Monday, March 27, 2023

யாரோ ஒருவன்? 131



நாகராஜ் தொடர்ந்து சொன்னான். “அவனுக்கு மனுஷங்கள்ல அந்த சுவாமிஜியும், விலங்குகள்ல பாம்புகளும் மட்டும் தான் உறவும் நட்புமாய் இருந்தாங்க. ஹிமாச்சல் பிரதேசத்தில் காடுகள், கிராமங்கள்னு பயணத்துல  நாலு வர்ஷம் போச்சு. போற பக்கம் சுவாமிஜி தியானத்துலயும், பக்தர்கள் கிட்டயும் காலம் கழிச்சப்ப அவன் பாம்புகளோட விளையாடிகிட்டிருப்பான். எங்கே போனாலும் அவன் பாம்புகளை மோப்பம் கண்டுபிடிச்சுடுவான். பாம்புகளும் அவன் இருக்கற பக்கம் ஓடி வந்துடும். சில பாம்புகள் அவன் கூட விளையாடறப்ப கடிச்சதும் உண்டு. ஆனால் அதெல்லாம் அவன் உடம்பை திடகாத்திரமா ஆக்குச்சே ஒழிய ஆரோக்கியத்த பாதிக்கலை. பிறகு தேவ்நாத்பூர் கிராமத்துல சுவாமிஜி ஒரு ஆசிரமம் அமைச்சுகிட்டார். நாடோடி வாழ்க்கை முடிஞ்சு ஆசிரம வாழ்க்கை ஆரம்பிச்சுது. ஆசிரமத்துல அவன் சுவாமிஜி  சொல்ற வேலைகளை எல்லாம் செய்வான். ஓய்வான நேரத்துல பாம்புகளோட விளையாடுவான். ராத்திரிகள்ல கனவு கண்டு அழுவான். அவன் அழுகையை சுவாமிஜியும் நாகங்களும் மட்டும் தான் கேட்பாங்க. சுவாமிஜிக்கு அவன் கனவுல பேசற தமிழ் புரியாது. ஆனால் அவர் ரொம்ப சக்தி வாய்ந்தவர். அவருக்கு எதையும் புரிஞ்சுக்க மொழிகள் தேவையில்லை. இருந்த உறவுகள் தொலைஞ்சு போனப்ப, உறவுகளைத் துறந்த ஒரு சுவாமிஜி அவனுக்கு ஒரு தந்தை மாதிரி அமைஞ்சது இறைவன் அருள் தான்.... அவர் சாகற வரைக்கும் அவனுக்கு அப்படியே தான் இருந்தார். காலப் போக்குல பாம்புகள் அவனுக்கு நாகரத்தினங்கள் தந்து நாகசக்திகளை வாரி வழங்குச்சு. நாகராஜாய் அவனால பழையதெல்லாம் தெரிஞ்சுக்கவும், ஜீரணிக்கவும் முடிஞ்சாலும் தூக்கத்துல அவன் மாதவனாய் அதையெல்லாம் ஜீரணிக்க முடியாம நிறையவே கஷ்டப்பட்டுட்டான்

சுவாமிஜிக்கு அந்திமக் காலம் நெருங்கறது தெரிஞ்சு ஒரு நாள் காட்டுக்குத் தவம் பண்ணப் போறப்ப நாகராஜையும் கூட்டிகிட்டு போனார். ”உன் முன்னாடி இப்ப ரெண்டு வழி இருக்கு. நீ மாதவனாய் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப் போறதுன்னா போகலாம். உன் நாகசக்திகள் இருக்கிற வரைக்கும் உனக்கு வேண்டியபடி சிறப்பான வாழ்க்கையை அமைச்சுகிட்டு வாழலாம். இல்லாட்டி நாகராஜாய் வாழ்றதானா இந்த ஆசிரமத்தை என் காலத்துக்கப்பறம் நீ தான் நடத்தி தர்ம காரியங்களை சிறப்பா நடத்தணும். நீ ஒரு முடிவெடுக்கணும்னு சொன்னார்.”

