Thursday, November 3, 2022

சாணக்கியன் 29

 

றுநாள் காலை அரசவையில் ராக்ஷசர் நுழைந்த போது முன்பே ஆட்கள் வந்தமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கிடையே விஷ்ணுகுப்தர் அமர்ந்திருப்பார் என்று எண்ணிப்பார்க்கவும் காரணம் எதுவும் வைத்துக் கொண்டிருக்காததால் ராக்ஷசர் விஷ்ணுகுப்தரைக் காணவில்லை. வழக்கம் போல் சென்று தனநந்தனை அழைத்து வந்து தனநந்தன் அமர்ந்த பிறகு தன் இருக்கையில் அமர்ந்த பிறகு சபையை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டே வந்த போது தான் அவர் பார்வை விஷ்ணுகுப்தர் மேல் நிலைத்தது. விஷ்ணுகுப்தர் எந்த இடத்திலும் பலருள் ஒருவராக மறைந்து விடக்கூடிய நபர் அல்ல. உருவத்தில் பிரத்தியேகத் தனித்தன்மை அவரிடம் இருக்கா விட்டாலும் நிமிர்ந்து நேராக உட்கார்ந்திருக்கும் தோரணையிலும், பார்க்கும் பார்வையிலும் விஷ்ணுகுப்தர் தனியாகவே தெரிந்தார். அவரைப் பார்த்த பிறகு ராக்ஷசருக்கு வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. “இந்த மனிதர் ஏனிங்கே மறுபடி வந்தார்?” என்ற கேள்வியிலேயே அவர் மனம் உழன்றது.   

 

தெற்கில் இருக்கும் ஒரு சிற்றரசனின் தூதன் கொண்டு வந்த செய்தியில் இருந்து அன்றைய அரசவை நிகழ்வுகள் ஆரம்பித்தன. அதுவும் அதன் பின் நடந்தவையும் வழக்கமானவையாகவே இருந்தன. தனநந்தன் ஏதோ ஒரு விஷயமாக ராக்ஷசர் கருத்தைக் கேட்க நினைத்து அவர் பக்கம் திரும்புகையில் அவர் ஏதோ யோசனையுடன் அவையில் அமர்ந்திருந்தவர்கள் பக்கம் பார்த்துக் கொண்டிருந்ததைக் கவனித்து அவர் பார்வை போன பக்கம் தன் பார்வையைத் திருப்பினான். அவன் பார்வை விஷ்ணுகுப்தர் மீது விழுந்தவுடன் கூர்மையாகியது. ஓரிரு கணங்களில் அவனால் அவர் குறித்த பழைய நினைவுகளை நினைவுபடுத்திக் கொள்ள முடிந்தது. அந்த அந்தணரை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. எவ்வளவு திமிரோடு அன்று அவனிடம் அவர் பேசியிருந்தார். இந்த ஆள் ஏன் இப்போது மறுபடி வந்திருக்கிறார் என்ற கேள்வி அவனுக்குள்ளும் எழுந்தது. அவன் பார்வையும், ராக்ஷசர் பார்வையும் சந்தித்துக் கொண்டன. பார்வையாலேயே அவன் கேட்ட கேள்விக்கு ராக்ஷசர் தெரியவில்லை என்று லேசாகத் தலையசைத்தார்.

 

அவையில் அவசரமாகப் பேச எழுந்தவர்கள் பேசி முடித்து ஒரு இடைவெளி கிடைத்த போது விஷ்ணுகுப்தர் எழுந்தார்.  அவர் மீது விழுந்த தனநந்தன் பார்வை பேச ஊக்குவிப்பதாக இருக்கவில்லை. இவனிடம் பேச வேண்டுமா என்ற கேள்வி அவர் மனதில் எழாமல் இல்லை.  பேசுவது இவனுக்குப் புரியுமா என்ற சந்தேகம் எழாமலும் இல்லை.  ஆனால் பாரதத்திற்காக அவர் முயற்சி செய்யாமல் போனால் அவரையே அவரால் மன்னிக்க முடியாது. இந்தப் புனித பூமியை விட அவர் பெரிய மனிதரல்ல. அவரை தனநந்தன் மதிக்கா விட்டாலும் பரவாயில்லை. ஆத்மார்த்தமாக முயற்சி செய்ய வேண்டியது அவர் கடமை. பழைய பகையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தனநந்தனிடம் பேச அவர் முன் வந்தார். எந்த நல்ல வார்த்தைக்கும் தனநந்தன் அருகதை உள்ளவனல்ல என்றாலும் அவருடைய தாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய காரியம் ஆக வேண்டி இருக்கிறது...

