இல்லுமினாட்டி உளவுத்துறையின் தலைவன் இம்மானுவல் முகத்தில் தெரிந்த தீவிர சிந்தனை எதைப்பற்றியதாக இருக்கும் என்று யோசித்தபடியே அவன் எதிரில் வந்தமர்ந்தார் உளவுத்துறையின் உபதலைவர் சாலமன். அவர் தெரிவித்த வணக்கத்திற்கு மறு வணக்கம் அவன் தெரிவித்த போதும் அவனுடைய பாதிக் கவனம் வேறெங்கோ இருப்பது அவருக்குத் தெரிந்தது.
“என்ன தீவிர சிந்தனை தலைவரே?” என்று சாலமன் கேட்க இம்மானுவல் ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னான். ”விஸ்வம்”
வாங் வே விஸ்வம் பற்றித் தெரிய வருகிற எல்லாத் தகவல்களையும் உடனுக்குடன் தெரிவிக்கும்படி சாலமனைக் கேட்டுக் கொண்டிருந்ததால் சாலமன் ஆவலை அதிகமாய் வெளிப்படுத்திக் கொள்ளாமல் சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டார். ”அவன் எங்கிருக்கிறான் என்பது தெரிந்ததா?”
இம்மானுவல் சொன்னான். “இல்லை. கற்பூரம் போலக் காற்றில் கரைந்து விட்டான் போலிருக்கிறது. யார் கண்ணிலும் அவன் இன்னமும் படவில்லை”
சாலமன் சொன்னார். “ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. நமக்கு இதுவரை இப்படி ஒரு நிலைமை வந்ததில்லை. அவன் ஜெர்மனியை விட்டு வெளியே போயிருக்க வழியில்லை. ஜெர்மனியிலும் ஓட்டல்கள், லாட்ஜ்கள், எல்லாம் விசாரித்து விட்டோம். இப்போது காலி வீடுகள் எல்லாம் தேடி வருகிறோம்.... அதில் ஏதாவது ஒன்றில் சிக்குவான் என்று நினைக்கிறேன். அவன் கூட்டாளி பற்றி ஏதாவது தகவல் கிடைத்திருந்தால் நமக்கு அவனைத் தேடுவது சுலபமாக இருந்திருக்கும்...”
சரியான இடத்தில் நிறுத்தி யோசிப்பது போல் பாவனை காட்டி அவர் இம்மானுவலைப் பார்த்தார். அந்தக் கூட்டாளி பற்றி ஏதாவது தகவல் கிடைத்திருந்தால் இம்மானுவல் சொல்வான் என்று எதிர்பார்த்தார்.
இம்மானுவல் தன் மேஜையின் மேலிருந்த ஃபைலைப் பார்த்தபடியே சொன்னான். “அந்தக் கூட்டாளி விஸ்வத்தை விட அதிக மர்மமான ஆசாமியாக இருக்கிறான். அவனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை...”
அப்போது தான் அந்த ஃபைலின் மேலே “விஸ்வத்தின் கூட்டாளி” என்று எழுதியிருந்ததை சாலமன் கவனித்தார். அந்த ஃபைலில் நிறைய தாள்கள் இருந்தன. எதுவுமே தெரியாத ஆளைப் பற்றி இத்தனை தாள்களில் தகவல்கள் சேர்த்திருக்கிறானே இவன் என்ற திகைப்பு எழுந்தாலும் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை. அவனாக எதாவது சொல்வானா என்று காத்திருந்தார். ஆனால் இம்மானுவல் அதைப் பற்றிப் பேசாமல் உளவுத்துறையின் வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
அவருக்கு அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவன் விஸ்வத்தின் கூட்டாளி பற்றிச் சேகரித்திருக்கும் தகவல்கள் என்னவாக இருக்கும் என்ற சிந்தனையே மேலோங்கி இருந்தது.
சிந்து விஸ்வத்துடன் பேசி முடித்த பின் பெரும் மனக்குழப்பத்தில் இருந்தாள். பேசியது விஸ்வம் தானா என்கிற சந்தேகம் அவளுக்கு இன்னும் சிறிது இருந்தது. அந்தக் குரல் விஸ்வத்துடையதல்ல. ஆனால் பேசிய விதம் விஸ்வத்தினுடையதே. என்ன ஆக வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிவித்ததில் இருந்த தெளிவு விஸ்வத்தின் தனித்தன்மையே. அவள் மிகவும் கவனமாக அவன் சொன்னதை எல்லாம் கேட்டிருந்தாள். அவன் செய்ய முடியுமா? செய்கிறாயா? என்றெல்லாம் கேட்கவில்லை. அந்தக் கேள்விகளை அவன் முதல் சந்திப்புக்குப் பிறகு அவளிடம் இது வரை என்றுமே கேட்டதில்லை. கட்டளை மட்டுமே அவனிடமிருந்து எப்போதும் வரும். இப்போதும் அது மட்டுமே வந்திருக்கிறது. இதுவும் அவனுடைய தனித்தன்மை தான். ஆனால் மனக்குழப்பத்தில் அவள் இருந்ததற்கு மூன்று காரணங்கள் இருந்தன.
