்களாலும் தனநந்தன் பேராசையால் அத்து மீறி விதிக்கும் வரிகளையும், அதனால் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியையும் கட்டுப்படுத்த முடியவில்லை…

 

அலெக்ஸாண்டர் யோசனையுடன் கேட்டான். ”பாகலன் சொல்வது போல மகதப்படையின் அளவு நம் படைகளைப் போல் ஐந்து மடங்கு இருக்குமா?”

 

புருஷோத்தமன் சற்று யோசித்து விட்டுச் சொன்னார். “இருக்கலாம்.”

 

அலெக்ஸாண்டர் அந்தத் தகவலால் உற்சாகம் இழந்து விடவில்லை. அவன் புன்னகையுடன் சொன்னான். “போர்க்களத்தின் வெற்றி தோல்விகள் முதலில் நம் மன உறுதியால் தீர்மானிக்கப்படுகின்றன. மனம் உறுதியாகத் தீர்மானித்ததை நிறைவேற்ற நம் அறிவுகூர்மையும் உதவுமானால் தானாக வெற்றிக்கான வழி பிறக்கிறது. நம் பலம், எதிரியின் பலவீனம் இரண்டையும் முழுமையாகப் பயன்படுத்தி முழு உற்சாகத்துடன் முயன்றால் வெற்றி நிச்சயமாகிறது. இது தான் நான் இது வரை கற்ற பாடம். அதனால் படையின் எண்ணிக்கைகளுக்கு நாம் அளவுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டியதில்லை…”

 

கொய்னஸ் மகதம் மீது படையெடுக்கப் போகும்  செய்தியைக் கேள்விப்பட்டவுடன் உற்சாகம் இழந்தான். அவனைப் போலவே அந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட பல யவன வீரர்கள் உற்சாகம் இழந்ததையும் அவன் கண்டான். மகதத்தின் படை வலிமை பற்றி மற்றவர்கள் கதை கதையாய் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஐந்து மடங்கு படை வலிமை கொண்டதாக மகதம் இருக்கும் தகவல் தான் திரும்பத் திரும்ப பேசப்பட்டது.

 

அன்றிரவு மைனிகாவைச் சந்தித்த போது அவன் சிந்தனைவயப்பட்டிருந்தான். அவனை ஆரத்தழுவியபடி மைனிகா கேட்டாள். “அப்படி என்ன சிந்தனை?”

 

அவளிடம் அவன் உண்மையான காரணத்தைச் சொல்ல விரும்பவில்லை. “ஒன்றுமில்லை” என்று சொன்னான்.

அவனுடைய உற்சாகக்குறைவுக்குக் காரணத்தை மைனிகாவால் யூகிக்க முடிந்தாலும் அவள் அவனை வற்புறுத்தி எதுவும் கேட்கவில்லை. குரலில் பெரும் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு அவள் மெல்லச் சொன்னாள். ‘நானும் இன்று வருத்தமாகத் தான் இருக்கிறேன். நாம் பிரியும் காலம் வந்து விட்டது மாவீரரே”

 

கொய்னஸ் திடுக்கிட்டான். “ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

 

“உங்கள் படை மகதம் நோக்கி கிளம்பவிருப்பதாக நான் கேள்விப்பட்டேன்....”

 

“அதனால் என்ன?”

 

“மகதப்படைகள் அளவில் பிரம்மாண்டமானவை என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். போர் கடுமையாகவே இருக்கும்....”

 

“அதனால்...?”

 

மைனிகா முதலில் பதில் எதுவும் சொல்வதைத் தவிர்த்தாள். பின் அவன் வற்புறுத்திய பிறகு சொன்னாள். “போரின் முடிவும், விளைவுகளும் உங்களுக்குச் சாதகமாக இருக்க வழியிருப்பதாகத் தோன்றவில்லை. அதைக் கண்டு சகிக்கும் மனபலமும் எங்களுக்கு இல்லை. அதனால் நீங்கள் மகதம் நோக்கிக் கிளம்பும் நாளில் நானும் என் தோழிகளும் திரும்பிச் செல்வதாகத் தீர்மானித்திருக்கிறோம் மாவீரரே”

 

கொய்னஸ் சொன்னான். “மைனிகா நீ எங்கள் சக்கரவர்த்தியின் திறமையையும், வலிமையையும் அறியாதவளாக இருப்பதால் போரின் முடிவை நீ சந்தேகிக்கிறாய்? தோல்வி காணாதவர்கள் நாங்கள். இனியும் தோல்வி காணப்போவதில்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது”

 