”அவன் நல்லா யோசிச்சான். பெத்தவங்க அவன் இறந்துட்டதாய் நம்பி எப்பவோ மனசைத் திடப்படுத்திகிட்டு வாழ்றாங்க. திரும்பிப் போனாலும் அவங்க அவன் கூட வாழ முடிஞ்ச காலம் அதிகமில்லை. அவன் காதலிச்ச பொண்ணு அவன் நண்பனைக் கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்துகிட்டிருக்கா. அவனுக்குப் பிறந்த குழந்தையும் ஆரம்பத்திலிருந்தே அந்த மனுஷனையே அப்பான்னு நினைச்சு வாழ்ந்துகிட்டிருக்கான். மாதவனுக்காக காத்திருக்கிறவங்களும் இல்லை. அவனால மாத்த முடிஞ்ச நிலைமைகளும் எதுவுமில்லை. உருவத்துலயும் அவன் மாதவனாய் இல்லை. அவனுக்காகக் காத்துகிட்டிருக்கற உறவுகளும் இல்லை. நட்புகளும் இல்லை. மாதவனாய் அவன் உணர்ந்ததெல்லாம் கசப்புகளும், வேதனைகளும், ரணங்களும் தான்.   அவன் மாதவனாய் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிப் போக விரும்பல. அதனால அவன் நாகராஜாகவே வாழ்க்கையைத் தொடர விரும்பறதா சொன்னான்.”

சுவாமிஜி அவனுக்கு ஞானோபதேசம் தந்தார். அவரோட தவ வலிமையால அவனுக்கு மற்ற சக்திகளையும் மந்திரோபதேசங்கள் செஞ்சு சொல்லிக் குடுத்தார். அவன் மனசுல இருந்த பழைய ரணங்களையும், துக்கங்களையும், உறவுகளையும்  முடிச்சுகிட்டு வந்து அடுத்த வர்ஷம் ஒரு குறிப்பிட்ட நாள் துறவியாய் தீட்சை வாங்கிக்க சொன்னார். சொல்லிட்டு சில நாள்கள்ல அவர் சமாதியடைஞ்சுட்டார். அவர் குறிப்பிட்ட நாள் அடுத்த திங்கட்கிழமை வருது. அதனால பழைய கணக்குகளை முடிச்சுகிட்டு நான் நாளைக்குக் கிளம்பறேன்...”

அங்கே ஒரு மயான அமைதி குடிகொண்டது. அவன் தான் மாதவன் என்றாலும், அவன் இனியும் மாதவனாய் இருக்க விரும்பவில்லை, அவன் பழைய கணக்குகளையும், உறவுகளையும் முடித்துக் கொள்ள வந்திருக்கிறான் என்ற தெளிவான செய்தி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாய் பாதித்தது.

அவன் தொடர்ந்தான். “சுவாமிஜி நாகராஜ் அவரோட இருந்த காலங்கள்ல செய்த வேலைகளுக்கெல்லாம் அவ்வப்போது ஒரு சம்பளம் மாதிரி அவன் அக்கவுண்ட்ல போட்டுகிட்டே வந்திருந்தார். அவர் சமாதி அடையறதுக்கு முன்னால் அதை அவன் கிட்ட ஒப்படைச்சார். பதிமூன்று லட்சத்து நாற்பத்தைந்தாயிரத்து சில்லறை இருந்துச்சு. பழைய கணக்குகளை நேர் பண்ண வந்த நாகராஜ் முதல்ல மாதவனோட அப்பா கிட்ட ஒரு கதை சொல்லி அந்தப் பணத்தை அவர் அக்கவுண்டுக்கு அனுப்பிச்சுட்டான். மகனாய் அவங்க கூட இருந்து அவன் ஆறுதல் தர முடியாட்டியும் சம்பாதிச்ச பணத்தையாவது அவங்களுக்குக் கொடுக்க முடிஞ்சதுல அவனுக்குச் சின்னத் திருப்தி. நாகராஜாய் அவன் அவங்களுக்குக் கோடிக்கணக்குல தந்துட முடியும்னாலும் அது தர்மம் தர்ற மாதிரியாயிடும்அவன் அப்பா யார் கிட்டயும் எப்பவும் தானதர்மம் வாங்கி வாழ்ந்தவரில்லை. அதனால அவன் வேலை செஞ்சு சம்பாதிச்ச காசை மட்டும் மகனாய் அவங்கப்பாவுக்குத் தந்தான். அவன் போன நாள் அவங்கம்மா அவனுக்கு திவச நாள் சமையல் செஞ்சிருந்தாங்க. அவங்க மகனோட நண்பனா அறிமுகப்படுத்திகிட்டுப் போன அவனை சாப்பிட்டுட்டு போகச் சொன்னாங்க. சொந்த திவச நாள் சமையல் சாப்பிட்ட முதல் ஆள் மாதவனாய் தான் இருக்கணும். தாய் கையால் சமைச்ச சாப்பாட்டை அவன் கடைசியாய் சாப்பிட்டுட்டு அங்கிருந்து கோயமுத்தூர் வந்தான்.” சொல்கையில் அவன் குரல் கரகரத்தது.

