Monday, January 30, 2023

யாரோ ஒருவன்? 123


நாகராஜ் வாக்கிங் கிளம்பும் போது சுதர்ஷனும் வந்து விட்டான். இருவரும் வாக்கிங் போகும் பக்கத்து வீட்டின் முன் புல்வெளியில் அமர்ந்திருந்த அனைவருடைய  பார்வையும் தங்கள் மேல் இருப்பதை சுதர்ஷனால் உணர முடிந்தது. போகும் போது நாகராஜாகவே ரஞ்சனி வந்ததிலிருந்து, தீபக், தர்ஷினி இருவரும் வந்து போனது வரை நடந்ததைச் சுருக்கமாகச் சொன்னான்.

சுதர்ஷன் கேட்டான். “நீங்க ஏன் அந்த வீட்டுக்கு வர்றதா ஒத்துகிட்டீங்க மகராஜ். பேக்கிங் வேலையெல்லாம் நான் ராத்திரி கூடப் பண்ணியிருப்பேன். அப்படி நிறைய சாமான்களும் நம்ம கிட்ட இல்லையே. ரெண்டு மூனு மணி நேரத்தில் பேக்கிங் வேலை முடிஞ்சுடும்...”

நாகராஜ்பரவாயில்லைஎன்று சொன்னான். ஆனாலும் அந்த மாபாதகன் வீட்டில் நாகராஜ் காலடி எடுத்து வைப்பது கூட சுதர்ஷனுக்கு உடன்பாடாக இருக்கவில்லை. வாக்குக் கொடுத்த பின் மறுப்பது சரியாக இருக்காது....

சுதர்ஷன் மெல்லக் கேட்டான். “தீபக் வருவான்னு எதிர்பார்த்தீங்களா மகராஜ்

ஆமா. ஆனா அந்தப் பொண்ணும் அவன் கூட ஒட்டிகிட்டே வருவான்னு நினைக்கல.”

சுதர்ஷன் புன்னகைத்தான். “நல்ல ஜோடி

நானும் பைத்தியம் தான் என்று சொன்னபடி தீபக்கின் கைகளை உறுதியாகப் பிடித்தபடி தர்ஷினி நின்றது நினைவுக்கு வர நாகராஜும் லேசாகப் புன்னகைத்தான்.

இருவரும் மௌனமாக நடந்தார்கள். தூரத்தில் பாம்பாட்டி கைகூப்பியபடி ஓரமாக நின்றிருந்தான். சுதர்ஷன் நாகராஜைப் பார்த்தான். நாகராஜ் சொன்னான். “நான் தான் வரவழைச்சேன்....”

அவர்கள் அவனை நெருங்கிய போது பாம்பாட்டி பாதி வளைந்து நமஸ்கரித்தான். நாகராஜ் அவனை என்னவென்பது போலப் பார்த்தான்.

நீங்க வரச்சொல்ற மாதிரி உத்தரவு கிடைச்சுது மகராஜ். அதான் வந்தேன்....”

நீ நான் சொன்னபடி நல்ல பாதைக்கு மாறிட்டியா?”

மாறியிருக்கேன் மகராஜ். எனக்கு ஒரு நல்ல வழி நீங்க காட்டினா பழைய தப்புகளை கண்டிப்பா பண்ண மாட்டேன் மகராஜ்என்று பாம்பாட்டி ஆத்மார்த்தமாய் சொன்னான்.

நாகராஜ் அவனை ஊடுருவி ஒரு முறை பார்த்து விட்டு அவனுடைய பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய நாகரத்தினக்கல்லை வைத்துக் கட்டிய சிவப்புப் பட்டுத்துணியை எடுத்து பாம்பாட்டியின் வணங்கிய கையைப் பிரித்து அதில் வைத்து மூடினான்.  

பின் மென்மையான குரலில் சொன்னான். “ஒரு காலத்துல நீ ரயில்ல தொலைச்சது இது. இப்ப திருந்தின வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கிற வரைக்கும், நாலு பேருக்கு நல்லது செய்துகிட்டிருக்கற வரைக்கும், இது உன் கிட்ட இருக்கும். அகம்பாவத்துலயோ, அலட்சியத்துலயோ நீ பாதை மாறிப் போக ஆரம்பிச்சா பழையபடி இதைத் தொலைக்க வேண்டி வரும்.”

பாம்பாட்டி விரிந்த கண்களுடன் பிரமித்து சிலை போல நின்றான். அவன் இது திரும்பக் கிடைக்கும் என்று கனவில் கூட எண்ணியிருக்கவில்லை. அவன் கண்களில் தாரை தாரையாய் நீர் வழிய ஆரம்பித்தது. ”மகராஜ்.... மகராஜ்.....” என்று முணுமுணுத்தவன் தெருவென்றும் பார்க்காமல் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து நாகராஜை வணங்கினான். தெருவில் போகிறவர்கள் வருகிறவர்கள் திகைப்புடன் இந்தக் காட்சியைப் பார்த்தார்கள்.

