Thursday, January 26, 2023

சாணக்கியன் 41

 

கேகய நாட்டின் மீது போர் தொடுக்கப் போகும் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டு இருந்த ஆம்பி குமாரன் முழுமையாக அந்த ஆனந்தத்தில் திளைத்து விட முடியவில்லை. போருக்கான ஆயத்தங்களைப் பற்றி அலெக்ஸாண்டரிடம் பேசும் போதே அவன் சிறிதும் எதிர்பாராத மிகப்பெரிய அதிர்ச்சியை அடைய நேர்ந்தது. தட்ச சீலத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன் தன்னுடைய பிரதிநிதி ஒருவனை அலெக்ஸாண்டர் தட்சசீலத்தில் விட்டுப் போகத் தீர்மானித்திருப்பதைக் கேள்விப்பட்டது அவன் மகிழ்ச்சியை ஒரேயடியாக வடிய வைத்து விட்டது. அவனுடைய அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அலெக்ஸாண்டரும் அவனுடைய ஆட்களும் கவனிக்கக்கூட இல்லை. தன்னுடைய பிரதிநிதியாக யாரை நியமிப்பது என்பது பற்றி மும்முரமாக அலெக்ஸாண்டர் செல்யூகஸுடன் கலந்தாலோசனை செய்து கொண்டிருந்தான்.

 

நட்புக்கரம் நீட்டி பரிசுகளும் தாராளமாக அளித்ததினாலேயே அலெக்ஸாண்டர் புளங்காகிதம் அடைந்து நட்பின் காரணமாகச் சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்து விடுவான் என்று நினைத்தது தவறு என்று ஆம்பிகுமாரனுக்கு மெள்ளப் புரிந்தது. பரிதாபமாக அவர்கள் பேசுவதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அலெக்ஸாண்டர் கேகயத்தை வென்ற பின் அப்படியே அடுத்தடுத்த பகுதிகளை ஆக்கிரமிக்க நினைத்தான். அதனால் திரும்பி தட்சசீலத்திற்கு அவன் வருவதாக இல்லை என்பது சசிகுப்தன் சொன்னதால் ஆம்பி குமாரனுக்குத் தெரிய வந்தது…. கடைசியில் அலெக்ஸாண்டர் பிலிப் என்பவனைத் தேர்ந்தெடுத்து அந்தத் தகவலை ஆம்பி குமாரனுக்குத் தெரிவித்தான்.

 

உனக்கு பிலிப் நிர்வாகத்தில் உதவியாக இருப்பான் நண்பாஎன்று அலெக்ஸாண்டர் ஆம்பி குமாரனிடம் சொன்னான்.

 

ஆம்பி குமாரனுக்குப் பேச வார்த்தைகள் வரவில்லை. தலையை மட்டும் பரிதாபமாக அவன் ஆட்டினான்.   படையிலும் ஒரு சிறு பகுதியை பிலிப் தலைமையில் காந்தாரத்திலேயே விட்டுப் போகத் தீர்மானித்த அலெக்ஸாண்டர் அதற்குப் பதிலாக அதை விட அதிகமாக காந்தாரப்படையை கேகயப் போருக்கும் அதற்குப் பின்னால் செய்யப்போகும் போர்களுக்குமாய் அழைத்துப் போகத் தீர்மானித்தான். அதற்கு அவன் ஆம்பி குமாரனிடம் எந்த அனுமதியும் கேட்கவில்லை. ஏன் ஆலோசனை கூடக் கேட்கவில்லை. அவன் இந்த விஷயங்களைத் தீர்மானிக்கும் போது காந்தாரம் தன்னுடைய நாடு என்பது போலத் தான் நினைத்திருக்கிறான் என்ற உணர்வு ஆம்பி குமாரனுக்கு ஏற்பட்டது.  அதற்கு ஏற்றாற் போல தட்சசீலத்தில் அங்கங்கே அலெக்ஸாண்டரின் கொடிகளும் நடப்பட்டன.  

 

சில மாதங்களுக்கு முன்பு கேகயப்படை தட்சசீலத்திற்குள் நுழைந்து அரண்மனையை ஆக்கிரமித்துக் கொண்ட போதும் இப்படித் தான் கேகயக் கொடிகள் அங்கங்கே தட்சசீலத்தில் நடப்பட்டு இருந்தன. அப்போது கொதித்த அவன் மனம் இப்போது யவனர்களின் கொடிகளைப் பார்த்துக் கொதிக்கவும் வழியில்லாமல், ரசிக்கவும் முடியாமல் புழுங்குகின்றது. ஆம்பி குமாரன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் திண்டாடினான். யாரிடமும் எதையும் சொல்லவும் முடியவில்லை. மன பாரத்தை இறக்கி வைக்கவும் வழியில்லை.

