Monday, January 24, 2022

யாரோ ஒருவன்? 69


காளிங்க சுவாமி காளியிடமிருந்து செய்தி வருவதற்காகக் காத்திருந்தார். தெய்வங்களும் சத்தியங்களுக்குக் கட்டுப்பட்டவை. உக்கிர பூஜை ஆகமவிதிகளின்படி நடந்து பூஜிப்பவன் பக்தியோடு இருந்து பூஜையின் முடிவில் முறையாகக் கேள்வி எழுப்பப்பட்டால் தெய்வம் பதில் சொல்லியே தீரும். மனிதர்களைப் போல் தெய்வம் தன்னுடைய பங்கை மறுப்பதில்லை.

“சொல் தாயே. எனக்குப் பதில் சொல்” என்று காளிங்க சுவாமியின் குரல் அமானுஷ்ய தொனியில் ஒலித்தது.

காளி சிலையில் படர்ந்திருந்த ஒரு நாகம் மெல்ல சீறியது. அதில் காளிங்க சுவாமி ஒரு பதிலை உணர்ந்தார். “அந்த நாகம் இப்போது அந்தப் பெயரை தரித்தவனிடம் இருக்கிறது.”

“என்னது மறுபடியும் அவனிடமா?” என்று கேட்ட அவர் குரலில் ஏமாற்றமும், திகைப்பும் தெரிந்தன. அவர் கேட்டார். “தாயே ஏன் இந்த பாரபட்சம். நான் செய்த அளவு பூஜைகளை அவன் என்றாவது செய்திருப்பானா? நான் இந்தக் கோயிலில் நூற்றுக்கணக்கான நாகங்களுக்கு வேண்டியதைச் செய்கிறேன். அந்த எண்ணிக்கையை அவன் என்றாவது தொட்டிருப்பானா? அப்படி இருக்கையில் அந்த நாகம் ஏன் அவனிடமே அடைக்கலம் புகுந்திருக்கிறது”

மறுபடியும் காளி சிலையில் படர்ந்திருந்த நாகம் சீறியது. காளிங்க சுவாமி பதிலை உணர்ந்தார். “நீ எதையும் எதிர்பார்ப்புடன் செய்கிறாய். அவன் அன்பு எதையும் எதிர்பார்த்ததில்லை.”

காளிங்க சுவாமி சீற்றத்துடன் கேட்டார். “எதிர்பார்ப்பவனுக்குத் தராமல் எதிர்பார்க்காதவனுக்கு நாகதேவதை தந்து எதை நிலை நிறுத்த முன் வருகிறது தாயே”

காளி சிலையில் படர்ந்திருந்த நாகம் சீறியது. “அன்பிற்கு ஈடு இணை எதுவுமில்லை. எல்லா உயிரினங்களும் அன்பு ஒன்றுக்கே தங்களை ஒப்படைக்கின்றன, அடிபணிகின்றன”

காளிங்க சுவாமி இகழ்ச்சியுடன் கேலிச் சிரிப்பு சிரித்தார். காளி சிலையில் இருந்த நாகம் அமைதியாக அவரையே பார்த்தது.

காளிங்க சுவாமி கைகூப்பிக் கேட்டார். “எனக்கு நம்பிக்கையூட்டும் தகவல் ஒன்றாவது சொல் தாயே”

காளி அந்த நாகம் மூலம் பதிலளித்தாள். “அந்த நாகம் தரும் பரிசு நீண்ட காலம் அவனிடம் இருக்கப்போவதில்லை”

காளிங்க சுவாமி இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி கூப்பினார். பின் சாஸ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரித்தார். அந்த ஒரு தகவல் புதிய நம்பிக்கையை அவருக்குள் ஏற்படுத்தியது.

  
ரேந்திரன் சென்ற பிறகு சரத் உடனடியாக கல்யாணைச் சந்தித்தான். நண்பர்கள் இருவரும் நரேந்திரன் கேட்ட கேள்விகளை வரிசையாகச் சொல்லி, தாங்கள் சொல்லியிருக்கும் பதிலையும் சொல்லி சரிபார்த்துக் கொண்டார்கள். இருவரையும் குழப்பியது நாகராஜ் என்ற நண்பனைப் பற்றிய கேள்வி தான்.
      
சரத் சொன்னான். “யார் அந்த ஆள்கிட்ட நாகராஜ்ங்கற நண்பனைப் பத்தி சொல்லியிருக்காங்கன்னு தெரியலை? அதுக்கான காரணம் புரிய மாட்டேங்குது. அது உன் பக்கத்து வீட்டுக்காரன் பெயராவும் இருக்கிறது சம்பந்தமில்லாததா கூட இருக்கலாம்னாலும் ஏனோ இடிக்குது?