 

மகதத்தின் மாமன்னரை தட்சசீலத்தின் ஆசிரியன் விஷ்ணுகுப்தன் தலைவணங்குகிறேன்...” கம்பீரமான குரலில் சொல்லி விஷ்ணுகுப்தர் சிரம் தாழ்த்தி கைகூப்பி வணங்கினார்.

 

தனநந்தன் அவரைச் சந்தேகத்தோடு பார்க்க ராக்ஷசர் விஷ்ணுகுப்தரை ஆச்சரியத்தோடு பார்த்தார்.

 

விஷ்ணுகுப்தர் பணிவுடன் தொடர்ந்தார். ”புண்ணிய பூமியான பாரதத்தை நோக்கி யவன அரசனான அலெக்ஸாண்டர் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தி கிடைத்திருக்கிறது மகத மன்னரே. பாரதத்தின் தலைவாசலில் காந்தாரத்தின் அரசனாக அரியணை ஏறியிருக்கும் ஆம்பி குமாரன் அன்னியனான அலெக்ஸாண்டரை எதிர்த்து நின்று பாரதத்தைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக நட்பு பாராட்டி அவனை வரவேற்கக் காத்திருக்கிறான். அலெக்ஸாண்டர் படையுடன் காந்தாரப் படையும் இணைந்து கொண்டால் பின் அந்த இணைந்த படையை வெல்ல மகதத்தைத் தவிர வேறு வலிமையான படை பாரதத்தில் இல்லை என்பதே இன்றைய யதார்த்த நிலை. அன்னியர்களிடம் இருந்து நம் புண்ணிய பாரதத்தைக் காப்பாற்றுவதற்கு மற்ற யாருக்குமே போதுமான வலிமை இல்லாததால் மகதத்தின் வலிமையான படையுடன் விரைவாக வடக்கு நோக்கி வரும்படி தங்களைப் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்...”

 

தனநந்தன் விஷ்ணுகுப்தரை ஏளனமாகக் கேட்டான். ”பாரதத்தின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் பொறுப்பை தட்சசீல ஆசிரியருக்கு யார் தந்தார்கள்?”

 

தாயகத்தைக் காக்கும் பொறுப்பு ஒவ்வொரு மைந்தனுக்கும் உண்டல்லவா அரசே. ஆனால் அதற்கான வலிமையும், வாய்ப்பும் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. இறைவன் அந்த இரண்டையும் தங்களுக்குத் தந்திருக்கிறான். எனவே மகத மாமன்னர் பாரதத்தின் சக்கரவர்த்தியாகப் பொறுப்பேற்றுக் கொண்டு தாயகத்தைக் காக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்...”

 

அவர் குரலிலும் தொனியிலும் பணிவிருந்த போதும் தனநந்தன் அவருடைய வார்த்தைகளால் கோபம் அடைந்தான். “அந்தணனே. தட்சசீலத்துக் கல்விக்கூடத்தின் ஆசிரியர் அந்த வேலையை அல்லவா ஒழுங்காகச் செய்ய வேண்டும். அங்குள்ள மாணவர்களுக்கல்லவா பாடம் படிப்பிக்க வேண்டும். அப்படியிருக்கையில் அதைச் செய்வதை விட்டு விட்டு அவ்வப்போது அரசர்களுக்கு பாடம் நடத்தக் கிளம்புவது சரியில்லையே. என் நினைவு சரியாக இருக்குமானால் சில வருடங்களுக்கு முன்பும் இந்த அரசவைக்கு வந்து அரசரின் பொறுப்புகளைப் பற்றிப் பாடம் நடத்திய ஆள் நீயேயல்லவா?”

