Monday, January 31, 2022

யாரோ ஒருவன்? 70


வேலாயுதம் ஒரு கதையை முன்பே தயாரித்து வைத்திருந்தார். அதை அவர் நாதமுனியிடம் சொல்ல ஆரம்பித்தார். ”போன வாரம் ஒரு நாள் சாயங்காலம் நான் வாக்கிங் போய்ட்டு வழியில இளைப்பாற ஒரு இடத்துல உக்கார்ந்தேன்அப்ப ஒரு பாம்பாட்டியும் பக்கத்துல வந்து உட்கார்ந்தான். சும்மா கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்தோம். அப்ப நாகரத்தினம் பத்தியும் பேச்சு வந்துச்சு. எனக்கு உடனே உங்க ஞாபகம் வந்துச்சு. ஏன்னா கல்யாண், மாதவன், சரத் மூனு பேரும் நீங்க நாகரத்தினம் பத்திச் சொன்னதை எல்லாம் பிரமிப்போட வீட்ல பேசிப்பாங்க. ஆனா பேச்சோட பேச்சா அந்தப் பாம்பாட்டி விசேஷ நாகரத்தினம்னு ஏதோ ஒன்னு இருக்கறதா சொன்னான். அது எதோ ஆயிர வருஷத்துக்கு ஒரு தடவை தான் உருவாகுமாம். அந்த விசேஷ நாகரத்தினம் வச்சிருக்கறவன் கடவுள் மாதிரி சக்திகள் அடைஞ்சுடுவானாம்.... வீட்டுக்கு வந்தவுடன கல்யாண் கிட்ட இதைச் சொன்னேன். அப்ப கல்யாண் உங்கள ஞாபகப்படுத்திகிட்டு சொன்னான். “அங்கிள் எங்க கிட்ட நாகரத்தினங்கள் பத்தி எத்தனையோ சொல்லியிருக்கார். ஆனா இந்த மாதிரியான விசேஷ நாகரத்தினம் பத்தி ஒன்னும் சொன்னதில்லையேப்பான்னு சொன்னான்.... இப்ப நீங்க நாகராஜ்ங்கற பேரைச் சொன்னவுடனே எனக்கு திடீர்னு ஞாபகம் வந்துச்சு. அந்த மாதிரி ஒரு நாகரத்தினம் இருக்கறது உண்மை தானா?”

விசேஷ நாகரத்தினம் பேச்சோடு பேச்சாக பேசப்படும் விஷயமில்லை. ஆனால் பாம்பாட்டி சொன்னது என்று அவர் சொல்வது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.... நாதமுனி சொன்னார். “அந்த மாதிரி விசேஷ நாகரத்தினம் பத்தி எந்தக் குறிப்பும் வழக்கமா நாகரத்தினங்களைப் பத்திக் குறிப்பிடற புத்தகங்கள்ல இல்ல ஓய்.... பாம்பாட்டிகளும், பாம்புகளை வழிபடற பழங்குடிகளும் மட்டும் தான் அதைப் பத்திப் பேசறாக. ஆனா அவங்களும் பரம்பரை பரம்பரையாய் அவங்களுக்குச் சொல்லப்பட்டத திருப்பிச் சொல்லிட்டு வர்றாகளேயொழிய அவங்க கிட்டயும் எழுத்து பூர்வமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவங்க அந்த மாதிரியான நாகரத்தினத்தை உதிர்த்தவுடனே அந்த நாகம் இறந்துடும்னும் சொல்றாக. அதை உதிர்க்கறதுக்கு முன்னாடி ரெண்டு நாள்ல இருந்தே பிரத்தியேகமான ஒரு மணம் வரும்னும் சொல்றாக. அதெல்லாம் எந்த அளவு உண்மைன்னு தெரியல. நாகரத்தினங்கள் விசேஷ சக்திகள் தரும்கிறது உண்மை. இந்த விசேஷ நாகரத்தினம் கூடுதலாய் அதிக சக்திகள் தரலாம்னு வேணும்னா சொல்லலாம். ஆனா எந்த விசேஷ சக்தியும் ஒருவனைக் கடவுளாக்கிடாது ஓய்... அதிகபட்சமா விசேஷ சித்திகள் பெற்ற ஒரு சித்தனாக்கலாம். சித்தர் வேற கடவுள் வேற இல்லயா?”