கல்யாண் ஆமென்று தலையசைத்தான். சரத் சொன்னது போல நாகராஜ் என்கிற பெயருக்குப் பதிலாய் குப்புசாமி, ராமராஜ் என்பது போன்ற வேறு பொதுப் பெயர்களாய் இருந்திருந்தால் இந்த அளவு பாதித்திருக்காது. ”எவனோ மொட்டைக்கடுதாசி போட்டு தான் இவனுக அந்தக் கேஸை தூசி தட்டி எடுத்திருக்கானுக. அதுல அவன் சும்மா நாகராஜ்ங்கற பெயரையும் சேர்த்துருக்கான் போல...”

சரத் நண்பனிடம் கேட்டான். “ஆனா அந்த ஆள் கேட்ட நாகராஜ் உன் பக்கத்து வீட்டுக்கார ஆளாய் இருக்காதில்லையா?”

கல்யாணுக்கு வாய்விட்டுச் சிரிக்கத் தோன்றியது. ஆனாலும்இருக்கலாம்என்கிற ஏதோ ஒரு பயம் அப்படி சிரிக்க விடாமல் தடுத்தது.

சரத் அடுத்ததாகச் சொன்னான். “அந்த ஆள் ரஞ்சனியையும் விசாரிக்கணும்னு சொல்றார்.” அவன் குரலில் கவலை தெரிந்தது.

கல்யாண் சொன்னான். “மாதவனுக்கு யாராவது எதிரிகள் இருந்திருக்காங்களா, நாகராஜ்ன்கிற நண்பன் இருக்கானாங்கற மாதிரி சில கேள்விகள் கேட்டுட்டுப் போயிடுவான் விடு. அதுக்கு மேல கேட்க அவனுக்கும் ஒன்னுமில்லை. சொல்ல ரஞ்சனிக்கும் ஒன்னுமில்லை

நண்பன் சொன்னதில் சரத் சிறிது நிம்மதியடைந்தவனாய்க் கிளம்பினான். கல்யாண் அவன் சென்றவுடன் தந்தைக்குப் போன் செய்தான். “அப்பா எங்கே இருக்கீங்க

சத்தியமங்கலத்தை நெருங்கியாச்சு. பத்து நிமிஷத்துல நாதமுனி வீட்ல இருப்பேன்.”

அப்பா அந்தக் கிழவர் விவரமானவர். அதனால் அவர் கிட்ட பேசறப்ப நீங்க ரொம்ப ஜாக்கிரதையாய் இருக்கணும்...”

நானும் விவரமானவன் தான். கவலைப்படாதே


நாதமுனிக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. கல்யாண் தான் மாதவனோடு சில சமயங்களில் அவர் வீட்டுக்கு வந்திருக்கிறானேயொழிய அவன் தந்தை வேலாயுதம் சத்தியமங்கலத்தில் இருக்கும் போதே அவர் வீட்டுக்கு ஒரு தடவை கூட வந்தது கிடையாது. அந்தக் காலத்தில் பரந்தாமன் வீட்டிலும் உள்ளூர் திருமணங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் சிலவற்றிலும் பார்த்துப் புன்னகைத்திருப்பதைத் தவிரக் கூடுதல் நெருக்கம் என்றுமே இருவருக்குள் இருந்ததில்லை...

அன்பொழுகப் பார்த்துஎன்னை அடையாளம் தெரியலையா?” என்று வேலாயுதம் கேட்டவுடன் சமாளித்துக் கொண்டு நாதமுனிதெரியாமலென்ன? வாங்க.. வாங்க.. எப்படியிருக்கீர்?” என்று கேட்டார்

எதோ இருக்கேன். ரொம்ப வருஷம் கழிச்சு சத்தியமங்கலம் வந்தேன். திடீர்னு உங்க ஞாபகம் வந்துச்சு... பார்த்துட்டு போலாம்னு வந்தேன். சவுக்கியம் தானே?”

சவுக்கியம். உட்காரும். கல்யாண் எப்படியிருக்கான்?”

உங்க ஆசிர்வாதத்துல நல்லாயிருக்கான். உங்களைப் பத்தி எப்பவுமே உயர்வாய் சொல்வான்.” என்று சொன்னபடி இருக்கையில் அமர்ந்த வேலாயுதம் நாதமுனியின் வீடு இன்னமும் சாதாரண நடுத்தர வர்க்க வீடாக இருப்பதை மனதில் இகழ்ச்சியோடு கவனித்தார். ‘பாம்பு பத்தி எத்தனையோ தெரிஞ்ச ஆளுக்குப் பணம் பண்ணத் தெரியலயே. பாவம்

நாதமுனிக்கு இந்த ஆளிடம் அடுத்து என்ன பேசுவது என்று தெரியவில்லை. அவரை விட பரந்தாமன் குடும்பத்துக்கு நெருக்கமானவர் என்பதால் இங்கு வருவதற்கு முன் பரந்தாமன் வீட்டுக்குப் போய்விட்டு வந்திருப்பார் என்ற அனுமானத்தில் கேட்டார். “பரந்தாமன் வீட்டுக்கும் போயிட்டு வந்தீரா?”

