Monday, January 31, 2022

யாரோ ஒருவன்? 70


வேலாயுதம் ஒரு கதையை முன்பே தயாரித்து வைத்திருந்தார். அதை அவர் நாதமுனியிடம் சொல்ல ஆரம்பித்தார். ”போன வாரம் ஒரு நாள் சாயங்காலம் நான் வாக்கிங் போய்ட்டு வழியில இளைப்பாற ஒரு இடத்துல உக்கார்ந்தேன்அப்ப ஒரு பாம்பாட்டியும் பக்கத்துல வந்து உட்கார்ந்தான். சும்மா கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். அப்ப நாகரத்தினம் பத்தியும் பேச்சு வந்துச்சு. எனக்கு உடனே உங்க ஞாபகம் வந்துச்சு. ஏன்னா கல்யாண், மாதவன், சரத் மூனு பேரும் நீங்க நாகரத்தினம் பத்திச் சொன்னதை எல்லாம் பிரமிப்போட வீட்ல பேசிப்பாங்க. ஆனா பேச்சோட பேச்சா அந்தப் பாம்பாட்டி விசேஷ நாகரத்தினம்னு ஏதோ ஒன்னு இருக்கறதா சொன்னான். அது எதோ ஆயிர வருஷத்துக்கு ஒரு தடவை தான் உருவாகுமாம். அந்த விசேஷ நாகரத்தினம் வச்சிருக்கறவன் கடவுள் மாதிரி சக்திகள் அடைஞ்சுடுவானாம்.... வீட்டுக்கு வந்தவுடன கல்யாண் கிட்ட இதைச் சொன்னேன். அப்ப கல்யாண் உங்கள ஞாபகப்படுத்திகிட்டு சொன்னான். “அங்கிள் எங்க கிட்ட நாகரத்தினங்கள் பத்தி எத்தனையோ சொல்லியிருக்கார். ஆனா இந்த மாதிரியான விசேஷ நாகரத்தினம் பத்தி ஒன்னும் சொன்னதில்லையேப்பான்னு சொன்னான்.... இப்ப நீங்க நாகராஜ்ங்கற பேரைச் சொன்னவுடனே எனக்கு திடீர்னு ஞாபகம் வந்துச்சு. அந்த மாதிரி ஒரு நாகரத்தினம் இருக்கறது உண்மை தானா?”

விசேஷ நாகரத்தினம் பேச்சோடு பேச்சாக பேசப்படும் விஷயமில்லை. ஆனால் பாம்பாட்டி சொன்னது என்று அவர் சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.... நாதமுனி சொன்னார். “அந்த மாதிரி விசேஷ நாகரத்தினம் பத்தி எந்தக் குறிப்பும் வழக்கமா நாகரத்தினங்களைப் பத்திக் குறிப்பிடற புத்தகங்கள்ல இல்ல ஓய்.... பாம்பாட்டிகளும், பாம்புகளை வழிபடற பழங்குடிகளும் மட்டும் தான் அதைப் பத்திப் பேசறாக. ஆனா அவங்களும் பரம்பரை பரம்பரையாய் அவங்களுக்குச் சொல்லப்பட்டத திருப்பிச் சொல்லிட்டு வர்றாகளேயொழிய அவங்க கிட்டயும் எழுத்து பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவங்க அந்த மாதிரியான நாகரத்தினத்தை உதிர்த்தவுடனே அந்த நாகம் இறந்துடும்னும் சொல்றாக. அதை உதிர்க்கறதுக்கு முன்னாடி ரெண்டு நாள்ல இருந்தே பிரத்தியேகமான ஒரு மணம் வரும்னும் சொல்றாக. அதெல்லாம் எந்த அளவு உண்மைன்னு தெரியல. நாகரத்தினங்கள் விசேஷ சக்திகள் தரும்கிறது உண்மை. இந்த விசேஷ நாகரத்தினம் கூடுதலாய் அதிக சக்திகள் தரலாம்னு வேணும்னா சொல்லலாம். ஆனா எந்த விசேஷ சக்தியும் ஒருவனைக் கடவுளாக்கிடாது ஓய்... அதிகபட்சமா விசேஷ சித்திகள் பெற்ற ஒரு சித்தனாக்கலாம். சித்தர் வேற கடவுள் வேற இல்லயா?”

வேலாயுதம் உள்ளத்தில் ஒரு பரபரப்பான உற்சாகத்தை உணர்ந்தார். அந்த விசேஷ நாகரத்தினம் பற்றி பாம்பாட்டிகளும், பாம்புகளை வணங்கும் பழங்குடி மக்களும் காலம் காலமாகப் பேசுகிறார்கள் என்பதை இந்த ஆளும் சொல்கிறான். அந்த வித்தியாச மணம், நாகரத்தினத்தை உதிர்த்தவுடன் இறக்கும் நாகம் இதெல்லாம் கூட இந்தாளுக்கும் தெரிந்திருக்கிறது. அப்படியானால் பாம்பாட்டி சொன்னதெல்லாம் உண்மையாகவே இருக்க வேண்டும்.

விசேஷ சக்தின்னு சொன்னவுடன ஞாபகம் வருது. வட இந்தியால யாரோ ஒரு மகராஜ் இருக்கானாம். அவனுக்கு நாகசக்தி இருக்காம். ஒரு தடவை அவன் தரிசனம் கிடைக்கணும்னா நாம அஞ்சு லட்சம் ரூபாய் தரணுமாம். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஆளைத்தான் அவன் பார்ப்பானாம். நீங்க கேள்விப்பட்டுருக்கீங்களா?’

கேள்விப்பட்டிருக்கேன். என்னோட ஆராய்ச்சி ஆர்வத்துக்கு உதவற மாதிரி எதாவது அந்த ஆள் கிட்டே கிடைக்குமான்னும் யோசிச்சிருக்கேன். ஆனா ஒரு தடவை பார்க்கறதுக்கு அஞ்சு லட்சம்னு சொன்னவுடனே அந்த யோசனையைக் கைவிட்டுட்டேன். அதுவும் அந்த ஆளோட அப்பாயின்மெண்டுக்கு நாலஞ்சு மாசம் காத்திருக்கணும்னும் வேற சொன்னாக ஓய்

ஆமா. அதை நானும் கேள்விப்பட்டேன். கலிகாலம்னு நினைச்சிகிட்டேன். ஒரு தொழில் செய்யணும்னா எத்தனை முதலீடு, எத்தனை கஷ்டங்கள், எத்தனை பிரச்னைகள் இருக்கு. ஆனால் இந்த மாதிரியான ஆள்க எத்தனை சுலபமாய் சம்பாதிச்சிடறாங்க பார்த்தீங்களா? ஆனா அந்த மாதிரி ஒரு விசேஷ நாகரத்தினம் சாதாரணமான மனுஷங்க கைல கிடைக்க வாய்ப்பிருக்கா?”

நாதமுனி உடனடியாகப் பதில் சொல்லாமல் யோசித்துச் சொன்னார். “உருவாகறது அந்த மாதிரி விசேஷ சக்தி இருக்கிற சூழ்நிலைகள்ல தான் உருவாக முடியும். ஏன்னா நாகரத்தினங்கள்லயும் அது அபூர்வமானது விசேஷமானதுங்கறதால. அப்படி உருவான பிறகு எதாவது ஒரு பேரதிர்ஷ்டசாலிக்கு கிடைக்கவும் செய்யலாம். அதான் சொன்னேனே கிடைச்சாலும் ஒருத்தன் கடவுளாயிட முடியாது. ஆனால் எத்தனையோ சக்திகள் கூடுதலா வந்து சேரலாம்...”

அதற்கு மேல் அங்கு அதிக நேரமிருக்க வேலாயுதத்தால் முடியவில்லை. சம்பிரதாயத்திற்கு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு கண்கலங்க பரந்தாமன் தம்பதியரை நிறைய விசாரித்ததாய் தெரிவிக்கச் சொல்லி விட்டு அங்கிருந்து பரபரப்புடன் வேலாயுதம் கிளம்பினார்.


