Thursday, December 24, 2020

இல்லுமினாட்டி 82


டைந்த திர்ச்சி க்ரிஷின் மனதைக் கனக்க வைத்து, அவன் தியானப் பயிற்சிகளின் மூலம் அடைந்திருந்த உயர் உணர்வு நிலையில் இருந்து கீழே தள்ளியது. மனக்கண்ணில் தெரிந்து வந்த மாஸ்டர் மறைந்து போனார். இயல்பு நிலைக்கு வர க்ரிஷுக்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. விஸ்வம் உதயை ஆக்கிரமித்து வசிய அலைகளை ஏற்படுத்தி சிந்துவை அவனிடம் அனுப்பி வைத்திருக்க வேண்டும் என்பது புரிந்தது. அதனால் தான் அவளைப் பார்த்த முதல் கணத்திலேயே க்ரிஷ் ஆபத்தை உணர்ந்திருந்தான். இனி என்ன செய்வது என்று க்ரிஷ் ஆலோசித்தான். ஒரு இல்லுமினாட்டியாகவும், புத்திசாலியாகவும் அவன் செய்ய வேண்டிய ஒரே வேலை இல்லுமினாட்டிக்கு அவன் அறிந்ததைத் தெரியப்படுத்துவது தான். அவர்கள் சிந்துவை தங்கள் பாணியில் கையாண்டு அவளிடமிருந்து அறிய வேண்டியதை அறிந்து கடைசியில் அவள் கதையை முடித்து விடுவார்கள். ஆனால் அதோடு சேர்ந்து உதய் மனதில் வேகமாக உருவாக்கி விட்டிருக்கும் காதல் கோட்டையும் தவிடுபொடியாகும். அவன் அதிலிருந்து மீள்வானா என்பது சந்தேகமே! அவனிடம் சிந்து விஸ்வம் அனுப்பிய ஆள் என்று சொன்னால் அவனால் நம்ப முடியுமா, நம்பினாலும் தாங்க முடியுமா என்பது எல்லாம் கேள்விக்குறிகளே.

ஆனால் இந்த அதிர்ச்சி தரும் உண்மையை அறிந்து கொண்ட பின் எதாவது செய்தாக வேண்டிய நிலையில் க்ரிஷ் இருந்தான். மனதை அமைதிப்படுத்திக் கொண்டு ஆழமாக யோசித்தான். விஸ்வத்திற்கும் சிந்துவுக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் என்று யோசித்த போது அவன் வேலைக்கு எடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணாகவே அவள் இருக்க வேண்டும் என்பதில் சந்தேகம் இருக்கவில்லை. விஸ்வம் யாருடனும் சம்பந்தப்பட்டிருக்க விரும்பாத ஆள். இவள் பின்னணியிலும் வேறு வகையில் விஸ்வம் சம்பந்தப்பட்டிருக்க வழியில்லை. வேலையாள் என்றால் விஸ்வம் அவளுக்கு என்ன வேலை கொடுத்தனுப்பி இருக்கிறான் என்ற கேள்வி எழுந்தது. இங்கே வீட்டுக்குள் யாரையும் கொலை செய்வது அவன் உத்தேசமாக இருக்காது. ஏன் என்றால் கொலை செய்வதென்றால் பல திறமையான வாடகைக் கொலையாளிகள் அவனுக்குக் கிடைப்பார்கள். அவனே நேரில் வந்து கொல்ல முடியாத நிலைமையில் அவன் அந்த வாடகைக் கொலையாளி யாராவது ஒருவனைத் தான் அனுப்பி இருப்பான். காதலிக்க வைத்து இந்த வீட்டின் மருமகளாக உள்ளே நுழைந்த பின் அவளை வைத்து அந்த முயற்சி எடுக்கக் காரணம் எதுவும் இல்லை.  வீட்டு ஆட்களின் உயிருக்கு ஆபத்தில்லை என்று உறுதியாகத் தெரிந்ததே மனதில் பெரிய நிம்மதியை ஏற்படுத்தியது. பின் எதற்காக சிந்துவை இங்கே அனுப்பி இருக்கிறான் என்பது புரியவில்லை.

இம்மானுவல் அவளுக்கு வந்த இண்டர்நேஷனல் போன்கால் ஒன்றைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது விஸ்வம் அவளை அழைத்துப் பேசியதாக இருக்கலாம். அதற்குப் பின் சில நாட்களில் அவள் சென்னை வந்து விட்டாள். திருமணம் ஆகி இந்தச் சொத்தை அனுபவிப்பது என்பது அவளுடைய உத்தேசமாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் விஸ்வத்திற்கு அதில் லாபம் எதுவும் இல்லை. அவனிடம் இருக்கக்கூடும் என்று இல்லுமினாட்டி கணித்திருக்கும் பல்லாயிரம் கோடிகளை வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் கமலக்கண்ணனும், உதயும் சேர்ந்து சேர்த்து வைத்திருப்பது வெறும் கிளிஞ்சல்கள் அளவிலானதாகத் தான் இருக்கும். கொலையும் அல்ல, பணமும் உத்தேசம் அல்ல என்றால் வேறு என்ன உத்தேசம் இருக்கும் என்று க்ரிஷுக்குப் புரியவில்லை.

