மதங்களின் பெயரால் நடக்கும் அத்துமீறல்களும், அராஜகங்களும்
ஒரு பக்கம் இருக்க, மதங்களைக் கடந்த பெருந்தன்மைகளும், மரியாதைகளும் கூட அவ்வப்போது
நமக்குப் பார்க்கக் கிடைப்பது தான் இந்த தேசத்தின் மிகப்பெரிய பலம்.
இன்றைய (9.9.2018) பத்திரிக்கையில் இரு செய்திகள் வியக்க
வைக்கும்படி இருந்தன. ஒன்று முஸ்லீம் ஒருவர் விநாயகருக்குக் கோயில் கட்டி வரும் செய்தி.
மைசூரைச் சேர்ந்த சாம்ராஜ்நகர் அருகே சிக்கஹொல்லே என்ற அணைக்கட்டுப் பகுதியில் மக்கள்
வணங்கி வந்த விநாயகர் சிலை கடந்த வருடம் திருட்டுப் போய் விட அது அந்தப் பகுதி மக்களைக்
கவலைக்குள்ளாக்கியது. அச்செய்தி பாதித்த மனிதர்களில் ரஹ்மான் என்பவரும் ஒருவர். அந்த
அணைக்கட்டுப் பகுதியின் ஊழியராக முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் அவர் அப்பகுதியில்
சிறிய விநாயகர் கோயில் ஒன்றைக் கட்ட விருப்பம் கொண்டு அதற்காகக் கடும் முயற்சிகள் மேற்கொண்டு
உழைத்து வருகிறார். சிலை தயாராகி விட்டதாகவும், கோயில் கட்டும் பணி முடிவடையும் தருவாயில்
உள்ளது என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் பத்திரிக்கைச் செய்தி கூறுகிறது. அதற்கு ஆகும்
செலவைக் குறித்துக் கேட்ட போது ரஹ்மான் ”இறைவனின் காரியங்களில் கணக்குப் பார்க்க விரும்பவில்லை”
என்று கூறி விட்டாராம்.
மாற்று மதத்தின் கோயிலைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ரஹ்மான்
ஒரு வித்தியாசமான உதாரண புருஷராகத் திகழும் அதே வேளையில் உத்திரப்பிரதேசத்தின் முசபர்நகர்
அருகே உள்ள நன்ஹெடா கிராமத்தில் இருக்கும் மசூதி ஒன்றை இருபத்தி ஐந்து வருடங்களாக ராம்வீர்
காஷ்யப் என்ற இந்து பராமரித்து வருவதாகவும் அதே பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது.
2013ல் நடந்த மதக்கலவரத்தில் அந்த மசூதியை இடிக்க கலவரவாதிகள் முற்பட்ட போது தடுத்துக்
காத்தவர்களில் அவரும் ஒருவர்.
முஸ்லீம்கள் யாரும் தற்போது அந்தக் கிராமத்தில் இல்லாத போதும்
அதிகாலையில் மசூதியைக் கூட்டிச் சுத்தம் செய்து, மாலையில் மெழுகுவர்த்தி பற்ற வைத்து,
வருடத்திற்கு ஒரு முறை ரம்ஜானுக்கு முன் மசூதிக்கு வெள்ளையடித்து ராம்வீர் காஷ்யப்
தன் சொந்தச் செலவில் பராமரித்து வருகிறார். அந்தக் கிராமத்து வழியாகப் போகும் முஸ்லீம்
வழிப்போக்கர்கள் எப்போதாவது நமாஸ் செய்து விட்டுப் போகிறார்கள்.
“நான் சிறுவயதிலிருந்து பார்த்து வந்த மசூதி அது. வழிபாட்டுத்தலம்
எதுவும் பாழடைந்து இருப்பதில் எனக்குச் சம்மதமில்லை. எல்லா வழிபாட்டுத் தலங்களையும்
மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்கப் பட்டவன் நான். நானே மேஸ்திரியாகவும் இருப்பதால்
சிறிய சிறிய ரிப்பேர் வேலைகளையும் செய்து பராமரிப்பது எனக்கு சுலபமாகிறது” என்று அவர்
கூறுகிறார்.
இவர்கள் இருவரும் இந்தத் தேசத்தின் ஆழமான நல்லிணக்கத்தைப்
பிரதிபலிக்கும் உதாரணங்களாகத் திகழ்கிறார்கள். ஒரு கலவரமானால் அதைப் பல நாட்கள் செய்தியில்
இருத்தும் மீடியாக்கள் இது போன்ற நிகழ்வுகளை அதிகம் கண்டு கொள்ளாமல் இருப்பது வருந்தத்தக்க
விஷயம்.
நல்ல விஷயங்களைப் பேசுபவர்கள் இன்று குறைந்து விட்டார்கள்.
ஊடகங்களோ நல்ல விஷயங்களைத் தொடர்ந்து வெளியிட்டால் காசு பார்க்க முடியாதென்று நினைக்கிறார்கள்.
அதனால் ஒரு குடும்பப்பெண் குழந்தைகளைக் கொன்று விட்டு கள்ளக்காதலனோடு ஓடினால் அது பத்திரிக்கைகளுக்கும்,
தொலைக்காட்சிகளுக்கும் பல நாள் செய்திகளாகத் தொடர்கிறது. மோசமான விஷயங்களை நீட்டி முழக்குபவர்கள்
நல்ல விஷயங்களை ஒரு நாள் ஒரு பத்திச் செய்தியாகக் கடந்து விடுகிறார்கள்.
ஆனால் உண்மையில் பத்திரிக்கைகளில் அதிகம் வராத, தொலைக்காட்சிகளில்
அதிகம் காட்டாத இது போன்ற சம்பவங்களே இந்தத் தேசத்தின் உண்மையான ஆழத்தையும் உயரத்தையும்
காட்டுகின்றன. நம் அடையாளமும் இது தான்.
என்.கணேசன்
Super ganesan.very nice posting.
ReplyDeleteKeep it up.
Very true sir. social medias always spread negative information to everyone feel bad about our self. so many good people doing good things all over the world they don't even bother to bring it to the world. so sad. Think , listen, speak and do always good things . god bless all
ReplyDeleteஇந்த செய்தியையே...நீங்கள் செல்லித் தான் கேள்விபடுகிறேன்..ஐயா...
ReplyDeleteநல்ல விசயங்கள் நாட்டில் எங்குமே நடக்காதது போல...செய்திகளை காட்டும் ஊடகங்களை தவிர்ப்பது நல்லது...
ஊடங்கள் மூலம் செய்தியை தெரிந்து கொள்வதே வீண் தான்