Thursday, July 2, 2020

இல்லுமினாட்டி 56


னோகருக்கு அவனிடம்  கூடுதல் உதவி எதுவும் பெறுவதில் விருப்பம் இருக்கவில்லை. விஸ்வத்திடம் வேலை செய்யும் அவனுக்கு ஆரம்பத்தில் இருந்து தரப்பட்டிருக்கும் மிக முக்கியமான கட்டளை என்னவென்றால் கூடுமான அளவு வெளியாட்களின் தொடர்பைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது தான். அன்னியர்களை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நெருக்கப்படுத்திக் கொண்டால் பிரச்சினை தான்.... மனோகர் சொன்னான். “அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீ இந்த அளவு உதவி வாங்கித் தருவதே எனக்குப் பெரிய உபகாரம் தான்.... எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் கூடுதலாகச் செய். எந்த ஆஸ்பத்திரியில் என்னைச் சேர்ப்பார்கள். அந்த ஆஸ்பத்திரி எங்கே இருக்கிறது என்பதை மட்டும் முன்கூட்டியே சொன்னால் நான் மீதியைப் பார்த்துக் கொள்கிறேன்....”

ராஜேஷ் அந்த மருத்துவமனையின் பெயரைச் சொல்லி சிறிய வரைபடம் ஒன்றையும் தந்தான். மனோகர் ஆர்வத்துடன் அதை வாங்கிப் பார்த்தான். அந்த மருத்துவமனை இருக்குமிடம் அதிக ஜன நடமாட்டம் இருக்கக்கூடிய பகுதியாகவோ, போக்குவரத்து அதிகமாக இருக்கும் பகுதியாகவோ இருக்கவில்லை. அந்தப் பகுதி அவன் மிக நன்றாக அறிந்த பகுதி. அங்கிருந்து நான்கைந்து மைல் தூரத்தில் அவன் பாதுகாப்பாய் ஒளிந்து கொள்ள வசதியும் இருக்கிறது. ஆனால் அந்தத் தகவலை ராஜேஷுக்குத் தெரிவிக்கவில்லை. ராஜேஷிடம் சொன்னான். “மிகவும் நன்றி நண்பா. ஆஸ்பத்திரியிலிருந்து தப்பித்தால் மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன்... அது வரை எல்லாம் சரியாகப் போக நீ உதவி செய் போதும். மற்றதை நான் எப்படியாவது சமாளித்துக் கொள்வேன்


விஸ்வம் ஜிப்ஸியிடம் கேட்டுக் கொண்டிருந்தான். “நண்பா நான் உன்னிடம் இல்லுமினாட்டியின் அடுத்த தலைவராக ஆர்வம் உள்ளவர்கள் பற்றியும், எர்னெஸ்டோவுக்கு எதிராக சிந்திக்க முடிந்தவர்கள் பற்றியும் உன்னிடம் கேட்டிருந்தேனே?”
         
உறுப்பினர்களில் பாதி பேருக்கு தலைவராக ஆர்வம் உண்டு. அவர்களில் பாதி பேருக்கு அதில் அதிக ஆசை உண்டு. ஆனால் தீவிரமாக அதைப் பற்றி யோசிப்பவர்கள், தலைவராக முடிந்த தகுதியும் செல்வாக்கும் உள்ளவர்கள் இவர்கள் மூன்று பேர்...”

விஸ்வம் நீட்டிய சீட்டில் வாங் வே பெயரும், மற்ற இருவர் பெயரும் இருந்தது. விஸ்வம் தொடர்ந்து சொன்னான். “எர்னெஸ்டோவுக்கு எதிராகச் சிந்திப்பவர்கள் நிறைய பேர் இல்லுமினாட்டியில் இருக்கிறார்கள். ஆனால் யாருமே அதை வெளிப்படையாகச் சொல்லவோ, தங்கள் அதிருப்தியை ஏதாவது வகையில் தெரியப்படுத்தவோ தயாரில்லை... அந்த அளவு அவர் வானளாவிய அதிகாரம் படைத்தவராக இருக்கிறார்...”