ல்யாணிடம் பேசி விட்டு வந்த பின் நீண்டநேரம் சரத் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். நாளை நரேந்திரன் விசாரிக்க வீட்டுக்கு வரும் சமயத்தில் தீபக் வீட்டில் இல்லாமல் இருப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. “என் மரணம் இயற்கையல்ல, என்னைக் கொன்று விட்டார்கள்என்று யாரோ சொல்வது போல் கனவு கண்ட அவன் அதற்கும், அவன் பெற்றோரின் நண்பனின் மரணத்திற்கும் முடிச்சு போட்டால் அது தேவையில்லாத பிரச்சினை... நரேந்திரன் வந்து விசாரிக்கும் சமயத்தில் அவன் இருக்கக்கூடாதது மட்டுமல்ல, நரேந்திரன் விசாரிக்க வந்து போனதே அவனுக்குத் தெரியக்கூடாது. ரஞ்சனியிடம் நாசுக்காக அதைச் சொல்லி வைக்க வேண்டும்...

தீபக் நண்பர்களுடன் கொடிவேரி நீர்வீழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று சில நாட்களாகச் சொல்லி வருகிறான். அதற்காக சரத்தின் காரைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். சத்தியமங்கலத்தில் இருக்கும் போது அங்கிருந்து அந்த நீர்வீழ்ச்சி பக்கமானதால் சரத், கல்யாண், மாதவன் மூவரும் சேர்ந்து பல முறை போயிருக்கிறார்கள். ரஞ்சனியை அவர்களுடன் சகஜமாக பழக விட்டாலும் அவள் வீட்டார் வெளியூர்களுக்கு அவர்களுடன் தனியாக அனுப்புவதில்லை என்பதால் அவளை விட்டுவிட்டு அவர்கள் மூவரும் போவார்கள்.... மாதவன் மரணத்திற்குப் பின் அவன் நினைவை அதிகம் ஏற்படுத்தும் எதையும் செய்ய அவர்களுக்குத் தயக்கம் இருந்ததால் பிறகு அவர்கள் அந்த நீர்வீழ்ச்சிக்குப் போனதில்லை... 

நாளை தீபக்கை அந்த நீர்வீழ்ச்சிக்குப் போய்வரச் சொல்லிவிடலாம் என்று சரத் முடிவு செய்தான். தீபக்குக்குப் போன் செய்து நாளை அவன் காரை எடுத்துக் கொண்டு கொடிவேரிக்குப் போய்வரலாம் என்று சொல்லி அவனும் சந்தோஷமாகச் சரியென்று சொன்னபின் தீபக் பிரச்சினையாகாதபடி செய்த திருப்தி சரத்துக்கு ஏற்பட்டது. நரேந்திரன் கேள்விகளால் ரஞ்சனி நிறைய பாதிக்கப்படாமல் இருந்து விட்டால் நன்றாயிருக்கும்.


வேலாயுதம் வீடு வந்து சேர்ந்தவுடன் வழக்கம் போல் பக்கத்து வீட்டைக் கவனிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளுக்கும் விடைகொடுத்திருந்தார். சக்தி வாய்ந்த விசேஷ நாகரத்தினம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஓரிரு நாளில் கிடைத்து விடும் என்று பாம்பாட்டி சொல்லி விட்டிருந்ததால் அது சம்பவிக்கும் சமயத்தில் பக்கத்து வீட்டில் வித்தியாசமாக ஏதாவது நிகழ்கிறதா என்று காணும் பேராவலில் அவர் இருந்தார். அன்று மாலையில் அவர் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் பக்கத்து வீட்டு அறையின் மேல் ஜன்னலும் மூடப்பட்டு விட்டது. ஒருவேளை அவர் வேவு பார்ப்பதை நாகராஜ் அறிந்து கொண்டு விட்டானோ தெரியவில்லை. அது அவர் ஆர்வத்தையும் சிந்தனாசக்தியையும் அதிகப்படுத்தி விட்டது. எங்கிருந்து இனி வேவு பார்ப்பது, எங்கே எந்தக் கோணத்தில் பார்த்தால் கொஞ்சமாவது தெரியவரும் என்று ஆராய்வதற்காக அங்குமிங்கும் தன் வீட்டில் நின்று பார்ப்பதற்கே அவர் சிரமப்படவேண்டி இருந்தது. காரணம் அவர் மருமகள் அவர் ஓட்டத்தையும், பரபரப்பையும் காண நேர்ந்தால் அவரை ஒரு விசித்திர ஜந்து போல பார்த்தாள். அவள் தன் கருத்தை வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் நடக்கும் கூத்தை அவள் தவறாமல் மகளை அழைத்துக் காட்டினாள். தர்ஷினி தாயை விடக் கேவலமாய் அவரைப் பார்ப்பதுடன் தன் அபிப்பிராயங்களை ஒளிக்காமல் வாய்விட்டுச் சொன்னாள். அதனால் அவர் மருமகளோ, பேத்தியோ இருக்கும் நேரங்களில் கவுரமாக நடந்து கொள்ள வேண்டி வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் அறைகளில் அடைந்து கொண்ட பின் தான் அவர் சுதந்திரமாக அங்குமிங்கும் நின்று பக்கத்து வீட்டைக் கவனிக்க முடிந்தது.

இன்று இரவு பத்து மணியாகி விட்டிருந்த போதிலும் கல்யாண் ஆபிசிலிருந்து இன்னும் வரவில்லை. இன்றைக்கு அவனுக்கு நிறைய வேலைகள் போலிருக்கிறது. நாதமுனி சொல்லியிருந்த விஷயங்களை அவன் போனில் கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் வந்தவுடன் தான் விவரமாகச் சொல்ல வேண்டும்.

பக்கத்து வீட்டில் எல்லா மின் விளக்குகளும் அணிந்திருந்தாலும் தீபவிளக்குகள் எரிவதன் ஒளி அங்குமிங்கும் சிறிது தெரிந்தது. பூஜையில் தீவிரமாக இருக்கிறான் போல் இருக்கிறது... மெல்ல தன் வீட்டுக்கு வெளியே வந்தவர் தீயை மிதித்தவர் போலப் பின்வாங்கினார். காரணம் பாம்பாட்டி பக்கத்து வீட்டின் முன்னால் சென்று கொண்டிருந்தான். நத்தை கூட அவனை விட வேகமாக நகரும். அந்த அளவு நிதானமாக நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாம்பாட்டி பக்கத்து வீட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

   

(தொடரும்)
என்.கணேசன்   




Thursday, January 27, 2022

இல்லுமினாட்டி 139



ர்னெஸ்டோவைப் பத்திரமாய் அவர் பங்களாவில் சேர்த்து விட்டு இம்மானுவல் தன்னுடைய ம்யூனிக் அலுவலகத்திற்கு விரைந்தான். அவனுக்காக அவன் ஆட்கள் காத்திருந்தார்கள். சாலமனைப் பற்றி விரிவான துப்புதுலக்கல்கள் செய்திருந்த அவர்கள் ஒரு பெரிய ஃபைலை அவன் மேசையில் வைத்தார்கள். பல வேலைகள் இருக்கும் போது, அதுவும் அவை அனைத்தும் அவசரமாக இருக்கும் போது முழுவதுமாய்ப் படிக்கும் பொறுமை போய்விடுகிறது. அவனுக்கு இப்போது எர்னெஸ்டோ ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்பது புரிந்தது. அவன் சொன்னான். “இதில் முக்கிய விஷயங்களைச் சுருக்கமாய்ச் சொன்னால் நன்றாக இருக்கும்.”

