Monday, December 7, 2020

யாரோ ஒருவன்? 9


ஞ்சய் ஷர்மா தன் எண்ணங்களை மறைத்துக் கொண்டு போலி மகிழ்ச்சியை முகத்தில் காட்டியபடி நரேந்திரனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். “உங்கப்பா மேல் எனக்குத் தனி மரியாதை இருந்துச்சு. அவர் திறமையான மனுஷன். அவர் கிட்ட இருந்து நான் நிறைய கத்துகிட்டேன். அவருக்குப்பறம் அங்கே எனக்கு இருக்கப் பிடிக்காமல் தான் ராஜினாமா செஞ்சேன். இந்த உண்மையை உன்கிட்ட சொல்றதுல பெருமைப்படறேன்...”

வெட்கம், மானம், சூடு, சொரணை என எதுவுமே இல்லாமல் எதிரே உட்கார்ந்திருக்கும் ஜந்துவைப் பார்க்கையில் ரத்தம் கொதித்தாலும் நரேந்திரனும் தன் மனநிலையை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.ரொம்ப சந்தோஷம். அந்த ஃபைலில் இல்லாத, அது சம்பந்தமான தகவல்கள் ஏதாவது உங்களுக்கு நினைவிருந்து சொன்னால் என் விசாரணைக்கு உதவியாயிருக்கும்…” என்று வறண்ட குரலில் சொன்னான்.

சஞ்சய் ஷர்மா ஆழமாய் யோசித்தான். அவன் யோசித்த விஷயங்கள் வேறு தான் என்றாலும் அதை நரேந்திரன் அறிய வழியில்லை என்று அவன் நினைத்தான்.  யோசித்து விட்டுச் சொன்னான். “அஜீம் அகமது பத்தி மகேந்திரன் சார் நிறையவே தகவல்கள் சேகரித்தார்.  அவன் எப்படி யோசிப்பான், என்ன செய்வான்னெல்லாம் கூட அவர் சரியாய் சொல்வதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கேன்கடைசில எங்கேயோ எப்படியோ தவறு நடந்துடுச்சுங்கறது மட்டும் நிச்சயம். அஜீம் அகமது அவர் நெருங்கறதை எப்படியோ மோப்பம் பிடிச்சு தப்பிச்சுட்டான்….”

யாராவது எங்கப்பா நெருங்கறதை அவனுக்குத் தகவல் தந்திருப்பாங்களோ?” நரேந்திரன் கூர்ந்து பார்த்தபடி கேட்டான்.

அந்த நேரடிக் கேள்வியை சஞ்சய் எதிர்பார்க்கவில்லை என்பது அவன் முகபாவனையிலேயே தெரிந்தது. அவனறியாமல் மாறிய முகபாவனையைச் சிரமப்பட்டு இயல்புநிலைக்கு வரவழைத்துக் கொண்ட சஞ்சய் அவசரமாகச் சொன்னான். “அதுக்கு வழி இல்லை. ஏன்னா எனக்கும் அவருக்கும் மட்டும் தான்  இந்த விசாரணை சம்பந்தப்பட்ட தகவல்கள் தெரியும்…. ஆனா ஒன்னு - நீ சொன்னபடி உங்கப்பா யாரையாவது விசாரிச்சு, அந்த ஆள் அஜீம் அகமது கிட்ட அவருக்குத் தெரியாமல் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கு…. அவன் உடனே உஷாராயிருக்கலாம்…. அப்படித் தான் நடந்திருக்கும்கிறது என்னோட யூகம்…”

நரேந்திரன் சிறிது நேரம் அவனையே பார்த்து விட்டுத் திடீரென்று கேட்டான். “இப்ப அஜீம் அகமது எங்கே இருக்கான்?”

இந்தக் கேள்வியை அறிவில்லாதவன் யாராவது கேட்டிருந்தால் அதை சஞ்சய் பொருட்படுத்தியிருக்க மாட்டான். ஆனால் இந்த வேலைக்கு வரமுடிந்த நரேந்திரன் மாதிரியான ஒரு புத்திசாலி கேட்டது சஞ்சய்க்குச் சுருக்கென்றது. ”என்னவோ என் நண்பன் இப்போது எங்கே என்பது போல் கேட்கிறானே பாவிஎன்று கோபத்துடன் எண்ணினாலும் சஞ்சய் சிரித்துக் கொண்டே சொன்னான். “அது தெரிஞ்சா நான் அவனைப் பிடிச்சுக் கொடுத்து மூனு நாடுகளின் பரிசுத் தொகையை வாங்கியிருப்பேனே? சாதாரணத் தொகையா அது? ‘ராவுக்கே தெரியாத தகவல் எனக்கெப்படி தெரியப் போகிறது?”

