Thursday, February 24, 2022

இல்லுமினாட்டி 143



ல்லுமினாட்டிக்கு விஸ்வம் ஒளிந்திருந்த இடத்தையும் அதன் சரித்திரத்தையும் கண்டுபிடிக்க அதிக காலம் தேவைப்படவில்லை. வாங் வே சொல்லியிருந்த பாழடைந்த சர்ச், இல்லுமினாட்டி உளவுத்துறை ஆட்கள் சாலமனைப் பார்த்திருந்த சர்ச் தான் என்று உடனே தெரிந்து விட்டது.  சாலமன் ம்யூனிக்கில் தங்கியிருந்த ஓட்டல் அறையில் இல்லுமினாட்டியின் பழங்காலக் கோயில்கள் குறித்த புத்தகங்களில் ஒரு புத்தகத்தில் அவர் ஒரு பக்கத்தில் அவர் சிறிய அட்டை ஒன்றை வைத்துக் குறியிட்டிருந்தார். 1907 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த அந்தப் புத்தகத்தில் அந்தப் பக்கத்தில் ஜெர்மானிய எழுத்தாளர் கதே ஒரு கவிதை எழுந்திருந்தார் என்ற செய்தியைப் பார்த்தவுடனே அந்தக் கோயிலின் 1907 வரை சரித்திரமும் தெரிந்து விட்டது. அதற்குப் பின் நடந்த நிகழ்வுகளையும் அறிவதில் அவர்களுக்குச் சிரமம் இருக்கவில்லை.

அடுத்து என்ன செய்வது என்று எர்னெஸ்டோ மற்றவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சாலமன், வாங்  வே என்ற களைகளைக் களைந்த பின் விஸ்வம் என்ற விஷ விருட்சத்தை வேரோடு பிடுங்க வேண்டி இருந்தது. அந்த சர்ச்சுக்கு ஒரு பெரும்படையையே அனுப்ப எர்னெஸ்டோ தயாராக இருந்தார்.  ஆனால் அது வரை விஸ்வம் அங்கிருக்க மாட்டான் என்பதை இம்மானுவல் சுட்டிக் காட்டினான். கண்டுபிடிக்கப்பட்டு விட்டோம் என்று தெரிந்தபின் கண்டிப்பாக அங்கிருக்க மாட்டான் என்று அவன் சொன்னான். மறுபடியும் ஆரம்ப சூழ்நிலையே திரும்பவும் வந்திருந்ததில் சலிப்பை உணர்ந்த எர்னெஸ்டோ க்ரிஷ் என்ன நினைக்கிறான் என்று கேட்க அவன் பக்கம் திரும்பிய போது அவன் ஏதோ ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான்.

நீ என்ன யோசிக்கிறாய் க்ரிஷ்?”

க்ரிஷ் சொன்னான். “அந்த சர்ச் பற்றி யோசிக்கிறேன். அதில் ஏதோ சில அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். அங்கு இல்லுமினாட்டிகளின் வழிபாடு நின்ற பின் வேறு யார் வழிபாடும் தொடர்ந்து நடக்க அந்தச் சக்திகள் அனுமதிக்கவில்லை என்று வெளிப்படையாகவே தெரிகிறது. சிறிது காலம் ஜெர்மன் எவாஞ்சலிக்ஸ், பின் ரோமன் கத்தோலிக்கர்கள், கடைசியாக  ப்ராட்டெஸ்டண்ட்ஸ் என எல்லோரும் சிறிது காலத்திற்கு மேல் அங்கு தொழ அனுமதிக்கவில்லை. ரகசிய தீட்சை நடந்த இடங்களில் அது போன்ற சக்திகள் வலிமையாக உலாவிக் கொண்டிருக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்…”

ரகசிய தீட்சை என்றால் என்ன?” எர்னெஸ்டோ கேட்டார்.

