Monday, July 30, 2018

சத்ரபதி – 31


பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவுக்கு உடனடியாக அந்தச் செய்தியை நம்ப முடியவில்லை. கோட்டை ஒன்றைக் கட்டுவதற்கு அரசர்களே திணறும் போது சிவாஜியால் எப்படி முடியும் என்ற யோசனையே மேலிட்டது.

“அந்த அளவுக்குச் செல்வம் சிவாஜியிடம் இருக்கிறதா என்ன?” என்று ஒற்றனைக் கேட்டார்.

“அவனுக்கு டோரணா கோட்டையில் புதையல் ஒன்று கிடைத்திருக்கிறது அரசே! அந்தப் புதையலை வைத்துத் தான் சிவாஜி டோரணா கோட்டையை புதுப்பித்திருக்கிறான், ஆயுதங்கள் பல வாங்கியிருக்கிறான், மூர்பாத்தில் புதிதாய் கோட்டை கட்ட ஆரம்பித்திருக்கிறான்…..”

“டோரணா கோட்டையில் புதையல் கிடைத்தால் அது எனக்கல்லவா சொந்தம். அதை இங்கே அனுப்பி வைப்பதை விட்டு அவன் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ள எப்படி துணிந்தான். அங்குள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள்?”

”அங்குள்ள மக்கள் அவனை இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அரசே. அந்தப் புதையலோடு பவானிதேவி சிலையும் சேர்ந்து கிடைத்திருக்கிறது. அது அந்த தெய்வத்தின் ஆசிர்வாதம் என்று அவன் பார்க்கக் கிடைக்கும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கிறான். அதை மக்கள் நம்புகிறார்கள்….”

ஆதில்ஷா யோசித்தார். டோரணா கோட்டையில் புதையல் இருப்பதை அறிந்தே அவன் கைப்பற்றியிருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. சிவாஜி கட்ட ஆரம்பித்திருக்கும் கோட்டையின் அமைப்பு பற்றி ஒற்றனிடம் கேட்டார். அவன் சொல்லிய தகவல்கள் அவருக்குக் கவலையையும் ஆத்திரத்தையும் அளித்தன.

நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலரை அழைத்து ஆதில்ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இரண்டு பிரிவாய் பிரிந்து அவரை மேலும் குழப்பினார்கள். சிலர் ஷாஹாஜியும் சிவாஜியும் சேர்ந்து நடத்தும் நாடகம் இது என்றார்கள். அவர்கள் முன்பே ஷாஹாஜியும், சிவாஜியும் சுல்தானிடம் பெற்றிருந்த நன்மதிப்பை வெறுத்தவர்கள். சிலர் சிவாஜியின் இளமையையும், சுறுசுறுப்பையுமே காரணமாய் சொன்னார்கள். அவன் சூட்டிப்பானவன், ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவன். அதனால் உற்சாகமாக இதில் இறங்கியிருக்கிறான் என்றும் ஷாஹாஜிக்கு இதில் பங்கிருக்க வாய்ப்பில்லை என்றும் சொன்னார்கள். அவர்கள் ஷாஹாஜியுடன் நட்பு பாராட்டியவர்கள்.

ஒரு சிறுவன் எல்லை மீறி நடந்து கொள்கிறான், கண்டித்து வைத்தால் சரியாகி விடும், ஷாஹாஜியிடம் கண்டித்து வைக்கச் சொன்னால் சரியாகி விடும் அல்லது பயமுறுத்தி வைத்தால் அடங்குவான் என்ற அளவிலேயே அனைவரும் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் ஆதில்ஷாவுக்கு சிவாஜியை சாதாரணச் சிறுவனாய் அலட்சியப்படுத்தி விட முடியவில்லை. துடிப்பும், அறிவுகூர்மையும், சமயோசிதமும் கொண்டவனாக சிவாஜி இருந்தது எச்சரிக்கையின் அவசியத்தை அவருக்கு வலியுறுத்தியது. அதே நேரத்தில்  பீஜாப்பூர் அரசுக்கே சவால் விடுகிறவனாய் சிவாஜியை உயர்த்திப் பிடிப்பதும் அவருக்கு முட்டாள்தனமாகப் பட்டது. அதனால் நீண்ட ஆலோசனையின் முடிவில் ஆதில்ஷா மூர்பாத்தில் கோட்டை கட்டும் பணியை உடனே நிறுத்தும்படி சிவாஜிக்கு ஆணை பிறப்பித்து ஒரு மடலும், நடந்தவற்றுக்கு  விளக்கங்கள் கேட்டு ஷாஹாஜிக்கு ஒரு மடலும் அனுப்பினார்.


