Monday, June 29, 2020

சத்ரபதி 131


சில துக்கங்கள் காலத்தினாலும் கரைக்க இயலாதவை. அதை சிவாஜியும் தன் நண்பன் தானாஜி மலுசரேயின் மறைவில் உணர்ந்தான். நாளாக ஆக மனதில் கனம் கூடிக் கொண்டே போனதேயொழிய குறையவில்லை. ’மகன்  திருமணத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தவனை நாம் அழைத்து இந்த வேலையை ஒப்படைத்து அவனை மரணத்திடம் தள்ளி விட்டோமே’ என்ற குற்றவுணர்ச்சியும் நண்பனின் மரண துக்கத்தில் சேர்ந்து கொண்டதால் அவன் அதிலிருந்து மீள முடியாமல் மிகவும் வேதனையில் இருந்தான்.

தானாஜி மலுசரேயின் மறைவில் சிவாஜி அளவுக்கே துக்கத்தை உணர்ந்த இன்னொரு நண்பன் யேசாஜி கங்க். அவனுக்கும் நண்பனுடனான மறக்க முடியாத இளமைக்கால நினைவுகள் நிறைய இருந்தன. சிவாஜி முதல் முதலில் வசப்படுத்திய கோட்டையான டோரணாக் கோட்டைத் தலைவனுக்கு தங்கக்காசு முடிச்சுகள் தந்து கோட்டையை வசமாக்கிக் கொள்ள யேசாஜி கங்கும், தானாஜி மலுசரேயும், பாஜி பசல்கரும் தான் போனார்கள். அந்த மூவரில் இருவர் இப்போது உயிரோடு இல்லை. இப்போது சிவாஜியின் இளமைக்கால நெருங்கிய நண்பர்களில் அவன் மட்டுமே உயிருடன் இருக்கிறான். நண்பன் மரண வேதனை அவனையும் துக்கத்தில் ஆழ்த்தினாலும் குற்றவுணர்ச்சியும் சேர்ந்து சிவாஜி படும் வேதனையை அவனால் சகிக்க முடியவில்லை.

யேசாஜி கங்க் சிவாஜிக்கு ஆறுதல் சொன்னான். ”சிவாஜி. வீரமரணம் ஒவ்வொரு வீரனும் வேண்டிக் கொள்வதே அல்லவா? அப்படி இருக்கையில் நீ ஏன் இன்னும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்? அதுவும் வெற்றி தேடித் தந்து விட்டு எதிரியையும் வதைத்து விட்டுத் தான் தானாஜி இறந்திருக்கிறான். நம் நண்பன் பாஜி பசல்கரின் மரணமும் இப்படியே தான் நடந்திருக்கிறது. அவர்கள் இறந்ததற்காக நாம் வருத்தப்படுவது இயல்பு என்றாலும் அந்தத் துக்கத்தை நீட்டித்துக் கொண்டு போவது சரியல்ல. நினைக்க எத்தனையோ நல்ல நினைவுகளைத் தந்து விட்டே நம் நண்பர்கள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் ஆத்மா சாந்தி அடைந்திருக்கும். நீ இப்படி வருத்தப்படுவதை அவர்கள் எந்த உலகில் இருந்தாலும் பொறுக்க மாட்டார்கள்….”

சிவாஜிக்கு தானாஜி மலுசரே போருக்குக் கிளம்பும் முன் சொன்னது உடனே நினைவுக்கு வந்தது. அவனும் கிட்டத்தட்ட இதே தொனியில் அல்லவா பேசி விட்டுப் போனான்.  “நம் நண்பன் பாஜி பசல்கர் எந்த உலகில் இருந்தாலும் உணர்வு நிலையில் நம் முன்னேற்றங்களைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பான் சிவாஜி. இறந்தாலும் மனிதர்கள் தாங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்களிடமிருக்கும் தொடர்பை முழுவதுமாக இழந்து விடுவதில்லை என்று ஒரு சாது சொல்லக் கேட்டிருக்கிறேன். நுண் உணர்வு நிலையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும் என்று அவர் சொல்வார். எந்த அளவு அது உண்மை என்று தெரியவில்லை….”

தானாஜி தனக்கும் சேர்த்துத் தான் முன்பே சொல்லி விட்டுப் போயிருக்கிறானோ? நினைக்கையில் சிவாஜியின் கண்கள் ஈரமாயின….

எல்லாத் துக்கங்களுக்கும் மருந்து முழுமனதுடன் ஈடுபடும் செயல்களே என்று திடமாக நம்பிய யேசாஜி கங்க் அடுத்து ஆக வேண்டிய செயல்களை சிவாஜிக்கு நினைவுபடுத்தினான். “சிவாஜி ஔரங்கசீப்புக்கு சவால் விடுக்கும் விதமாக தானாஜி ஆரம்பித்து வைத்த வெற்றியை நாம் தொடர வேண்டும். அடுத்தது புரந்தர் கோட்டையையும் மற்ற கோட்டைகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். மிக முக்கியமாய் நீ செய்ய வேண்டிய இன்னொரு காரியம் உள்ளது. இதை நானும் தானாஜியும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பேசிக் கொண்டோம். இருவருமாகச் சேர்ந்து உன்னிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தோம். அவன் இறந்து விட்டதால் நான் தனியாக உன்னிடம் சொல்ல வேண்டிய நிலைமை உருவாகி விட்டது….”

