Thursday, March 23, 2023

சாணக்கியன் 49

லெக்ஸாண்டர் தொலைவிலிருந்து வரும் புருஷோத்தமனைக் கூர்ந்து பார்த்தபடி நின்றான். மேருநாதனுடன் மிகுந்த தளர்ச்சியுடன் நடந்து வந்து கொண்டிருந்த போதும் புருஷோத்தமனிடம் ஒரு தனி கம்பீரம் தெரிந்தது. யவனப்படையும், காந்தாரப்படையும் அவர்களைச் சூழ்ந்தபடி வந்து கொண்டிருந்தார்கள்.  

 

ஆம்பி குமாரனுக்கு புருஷோத்தமன் சரணடைந்து கைதியாக நடந்து வருவது பெருமகிழ்ச்சியைத் தந்தாலும் அவரைச் சங்கிலியால் பிணைத்து இழுத்து வராமல் நடக்க வைத்துக் கூட்டிக் கொண்டு வருவது பெரிய குறையாகவும் அவனுக்குத் தோன்றியது. பேச்சு வார்த்தைக்கு மேருநாதனை அனுப்பியிருக்க வேண்டியிருக்கவில்லை.  அனுப்பியதால் அல்லவா தோற்றவனைக் கட்டி இழுத்து வராமல் கௌரவமாக நடத்தி கூட்டிக் கொண்டு வர வேண்டியதாயிற்று. ஆனாலும் தன் மனதில் எழுந்த எண்ணத்தை வாய்விட்டு அலெக்ஸாண்டரிடம் சொல்ல அவனால் முடியவில்லை.

 

ஆனால் மேருநாதனுடன் வந்து கொண்டிருந்த புருஷோத்தமனின் மனமோ இப்படி வருவதையும் மிகுந்த அவமானமாக உணர்ந்தது. சரணடைந்து ஆயுதங்களை ஒப்படைத்து எதிரிகள் படை சூழ கைதியாக நடந்து வருவது சகிக்க முடிந்ததாய் இல்லை. எல்லாவற்றையும் விட அதிகக் கொடுமையாக அவர் உணர்ந்தது அலெக்ஸாண்டர் அருகில் ஆம்பி குமாரனைக் கண்டது தான். இதற்குப் பதிலாக இறந்தே போயிருக்கலாமே என்று அவர் மனம் ஒரு முறை ஓலமிட்டது. ஆனால் இப்போது எதுவும் செய்வதற்கில்லை…

 

தன் எதிரில் வந்து நின்ற புருஷோத்தமனை அலெக்ஸாண்டர் சலனமில்லாமல் அமைதியாகக் கூர்ந்து பார்த்தான். ஆம்பி குமாரன் முடிந்த அளவு முகத்தில் ஏளன உணர்ச்சியைக் கொண்டு வந்து பார்த்தான். புருஷோத்தமன் பார்வையோ ஆம்பி குமாரனின் பக்கமே திரும்பவில்லை. அந்த நீச்சனை அங்கீகரிக்கும் விதமாக எதைச் செய்யவும் அவர் விரும்பவில்லை.  கூர்ந்து பார்க்கும் அலெக்ஸாண்டரை அவரும் நேர் பார்வை பார்த்து நின்றார்.

 

அலெக்ஸாண்டர் அவர் தைரியத்தை மனதிற்குள் மெச்சினான். வெற்றி தோல்விகள் ஒரு வீரனுக்கு மிகவும் சகஜமே. ஆனால் தோல்வியிலும் கூனிக் குறுகிப் போய்விடாமல் அடுத்தது என்ன என்கிற தோரணையில் அவர் நின்ற விதம் அவனுக்குப் பிடித்திருந்தது. மாவீரர்களால் மட்டுமே முடிகிற தன்மை அது.

 

அலெக்ஸாண்டர் தன் மனதில் ஓடிய எண்ணங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டபடியே புருஷோத்தமனைக் கேட்டான். “உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய் புருஷோத்தமா?”

 

சற்று தள்ளி நின்றிருந்த சசிகுப்தன் முன்னுக்கு வந்து புருஷோத்தமனை வணங்கும் பாவனையில் சற்று பவ்யமாகத் தலையைக் கீழே சாய்த்து விட்டு “சக்கரவர்த்தி உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார் கேகய மன்னரே” என்று மொழிபெயர்த்துச் சொன்னான்.