வேலாயுதம் உள்ளத்தில் ஒரு பரபரப்பான உற்சாகத்தை உணர்ந்தார். அந்த விசேஷ நாகரத்தினம் பற்றி பாம்பாட்டிகளும், பாம்புகளை வணங்கும் பழங்குடி மக்களும் காலம் காலமாகப் பேசுகிறார்கள் என்பதை இந்த ஆளும் சொல்கிறான். அந்த வித்தியாச மணம், நாகரத்தினத்தை உதிர்த்தவுடன் இறக்கும் நாகம் இதெல்லாம் கூட இந்தாளுக்கும் தெரிந்திருக்கிறது. அப்படியானால் பாம்பாட்டி சொன்னதெல்லாம் உண்மையாகவே இருக்க வேண்டும்.

விசேஷ சக்தின்னு சொன்னவுடன ஞாபகம் வருது. வட இந்தியால யாரோ ஒரு மகராஜ் இருக்கானாம். அவனுக்கு நாகசக்தி இருக்காம். ஒரு தடவை அவன் தரிசனம் கிடைக்கணும்னா நாம அஞ்சு லட்சம் ரூபாய் தரணுமாம். அதுவும் ஒரு நாளைக்கு ஒரு ஆளைத்தான் அவன் பார்ப்பானாம். நீங்க கேள்விப்பட்டுருக்கீங்களா?’

கேள்விப்பட்டிருக்கேன். என்னோட ஆராய்ச்சி ஆர்வத்துக்கு உதவற மாதிரி எதாவது அந்த ஆள் கிட்டே கிடைக்குமான்னும் யோசிச்சிருக்கேன். ஆனா ஒரு தடவை பார்க்கறதுக்கு அஞ்சு லட்சம்னு சொன்னவுடனே அந்த யோசனையைக் கைவிட்டுட்டேன். அதுவும் அந்த ஆளோட அப்பாயின்மெண்டுக்கு நாலஞ்சு மாசம் காத்திருக்கணும்னும் வேற சொன்னாக ஓய்

ஆமா. அதை நானும் கேள்விப்பட்டேன். கலிகாலம்னு நினைச்சிகிட்டேன். ஒரு தொழில் செய்யணும்னா எத்தனை முதலீடு, எத்தனை கஷ்டங்கள், எத்தனை பிரச்னைகள் இருக்கு. ஆனால் இந்த மாதிரியான ஆள்க எத்தனை சுலபமாய் சம்பாதிச்சிடறாங்க பார்த்தீங்களா? ஆனா அந்த மாதிரி ஒரு விசேஷ நாகரத்தினம் சாதாரணமான மனுஷங்க கைல கிடைக்க வாய்ப்பிருக்கா?”

நாதமுனி உடனடியாகப் பதில் சொல்லாமல் யோசித்துச் சொன்னார். “உருவாகறது அந்த மாதிரி விசேஷ சக்தி இருக்கிற சூழ்நிலைகள்ல தான் உருவாக முடியும். ஏன்னா நாகரத்தினங்கள்லயும் அது அபூர்வமானது விசேஷமானதுங்கறதால. அப்படி உருவான பிறகு எதாவது ஒரு பேரதிர்ஷ்டசாலிக்கு கிடைக்கவும் செய்யலாம். அதான் சொன்னேனே கிடைச்சாலும் ஒருத்தன் கடவுளாயிட முடியாது. ஆனால் எத்தனையோ சக்திகள் கூடுதலா வந்து சேரலாம்...”