க்ரிஷ் அவருக்குச் சுருக்கமாகச் சொல்வது எப்படி என்று யோசித்துச் சொன்னான். “தகுதியை வளர்த்துக் கொண்ட ஒருவருக்கு மேலான சக்திகளைத் தரும் உபதேச மந்திரங்களுடன் கூடிய சடங்குகளை ரகசிய தீட்சை என்பார்கள். பண்டைய எகிப்தியர்கள் கோயில்களில் இந்த ரகசியத் தீட்சைகளுக்கு ஒரு தனி இடம் சேர்ந்தே இருக்கும்அதை உங்கள் இல்லுமினாட்டி கோயில்களிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பின்பற்றி இருக்கலாம்…”

இம்மானுவல் சொன்னான். “விஸ்வம் இது போன்ற சக்திகளைத் தேடி அவனாய்ப் போகிறானா, இல்லை அந்தச் சக்திகள் அவனை இழுக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் சரியாக இப்போது கடைசியாக அவன் போய்ச் சேர்ந்திருக்கும் இடமும் சக்திகளைச் சார்ந்தது என்பது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது.”

எர்னெஸ்டோ புன்னகையுடன் சொன்னார். “அது அவன் விதியாக இருக்கலாம். ஜான் ஸ்மித்திடம் திபெத்திய யோகி சொன்னது போல அது நம் கர்மாவாகவும் இருக்கலாம். வாங் வே சாவதற்கு முன் கண்டிப்பாய் கடைசியில் விஸ்வம் அங்கே நிறைய சக்திகள் பெறுவான் என்றும் முடிவில் அவன் தான் ஜெயிப்பான் என்றும் அந்த ரகசிய ஆவணத்தில் எழுதியிருந்ததை வைத்துச் சொன்னதாகச் சொன்னாய். அவன் எதில் எப்படி வெல்வான் என்று தெரியாது. ஆனால் இல்லுமினாட்டியின் தலைவனாக அவன் இனி எப்போதும் ஆக முடியாதபடி நடவடிக்கை எடுத்திருக்கிறேன். இந்த இலட்சியத்தில் அவன் இனி என்றுமே ஜெயிக்க முடியாது...”

எல்லோரும் அவரைத் திகைப்புடன் பார்த்தார்கள். எர்னெஸ்டோ சொன்னார். “அவனை இல்லுமினாட்டி உறுப்பினர் பதவியிலிருந்தே விலக்கி அந்த செய்தியை நான்  அவனுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியிருக்கிறேன். இந்தப் பத்து வருட காலத்தில் நானாக என் கைப்பட டைப் பண்ணி அனுப்பிய ஒரே மெயில் இது தான்...”


ஜிப்ஸி தான் அந்த மின்னஞ்சலை முதலில் படித்தவன். விஸ்வம் பாதாள அறையில் தியானத்தில் இருந்தான். அவனாக எழுந்து வந்தால் ஒழிய அவனை எழுப்ப முடியாது. இந்த முறை அவன் ஒரு முடிவை எட்டுவதில் தீவிரமாக இருக்கிறான். அவனுடைய எதிரிகளும் அதில் தீவிரமாக இருப்பது எர்னெஸ்டோவின் மின்னஞ்சலில் இருந்து தெரிகிறது.

எர்னெஸ்டோ எழுதியிருந்தார். “அன்பு விஸ்வம், தாங்கள் இதற்கு முன் எழுதிய கடிதமும், பின் அனுப்பிய மின்னஞ்சலும் கிடைக்கப்பெற்று தாங்கள் தங்கள் பக்கக் கருத்துக்கள் சொல்வதற்கு வரும் புதன் கிழமை அன்று ஒரு வாய்ப்பையும் தங்களுக்குத் தலைமைக்குழு தந்திருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாகத் தாங்கள் இந்த உயர்ந்த அமைப்பின் தலைவரையே கொலை செய்ய முயன்றதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன. கண்டனத்திற்குரிய இந்தச் சதிச் செயலில் ஈடுபட்ட தங்களை இல்லுமினாட்டியின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிடுகிறோம். தங்களிடம் எந்த வகையான தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்று உறுப்பினர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.  அப்படித் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தால் அந்த உறுப்பினர்களும் நீக்கப்படுவார்கள் என்று இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறார்கள்.

