Monday, February 21, 2022

யாரோ ஒருவன்? 73


விசேஷ நாகரத்தினம் உதிர்க்கப்பட்ட அந்தக் கணத்தில் ரிஷிகேசத்தின் அருகிலிருந்த காட்டு காளிக்கோயிலில் காளிங்க சுவாமியும் ஒரு பிரத்தியேக அதிர்வை உணர்ந்தார். அந்த விசேஷ நாகரத்தினத்தோடு மானசீகமாகத் தொடர்பு வைத்திருக்கின்ற அவருக்கு அதை இயல்பாகவே உணர முடிந்தது.  உணர முடிவதற்கு தூரங்கள் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல என்றாலும் செல்ல முடிவதற்கு கோயமுத்தூர் நிறைய தூரமே. வேண்டுமென்றே நாகராஜ் அத்தனை தூரமாகப் போய் அமர்ந்து கொண்டிருக்கிறானோ? எவ்வளவு தூரத்தில் சென்று அவன் அமர்ந்து கொண்டால் என்ன, விசேஷ நாகரத்தினத்தால் அவன் எத்தனை சக்திகள் பெற்றால் தான் என்ன, அவனிடம் அந்த விசேஷ நாகரத்தினம் அதிக காலம் தங்கி விட முடியாது என்பது தான் விதி என்று காளியே தெரிவித்து விட்டாள். ’இனி அது எத்தனை காலம் அவனிடம் தங்க வேண்டும் என்பதை இந்த காளிங்கன் முடிவு செய்வான்’ என்று எண்ணிப் புன்னகைத்த காளிங்க சுவாமி அதைக் கைப்பற்றும் விதத்தையும், அதற்கேற்ற முகூர்த்தத்தையும் பற்றி யோசிக்க ஆரம்பித்தார்.

ரத் அன்று வேலைக்குப் போகவில்லை. ரஞ்சனியை விசாரிக்க நரேந்திரன் வருகிறான் என்பதால் அந்த நேரத்தில் அவன் வீட்டிலிருக்க விரும்பினான்தீபக் கொடிவேரி நீர்வீழ்ச்சிக்கு அன்று காலையிலேயே கிளம்பிப் போயிருந்தான். நரேந்திரன் விசாரிக்க வருவதை தீபக்கிடம் சொல்ல வேண்டாம் என்று சரத் ரஞ்சனியிடம் சொல்லியிருந்ததால் அவள் அவனிடம் அதைச் சொல்லியிருக்கவில்லை என்பது சரத்துக்குத் திருப்தியாக இருந்தது. நரேந்திரன் விசாரிக்க வருவதை சரத் சொன்ன போது ரஞ்சனி ஆச்சரியத்துடன் கேட்டாள். “ஏன் இத்தனை வருஷம் கழிச்சு....?”

அந்த வெடிகுண்டு வெச்ச தீவிரவாதி பத்தி விசாரிக்கறாங்க போலருக்கு. அதனால நம்ம மாதவனுக்கும் அந்தத் தீவிரவாதிக்கும் இடையில ஏதாவது முன்பகை இருக்கலாமான்னு நினைக்கிறாங்க போலருக்கு. நாங்க இல்லைன்னு சொல்லியிருக்கோம். எதுக்கும் உன் கிட்டயும் கேட்கலாம்னு நினைக்கிறாங்க போலருக்கு...”

அவள் சோகத்துடன் தலையசைத்தாள். அவள் சோகம் சரத்தை என்னவோ செய்தது.

ரஞ்சனி சொன்னாள். “அவர் விசாரிக்க வர்றப்ப நீங்க இங்க இருக்கணும்னு இல்லைநான் பாத்துப்பேன்...”

பரவாயில்ல. இருக்கேன். எனக்கும் ஒருநாள் ரெஸ்ட் கிடைச்ச மாதிரியிருக்கும்.”

