ஆன்மிகப் பயணத்தில் ஆத்மசக்திகள்! 21
மும்பையில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கும், கர்னல் ஓல்காட்டுக்கும் மூல்ஜீ தாக்கரே என்ற வேலையாள் கிடைத்தான். இளைஞனான அவனுக்கு அமானுஷ்ய அனுபவங்கள் எதுவும் அங்கு வேலைக்குச் சேர்வதற்கு முன்பு ஏற்பட்டிருக்கவில்லை. ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவன் அது போன்ற அனுபவங்களிலிருந்து தப்ப முடியுமா என்ன?
ஒரு நாள் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் அவனிடம் ஒரு குதிரைவண்டி ஒன்றை வாடகைக்கு அழைத்து வரச் சொன்னார். ப்ளாவட்ஸ்கீ அம்மையாருக்கு மும்பை நகரம் புதிது என்பதையும், அந்த நகர வீதிகளும் இடங்களும் பழக்கமானவை அல்ல என்பதையும் அறிந்திருந்த மூல்ஜீ ”எங்கே போக வேண்டும் அம்மா?” என்று கேட்டான். அம்மையார் போகுமிடத்தை அவனிடம் சொல்லாமல் “நீ வண்டியை அழைத்து வா. போகும் வழியை நான் சொல்லிக் கொள்கிறேன்” என்று கூறினார்.
மூல்ஜி அம்மையார் சொன்னபடியே ஒரு வாடகைக் குதிரை வண்டியை அழைத்து வந்தான். அம்மையாரும், மூல்ஜீயும் அந்தக் குதிரை வண்டியில் ஏறி அமர்ந்தார்கள். வண்டிக்காரன் “எங்கே அழைத்துச் செல்ல வேண்டும்” என்று கேட்ட போது “நான் சொல்கிற வழியே போ” என்று அம்மையார் அவனுக்குக் கட்டளையிட்டார். “நேராகப் போ”, “வலது பக்கம் திரும்பு”, “இடது பக்கம் திரும்பு” என்று அம்மையார் சொல்லிக்கொண்டே வர அவனும் அப்படியே அழைத்துச் சென்றான். மூல்ஜீக்கோ ஊருக்குப் புதிதான இந்த அம்மையார் இந்த அளவு போகும் வழியைத் தெரிந்து வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியம் தாங்கவில்லை.
சுமார் பத்து மைல் தூரம் பயணம் செய்த பின் அவர்கள் கடற்கரைப்பகுதியை அடைந்தார்கள். அங்கே ஒரு அழகான பங்களாவை அடைந்த பின் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வண்டியை நிறுத்தச் சொன்னார். சுற்றிலும் ரோஜாத் தோட்டம் இருக்க நடுவில் அந்த மிக அழகான பங்களா இருந்தது. வண்டியிலிருந்து இறங்கிய அம்மையார் மூல்ஜீயிடம் அங்கேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் மட்டும் உள்ளே சென்றார். ரோஜா தோட்டத்தைத் தாண்டி அம்மையார் பங்களாவுக்குள் போவதை மூல்ஜீ பார்த்துக் கொண்டிருந்தான்.
மூல்ஜீ மும்பையிலே பிறந்து மும்பையிலேயே வளர்ந்தவன். மும்பையின் கடற்கரைப் பகுதிகளுக்கும் அவன் புதியவனல்ல. ஆனாலும் இது வரை இந்த ரோஜாத்தோட்டம் சூழ்ந்த அழகான பங்களாவை பார்த்திருக்கவில்லை. அவன் அந்த ரோஜாத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்களில் ஒருவனை வெளியிலிருந்தே அழைத்து பங்களா யாருடையது, எஜமானர் யார் என்றெல்லாம் கேட்டான். அந்தப் பணியாளுக்கு அது தெரிந்திருக்கவில்லை. முதலாளி பெயர் கூடத் தெரியாத பணியாளர்களும் மும்பையில் இருக்கிறார்களா என்று அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
சிறிது நேரம் கழித்து ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வெளியே வந்தார். அவருடன் அந்த வீட்டின் எஜமானரும் வெளியே வந்தார். கம்பீரமாகத் தோற்றம் அளித்த அவர் வாசலில் சிறிது நேரம் அம்மையாருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு ஒரு ரோஜாப்பூங்கொத்தைத் தந்து அம்மையாரை வழி அனுப்பி வைத்தார். அவர்கள் அந்தக் குதிரை வண்டியில் வீடு வந்து சேர்ந்தார்கள்.