 

புருஷோத்தமன் சசிகுப்தனை நோக்கி நட்பின் பாவனையில் சிறு புன்னகை பூத்து விட்டு அலெக்ஸாண்டருக்கு இணையாக முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அலெக்ஸாண்டரை நேர் பார்வை பார்த்தவராகப் பதில் சொன்னார். “ஒரு அரசன் இன்னொரு அரசனை எப்படி நடத்துவானோ அப்படியே நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் அலெக்ஸாண்டர்”

சசிகுப்தனும் ஆம்பி குமாரனும் திகைத்தார்கள். சக்கரவர்த்தி என்றழைப்பதற்குப் பதிலாக பெயர் சொல்லி புருஷோத்தமன் பதிலுக்கு அழைத்தது அவர்கள் இருவருக்கும் சரியாகத் தோன்றவில்லை. அதுவும் போரில் தோற்று சரணடைய வந்தவர் பேசும் பேச்சாக இல்லையே என்றே நினைத்தார்கள்.  சசிகுப்தன் மறு கணமே சுதாரித்துக் கொண்டு அதை மொழி பெயர்த்து அலெக்ஸாண்டரிடம் சொன்னான்.  

 

ஆம்பி குமாரன் அலெக்ஸாண்டரிடம் கடுங்கோபத்தை எதிர்பார்த்தான். தோற்றவன் பேசும் பேச்சா இது என்று அலெக்ஸாண்டர் ஆத்திரமடைந்து புருஷோத்தமனைத் தண்டிக்கும் கட்டளை ஏதாவது பிறப்பிப்பான் என்றும் அது தான் சரியென்றும் அவன் நினைத்தான்.

 

ஆனால் அலெக்ஸாண்டர் முகம் சிறிதளவும் மாறவில்லை. “தனிப்பட்ட முறையில் வேறென்ன எதிர்பார்க்கிறாய் புருஷோத்தமா?” என்று கேட்டான்.

 

சசிகுப்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் புருஷோத்தமன் சொன்னார். “என் முதல் எதிர்பார்ப்பிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது அலெக்ஸாண்டர்”  

 

சசிகுப்தன் அதை மொழிபெயர்த்துச் சொன்னவுடன் அலெக்ஸாண்டரால் புன்னகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போர் புரிந்த விதத்திலும் சரி, தோற்று சரணடைய வந்திருக்கும் இந்த வேளையிலும் சரி அந்த மனிதர் ஒரு மன்னனாகவே கம்பீரமாக நடந்து கொள்ளும் விதம் எல்லோராலும் பின்பற்ற முடிந்ததல்ல.

 

“நீ கேட்டாய் என்பதற்காக அல்ல, எனக்காகவும் உன்னை அப்படியே நடத்த விரும்புகிறேன் நண்பனே. உன் வீரத்தை மெச்சி இந்த நாட்டை மறுபடி உனக்கே திரும்பத் தருகிறேன். என் பெயரில் நீயே இதை ஆள்வாயாக” என்று அலெக்ஸாண்டர் சொல்ல சசிகுப்தன் மொழி பெயர்த்துச் சொல்ல அங்கிருக்கும் அனைவருமே திகைத்தார்கள்.

 

ஆம்பி குமாரன் தான் நிற்கும் பூமி பிளந்து அவனை உள்வாங்குவது போல் உணர்ந்தான். அவனை நண்பா என்றழைத்த அலெக்ஸாண்டர் புருஷோத்தமனையும் நண்பா என்றழைக்கிறானே. வென்ற கேகய நாட்டை அலெக்ஸாண்டரின் பெயரால் ஆள அவனுக்கே திருப்பித் தருவதாய் சொல்கிறானே. அப்படியானால் ஆம்பி குமாரனுக்கும், புருஷோத்தமனுக்கும் இடையில் என்ன தான் வித்தியாசம் இருக்கிறது. என்ன அநியாயம் இது? நட்புக்கரம் நீட்டியவனுக்கும் ஒரே மரியாதை, போர் தொடுத்து தோற்றவனுக்கும் ஒரே மரியாதையா? அப்படி உயர்த்தி மரியாதை தர புருஷோத்தமன் என்ன செய்துவிட்டான்?

 

மேருநாதன் முகத்தில் அளவில்லாத சந்தோஷம் தெரிந்தது. பேசி சரணடைய சம்மதிக்கச் சொல்ல அவரை அலெக்ஸாண்டர் அனுப்பி வைத்த போது சரணடையும் புருஷோத்தமனுக்கு ஓரளவாவது அலெக்ஸாண்டர் மரியாதை தருவான் என்று அவர் எதிர்பார்த்தாரே ஒழிய இந்த அளவு பெருந்தன்மையாக நடத்துவான் என்று எதிர்பார்க்கவில்லை.  