நாகராஜ் சொன்னான். “எழுந்திருகலங்கிய கண்களுடன் பாம்பாட்டி எழுந்தான்.

நான் நாளைக்கு இந்த ஊரிலிருந்து போயிடுவேன். நீ அந்த வீட்டுப் பக்கம் இனி வராதே. ஆபத்து. உபயோகமான வாழ்க்கை வாழ ஆரம்பி. சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும்.” என்று சொல்லி விட்டு நாகராஜ் திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.


ஜீம் அகமதின் ரகசிய செல்போன் எண்ணுக்கு அவனுடைய ஆள் ஒருவன் அழைத்துச் சொன்னான். “நரேந்திரனுக்கு இப்ப ராபாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலமடங்கா பலப்படுத்தியிருக்கு. யாருமே அவனை வீட்டிலயாகட்டும், ஆபிஸ்ல ஆகட்டும், பயணத்திலாகட்டும் சுலபமா நெருங்க முடியாதுங்கறது தான் இப்போதைய நிலைமை

அவன் இந்தியா வந்திருப்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று அஜீம் அகமதுக்குத் தோன்றியது. இல்லா விட்டால் இந்த அளவு ரா ஆட்கள் மகேந்திரன் மகனுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்திருக்க மாட்டார்கள்...

நெற்றியைச் சுருக்கி யோசித்த அஜீம் அகமது ஜனார்தன் த்ரிவேதியின் புதிய ரகசிய செல்போன் எண்ணுக்குப் போன் செய்து பேசினான். “பீம்சிங் நேற்றே  அங்கே போய்ச் சேர்ந்துட்டான்னு தகவல் வந்து சேர்ந்திருக்குஜி.... இன்னைக்கு ராத்திரி அவன் வேலையைச் சரியா முடிச்சுட்டா மீதியை காளிங்க சுவாம் கண்டிப்பா பார்த்துப்பார் தானே?”

அதுல உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம் ஜி.” ஜனார்தன் த்ரிவேதி உறுதியாகச் சொன்னார்.

உங்க மருமகனும் மதன்லாலும் எப்படி இருக்காங்க?”

சனியன்களுக்குப் பைத்தியம் பிடிச்சு நம்ம உயிரை எடுக்கறானுகஜி. ரெண்டு பேர் பொண்டாட்டிகளுக்கும் விஷயத்தைத் தெரிவிச்சு இங்கே வரவழைச்சேன். எல்லாம் சரியா முடிஞ்சுதுன்னா இவனுகள குடும்பத்தோட சேர்த்துடலாமேன்னு நினைச்சேன். பார்க்க வந்த அவன் பொண்டாட்டிகிட்ட என் மருமகன் வன் எப்பவோ வைப்பாட்டியா வெச்சிருந்த ஒருத்தி எப்படியெல்லாம் அனுசரணையா இருப்பான்னு சொல்ல ஆரம்பிச்சு, அவன் பொண்டாட்டி அவனைச் செருப்புலயே அடிச்சுட்டு அழுதுட்டே போயிட்டா. மதன்லால் அவனோட பொண்டாட்டிய பார்த்தவுடனேஉனக்கு நான் சம்பாதிச்சுக்குடுத்த சொத்துல இருந்து என் உயிரைக்காப்பாத்த ஐம்பது லட்சம் எடுத்துத் தர மனசில்லையான்னு கேட்டு அவ கழுத்தை நெரிச்சுருக்கான். அவளை அவன் கிட்ட இருந்து காப்பாத்தறதுக்குள்ளே நம்ம ஆளுகளுக்குப் போதும் போதும்னு ஆயிடுச்சுஜி. அவன் பொண்டாட்டி அவன் செத்தாலும் சொல்லியனுப்ப வேண்டாம்னு கோபமா சொல்லிட்டு போயிட்டா. அவனுக செத்தே தொலைஞ்சிருந்தாலும் நமக்கு இத்தனை தலைவலி இருக்காதுன்னு சில சமயம் தோணுது.. இன்னைக்கு ராத்திரி பீம்சிங் வேலையை முடிச்சான்னா இதுக்கும் ஒரு வழி பிறக்கும்னு காத்துகிட்டிருக்கேன்,..”

அஜீம் அகமது அடுத்ததாக வேறொரு ஆளுக்குப் போன் செய்தான். “ஜனார்தன் த்ரிவேதி வீட்டுக்கு  வெளியேயும், ஆபிஸ்க்கு வெளியேயும் ரா ஆளுக ஏற்பாடு பண்ணியிருந்த கண்காணிப்பு எல்லாம் எப்படி இருக்கு?”