விஸ்வம் எர்னெஸ்டோவை நினைத்துப் பொறாமைப்பட்டான். யாருமே கேள்வி கேட்க முடியாத, எதிர்க்கத் துணியாத அந்த அசைக்க முடியாத நிலை அவன் என்றுமே விரும்பும் உச்ச நிலை... அதை அவன் ஒரு நாள் கண்டிப்பாக அடைவான். அவன் ஒரு விதி செய்வான். அந்த விதியால் இந்த உலகை ஆள்வான்...


ர்னீலியஸ் காரில் ஏதோ கோளாறு என்பதைப் புரிந்து கொண்டு ஒரு போலீஸ்காரர் ஓடி வந்தார். பின்னால் கார்களில் இருந்தவர்கள் இருவரும் ஓடி வந்தார்கள். “என்ன ஆயிற்று?”

கர்னீலியஸ் சுதாரித்துக் கொண்டு சொன்னார். “திடீரென்று ஆஃப் ஆகி விட்டது. ஸ்டார்ட் ஆக மாட்டேன்கிறது

அவர்களும் முயன்று பார்த்தார்கள். ஆனால் கார் நகர்வதாயில்லை. சில வீண் முயற்சிகளுக்குப் பிறகு போலீஸ்காரர் கேட்டார். “எங்கே போக வேண்டும்? கேப் எதாவது ஏற்பாடு செய்து தரட்டுமா? இந்தக் காரை ரிப்பேர் செய்த பிறகு நீங்கள் மறுபடி பெற்றுக் கொள்ளலாம்

கர்னீலியஸ் வங்கிக்குப் போக விரும்பவில்லை. வீட்டுக்குப் போகவே நினைத்து வீட்டு விலாசத்தைச் சொன்னார். அரை மணி நேரத்தில் வீடு வந்து சேர்ந்தார்.

லாக்கரில் அந்த ரகசிய ஆவணத்தில் இருக்கும் தகவல்களில் அந்த இடம், மனிதர்கள் குறித்து பல சங்கேத மொழிகளில் எழுதியிருப்பது என்னவெல்லாம் என்பது யோசித்துப் பார்த்தும் சுத்தமாக நினைவில்லை. அவர் அதுபற்றித் தெரிந்து கொள்வதையோ, அதை இல்லுமினாட்டி தலைமைக்குத் தெரிவிப்பதையோ யாரோ விரும்பவில்லை என்பது மட்டும் நிச்சயம். அந்த யாரோ விஸ்வமாக இருக்கலாம், அல்லது அவன் கூட்டாளியாக இருக்கலாம் அல்லது வேறு யாராவதோவாகக் கூட இருக்கலாம். உடனடியாக இல்லுமினாட்டி தலைமைக்குப் போன் செய்து அந்த ரகசிய ஆவணம் பற்றிச் சொல்வது தான் எளிமையான தீர்வாக அறிவுக்குத் தோன்றியது. ஆனால் மனம் இப்போதும் ஏனோ மறுத்தது. ஒரு வேளை அவர் போன் செய்து சொல்லத் தீர்மானித்தால் பேசுவதற்கு முன் கொல்லப்பட்டுவிடக் கூட வாய்ப்பிருக்கிறது. மிக நல்ல நிலைமையில் இருந்த காரை நடுத்தெருவில் ஸ்தம்பிக்க வைத்தவர்கள். அவர் இதயத்துடிப்பை ஸ்தம்பிக்க வைக்க நிறைய நேரம் ஆகாது,,,,