முதல் காரணம் அவன் இது போன்ற வேலையை இதுவரை கொடுத்ததில்லை. குடும்பம், பாசம், காதல் செண்டிமெண்ட் போன்றவற்றின் மீது அவனுக்கு என்றுமே நல்லபிப்பிராயம் இருந்தது கிடையாது. அவற்றைப் பயன்படுத்தி எதையும் சாதிக்க நினைக்கும் ரகமும் அவன் அல்ல என்பதை அவள் முன்பே கணித்திருந்தாள். ஆனால் முதல் முறையாக இதைச் செய்யச் சொல்கிறான். குரல் மாற்றத்திற்கு அடுத்தபடியாக அவன் கொடுத்த இந்த வேலையின் இயல்பும் அவளைச் சந்தேகிக்க வைத்தது.
இரண்டாவது காரணம் அவளுக்கும் அவனைப் போலவே குடும்பம், பாசம், காதல், செண்டிமெண்ட்களில் கடுகளவு நம்பிக்கையும் கிடையாது. ஈடுபாடும் கிடையாது. நடிப்புக்காகக்கூட அவற்றில் ஈடுபடுவது அவளுக்கு வெறுப்பாக இருந்தது.
மூன்றாவது காரணம் இந்த வேலையில் இருந்த ஆபத்து. இது வரை அவள் விஸ்வத்திற்காகச் செய்து கொடுத்திருந்த வேலைகள் எல்லாம் ரகசியமாய், அசாத்தியத் திறமையுடன் செய்ய வேண்டியிருந்தவை. சிலநாள் திட்டமிட்டாலும் ஓரிரு நாளில் செயல்படுத்தி அங்கிருந்து கிளம்பி வந்து விட முடியும். ஆனால் இந்த வேலை அப்படியல்ல. தமிழக முதலமைச்சரின் குடும்பத்தில் நுழைவதும் நீண்ட நாட்கள் அவர்களுடன் தங்குவதும் கண்டிப்பாக ரகசியமாய் வைத்திருக்க முடிந்ததல்ல. வேலை முடிந்து அவள் சந்தேகத்திற்கு ஆளாகாமல் அங்கிருந்து தப்பிப்பதும் சுலபமாய் முடிந்த வேலை அல்ல. சின்னத் தவறு நேர்ந்தாலும் வாழ்நாள் பூராவும் சிறையில் இருக்க வேண்டி வரும். அல்லது மரண தண்டனை கூட கிடைக்கலாம். ஜெயித்தால் ஏராளமான கோடிகள் கிடைக்கும். ஆனாலும் இந்த ஆபத்து நிறைந்த, சுத்தமாகப் பிடிக்காத வேலையில் ஈடுபடுவது தேவை தானா என்று யோசித்தாள்.
இந்த மனக்குழப்பமும், தயக்கமும் விஸ்வம் வேலையைப் பற்றி அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த போதே அவளுக்கு எழ ஆரம்பித்திருந்தது. அவனிடம் அவள் சரி என்று கூட சொல்லவில்லை. பேசும் ஆள் அவன் தானா, இல்லை இது விஸ்வத்தின் எதிரிகள் அவளுக்காக விரிக்கும் வலையா என்று கூட சந்தேகமும் இருந்ததால் அவள் ஒரு வார்த்தை கூட பேசவும் இல்லை. பதிலை எதுவும் எதிர்பார்க்காமல் அவன் பேச்சை முடித்துக் கொண்டதைப் பார்க்கையில் இப்போது அவளுக்கு விஸ்வம் தான் பேசியது என்று உறுதியாகத் தோன்றியது. அதை நிரூபிப்பது போல முப்பது லட்சம் ரூபாய் அவளுடைய கணக்கில் சேர்க்கப்பட்டு விட்டதாக குறுந்தகவல் அவளுடைய அலைபேசிக்கு வந்து சேர்ந்தது.
இத்தனை பெரிய தொகை அவளுக்கு இது வரைக்கும் எந்த வேலைக்கும் கிடைத்ததில்லை. இனி அவள் மறுக்க முடியாது. மறுத்து விட்டு நீண்ட நாட்கள் உயிரோடு இருந்து விட முடியாது. விஸ்வாஸ்ஜியாக அறிமுகமாகிய அந்த மனிதன் மிக மிக ஆபத்தானவன் என்பதை அவள் இந்த இரண்டு வருடங்களில் மிக நன்றாக அறிவாள். இரண்டு வருடங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மார்வாடி சேட்டின் வேடத்தில் இருந்த அவன் பர்ஸைத் திருட நினைத்தது அவள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறோ என்று அவளுக்குப் பல சமயங்களில் தோன்றி இருக்கிறது. அவள் வாழ்க்கையில் பிடிபட்டது அவன் ஒருவனிடம் தான்.
