Monday, August 30, 2021

யாரோ ஒருவன்? 47


ந்த இளைஞனின் தந்தை அழுக்குப் படிந்த ஒரு தலைப்பாகையைக் கட்டியிருந்தார். ஒரு பழைய ஓட்டு வீட்டு வாசலில் ஒரு மரநாற்காலியில் அமர்ந்திருந்தார். காரில் வந்திறங்கிய மகனையும், புதியவனையும் உணர்ச்சியே இல்லாமல் கூர்மையாகப் பார்த்தார். ஆனால் அவராக எதையும் கேட்கவோ சொல்லவோ முனையவில்லை. அந்த இளைஞன் தந்தையிடம் ஜெய்ராமை ஆன்மீக எழுத்தாளராக அறிமுகம் செய்தான். ஜெய்ராம் இரு கைகளையும் கூப்பிய போது அவரும் தன் கைகளைக் கூப்பி வைத்தார்.

சார் நம்ம சுவாமிஜி முக்தானந்தா பத்தி ஒரு புஸ்தகம் எழுதப் போறாராம். அதற்காக சுவாமிஜியைத் தெரிஞ்ச, பழகின ஆள்கள் கிட்ட விவரங்கள் சேகரிக்கிறார்.”

மகன் சொன்னதை அவர் கேட்டுக் கொண்டாலும் முகத்தில் எந்தச் சலனமும் இப்போதும் இல்லை. கிழவனுக்குச் சரியாகக் காது கேட்பதில்லையோ என்ற சந்தேகம் ஜெய்ராமுக்கு வந்தது. கிழவனிடம் தாழ்ந்த குரலில் இளைஞன் சொன்னான். “இவருக்குப் புதிய விவரங்கள் அதிகமாகச் சொன்னால் ஆயிரம் ரூபாய் தர்றாராம். நம்ம போட்டோவை இவர் வெளியிடற புஸ்தகத்திலயும் போடறாராம்

கிழவரின் முகத்தில் வெளிச்சம் வந்தது, சோம்பலாகச் சரிந்து அமர்ந்திருந்தவர் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். இளைஞன் வீட்டுக்குள்ளே போய் ஒரு பழைய பிளாஸ்டிக் நாற்காலி எடுத்துக் கொண்டு வந்து அவரெதிரே வைத்து ஜெய்ராமிடம்உட்காருங்க சார்என்றான்.

நாற்காலியில் உட்கார்ந்தபடி ஜெய்ராம்சுவாமி முக்தானந்தா கூட ரொம்ப வருஷமாய் இருந்திருக்கீங்க. அவரைப் பத்தியும், அவர் கூட இருந்த காலங்களில் உங்க அனுபவங்களையும் சொல்லுங்களேன்...”

கிழவரின் முகம் மென்மையாகிறது. லேசாகக் கனைத்து விட்டுச் சொல்ல ஆரம்பித்தார். ”அவர் ஒரு மகான். பணக்காரன், ஏழை, கொடுக்கிறவன், கொடுக்காதவன்கிற எந்த வித்தியாசமும் பார்க்க மாட்டார். யார் வந்தாலும் ஒரே மாதிரி நடத்துவார். அன்பாய் இருப்பார். அதிர்ந்து பேச மாட்டார்...”

கிழவர் அடுத்து இருபது நிமிடங்கள் பேசினார். ஆசிரமத் தலைவர் போல் கழுத்தறுக்காமல், ஆன்மீகம் பேசாமல், தத்துவார்ந்த விசாரங்களுக்குச் செல்லாமல் தன் நிலையிலிருந்து கவனித்த விஷயங்களைச் சுருக்கமாகவும், தேவைப்படும் இடங்களில் சற்று விரிவாகவும் அவருக்குச் சொல்லத் தெரிந்திருந்தது. சுவாமிஜி எப்படி ஒழுக்கசீலராக இருந்தார், எப்படி அன்பாகப் பழகினார் என்பதற்குச் சில உதாரணங்கள் சொன்னார். ஜெய்ராம் அங்கும் குறிப்பெடுப்பது போல் காட்டிக் கொண்டான்.

அவர் பணக்காரர்கள் கிட்ட லட்சக்கணக்கில் வசூல் செய்தார்னு சிலர் சொல்றாங்களே. அது எந்த அளவு உண்மை?”