சிவாஜி ஒரு கணம் சோகத்திலிருந்து ஆர்வத்துக்கு மாறினான். “சொல். என்ன அது?”

“நீ முறைப்படி முடிசூட்டிக் கொள்ள வேண்டும். உன்னை அரசன் என்றே நம் மக்கள் அழைத்தாலும், மற்றவர்கள் புரட்சிக்காரனாகவே நினைக்கிறார்கள். சொல்கிறார்கள்…. அதை நாம் மாற்ற வேண்டும்…. ஒரு நல்ல நாள் பார்த்து முறைப்படி நீ முடிசூட்டிக் கொண்டு மன்னன் என்பதை   உலகத்திற்கு அறிவிக்க வேண்டும்…. இது நம் நலம் விரும்பிகள் பலரும் என்னிடமும், தானாஜியிடமும் தெரிவித்த கோரிக்கை….. நாங்களும் அதையே விரும்புகிறோம்…. நாங்கள் இருவரும் சேர்ந்து ‘சத்ரபதி’ என்ற பட்டத்தையும் கூடத் தேர்ந்தெடுத்து வைத்திருந்தோம்…..”

சிவாஜி மெல்லக் கேட்டான். “பட்டங்களில் என்ன பெருமை இருக்கிறது? அடுத்தவர்கள் அங்கீகரித்து அழைக்கும் பட்டங்களில் நாம் அற்ப திருப்தியை விடக் கூடுதலாக என்ன பெற்று விடப் போகிறோம்?”

”உனக்கு அதில் பெருமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் உன்னைச் சார்ந்திருப்பவர்கள் அதில் பெருமையை உணர்கிறோம்….”

சிவாஜி பின்பு ஜீஜாபாயிடம் யேசாஜி கங்க் சொன்னதைத் தெரிவித்த போது அவளும் அவன் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்று சொன்னாள். அவளுக்கு தானாஜியும், யேசாஜியும் தேர்ந்தெடுத்திருந்த சத்ரபதி என்ற பட்டம் மிகவும் பிடித்திருந்தது. ராஜா என்ற பட்டம் வெறும் அரசன், ஆள்பவன் என்ற அர்த்தத்தை மட்டுமே தரும். ஆனால் சத்ரபதி என்ற பட்டம் வித்தியாசமாக இருந்தது. சத்ர என்றால் குடை, பதி என்றால் ஆள்பவன். சத்ரபதி என்றால் ஒரு குடையின் கீழ் மக்களைக் காத்து ஆள்பவன் என்ற பொருள் வரும். அவள் மகன் சிவாஜி வெறுமனே ஆள்பவன் அல்ல. மக்களை ஒரு குடையின் கீழ் பாதுகாத்து ஆள்பவன்….. சிவாஜிக்கு இது மிகவும் பொருத்தம் என்று அவளுக்குத் தோன்றியது. தாதாஜி கொண்டதேவ் உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்தப் பட்டத்தைத் தன் மாணவனுக்குப் பொருத்தம் என்று சிலாகித்திருப்பார் என்று ஜீஜாபாய் நினைத்தாள்.

ஜீஜாபாயும் அதை ஆதரித்துச் சொன்ன பிறகு சிவாஜி யோசிக்க ஆரம்பித்தான். யேசாஜி கங்க் ஒரு தீர்மானமான பதிலை அவனிடமிருந்து பெறாமல் செல்வதாயில்லை. அவன் வற்புறுத்தல் தாங்காமல் சிவாஜி சொன்னான். “சரி யேசாஜி. ஆனால் என் மனதில் நான் இன்னும் அடைய வேண்டிய சில உடனடி இலக்குகள் இருக்கின்றன. அதை நான் சாதித்து முடித்த பின் முடிசூட்டிக் கொள்கிறேன்….”

யேசாஜி கங்க் தன் நண்பனை அன்புடன் அணைத்துக் கொண்டு சொன்னான். “அது சீக்கிரம் நடந்து முடிய நீ உன் அன்னை பவானியிடம் வேண்டிக் கொள்…” சிவாஜி-பவானி கூட்டணியில் எத்தனையோ அற்புதங்கள் நடந்திருப்பதை யேசாஜி பார்த்திருந்தவன். அது தொடரும் என்றும் அவன் நம்புகிறான்….