பிரச்சினைகளை விட்டு தீர்வை நோக்கி கர்னீலியஸ் யோசிக்க ஆரம்பித்தார். இப்போதைய அசாதாரணமான ஆபத்தான   சூழ்நிலைகளில் அவர் மன அமைதியைத் திரும்பப் பெறுவதே முக்கியம். அவரைத் தற்காத்துக் கொள்வதே அவசியம் என்று உள்ளுணர்வு சொன்னது. சிறிது நேரத்தில் அமைதியானார். அடுத்ததாக இப்போது இருக்கிற நிலைமையில் அவர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று மனம் பல வழிகளை யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் திடீரென்று அவருக்கு அந்தப் புத்தகம் நினைவுக்கு வந்ததுஉடனடித் தீர்வு கிடைக்கா விட்டாலும் அவர் அந்த ரகசிய ஆவணத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன் படித்ததை அந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கும் பயிற்சிகள் மூலம் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். இளம் வயதில் அவரும் அவர் நண்பன் ஒருவனும் சேர்ந்து அந்த அபூர்வ வழியில் சில முக்கிய, முக்கியமில்லாத விஷயங்களை எல்லாம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பழைய நினைவே இப்போது அவரை உற்சாகப்படுத்தியது. ஆனால் அவர் எச்சரிக்கையாகவும் இருக்கத் தீர்மானித்தார். அவருடைய இந்த உணர்வும் அவரைசிக்னலில்கண்காணித்த ஆளை எட்டுவதை விரும்பவில்லை. அது ஆபத்து.

அமைதியாக சிறிது நேரம் உட்கார்ந்து தன் உணர்வுகளைக் கூர்மை ஆக்கினார். இப்போது கண்காணிக்கப்படும் உணர்வு வருகிறதா என்று பார்த்தார். நல்ல வேளையாக இல்லை. அவர் மெல்ல எழுந்து வீட்டின் அறைக்கதவுகளையும், ஜன்னல்களையும் சாத்தி விட்டு அவருடைய படுக்கையறையுடன் ஒட்டி இருந்த நூலக அறைக்குள் நுழைந்தார். அலமாரிகளில் எத்தனையோ விலைமதிக்க முடியாத நூல்கள் இருந்தன. அவற்றில் சில புத்தகங்கள் சில ரகசிய வழிமுறைகளைப் பற்றி விளக்கும் புத்தகங்கள். அவற்றில் அவர் அந்தக் குறிப்பிட்ட நூலைத் தேட ஆரம்பித்தார். கடைசி அலமாரியில் அந்தப் புத்தகம் கிடைத்தது. அதைத் தொட்டவுடன் அவரையும் அறியாமல் அவர் மனம் படபடத்துக் கொண்டது.

அந்தப் புத்தகத்தின் அட்டை கெட்டியாக கருநீல நிறத்தில் இருந்தது. தூசி படிந்த அந்த அட்டையில் புத்தகத்தின் பெயரோ அதை எழுதியவரின் பெயரோ இருக்கவில்லை. கர்னீலியஸ் அந்தப் புத்தகத்தை எடுத்தவுடன் ஏதோ ஒரு சிலிர்ப்பை உணர்ந்தார். அது அதன் உள்ளே இருக்கிற ஏதோ ஒரு சக்தி அவருக்குச் செய்யும் ஆசிர்வாதமாகவே அவருக்குப் பட்டது. அலமாரி ஓரத்தில் வைத்திருந்த துணியால் அந்தப் புத்தகத்தைத் துடைத்தார்.. பிறகு தான் அந்தப் புத்தகத்தின் அட்டையில் ஒரு கண் மெலிதாக வரையப்பட்டிருந்தது அவருக்குத் தெரிந்தது.   அந்தக் கண் அவரையே ஊடுருவிப் பார்ப்பது போல இருந்தது.


கர்னீலியஸ் கண்மூடி ஒரு கணம் பிரார்த்தித்து விட்டு அந்தப் புத்தகத்தைத் திறந்தார். எங்கேயோ இடி இடித்தது.... 


(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. Interesting.
    கர்னீலியஸ்க்கு ஆபத்து நெருங்கி கொண்டு இருக்கிறது போலும்.....

    ReplyDelete
  2. Thrilling and interesting. What next?

    ReplyDelete
  3. எப்ப தான் கர்னீலியஸ் அத படிப்பார்? அந்த ரகசியத்தை நாங்க எப்போது தெரிந்துகொள்வோம்.... ஓவர் டென்சன்

    ReplyDelete
  4. முதல் பாகத்தில் இருந்து எப்படி நான் படிப்பது ???

    ReplyDelete
    Replies
    1. முதல் அத்தியாய லிங்க் இது
      http://enganeshan.blogspot.com/2019/06/1.html
      பின் அடுத்தடுத்த அத்தியாயங்கள் படித்துக்கொள்ளலாம்.

      Delete