கிழவர் புன்னகைத்தார். “பணக்காரன் கஷ்டமே பணம் போதலைங்கறது தான். அவனுக்கு அதிகமாய் பணம் வேணுங்கறதுக்கு கமிஷன் மாதிரி ஒரு நல்ல தொகை தர அவன் எப்பவுமே தயார் தான். இத்தனைன்னு கேட்கலைன்னா நாலு பழம், நாலு ஆப்பிள், ஆயிரம் ரூபாயை வச்சு கும்பிட்டுட்டு போயிடுவான். அதனால அந்த மாதிரி ஆள்கள் கிட்ட அவர் கேட்டு வாங்கினார். அந்தப் பணத்துல ஒரு பைசா கூட அவர் தனக்கு எடுத்துகிட்டதில்லை. ஆசிரமத்தோட டிரஸ்ட்ல எத்தனையோ  நல்ல காரியங்கள் நடக்குது. ஒரு தர்மாஸ்பத்திரி நடக்குது. முதியோர் இல்லம் ஒன்னு நடக்குது. எத்தனையோ ஏழைக்குழந்தைகள் படிக்க உதவி செய்யறாங்க. இதெல்லாம் அப்படி வாங்கின பணத்துல தான் நடக்குது...”

ஜெய்ராம் நாகராஜ் பற்றிக் கேள்வி கேட்க ஆரம்பிக்க நல்லதொரு ஆரம்பத்தைக் கிழவர் ஏற்படுத்திக் கொடுத்ததாய் நினைத்து மெல்லச் சொன்னான். “இப்போ அந்த நல்ல காரியத்தை மகராஜ் செய்யறார்னு நான் கேள்விப்பட்டேன்.”

உண்மை தான். எல்லா தர்ம காரியங்களும் இந்த ஒரு வருஷத்துல இன்னும் அமோகமாய் நடக்கிறதாய் கேள்விப்பட்டேன். மகராஜைப் பொருத்த வரை பணம் ஒரு பிரச்சினையே அல்ல. அவருக்கு எத்தனை வேணும்னாலும் உடனே கிடைக்கும்... மகாலட்சுமி அனுக்கிரகம் அது

எப்படிச் சொல்றீங்க?”

இப்ப அருள்வாக்கு சொல்றதுக்கு அஞ்சு லட்ச ரூபாய் வாங்கறார். அதை அவர் பத்து லட்சம்னு உயர்த்தினாலும் முகம் சுளிக்காமல் கொடுக்க எத்தனையோ பேர் தயாராய் இருக்காங்க. அதுமட்டுமல்ல யாரும் தரக்கூட வேண்டியதில்லை. அவர் நினைக்கிற பணம் தானாய் அவரைத் தேடி வரும். நாகங்கள் அவருக்குச் செய்திருக்கிற அனுக்கிரகம் அது....”

வேற சில பேரும் அவருக்கு நாகசக்தி இருக்கறதா சொன்னாங்க. ஆச்சரியமாயிருக்கு. அந்தச் சக்தி அவருக்கு எப்படிக் கிடைச்சுது?”

கிழவர் அதற்கு வார்த்தையால் பதில் சொல்லவில்லை. ஆகாயத்தைக் கைகாட்டினார். ஆகாயத்திலிருக்கும் இறைவன் தந்தது என்கிறாரா இல்லை ஆகாயத்திலிருக்கும் இறைவனே அறிவான் என்று சொல்கிறாரா என்பது தெரியவில்லை. ஆனால் ஒட்டு மொத்தத்தில் அதற்குப் பதில் இந்தக் கிழவருக்குத் தெரியாது என்பது தெரிந்து விட்டது.

அதனால் ஜெய்ராம் அடுத்த கேள்விக்கு நகர்ந்தான். “நீங்கள் ஆரம்பத்தில் அவரைப் பார்த்த நாளிலிருந்தே அவருக்கு நாகசக்தி இருந்ததா?”

கிழவர் ஆசிரமம் இருக்கும் திசையைச் சில வினாடிகள் பார்த்தார். சிலவற்றை நினைவுபடுத்திப் பார்க்கிறார் போல் ஜெய்ராமுக்குத் தோன்றியது. கிழவர் சொன்னார். “நாகராஜ் மகராஜ் பேருக்கேத்த மாதிரி நாகங்கள் கிட்ட ஆரம்பத்திலிருந்தே ரொம்ப பிரியமாய் இருப்பார். பாம்புன்னா எல்லாருமே நடுங்குவாங்க. ஆனால் அவருக்குப் பாம்புகள் எல்லாம் நண்பர்கள் மாதிரி. யாரையுமே பாம்பைக் கொல்ல விட மாட்டார்.  எத்தனை விஷமான பாம்பாய் இருந்தாலும் அதை லாவகமாய் கையில் எடுத்துக்குவார். பார்க்கிறவங்களுக்கு ஒரு அம்மா தன் குழந்தையை எடுக்கிற மாதிரி இருக்கும்.... அதைப் பார்த்திருக்கோம். ஆனால் அந்தப் பாம்புகள் விசேஷ சக்திகளை அவருக்குக் கொடுத்திருக்கறது எங்களுக்குத் தெரிஞ்சிருக்கலை...”