 

பழைய நிகழ்வுக்குப் பதில் சொல்லி தனநந்தனின் கோபத்தை அதிகரிக்க விஷ்ணுகுப்தர் விரும்பவில்லை. பணிவுடனேயே சொல்ல ஆரம்பித்தார்.  நான் பாடம் நடத்துவதாகத் தயவு செய்து நினைக்க வேண்டாம் மகத மன்னரே. சரித்திரம் படைக்கும் வாய்ப்பொன்று உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நினைவுபடுத்த வந்த சாதாரண மனிதனாக என்னை நினையுங்கள் போதும். தலைக்கு ஊற்றிய தண்ணீர் காலுக்கும் வந்தே தீரும். பாரதத்திற்குள் நுழைந்த பிறகு அலெக்ஸாண்டர் எல்லைப் பகுதியோடு திருப்தி அடைந்து திரும்ப மாட்டான். கண்டிப்பாக முன்னேறி மகதத்திற்கும் வருவான். அவன் உங்கள் எல்லைக்கு வந்த பிறகு அவனுடன் போரிடுவதை விட பாரதத்தின் எல்லைப்பகுதியிலேயே அவனைத் தடுத்துத் துரத்தியடிப்பதல்லவா புத்திசாலித்தனம். உங்கள் ஆதிக்கமும் பராக்கிரமமும் பாரதத்தின் எல்லை வரை நீளும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படித் தங்களை நான் வேண்டிக் கொள்கிறேன் அவ்வளவு தான்…”    

 

விஷ்ணுகுப்தரின் வார்த்தைகளில் இருந்த பணிவும், உண்மையும் தனநந்தனின் கோபத்தைச் சிறிதும் குறைத்து விடவில்லை.  எனக்கு ஆலோசனை கூற என் அமைச்சர்கள் இருக்கிறார்கள். எனக்கு அறிவுரை சொல்ல அறிவிற்சிறந்த என் பிரதம அமைச்சர் ராக்ஷசர் இருக்கிறார். அதனால் உன்னிடமிருந்து ஆலோசனையும், அறிவுரையும் எனக்குத் தேவையில்லை அந்தணனே. என்னை மேலும் கோபமூட்டாமல் இங்கிருந்து போய் விடு 

 

விஷ்ணுகுப்தர் உணர்வுகளே இல்லாத இந்த மூர்க்கனுக்கு நிலைமையின் தீவிரத்தை எப்படி உணர வைப்பேன் என்ற இயலாமையின் தவிப்போடு அறிவிற்சிறந்ததாய் இவன் சொல்கிற பிரதம அமைச்சருக்காவது இது புரியுமா, இவனுக்குப் புரிய வைக்க முடியுமா என்றெண்ணியபடி ராக்‌ஷசரைப் பார்த்தார்.

 

ராக்‌ஷசர் இந்த ஆச்சாரியரை அனாவசியமாய் அதிக உயர்வாக எண்ணி விட்டோமோ என்று தன்னையே கேட்டுக் கொண்டார். இவர் வெறும் ஆசிரியர். இங்குள்ளவரும் அல்ல. தட்சசீலத்தில் இருப்பவர். முன்பு ஒரு முறை இங்கு வந்திருந்த போது கூட அரசர் எரிச்சலடைந்து பேசியதற்குப் பதில் பேசியதாய் அன்றைய பேச்சை உயர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது. ஆனால் இன்று இந்த மனிதர் பேசுவது அதிகப்பிரசங்கித்தனமாகவே அவருக்கும் தோன்றியது. யாரிந்த மனிதர்? இங்கு வந்து இதைச் சொல்ல இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அங்குள்ள அரசர்கள் யாராவது அலெக்ஸாண்டரின் வருகைக்குப் பயந்து உதவி கேட்டு ஒரு தூதராக இவரை அனுப்பியிருந்தாலும் கூட இந்தப் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியும். அறிவுகூர்மைக்குப் பெயர் போனவராக இவரது மாணவன் அன்று சொன்னது நினைவுக்கு வந்தது. அறிவும் எல்லை மீறிப் போனால் ஒருவரைப் பைத்தியமாக்கி விடுமோ, அது தான் இப்போது நடந்திருக்கிறதோ?

 

ராக்‌ஷசர் இந்தப் பைத்தியத்திடம் அதிகம் பேசுவதோ, அதிகம் பேச ஊக்குவிப்பதோ நல்லதல்ல என்று முடிவு செய்தவராக இறுகிய முகத்துடன் சொன்னார். “ஆச்சாரியரே. யாரிடம் எப்போது எப்படிப் போரிட வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். மன்னர் கூறியது போல் எங்களுக்கு உங்கள் ஆலோசனை தேவையில்லை. இதைச் சொல்ல நீங்கள் தட்சசீலத்திலிருந்து இங்கு வரை வந்திருக்க வேண்டியதில்லை.”

