எல்லா வலிமைகளிலும் ஒரு பலவீனம் உள்ளடங்கியே இருக்கிறது என்று
ஜீஜாபாயிடம் தெரிவித்த சிவாஜி சம்பந்தப்பட்டவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்தி குறுகிய
காலத்திற்குள் இரண்டு கோட்டைகளைக் கைப்பற்றினான். ஜீஜாபாய் சொன்ன கொண்டானா கோட்டைத்
தலைவன் பணத்தாசை பிடித்தவன். பீஜாப்பூர் சுல்தான் தரும் ஊதியம் அவனைப் போன்ற வலிமையான
கோட்டைத் தலைவனுக்கு உகந்த ஊதியம் அல்ல என்ற மனக்குறை அவனுக்கு எப்போதும் இருந்து வந்தது.
சிவாஜி பெரும் தொகை ஒன்றைக் கொடுக்க முன்வந்த போது அவனுக்கு மறுக்க முடியவில்லை. தொகையைப்
பெற்றுக் கொண்டு கோட்டையை சிவாஜி வசம் ஒப்படைத்து விட்டு அவன் சந்தோஷமாகத் தலைமறைவானான்.
சிவாஜி கொண்டானா கோட்டைக்கு சிம்மக் கோட்டை என்று பெயரிட்டு அதை மேலும் பலப்படுத்தினான்.
சிவாஜியின்
அடுத்த பார்வை கொண்டானா கோட்டைக்கு அருகில் இருந்த புரந்தரா கோட்டை மீது விழுந்தது.
அந்தக் கோட்டைத் தலைவர் இறந்து சில மாதங்களே ஆகியிருந்தன. கோட்டைத் தலைவருக்கு மூன்று
மகன்கள். மூத்தமகன் தானே தலைவனாகி தம்பிகளுக்கு பங்கு கொடுக்க மறுத்தான். சகோதரர்களிடையே
ஏற்பட்ட சண்டை எந்த விதத்திலும் தீர்வதாக இருக்கவில்லை. சிவாஜி அந்தக் கோட்டையைக் கைப்பற்றி
கோட்டைக்கு வெளியே தள்ளியிருந்த ஒரு நிலப்பரப்பை மூத்த சகோதரனுக்கும், தன் படைப்பிரிவில்
உயர்ந்த பதவிகளை மற்ற இரண்டு சகோதரர்களுக்கும் தந்து திருப்திப்படுத்தினான். கொல்லாமல்
விட்டானே, அத்துடன் எனக்கென்று ஒரு நிலப்பரப்பையும் கொடுத்தானே என்ற திருப்தி அந்த
மூத்த சகோதரனுக்கு. தங்களுக்குக் கிடைக்காதது அண்ணனுக்கும் கிடைக்கவில்லை என்பதுடன்
ஒன்றுமில்லாததற்கு சிவாஜியின் படைப்பிரிவில் நல்ல ஊதியத்தில் கௌரவமான பதவியும் கிடைத்ததே
என்ற திருப்தி இளைய சகோதரர்களுக்கு.
போர்
புரியாமல் இரண்டு முக்கியக் கோட்டைகளைக் கைப்பற்றிய சிவாஜிக்கு இப்போது அந்தப் பிரதேசத்தின்
மீதிருந்த ஆதிக்கம் பலமடங்கு பெருகி விட்டிருந்த போதும் அவன் கஜானா காலியாகியிருந்தது.
கைப்பற்றிய அத்தனை கோட்டைகளையும் பழுது பார்த்து வலிமை கூட்டியதில் டோரணா கோட்டையில்
கிடைத்த புதையல் பெரும்பகுதி செலவாகியிருந்தது. கொண்டானா கோட்டைத் தலைவனுக்குக் கொடுத்து
மீதியும் காலியாகியிருந்தது.
இது
போன்ற நிலைமைகளில் பொதுவாக எல்லோரும் எடுக்கும் முடிவு குடிமக்களிடம் விதிக்கும் வரிகளைக்
கூட்டுவது தான். ஆனால் சிவாஜிக்கு அதற்கு மனம் வரவில்லை. அவன் ஆட்சியில் மக்கள் இப்போது
மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தாதாஜி கொண்டதேவ் சொன்னது போல் அந்த மகிழ்ச்சியே இறைவனின்
ஆசிர்வாதம் என்று அவன் நினைத்தான். ஆனால் நிர்வாகச் செலவுகள் நிறைய இருந்தன. வீரர்கள்,
அதிகாரிகள், ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியம் தக்க சமயத்தில் தரவேண்டும். மற்ற பகுதிகளில்
நடப்பது போல் இது வரை அவன் சரியான சமயத்தில் ஊதியம் தருவதைத் தாமதப்படுத்தியதில்லை.…..
இந்த சமயத்தில் அது நடந்து விடும் போல் இருக்கிறது…..