இப்படிக்கு
தலைவர்

விஸ்வத்தின் இல்லுமினாட்டி தலைவர் பதவியாசை குழிதோண்டி ஆழமாக என்றென்றைக்குமாய் புதைக்கப்பட்டு விட்டது என்பது ஜிப்ஸிக்குப் புரிந்தது.   இது தெரியாமல் அவன் தீவிரத் தியானத்தில் ஈடுபட்டிருக்கிறான்.

இந்தப் பூமியை விட்டுக் கிளம்பும் நேரத்தில் விஸ்வத்தின் வெற்றியைப் பார்த்து விட்டுப் போக வேண்டும் என்று ஜிப்ஸி ஆசைப்பட்டிருந்தான். இரண்டே நாளில் கிளம்பப் போகிறான் அவன். அவன் விஸ்வத்தின் மூலம் ஆசைப்பட்டது நடக்கவில்லை.   

சென்ற முறையாவது ஆரகிள் சொன்னதில் இரண்டு மூன்று அர்த்தங்கள் எடுக்க முடிந்தது போல் தான் வாசகங்கள் இருந்தன. ஆனால் இந்த முறை மிகத் தெளிவாகத் தான் எழுதியிருந்தது. அதில் சொல்லியிருந்த வர்ணனை விஸ்வத்தைத் தவிர வேறு யாருக்கும் பொருந்தாதது போல் தான் இப்போதும் தோன்றுகிறது.

மனிதர்களின் எண்ணங்களையும் விதியின் போக்கையும் அவனால் நிறையவே தெரிந்து கொள்ள முடியும். ஆனால் முழுவதுமாக அவனால் அறிய முடியவில்லை. சிலவற்றை விதி முன்பாகவே தீர்மானித்து வைத்திருக்கிறது. சிலவற்றைச் சமயம் வரும் போது தான் தீர்மானிக்கிறது. விஸ்வத்தின் விதியின் போக்கை ஆரம்பத்திலிருந்தே அவன் சரியாகவே கணித்து வைத்திருந்தான். ஆனால் விதியின் முடிவு எதிர்பாராத விதங்களில் கேள்விக்குறியாய் நின்றது.

அவன் ஆரம்பத்தில் விஸ்வத்தின் விதிப் போக்கைப் பார்க்கையில் அதில் க்ரிஷின் குறுக்கீடு தெரிந்திருக்கவில்லை. சொல்லப் போனால் க்ரிஷ் என்ற முக்கியமான மனிதன் இங்கே இருக்கிறான் என்றே கூட அவனுக்குத் தெரியவில்லை. அவன் சிறிதும் எதிர்பாராத விதமாய் அந்த இன்னொரு வேற்றுக்கிரகவாசி திடீரென்று நுழைந்து க்ரிஷை விஸ்வத்தின் பாதைக்கு நகர்த்தி வைத்து விட்டான். அதன் பின் அவர்கள் இருவர் விதியும் அடிக்கடி குறுக்கிட ஆரம்பித்தன.

இல்லுமினாட்டியின் பக்கம் விஸ்வத்தை ஜிப்ஸி நகர்த்திய போது அருமையான சாதகமான சூழல் இருந்தது. ராஜினாமா செய்யப் போகும் தலைவராக எர்னெஸ்டோ இருந்தார். வாங் வே போன்ற சிலர் அடுத்த தலைவர் பதவிக்குத் தயாராக இருந்தார்கள் என்றாலும் அவர்கள் யாருமே விஸ்வத்துக்கு இணையாகாதவர்கள். விஸ்வம் கிட்டத்தட்ட முடிசூடும் போது இல்லுமினாட்டிக்குச் சிறிதும் சம்பந்தமேயில்லாத க்ரிஷ் எப்படியோ அங்கு வந்து சேர்ந்தான். விஸ்வத்தைத் தடுத்ததோடு அல்லாமல் சாகவும் வைத்தான்.  