நரேந்திரன் தன் விசாரணையின் போது உடனிருக்க சரத்தை அனுமதிக்கவில்லை. தனியாகத்தான் ரஞ்சனியை விசாரித்தான். நரேந்திரன் ரஞ்சனியை மாதவனின் ஆத்மார்த்தமான சினேகிதியாக ஆரம்பத்திலேயே உணர்ந்தான். மாதவனைப் பற்றிப் பேசும் போது அடிக்கடி அவள் கண்கள் ஈரமாகின. குரல் மென்மையாகியது. முகத்தில் சோகம் படர்ந்தது. இந்த துக்கத்தை, இந்த அன்பின் மிகுதியை அவன் கல்யாணிடமும், சரத்திடமும் பார்த்திருக்கவில்லை. அதை அவன் பெண்களை விட ஆண்கள் துக்க உணர்வைக் குறைவாக வெளிப்படுத்தும் இயல்பாக எடுத்துக் கொள்ளவில்லைகாலப் போக்கில் குறைந்து விட்ட அன்பின் வெளிப்பாடாக அது இருக்கலாம். கூடவே எதையோ மறைக்கும் குற்றவாளிகளின் பதற்றத்தை அவர்களிடம் அவன் உணர்ந்திருந்தான். ரஞ்சனியிடம் இப்போதும் இறந்து போன நண்பன் மீதிருந்த அன்பு குறைவில்லாமல் வெளிப்பட்டது. மாதவன் இறந்து போன சமயத்தின் நிகழ்வுகளை அவளும் சரத், கல்யாணைப் போலவே சொன்னாள். அவர்கள் மூலமாகத் தான் அவளும் அதைக் கேள்விப்பட்டிருக்க வேண்டும் என்பதை நரேந்திரன் புரிந்து கொண்டான்.

விசாரணையின் இடையே திடீரென்று நரேந்திரன் கேட்டான். “உங்களுக்கு நாகராஜ்னு நண்பர் யாராவது இருந்தாரா?”

அவர்களைப் போல் ரஞ்சனி திடுக்கிடவில்லை. யோசனையுடன்இல்லையேஎன்றாள்.

மாதவனுக்கு விரோதிகள் யாராவது இருக்காங்களா?”

குரல் கரகரக்க ரஞ்சனி சொன்னாள். “அவனை யாராலும் வெறுக்க முடியாதுங்க. ரொம்ப நல்லவன். பெருந்தன்மையானவன்...”

மாதவனின் பெற்றோர் பற்றிக் கேட்ட போது மிகுந்த வருத்தத்துடன் சொன்னாள். “ரொம்ப நல்ல மனுஷங்க அவங்க ரெண்டு பேரும். அன்பைத் தவிர வேறு எதுவும் தெரியாதவங்க. அவனோட அம்மா சமையலை நாங்க மூனு பேரும் நிறைய நாள் சாப்பிட்டிருக்கோம். அவ்ளோ நல்லா சமைப்பாங்க. அன்பா பரிமாறுவாங்க. அவங்களுக்கு கடவுள் இவ்ளோ பெரிய சோதனையைத் தந்திருக்க வேண்டாம்...”

நீங்க இப்பவும் அவங்களைச் சந்திக்கறதுண்டா?”

குற்றவுணர்வுடன் அவள் சொன்னாள். “இல்லை. அவங்களைச் சந்திச்சு அந்த துக்கம் பார்க்கற தைரியம் இவருக்கும் இல்லை. போய் அவங்களுக்கு அவனை ஞாபகப்படுத்தின மாதிரி இருக்க வேண்டாம்னு சொன்னார். அதுவும் சரின்னு தோணுச்சு. ஆனா என்னோட பிரார்த்தனையில அவங்க இல்லாத நாளில்லை... கடவுளே... இனி எந்தக் கஷ்டத்தையும் கூடுதலா அவங்களுக்குக் குடுத்துடாதேன்னு கேட்காத நாளில்லை.” சொல்லச் சொல்ல அவள் குரல் உடைந்தது.

அந்த துக்கமும், அந்தப் பிரார்த்தனையும் உண்மை என்பதை நரேந்திரனும் உணர்ந்தான். திடீரென்று ரஞ்சனியின் முகத்தில் திகைப்பு தெரிந்தது.

நரேந்திரன் கேட்டான். “என்ன?”

ரஞ்சனி தயக்கத்துடன் மெல்லச் சொன்னாள். “திடீர்னு மாதவன் இங்கே இருக்கற மாதிரியும் நாம பேசறத கேட்டுகிட்டிருக்கற மாதிரியும் ஒரு தோணல்

அவளுக்கு அப்படி ஏன் தோன்றுகிறது என்று புரியவில்லை. ஒருவேளை பழைய நினைவுகளை நினைவுபடுத்தியதால் இருக்கலாம்.

மாதவன் உயிரோட இருந்தப்பவே உங்களுக்கும் சரத்துக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருந்ததா?”


