Monday, November 7, 2022

யாரோ ஒருவன்? 111



பீம்சிங் ரிஷிகேசத்தில் சாப்பிட்டு விட்டு காட்டுப் பகுதி எல்லை வரை ஜீப்பில் போய் அங்கிருந்து நடக்க ஆரம்பித்த போது மூன்றே முக்கால் மணி ஆகியிருந்தது. ஆனால் சிறிது தூரம் போனவுடனேயே இருட்டில் தான் கவனமாக அவன் நடக்க வேண்டியிருந்தது. அவ்வளவு அடர்த்தியாக மரங்கள் இருந்ததால் சூரிய ஒளி பகலிலும் அதைத் தாண்டி உள்ளே வரவில்லை. பீம்சிங் டார்ச் விளக்கைப் பிடித்துக் கொண்டு மெள்ளத் தான் நடக்க முடிந்தது. காட்டுப்பகுதிக்குள் ஒரு புதியவன் வருகிறான் என்பதை அறிவிப்பதைப் போல காட்டுப் பறவைகள் விதவிதமான குரல்களில் கிறீச்சிட்டனஆனால் அவனுக்கு பறவைகள் பிரச்சினையில்லை.

வருவதற்கு முன்பே அவன் விஷயம் தெரிந்தவர்களிடம் விசாரித்து விட்டுத் தான் வந்திருக்கிறான். காளி கோயிலும் தாண்டிய பின் உட்பகுதிகளில் தான் ஆபத்தான விலங்குகள் இருக்கின்றன என்று சொன்னார்கள். காளிகோயில் போய்ச் சேரும் வரை அதிகமாய் குரங்குகள் தான் அவனுக்குத் தென்படும் என்று சொன்னார்கள். மிகவும் கவனமாக இருக்கா விட்டால் குரங்குகள் செய்யும் சேட்டைகளே சமாளிக்க முடியாதென்பதை அவன் அனுபவத்தில் அறிந்தவன். ஆனால் அனுமானை வணங்கி விட்டு வந்திருக்கும் அந்தப் பக்தனைத் தொந்தரவு செய்ய அனுமார் அனுமதிக்க மாட்டார் என்ற நம்பிக்கை அவனுக்கு உறுதியாக இருக்கிறது.

விசாரித்ததில் ஒருவர் மட்டும் அந்தக் காட்டில்எப்போதாவது உள் பகுதியிலிருந்து வெளிப்பகுதிக்கும் கரடிகள் ஒன்றிரண்டு வருவதுண்டுஎன்று சொல்லியிருந்தது தான் இப்போது கொஞ்சம் கிலியைக் கிளப்பியது. அந்தஎப்போதாவதுஇப்போதாகி விட்டால் என்ன செய்வது என்ற யோசனையை அவனால் விலக்க முடியவில்லை. அதனால் கரடி வந்தால் காப்பாற்றிக் கொள்ள ஒரு கைத்துப்பாக்கியை அவன் வைத்திருக்கிறான்.

திருடப்போகும் இடங்களில் நாய்களை அவன் மிக லாவகமாகச் சமாளித்து விடுவான்.  சில சமயங்களில் ஆட்கள் வந்து விடுவதுண்டு. அவர்களைத் தாக்கி மயக்கமடைய வைப்பதற்கும் அவன் கண நேரமும் தயங்கியதோ பயப்பட்டதோ இல்லை. அப்போதெல்லாம் ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் தெளிவாக அறிவான். ஆனால் கரடி, பாம்பு, மற்ற கொடிய விலங்குகள் எல்லாம் என்ன செய்யும், அதன் விளைவுகள் என்ன என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. அதனால் அதற்கு எதிர்வினை என்ன என்பதிலும் அவனுக்குத் தெளிவில்லை.  

ஒரு குரங்கு அவன் தோளில் இருந்த பையைப் பார்த்தபடியே கூட நடந்து வர ஆரம்பித்தது. சற்று பின்னால் இன்னொரு குரங்கு வர ஆரம்பிக்க இதை இப்படியே அனுமதித்தால் பிரச்சினை தான் என்பதைப் புரிந்து கொண்ட அவன்ஜெய் ஹனுமான்என்று கட்டையான குரலில் கர்ஜித்தான். அனுமானின் பெயராலோ, அவனது கட்டைக்குரலாலோ கூட வந்த குரங்குகள்  பின்னுக்கு ஓடின. சிறிது நிம்மதியடைந்து நடந்தான்.