மூல்ஜீ தன் நண்பர்களிடம் பேசும் போது கடற்கரைப் பகுதியிலிருக்கும் அந்த அழகான ரோஜாத் தோட்டத்துடன் இருக்கும் பங்களாவைப் பற்றிச் சொன்னான். அவனுடைய நண்பர்களில் ஒருவன் மும்பையின் கடற்கரைப் பகுதியிலேயே பிறந்து வளர்ந்தவன். அவன் அப்படி ஒரு பங்களா கடற்கரைப் பகுதியிலேயே இல்லை என்று ஒரேயடியாகச் சாதித்தான். நேரில் சென்று பார்த்திருந்த மூல்ஜீயோ அப்படி ஒரு பங்களா அங்கிருக்கிறது என்று வலியுறுத்திச் சொன்னான். “அப்படி ஒரு பங்களா இருந்து நீ காட்டினால் நான் உனக்கு நூறு ரூபாய் தருகிறேன். இல்லா விட்டால் நீ எனக்கு நூறு ரூபாய் தர வேண்டும்” என்று அந்த நண்பன் பந்தயம் கட்டினான். சம்பவம் நடந்த ஆண்டு 1879. அந்தக் காலத்தில் அதன் மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை வாசகர்கள் யூகித்துக் கொள்ளலாம்.
மூல்ஜீ அதை வீட்டுக்கு வந்து சொன்ன போது ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “பந்தயம் எல்லாம் வேண்டாம். நீ பணத்தை இழப்பாய்” என்றார். மூல்ஜீக்கு அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஞாபக சக்தி அதிகம். ஒரு தடவை போய் வந்த வழியை அவன் மறக்க வழியே இல்லை என்பதால் அம்மையார் சொன்னதையும் மீறி அந்தப் பந்தயத்தை அவன் ஏற்றுக் கொண்டான். இதைக் கேள்விப்பட்ட கர்னல் ஓல்காட் ஆர்வத்துடன் அவரும் மூல்ஜீ மற்றும் அவன் நண்பனுடன் சென்றார்.
ஒரு கோச்சு வண்டியில் மூவரும் ஏறிக் கொண்டார்கள். மூல்ஜீ சொல்லும் வழியிலேயே அந்தக் கோச்சு வண்டி சென்றது. மூல்ஜீக்குப் போகும் வழியில் எந்தச் சந்தேகமும் வரவில்லை. அவனும் ப்ளாவட்ஸ்கீ அம்மையார் போலவே நேராகப் போ, வலதுபக்கம் திரும்பு, இடது பக்கம் திரும்பு என்று சொல்லிக் கொண்டே வந்தான். ஆனால் கடைசியாக கடற்கரைப் பகுதியில் வந்து சேர்வதற்குப் பதிலாக ஒரு ரயில்வே ட்ராக்டில் போய்ச் சேர்ந்தார்கள். மூல்ஜீக்குப் பெரும் குழப்பமாகவும், ஏமாற்றமாகவும் இருந்தது.
வீடு திரும்பி நடந்ததை எல்லாம் கர்னல் ஓல்காட் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் சொன்ன போது அம்மையார் அவர் சென்று சந்தித்தவர் ஒரு உயர்சக்தி மனிதர் என்றும் அவர்கள் தங்கள் இருப்பிடங்களை பொதுமக்கள் பார்வையிலிருந்து மறைக்க வல்லவர்கள் என்றும் தெரிவித்தார். அவர்களுக்குத் தேவையான தனிமைக்கு வெளியாட்களால் தொந்திரவு ஏற்படுவதை அவர்கள் விரும்புவதில்லை என்று சொன்னார்.
ஒரு முறை அவர்கள் இருவரும் மும்பைக்கு அருகிலிருக்கும் ஒரு ஊருக்கு ரயிலில் போய் வந்தார்கள். அவர்கள் திரும்பி வரும் நாளில் அவர்களை அழைத்துச் செல்ல மூல்ஜீ ரயில்நிலையத்திற்கு வந்திருந்தான். ப்ளாவட்ஸ்கீ அம்மையார் வரும் ரயில் இன்னும் வந்திருக்காததால் அவன் ரயில்நிலையத்தில் தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் வேறொரு ரயில் அங்கே வந்து நின்றது. அந்த ரயிலுக்குள்ளிருந்து மூல்ஜீயை யாரோ சத்தமாக அழைத்தார்கள்.