ரஞ்சனி கண்கலங்க வேகமாகச் சொன்னாள். “இல்லை

இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் என்று நரேந்திரன் முன்பே நினைத்திருக்கவில்லை. வாயிலிருந்து வந்த பின் தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறோம் என்பது அவனுக்குப் புலனாகியது. அவனும் திகைத்தான். அவனை மீறி அந்தக் கேள்வியைக் கேட்டிருப்பதாகத் தோன்றியதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஏதோவொரு அமானுஷ்யம் அங்கே சூழ்ந்திருப்பதாக அவனுக்கும் தோன்ற ஆரம்பிக்க அவன் வேறெதுவும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

நரேந்திரனுக்கு ரஞ்சனியிடம் நடத்திய விசாரணையின் கடைசி சில நிமிடங்களை எப்படி எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. அவள் மாதவன் அந்த அறையில் இருப்பது போலவும் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருப்பது போலவும் உணர்வதாகச் சொன்னது கற்பனையாக அவனுக்குத் தோன்றவில்லை. அதற்கேற்றாற் போல அவன் அதுவரை கேட்கவே நினைத்திருக்காத கேள்வியை அவன் கேட்டு முடித்ததும் அவனுக்கு இப்போதும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏதோ ஒரு சித்துவித்தை நடந்திருப்பது போலத் தோன்றுவது ஏன் என்று கேள்வியைக் கேட்டுக் கொண்ட போது நாகராஜின் நினைவு ஏனோ வந்தது அவனிடம் நிறைய நாகசக்திகள் இருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். அவனிடம் கேட்டால் பதில் கிடைக்கலாம். ஆனால் அவனே மர்ம ஆசாமியாக இருக்கிறான். மாதவனின் நண்பனாக அவன் இல்லாமலிருந்த போதும் நண்பனாக நடித்தது ஏன் என்று அவனிடம் விசாரிக்க வேண்டும். அதற்கு  அவன் சொல்வானா, சொன்னாலும் என்ன பதில் சொல்வான் என்று தெரியவில்லை. அவனை மிரட்டி அதிகாரத்தைக் காட்ட வழியில்லை.... அவனிடம் பேசப்போவதற்கு முன்னால் அந்த நாகசக்தி விஷயமே உண்மை தானா என்று தெரிந்துகொள்ள வேண்டும். யாரிடம் கேட்பது என்று யோசித்த போது பரந்தாமனின் நண்பர் நாதமுனி நினைவுக்கு வந்தார். ஆராய்ச்சியாளரான அந்த மனிதரைப் பார்த்துப் பேசினால் சும்மா கதை சொல்லாமல் அறிவுபூர்வமான தகவல்களைச் சொல்லக்கூடும்.

நாகராஜைப் பார்த்துப் பேசுவதற்கு முன் சரத், கல்யாண் இருவரும் மாதவன் மரண விஷயத்தில் மணாலியில் ஏதாவது தகிடுதத்தம் செய்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்மதன்லாலிடமிருந்து உண்மைகளைக் கறக்க முடிந்தால் அன்று மணாலியில் நடந்தது என்ன என்பதைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் அவன் அவ்வளவு சீக்கிரம் முழுஉண்மைகளைக் கக்குபவன் அல்ல... அடுத்ததாகச் சொல்ல முடிந்தவன் டாக்ஸி டிரைவர் க்யான்சந்த்...

இந்தச் சிந்தனைகளின் முடிவில்  நாதமுனியிடமும், க்யான் சந்திடமும் பேசுவது என்று நரேந்திரன் முடிவெடுத்தான். அந்த நேரத்தில் தான் மணாலியிலிருந்து அவன் ஆள் ஒருவன் போன் செய்தான்.

சார் க்யான் சந்த் திடீர்னு காணாமல் போயிட்டான்



(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV




இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

சாணக்கியன் இரண்டு பாகங்களும் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அச்சகம் சந்திக்கும் எதிர்பாராத சூழல் காரணமாக மேலும் ஒரு வாரம் தாமதமாகும் போல் தெரிகிறது. வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்



2 comments:

  1. Very intriguing. Gyanchand's disappearance, Madhavan's presence feeling and Kalingasamy''s interest in vishesha Nagarathinam - all are kindling interest. Super sir.

    ReplyDelete
  2. க்யான் சந்த் காணமல் போனதுக்கு காரணம் அந்த தீவிரவாதியாக இருக்கலாம்...

    ReplyDelete