 

புருஷோத்தமனே இதை எதிர்பார்க்கவில்லை. இந்த யவனன் அவர் நினைத்த அளவுக்கு மோசமானவனில்லை. ஆம்பி குமாரனை விட ஆயிரம் மடங்கு உயர்ந்தவன்.  லேசாக அவர் கண்கள் பனித்தன. அலெக்ஸாண்டருக்கு அவர் உணர்வுகளைப் படிக்க சசிகுப்தன் உதவி தேவைப்படவில்லை. புன்னகையுடன் அவன் இரு கைகளையும் விரிக்க புருஷோத்தமன் நன்றி உணர்வுடன் சென்று அவனை அணைத்துக் கொண்டார்.

 

அதன் பின் நடந்தது எதிலும் ஆம்பிகுமாரனுக்கு உடன்பாடிருக்கவில்லை என்றாலும் அவனால் தன் மனக்கசப்பை வெளிப்படுத்த முடியவில்லை. அலெக்ஸாண்டர் உடனடியாக புருஷோத்தமனின் வலது தோள் காயத்துக்கு மருந்திடக் கட்டளையிட்டான்.  புருஷோத்தமன் முகாமுக்கு மிகுந்த மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டார். போகும் போது சசிகுப்தன் புருஷோத்தமனிடம் பேசிக் கொண்டே போவதைப் பார்த்த போது ஆம்பி குமாரனுக்குத் தாங்க முடியவில்லை. சிறிது நேரம் கழித்து அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனையும் புருஷோத்தமனிடம் அழைத்துக் கொண்டு போனான். இருவரும் அவனுக்கு நண்பர்கள் என்பதால் இனி அவர்கள் தங்களுக்குள்ளும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் இரண்டு நாடுகளும் நட்பு பாராட்ட வேண்டும் என்றும் அவன் சொல்ல வேண்டாவெறுப்பாக இரண்டு பேரும் தழுவிக் கொள்ள வேண்டி வந்தது.

 

புருஷோத்தமன் தோல்விக்கும் மேலாக, சரண் அடைந்ததற்கும் மேலாக இந்த ஒரு கணத்துக்காக வருந்தினார். தந்தையையே கொன்ற இந்த மகாபாவியை நண்பனாகத் தழுவும் தருணம் வரும் என்று அவர் சிறிதும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஆம்பி குமாரனும் ஒரு குஷ்ட ரோகியை அணைக்க வேண்டிய நிலைக்கு வந்தது  போல  கூனிக் குறுகினான். யாரை வெற்றி கொண்டு அழிப்பதற்காக அவன் அலெக்ஸாண்டரிடம் நட்புக்கரம் நீட்டினானோ அந்த நபரிடமே நட்புக்கரம் நீட்ட வேண்டிய தருணம் அலெக்ஸாண்டர் மூலம் வந்து சேரும் என்பதை அவனும் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இதையே எத்தனையோ முறை அவன் தந்தையும் அறிவுறுத்தியிருக்கிறார். ”என் நண்பரை நீ உன் நண்பராகவும் நினைக்க வேண்டும். இரண்டு அண்டை நாடுகளும் நட்புறவில் இருப்பது இரண்டு நாடுகளுக்கும் அனுகூலமானது…” என்றெல்லாம் சொன்னதற்காகவே ஆம்பி குமாரன் அவரை வெறுத்திருக்கிறான். இப்போது அதே நிலைமை கட்டாயமாக அவன் மீது திணிக்கப்படுகிறது.

 

அலெக்ஸாண்டர் அவனிடம் கருத்து கேட்பவனாக இல்லை; மாறாக கட்டளையிடுபவனாக இருக்கிறான். புருஷோத்தமனும், அவனும் அலெக்ஸாண்டரை அனுசரித்துப் போக வேண்டியவர்களாக இருக்கிறார்கள். விதி தங்களை இப்படி இணைத்துக் கட்டிப்போடும் என்று இருவருமே சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.

 

இனி அலெக்ஸாண்டர் என்ன செய்யப் போகிறான் என்று தெரியாமல் இருவரும் குழம்பினார்கள். ஏனென்றால் அவன் எடுக்கப் போகும் தீர்மானத்திலேயே அவர்கள் இருவர் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது…

 

(தொடரும்)

என்.கணேசன்




3 comments:

  1. அருமை!
    வரலாற்று நிகழ்ச்சியை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள்..

    ReplyDelete
  2. It never hapens again in the history student of Aristotle who conquer the world almost less than 32 years-Alexander the GREAT-ARIS TOTLE, SOCRATES, PLATO. The grate Greeks.

    ReplyDelete
  3. சத்ரபதி சிவாஜி மற்றும் அலெக்சாண்டர் இருவரின் திறன் மற்றும் செயல் போன்றவை பல இடங்களில் ஒத்து போகிறது.....

    ReplyDelete