வேலாயுதம் முகத்தில் போலி துக்கத்தை வரவழைத்துக் கொண்டு சொன்னார். “போகணும்னு நினைச்சேன். ஆனா மாதவன் போயிட்ட பிறகு அவங்க ரெண்டு பேரோட முகத்தை நேர்ல பாக்கற தைரியம் எனக்கும், கல்யாணுக்கும் போயிடுச்சு. அதனால தான் அங்கே போறதுக்குப் பதிலா உங்க கிட்ட வந்தேன். மாதவனோட அம்மா அப்பா ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க?”

முடிஞ்ச அளவுக்கு மனசை தேத்திகிட்டு இருக்காக ஓய். என்ன பண்றது? விதி அவங்கள மாதிரி நல்லவங்க வாழ்க்கைல இப்படி விளையாடிருக்க கூடாது

உண்மை தான். கல்யாணும் எத்தனையோ தடவ சத்தி வந்து அவங்கள பாக்கணும்னு சொல்வான். ஆனா அவங்க துக்கத்தை பார்த்தா தாங்க முடியாம நானும் உடைஞ்சு போயிடுவேன்ப்பான்னு சொல்லி பின்வாங்கிடுவான். நீங்க அவங்கள அடிக்கடிப் பார்க்கறீங்க இல்லயா?”

ஆமா தினம் போய் பரந்தாமனோட சேர்ந்து  ஒரு வாக்கிங் முடிச்சுட்டு வந்து அலமேலம்மா கையால தயாரிச்ச காபியைக் குடிச்சுட்டு வருவேன்....”

இனியும் இந்தச் சோகக்கதையைத் தொடரும் பொறுமை வேலாயுதத்திற்கு இருக்கவில்லை. ஆனால் ஒரேயடியாக நாகரத்தினம் பத்தின பேச்சுக்கு தாவவும் அவரால் முடியாது. பேச்சோடு பேச்சாக வந்தது போல் அது இருக்க வேண்டும்... எந்தப் பேச்சுக்கு வந்து பின்பு அதைக் கொண்டு வருவது?

நாதமுனி திடீரென்று நினைவுக்கு வந்தவராகக் கேட்டார். ”மாதவன், கல்யாணுக்கு நாகராஜ்ங்கற பேர்ல யாராவது நண்பர் இருந்தாங்களா?”

நாகராஜ் அவர்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்கு வந்தாலும் வந்தான் யாராவது அந்தப் பெயரைச் சொல்லிக் கேட்கும்படியாகி விடுகிறது என்று வேலாயுதம் நினைத்துக் கொண்டார். அதேநேரத்தில் தான் கேட்க வந்த விஷயத்தைக் கேட்கவும் இது வழிசெய்து தந்திருக்கிறது என்று நினைத்தவர் அதைப் பயன்படுத்திக் கொண்டார். “இல்லையே... நீங்க அந்தப் பெயரைச் சொன்னவுடன எனக்கு இன்னொரு விஷயம் உங்க கிட்ட கேட்கணும்னு நினைச்சது நினைவுக்கு வருது. விசேஷ நாகரத்தினம்னு ஒன்னு நிஜமாவே இருக்கா?”

நாதமுனி திகைத்தார். பாமர மனிதர்கள் இதன் பெயரைக்கூடக் கேள்விப்பட்டிருக்க முடியாது. பணம் சொத்து தவிர வேறெதைப் பற்றியும் கவலைப்படாத இந்த மனிதர் இதைக் கேட்க வேண்டுமென்றால் விசேஷ நாகரத்தினம் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டதென்று அர்த்தம். அவர் வேலாயுதத்திடம் கேட்டார். “இந்தப் பெயரை எங்கே நீங்க கேள்விப்பட்டீங்க?”



(தொடரும்)
என்.கணேசன்



3 comments:

  1. So Nagaraj and Kalingaswamy are rivals. I think both will take two opposite sides in this investigation case. Very interesting.

    ReplyDelete
  2. விசேஷ நாகரத்தினம் நாகராஜ் கையில் நீண்ட‌ நாட்கள் நாகராஜ் கையில் இருக்காது என்றால்? நாதமுனி,காளிங்க சுவாமி, வேலாயுதம்..... இவர்கள் யார் கையில் போய் சேரும்?

    ReplyDelete
  3. Wowww so interesting

    ReplyDelete