ஜெய்ராம் கேட்டான். “அந்தச் சக்திகள் அவருக்கு இருக்கிறது எப்ப தெரிஞ்சுது?”

சுவாமிஜி சமாதியடையறதுக்கு ஒரு மாசம் முன்னாடி. சுவாமிஜி பக்கத்துல இருக்கிற காட்டுக்குத் தவம் பண்ணப் போறப்ப மகராஜும் கூடப் போனார், திரும்பி வர்றப்ப சுவாமிஜி உடல் தளர்ந்திருந்துச்சு. அவர் கிட்ட அருள்வாக்கு கேட்க வந்தவங்களுக்கு அருள்வாக்கு சொல்லாம நாகராஜ் மகராஜ் கிட்ட கேட்கச் சொன்னார். அவங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். அவங்க யாருமே நாகராஜ் மகராஜ் பேசிக் கேட்டதில்லை. அதனால அவர் ஊமைன்னே பல பேரு நினைச்சிருந்தாங்க. அவரு பேசுவாராங்கங்கறதே அவங்களுக்கு ஆச்சரியம். முதல் தடவையா மகராஜும் அருள்வாக்கு கேட்க வந்த அந்த ஆளுகளுக்கு எதோ சொன்னார். அது அவங்களுக்குப் பலிச்சுடுச்சு போல. அதற்கப்பறம் ஜனங்க அவரையும் பிரத்தியேகமா தேடி வர ஆரம்பிச்சாங்க...”

கிழவர்அவங்க யாருமே நாகராஜ் மகராஜ் பேசிக் கேட்டதில்லை. அதனால அவர் ஊமைன்னே பல பேரு நினைச்சிருந்தாங்க.” என்று சொன்னது ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் தான் நாகராஜ் பேசிக் கேட்டதில்லை என்ற செய்தியைத் தெரிவித்ததால் கிழவர் நாகராஜ் பேசிக் கேட்டிருக்கிறார் என்று ஜெய்ராமுக்குத் தோன்றியது. “அப்படியானால் நீங்கள் மகராஜ் பேசி முன்பே கேட்டிருக்கிறீர்களா?” என்று அவன் கேட்டான்.

திடீரென்று கிழவர் மவுனமானார். எதிரே அமர்ந்திருப்பவன் சுவாமி  முக்தானந்தாவை விட அதிகமாக நாகராஜ் மேல் ஆர்வமாய் இருப்பது அவருக்குப் புரிய ஆரம்பித்தது. கூர்ந்து ஜெய்ராமையே ஒரு நிமிடம் பார்த்த அவர் தன் மகனிடம் எதையோ தாழ்ந்த குரலில் கேட்டார். அவன் தலை குனிந்து அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு விட்டுஆயிரம்என்றான்.

அந்தப் பதிலை வைத்துஇவன் எத்தனை தருவதாகச் சொல்லியிருக்கிறான்?” என்று கிழவர் கேட்டிருக்க வேண்டும் என்பது ஜெய்ராமுக்குப் புரிந்தது.

கிழவர் ஜெய்ராம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல்நீங்க சுவாமிஜியைப் பத்தி புஸ்தகம் எழுதறீங்களா, இல்லை மகராஜ் பத்தி எழுதறீங்களா?” என்று கேட்டார்.

ஜெய்ராம் சமாளித்தான். “சுவாமிஜியைப் பத்தி தான் எழுதறேன். ஆனால் மகராஜும் சுவாமிஜியுடன் நிறைய காலம் இருந்ததால் அவரைப் பத்தியும் சேர்ந்து எழுதினா தான் பொருத்தமாயிருக்கும்னு நினைக்கிறேன். அவ்வளவு தான்....”

மகராஜைப் பத்திப் பேசறதுக்கு ரேட்டே வேற...” என்று கிழவர் கறாராய்ச் சொன்னார்.

இந்தக் கிராமத்துக் கிழவன் படுவிவரமாய் இருக்கிறானே என்று ஜெய்ராம் திகைத்தான்.
  
  
(தொடரும்)
என்.கணேசன்  


2 comments:

  1. The old man is very shrewd and he has many secrets it seems. Very interesting.

    ReplyDelete
  2. கடைசியில கிழவன் ஒரு போடு போட்டாரு பாரு....
    கிழவன்‌ விவரம் தான்,...

    ReplyDelete