வேறொரு உடலில் புகுந்து விஸ்வம் மீண்டு வந்து எர்னெஸ்டோவையே தீர்த்துக் கட்டும் அளவு விஸ்வரூபம் எடுத்தான். அவரை விஸ்வத்திடமிருந்து காப்பாற்றும் சக்தி கண்டிப்பாக க்ரிஷிடம் இருக்கவில்லை. ஆனால் அமானுஷ்யனைப் பேசி அழைத்து வந்து க்ரிஷ் அவரைக் காப்பாற்றி விட்டான். க்ரிஷ் போய்ப் பேசியிருக்காவிட்டால் அமானுஷ்யன் கண்டிப்பாக இங்கே வந்திருக்க மாட்டான். அமானுஷ்யன் மட்டும் வராமல் இருந்திருந்தால் எர்னெஸ்டோ இன்னேரம் இறந்திருப்பார். அமானுஷ்யனின் பாதுகாவல் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எர்னெஸ்டோ அந்தப் பங்களாவை விட்டு வெளியிலிருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அனாயாசமாக விஸ்வம் தாக்கிக் கொன்றிருப்பான். ஆனால் இப்போதைய சக்திகளை வைத்து அமானுஷ்யனைத் தாண்ட முடியாத நிலைமையில் இருந்ததால் விஸ்வம் அந்த முயற்சிக்கே போகவில்லை.  ஆனாலும் அருமையாகத் திட்டமிட்டு வாஷிங்டனில் அந்த ஒயினில் விஷத்தைச் சேர்த்தான். இல்லுமினாட்டியின் உளவுத்துறையும் கூட அதைக் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அமானுஷ்யன் அதைக் கண்டுபிடித்து அவரைப் பிழைக்க வைத்து விட்டான். அதோடு எத்தனையோ சேர்ந்து நடந்து விட்டது. 

ஜிப்ஸி இதையெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆரகிள் சொன்னதாய் கர்னீலியஸ் எழுதி வைத்திருந்த குறிப்பும் பொய்யாகி விட்டது. அதில் சொல்லப்பட்டது போல விஸ்வம் கூடுதல் சக்திகள் பெற்றாலும் அதில் அவன் என்ன பலன் அடையப்போகிறான்? அதை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்ய முடியும்? அதிக பட்சமாய் எர்னெஸ்டோவையும் க்ரிஷையும் கொல்ல முடியும். சக்திகளின் அளவுகள் அதிகமாய் இருந்தால் அந்த அமானுஷ்யனையும் கொல்ல முடியும். அதன் பின்?

(தொடரும்)
என்.கணேசன்

இந்த நாவல் உட்பட என் அச்சு நூல்களை ஆன்லைனில் அமேசானில் வாங்க லிங்க்- 

https://www.amazon.in/s?me=AU2MIH1I41Z2K&marketplaceID=A21TJRUUN4KGV




இந்த ஆண்டு சென்னை புத்தகக் கண்காட்சியில் ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் பங்கு பெறவில்லை. எனவே நூல்கள் வாங்க விரும்புவோர் வழக்கம் போல் பதிப்பாளரை 9600123146 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இம்மாத இறுதியில் வெளியாகவிருந்த சாணக்கியன், அச்சகம் சந்திக்கும் சில எதிர்பாராத சூழல்களால் மேலும் ஒரு வாரம் தாமதமாகும் போலத் தெரிகிறது. சாணக்கியன் வெளியானவுடன் அதை அறிவிக்கிறேன்.

அன்புடன்

என்.கணேசன்

 




4 comments:

  1. So interesting what next.eagerly waiting.

    ReplyDelete
  2. No words to express the depth of the characters. A great thriller novel.

    ReplyDelete
  3. So, ஜிப்ஸி, விஸ்வத்தை விட்டு விட்டு கிரிஷை பயன்படுத்த யோசிப்பானோ...

    ReplyDelete
  4. கர்னிலியஸ் எழுதிய விசயத்திலும் சில புரியாத வார்த்தைகள் இருக்கலாம்... அதில் உள்ளவை இப்போது விஸ்வத்துக்கு சாதகமாக இருப்பது போல தோன்றும்...
    சமயம் வரும் போது உண்மையான அர்த்தம் வெளிப்படும்....

    ReplyDelete