 

விஷ்ணுகுப்தர் தன் இரு கைகளையும் கூப்பி தனநந்தனையும் ராக்‌ஷசரையும் பார்த்தபடி உருக்கமாகச் சொன்னார். “நான் ஆலோசனை சொல்ல வரவில்லை. உதவி கேட்டு வந்திருக்கிறேன். இந்தப் புண்ணிய பூமியை அன்னியர் ஆக்கிரமிக்கச் சம்மதிக்காதீர்கள் என்று மன்றாடிக் கேட்கும் இந்த மண்ணின் மைந்தனாக வந்திருக்கிறேன். இதைச் செய்யும் வலிமை உங்களுக்கு இருக்கிறது. இதைச் செய்வதால் உங்கள் ராஜ்ஜியத்தின் பரப்பும், வலிமையும் கூடும் அனுகூலமும் உங்களுக்கு இருக்கிறது. அதோடு  தாயகத்தைக் காத்த புகழும் புண்ணியமும் கூட உங்களை வந்து சேரும். தயவு செய்து நான் சொல்வதைப் பரிசீலனை செய்யுங்கள்”

 

(தொடரும்)

என்.கணேசன்   


இந்த நாவலையும், அச்சில் உள்ள என் மற்ற நூல்களையும் அமேசானில் வாங்க லிங்க் -

(அல்லது)


நூல்களின் மொத்தத் தொகையுடன் தபால் செலவு ரூ.50/-ஐயும் சேர்த்து என்.கணேசன் புக்ஸுக்கு நேரடியாகப் பணம் அனுப்பியும் ரிஜிஸ்டர் தபால் அல்லது குரியர் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம். 

உள்நாட்டு வாசகர்கள் கூகுள் பேபோன் பேமற்றும் வங்கிக் கணக்குக்கு NEFT மற்றும் IMPS மூலமாக N.Ganeshan Booksக்கு நூல்களுக்கான தொகையை அனுப்பி வைக்கலாம்(ரூ.1000/-க்கு மேல் நூல்கள் வாங்குபவர்களுக்குத் தபால் செலவு தள்ளுபடி செய்யப்படும். நூல்களுக்கான தொகை மட்டும் அனுப்பினால் போதும்)

நூல்களின் குறிப்பு மற்றும் விலையை அறிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும் - என்.கணேசன் நூல்கள்


அக்கவுண்ட் விவரங்கள் -

G-pay UPI ID : gshubha1968@oksbi

Phonepe UPI ID: nganeshanbooks@ybl

வங்கிக் கணக்கு : LVB (DBS) Kovaipudur Branch

                                        IFSC Code DBSS0IN0188

                                        A/c No.0188386000001146

தொகையை அனுப்பி விட்டு அதற்கான சான்றுடன் தங்கள் விலாசத்தையும் nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கோ, 94863 09351 அலைபேசி வாட்சப்பிலோ அனுப்பி வைத்தால் அந்த விலாசத்திற்கு நூல்கள் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


நூல்களை வாங்க விரும்பும் வெளிநாட்டு வாசகர்கள் தங்கள் விவரங்களை  nganeshanbooks@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பினால் தபால் செலவு அறிந்து சொல்லப்படும்.

     

  

5 comments:

  1. Only a great person like him, can do such selfless act. Thanks for introducing that great person to Tamil readers.

    ReplyDelete
  2. தலைக்கு ஊற்றிய தண்ணீர் காலுக்கும் வந்தே தீரும்..... வியக்க வைத்த மொழி ஆளுமை. எப்போதும் போல அர்ஜுன் முதல் விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. நானும் இந்த குறிப்பிட்ட சொல்லாடலை ரசித்தேன்.

      Delete
  3. எக்காலத்திலுமே வரக்கூடியே பேராபத்தை முன்கூட்டியே எச்சரிக்கும் நபர்களை உதாசீனம் செய்யும் நிலையே உள்ளது....

    ReplyDelete
  4. This is called real Patriotism!

    ReplyDelete