சிந்து தாயின் வீட்டில் பாச மழையில் நனைந்தபடியே இருந்தாள். எல்லாம்
கனவில் நடப்பது போலிருந்தது. திடீரென்று விழிப்பு வரும், அப்போது
பழைய நரகத்திலேயே உழல்வதே நிஜமாக இருக்கும் என்ற பயம் வந்து
எட்டிப் பார்த்தது. மெல்லத் தன் கையைக் கிள்ளிப் பார்த்தாள். வலித்தது. நடப்பது
கனவல்ல.
நவீன் வீட்டின் விருந்தினர் அறையைச்
சகோதரியின் அறையாக மாற்றத் திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருந்தான். அவர்கள்
யாரும் அவளைத் திரும்ப அனுப்பத் தயாராக இல்லை. நவீன் சொன்னான். “போதும்
நீ தனியாய் இருந்தது. உனக்கு எந்த மாதிரி வேலையாக இருந்தாலும் டெல்லியில் கண்டிப்பாய்க் கிடைக்கும். அங்கே ராஜினாமா
செய்துட்டு இங்கேயே வந்துடு...”
அம்மாவும் அதையே சொன்னாள். ஆனால் அவர்களுக்கு
என்ன பதில் சொல்வது, எப்படிப் புரிய வைப்பது என்று புரியாமல் சிந்து வேதனைப்பட்டாள். அவள் விஸ்வத்தைச்
சந்திப்பதற்கு முன் இவர்கள் கிடைத்து இருந்தால் அவள் கண்டிப்பாகத் தன் பழைய வாழ்க்கைக்கு
ஒரு முற்றுப் புள்ளி வைத்து விட்டுப் புதிய அன்பான வாழ்க்கையைச் சந்தோஷமாக ஆரம்பித்திருப்பாள். ஆனால் இப்போது
நிலைமையே வேறாக இருக்கிறது. எந்த நேரமும் விஸ்வம் அவளைத் தொடர்பு கொள்வான். அவன் அவளை
இனி என்ன செய்யச் சொல்வான் என்று தெரியவில்லை. அவன் சொல்வது
எதுவாக இருந்தாலும் அதை க்ரிஷ் அனுமதிக்க மாட்டான். இரண்டு
பேரில் ஒருவருக்கு அவள் எதிரியாக வேண்டியிருக்கும். இதில் அவள்
அழிவது உறுதி. அழிவு யார் கையால் என்று மட்டும் தான் அவள் தேர்ந்தெடுக்க
வேண்டியிருக்கும்.... விதி அவள் வாழ்க்கையில் விளையாடி இருக்கும் விதம் நினைக்கையில்
தனிமையில் ஒரு முறை ஓவென்று அழத் தோன்றியது. எல்லாம்
சரியாக இப்போது மாறியும், அவள் கடந்த காலமும், அப்போது எடுத்த
முடிவுகளும் அவளுக்கு எதிராக இருக்கிறது.
அவள் தாயிடம் சொன்னாள். “இப்போதைக்கு
இங்கேயே வந்துட முடியாதும்மா....”
மிருதுளா சந்தேகத்தோடு மகளைக் கேட்டாள். “அங்கே உன்
மனசுக்குப் பிடிச்ச யாராவது இருக்காங்களா சிந்து. இருந்தால்
தயங்காமல் சொல்லு. நாங்க வந்து அந்தப் பையனோட அம்மா அப்பாவைப் பார்த்துப் பேச
வர்றோம்”
சிந்து என்ன சொல்வாள்.? தமிழ்நாட்டு
முதலமைச்சரின் மூத்த மகன் அவளைக் காதலிக்கிறான் என்பதைச் சொல்ல முடியுமா? அங்கே அவளுக்கு
எத்தனை நாள் வேலை, முடிவில் என்ன ஆகும் என்றெல்லாம் அவளுக்கே தெரியாத போது தாயிடம்
என்ன சொல்வாள்? ”அப்படியெல்லாம்
அதுவும் இல்லைம்மா” என்றாள்.
ஒரு வேளை நடிப்புக்குப் பதிலாக அவளுக்கு
உதய் மீது நிஜக்காதல் வந்திருந்து இவர்கள் அங்கே பேசப் போனால் நன்றாகவே இருக்கும் என்று
இப்போது தோன்றியது. உதயையும் பத்மாவதியையும்
இவர்களுக்கு நிறையவே பிடித்து இருக்கும்... ஆனால் நாடகத்தை நிஜமாக்க
வழியில்லை...