மைனிகா அவன் கண்களைப் பார்த்தபடி உணர்வுபூர்வமாகச் சொன்னாள். ”அந்த நம்பிக்கை பலிக்கட்டும் என்றே நான் பிரார்த்திக்கிறேன். ஆனால் எந்த நம்பிக்கையும் யதார்த்தத்திற்கு எதிர்மாறானதாக இருக்கக்கூடாது அல்லவா? உங்கள் படை வலிமைக்குச் சிறிதும் இணையில்லாத சிறிய படையான கத் படையுடன் போரிட்ட போதே ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நீங்கள் பறி கொடுத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் பல மடங்கு வலிமையுள்ள மகதப் படையுடன் போரிடுகையில் உங்கள் நம்பிக்கைக்கேற்ப நீங்கள் வெற்றியே பெற்றாலும் அதைக் கொண்டாட உங்களில் எத்தனை வீரர்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்? நான் வீரம் அறியேன். போர்த் தந்திரங்களும் அறியேன். ஆனால் தாசி குலத்தில் பிறந்தவள் என்ற போதும் நான் யதார்த்தம் புரிந்தவள். என் சிற்றறிவுக்கு மகதம் ஒரு மயான பூமியாகவே தெரிகிறது. என்னை மன்னித்து விடுங்கள். இன்றில்லா விட்டாலும் என்றாவது பிரிய வேண்டியவர்கள் நாம். நல்ல நிலைகளில் இருக்கும் போதே நல்ல நினைவுகளுடன் பிரிவது உத்தமம் என்று தோன்றுகிறது....”

 

அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அன்று உடலுறவில் ஈடுபடும் மனநிலையும் இருவருக்கும் இருக்கவில்லை. அவனை அணைத்தபடியே அவள் உறங்கி விட்டாள். அவன் மனதில் பல எண்ணங்களும், உணர்வுகளும் போராடிக் கொண்டிருந்தன. அவன் வார்த்தைப்படுத்தாமல் மனதில் வலிமையாக உணர்ந்த ஒரு நெருடலுக்கு அவள் வார்த்தைகள் கொடுத்து தெளிவுபடுத்தியிருக்கிறாள்.   

 

அவள் கேட்ட கேள்வி திரும்பத் திரும்ப அவன் மனதில் எதிரொலித்தது. ”பல மடங்கு வலிமையுள்ள மகதப் படையுடன் போரிடுகையில் உங்கள் நம்பிக்கைக்கேற்ப நீங்கள் வெற்றியே பெற்றாலும் அதைக் கொண்டாட உங்களில் எத்தனை வீரர்கள் உயிரோடு இருப்பீர்கள் என்று யாருக்குத் தெரியும்?”    

 

வெற்றி எங்களுக்கே என்று வீரமுழக்கமிடும் அலெக்ஸாண்டரால் கூட இதற்குப் பதில் சொல்ல முடியாதே. எத்தனை வீரத்துடன் போராடினாலும் இருபக்கமும் கடுமையான உயிர்ச்சேதம் இருக்கப் போவது நிச்சயமே அல்லவா? இலாப நஷ்டங்களைக் கணக்குப் போட்டு முடிவெடுத்து வாழும் வித்தை தெரிந்திருந்த இந்த தாசியே கூட இனி இவர்களுடன் இருப்பது புத்திசாலித்தனம் அல்ல என்று முடிவெடுத்துப் பிரிய நினைக்கிறாள் என்பதே எல்லா வாதங்களையும் மீறி முகத்தில் அறையும் யதார்த்தம் அல்லவா? அவள் நேரடியாக நீ உயிரோடிருப்பாய் என்பது நிச்சயமா என்று கேட்கவில்லை. ஆனால் கேட்காத அந்தக் கேள்வியை அவன் உணராமல் இல்லை.  இந்தக் கேள்வி கேட்கும் எவனும் வீரன் அல்ல, கேட்டுக் கொண்டு இந்தத் தொழிலுக்கு வரவும் முடியாது என்ற போதும் அவனால் ஒருவித சலிப்பை உணராமல் இருக்க முடியவில்லை. இப்படித் தொடர்ந்து போரிட்டபடி போய்க் கொண்டே இருப்பதற்கு முடிவு தான் என்ன என்ற கேள்வி பிரதானமாக எழுந்தது. குடும்பத்தினர் நினைவுக்கு வந்தார்கள். முக்கியமாக மகள் நினைவுக்கு வந்தாள். அவள் முகம் இப்போது எப்படி இருக்கும் என்று கூட அவனால் யூகிக்க முடியவில்லை...

 

(தொடரும்)

என்.கணேசன்

2 comments:

  1. மைனிகா மற்றும் அவள் தோழிகள் திட்டமிட்டபடியே காரியத்தை சாதித்து அதில் வெற்றியும் பெற்று விட்டார்கள்....
    பாரதத்தின் வெற்றியில் மைனிகாவின் பங்கும் முக்கியமானது...

    ReplyDelete
  2. மகத நாட்டில் அலெக்சாண்டர் தோற்க கூடாது, மகதம் மட்டுமாவது அவர் ஜெயிக்க வேண்டும்.,

    தனநந்தன் உடைய ஆணவம் அழியனும், அதுக்காகவாவது அலெக்சாண்டர் தான் வெற்றி பெறனும்..

    ReplyDelete