தூரத்தில் தீப்பந்தம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது தெரிந்தது. அதன் ஒளியில் காளி கோயில் நிழலாகத் தெரிந்தது. பாம்புகள் இருக்காது என்று சுவாமிகள் சொல்லி இருப்பதாகச் சொன்னதால் சற்று தைரியமாகவே நடந்தாலும் காளி கோயிலை நெருங்க நெருங்க இயல்பான எச்சரிக்கை உணர்வு அவன் நடை வேகத்தைக் குறைத்தது. டார்ச் லைட் வெளிச்சத்தில் ஏதாவது பாம்புகள் தெரிகின்றனவா என்று கவனமாகப் பார்த்துக் கொண்டே நடந்து அவன் கோயிலை அடைந்தான். ஒரு பாம்பும் கண்ணுக்குத் தெரியவில்லை.

தீப்பந்தத்தின் அருகே நின்று கொண்டு ஒருவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சுவாமிஜியின் சீடனாக இருக்க வேண்டும் என்று பீம்சிங் அனுமானித்தான்.   அவன் பீம்சிங்கிடம் கோயிலுக்கு வெளியே இருந்த ஒரு கிணற்றைக் காட்டிதலைக்குக் குளிச்சுட்டு நல்லா உடம்பைத் துடைச்சுட்டு இந்த கருப்புத் துணியைக் கட்டிகிட்டு உள்ளே வாங்கஎன்று சொல்லி விட்டு ஒரு துண்டையும், ஒரு கருப்புத்துணியையும் தந்தான்.

பீம்சிங் தயக்கத்துடன் வாங்கிக் கொண்டான். நல்ல வேளையாக தீப்பந்தத்தின் ஒளி கிணறு வரைக்கும் வந்தது. கிணறை நோக்கி அவன் நகர்ந்தவுடன் அந்தச் சீடன் இருட்டில் மறைந்தான். சாதாரண திருட்டுகளில் இந்த விசித்திரச் சிக்கல்கள் இல்லை. பொருளிருக்கும் இடத்தைக் காட்டினால் பின் அவன் மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம். இது எதோ மந்திரக் கல் சமாச்சாரம் என்பதால் தான் இத்தனை அமர்க்களம். ஆனால் குறை சொல்ல அவனுக்கு ஒன்றுமில்லை. இது போல் தனி நபரிடமிருந்து பொருளைத் திருடுவதற்கு அவன் எப்போதும் எட்டு லட்சம் ரூபாய் தான் வாங்குவான். இந்த பாம்பு, கோயில், மந்திரக்கவசம் போன்ற இத்தியாதிகளுக்காகத் தான் அவன் இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாகக் கேட்டிருந்தான். பணம் வாங்கிய பின் புகார் சொல்ல ஒன்றுமில்லை.

வாளியில் தண்ணீரை இறைத்து தலைக்குக் குளித்து விட்டு கருப்புத் துணியை உடுத்திக் கொண்டு காளி கோயிலுக்குள் நுழைந்த போது கர்ப்பக்கிரகத்தில் எரிந்து கொண்டிருந்த எண்ணெய் விளக்கைத் தவிரக் கோயிலில் விளக்குகள் எதுவுமில்லை. அந்த விளக்கில் காளி சிலை அமானுஷ்யத் தோற்றத்துடன் தெரிந்தது. பீம்சிங் தன்னையுமறியாமல் கைகூப்பினான்.

கர்ப்பக்கிரகத்திற்கு வெளியே பல வண்ணப் பொடிகளால் பெரியதாக ஒரு மண்டலம் வரையப்பட்டிருந்தது விளக்கொளியில் மங்கலாகத் தெரிந்தது. மண்டலத்தின் நடுவில் ஒரு மரப்பலகை வைக்கப்பட்டிருந்தது

வா பீம்சிங்என்று ஒரு கம்மிய குரல் கேட்டது.  பீம்சிங் குரல் வந்த பக்கம் திரும்பினான். காளிங்க சுவாமி கருப்பு ஆடையில் வெறும் நிழலாகத் தெரிந்தார். அவரிடமிருந்து ஏதோ ஒரு விசேஷ சக்தி அவனை ஈர்ப்பது போன்ற உணர்வு பீம்சிங்குக்கு வந்தது. அவன் அவரைப் பார்த்து கைகூப்பினான்.