சிறு மௌனத்திற்குப் பின் தொடர்ந்தான். “அவன் நினைச்சிருந்தா அவன் அவனைக் கொல்ல முயற்சி செய்த நண்பர்களை எப்பவோ பிச்சைக்காரங்களாக்கி இருக்கலாம். சாவே தேவலைன்னு நினைக்கிற அளவுக்கான வியாதிகளை உருவாக்கியிருக்கலாம். விபத்துகளை ஏற்படுத்தியிருக்கலாம். அதுக்கான அத்தனை கொடுமையும் அவங்க அவனுக்குச் செஞ்சிருக்காங்க. கொன்னதைக் கூட அவனால புரிஞ்சுக்க முடிஞ்சுது. ஆனால் அவன் அவங்கம்மாவுக்காகக் கடைசியாய் வாங்கின அந்தக் குங்குமச்சிமிழையும், அவன் காதலிக்காக வாங்கின வளையல்களையும் கீழே விழுந்திருக்கிறதைப் பார்த்தும் அதை எடுத்து அவன் சூட்கேஸில் போடாமல் அப்படியே அலட்சியமாய் வேணும்னே அவங்க விட்டுட்டு வந்ததை அவனால் ஜீரணிக்க முடியல. பெத்தவங்களைப் பார்க்கப் போனப்ப திடீர்னு அவனுக்கு மணாலில வாங்கின அந்தப் பொருள்கள் ஞாபகத்துக்கு வந்துச்சு. அவங்க அதை என்ன செஞ்சாங்கங்கறதை நாகராஜாய் நாகசக்தியைப் பயன்படுத்தித் தெரிஞ்சுகிட்டிருக்க முடியும்னாலும் நாகராஜாய் அந்தச் சக்தியைப் பயன்படுத்தப் போகாம மாதவனாய் அவன் நண்பர்கள் மணாலில இருந்து அள்ளிப் போட்டுகிட்டு எடுத்துகிட்ட வந்த சூட்கேஸ்ல அதிருக்கான்னு பார்த்தான். இருக்கல. பிறகு தான் அவன் சக்திகளைப் பயன்படுத்தி என்ன ஆச்சுன்னு பார்த்தப்ப நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பார்த்த காட்சி அவனுக்குத் தெரிஞ்சுது. மாதவனோட தாய் கையால எத்தனையோ நாள் சாப்பிட்டவங்க அவங்க. மாதவன் கடைசியாய் தாய்க்காக வாங்கிய பொருளையாவது அந்தத் தாய் கிட்ட அவங்க சொல்லிக் கொடுத்திருக்கலாம். அதைக்கூட அவங்க செய்யல. இத்தனையும் செஞ்சு இப்பவும் அதை ஒத்துக்கவோ, அதுக்காக வருத்தப்படவோ செய்யாத இந்த ஈனப்பிறவிகளுக்கு என்ன தண்டனை தந்தா அது சரியாயிருக்கும்னு தயவு செஞ்சு சொல்லுங்க. நடந்ததை எல்லாம் கதையாய் சொல்லாம நேர்ல பாக்கவே வெச்சாச்சு. நீங்களும் பார்த்துட்டீங்க. இப்ப இந்த நேரத்துல நாகராஜாய் உங்க முன்னாடி நிக்கறவன் விசேஷ நாகரத்தினத்தை அடைஞ்சு உச்ச சக்திகளைக் கையில் வெச்சிட்டிருக்கிறவன். அவனால் எதுவும் செய்ய முடியும். மாதவனுக்கு இவங்க செஞ்ச மாபாதகத்துக்கு என்ன தண்டனை தந்தா சரியாயிருக்கும்...”

