Monday, May 25, 2020

சத்ரபதி 126


ரங்கசீப் தன் வாழ்க்கையில் நிறைய கசப்பான அனுபவங்களைச் சந்தித்திருக்கிறான். அதிலிருந்து மீண்டும் இருக்கிறான். சிவாஜியுடனான கசப்பான அனுபவத்திலிருந்தும் மெல்ல அவன் மீண்டு வந்தான். சிவாஜி தன் ராஜ்ஜியத்திற்குப் போய்ச் சேர்ந்த செய்தி ஒருவிதத்தில் அவன் மன அமைதியை மீட்டுக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். சிவாஜி தப்பித்த பின், கடுமையாகத் தேடியும் கிடைக்கவில்லை என்ற நிலையில் அவன் தலைநகருக்கு அருகிலேயே எங்காவது மறைவாக ஒளிந்து கொண்டிருப்பானோ, தொழுகைக்குப் போகும் போதோ, தொழுகையிலிருந்து வரும் போதோ, மறைந்திருந்து திடீர் என்று தாக்குவானோ என்ற பயத்தில் கூடுதல் காவல் படைகளை உடனழைத்துப் போய் வந்து கொண்டு இருந்ததற்கு ஔரங்கசீப் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது.  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவனால் ஒழுங்காகச் சிந்திக்க முடிந்தது. மகன் முவாசிம்மை தக்காண கவர்னராக நியமித்துக் கட்டளையிட்ட அவன், மகன் தக்காணத்திற்குக் கிளம்பும் முன் அழைத்து அவனிடம் நிறைய அறிவுரைகள் சொன்னான்.

கவனமாக இருக்க வேண்டும், எச்சரிக்கையாக இருக்க வேண்டும், யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது, சாதுரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளை எல்லாம் சிறுவயதிலிருந்தே தந்தையிடம் கேட்டுச் சலித்திருந்த முவாசிம் இப்போதும் கேட்டுச் சலித்தான்.

அறிவுரைகளை முடித்து விட்டு ஔரங்கசீப் விஷயத்துக்கு வந்தான். “மகனே இப்போது தக்காணத்தில் நமக்கு மூன்று எதிரிகள் இருக்கிறார்கள். முக்கியமாய் சிவாஜி, பின் பீஜாப்பூரின் அலி ஆதில்ஷா, அடுத்தது கோல்கொண்டா சுல்தான். மூன்று பேரையும் நீ எப்படி சமாளிக்கப் போகிறாய்?”

”என்னுடன் பெரும்படை ஒன்றை அனுப்புங்கள் தந்தையே. மூவரையும் வென்று வருகிறேன்” முவாசிம் சொன்னான்.

பெரும்படையை மகனுடன் அனுப்பினால் அவன் அதைத் தந்தைக்கு எதிராகவே பயன்படுத்தும் சாத்தியமும் இருக்கிறது என்பதால் அதற்குச் சம்மதிக்கும் எண்ணம் சிறிதும் இல்லாத ஔரங்கசீப் சொன்னான். “மகனே ஹிந்துஸ்தானத்தில் தெற்குப் பகுதி மட்டுமல்ல. வடக்கும் இருக்கிறது. அங்கும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அதையும் சமாளிக்க வேண்டி இருப்பதால் கூடுதல் படையை உன்னுடன் அனுப்ப முடியாத நிலையில் நான் இருக்கிறேன். படை இல்லாமல் மூவரையும் சமாளிக்க ஏதாவது வழி யோசித்து வைத்திருக்கிறாயா?”

முவாசிம் சொன்னான். “என் சிற்றறிவுக்கு வழி எதுவும் தெரியவில்லை. ஆனால் தாங்கள் யோசித்து வைத்திருப்பீர்கள் என்பதை நான் அறிவேன். அதைத் தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்கிறேன்”

அந்தப் பதிலில் ஔரங்கசீப் திருப்தி அடைந்து சொன்னான். “மகனே. மூவரில் உண்மையான பிரச்சினை சிவாஜி தான். அவனைப் பேச்சு வார்த்தைக்கு அழைத்து அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள். அதிகபட்சமாய் அவன் இது வரை ஜெயித்த கோட்டைகள் அவனே வைத்துக் கொள்ளட்டும், அவனுக்கு ராஜா என்ற பட்டத்தை நான் தயாராக இருக்கிறேன் என்று சொல். அவன் மீது நாம் போர் தொடுக்கவும் போவதில்லை என்று சொல். அதற்குப் பதிலாக அவனை பீஜாப்பூர் சுல்தானுக்கு எதிராகவும், கோல்கொண்டா சுல்தானுக்கு எதிராகவும் போரில் இறங்கச் சொல். உதவுவதற்குப் படைகள் தரவும் தயார் என்று சொல். கேட்டால் அனுப்பவும் அனுப்பு.  வென்று கிடைப்பதை அவனே எடுத்துக் கொள்ளட்டும். இந்தத் திட்டத்தில் மூன்று எதிரிகளையும் நீ சமாளிக்க வேண்டியிருக்காது. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள்.”