சாலமன் அடிக்கடி கடந்த சில நாட்களாக ஒரு குறிப்பிட்ட பகுதிக்குப் பயணம் செய்து வருகிறார், அந்தப் பகுதியில் ஒரு பழங்காலப் பாழடைந்த சர்ச்சும் இருக்கிறது,   இப்போது நூலகங்களாகவும், அருங்காட்சியகங்களாகவும், அரங்குகளாகவும் மாறியிருக்கிற முந்தைய இல்லுமினாட்டி கோயில்களுக்கு அடிக்கடி பயணம் செய்திருக்கிறார், போலி பாஸ்போர்ட், விசாக்கள் தயாரித்துத் தரும் பழைய குற்றவாளி ஒருவனைச் சந்தித்திருக்கிறார், விமானநிலையத்தில் பரிசோதனை அதிகாரியாக இருக்கும் மைக்கேல் விக்டர் என்பவரைச் சந்தித்திருக்கிறார் என்ற தகவல்களை அவர்கள் சொன்னார்கள்.

அதில் கடைசி இரண்டு தகவல்களுக்கு முதல் முக்கியத்துவம் கொடுத்த இம்மானுவல் முதலில் மைக்கேல் விக்டர் பற்றிக் கேட்டான். “அந்த ஆள் என்ன சொல்கிறார்?”

“அவர் சாலமன் அவரைச் சந்தித்தது வாஸ்தவம் என்று ஒப்புக் கொள்கிறார். ஆனால் என்ன விஷயமாகச் சந்தித்தார், என்ன சொன்னார் என்பதை எல்லாம் சொல்ல மறுக்கிறார். மிரட்டியும் கேட்டுப் பார்த்தோம். அவர் எதுவாக இருந்தாலும் உங்களிடம் தான் சொல்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவர் எங்களிடம் சொல்லத் தயாராக இல்லை.”

இம்மானுவலுக்கு அந்த அதிகாரியின் போக்கு புதிராக இருந்தது. “அந்த அதிகாரியை உடனடியாக இங்கே வரவழையுங்கள்.”

ஒரு அதிகாரி அதைச் செய்ய வேகமாக நகர இம்மானுவல் அடுத்த கேள்வியைக் கேட்டான். “அந்தப் போலி பாஸ்போர்ட் விசா குற்றவாளி என்ன சொல்கிறான்?”

“விஸ்வத்தின் ஃபோட்டோவைக் கொடுத்து ஏதோ ஒரு பெயரையும் கொடுத்து ஒரு போலி பாஸ்போர்ட், வாஷிங்டன் போய் வர சாலமன் ஒரு டூரிஸ்ட் விசா கேட்டிருக்கிறார். சென்ற வெள்ளிக்கிழமை வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்...”

“அந்தப் பாஸ்போர்ட் விசா விவரங்கள்?”

ஒரு அதிகாரி அந்த ஃபைலைத் திறந்து பக்கங்களைப் புரட்டி இரண்டின் விவரங்களையும் காட்டினார். வர வர எர்னெஸ்டாக நானும் மாறிக் கொண்டு இருக்கிறேனா என்று தன்னையே கேட்டுக் கொண்ட இம்மானுவல் அவற்றைப் பார்த்தான். விஸ்வம் டேனியலின் உடலைக் கச்சிதமாக மாற்றி இருப்பது வாஷிங்டனில் எர்னெஸ்டோ பங்களாவின் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தாலும் விஸ்வம் முகமூடி போட்டிருந்ததால் அவனுக்கு முகத்தைப் பார்க்க முடிந்திருக்கவில்லை. இப்போது பாஸ்போர்ட்டில் முகம் தெளிவாகத் தெரிந்தது. மனிதனின் அகம் மாறும்போது முகமும் அதற்கேற்றாற்போல் மாறி விடுகிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என்று இம்மானுவல் நினைத்தான். பழைய டேனியலின் கண்களில் எப்போதும் வெறுமை தெரியும். முகம் பொலிவிழந்திருக்கும். உயிரோட்டம் இருக்காது.... ஆனால் இப்போதைய முகத்தில் ஒரு கம்பீரம் தெரிந்தது, உறுதி தெரிந்தது, கண்களில் ஒளி தெரிந்தது...

சிறிது நேரத்தில் மைக்கேல் விக்டர் வந்தார்.  அவரிடம் இம்மானுவல் விசாரித்த போது மற்றவர்கள் அங்கிருக்கும் போது பேசவும் அவர் தயங்கினார். இம்மானுவல் தன் ஆட்களை வெளியே போய் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் சென்றவுடனே  அமெரிக்க சிஐஏ டைரக்டர் முதல், சாலமன் மற்றும் அவர் வரை ஏழு பேருக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசிய மிஷன் பற்றி அவர் சொன்னார். அவர் இப்போதும் கூட சாலமன் சொல்லி இருப்பதை நம்பினது இம்மானுவலை ஆச்சரியப்படுத்தவில்லை. சாலமன் திறமையானவர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இம்மானுவல் சொன்னான். “அதில் ஒரு பிரச்னையாகி விட்டது. சாலமன் இறந்து விட்டார். அந்தப் போலி டேனியலை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அதனால் திரும்ப அவன் ம்யூனிக் வந்தால் நீங்கள் அவனைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். உங்கள் மற்ற அதிகாரிகளிடமும் இதைச் சொல்லி வையுங்கள்...”

மைக்கேல் விக்டர் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. இம்மானுவல் சொன்னான். “உங்களைச் சிரமப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். லட்சக் கணக்கான ஆட்களைப் பெரிய பாதிப்பில்லாமல் காப்பாற்றுவதற்கு சில பேரை நாங்கள் தொந்தரவு செய்ய வேண்டியிருக்கிறது. அதை நாங்கள் விரும்பிச் செய்வதில்லை. வேறு வழியில்லாமல் தான் செய்ய வேண்டியிருக்கிறது.”

”புரிகிறது சார்” என்று சொல்லி மைக்கேல் விக்டர் எழுந்தார். ஆனால் அவருக்கு இன்னும் சரியாகப் புரியவில்லை. சாலமன் நல்லவரா கெட்டவரா என்று தெரியவில்லை. இதற்கு முன் அவர் அந்தப் போலி டேனியலை வாஷிங்டன் போக உதவியிருப்பது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. தெளிவாகப் புரிந்தது அந்தப் போலி டேனியலைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். அதைக் கண்டிப்பாகச் செய்வார்...


ர்னெஸ்டோ க்ரிஷிடம் கேட்டார். “விஸ்வம் இங்கே திரும்பி வருவானா இல்லை அப்படியே அங்கிருந்து வேறெங்காவது தப்பி விடுவானா? நீ என்ன நினைக்கிறாய்?”

“அவன் கண்டிப்பாகத் திரும்பி வருவான். அவன் இலக்கை அடையும் முயற்சியில் செத்தாவது போவானேயொழிய தற்காலிகமாகக் கூடப் பின்வாங்க மாட்டான்.” க்ரிஷ் உறுதியாகச் சொன்னான்.

அக்‌ஷய் அந்த வார்த்தைகளைப் பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் மனக்கண்ணில் இப்போதும் விஸ்வம் வாஷிங்டனில் மின்னல் வேகத்தில் ஓடிய வீடியோ காட்சிகள் ஓடின. அக்‌ஷயும் அதே அளவு வேகமாக ஓடவும் நகரவும் முடிந்தவன் என்றாலும் அவனைப் பிரமிக்க வைத்தது அந்த உடல் போதையால் செத்துப் போன உடல் என்பது தான். வாழ்க்கையில் போதையை ஒரு போதும் அனுபவித்திராத அக்‌ஷய்க்குத் தன் சாதனை பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு பலவீனத்தில் செத்துப் போன அந்த உடலை விஸ்வம் நான்கே மாதங்களில் இந்த அளவு மாற்றியெடுத்தது சாதாரண விஷயமாய்த் தோன்றவில்லை. அப்படி என்றால் பழைய உடலை எந்த அளவுக் கட்டுக்கோப்பில் அவன் வைத்திருப்பான் என்று அக்‌ஷய் வியந்தான்.