பாதியா குறைஞ்சிருக்கு ஜீ. பழைய கெடுபிடி இல்லை…”

மகேந்திரன் மகனுக்குப் பாதுகாப்பை அதிகப்படுத்தியவர்கள் ஏன் ஜனார்தன் த்ரிவேதியைக் கண்காணிப்பதில் பழைய தீவிரத்தைக் குறைத்து விட்டார்கள் என்று அஜீம் அகமது யோசித்தான். ஜனார்தன் த்ரிவேதி மூலம் தெரியவர இனி எதுவுமில்லை என்றா, இல்லை வேறெதாவது காரணமா என்று அஜீம் அகமது யோசிக்க ஆரம்பித்தான்.


ஜீம் அகமது இருக்குமிடம் தெரிந்த பின் ரா தலைமையகத்தில் ஒரு ரகசியக் கூட்டம் நடைபெற்றது. நரேந்திரன் அதில் பேசினான்.

அஜீம் அகமது ஒரு தொழிற்சாலைக்கு எதிர்ப்புறம் இருக்கும் ஒரு வீட்ல தான் ஒளிஞ்சிருக்கான்னு கண்டுபிடிச்சுட்டோம். அங்கே அவனுக்கு அனுகூலமாய் இருக்கும் அம்சங்கள் நிறைய இருக்கு. ஆள்நடமாட்டம், போக்குவரத்து எல்லாம் ஒரு நாளில் மூன்று நேரங்களில் இருபது இருபது  நிமிடங்கள் மட்டுமே அதிகம் இருக்கும். அவன் அங்கிருந்து தப்பிப்பது என்றால் அந்த இருபது நிமிடங்களில் தொழிலாளர்களின் சீருடையில் தப்பிப்பது சுலபமாக இருக்கும். மற்றபடி அவன் விரும்பற அமைதியான இடம், சூழ்நிலை. யாராவது புதிதாக அந்தப் பக்கம் வந்தால் உடனடியாகக் கண்டுபிடித்து விடலாம் என்கிற நிலைமை. வாரத்தில் மூன்று நாட்கள் தொழிற்சாலைக்கு வேண்டிய மூலப்பொருள்கள் ஓரிரண்டு லாரிகளில் வரும். அதே போல் தயாரிக்கப்பட்டு முடிந்த பொருள்கள் மூன்று நாட்களில் தொழிற்சாலையிலிருந்து ஓரிரண்டு லாரிகளில் போகும். ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாய் அரை மணியிலிருந்து ஒரு மணி வரை அந்த லாரிகள் தொழிற்சாலைக்குள் இருக்கும். ஆனால் அந்த லாரிகளுக்கு வெளியில் வேலை இல்லை. தொழிற்சாலைக்குள் தான் வேலை என்பதால் பொருள்கள் போக்குவரத்திலும் அவனுக்குப் பாதகமான அம்சம் எதுவுமில்லை.. அடுத்த சாதகமான அம்சம் அந்த வீட்டின் பின்புறம் காலியிடம். சத்தமில்லாமல் அமைதியாக அவன் எப்போது வேண்டுமானாலும் பின்வழியாகவும் கூட நழுவி விடலாம்.”

“அவன் பல சமயங்களில் இது போல் பல நேர அமைதியும் சில நேர சந்தடிகளும் இருக்கிற இடங்களைத் தேர்ந்தெடுத்துப் பதுங்குவது நம் கவனத்திற்கு வந்திருக்கிறது. நியூசிலாந்தில் இது போல் அவன் ஒரு பள்ளிக்கூடத்திற்கு அருகில் ஒரு கட்டிடத்தில் பதுங்கி இருந்து அவனைப் பிடிக்க போலீசார் போன போது பள்ளிக்கூடத்திற்கு எறிவெடிகுண்டு வீசி, உள்ளே ஆயிரத்திற்கும் மேல் இருக்கும் பள்ளிக்குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்று பயப்படுத்தி தான் தப்பித்திருக்கிறான்.   இங்கேயும் அவனைப் பிடிக்கப் போனால் அவன் அந்த மிரட்டலை விடும் வாய்ப்பு இருக்கிறது. 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்ட ஆட்கள் இருக்கையில் அவர்களைப் பணயம் வைத்து நாம் அவனைப் பிடித்து விட முடியாது… அதனால் அவன் இருக்கும் தெரிந்து விட்டால் கூட நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் தான் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது….”

(தொடரும்)
என்.கணேசன்

4 comments:

  1. Very thrilling moments.

    ReplyDelete
  2. அந்த ஆதாரத்தை இந்த பகுதிய ல் நாகராஜ் காட்டுவார் என்று எதிர்பார்த்தேன்‌.... இது இன்னும் சில பகுதிகள் போகும் போல....

    ReplyDelete
  3. Waiting for next episode

    ReplyDelete