சிந்துவின் தந்தை மீது மிருதுளாவுக்கு
அடுத்தபடியாக அதிகமாய் கோபம் இருந்தது நவீனுக்குத் தான். “அவனை எல்லாம்
கல்லாலேயே அடிச்சுச் சித்திரவதை பண்ணிக் கொல்லணும். மனுஷனா
அவன்?”
அவன் சகோதரியிடமும் கேட்டான். “உனக்கு
அந்த ஆளைப் பார்த்து நாக்கைப் பிடுங்குகிற மாதிரி நாலு வார்த்தை கேட்க வேண்டும் என்று
கூடத் தோன்றவில்லையா அக்கா?”
சிந்துவுக்கு அப்படித் தோன்றவில்லை
என்பது தான் அவளுக்கே ஆச்சரியமாய் இருந்தது. அவள் தந்தையை
ஒரு மனிதனாகவே நினைக்கவில்லை. அவரைப் பற்றி நினைக்கையிலேயே அவளுக்கு அருவறுப்பாக இருந்தது. அதனால்
போய்ப் பார்க்கவோ, கேள்வி கேட்கவோ அவளுக்குத் தோன்றவில்லை. அதைத் தம்பியிடம்
அவள் சொன்னாள்.
ஆனால் மிருதுளா சொன்னாள். “எனக்கு
அந்த ஆளை ஒரே ஒரு தடவை பார்க்க வேண்டும். அதுக்கப்பறம் ஜென்மத்துக்கும்
அந்த ஆள் பார்வையில படறது கூடக் கேவலம்னு நினைக்கிறேன் நான்”
மறு நாளே அவர்கள் நால்வரும் மும்பைக்கு
விமானத்தில் கிளம்பினார்கள்.
விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டான். “நாம் இருக்குமிடம்
எப்படி வாங் வேக்குத் தெரிந்தது?”
ஜிப்ஸி இதற்குப் பதிலை எப்படித் தெரிவிப்பது
என்று யோசித்தான்.
விஸ்வம் உடனடியாகச் சொன்னான். “உண்மையைச்
சொல்ல யாருமே யோசிக்க வேண்டியதில்லை”
ஜிப்ஸி புன்னகைத்தான். உண்மையை
சொன்னால் அதை எப்படிக் கண்டுபிடித்துச் சொன்னான் என்றும் சொல்ல வேண்டியிருக்கும். அதைச் சொன்னால் அவனைப் பற்றியும் அவன் சொல்லியாக வேண்டியிருக்கும். நிறைய நாட்கள்
விஸ்வத்திடமிருந்து அவன் மறைக்க முடியாது என்றாலும், இன்னேரம்
ஓரளவாவது விஸ்வம் அவனைப் பற்றி யூகித்தாவது இருப்பான் என்றாலும் அவனாகத் தன்னைப் பற்றி
இப்போது சொல்ல விரும்பவில்லை.
“இல்லுமினாட்டியின்
ஆரகிள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?” என்று ஜிப்ஸி
கேட்டான்.
விஸ்வம் எப்படி மறப்பான்? அந்த ஆரகிளின்
எச்சரிக்கை ஒன்றை வைத்தல்லவா அவன் விதியும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ”தயவு செய்து
அது இப்போது நான் இங்கேயிருப்பேன் என்றும் தெரிவித்திருக்கிறது என்று மட்டும் சொல்லாதே
நண்பா. எனக்குச் சலிப்பாக இருக்கிறது. என் விதியை
நான் தான் தீர்மானம் செய்வேன். அந்தச் சுதந்திரம் மறுக்கப்பட்டால் இந்த உலகில் நான் வாழ்வதில்
அர்த்தமில்லை என்று நான் நினைக்கிறேன். யாரோ எழுதிய விதியில்
நான் பயணிக்க விரும்பவில்லை. அதைவிட மரணம் மேல், எல்லாவற்றையும்
முடித்துக் கொள்வது உத்தமம் என்று நான் நினைக்கிறேன்...”
ஜிப்ஸி ‘புரிகிறது’ என்று தலையசைத்தான். பின் மெல்லச்
சொன்னான். “ஆரகிள் இந்த இல்லுமினாட்டி கோயிலில் தான் எல்லாம் தீர்மானிக்கப்படும்
என்று சொல்லியிருக்கிறது. அதைச் சொல்லியிருக்கிற ரகசியச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது....”