சரத்தும், கல்யாணும், வேலாயுதமும் உள்ளூர நடுங்கினார்கள். அவன் வெறுமனே குற்றம் சாட்டிவிட்டுப் போக வரவில்லை, குற்றத்தைப் படமாகக் காட்டி தண்டித்து விட்டுப் போக விரும்புகிறான் என்பது புலனான போது திகிலடைந்தார்கள். அவன் சொல்வது போல இப்போது அவன் சர்வசக்தி வாய்ந்தவன். அவனால் எதையும் செய்ய முடியும் என்கிற நிலைமையில் இருக்கிறான்...

பீதி நிறைந்த அவர்கள்  மூவரின் முகத்தை மற்ற நால்வரும் திரும்பியும் பார்க்கவில்லை. விழிகள் தாழ்த்தி அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவன் என்ன தண்டனை தந்தாலும் அது அதிகம் என்று நியாய உணர்வுள்ள யாரும் சொல்ல முடியாது.

மற்றவர்கள் மனநிலையை அவர்கள் மூவரும் உணர முடிந்ததால் பீதி கூடியது. வேலாயுதம் மட்டும் நாகராஜின் சக்தியால் கட்டுண்டிரா விட்டால் வயதைப் பொருட்படுத்தாமல் அவன் காலில் விழுந்திருப்பார். அதனால் இந்த நான்கு பேரில் ஒருவராவது அதைச் செய்து நாகராஜின் மனதை இளகச் செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால் அவர்கள் நீதி உணர்வால் கட்டுண்டவர்களாக மன்னிப்போ, சலுகையோ கேட்க முடியாத நிலையிலிருந்தார்கள்...

                       

(தொடரும்)
என்.கணேசன்

7 comments:

  1. நாகராஜ் யார் என்பது குறித்து இப்போது தெரிந்து விட்டது.... குடும்பத்தினர் அவனை துறவியாக விடமாட்டார்கள்....

    ReplyDelete
  2. WHAT (GOOD OR BAD) WE GIVE TO OTHERS WILL COME BACK TO US. THEY WILL GET WHAT THEY DESERVED. NAGARAJ SAID THAT HE CAME BACK TO SETTLE THE OLD ACCOUNT WITH THEM. THEY NEVER REPENTED. HE WILL GIVE THEM WHAT THEY DESERVED.

    ReplyDelete
  3. "சொந்த திவச நாள் சமையல் சாப்பிட்ட முதல் ஆள் மாதவனாய் தான் இருக்கணும்" touching lines..

    Intha flash back laa madhavan oda parents therinthaa evloo varuthapaduvaanga, madhavan ku ipdi oru nilamai ah nu romba kashta paduvaanga...

    ReplyDelete
  4. The only punishment he will give them is to make them physically handicapped in wheelchair with no speaking ability for the rest of their natural life.

    ReplyDelete
  5. Intha Eanaprivikaluku Enna Thandanai Thanthaa Athu Sariyaai Irukkumnu Dhayavu Seithu Sollunga..........Maadhavanukku Avunga Sencha Maha Paadhakatthukku Enna Thandanai Thanthaa Sariyaai Irukkum ? .......... They should not be allowed to stand up and talk but allowed to crawl to bathroom or pushed in the wheelchair for their natural life. They never repented. They should get what they gave to Maadhavan. That is the law of nature.

    ReplyDelete
  6. மன்னிப்புத்தான் பெரிய தண்டனையா இருக்கும்.

    ReplyDelete
  7. Madhavan's each word touched my heart. Great novel.

    ReplyDelete