தந்தையின் ராஜதந்திரத்தை எண்ணி வியந்த முவாசிம் கேட்டான். “முதலில் சிவாஜியை ஒப்பந்தத்திற்கு நாம் சம்மதிக்க வைக்க முடியுமா? அவன் ஒப்புக் கொள்வானா? அவன் நம் மேல் கோபமாக அல்லவா இருப்பான்”

ஔரங்கசீப் சொன்னான். “அரசியலில் ஒரு புத்திசாலிக்கு கோபம் லாப நஷ்டங்களைக் கணக்கெடுத்த பிறகே வரும் அல்லது போகும், முவாசிம். சிவாஜி புத்திசாலி. அவன் கண்டிப்பாக ஒத்துக் கொள்வான். ஏனென்றால் அவன் மறுத்தால் நாம் பீஜாப்பூர் சுல்தானிடமோ, கோல்கொண்டா சுல்தானிடமோ கூட இதே ஒப்பந்தத்தைப்  போட்டுக் கூட்டணி வைத்துக் கொண்டு அவனை எதிர்க்க முடியும் என்பதை அவன் அறிவான். அந்த நிலைமையை உருவாக்கிக் கொள்ள விரும்ப மாட்டான். அதனால் அவன் சம்மதிப்பான்.”

முவாசிம் தலையசைத்தான்.

ஔரங்கசீப் தொடர்ந்தான். “ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் இப்போது நாம் பிடித்து வைத்திருக்கிற ஐந்து கோட்டைகளையும் கொடுக்கச் சம்மதிக்காதே. அதே போல் அவன் ஐந்தாயிரம் குதிரை வீரர்களுடன் அவன் மகன் சாம்பாஜியை நம் தலைமையகம் தௌலதாபாத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சொல். இது நாம் முந்தைய ஒப்பந்தத்திலேயே கேட்டது. தலைநகருக்கு மான்சப்தாராக அவன் மகன் வர வேண்டும் என்று கேட்டோம். சிவாஜி கண்டிப்பாக மகனை நம் தலைநகருக்கு அனுப்பச் சம்மதிக்க மாட்டான். ஆனால் தௌலதாபாத்துக்கு அனுப்பச் சம்மதிப்பான். இது நமக்கு அவசரத்திற்கு உதவும். இந்த இரண்டும் முக்கியம். ஆரம்பத்தில் அவனது மற்ற நான்கைந்து கோட்டைகளையும் சேர்த்துக் கேள். பேரம் பேசிக் குறைத்துக் கொள்….”

முவாசிம் அதற்கும் தலையசைத்தான். தந்தையின் தந்திரக்கணக்குகள் அவனை பிரமிக்க வைத்தன.

ஔரங்கசீப் தொடர்ந்து சொன்னான். “ராஜா ஜஸ்வந்த்சிங்கையும் உன்னுடன் அனுப்புகிறேன். சிவாஜியுடன் தொடர்பு கொள்ளும் போது ஒரு இந்து ராஜாவும் உன்னுடன் இருப்பது உனக்கு உதவியாக இருக்கும். ஆனால் ஒன்றை மறந்து விடாதே. அவர்கள் இருவரும் அதிகமாக நெருக்கமாவதை அனுமதிக்காதே…. அது ஆபத்து…”

முவாசிம் மறுபடி கேட்டுச் சலித்தான்.

உண்மையில் ராஜா ஜஸ்வந்த்சிங்கை முவாசிம்முடன் ஔரங்கசீப் அனுப்புவதற்குக் காரணம் மகன் ஒருவனாக இருந்து தனக்கெதிராக எதுவும் செய்து விடக்கூடாது, கண்காணிக்க அடுத்தவன் ஒருவன் மகனுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். முவாசிம் அவனை வணங்கிச் சென்ற பிறகு ஔரங்கசீப் தனிமையில் நீண்ட நேரம் அமர்ந்திருந்தான். முன்பு ஒரு காலத்தில் சீறி வந்த மதயானையை எதிர் கொண்டு நிறுத்திய அவன் வலிமை எல்லாம் போய் விட்டது. வயோதிகம் அவனை வந்தடைந்து விட்டது.  எதிரிகளை மட்டுமல்லாமல் பிள்ளைகளையும் சமாளிக்க வேண்டி இருக்கிறது…. எல்லாரையும் கண்காணிப்பில் வைக்க வேண்டி இருக்கிறது. என்னவொரு வாழ்க்கையிது என்று சிந்தித்தவனாய் களைப்புடன் கண்களை மூடிக் கொண்டான்.