“அப்படியானால்
இல்லுமினாட்டிக்கும் இந்த இடம் பற்றித் தெரிந்து விட்டதா?”
”இல்லை. அந்த ரகசியச்
சுவடி வைத்திருக்கும் ஆள் மூலமாகத் தான் இந்தத் தகவலை வாங் வே பெற்றிருக்கிறார்.
அதை வைத்துத் தான் நீ இங்கே இருக்கக்கூடும் என்று யூகித்திருக்கிறார். ஆனால்
அவர் அறிந்ததை இல்லுமினாட்டி தலைமையிடம் தெரிவிக்க மாட்டார் என்பதால்
இதில் பிரச்னை இல்லை”
“அந்த ரகசியச் சுவடி
வைத்திருக்கும் ஆள் இல்லுமினாட்டி தலைமையிடம் தெரிவிக்க மாட்டானா?”
“அவ்வளவு சுலபமாக
யாரும் இல்லுமினாட்டி தலைமையை அணுகி விட முடியாது. அந்த ஆளைப் பொருத்த வரை வாங் வேயிடம்
சொன்னது இல்லுமினாட்டி தலைமையிடம் சொன்னது போலத் தான் என்பதால் நிம்மதியாக இருப்பார்.”
“அந்த ரகசியச் சுவடியில்
வேறென்ன தகவல்கள் எல்லாம் இருக்கின்றன?”
”அது அந்த ஆளுக்குத்
தெரிய வரும் போது தான் நமக்கும் தெரிய வரும். அந்தக் காலத்தில் சில மந்திரங்கள், விசேஷ
பூஜைகள் செய்து சில சுவடிகளை எந்தச் சக்திக்கும், அலைவரிசைக்கும் சிக்காதபடி மறைத்து
வைப்பதுண்டு. அதைச் செய்து வைத்திருக்கிறார்கள். அந்தச் சுவடி இருக்கும் இடத்திற்குப்
போய் அதை எடுத்துப் படிக்க முடியாத நிலைமையில் அந்த ஆள் இருக்கிறார். படித்தது நினைவுக்கு
வந்ததைச் சொல்லி இருக்கிறார். மீதி அவருக்கும் நினைவில் இல்லை...”
“ஆனாலும் இதெல்லாம்
முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் விஷயங்கள் என்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை நண்பா.
பின் நம் முயற்சிகளுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது? நம் திட்டங்களுக்கு என்ன பொருள்
இருக்கிறது?” விஸ்வம் முன்பு விட்ட இடத்திற்கே மறுபடி வந்தான்.
ஜிப்ஸி சொன்னான். “பிரபஞ்சத்தில் சில விஷயங்கள் மட்டுமே
முன்கூட்டியே தீர்மானிக்கப் படுகின்றன நண்பனே. அவற்றை மட்டுமே ஆரகிளோ, ஒரு சித்தரோ,
யோகியோ சொல்ல முடியும். ஆனால் மற்ற விஷயங்களைச் சக்தி வாய்ந்த தனி மனிதர்களே தீர்மானிக்கிறார்கள்.
தங்கள் எண்ணங்கள், செயல்கள், திட்டங்கள் மூலம் நிகழ்காலத்திலேயே எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறார்கள்.
இந்த முறை உறுதியாகச் சொல்கிறேன் நண்பா. நீயும் வேறு சிலரும் தான் தீர்மானிக்கப் போகிறீர்கள்.
அதில் எந்தச் சந்தேகமும் உனக்கு வேண்டாம். நான் சொல்வதை நம்பு. உங்களில் யார் வெல்வீர்கள்
என்பது தான் இப்போதிருக்கும் முக்கியமான கேள்வி... நீ பலவீனமாகி விட்டால் அடுத்தவர்களைத்
தீர்மானிக்க நீ அனுமதிக்கிறாய் என்றாகி விடும். அதை மட்டும் அனுமதிக்காதே. மரணத்தையும்
வென்றவன் நீ. அப்படிப்பட்ட உன்னால் முடியாதது எதுவும் இருக்கப் போவதில்லை...”
(தொடரும்)
என்.கணேசன்
Very eagerly waiting for the meeting scene with Sindhu's father.
ReplyDeleteவிஸ்வம் ஜிப்ஸி உரையாடல் அருமை...
ReplyDeleteசிந்துவுக்கு ஏற்பட்ட இந்த இக்கட்டான சூழலில் இருந்து எப்படி வெளிவருவாள்?