காளிங்க சுவாமி அன்று காலையிலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் ஒரு நீண்ட பூஜையைச் சிறிது நேரத்திற்கு முன்பு தான் முடித்திருந்தார். இனி இவனை இங்கிருந்து அனுப்புவது வரையும் அவர் அந்தப் பட்டினி விரதத்தைத் தொடரப் போகிறார். தன் சக்திகள் மூலம் முன்பே ஓரளவு பீம்சிங்கை அவர் அறிந்திருந்தாலும் அவன் வந்து சேர்ந்து அருகில் இருக்கும் இந்தக் கணம் அவன் அலைவரிசைகளை வைத்து முழுவதுமாக அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது. இந்த வேலைக்குப் பொருத்தமானவனாக இவனை மேலும் மெருகேற்றி விடலாம் என்ற நம்பிக்கை அவருக்குப் பரிபூரணமாக வந்தது.   

பீம்சிங் அனுமானை மனதில் நினைத்துக் கொண்டு வணங்கி அந்த மண்டலத்துக்கு நடுவில் இருக்கும் மனையில் உட்கார்என்று காளிங்க சுவாமி சொன்னார்.

அவர் அவன் அனுமான் பக்தன் என்று அறிந்து அப்படி சொல்கிறாரா இல்லை இந்த பூஜைக்கு அனுமானைத் தான் நினைக்க வேண்டுமா என்பது அவனுக்குத் தெரியவில்லை. அவன் போய் எந்தப் பக்கமாய் பார்த்தபடி உட்கார்வது என்று யோசித்த போது அவர் சொன்னார். “காளியைப் பார்த்தபடி உட்கார்

அந்த வண்ணப்பொடி மண்டலத்தை மிதித்துத் தாண்டித் தான் அவன் அந்த மரப்பலகையில் அமர முடியும். என்ன செய்வதென்று அவன் யோசித்த போது அவர் சொன்னார். “பரவாயில்லை. மிதித்துக் கொண்டே போ.”

பீம்சிங் அப்படியே செய்தான். அவன் மரப்பலகையில் அமர்ந்த அந்தக் கணம் வரை மட்டுமே அவன் முழு நினைவில் இருந்தான். அமர்ந்த பின் காளிங்க சுவாமி ஏதோ மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பிக்க அவன் தன் நினைவை இழக்க ஆரம்பித்தான். கண்கள் மூட ஆரம்பித்தன. அவன் தலைக்குள்ளும், நெஞ்சுப் பகுதியிலும் ஏதேதோ சக்திகள் ஊடுருவுவது போல் தோன்ற ஆரம்பித்தது. உடம்பெல்லாம் சூடாக ஆரம்பித்தது. சுவாமிஜி சொல்லும் மந்திரங்கள் வெகுதூரத்திலிருந்து கேட்பது போல இருந்தது. உடல் உணர்வுகள் எல்லாம் மங்கி, உடலே லேசாகி மிதப்பது போன்ற உணர்வு மெல்ல எழ ஆரம்பித்தது. காளி சிலை உயிர்த்தெழுந்தது போல அவன் முன்பு தோன்றியது.  அவன் ஆகாயத்தில் அண்டவெளியில் மிதப்பது போலவும் நட்சத்திரங்களை மிக அருகில் காண்பது போலவும் தோன்றியது. இத்தனையின் பின்னணியிலும் காளிங்க சுவாமியின் மந்திரங்களின் ஒலி மட்டும் தொலைதூரத்திலிருந்து கேட்பது போலிருந்தது. இப்படி எத்தனை நேரம் போனது என்று அவனுக்குத் தெரியவில்லை.

திடீரென்று காளிங்க சுவாமியின் மந்திரங்கள் நின்றன. அண்டசராசரங்களும் இயக்கம் நின்று போய் மவுனித்தது போன்றதொரு நிசப்தம் நிலவியது. அவன் மிதக்கும் உணர்விலிருந்து மீண்டு வர ஆரம்பித்தான். உடலின் சூட்டை மறுபடி உணர ஆரம்பித்து அவன் மெல்ல கண்களைத் திறந்த போது அவன் எதிரே காளிங்க சுவாமி அமர்ந்திருந்தார். அவர் கண்கள் அமானுஷ்யமாய் ஜொலித்தபடி அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.

பீம்சிங் தன்னையும் அறியாமல் நடுங்கினான்.

(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. Felt goosbumps in Bhimsingh's experience. Super narration sir.

    ReplyDelete
  2. நாகராஜ் மற்றும் நரேந்திரன் தோற்றுவிடக்கூடாது சார்.

    ReplyDelete
  3. பீம்சிங் உணர்வுகளை விவரித்த விதம் அற்புதம் ஐயா....தியானத்தின் போது இது போன்ற உணர்வுகள் அவ்வப்போது ஏற்படுவதுண்டு...அதனால்,பீம்சிங் உணர்வை புரிந்த கொள்ள முடிகிறது...

    ReplyDelete