Thursday, September 2, 2021

இல்லுமினாட்டி 118



ம்மானுவல் எர்னெஸ்டோவின் பயணத் திட்டத்தோடு வந்து அக்ஷயைச் சந்தித்தான். அக்ஷய் அதைக் கவனமாகப் படித்தான்.

செவ்வாய் இரவு 11.00 வீட்டிலிருந்து கிளம்புவது.
இரவு 11.45 ம்யூனிக் விமானநிலையம் அடைதல்
இரவு 12.00 விமான நிலையத்திலிருந்து தனிவிமானத்தில் புறப்பாடு.
புதன் காலை 9.30 வாஷிங்டன் டி சி யில் சேர்தல். 
காலை 10.45 வாஷிங்டனில் உள்ள அவருடைய பங்களா சேர்தல்
மாலை 5.50 விழாவுக்குக் கிளம்புதல்
மாலை 6.45 விழா நடக்கும் இடம் சேர்தல்
இரவு 9.15 அங்கிருந்து கிளம்புதல்
இரவு 10.10 பங்களா போய் சேர்தல்
வியாழன் காலை 11.00 பங்களாவிலிருந்து கிளம்புதல்
காலை 11.45 இல்லுமினாட்டி கூட்டம் நடக்குமிடம் சேர்தல்
பகல் 2.00 அங்கே மதிய உணவு
பகல் 3.00 அங்கிருந்து கிளம்புதல்
பகல் 3.45 பங்களா போய் சேர்தல்
மாலை 5.30 பங்களாவிலிருந்து விமான நிலையம் கிளம்புதல்
மாலை 6.45 வாஷிங்டன் டி.சி விமான நிலையம் அடைதல்
இரவு 7.00 விமானத்தில் கிளம்புதல்
வெள்ளி காலை 4.30 ம்யூனிக் விமானநிலையம் வந்தடைதல்
காலை 5.15 வீடு வந்து சேர்தல்

அதனுடன் பயணங்களின் போது இருக்கும் பாதுகாவலர்கள் யார் யார், அவர்களிடம் இருக்கும் ஆயுதங்கள் என்னென்ன, வாஷிங்டன் பங்களாவில் ஏற்கெனவே இருக்கும் ஆட்கள், அவர்கள் குறித்த விவரங்கள், அந்தப் பங்களாவின் அமைப்பு, அங்கிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாஷிங்டனில் இல்லுமினாட்டி கூட்டம் நடக்கும் இடம், அதன் அமைப்பு, அங்குள்ள பாதுகாப்பு அம்சங்கள் என எல்லா விவரங்களும் இருந்தன.  இதெல்லாம் எப்போதும் தொடர்ந்து செய்யப்படும் ஏற்பாடுகள் என்பதால் எதிலும் அக்‌ஷய் குறை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனால் அக்‌ஷய் நிறைய கேள்விகள் கேட்டான். பயணத்தின் போது வரவிருக்கும் பாதுகாப்பு வீரர்களில் புதியவர்கள் யாராவது இருக்கிறார்களா, பழைய ஆட்களாக இருந்தாலும் எத்தனை காலமாக பாதுகாப்புப் பணியில் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டான். பின் ம்யூனிக்கில் விமான நிலையம் போய்ச் சேரும் வரை உள்ளப் பயணத் தெருக்களில் ஆபத்துக்கான அம்சங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டான். அதில் ஆபத்துக்கான வாய்ப்புகள் இருக்கவில்லை.

அக்‌ஷய் இம்மானுவலிடம் மறுபடியும் கேட்டான். “விஸ்வம் ஜெர்மனியை விட்டு வாஷிங்டனுக்கும் வர வாய்ப்பில்லையல்லவா?”

“நூறு சதவீதம் இல்லை. எல்லா இடங்களிலும் தீவிரப் பரிசோதனை நடந்து வருகிறது.” இம்மானுவல் சொன்னான்.

தலையசைத்த அக்‌ஷய் வாஷிங்டனில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தான். இம்மானுவல் அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லி விட்டுப் புன்னகையுடன் கேட்டான். “உனக்கு நான் சொன்னதில் நம்பிக்கை இல்லை அல்லவா? அதனால் தான் விஸ்வம் வாஷிங்டனுக்கும் வரக்கூடும் என்ற எண்ணத்தில் நீ கேட்கிறாய். சரி தானே?”

