Monday, May 10, 2021

யாரோ ஒருவன்? 31


ஜியிடம் பேச அலைபேசியை எடுத்த நரேந்திரனிடம் மதன்லால் எரிச்சலுடன் சொன்னான். “சரி கேளுங்கள். எந்த வழக்கைப் பற்றிப் பேச வந்தீர்கள்?”

ஒரு டாக்சியில் வெடிகுண்டு வெடித்து ஒரு இளைஞன் கருகிச் செத்தானே. அந்த வழக்கு பத்தி தான் கேட்கணும்என்று சொன்னபடி அலைபேசியை மறுபடி மூடி வைத்தான் நரேந்திரன்.

மதன்லால் வேண்டுமென்றே சிறிது யோசித்தான். பின் மெள்ள சொன்னான். “ஓ அந்த வழக்கா? அந்த வழக்கு விசாரணைத் தகவல்கள் எல்லாம் போலீஸ் ஸ்டேஷன் ரெகார்டுகளில் இருக்குமே? என் ஞாபக சக்தியை விட நன்றாய் அந்த ரெகார்டுகள் உங்களுக்கு உதவுமே

அங்கிருந்த ரெகார்டுகள் பார்த்தேன். அதில் நிறைய விஷயங்கள் விடுபட்டுப் போயிருக்கின்றன

மதன்லால் நெற்றியைச் சுருக்கினான். “என்ன ரெகார்டுகள்?”

அந்த விபத்து சமயத்தில் எடுக்கப்பட்ட ஃபோட்டோ ஒன்று கூட இல்லை. அது ஏன்?”

ஃபோட்டோக்கள் நிறைய எடுத்தோமே. அதெல்லாம் அங்கே இருக்கணுமே

இல்லையே. நான் பார்த்து விட்டுத் தானே வருகிறேன்...”

அப்படியா?” என்று முகத்தில் ஆச்சரியம் காட்டி விட்டு மதன்லால் சொன்னான். “நான் அங்கிருந்து மாற்றலாகும் வரை அங்கே இருந்த ஃபோட்டோக்கள் நான் மாற்றலான பிறகு இல்லை என்றால் நான் என்ன செய்ய முடியும்? எனக்குப் பின் வந்தவர்களைத் தான் கேட்கணும்:” 

நரேந்திரன் அவனைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான். “ஃபோட்டோஸ் இல்லாதது மட்டுமல்ல. அந்த வழக்கில் போலீஸ் எந்த முடிவுக்குமே வரவில்லை என்பது விசித்திரமாக இருக்கிறது. கண்டுபிடிக்க முடியாத வழக்காகவே அதை மூடி விட்டிருக்கிறீர்கள்

எல்லா வழக்குகளுமே போலீஸ்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு விடுவதில்லை. அதை விசித்திரமாக நினைக்க ஒன்றுமில்லை

ஒரு டாக்சியில் வெடிகுண்டு வெடிக்கிறது. பயணி முழுவதுமாய் கருகி விடுகிறான். ஆனால் டிரைவர் எந்தப் பாதிப்புமில்லாமல் தப்பித்து விடுகிறான் என்பது இயல்பாக இல்லையே.. சந்தேகத்தை ஏற்படுத்துகிற மாதிரி அந்த விபத்தின் ஃபோட்டோக்கள் எதுவுமில்லை...”

மதன்லால் தோளைக் குலுக்கியபடி சொன்னான். “எல்லா பெரிய விபத்துகளிலும் சாகிறவர்களும் இருக்கிறார்கள். பிழைப்பவர்களும் இருக்கிறார்கள். அது அவரவர் விதிப்படி நிகழ்கிறது. அதில் சந்தேகப்பட எதுவும் இல்லை. ஃபோட்டோக்களை ஸ்டேஷனில் எப்படித் தொலைய விட்டார்கள் என்பது மாற்றலாகி வந்த எனக்குத் தெரிய வழியில்லை. அந்த சமயத்தில் எனக்கும் மேலே ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். அவரிடம் கேட்டுப் பாருங்களேன்.”

அவரிடமும் பேசினேன். ஆனால் அவர் அந்த விபத்து சமயத்தில் லீவில் இருந்ததாகச் சொன்னார். நீங்கள் தான் அந்த வழக்கை விசாரித்ததாகச் சொன்னார்...”