சிந்து விஸ்வத்தின் ஆள் என்று தெரிந்த பின் எச்சரிக்கை உணர்வு மேலிட்டதே தவிர அவள் மேல் அப்போதும் க்ரிஷுக்குக் கோபமோ, வெறுப்போ வரவில்லை. காரணம் அவளுடைய வாழ்க்கை வரலாறு அவள் மீது ஏற்படுத்தி இருந்த இரக்கம் இன்னமும் அவன் மனதில் தங்கி இருந்தது. அன்பான குடும்பத்தில் வளர்ந்த அவனுக்கு அவள் அனுபவித்திருப்பது கடும் சித்திரவதையாகவே தோன்றியது. அதுவும் அவள் மேல் குற்றம் ஏதும் இல்லாத நிலையில் அவளுக்குக் கிடைத்திருக்கும் தண்டனை அநியாயமாகவே அவனுக்குப் பட்டது. அவள் அனுபவித்த தனிமை, அன்பின் வரட்சி எல்லாம் அவள் மீது பரிதாபத்தை வரவழைத்தது. அவளுக்கும் விஸ்வத்திற்கும் எப்போது தொடர்பு ஏற்பட்டது,  ஏன் அவள் அவன் கொடுத்த வேலைக்கு ஒப்புக் கொண்டாள், அவள் என்ன உத்தேசத்தோடு வந்திருக்கிறாள் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் உதய் அவளை உயிருக்குயிராய் நேசிக்க ஆரம்பித்திருக்கிறான் என்ற உண்மை அவனை வேதனையில் ஆழ்த்தியது. அவன் தாயும் அவளை மானசீகமாக மருமகளாக ஏற்றுக் கொண்டு விட்டாள் என்பதும் அந்த வேதனையுடன் சேர்ந்து கொண்டது. இனி அவன் செய்ய வேண்டியதென்ன என்று க்ரிஷ் தீவிரமாகச் சிந்தித்தும் அவனால் உறுதியான ஒரு முடிவை எட்டவில்லை. அறிவொன்று சொன்னது. இதயம் வேறொன்று சொன்னது. இரண்டும் சேர்ந்து ஒருமித்து இயங்கும் உன்னத நிலை மனிதன் அடைய வேண்டிய நிலை என்று வேற்றுக்கிரகவாசி சொன்னது நினைவுக்கு வந்தது. உடனே அவன் நினைவும் வந்தது. ’நண்பா எங்கிருக்கிறாய்? எப்போது வருவாய்?’ என்று அவன் மனம் கூவியது....



ர்னீலியஸ் சாமுவலின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சாமுவல் ஏன் வருகிறார் என்று அவருக்குத் தெரியவில்லை. இன்று காலை தான் சாமுவல் அவரைச் சந்திக்க வருவதாக அவருக்குப் போன் செய்திருந்தார். ரகசியச் சுவடி விஷயம் இல்லுமினாட்டி தலைமைக்குப் போய், இல்லுமினாட்டி தலைமை தான் அவரை இங்கே அனுப்பியிருக்கிறதா என்று அவருக்குச் சந்தேகமாக இருந்தது. அவர் இல்லுமினாட்டியின் உளவுத் துறையின் உபதலைவரான சாமுவலைப் பல வருடங்களாக அறிவார். மிகவும் கண்ணியமான மனிதர்...   அவர் வந்து கேட்டால் உள்ளதை உள்ளபடி சொல்லலாமா வேண்டாமா என்று கர்னீலியஸ் யோசித்தார். சொல்ல அதிகம் இல்லை. இரண்டு நாட்கள் முன்பு நினைவுபடுத்த முடிந்த ரகசிய ஆவணத்தின் குறிப்பிட்ட முக்கியப்பக்கம் இப்போதும் தடைப்பட்ட நிலையிலேயே அவர் நினைவில் இருந்தது. நேற்றும் இன்றும் அவர் செய்த பயிற்சிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை.  ஆனால் சாமுவலிடம் உண்மையைச் சொன்னால் வங்கி லாக்கரில் இருக்கும் ரகசிய ஆவணத்தை எடுப்பதற்கு இல்லுமினாட்டி ஒரு படையையே அவருடன் அனுப்பி வைக்கவும் கூடும். ஆனாலும் அதில் முடிவெடுக்க அவருக்குத் தயக்கமாக இருந்தது. சாமுவல் வந்த பின் யோசித்து நிலைமைக்குத் தகுந்தபடி முடிவு செய்யலாம் என்று கர்னீலியஸ் நினைத்துக் கொண்டார். அழைப்பு மணி அடித்தது. வந்தது சாமுவல் தான்.      