மறுநாள் சிவாஜி நண்பனின் மரணத் துக்கத்திலிருந்து மீளவும், முடிசூட்டுவது குறித்துச் சொல்லி ஆசிகள் பெறவும் அவன் துறவி இராமதாசரிடம் சென்றான். அவர் துறவியானாலும் சமூக அக்கறையும், சமூக சீர்திருத்தங்களில் ஈடுபாடு கொண்டவரும் கூட. ஞானத்திலோ அவர் மிக ஆழமானவர். சிவாஜி பல முறை அவன் தத்துவ ஞானம் குறித்து அளவளாவுவதற்காக அவரைச் சந்தித்திருக்கிறான். இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார்கள். அவரிடம் பேசி விட்டுத் திரும்பும் போதெல்லாம் அவனுடைய மனமும், அறிவும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை அவன் உணர்ந்திருக்கிறான். அந்த நிலை இப்போதும் அவனுக்கு மிகவும் தேவைப்பட்டது.

சுவாமி இராமதாசர் சிவாஜியைப் பார்த்தவுடனேயே அவன் முகத்தில் தங்கி இருந்த துக்கத்திற்குக் காரணம் கேட்டார். சிவாஜி காரணம் சொன்னவுடன் அவர் சொன்னார். “சிவாஜி! மரணம் மனிதர்களால் நிச்சயிக்கப்படுவதில்லை. அது விதியால் ஒருவன் பிறக்கும் போதே நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. யார் எந்த நேரத்தில்  இறக்க வேண்டும் என்று விதி நிச்சயிக்கிறதோ அந்த நேரத்தில் தான் எவரும் இவ்வுலகில் இறந்தாக வேண்டும். நீ போருக்கு அழைத்திருக்கா விட்டாலும், சொந்த வீட்டிலேயே இளைப்பாறிக் கொண்டு தானாஜி அமர்ந்திருந்திருந்தாலும் அந்த நேரத்தில் அவன் இறந்து தான் இருப்பான். மரணத்திற்கு ஆயிரம் காரணங்களை விதி ஏற்படுத்த முடியும். அதனால் விதியின் தீர்மானத்திற்கு நீ உன்னைக் குறை கூறிக் கொள்வது அறியாமையே ஒழிய வேறில்லை….”

சிவாஜி யோசித்தான். மரணம் முன்பே நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் தான் ஏதாவது விதத்தில் நிகழ்கிறது என்றால் அந்த நேரத்தில் தானாஜி சாதாரண விபத்திலோ, ஒரு நோயிலோ இறக்காமல் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தது ஒருவிதத்தில் அவனுக்குப் பெருமையே என்று ஒருவழியாக அவன் மனம் ஆறுதல் அடைந்தது.

பின் சிவாஜி முடிசூட்டிக் கொள்ள நண்பனும், நலம் விரும்பிகளும் வற்புறுத்துவது குறித்துச் சொல்லி அதற்கு அவரின் ஆசிகளைக் கேட்டுக் காலில் விழுந்து வணங்கினான்.

ஆசி வழங்கிய இராமதாசர் சிறிது நீர், சிறிது மண், சில கூழாங்கற்கள், சிறிது குதிரைச் சாணம் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்து அவனிடம் தந்தார். அதை வாங்கிக் கொண்டு மறுபடி அவரை வணங்கி விட்டு சிவாஜி கிளம்பினான்.

ராஜ்கட் மாளிகையை அவன் அடைந்து இராமதாசர் தந்ததைக் காட்டிய போது ஜீஜாபாய் கோபப்பட்டாள். “என்ன இது?”

(தொடரும்)
என்.கணேசன்

5 comments:

  1. Emotional episode. Felt Sivaji's pain.

    ReplyDelete
  2. Vidya SoundararajanJune 29, 2020 at 6:19 PM

    வித்யாசமான ஆசி... அர்த்தம் புரிய 1 வாரம் காத்திருக்கணுமே???

    ReplyDelete
    Replies
    1. Shivaji Maharaj did many acts of valour and Samarth Ramdas Swami himself came to Shinganwadi and visited Maharaj. Maharaj performed ritualistic worship of the Guru’s feet; Samarth gave a coconut, a fistful of mud, horse dung and pebbles to him as a sacrament. At that time, Shivaji Maharaj had a thought of leaving his kingdom and serving Samarth for the rest of his life. On realising this thought Samarth said to Maharaj, “O King, follow the path of Kshatriya (Warrior) Dharma. Do not abandon your Dharma even at the cost of your life. You are born to protect your subjects. Do not leave this for my service. I will come to meet you even if you just remember me. Reign your kingdom with pleasure and bliss.” Later, Samarth taught Shivaji Maharaj an ideal way of ruling a kingdom. Samarth gave Shivaji Maharaj a coconut for welfare. Shivaji Maharaj started ruling happily and with contentment. As mentioned earlier, Samarth had given a fistful of mud, horse dung and pebbles to Shivaji Maharaj as a sacrament. For Maharaj, mud meant earth, pebbles meant winning hill-forts and horse-dung meant an army of horses which was also rich. By the Guru’s grace, Shivaji Maharaj never faced shortage of anything.

      Delete
  3. நண்பனை இழந்து சிவாஜி அடையும் துக்கம்....படிக்கும் எங்களையும் ஆட்க் கொண்டு விட்டது....

    ஏன் சுவாமி இராமதாசர் அதை கொடுத்தார்? என்று தெரியவில்லையே

    ReplyDelete