அதற்கு மேல் அங்கு அதிக நேரமிருக்க வேலாயுதத்தால் முடியவில்லை. சம்பிரதாயத்திற்கு சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்து விட்டு கண்கலங்க பரந்தாமன் தம்பதியரை நிறைய விசாரித்ததாய் தெரிவிக்கச் சொல்லி விட்டு அங்கிருந்து பரபரப்புடன் வேலாயுதம் கிளம்பினார்.


ல்யாணிடம் பேசி விட்டு வந்த பின் நீண்டநேரம் சரத் ஆழ்ந்த சிந்தனையிலிருந்தான். நாளை நரேந்திரன் விசாரிக்க வீட்டுக்கு வரும் சமயத்தில் தீபக் வீட்டில் இல்லாமல் இருப்பது நல்லது என்று அவனுக்குத் தோன்றியது. “என் மரணம் இயற்கையல்ல, என்னைக் கொன்று விட்டார்கள்என்று யாரோ சொல்வது போல் கனவு கண்ட அவன் அதற்கும், அவன் பெற்றோரின் நண்பனின் மரணத்திற்கும் முடிச்சு போட்டால் அது தேவையில்லாத பிரச்சினை... நரேந்திரன் வந்து விசாரிக்கும் சமயத்தில் அவன் இருக்கக்கூடாதது மட்டுமல்ல, நரேந்திரன் விசாரிக்க வந்து போனதே அவனுக்குத் தெரியக்கூடாது. ரஞ்சனியிடம் நாசுக்காக அதைச் சொல்லி வைக்க வேண்டும்...

தீபக் நண்பர்களுடன் கொடிவேரி நீர்வீழ்ச்சிக்குப் போக வேண்டும் என்று சில நாட்களாகச் சொல்லி வருகிறான். அதற்காக சரத்தின் காரைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். சத்தியமங்கலத்தில் இருக்கும் போது அங்கிருந்து அந்த நீர்வீழ்ச்சி பக்கமானதால் சரத், கல்யாண், மாதவன் மூவரும் சேர்ந்து பல முறை போயிருக்கிறார்கள். ரஞ்சனியை அவர்களுடன் சகஜமாக பழக விட்டாலும் அவள் வீட்டார் வெளியூர்களுக்கு அவர்களுடன் தனியாக அனுப்புவதில்லை என்பதால் அவளை விட்டுவிட்டு அவர்கள் மூவரும் போவார்கள்.... மாதவன் மரணத்திற்குப் பின் அவன் நினைவை அதிகம் ஏற்படுத்தும் எதையும் செய்ய அவர்களுக்குத் தயக்கம் இருந்ததால் பிறகு அவர்கள் அந்த நீர்வீழ்ச்சிக்குப் போனதில்லை... 

நாளை தீபக்கை அந்த நீர்வீழ்ச்சிக்குப் போய்வரச் சொல்லிவிடலாம் என்று சரத் முடிவு செய்தான். தீபக்குக்குப் போன் செய்து நாளை அவன் காரை எடுத்துக் கொண்டு கொடிவேரிக்குப் போய்வரலாம் என்று சொல்லி அவனும் சந்தோஷமாகச் சரியென்று சொன்னபின் தீபக் பிரச்சினையாகாதபடி செய்த திருப்தி சரத்துக்கு ஏற்பட்டது. நரேந்திரன் கேள்விகளால் ரஞ்சனி நிறைய பாதிக்கப்படாமல் இருந்து விட்டால் நன்றாயிருக்கும்.