மனக்கவலையை
அவன் வெளிக்காட்டவில்லை. அவன் தைரியம் அவன் சகாக்களின் தைரியம். அவன் குடும்பத்தின்
தைரியம். அவன் மக்களின் தைரியம். அவன் தைரியம் இழந்தால் அத்தனை பேரும் அதை இழப்பார்கள்.
அவன் அதை விரும்பவில்லை. டோரணா கோட்டைப் புதையலில் கிடைத்த பவானி சிலையைத் தன் பூஜையறையில்
வைத்திருந்தான். அதன் முன் அமர்ந்து அவன் பிரார்த்தித்தான். “தாயே வழிகாட்டு……!”
நீண்ட
நேரம் அவன் பிரார்த்தித்து விட்டு வெளியே வந்த போது ஒற்றன் ஒருவன் அங்கே வந்து சேர்ந்தான்.
சிவாஜியை வணங்கி விட்டுச் சொன்னான். “நான்கு நாட்களில் கல்யாணில் இருந்து ஒரு சிறுபடை வரிவசூலை
பீஜாப்பூருக்குக் கொண்டு செல்கிறது”
தானேக்கு
அருகில் இருந்த கல்யாண் பிரதேசம் பீஜாப்பூரின் அதிகாரத்திற்கு உட்பட்டிருந்தது. அது
செல்வச்செழிப்பு மிக்க பகுதியாக இருந்ததால் அங்கு வரிவசூல் தொகை பெருந்தொகையாகவே இருக்கும்.
வழிகாட்டச் சொல்லி பவானி தேவியை வணங்கி விட்டு வெளியே வரும் நேரத்தில் இந்தச் செய்தி
கிடைத்தது தெய்வம் காட்டிய வழியாகவே தெரிந்தது.
உடனடியாக
சிவாஜி தன் ஒற்றர்களை வரவழைத்துச் சொன்னான். “கல்யாணில் இருந்து பீஜாப்பூருக்கு வரிவசூல்
தொகை கொண்டு செல்லப்படுவது இது முதல் தடவையல்ல. வருடா வருடம் நடக்கும் நிகழ்வு. அவர்கள்
செல்லும் வழி எது, கொண்டு செல்லும் வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு, அவர்கள் கொண்டு செல்லும்
ஆயுதங்கள் என்னென்ன, எவ்வளவு என்பது எனக்குத் தெரிய வேண்டும். மனிதர்கள் பழக்கத்தின்
அடிமைகள். பிரச்சினை இல்லாமல் ஒரு விஷயம் நடந்து விட்டால் பின் எப்போதும் அந்த வழக்கத்தையே
எப்போதும் பின்பற்றுவார்கள். அதனால் அவர்கள் செல்லும் பாதையில் வசிப்பவர்களிடம் ரகசியமாக
விசாரித்து அந்தத் தகவல்களை எனக்கு 24 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.”
அவர்கள்
சென்றுவிட அவன் சிந்தனையில் ஆழ்ந்தான். இது நாள் வரை நேரடியாக அவன் பீஜாப்பூர் சுல்தானோடு
மோதவில்லை. கூடுமான வரை ஆதில்ஷாவை அவன் குழப்பத்திலேயே வைத்திருந்தான். அவர் மூர்பாத்தில்
அவன் கட்டிக் கொண்டிருந்த கோட்டைகளை நிறுத்தச் சொன்ன போது நிறுத்தி விடவில்லை. ஆனால்
அந்தக் கோட்டைகள் பீஜாப்பூர் அரசின் வலிமையை கூட்ட அவன் ஆசைப்பட்டுக் கட்டுவது என்றும்
அந்த வாய்ப்பை அவன் இழக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்து பதில் கடிதத்தைச் சற்றுத்
தாமதமாக அனுப்பி வைத்தான். அத்துடன் டோரணா
கோட்டை வரிவசூலின் ஒரு பகுதியையும் கணக்கோடு சேர்த்து அனுப்பி வைத்தான்.
சொன்னபடி
டோரணாக்கோட்டை வரிவசூல் தொகையை சிவாஜி அனுப்பி வைத்ததால் மூர்பாத்தில் கோட்டைகள் கட்டுவது
பீஜாப்பூர் அரசின் வலிமையைக்கூட்ட என்று சிவாஜி தெரிவித்ததை ஆதில்ஷாவுக்கு முற்றிலும்
பொய் என்று எண்ண முடியவில்லை. அதே நேரம் முற்றிலும் உண்மை என்றும் நினைக்க விடாமல்
அறிவு தடுத்தது. கர்னாடகத்தில் பல பகுதிகளை வென்று பீஜாப்பூர் அரசை தெற்கில் ஷாஹாஜி
வலிமைப்படுத்தி வருவதால் அனாவசியமாக ஏதாவது நடவடிக்கை எடுத்து ஷாஜாஜியின் அதிருப்தியைச்
சம்பாதிக்கவும் ஆதில்ஷா விரும்பவில்லை. சிவாஜியைப் பற்றி இப்போது இரண்டுங்கெட்டான் அபிப்பிராயங்களே ஆதில்ஷா வைத்திருந்தார்.