முவாசிம் சமாதான ஒப்பந்தத்திற்காக அழைத்த போது சிவாஜி அதிகம் யோசிக்காமல் ஒத்துக் கொண்டான். காரணம் முவாசிம் குறித்து அவன் கேள்விப்பட்ட எதுவும் அவனை வஞ்சகனாகவோ, சூழ்ச்சிக்காரனாகவோ சித்தரித்ததில்லை. எதையும் நேரடியாகச் சொல்லவும், செய்யவும் பழக்கப்பட்டவனாகவே அனைவரும் அவனைச் சொல்லியிருந்தார்கள். நேரில் சந்தித்த போது அது உண்மை என்றே சிவாஜிக்கும் புரிந்தது.

முவாசிம் தந்தை சொன்னது போல் பேரம் பேசவில்லை. அவர் சொன்னபடி அதிகம் சொல்லிக் குறைக்கவோ, தேவையில்லாதவைகளைச் சேர்க்கவோ செய்யாமல் அவர் முக்கியம் என்று சொன்ன அம்சங்களை மட்டும் சொன்னான்.

இந்த ஒப்பந்தத்தை மறுத்தால் முவாசிம் பீஜாப்பூர் சுல்தானுடன் அல்லது கோல்கொண்டா சுல்தானுடன் ஒப்பந்தம் போட்டுக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது என்பதைப் புரிந்து கொண்ட சிவாஜி ஔரங்கசீப் எதிர்பார்த்தது போலவே சம்மதித்தான். இப்போதைக்கு முகலாயர்களுடன் சேர்ந்து கொள்வது பீஜாப்பூர், கோல்கொண்டா சுல்தான்களிடமிருந்து பெற முடிந்த லாபமாகவே அவனுக்குப் பட்டது.

கடைசியில் ஒப்பந்தத்தில் சிறு மாற்றத்தை மட்டும் சொன்னான். “இளவரசரே. என் மகன் சாம்பாஜியை ஐந்தாயிரம் குதிரைகளோடு மான்சப்தாராக இங்கு அனுப்பி பதவி ஏற்றுக் கொள்ள வைக்கிறேன். ஆனால் சிறுவனான அவனை இங்கேயே இருக்க வைக்க என் தாயார் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் அவன் பதவி ஏற்றுக் கொண்ட பின் அவனுக்குப் பதிலாக அவன் பிரதிநிதியாக ஐந்தாயிரம் குதிரைப்படையுடன் என் படைத்தலைவர் ப்ரதாப்ராவ் குசார் இங்கே இருக்கச் சம்மதிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்”

முவாசிம் யோசித்தான். அவனுக்கு சிவாஜி வளவளவென்று பேரம் பேசாமல் ஒரே ஒரு சிறிய மாற்றத்தைக் கேட்டது பிடித்திருந்தது. குதிரைப்படையுடன் ஒரு சிறுவனை இங்கே வைத்துக் கொள்வதை விட அனுபவம் வாய்ந்த படைத்தலைவர் இங்கு இருப்பது நல்லது என்று நினைத்து ”அப்படியே ஆகட்டும்” என்று உடனே சம்மதித்தான். ஒப்பந்தம் கையெழுத்தானது.

முவாசிம் ஒப்பந்தத்தைத் தந்தைக்கு அனுப்பி வைத்தான். சாம்பாஜிக்குப் பதிலாக ப்ரதாப்ராவ் குசார் என்ற படைத்தலைவன் தௌலதாபாத்தில் இருப்பதில் ஔரங்கசீப்புக்கு முழுத்திருப்தி இருக்கவில்லை. முவாசிம் ‘ஒரு சிறுவனை விட அனுபவம் வாய்ந்த படைத்தலைவர் நம்மிடம் இருப்பதன் பயன் அதிகமல்லவா?’ என்று எழுதியதைப் படித்து விட்டு ஔரங்கசீப் முணுமுணுத்தான். “முட்டாளே. முட்டாளே…. நாளை ஏதாவது அவசியம் வரும் போது மகனை வைத்துக் கொண்டு மிரட்டினால் எடுபடுமா, ஒரு படைத்தலைவனை வைத்துக் கொண்டு மிரட்டினால் எடுபடுமா? எப்போது அரசியல் பாடம் கற்றுக் கொள்ளப் போகிறாய்?”

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Aurangazeb is equal to Sivaji in intelligence. His thought process is explained superbly.

    ReplyDelete
  2. ஔரங்கசீப் மகனுடன் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கிறான் போல...(தன்னைப்போல அனைவரும் என்று நினைத்திருப்பான் போல😂😂😂)

    இந்த உடன்படிக்கை ஔரங்கசீப்க்கு லாபமாக இருக்குமா? அல்லது சிவாஜிக்கு லாபமாக இருக்குமா??

    ReplyDelete