எர்னெஸ்டோவுக்கு விஸ்வம் அவரை விஷம் வைத்துக் கொல்ல நினைத்தது கூடப் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனாலும் அவருக்கு அவன்   தீமையின் மொத்த உருவமாகத் தோன்ற ஆரம்பித்திருந்தான். காரணம் சாலமன், வாங் வே போன்ற உறுதியான இல்லுமினாட்டி ஆட்களை அவன் மாற்றித் தன் பக்கம் இழுத்திருந்தது அவருக்கு நிறையவே ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.

இம்மானுவல் வந்தான். அவர்களிடம் சாலமன் பற்றிக் கிடைத்திருந்த புதிய விவரங்களைச் சொன்னான். எர்னெஸ்டோ கேட்டார். “கர்னீலியஸுக்கும் அவனுக்கும் இருந்த தொடர்பு பற்றி எதுவும் தெரியவில்லையா?”

“இல்லை”

“வாங் வேயிடமிருந்து தான் நாம் அதைப் பெற வேண்டும்” என்று சொல்லி எர்னெஸ்டோ இம்மானுவலை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். பின் சொன்னார். “வாங் வே அக்கறையுடன் இது வரை இரண்டு முறை என் உதவியாளனிடம் என் உடல்நலம் பற்றி விசாரித்து விட்டார். நாளைக்கே ம்யூனிக் வரப் போகிறாராம்.”

இம்மானுவல் சொன்னான். “அப்படியானால் விஸ்வமும் நாளைக்கே இங்கே வரக்கூடும்”

ஆனால் அவன் எதிர்பார்த்ததை விடச் சீக்கிரமாக அன்றைக்கே அப்போதே விஸ்வம்  ஏறியிருந்த விமானம் ம்யூனிக் விமான நிலையம் வந்து சேர்ந்தது.  

(தொடரும்)
என்.கணேசன்



  

Monday, January 24, 2022

யாரோ ஒருவன்? 69


காளிங்க சுவாமி காளியிடமிருந்து செய்தி வருவதற்காகக் காத்திருந்தார். தெய்வங்களும் சத்தியங்களுக்குக் கட்டுப்பட்டவை. உக்கிர பூஜை ஆகமவிதிகளின்படி நடந்து பூஜிப்பவன் பக்தியோடு இருந்து பூஜையின் முடிவில் முறையாகக் கேள்வி எழுப்பப்பட்டால் தெய்வம் பதில் சொல்லியே தீரும். மனிதர்களைப் போல் தெய்வம் தன்னுடைய பங்கை மறுப்பதில்லை.

“சொல் தாயே. எனக்குப் பதில் சொல்” என்று காளிங்க சுவாமியின் குரல் அமானுஷ்ய தொனியில் ஒலித்தது.

காளி சிலையில் படர்ந்திருந்த ஒரு நாகம் மெல்ல சீறியது. அதில் காளிங்க சுவாமி ஒரு பதிலை உணர்ந்தார். “அந்த நாகம் இப்போது அந்தப் பெயரை தரித்தவனிடம் இருக்கிறது.”

“என்னது மறுபடியும் அவனிடமா?” என்று கேட்ட அவர் குரலில் ஏமாற்றமும், திகைப்பும் தெரிந்தன. அவர் கேட்டார். “தாயே ஏன் இந்த பாரபட்சம். நான் செய்த அளவு பூஜைகளை அவன் என்றாவது செய்திருப்பானா? நான் இந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கான நாகங்களுக்கு வேண்டியதைச் செய்கிறேன். அந்த எண்ணிக்கையை அவன் என்றாவது தொட்டிருப்பானா? அப்படி இருக்கையில் அந்த நாகம் ஏன் அவனிடமே அடைக்கலம் புகுந்திருக்கிறது”

மறுபடியும் காளி சிலையில் படர்ந்திருந்த நாகம் சீறியது. காளிங்க சுவாமி பதிலை உணர்ந்தார். “நீ எதையும் எதிர்பார்ப்புடன் செய்கிறாய். அவன் அன்பு எதையும் எதிர்பார்த்ததில்லை.”

காளிங்க சுவாமி சீற்றத்துடன் கேட்டார். “எதிர்பார்ப்பவனுக்குத் தராமல் எதிர்பார்க்காதவனுக்கு நாகதேவதை தந்து எதை நிலை நிறுத்த முன் வருகிறது தாயே”

காளி சிலையில் படர்ந்திருந்த நாகம் சீறியது. “அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. எல்லா உயிரினங்களும் அன்பு ஒன்றுக்கே தங்களை ஒப்படைக்கின்றன, அடிபணிகின்றன”

காளிங்க சுவாமி இகழ்ச்சியுடன் கேலிச் சிரிப்பு சிரித்தார். காளி சிலையில் இருந்த நாகம் அமைதியாக அவரையே பார்த்தது.

காளிங்க சுவாமி கைகூப்பிக் கேட்டார். “எனக்கு நம்பிக்கையூட்டும் தகவல் ஒன்றாவது சொல் தாயே”

காளி அந்த நாகம் மூலம் பதிலளித்தாள். “அந்த நாகம் தரும் பரிசு நீண்ட காலம் அவனிடம் இருக்கப்போவதில்லை”

காளிங்க சுவாமி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி கூப்பினார். பின் சாஸ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்தார். அந்த ஒரு தகவல் புதிய நம்பிக்கையை அவருக்குள் ஏற்படுத்தியது.

  
ரேந்திரன் சென்ற பிறகு சரத் உடனடியாக கல்யாணைச் சந்தித்தான். நண்பர்கள் இருவரும் நரேந்திரன் கேட்ட கேள்விகளை வரிசையாகச் சொல்லி, தாங்கள் சொல்லியிருக்கும் பதிலையும் சொல்லி சரிபார்த்துக் கொண்டார்கள். இருவரையும் குழப்பியது நாகராஜ் என்ற நண்பனைப் பற்றிய கேள்வி தான்.
      
சரத் சொன்னான். “யார் அந்த ஆள்கிட்ட நாகராஜ்ங்கற நண்பனைப் பத்தி சொல்லியிருக்காங்கன்னு தெரியலை? அதுக்கான காரணம் புரிய மாட்டேங்குது. அது உன் பக்கத்து வீட்டுக்காரன் பெயராவும் இருக்கிறது சம்பந்தமில்லாததா கூட இருக்கலாம்னாலும் ஏனோ இடிக்குது?

கல்யாண் ஆமென்று தலையசைத்தான். சரத் சொன்னது போல நாகராஜ் என்கிற பெயருக்குப் பதிலாய் குப்புசாமி, ராமராஜ் என்பது போன்ற வேறு பொதுப் பெயர்களாய் இருந்திருந்தால் இந்த அளவு பாதித்திருக்காது. ”எவனோ மொட்டைக்கடுதாசி போட்டு தான் இவனுக அந்தக் கேஸை தூசி தட்டி எடுத்திருக்கானுக. அதுல அவன் சும்மா நாகராஜ்ங்கற பெயரையும் சேர்த்துருக்கான் போல...”

சரத் நண்பனிடம் கேட்டான். “ஆனா அந்த ஆள் கேட்ட நாகராஜ் உன் பக்கத்து வீட்டுக்கார ஆளாய் இருக்காதில்லையா?”

கல்யாணுக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஆனாலும்இருக்கலாம்என்கிற ஏதோ ஒரு பயம் அப்படி சிரிக்க விடாமல் தடுத்தது.

சரத் அடுத்ததாகச் சொன்னான். “அந்த ஆள் ரஞ்சனியையும் விசாரிக்கணும்னு சொல்றார்.” அவன் குரலில் கவலை தெரிந்தது.