அக்‌ஷய் சொன்னான். “நம்பிக்கை எல்லாம் இருக்கிறது. ஆனால் க்ரிஷை சென்னையிலிருந்து அமேசான் காடுகளுக்கு அவன் ஏலியன் நண்பன் சிகிச்சை செய்ய எடுத்துச் செல்ல முடியுமென்றால், விஸ்வத்தின் கூட்டாளி அவனை வாஷிங்டன் வரையில் எடுத்துச் செல்ல முடியாதா என்ன? எல்லாவற்றிற்கும் தயாராக இருப்பது தானே புத்திசாலித்தனம்”

இம்மானுவலின் புன்னகை விரிந்தது. ”உண்மை தான்” என்றான்.



சாலமன் சனிக்கிழமை தருவதாகச் சொல்லியிருந்த பாஸ்போர்ட், விசா, விமான டிக்கெட், அலைபேசி ஆகியவற்றுடன் எர்னெஸ்டோவின் பயணத் திட்டம், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றையும் வெள்ளிக்கிழமை இரவே கொண்டு போய் விஸ்வத்திடம் தந்தார். சனிக்கிழமை பகல் வேளைகளில் வந்து யார் பார்வையிலாவது பட சாலமன் விரும்பவில்லை. சனிக்கிழமை இரவு கொண்டு போய் தரலாம் என்றால் பின்பு எர்னெஸ்டோவைக் கொல்லத் திட்டமிட்டுத் தன்னைத் தயார் செய்து கொள்ள விஸ்வத்துக்கு அதிக நேரம் கிடைக்காது. வெள்ளிக்கிழமை இரவு சென்று தந்தால் ஒரு முழு நாள் அவன் திட்டம் போடலாம் என்று சாலமன் நினைத்தார்.

அவர் சர்ச்சுக்குள் போன பிறகு தான் விஸ்வம் மெழுகுவர்த்தியைக் கொளுத்தினான். அவர் உள்ளே நுழைந்த போதிருந்த காரிருள் அவரைச் சற்றுத் தடுமாற வைத்தது. பின் அவன் மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அந்த அரைகுறை வெளிச்சத்தில் நின்றிருந்தது அவருக்கு ஒருவிதமான அமானுஷ்யமாக இருந்தது. “வாருங்கள் நண்பரே”  என்று விஸ்வம் அவரை வரவேற்றான்.

சாலமன் தான் கொண்டு வந்திருந்தவற்றை அவனிடம் நீட்டினார். “நீங்கள் கேட்ட எல்லாமே இருக்கிறது. தலைவரின் பயணத் திட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட வைத்திருக்கிறேன்...”

விஸ்வம் முதலில் அந்தப் பயணத்திட்டம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் உறையைத் திறந்தான். உள்ளேயிருந்த தாள்களை எடுத்து மேலோட்டமாகப் பார்த்தபடியே அவன் கேட்டான். “இந்தப் பயணத்திட்டத்தை மாற்றி விட மாட்டார்களே?”

சாலமன் சொன்னார். “மாட்டார்கள். இதைத் தான் இன்று காலை இம்மானுவல் அக்‌ஷயிடம் கொண்டு போய் தந்தான். இனி இதில் மாற்றம் எதுவும் இருக்காது...”

விஸ்வம் கேட்டான். “இதைத் தீர்மானிப்பது எப்போதுமே இம்மானுவல் தானா?”

“எப்போதுமே இல்லை. உங்களால் தலைவர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்த பிறகு அவருடைய பாதுகாப்பு இம்மானுவலின் தனிப் பொறுப்பாகி விட்டது. இல்லாவிட்டால் அவருடைய பாதுகாப்புக்கென்று ஒரு தனி இலாக்கா இருக்கிறது...”

அந்த ஏற்பாடுகளைச் சிறிது படித்துப் பார்த்தவுடனேயே பாதுகாப்பு ஏற்பாடுகள் கச்சிதமாகச் செய்யப்பட்டிருக்கின்றன என்பது விஸ்வத்துக்குத் தெரிந்து விட்டது. இல்லுமினாட்டி உளவுத்துறைத் தலைவன்  தனிப் பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும் பாதுகாப்பில் குறையிருக்க வாய்ப்பில்லை.

“இதைப் பார்த்து அக்‌ஷய் என்ன சொன்னான், ஏதாவது திருத்தம் சொல்லி இருக்கிறானா என்று தெரியுமா?”