அவன் தோற்றம் பொய் என்பது அவள் அவன் பர்ஸை ஜேப்படி செய்த அடுத்த வினாடியில் அவன் இரும்புப்பிடி பிடித்த போதே அவளுக்குப் புரிந்து விட்டது. ரெஸ்டாரண்டில் அவளிடம் அவன் தமிழில் என்ன சாப்பிடுகிறாய் என்பது அவளுக்கு அடுத்த அதிர்ச்சியாக இருந்தது. அவள் தமிழ்க்காரி என்பது அவனுக்கு எப்படித் தெரியும் என்று திகைத்தாள். அவர்கள் இருப்பது மும்பையில். அவள் அந்த விமான நிலையத்தில் ஒருவரிடம் கூடத் தமிழில் பேசியிருக்கவில்லை. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே தான் பேசி இருக்கிறாள். அவளுக்குத் தமிழ் தெரியும் என்பதற்குக் கூட எந்த அறிகுறியும் அவள் காட்டியிருக்கவில்லை. ஆனாலும் அவன் கண்டுபிடித்து விட்டான்.
காபி குடித்துக் கொண்டிருக்கையில் அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பார்வையிலேயே அவளுடைய அத்தனை ரகசியங்களையும் அவன் தெரிந்து கொண்டு விட்டான் என்று அவள் உள்ளுணர்வு சொன்னது. அவள் வாழ்க்கை வரலாறையே அவன் படித்துக் கொண்டிருக்கிறான் என்ற உணர்வு அவளுக்கு மேலிட்டது.
இருவரும் காபி குடித்து முடித்த போது அவன் சொன்னான். “உன் திறமைக்கு நீ சின்னச் சின்னத் திருட்டுகளில் ஈடுபடக்கூடாது”
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் அவளுக்கு அவமானமாகவும், பெருமையாகவும் இருந்தது. அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று தோன்ற ஆரம்பித்தது.
அவன் அவளிடம் சொன்னான். “உன் திறமைக்கு ஏற்ற வேலைகள் வரும் போது சொல்கிறேன். லட்சக்கணக்கில் நீ சம்பாதிக்கலாம். செய்வாயா?”
அவன் சொல்வதை எந்த அளவு நம்பலாம் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணம் வலுவடைய ஆரம்பித்தாலும் அவள் அதைக் காட்டிக் கொள்ளாமல் ”சரி விஸ்வாஸ்ஜி” என்று .சொன்னாள்.
அவனுக்கு அவள் பெயர் சொல்லி அழைத்தது வேடிக்கையாக இருந்ததாகத் தோன்றியது. ”அவ்வளவு நீளம் வேண்டாம். விஸ்வம் என்றே கூப்பிடு” என்றான். அவள் தலையசைத்தாள். அதுவாவது அவனுடைய உண்மையான பெயரா இல்லை விஸ்வாஸ்ஜியின் சுருக்கமா என்று அவள் யோசித்தாள்.
அவன் எழுந்து சென்று விட்டான். வேலை கொடுக்கிறேன் என்றவன் அவளுடைய போன் நம்பரை வாங்காததும், விலாசத்தை வாங்கிக் கொள்ளாததும் விசித்திரமாக இருந்தாலும் விட்டது சனியன் என்ற எண்ணமும் வந்தது. நிம்மதியுடன் அவளும் ரெஸ்டாரெண்டில் இருந்து வெளியே வந்தாள். அவன் எங்கும் கண்ணில் படவில்லை.
ஆனால் மூன்று மாதங்கள் கழித்து விஸ்வம் அவளுக்கு ஒரு வேலை விஷயமாகப் போன் செய்தான்.
(தொடரும்)
என்.கணேசன்
What is viswam's plan through sindhu? Eagerly waiting to know.
ReplyDeleteசிந்துவின் எண்ண ஓட்டத்தை படிக்கும் போது..குழப்பமாக இருந்தது....அவளிடம் முதல் சந்திப்பிலும் போது.."விஸ்வாஸ்ஜி" என்று தானே... விஸ்வம் அறிமுகப்படுத்திக் கொண்டான்..?
ReplyDeleteஇவள் "விஸ்வம்" என்று சிந்திக்கிறாளே? என்று....
ஆனால் சிந்து...விஸ்வத்தின் முதல் சந்திப்பின் போது...மீதம் நடந்தது என்ன? என்று இறுதி விளக்கத்தின் போது குழப்பம் நீங்கியது...
விஸ்வத்தின் மன ஓட்டம் சிந்துவை விட குறைவு...
சிந்து உதைக்கு ஜோடியா வந்துடுவாளோ🤔?
ReplyDeleteInteresting
ReplyDeleteபுத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டதால் இதில் விமர்சனங்களை பதிவிட இயலவில்லை.. இன்னும் ஓரிரு நாட்களில் இல்லுமினாட்டி நாவல் முடிவுக்கு வந்துவிடும்.. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது..
ReplyDelete