கல்யாண் சொன்னான். “மாதவனுக்கு யாராவது எதிரிகள் இருந்திருக்காங்களா, நாகராஜ்ன்கிற நண்பன் இருக்கானாங்கற மாதிரி சில கேள்விகள் கேட்டுட்டுப் போயிடுவான் விடு. அதுக்கு மேல கேட்க அவனுக்கும் ஒன்னுமில்லை. சொல்ல ரஞ்சனிக்கும் ஒன்னுமில்லை

நண்பன் சொன்னதில் சரத் சிறிது நிம்மதியடைந்தவனாய்க் கிளம்பினான். கல்யாண் அவன் சென்றவுடன் தந்தைக்குப் போன் செய்தான். “அப்பா எங்கே இருக்கீங்க

சத்தியமங்கலத்தை நெருங்கியாச்சு. பத்து நிமிஷத்துல நாதமுனி வீட்ல இருப்பேன்.”

அப்பா அந்தக் கிழவர் விவரமானவர். அதனால் அவர் கிட்ட பேசறப்ப நீங்க ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்...”

நானும் விவரமானவன் தான். கவலைப்படாதே


நாதமுனிக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. கல்யாண் தான் மாதவனோடு சில சமயங்களில் அவர் வீட்டுக்கு வந்திருக்கிறானேயொழிய அவன் தந்தை வேலாயுதம் சத்தியமங்கலத்தில் இருக்கும் போதே அவர் வீட்டுக்கு ஒரு தடவை கூட வந்தது கிடையாது. அந்தக் காலத்தில் பரந்தாமன் வீட்டிலும் உள்ளூர் திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் பார்த்துப் புன்னகைத்திருப்பதைத் தவிரக் கூடுதல் நெருக்கம் என்றுமே இருவருக்குள் இருந்ததில்லை...

அன்பொழுகப் பார்த்துஎன்னை அடையாளம் தெரியலையா?” என்று வேலாயுதம் கேட்டவுடன் சமாளித்துக் கொண்டு நாதமுனிதெரியாமலென்ன? வாங்க.. வாங்க.. எப்படியிருக்கீர்?” என்று கேட்டார்

எதோ இருக்கேன். ரொம்ப வருஷம் கழிச்சு சத்தியமங்கலம் வந்தேன். திடீர்னு உங்க ஞாபகம் வந்துச்சு... பார்த்துட்டு போலாம்னு வந்தேன். சவுக்கியம் தானே?”

சவுக்கியம். உட்காரும். கல்யாண் எப்படியிருக்கான்?”

உங்க ஆசிர்வாதத்துல நல்லாயிருக்கான். உங்களைப் பத்தி எப்பவுமே உயர்வாய் சொல்வான்.” என்று சொன்னபடி இருக்கையில் அமர்ந்த வேலாயுதம் நாதமுனியின் வீடு இன்னமும் சாதாரண நடுத்தர வர்க்க வீடாக இருப்பதை மனதில் இகழ்ச்சியோடு கவனித்தார். ‘பாம்பு பத்தி எத்தனையோ தெரிஞ்ச ஆளுக்குப் பணம் பண்ணத் தெரியலயே. பாவம்

நாதமுனிக்கு இந்த ஆளிடம் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரை விட பரந்தாமன் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் இங்கு வருவதற்கு முன் பரந்தாமன் வீட்டுக்குப் போய்விட்டு வந்திருப்பார் என்ற அனுமானத்தில் கேட்டார். “பரந்தாமன் வீட்டுக்கும் போயிட்டு வந்தீரா?”

வேலாயுதம் முகத்தில் போலி துக்கத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “போகணும்னு நினைச்சேன். ஆனா மாதவன் போயிட்ட பிறகு அவங்க ரெண்டு பேரோட முகத்தை நேர்ல பாக்கற தைரியம் எனக்கும், கல்யாணுக்கும் போயிடுச்சு. அதனால தான் அங்கே போறதுக்குப் பதிலா உங்க கிட்ட வந்தேன். மாதவனோட அம்மா அப்பா ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?”

முடிஞ்ச அளவுக்கு மனசை தேத்திகிட்டு இருக்காக ஓய். என்ன பண்றது? விதி அவங்கள மாதிரி நல்லவங்க வாழ்க்கைல இப்படி விளையாடிருக்க கூடாது

உண்மை தான். கல்யாணும் எத்தனையோ தடவ சத்தி வந்து அவங்கள பாக்கணும்னு சொல்வான். ஆனா அவங்க துக்கத்தை பார்த்தா தாங்க முடியாம நானும் உடைஞ்சு போயிடுவேன்ப்பான்னு சொல்லி பின்வாங்கிடுவான். நீங்க அவங்கள அடிக்கடிப் பார்க்கறீங்க இல்லயா?”

ஆமா தினம் போய் பரந்தாமனோட சேர்ந்து  ஒரு வாக்கிங் முடிச்சுட்டு வந்து அலமேலம்மா கையால தயாரிச்ச காபியைக் குடிச்சுட்டு வருவேன்....”

இனியும் இந்தச் சோகக்கதையைத் தொடரும் பொறுமை வேலாயுதத்திற்கு இருக்கவில்லை. ஆனால் ஒரேயடியாக நாகரத்தினம் பத்தின பேச்சுக்கு தாவவும் அவரால் முடியாது. பேச்சோடு பேச்சாக வந்தது போல் அது இருக்க வேண்டும்... எந்தப் பேச்சுக்கு வந்து பின்பு அதைக் கொண்டு வருவது?

நாதமுனி திடீரென்று நினைவுக்கு வந்தவராகக் கேட்டார். ”மாதவன், கல்யாணுக்கு நாகராஜ்ங்கற பேர்ல யாராவது நண்பர் இருந்தாங்களா?”

நாகராஜ் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்தாலும் வந்தான் யாராவது அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்கும்படியாகி விடுகிறது என்று வேலாயுதம் நினைத்துக் கொண்டார். அதேநேரத்தில் தான் கேட்க வந்த விஷயத்தைக் கேட்கவும் இது வழிசெய்து தந்திருக்கிறது என்று நினைத்தவர் அதைப் பயன்படுத்திக் கொண்டார். “இல்லையே... நீங்க அந்தப் பெயரைச் சொன்னவுடன எனக்கு இன்னொரு விஷயம் உங்க கிட்ட கேட்கணும்னு நினைச்சது நினைவுக்கு வருது. விசேஷ நாகரத்தினம்னு ஒன்னு நிஜமாவே இருக்கா?”

நாதமுனி திகைத்தார். பாமர மனிதர்கள் இதன் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க முடியாது. பணம் சொத்து தவிர வேறெதைப் பற்றியும் கவலைப்படாத இந்த மனிதர் இதைக் கேட்க வேண்டுமென்றால் விசேஷ நாகரத்தினம் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டதென்று அர்த்தம். அவர் வேலாயுதத்திடம் கேட்டார். “இந்தப் பெயரை எங்கே நீங்க கேள்விப்பட்டீங்க?”



(தொடரும்)
என்.கணேசன்



Thursday, January 20, 2022

இல்லுமினாட்டி 138


வாங் வே பரபரப்புடன் விஸ்வத்துக்குப் போன் செய்து பேசினார். உபதலைவர் போன் செய்து தெரிவித்த தகவலைச் சொல்லி விட்டு பதற்றத்துடன் கேட்டார். “அவர் பிழைத்துக் கொள்ள வழி இருக்கிறதா?”