 

தனியாகப் பேசக்கிடைக்கையில் சசிகுப்தனிடம் ஆம்பி குமாரன் விசாரித்தான். சசிகுப்தன் பாரசீக மன்னருக்கு எதிரான போரில் அலெக்ஸாண்டருக்கு ஆதரவு தெரிவித்து போரில் கலந்து கொண்டிருக்கிறான் என்று முன்பே கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் சசிகுப்தனின் பாக்ட்ரியா பகுதியிலும் இங்கு போலவே அலெக்ஸாண்டரின் ஒரு பிரதிநிதியும், ஒரு படையும் இப்போதும் இருக்கிறது என்பது தெரிந்தது. அதில் சசிகுப்தனுக்கு எந்த வருத்தமும் இல்லை என்பதும் தெரிந்தது. ஆதரவு தெரிவித்து போரில் அலெக்ஸாண்டரின் படையுடன் இணைந்தும் கூட அவனுக்கு எந்தச் சலுகையும் இல்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் ஒரு காலத்தில் பாக்ட்ரியா பகுதி பாரசீக மன்னனின் ஆதிக்கத்தில் இருந்தது. இப்போது அலெக்ஸாண்டரின் ஆதிக்கத்தில் வந்திருக்கிறது என்பதால் சசிகுப்தனுக்கு இழக்க எதுவும் இல்லை. அவன் நிலைமையில் மாற்றமும் இல்லை. ஆனால் தன் நிலைமை அப்படி இல்லையே. காந்தாரம் அவன் பூமியாயிற்றே. அதை அவன் இப்போது தாரை வார்த்துத் தந்திருப்பது போல ஆயிற்றே என்று மனம் அவ்வப்போது ஓலமிட்டது.      

 

ஆனால் அலெக்ஸாண்டரை அழைக்காமல் இருந்திருந்தாலும் இங்கு கண்டிப்பாக வந்திருப்பான். எதிர்த்திருந்தால் போர் புரிந்திருப்பான். போரிட்டிருந்தால் தோற்கும் வாய்ப்பே அதிகம். அப்படித் தோற்றிருந்தால் வீரமரணமோ, சிறையோ கிடைத்திருக்கலாம். அதனால் நட்புக்கரம் நீட்டி அதைத் தவிர்த்திருக்கிறோம் என்ற எண்ணமும் எழுந்தது. நட்புக்கரம் நீட்டிய தனக்கே இந்த நிலைமை என்றால் கேகய மன்னன் புருஷோத்தமன் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று யோசித்து அவன் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டி வந்தது. புருஷோத்தமனின் பிணத்தைப் பார்ப்போமா, சிறைப்படுவதைப் பார்ப்போமா என்று யோசித்து இரண்டில் எதில் அதிக சந்தோஷம் கிடைக்கும் என்று யோசித்து அவமான உணர்வையும், கௌரவத்தையும் ஆம்பி குமாரன் ஒதுக்கி வைத்தான்.

 

கேகய மன்னருக்கு ஒற்றர்கள் மூலம் தட்சசீலத்திலிருந்து காந்தார, யவனப் படைகள் போருக்குக் கிளம்பிக் கொண்டிருக்கின்றன என்ற செய்தி கிடைத்தது. அதற்கு முன்பே அவர் போருக்கு ஆயத்தமாகி இருந்தார். அலெக்ஸாண்டருக்கு அடிபணிய மறுத்த பின் அவன் போருக்கு வராமல் இருக்கப்போவதில்லை என்பதில் அவருக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அதுவும் அவர் போருக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார் என்பதால் அப்போதே போருக்கான ஆயத்தத்தையும் ஆரம்பித்திருந்தார்.

 

போர் அவருக்குப் புதியதல்ல. பல முறை போரிட்டிருக்கிறார். எல்லாவற்றிலும் வென்றிருக்கிறார். பர்வதேஸ்வரன் என்ற பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அதனால் அவர் உற்சாகமாகத் தானிருந்தார். ஆனால் இந்திரதத் மட்டும் ஒருவித கலக்கத்தை உள்ளுக்குள் உணர்ந்தபடியே இருந்தார். விஷ்ணுகுப்தர் அன்று வந்து பேசி விட்டுப் போயிருக்கா விட்டால் அவரும் தன் மன்னரைப் போலவே நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் தான் இருந்திருப்பார்.  ஆனால் விஷ்ணுகுப்தரின் கணிப்பு அவரை மிகவும் பாதித்திருந்தது.