மதன்லால் மவுனமானான். இதற்கு எதுவும் பதில் சொல்லும் அவசியம் இருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை.

நரேந்திரன் கேட்டான். “அந்த வழக்கு பற்றி உங்களுக்கு நினைவிருப்பதைச் சொல்லுங்களேன்...”

மதன்லால் சொன்னான். “ஒரு நாள் காலை சுமார் பத்து அல்லது பத்தரை மணி இருக்கும். யாரோ போன் செய்து ஒரு காரில் வெடிகுண்டு வெடித்து விட்டதாகச் சொன்னார்கள். போய்ப் பார்த்தேன். ஒரு ஆள் கருகி இறந்திருந்தான். டிரைவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருந்தார்கள்.  இறந்தவனோட ஐடி பாதி கருகியிருந்தது. அதை வைத்து அவன் தமிழ்நாட்டிலிருந்து வந்தவன்கிறதைக் கண்டுபிடித்தோம். அவன் நண்பர்கள் ஒரு லாட்ஜில் தங்கியிருந்ததையும் கண்டுபிடித்து விசாரித்தோம். அவர்கள் மூன்று பேரும் சுற்றுலாவுக்கும் ட்ரெக்கிங்குக்கும் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. இறந்த ஆளுக்கு யாரும் எதிரிகள் இல்லை என்று அவர்கள் சொன்னார்கள். அதனால் அவனைக் கொல்ல யாருக்கும் ஒரு காரணம் இல்லை. கடைசி வரைக்கும் எங்களுக்கு அந்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் கண்டுபிடிக்க முடியாத வழக்காக மூட வேண்டியதாய்ப் போய்விட்டது.”

இதற்கு மேல் சொல்ல அவனுக்கு எதுவும் இல்லை. அந்த ரா அதிகாரியும் கேட்க ஒன்றும் இல்லை என்று புரிந்து கொண்டு போய் விட்டால் நல்லது என்று அவன் ஆசைப்பட்டான். அந்த அதிகாரியின் பார்வையும் தோரணையும் அவனுக்குப் பிடிக்கவில்லை. சனியன் விட்டால் தேவலை என்று எண்ணினான்.

ஆனால் நரேந்திரனுக்குக் கேட்க நிறைய இருந்தது. அவன் சொன்னான். “அந்தச் சமயத்தில் அஜீம் அகமது மணாலியில் இருந்தானே

அஜீம் அகமது பற்றி அவன் கேட்கக்கூடும் என்று மதன்லால் க்யான் சந்த் பேசியதிலிருந்தே எதிர்பார்த்திருந்தாலும் கூட அந்தப் பெயரை நரேந்திரன் சொன்ன போது மதன்லாலின் கட்டுப்பாட்டையும் மீறி முகத்தில் ஒருவித திகில் எட்டிப்பார்த்து மறைந்தது. ஆனால் தெரியாதவன் போலவே யோசித்தபடி சொன்னான். “அஜீம் அகமதா? யாரது?.... எனக்குத் தெரிந்து அஜீம் அகமது என்ற பெயரில் மணாலியில் பானிபூரிக்காரன் ஒருத்தன் இருந்தான். ஆனால் அவன் பாவப்பட்ட ஆள். எந்த வம்புதும்புக்கும் போகாதவன்…”

நரேந்திரன் உள்ளூர உணர்ந்த கோபத்தை வெளிப்படுத்தாமல் மதன்லாலைக் கூர்ந்து அமைதியாகப் பார்த்தான். மதன்லால் அந்தப் பார்வையைச் சில வினாடிகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் லேசான சங்கடத்துடன் நெளிந்தான். அவனுக்கும் கோபம் வந்தது. ‘இந்தப் பார்வைக்கெல்லாம் நான் அசர மாட்டேன்என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.   

நரேந்திரன் சொன்னான். “உங்கள் கவனமும், நினைவும் பானிபூரிக்காரனோடு நின்று விட்டதால் தான் அந்த வழக்கை முடிக்க முடியவில்லை என்று நினைக்கிறேன் மதன்லால்.  நான் சொன்னது தீவிரவாதி அஜீம் அகமதை.  அவன் அந்தச் சமயத்தில் மணாலியில் இருந்தான் என்பது மட்டுமல்ல. அவன் இருந்ததால் அதை விசாரிக்கராவிலிருந்து இரண்டு அதிகாரிகள் சிறு இடைவெளிகளில் உங்களிடம் வந்துமிருக்கிறார்கள்.... ஞாபகம் வருகிறதா மதன்லால்...?”