கிழவர் ஒயினைக் குடித்திருந்தால் கண்டிப்பாக அவர் பிழைத்துக் கொள்ள வழியில்லை. ஆனால் அப்படிக் குடித்திருக்கா விட்டால் அவருக்கு நெஞ்சு வலி வரவும் வாய்ப்பில்லை. மரணச் செய்தி எதிர்பார்த்துக் காத்திருந்த இந்த நேரத்தில்  இந்த அரைகுறை நிலைமைச் செய்தி விஸ்வத்துக்கும் திருப்தி அளிக்கவில்லை. வாங் வேயிடம் அவன் கேட்டான். “ஒருவேளை அவர் இறந்திருந்தால் இங்கே சொல்ல வேண்டாம் என்று ம்யூனிக் கொண்டு போய் இருக்க வாய்ப்பு இருக்கிறதா? இதையெல்லாம் தீர்மானிப்பது யார் இம்மானுவலா? இல்லுமினாட்டியா?”

“இல்லுமினாட்டி தான். அதாவது உபதலைவர் தான் தீர்மானிப்பார். ஆனால் அவரிடமே இம்மானுவல் தலைவரின் மரணச் செய்தியைச் சொல்லாமல் இருந்தால் தலைவர் சொன்னதாக அவன் சொல்வது தான் பின்பற்றப்படும்”

“தலைவர் ம்யூனிக் போய் விட்டார் என்பதும் இம்மானுவல் சொல்வது தானா இல்லை அதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டீர்களா?”

“அவர் போனது உண்மை தான். எனக்கு வேண்டியவன் வாஷிங்டன் விமான நிலையத்தில் வேலை செய்கிறான். அவனிடம் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டேன்.”

“அவரை ஸ்ட்ரெச்சரில் கொண்டு போனார்களா? இல்லை அவர் நடந்தே விமானம் ஏறினாரா?”

“நானும் அவனிடம் அதைத் தான் கேட்டேன். அவன் அதைக் கவனிக்கவில்லை என்று சொன்னான். அவருடையது தனிவிமானம் என்பதால் அது தனியான வி.ஐ.பி தளத்திலிருந்து தான் கிளம்புகிறது. அவரைச்சுற்றி ஒரு கூட்டமே எப்போதும் இருப்பதால் அவனுக்குச் சரியாகக் கவனிக்க முடியவில்லை. ஆனால் அவருடைய தனி விமானம் இங்கிருந்து அதிகாலை மூன்று மணிக்குப் போய் விட்டது என்பது மட்டும் நிச்சயம் என்கிறான். இங்கே அவர் பங்களாவிலும் பாதுகாவல் பழையபடி குறைந்து விட்டிருக்கிறது. அதனால் அவர் போயிருப்பது உறுதி.... ஆனால் உடல்நிலை எப்படி இருந்தது என்பது தான் தெரியவில்லை. நேரில் உபதலைவரைப் பார்க்கும் போது புதியதாக எதாவது தகவல் இருக்கிறதா என்பது தெரியும்”

விஸ்வம் தன் முதல் திட்டத்தின் முடிவு தெரியாமலும், இரண்டாம் திட்டத்திற்கு வாய்ப்பு நழுவியதிலும் ஏமாற்றத்தை உணர்ந்தான். ஜிப்ஸி எங்கேயோ போயிருந்தான். அவன் எங்கே போகிறான் என்ன செய்கிறான் என்று கேட்கச் சில சமயங்களில் விஸ்வத்துக்குத் தோன்றியிருக்கிறது என்றாலும் அவன் கேட்பதைத் தவிர்த்தான்.  அவனிடம் சில மாற்றங்களையும் சமீப காலங்களில் விஸ்வம் கவனித்தான். விஸ்வம் உடல் மிக பலவீனமாக இருந்த போது ஜிப்ஸி தானாக வந்து தேவையான தகவல்களை அவ்வப்போது தருவான். ஆனால் இப்போது விஸ்வம் உடல் ஓரளவு நன்றாகத் தேறி விட்ட பின் அவன் முன் அளவு எதையும் தானாகத் தெரிவிப்பதில்லை. இனி நீயாகப் பார்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அவை என்று விட்டு விலகி நிற்கும் தோரணையாகவே அது தெரிந்தது. விஸ்வம் பழைய உடலில் இருந்த போது இரண்டே முறை தான் வந்து அவன் வழி நடத்தியிருக்கிறான் என்பதையும் விஸ்வம் நினைத்துப் பார்த்தான். முதல் முறை இலக்கில்லாத வாழ்க்கை வாழ்ந்த அவனை மகாசக்திகளைத் தேட ஊக்கம் தந்து விட்டுப் போனான். இரண்டாவது முறை இல்லுமினாட்டியின் பக்கம் அவனைத் திருப்பி விட்டுப் போனான்.  இரண்டாவது உடலில் அவன் குடிபுகுந்த பின் தான் அவனுடனேயே ஜிப்ஸி இருக்க ஆரம்பித்தான். அவ்வப்போது காணாமல் போனாலும் தேவையான சமயங்களில் ஆபத்பாந்தவனாக இருக்கிறான்.  ஆனால் சிறிது சிறிதாக அவன் நடவடிக்கைகளில் தலையிடாத போக்கு ஜிப்ஸியிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. எல்லாம் நல்லதற்கே என்று விஸ்வம் இப்போது நினைத்தான். அவனும் அடுத்தவர்களை அண்டி வாழ விரும்பவில்லை. மிகப் பலவீனமான நேரங்களில் மற்றவர் உதவி தேவை தான். ஆனால் அந்தக் கட்டத்தைத் தாண்டிய பிறகு மற்றவர் உதவியை எதிர்பார்த்தே இருப்பது கேவலம். விஸ்வத்தைப் போன்ற ஒரு தன்னிறைவு தேடும் மனிதனுக்கு அது அழகோ, கௌரவமோ அல்ல!


வாங் வே உபதலைவரைப் பார்த்தவுடன் மிகுந்த அக்கறையும் கவலையும் காட்டிக் கேட்டார். “தலைவர் எப்படி இருக்கிறாராம்?” மற்ற இரு தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும் கூட இந்தத் திடீர்ச் செய்தியால் அதிர்ச்சியடைந்திருந்தது தெரிந்தது.

உபதலைவர் சொன்னார். “தெரியவில்லை. இப்போது அவர்கள் இன்னும் விமானத்தில் தான் இருப்பார்கள். ம்யூனிக்கில் இறங்கியவுடன் இம்மானுவலிடம் பேசச் சொல்லியிருக்கிறேன்…”

வாங் வே அங்கலாய்த்தார் “நன்றாகத் தான் இருந்தார். நேற்றைய விருந்தில் கூட அவருக்கு எந்தப் பிரச்னையும் இருக்கவில்லை என்று சொன்னார்கள். பின் என்ன ஆயிற்றோ?”

“தெரியவில்லை. வயதாகி விட்டால் எப்போது எந்தப் பிரச்சினை வரும் என்று யாரால் சொல்ல முடியும்?”

வாங் வே உபதலைவரைக் கேட்டார். “தலைவர் வரும் புதன்கிழமை அனைத்து உறுப்பினர்க் கூட்டம் ஒன்றை கூட்டச் சொல்லியிருந்தார்.  விஸ்வத்தையும் கலந்து கொண்டு பேச அனுமதித்திருந்தார். அந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டி வருமா?”