 

மழைக்காலமும், விதஸ்தா நதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளமும் கேகயத்துக்கு சாதகமாகத்தானிருக்கின்றன. அலெக்ஸாண்டர் அந்த நதியைத் தாண்டி வந்து போரிட்டு வெல்வது சுலபமல்ல.  கேகயத்தின் முழு படைகளையும் அவர்கள் இப்போது திரட்டியிருக்கிறார்கள். வேறு பக்கங்களில் இருந்து யாரும் போருக்கு வரவோ, ஊடுருவவோ வாய்ப்பு இல்லை என்பதால் தைரியமாக எல்லாப்படைகளையும் அவர்களால் ஒன்று திரட்ட முடிந்திருக்கிறது. எல்லாம் யோசிக்கையில் கேகயம் வலிமையாகவே இருக்கிறது. அலெக்ஸாண்டர் பக்கம் தான் பலவீனம் அதிகம். முக்கியமாக விதஸ்தா நதி….

 

புருஷோத்தமன் அனுபவம் வாய்ந்த சேனாதிபதிகளிடம் பேசும் போது இந்திரதத் உடனிருக்கையில் தான் கேட்டார். “ஒரு வேளை அலெக்ஸாண்டர் நம்மை வெல்ல வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?”

 

எதிராளியின் கோணத்திலிருந்தும் சிந்திக்க வேண்டும் என்பது புருஷோத்தமனின் அனுபவ பாடமாக இருந்திருக்கிறது.

 

அவர் கேட்டதற்கு ஒரு மூத்த சேனாதிபதி சொன்னார். “குறைந்த பட்சம் விதஸ்தா நதியில் வெள்ளம் வடியும் வரையாவது காத்திருக்க வேண்டும்”

 

படையோடு கிளம்பி விட்டு மழையும், வெள்ளமும் குறையும் வரை காத்திருக்கும் பொறுமை அலெக்ஸாண்டருக்கு இருக்கும் என்று இந்திரதத்துக்குத் தோன்றவில்லை. அப்படிக் காத்திருப்பது கால விரயம் மட்டுமல்ல, படைவீரர்களுக்குச் சோர்வையும் ஏற்படுத்தி விடும். அதனால் அதற்கு அலெக்ஸாண்டர் அனுமதிக்க மாட்டான். பின் என்ன செய்வான் என்று அவர் யோசித்துப் பார்த்தார். ஆனால் அவருக்குப் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

 

நண்பர் விஷ்ணுகுப்தர் இங்கு இருந்திருந்தால் அவரிடம் கேட்டிருக்கலாம். இந்திரதத்துக்குத் தோன்றாத சில தந்திரங்களை அவர் சொல்லியிருப்பார். விஷ்ணுகுப்தர் தட்சசீலம் வந்து சேர்ந்து விட்டார் என்று ஒற்றர்கள் அவருக்கு நேற்று தான் வந்து தெரிவித்தார்கள்.  தனநந்தன் விஷ்ணுகுப்தருக்கு மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும்… அதனால் தான் அவர் இங்கு வரவில்லை. எந்தச் செய்தியும் அனுப்பவில்லை…. ஒருவேளை தனநந்தன் அவர் கோரிக்கைக்குச் செவிமடுத்திருந்தாலும் கூட அவன் தலைமையில் போரிடுவதை கேகய மன்னர் கண்டிப்பாக விரும்பியிருக்க மாட்டார். அவரைப் பொருத்த வரையில் அலெக்ஸாண்டரும், தனநந்தனும் ஒன்று தான். அதனால் அவரை ஒத்துக் கொள்ள வைக்க இந்திரதத் பாடுபட்டிருக்க வேண்டும்…. அதனால் அந்த தர்மசங்கடமான சூழ்நிலை தற்போது இல்லை.

 

ஆனால் விஷ்ணுகுப்தர் எதையும் தோல்வி என்று ஒத்துக் கொண்டு ஒதுங்கும் நபர் அல்ல. ஒரு வழி மூடப்பட்டால் வேறு வழியைக் கண்டுபிடிக்காமல் ஓயும் பழக்கம் அவரிடம் எப்போதும் இல்லை… தன் நண்பர் இப்போது என்ன வழி கண்டுபிடித்திருக்க முடியும் என்று இந்திரதத் என்று யோசித்துப் பார்த்தார். பாவம் ஒரு தனி மனிதர் அரசியல் தீர்மானங்களில் என்ன வழி கண்டுபிடிக்க முடியும்? ஒரு தனிமனிதராக விஷ்ணுகுப்தர் பிறந்தது தான் அவருடைய துரதிர்ஷ்டம் என்று இந்திரதத்துக்குத் தோன்றியது.

 

 (தொடரும்)

என்.கணேசன்



2 comments:

  1. Ancient history is unfolding in front of you because of your excellent writing. Thanks sir.

    ReplyDelete
  2. அடுத்ததாக என்னதான் நடக்கும் என்று கணிக்கவே முடியவில்லை... அலெக்சாண்டர் விதஸ்தா நதியை அறிந்து தான் கிளம்பியிருப்பான்...

    ReplyDelete