கர்னீலியஸ் அவரை வரவேற்றார். மிகுந்த மரியாதையுடன் அவரை வணங்கி நலம் விசாரித்த சாமுவல் சிறிது நேர பேச்சுக்குப் பின் சில நாட்களுக்கு முன் சிக்னலில் அவர் கார் நின்று போனது பற்றி விசாரித்தார். கர்னீலியஸுக்கு அப்போது தான் அந்த விஷயமாக அவர் வந்திருக்கிறார் என்பது புரிந்தது.

“ஆமாம். பேங்க் போவதற்காகத் தான் கிளம்பியிருந்தேன். ஆனால் சிக்னலில் வண்டி அப்படியே நின்று விட்டது. எத்தனையோ முயற்சி செய்தும் அதைக் கிளப்ப முடியவில்லை. திரும்பி வந்து விட்டேன். அப்புறமாகக் கிளப்பிய போது அது உடனே ஸ்டார்ட் ஆகி விட்டது என்று சொன்னார்கள். ஒன்றும் புரியவில்லை”

சாமுவல் காலம் தாழ்த்தாமல் விஷயத்திற்கு வந்தார். “இல்லுமினாட்டியில் சமீப காலமாக ஏதேதோ அதிசயங்கள் நடக்கின்றன. உங்களுடைய இந்த நிகழ்வு கூட அது போல ஒன்றோ என்று சந்தேகம் எங்களுக்கு வந்தது. எதற்கும் உங்களிடம் நேரடியாகப் பேசித் தெரிந்து கொள்வோம் என்று தான் வந்தேன்...”

கர்னீலியஸ் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார். ஒரு பக்கம் உண்மையைச் சொல்லி விடலாமா என்று தோன்றியது. இன்னொரு பக்கம் இல்லுமினாட்டியின் தலைமைக்குச் சொல்ல வேண்டிய விஷயத்தை இவரிடம் சொல்வது சரியல்ல என்று அவர் மனம் எச்சரித்தது. அவருடைய தயக்கத்தைப் பார்த்தவுடனேயே இதில் ஏதோ பெரியதாக ஒரு விவகாரம் இருக்கிறது என்பதை சாமுவல் புரிந்து கொண்டார். அவர் கர்னீலியஸைப் பார்த்தபடி பொறுமையாகக் காத்திருந்தார்.

கர்னீலியஸ் யோசித்துக் கொண்டிருந்தார். ‘நாமாக இல்லுமினாட்டி தலைமைக்குத் தெரிவிக்கப் போக முடியாது. எர்னெஸ்டோவிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதே கஷ்டம். இவராக வந்திருக்கும் போது இல்லுமினாட்டி தலைமையை அணுக இவரைப் பயன்படுத்திக் கொண்டால் என்ன?’ என்று தோன்ற, பின் அவர் மெல்லச் சொன்னார். “உண்மையில் இல்லுமினாட்டி தலைமைக்கு இப்போதைய நிலைமை பற்றிய ரகசியத் தகவல் ஒன்றை எனக்குத் தெரிவிக்க வேண்டி இருக்கிறது. அந்தத் தகவல் சம்பந்தமாக நான் போன போது தான் எனக்கு இப்படி நிகழ்ந்தது. இது நம் எதிரியின் சதியா, இல்லை தற்செயலா என்று தெரியவில்லை.”

சாமுவல் உள்ளே பரபரப்படைந்தாலும் வெளியே அதைக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாகச் சொன்னார். “அந்தத் தகவலைச் சொன்னால் அதை அங்கே தெரிவித்து விடுகிறேன். இல்லா விட்டால் ஒரு மூடிய உறைக்குள் எழுதித் தந்தாலும் அதை அவர்களிடம் சேர்த்து விடுகிறேன்.”

(தொடரும்)
என்.கணேசன்     


2 comments:

  1. Cornelius is cheated by Samuel. Super Thrilling. How will Illuminati come to know? Through Krish or Akshay?

    ReplyDelete
  2. இன்னும் சிந்துவின் திட்டம் என்னவாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை.... விஸ்வம் ஏதேனும் முக்கியமான காரியத்தில் ஈடுபடும் போது, கிரிஷ் செயல்படாதவாறு பார்த்துக்கொள்ள சிந்துவை ஏற்பாடு செய்திருப்பானோ...

    ReplyDelete