உபதலைவர் வழுக்கைத் தலையைத் தடவியபடி சொன்னார். “பொறுங்கள். பார்ப்போம். இரண்டு நாளில் தெரிந்து விடும். பிறகு முடிவு செய்வோம்”


விமானத்தில் சென்று கொண்டிருந்த போது மூவரும் கர்னீலியஸ் டைரியில் எழுதி வைத்திருந்த வாசகங்களைப் பற்றியே யோசித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கிளம்புவதற்கு முன் இம்மானுவல் அதை க்ரிஷுக்கும் அனுப்பி வைத்திருந்தான். ம்யூனிக் சென்றவுடன் அவன் கருத்தையும் கேட்க முடியும். அந்த வாசகங்களில் அவர்களுக்கு நிறைய புரியவில்லை. ஆனால் இப்போது விஸ்வமும் அவன் கூட்டாளியும் ஏதோ ஒரு தொழும் இடத்தில் மறைந்திருக்கிறார்கள் என்பதும், விஸ்வம் பெரும் சக்தி பெறுவான் என்பதும், தெளிவாகப் புரிந்தது. அவன் கூட்டாளி ஆலோசனை சொல்வான், விஸ்வமும் அவனும் சேர்ந்து விதியை எல்லோருக்குமாய் சேர்ந்து எழுதுவார்கள் என்பதும் தெரிந்தது. எல்லாமே விஸ்வத்துக்குச் சாதகமாக இருப்பதாக எர்னெஸ்டோ நினைத்தார். முக்கியமாக அவன் பெரும் சக்தி பெறுவதும், அவன் உலகத்திற்கும் சேர்த்து விதி எழுதுவதும் அவருக்கு ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

அவர் சொன்னார். “இதை நான் நம்புவதாக இல்லை. சுவடியில் இருப்பதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தச் சுவடி எப்படி யார் கைக்குக் கிடைத்தது, அதை எழுதியவர் யார், கர்னீலியஸ் மொழி பெயர்த்தாரா இல்லை யாராவது சொல்லச் சொல்ல இதை எழுதினாரா என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை… என்னைப் பொறுத்த வரை இல்லுமினாட்டியும் உலகமும் காப்பாற்றப்பட்டு விட்டது. நாம் நம்பிக்கை இழப்பதற்காக யாரோ இட்டுக்கட்டியதாகவும் இது இருக்கலாம்…”   

அக்‌ஷய் புன்னகைத்தான். ’தலைவர்கள் தாங்கள் நம்ப நினைப்பதையே நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையிலேயே எதையும் தீவிரமாகச் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் தலைவர்களாக நீடிக்கிறார்கள்’ என்று தோன்றியது.

எர்னெஸ்டோ இம்மானுவலிடம் கேட்டார். “சாலமன் பற்றித் தெரிந்து கொள்ள நீ அமைத்திருந்த குழு இது வரை எதாவது கண்டுபிடித்திருக்கிறதா?”

“நிறைய கண்டுபிடித்திருக்கிறார்கள். அதையெல்லாம் தயாராக வைத்திருப்பதாக நாம் விமானம் ஏறுவதற்கு முன் தான் எனக்குத் தகவல் அனுப்பியிருக்கிறார்கள்”

எர்னெஸ்டோ திருப்தி அடைந்தார்.



ர்னெஸ்டோ வாஷிங்டன் விட்டுப் போன பிறகு விஸ்வத்திற்கு அங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது. காலை உபதலைவரைச் சந்தித்தும் எந்தப் புதிய தகவலும் இல்லை என்று வாங் வே தெரிவித்தவுடன் அவன் ம்யூனிக் திரும்புவது என்று நிச்சயித்தான். அவனுக்கு அங்கே நிறைய வேலைகள் இருந்தன. அந்தச் சுவடியில் சொன்னபடி அவன் சக்திகள் பெற வேண்டும். பழைய விஸ்வமாக விஸ்வரூபம் எடுக்க வேண்டும். விதி எழுத வேண்டும். இத்தனையும் ஆக வேண்டுமானால் அவன் ஒரு சக்தி மையத்தில் நிலைத்து நிற்க வேண்டும். பின் மற்றவற்றை எல்லாம் ஈர்ப்பது சுலபம். அவன் மனம் தெளிவடைந்தது.

அவன் ம்யூனிக் திரும்ப முடிவெடுத்திருப்பதாய் சொன்ன போது ஜிப்ஸி சொன்னான். ”இந்த முறை ஆபத்திருக்கிறது. நீ முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்”

அதற்கு அதிகம் அவன் சொல்லவில்லை. அதை விஸ்வம் எதிர்பார்க்கவும் இல்லை. ஆபத்தை எதிர்நோக்கத் தயாராகவே வாஷிங்டனிலிருந்து புறப்பட்டான்.

(தொடரும்)
என்.கணேசன்





Wednesday, January 19, 2022

நீலக்கல் அற்புதமும், மற்ற அற்புதங்களும்!

 



ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ஒன்றை இரட்டிப்பாக்கும் அற்புதத்தையும் நிகழ்த்தி இருக்கிறார் என்று முன்பே சொல்லி இருந்தோம். அவர் ஊட்டியில் தங்கி இருந்த போது அவரிடம் நட்பாய் இருந்த ஒரு அம்மையார் ஒரு நீலக்கல் மோதிரத்தை தனக்கும் உருவாக்கிக் கொடுக்கும்படி வேண்டிக் கொண்டார். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவர் வேண்டுகோளின்படியே இன்னொன்றை உருவாக்கி அவருக்குப் பரிசளித்தார். காலப்போக்கில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கும், அந்த அம்மையாருக்கும் பிணக்கு ஏற்பட்டது. ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு வேண்டாதவர்கள் அவ்வப்போது அவரைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாகச் சொல்லும் வழக்கம் இருந்தது. ”அவர் ஒரு பொய்யர், அவர் உருவாக்கிக் கொடுக்கும் நகல்கள் அசலின் தரத்தில் இருப்பதில்லை, மலிவானவையும், தரம் குறைந்தவையாகவும் இருக்கின்றனஎன்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

இதைக் கேள்விப்பட்ட ப்ளாவட்ஸ்கீ அம்மையாரின் பழைய தோழி தனக்குத் தரப்பட்ட நீலக்கல் மோதிரம் அது போல இருக்குமோ என்று சந்தேகம் கொண்டார். நட்பு போய் பகை வரும் போது சந்தேகங்கள் விஸ்வரூபம் எடுப்பது சகஜம் அல்லவா? உடனே அவர் தன்னிடம் இருந்த நீலக்கல் மோதிரத்தை எடுத்துக் கொண்டு ஒரு நகைக்கடைக்குச் சென்று பரிசோதித்தார். அந்த நீலக்கல் மோதிரத்தில் தங்கமும், நீலக்கல்லும் தரம் மிக்கவை என்று நகைக்கடைக்காரர் தெரிவித்த பிறகு தான் அந்த அம்மையார் நிம்மதி அடைந்தார். பல சமயங்களில் சித்து வித்தைகளில் வரவழைக்கப்படும் பொருட்கள், வரவழைக்கப்படும் நேரத்தில் உண்மையானது போல் தோன்றினாலும் காலப்போக்கில் தகரமாகவும், கூழாங்கல்லாகவும் கூட மாறி விடுவதுண்டு. இந்த நீலக்கல் மோதிரம் பல வருடங்கள் கழிந்தும் உயர் தரத்திலேயே இருந்திருப்பது எதிரியும் ஒத்துக்கொண்ட உயர் அற்புதமாகவே இருக்கிறது.


ரு முறை கர்னல் ஓல்காட்டும், ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும் பாண்டிச்சேரிக்கு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார்கள். கர்னல் ஓல்காட் நிறைய நோயாளிகளைக் குணப்படுத்தியிருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பல நோயாளிகள் அவரை வந்து சந்தித்து வேண்டுகோள் விடுத்தவண்ணம் இருந்தனர். ரயில்நிலையங்களில் ஐந்து பத்து நிமிடம் தங்கும் சமயத்தில் அற்புதங்கள் நிகழ்த்த முடியாது என்றும், அவர் எங்காவது சில நாட்கள் தங்கியிருக்கும் போது அங்கு வந்து சந்திக்கும்படியும் கர்னல் ஓல்காட் பொறுமையாக அனைவரிடமும் சொல்லி வந்தார்.