மூல்ஜீ யாரென்று பார்த்த போது அந்த மாய பங்களாவின் எஜமானராக அவர் இருந்தார். அவருக்கு எப்படி நம் பெயர் தெரிந்தது என்று குழப்பம் இருந்தாலும், அம்மையார் அங்கு சென்றிருந்த போது சொல்லியிருக்கக்கூடும் என்று எண்ணியபடி மூல்ஜீ விரைந்து சென்றான்.
ரயிலுக்குள்ளே இருந்தபடியே அந்த மனிதர் அவனிடம் ஒரு ரோஜாப் பூங்கொத்தைத் தந்து “இதை கர்னல் ஓல்காட்டுக்கு என் சார்பாகத் தயவு செய்து தந்து விடுங்கள்” என்று சொன்னார். திகைப்புடன் மூல்ஜீ அந்தப் பூங்கொத்தை வாங்கிக் கொண்டவுடன் அந்த ரயில் கிளம்பி விட்டது.
சிறிது நேரத்தில் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரும், கர்னல் ஓல்காட்டும் வேறொரு ரயிலில் அங்கே வந்து சேர்ந்தார்கள். மூல்ஜீ பரபரப்புடன் அவர்களை வரவேற்று அந்த ரோஜாப் பூங்கொத்தைத் தந்து விவரத்தைச் சொன்னான்.
அந்தப் பூங்கொத்தை வாங்கிய கர்னல் ஓல்காட் மனம் நெகிழ்ந்து போய் ப்ளாவட்ஸ்கீ அம்மையாரிடம் “அந்த அன்பான மனிதருக்கு நான் என் நன்றிகளைக் கண்டிப்பாகத் தெரிவிக்க வேண்டும். எப்படித் தெரிவிப்பது?” என்று கேட்டார்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் ”ஒரு கடிதம் எழுதி அனுப்புங்கள்” என்று கூறினார். கர்னல் ஓல்காட் அவர் சொன்னபடியே ஒரு நன்றிக் கடிதம் எழுதி அம்மையார் கையில் தர அம்மையார் அதை மூல்ஜீயிடம் கொடுத்து “இதைக் கொடுத்து விட்டு வா” என்றார். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டதையோ, கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்பதையோ அறியாத மூல்ஜீ “என்ன விலாசமே இல்லையே” என்றான்.
ப்ளாவட்ஸ்கீ அம்மையார் “நீ இதை எடுத்துக் கொண்டு தெருவில் போ. சம்பந்தப்பட்ட ஆள் வந்து வாங்கிக் கொள்வார்” என்றார்.
குழப்பத்துடன் மூல்ஜீ அந்தக் கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு தெருவில் நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் அவன் சென்றவுடன் பூமியிலிருந்து பிளந்து வந்தது போல் அந்த மாய பங்களாக்காரர் அவன் எதிரில் நின்றார். ‘இவர் சிறிது நேரத்திற்கு முன்பு பூனா செல்லும் ரயிலில் பயணித்தவராயிற்றே. இங்கே எப்படி வந்தார்?’ என்று மூல்ஜீ குழம்பி நிற்கையில் “கடிதம் எனக்குத் தான்” என்று அவன் கையிலிருந்து எடுத்துக் கொண்டு அவர் மறைந்து போனார்.
இது பேய் பிசாசு வேலை போல் தெரிகிறதே என்று பயந்து போன மூல்ஜீ ஓட்டம் எடுத்தான். திடீரென்று “முட்டாள்தனமாக நடந்து கொள்ளாதே. அமைதியாகப் போ” என்று அவன் காதருகே அந்த மனிதரின் குரல் கேட்டது. பீதி அதிகமான மூல்ஜீ கூடுதல் வேகமெடுத்து முடிவில் வீடு வந்து சேர்ந்த பிறகு தான் நின்றான். அந்தச் சம்பவத்தை அவன் பலரிடம் சொல்ல அது பரபரப்புடன் சில காலம் பேசப்பட்டது.
(தொடரும்)
என்.கணேசன்
நன்றி
தினத்தந்தி 21.08.2019
Inter dimensional travel. Happens all the time. But not noticed by humans because of mental preoccupation.
ReplyDeleteஒரு மாயாஜால படம் பார்ப்பது போல உள்ளது😂😂😂
ReplyDeleteMay I know who is that super natural person...
ReplyDeleteMadame Blavatsky called them mahatmas.
DeleteThank you sir.. அருமையான பதில்... ரோஜா தோட்டங்கள் நடுவே வாழ யாருக்குத்தான் ஆசை இருக்காது.. கண்டிப்பாக அந்த மகாத்மா இப்போதும் மும்பையில் இருக்க வேண்டும்... நன்றி
Delete