நரேந்திரனும் அவனுடன் சேர்ந்து சிரித்தபடி கேட்டான். “உங்களுக்கு ஏதாவது யூகம், அனுமானம் இருக்கலாம்னு தான் கேட்டேன்.”

இல்லைஎன்றான் சஞ்சய்.

அப்பா போன பிறகு நீங்கள் என்ன முயற்சிகள் எடுத்தீங்கன்னு சொல்ல முடியுமா?”

சஞ்சய்க்கு நரேந்திரனின் கேள்விகள் பிடிக்கவில்லை. எந்த முயற்சியும் எடுக்காதவனிடம் இப்படிக் கேட்டால் என்னவென்று சொல்வான். ஒரு நிமிடம் யோசித்து விட்டுச் சொன்னான். “என்னால் முடிஞ்சதெல்லாம் செஞ்சேன். ஏன்னா இந்தக் கேஸ் என்னோட முதல் கேஸ்.  உங்கப்பா அளவுக்கே எனக்கும் முக்கியமானது. ஆனா அப்ப எடுத்த முயற்சிகளெல்லாம் இப்ப சரியா ஞாபகம் இல்லை. இருபத்தியிரண்டு வருஷம் ஆயிடுச்சில்லையா? ராஜினாமா செய்துட்டு வந்தவுடனேயே கசப்பான நினைவுகள் எல்லாத்தையும் கஷ்டப்பட்டு மறந்தாச்சு.”

நரேந்திரன் சொன்னான். “என்ன தான் பழசை விட்டுட்டு வந்தாலும் பழசு சம்பந்தமான விஷயங்கள் சில சமயங்கள்ல நம்மை விடறதில்லை இல்லையா. அது சம்பந்தமான பழைய தொடர்புகள் யாராவது உங்களைப் பிறகு எப்போதாவது தொடர்பு கொண்டார்களா?”

இல்லைபட்டென்று சொன்னான் சஞ்சய்.

சரி எதாவது ஞாபகத்துக்கு வந்தால் என்னைக் கூப்பிட்டுச் சொல்லுங்கஎன்று சொல்லி நரேந்திரன் எழுந்தான்.

கண்டிப்பாஎன்று சொல்லியபடி தானும் எழுந்து நின்று நரேந்திரன் கையைக் குலுக்கி அனுப்பி வைத்த சஞ்சய் அவன் வெளியே போனவுடன் வெறுப்போடுமுட்டாள். படுமுட்டாள். அப்பன் போன இடத்துக்கே இவனுக்கும் போக அவசரம் போலருக்கு.” என்று சொல்லிக் கொண்டே நாற்காலியில் சாய்ந்தான். நரேந்திரன் வந்து போனது தேவையில்லாத பிரச்னையாக அவனுக்குத் தோன்றியது. “அப்பனுக்கும் தன்னைப் பத்தின நினைப்பு அதிகம். மகனும் அப்படியே தான் தெரியறான்..” என்று முணுமுணுத்த சஞ்சய் சிறிது  விட்டு யோசித்தான். மாமனுக்குப் போன் செய்து இந்தத் தகவலைத் தெரிவிப்பதா இல்லை வேறொரு எண்ணுக்குப் போன் செய்து தகவலைத் தெரிவிப்பதா என்று யோசித்து விட்டு மாமனுக்குப் போன் செய்து மாமன் அவர்களுக்குத் தெரிவிப்பதை விட நேரடியாகத் தானே போன் செய்து சொல்வது நல்லதென்று தோன்றவே அந்த எண்ணுக்குத் தானே போன் செய்தான்.

அஜீம் அகமது வழக்கை மறுபடி ரா எடுத்திருக்கு. செத்துப் போன மகேந்திரன் மகன் நரேந்திரன் தான் விசாரிக்க ஆரம்பிச்சிருக்கான்.”