அதை சிவாஜி யூகித்தே வைத்திருந்தான். சிறிது காலம் முன் அவன் கொண்டானா கோட்டையைக் கைப்பற்றியதும்
இப்போது ஒற்றர்கள் மூலமாக ஆதில்ஷா காதுகளுக்கு எட்டியிருக்கும். அதில் கூட ஆதில்ஷா
உடனடி நடவடிக்கை எடுக்காதபடி குழப்பங்கள் நிறைந்த கடிதம் ஒன்றை அனுப்பி சிவாஜியால்
பார்த்துக் கொள்ள முடியும். ஆனால் சம்பந்தமேயில்லாத கல்யாண் பகுதியின் வரிவசூலை சிவாஜி
கைப்பற்றுவதற்கு எந்தக் காரணமும் அவனால் சொல்ல முடியாது. சொன்னால் அது எடுபடவும் செய்யாது.
இது கிட்டத்தட்ட நேரடிப் போர் பிரகடனம் தான். ஆதில்ஷாவுக்கு குழப்பம் நீங்கி அவன் நோக்கம்
என்னவென்று தெள்ளத் தெளிவாகப் புரிந்தே தீரும்…..
அந்தப்
பிராந்தியத்தின் வலிமையை சிவாஜி பெருமளவு பெருக்கியிருந்தாலும் பீஜாப்பூர் சுல்தானையே
நேரடியாக எதிர்க்கும் அளவுக்கு அவன் வலிமை பெற்றுவிடவில்லை. ஆனால் வலிமை வெறும் படைபலத்திலும்,
பணபலத்திலும் மட்டும் இல்லை. எல்லா வலிமைகளின் எல்லைகளையும் நிர்ணயிப்பது மனோவலிமையும்
அறிவுக்கூர்மையும் தான். அந்த இரண்டையும் வியக்கத்தக்க அளவிலேயே சிவாஜி பெற்றிருந்தான்.
தெய்வம் வழிகாட்டிய பின்னும் மனிதன் அந்த வழியே விரைந்து செல்லத் தயங்கினால் அவன் தெய்வத்தையே
சந்தேகப்படுகிறான் என்று அர்த்தம். சிவாஜி தெய்வத்தைச் சந்தேகிக்கவில்லை….
உடனே
தன் நெருங்கிய நண்பர்களையும் முக்கியப் படைத்தலைவர்களையும் கூட்டி சிவாஜி தங்களது தற்போதைய
நிதி நிலவரத்தையும், கல்யாண் வரிவசூல் தொகை நான்கு நாட்களில் பீஜாப்பூர் கொண்டு செல்லப்பட
இருப்பதையும் தெரிவித்து விட்டுச் சொன்னான். “கல்யாண் வரிவசூலைக் கைப்பற்றுவது நேர்த்தியாகத்
திட்டமிட்டு, வேகமாகச் செயல்பட்டால் முடியாத காரியமல்ல. அந்தச் செல்வம் கிடைத்தால்
நம் நிதிப்பிரச்சினை உடனடியாகத் தீரும். ஆனால் பீஜாப்பூர் சுல்தானை நேரடியாக எதிர்க்க
வேண்டிவரும். படைவலிமையைப் பொருத்தவரை நாம் எந்த விதத்திலும் பீஜாப்பூர் படைக்கு இணையல்ல
என்பதையும் மறுக்க முடியாது. கல்யாண் நிதியைக் கைப்பற்றா விட்டால் பீஜாப்பூர் சுல்தானிடமிருந்து
உடனடிப் பிரச்சினை எதுவுமிருக்காது. ஆனால் நம் நிதிநிலைமை தேறாது. நிதிப்பிரச்சினை
எப்போதுமே தனியாக நின்று விடுவதில்லை. அது கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பிரச்சினைகளையும்
உண்டாக்கும். யோசித்துச் சொல்லுங்கள் என்ன செய்வது?”
சிறிது
நேரம் அங்கே பேரமைதி நிலவியது. இரண்டு நெருக்கடிகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்விக்கு
எளிதாக அவர்களால் விடை சொல்ல முடியவில்லை. ஒன்றைச் சொல்ல முற்படுகையில் மற்றதன் விளைவு
அவர்களைப் பயமுறுத்தியது….
(தொடரும்)
என்.கணேசன்
Interesting
ReplyDeleteஒரே விதமாக செயல்படாமல் விதவிதமாய் யோசித்து செயல்படும் சிவாஜி உண்மையில் க்ரேட் தான்.
ReplyDeleteசிவாஜியின் யோசனையும்...செயலும்... புதுமையாகவும்...ஆச்சரியமாகவும் உள்ளது...
ReplyDeleteசிவாஜியின் தெய்நம்பிக்கை..அருமை