 

ரயில் விழுப்புரம் ரயில்நிலையத்திற்கு வந்த போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஒரு முதியவரைத் தூக்கிக் கொண்டு அவருடைய நண்பர்களும், உறவினர்களும் வந்து கர்னல் ஓல்காட்டைச் சந்தித்தார்கள். அவர் வசதியானவர் போலத் தெரிந்தது. அந்த முதியவர் கர்னல் ஓல்காட்டிடம் தன்னைக் குணப்படுத்தும்படிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.. அது முடியாது என்று கர்னல் ஓல்காட் சொல்லியும் அவர் கேட்பதாயில்லை. அவர் பாண்டிச்சேரி போய்ச் சேரும் முன் தன்னைக் குணப்படுத்தும்படி மிகவும் பணிவாகவும், வணக்கத்துடனும் வேண்டிக் கொண்டார். கர்னல் ஓல்காட் மறுத்தும் அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் சென்று விடவில்லை. ரயில் கிளம்பப் போகிறது என்று அறிவிப்பு வந்தும் போகாமல் கர்னல் ஓல்காட் இருக்கும் பெட்டியிலேயே ஏறிக் கொண்டார்கள். அந்த முதியவர் கர்னல் ஓல்காட்டைச் சிறிதும் இளைப்பாற விடவில்லை. கடைசியில் காலில் விழுந்து அந்த முதியவர் கெஞ்சிய போது கர்னல் ஓல்காட் வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.

 

வேறு ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்ற போது அங்கு பத்து நிமிடங்கள் ரயில் நிற்கும் என்று தெரிந்தவுடன் அந்த முதியவரைக் குணப்படுத்த கர்னல் ஓல்காட் முயற்சி செய்தார். ப்ளாட்பாரத்தில் இறங்கி அந்த மனிதரை அமர வைத்து பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த கை மற்றும் காலின் மேற்புறத்தில் தன் கைகளை வைத்து சில சைகைகள் முத்திரைகள் செய்து, கடைசியில் கை மற்றும் காலை கர்னல் ஓல்காட் வருடி விட்டார். ஆச்சரியகரமாக அந்த முதியவரால் கையையும் காலையும் அசைக்க முடிந்தது. இந்த நேரத்தில் ரயில் கிளம்ப ஆரம்பித்தது. அவர்களுக்கு வணக்கம் சொல்லி விட்டு கர்னல் ஓல்காட் ஓடி வந்து ரயிலில் ஏறிக் கொண்டார். அந்த முதியவரும், அவருடைய ஆட்களும் அவர் பக்கம் திரும்பியும் பார்க்காமல் ப்ளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தார்கள்.

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கர்னல் ஓல்காட்டிடம் சொன்னார். “என்ன மனிதர்களிவர்கள். அவர்களுடைய காரியம் ஆகும் வரையில் வணக்கம் என்ன, கெஞ்சல் என்ன, காலில் விழுவதென்ன என்று சகல வழிகளிலும் வேண்டிக் கொண்டார்கள். நீங்கள் குணப்படுத்தி இத்தனை பெரிய உதவி செய்திருக்கிறீர்கள். ஆனால் ஒருவர் கூட நன்றி  சொல்லவில்லை. நீங்கள் வணக்கம் தெரிவித்து ஓடி வந்து ரயிலேறும் போது கூட அவர்கள் பதில் வணக்கம் சொல்லவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும், அவர்கள் உங்களைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் அவர்கள் பாட்டுக்குப் போகிறார்களே!”

 

கர்னல் ஓல்காட்டுக்கு இதெல்லாம் புதியதல்ல. பல இடங்களில் இந்த நன்றி கெட்ட தன்மையை அவர் பார்த்திருக்கிறார். அவர் சொன்னார். “நான் இது வரை குணப்படுத்தியவர்களில் உண்மையான நன்றி நூறில் ஒருவருக்கு மட்டும் தான் இருந்திருக்கிறது. மனிதர்களிடம் காரியமாகும் வரை ஒரு சுபாவம், காரியம் முடிந்தவுடன் வேறு சுபாவம் பார்த்து எனக்குப் பழகி விட்டது. பகவத் கீதையில்   ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குஉன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!” என்று உபதேசித்ததை நான் பின்பற்றி வருகிறேன்

 

இந்தச் சம்பவம் நடந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில். பல சமயங்களில் நம்மவர்கள் நன்றியில்லாத தன்மை இக்காலத்திற்கே உரிய சாபம் என்றும், முன்பெல்லாம் மக்கள் உயர்ந்த குணங்களுடனும், நன்றியுடனும் இருந்து வந்தார்கள் என்றும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். உண்மையில் அக்காலத்திலும் கூட பெரும்பாலான மனிதர்கள் இப்படி இருந்திருக்கிறார்கள் என்பது இந்தச் சம்பவத்திலிருந்து தெரிகிறது. இது காலத்தின் தவறல்ல. மனிதர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் எக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு இது மிக நல்ல உதாரணம்.

 

டுத்த சம்பவம் அபூர்வ சக்திகள் கொண்டவர்களுடன் பழகுபவர்களுக்கும் அவர்களை அறியாமல் சில சமயங்களில் அபூர்வ சக்திகள் கிடைத்து விடுகின்றன என்பதை விளக்கும் சம்பவம். ஒருமுறை கர்னல் ஓல்காட் மீரட்டில் இருந்து லாகூருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவருடன் அவர்களிடம் நீண்ட காலம் பணி புரிந்த தாமோதர் என்ற வேலையாளும், நாராயணசாமி நாயுடு என்பவரும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயணத்தின் போது ஒரு மாலை நேரத்தில் திடீரென்று தாமோதர் என்ற வேலையாள் தூக்கக்கலக்கத்தில் பேசுவது போல கர்னல் ஓல்காட்டிடம்நேரம் என்ன?” என்று கேட்க கர்னல் ஓல்காட் கடிகாரத்தைப் பார்த்து விட்டுமணி ஆறாகப் போகிறதுஎன்றார்.

 

தாமோதர் ஒருவித அரை மயக்க நிலையிலேயே இருந்தான். திடீரென்று அவன் அடையாரிலிருந்து அப்போது தான் வருவதாகவும், ப்ளாவட்ஸ்கீ அம்மையார் கீழே விழுந்து அவர் காலில் பலத்த அடிபட்டுவிட்டது என்றும் சொன்னான்.  கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்களுடன் பல நகரங்களுக்குப் பயணித்து வந்த தாமோதர் இப்படிச் சென்னையிலிருந்து வந்தது போலப் பேசியது கர்னல் ஓல்காட்டுக்கும், நாராயணசாமி நாயுடுவுக்கும் வியப்பை அளித்தது.

 

சில சந்தர்ப்பங்களில் எங்கோ நடக்கும் சம்பவங்கள் வியப்பளிக்கும் வகையில் நம் கருத்தில் பதிந்து விடுவதுண்டு. தாமோதர் அவர்களிடம் வேலை பார்த்தவன், ஆன்மிகத்தில் உண்மையான ஆர்வம் உள்ளவன். ஆனால் அவன் இது வரையில் எந்த அபூர்வ சக்தியையும் வெளிப்படுத்தியவன் அல்ல. ஆனால் அவன் சொன்ன விதம், பார்த்து விட்டு வந்து சொல்பவன் போலவே இருந்ததால்  அடுத்த ஸ்டேஷன் சஹரான்பூரில்  கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு ஒரு தந்தி அடித்தார். “இன்று ஆறு மணி அளவில் தலைமையகத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டதா?” மறுநாள் லாகூர் போய்ச் சேர்ந்த போது அடையாரிலிருந்து அவருக்குப் பதில் தந்தி வந்தது. “நேற்று மாலை ப்ளாவட்ஸ்கீ அம்மையார் நாற்காலியில் இருந்து எழும் போது வலது பாதம் பிசகி அவர் கீழே விழுந்து வலது முட்டியில் பலத்த அடிபட்டிருக்கிறது

 

அதை எப்படி தாமோதர் அறிந்தான் என்பது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

 

(தொடரும்)

என்.கணேசன்

நன்றி : தினத்தந்தி