“இல்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு வீர்ர்களுக்கு யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று அறிவித்து விட்டார்கள். இம்மானுவல் அக்‌ஷயிடம் பேசி விட்டு வந்த பின் யாருக்கும் மாற்று அறிவிப்புகளோ, திருத்தங்களோ அனுப்பப்படவில்லை...”

பயண ஏற்பாடுகளையும் பாதுகாப்பு விவரங்களையும் அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் விஸ்வம் படித்தான். படித்து விட்டுப் பல கேள்விகள் கேட்டு அவன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டான். மேலும் எர்னெஸ்டோ பற்றிப் பல கேள்விகள் கேட்டான். கடைசியில் விஸ்வம் சாலமனிடம் கேட்டான். “பொதுவாக வருடத்திற்கு எத்தனை முறை எர்னெஸ்டோ வாஷிங்டன் போவார்”

“முன்பெல்லாம் வருடத்திற்குப் பத்து தடவையாவது போய் விட்டு வருவார். இப்போதெல்லாம் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை தான் அதிகபட்சமாகப் போகிறார்.”

விஸ்வம் சொன்னான். “எனக்கு அவர் கடைசி இரண்டு தடவை வாஷிங்டன் போன பயணங்களின் முழுவிவரங்களும் வேண்டும். எங்கே தங்கினார்? யாரையெல்லாம் பார்த்தார்? எங்கெல்லாம் போனார்? என்னவெல்லாம் சாப்பிட்டார்? என்ற முழுவிவரங்கள் தெரிய வேண்டும்.”

சாலமன் மனதில் அசதியை உணர்ந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. யோசிக்கையில் அவன் கேட்டதில் தவறில்லை என்று தோன்றியது. அவரைப் போன்ற சக்தி வாய்ந்த பிரபலத்தைக் கொல்வது சாதாரண வேலையல்ல. திட்டங்கள் தீட்ட எத்தனை அதிக விவரங்கள் தெரிகின்றனவோ அத்தனை நல்லதல்லவா!

”நாளை மதியத்திற்குள் அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்ன சாலமன் விமான நிலையத்தில் மைக்கேல் விக்டர் என்ற அதிகாரியை அவனுக்கு உதவ ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறி அவனிடம் சொல்லியிருப்பதை எல்லாமும் விஸ்வத்திடம் தெரிவித்தார். அதன்படியே அவன் நடத்தையும், தோரணையும் இருக்கட்டும் என்பதற்காக அவர் தெரிவித்ததை அவன் கூர்மையாகக் கேட்டுக் கொண்டான்.

சொல்கின்ற தகவல்கள் எதிலும் அவன் அலட்சியம் காட்டாதது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.

அவர் கிளம்புவதற்கு முன் கடைசியாக விஸ்வம் அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்டான். முதல் கேள்வி “வாஷிங்டன் பங்களாவில் அக்‌ஷய் எங்கே தங்குவான். எங்கே உறங்குவான்?” என்பதாக இருந்தது.

சாலமன் சொன்னார். “அவர் அறைக்கு அடுத்த அறை அவனுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு ஆபத்து என்று தெரிந்தால் ஒழிய அவன் தனதறையிலேயே தான் படுத்துக் கொள்வான்...”

விஸ்வம் இரண்டாவது கேள்வி கேட்டான். “க்ரிஷும் வாஷிங்டன் போகிறானா?”

“இல்லை. உடன் போகிறவர்களில் அவன் பெயர் இல்லை.”

“அப்படியானால் இந்தியா திரும்புகிறானா?”

“அதுவுமில்லை. அவன் தலைவர் இல்லாத மூன்று நாட்களில் ஜான் ஸ்மித்தோடும், விஸ்வேஸ்வரய்யாவுடனும் ஏதோ கலந்தாலோசனை செய்ய உத்தேசித்திருக்கிறான். அதற்காக விஸ்வேஸ்வரய்யா செவ்வாய்க்கிழமை ம்யூனிக் வருகிறார்”

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Washington events are going to be tense and very interesting. Counldn't wait for next Thursday

    ReplyDelete
  2. விஸ்வம் மற்றும் அக்ஷய் இருவரின் மோதல் வாஷிங்டனில்... பரபரப்புடன் காத்திருக்கிறேன்...

    ReplyDelete