மறுபக்கத்திலிருந்து பதில் எதுவும் வரவில்லை. இனியும் சஞ்சய் எதாவது சொல்வானா என்று சில வினாடிகள் காத்திருந்து விட்டு இணைப்பு துண்டிக்கப்பட்டது.


ந்தப் பேச்சைப் பதிவு செய்து கொண்ட அதிகாரி நரேந்திரனுக்குப் போன் செய்து தகவலைச் சொன்னான்நரேந்திரன் ஓட்டிக் கொண்டிருந்த காரை ஒரு ஓரமாக நிறுத்தினான். அவன் தந்தையின் மரணம் முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் சந்தேகத்தில் மட்டுமே இருந்தது இப்போது ஊர்ஜிதப்படுத்தப்பட்டு விட்டது. ஆனால் எப்போது இறந்தார், எப்படி இறந்தார் என்பதெல்லாம் இனித் தான் தெரிய வேண்டும். அவன் கண்கள் தந்தைக்காகவும், இதைச் சொன்னவுடன் வேதனைப்படப்போகிற தாயிற்காகவும் கலங்கின.

அப்பாவுடனான நினைவுகள் அவனுக்கு எதுவும் சரியாக நினைவில்லை. அவர் கடைசியாக வீட்டை விட்டுக் கிளம்பிய போது அவனுக்கு மூன்றரை வயது. அவர் முகம் கூட வீட்டிலிருக்கும் புகைப்படங்கள் மூலம் தான் அவன் மனதில் பதிவாகியிருக்கின்றன. அவனுக்கு அவர் சம்பந்தமாக நினைவிருப்பது  அவருடன் பைக்கில் ஒரு மழை நாளில் அவன் போனதும், ஒரு பொருட்காட்சியில் ஜெயண்ட் வீல் சுற்றும் போது  அவரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு அவன் அமர்ந்திருந்ததும் தான். வேறெதுவும் அவனுக்கு நினைவில்லை.  

வீட்டிலிருந்து ஒருநாள் போனவர் திரும்ப வருவார் என்று காத்திருந்த நாட்கள் பின் வருஷக் கணக்கில் நீண்டன. ஒவ்வொரு முறை வீட்டின் அழைப்பு மணி அடிக்கும் போதும் அவனும் அவன் தாயும் ஓடிப்போய் கதவைத் திறந்து பார்த்த கொடுமையான நாட்கள் அவை. அவர்கள் ஆவலுடனும், பிரார்த்தனையுடனும் எதிர்பார்த்துக் காத்திருந்த அவர் வரவேயில்லை

ஆனால் அவன் விசாரணையின் ஆரம்பம் சரியாகத்தானிருக்கிறது. அவன் தொடர்ந்து துப்பு துலக்க சஞ்சய் ஷர்மா என்ற இழை கிடைத்து விட்டது

சஞ்சய் ஷர்மா போன் செய்த எண்ணைப் பற்றி விசாரித்துத் தெரிவிக்க நரேந்திரன் உத்தரவிட்டான். அது ஒரு போலிப் பெயர், போலி விலாசத்து ஆதாரங்கள் தரப்பட்டு வாங்கப்பட்ட அலைபேசி இணைப்பு என்று சிறிது நேரத்தில் தெரிய வந்தது. அது மட்டுமல்லாமல் பல வருடங்களாக இயங்கி வந்த அந்த அலைபேசி இணைப்புக்கு வந்த மற்ற அழைப்புகளை அறிய முயல்கையில் சில நிமிடங்களுக்கு முன் தான் அந்த ’நெட்வர்க்கின் டேட்டாக்கள்’ மர்மமான முறையில் அழிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. யாரோ ’ஹேக்’ செய்து அவற்றை அழித்திருக்கிறார்களாம்.


(தொடரும்)
என்.கணேசன்

ஓரிரு வாரங்களில் அச்சில் வெளியாகவுள்ளது...



5 comments:

  1. சூப்பர் சார். நாவலை முழுவதுமாக ஒரேயடியாய் படிக்கப் போகிறோம் என்பதே எனக்கு செம த்ரில்லிங்காய் இருக்கு. நன்றி.

    ReplyDelete
  2. Very thrilling and different. Couldn't get what's next. Novel's front cover is nice.

    ReplyDelete
  3. சஞ்சய் ஷர்மா தான் அவர்களை பிடிக்க பயன்படும் கருவி...

    ReplyDelete