மதன்லாலுக்கு அவன் இடையிடையே பெயர் சொல்லிக் கூப்பிடுவது கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. வயதில் மூத்தவனாக இருந்தாலும் கூடப் பரவாயில்லை. வயதில் எத்தனையோ சிறியவனான இவன் ரா அதிகாரி என்பதாலேயே பெயர் சொல்லிக் கூப்பிடுவதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. ஆனால் வாடா போடா என்கிற வகையில் அவன் பேசாத வரை அவனைக் கண்டித்துச் சொல்லவும் முடியாமல் தவித்தான்.  உள்ளே கொதித்தவன் தானும் அவன் பெயரைச் சொல்லிப் பேசத் தீர்மானித்தான். “இப்போது நினைவுக்கு வருகிறது நரேந்திரன்என்று சொன்னான்.

நரேந்திரன் அதைக் கேட்டுப் புன்னகைக்காமல் இருந்திருந்தால் மதன்லால் பெயர் சொல்லிப் பேசியதை ஒரு வெற்றியாக உணர்ந்திருப்பான். நரேந்திரன் அவனைக் கோபப்படுத்த முடிந்ததை எண்ணித் தான் புன்னகைத்ததாக மதன்லாலுக்குத் தோன்றியது.

நரேந்திரன் புன்னகை மாறாமல் சொன்னான். “சரி நினைவுக்கு வந்ததைச் சொல்லுங்கள் மதன்லால்

பற்களைக் கடித்து தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்ட மதன்லால் சொன்னான். “அந்தத் தீவிரவாதி அஜீம் அகமது மணாலியில் இருப்பதாய்ச் சொல்லிக் கொண்டு ஒரு ரா அதிகாரி முதலில் வந்தார். ஆனால் அஜீம் அகமது அங்கே இருக்கிறான் என்ற தகவல் எங்களுக்கு வந்திருக்கவில்லை. அவர் சொன்னதைக் கேட்டு விசாரித்தோம். அவன் எங்களுக்குக் கிடைக்கவில்லை. கடைசியில் அந்த அதிகாரியும் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டார். அந்த அதிகாரியைத் தேடி இன்னொரு இளம் ரா அதிகாரி வந்து விசாரித்தார். எங்களுக்கு இரண்டு பேர் பற்றியும் தெரியாது என்று சொன்னோம். அதைக் குறித்துக் கொண்டு அவர் போய் விட்டார்…. நரேந்திரன்

அந்தக் காலத்திலேயே எல்லாம் சொல்லியாகிவிட்டது. இனி எதுவும் சொல்வதற்கில்லை என்ற செய்தியை உள்வாங்கிக் கொண்டு நரேந்திரன் போக வேண்டும் என்று மதன்லால் எதிர்பார்த்தான். ஆனால் நரேந்திரன் அப்படிப் போவதாக இல்லை. அவன் மேஜையில் இரண்டு கைமுட்டிகளையும் ஊன்றி சற்று முன்னுக்கு வந்து ரகசிய தொனியில் சொன்னான். “அப்படிக் குறித்துக் கொண்டு போன அதிகாரியையும் சில நாட்களாய்க் காணவில்லை மதன்லால். என்னவோ நடக்க ஆரம்பித்திருக்கிறதுபழைய விசாரணை அதிகாரிகளுக்கு என்னென்னவோ நடக்கிறது…. ஒன்றும் புரியமாட்டேன்கிறது….”

மதன்லால் அந்தத் தொனியிலும் தகவலிலும் இனம் புரியாத அச்சத்தை உணர்ந்தான். அஜீம் அகமது சம்பந்தப்பட்டதன் விளைவா அல்லது வேறு எதாவது காரணமா?



(தொடரும்)
என்.கணேசன்

3 comments:

  1. Super interaction. Their characterization is very realistic.

    ReplyDelete
  2. மதன்லாலை நரேந்திரன் கையாண்ட விதம்‌ அற்புதம்.... மதன்லாலை ஒரு வழியாக்காமல் நரேந்திரன் விடப்போவதில்லை...

    ReplyDelete
  3. Nalla movie ya edukaalam intha story ya.....

    ReplyDelete