வேலாயுதம் வீடு வந்து சேர்ந்தவுடன் வழக்கம் போல் பக்கத்து வீட்டைக் கவனிப்பதைத் தவிர மற்ற எல்லா வேலைகளுக்கும் விடைகொடுத்திருந்தார். சக்தி வாய்ந்த விசேஷ நாகரத்தினம் பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஓரிரு நாளில் கிடைத்து விடும் என்று பாம்பாட்டி சொல்லி விட்டிருந்ததால் அது சம்பவிக்கும் சமயத்தில் பக்கத்து வீட்டில் வித்தியாசமாக ஏதாவது நிகழ்கிறதா என்று காணும் பேராவலில் அவர் இருந்தார். அன்று மாலையில் அவர் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் பக்கத்து வீட்டு அறையின் மேல் ஜன்னலும் மூடப்பட்டு விட்டது. ஒருவேளை அவர் வேவு பார்ப்பதை நாகராஜ் அறிந்து கொண்டு விட்டானோ தெரியவில்லை. அது அவர் ஆர்வத்தையும் சிந்தனாசக்தியையும் அதிகப்படுத்தி விட்டது. எங்கிருந்து இனி வேவு பார்ப்பது, எங்கே எந்தக் கோணத்தில் பார்த்தால் கொஞ்சமாவது தெரியவரும் என்று ஆராய்வதற்காக அங்குமிங்கும் தன் வீட்டில் நின்று பார்ப்பதற்கே அவர் சிரமப்படவேண்டி இருந்தது. காரணம் அவர் மருமகள் அவர் ஓட்டத்தையும், பரபரப்பையும் காண நேர்ந்தால் அவரை ஒரு விசித்திர ஜந்து போல பார்த்தாள். அவள் தன் கருத்தை வாய்விட்டுச் சொல்லா விட்டாலும் நடக்கும் கூத்தை அவள் தவறாமல் மகளை அழைத்துக் காட்டினாள். தர்ஷினி தாயை விடக் கேவலமாய் அவரைப் பார்ப்பதுடன் தன் அபிப்பிராயங்களை ஒளிக்காமல் வாய்விட்டுச் சொன்னாள். அதனால் அவர் மருமகளோ, பேத்தியோ இருக்கும் நேரங்களில் கவுரமாக நடந்து கொள்ள வேண்டி வந்தது. அவர்கள் இருவரும் தங்கள் அறைகளில் அடைந்து கொண்ட பின் தான் அவர் சுதந்திரமாக அங்குமிங்கும் நின்று பக்கத்து வீட்டைக் கவனிக்க முடிந்தது.

இன்று இரவு பத்து மணியாகி விட்டிருந்த போதிலும் கல்யாண் ஆபிசிலிருந்து இன்னும் வரவில்லை. இன்றைக்கு அவனுக்கு நிறைய வேலைகள் போலிருக்கிறது. நாதமுனி சொல்லியிருந்த விஷயங்களை அவன் போனில் கூடக் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் வந்தவுடன் தான் விவரமாகச் சொல்ல வேண்டும்.

பக்கத்து வீட்டில் எல்லா மின் விளக்குகளும் அணிந்திருந்தாலும் தீபவிளக்குகள் எரிவதன் ஒளி அங்குமிங்கும் சிறிது தெரிந்தது. பூஜையில் தீவிரமாக இருக்கிறான் போல் இருக்கிறது... மெல்ல தன் வீட்டுக்கு வெளியே வந்தவர் தீயை மிதித்தவர் போலப் பின்வாங்கினார். காரணம் பாம்பாட்டி பக்கத்து வீட்டின் முன்னால் சென்று கொண்டிருந்தான். நத்தை கூட அவனை விட வேகமாக நகரும். அந்த அளவு நிதானமாக நகரும் முயற்சியில் ஈடுபட்டிருந்த பாம்பாட்டி பக்கத்து வீட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

   

(தொடரும்)
என்.கணேசன்   




2 comments:

  1. I think Vishesha Nagarathinam is produced at the moment. That is why the snake charmer is in front of Nagaraj's house. Very interesting

    ReplyDelete
  2. பாம்பாட்டி பயந்து போயிட்டான் ...இப்ப எதுக்கு திரும்ப வந்திருக்கான்? பாம்பாட்டி பின்னால் இருந்து இயக்குவது யார்??
    ஒரே குழப்பமா இருக்கே...!!!

    ReplyDelete