ஷாஹாஜிக்கு தாதாஜி கொண்டதேவின் மடலும், ஆதில்ஷாவின் மடலும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தன. தாதாஜி கொண்டதேவின் மடலில் சிவாஜியின் நடவடிக்கைகள் பற்றி விரிவாகவே தகவல்கள் இருந்தன. ஷாஹாஜி அந்த மடலைப் பல முறை படித்தார். இந்த முறை தாதாஜியின் மடலில் தனிப்பட்ட மனவருத்தங்கள் தெரியவில்லை. தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்கும் மனப்பாங்கே தெரிந்தது.

முன்பே டோரணா கோட்டையை மகன் கைப்பற்றிய விதம் ஷாஹாஜியைத் திகைக்க வைத்திருந்தது.  அவருக்குத் தெரிந்து இது வரை எந்தக் கோட்டையும் இப்படி சாமர்த்தியமாகக் கைப்பற்றப்பட்டதில்லை. இப்போது அவனுக்குப் புதையலும் கிடைத்து மூர்பாத்தில் வலிமையான ஒரு கோட்டையும் கட்டிக் கொண்டிருக்கும் தகவலைப் படிக்கையில் அவர் மனதில் பெருமிதமே தங்கியது. மகன் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகிறான் என்று தெரிந்தாலும் கூட, அவனுக்கு உதவ முடியாத நிலையில் அவர் இருந்தாலும் கூட, அவன் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தை அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவன் இறைவன் ஒருவனை நம்பியே இதில் இறங்குவதாய் முன்பு தெரிவித்திருந்தான். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை என்பதை அவர் இப்போது கண்கூடாகப் பார்க்கிறார்…..

அடுத்ததாக ஆதில்ஷாவின் மடலைப் படித்தார். ஆதில்ஷாவின் மடலில் அவர்களுக்கிடையே இருந்த நட்பின் தொனி சுத்தமாகத் தெரியவில்லை. அரசன் பிரஜையிடம் விளக்கம் கேட்கும் கண்டிப்பான தொனியே இருந்தது. அவர் ஆதில்ஷாவுக்குப் பதில் எழுதினார்.

“சர்வ வல்லமையும் பொருந்திய சுல்தான் அவர்களுக்கு தங்களின் ஊழியனான ஷாஹாஜி தலைவணங்கி எழுதிக் கொண்டது.
மூர்பாத் மலையில் கட்டப்பட்டு வரும் கோட்டை குறித்து தாங்கள் கேட்டெழுதியதைப் படிக்கும் வரை நான் அதுபற்றி ஒன்றும் அறியேன். இது குறித்து சிவாஜி என்னிடம் விவாதிக்கவோ, அனுமதி பெறவோ இல்லை. இயல்பிலேயே புதிய முயற்சிகளில் துடிப்பாகவும் வேகமாகவும் இறங்கக்கூடிய அவன் சகாயாத்ரி மலைப்பகுதியில் நம் அரசிற்கு சொல்லிக் கொள்ளும்படியான வலிமையான கோட்டைகள் இல்லை என்பதற்காக இந்தப் புதிய கோட்டையை அமைக்கத் தீர்மானித்தானா என்பதை நான் அறியேன். நோக்கம் எதுவாக இருப்பினும் தங்களின் அனுமதி பெறாமல் அவன் இந்த முயற்சியில் இறங்குவதை நான் பெரும் குற்றமாகவே கருதுகிறேன்.

அவனுக்குப் புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்தும்படி நான் தாதாஜி கொண்டதேவ் அவர்களைக் கேட்டுக் கொண்டு இப்போதே கடிதம் அனுப்புகிறேன். கோட்டை நிர்மாணப்பணியையும் உடனே நிறுத்தி வைக்கும்படி சிவாஜிக்கு ஆணையிட்டும் இப்போதே மடல் அனுப்புகிறேன்.

தங்கள் விருப்பமே என் விருப்பம், தங்கள் நலனே என் நலன் என்று முன்பும், இன்றும், என்றும் வாழும்

தங்கள் ஊழியன்
ஷாஹாஜி

ஆதில்ஷாவுக்கு எழுதியபடியே தாதாஜி கொண்டதேவுக்கும், சிவாஜிக்கும் கடிதங்கள் எழுதி அனுப்பிய ஷாஹாஜி இந்த விஷயத்திலிருந்து மானசீகமாக விலகிக் கொண்டார்.  எந்த இறைவனை நம்பி அவர் மகன் இந்த வேலையில் இறங்கியிருக்கிறானோ அந்த இறைவன் அவர் மகனைக் கடைசி வரை காத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையைத் தவிர சிவாஜிக்காக அவர் எதுவும் செய்வதாக இல்லை….


ந்தை அனுப்பிய மடலையும், சுல்தான் அனுப்பிய மடலையும் கர்மசிரத்தையுடன் படித்து விட்டு  அவற்றை சிவாஜி எடுத்து வைத்துக் கொண்டான். தாதாஜி கொண்டதேவ் தனக்கு ஷாஹாஜி அனுப்பிய மடலை சிவாஜிக்குப் படித்துக் காட்டினார். அதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். தாதாஜி அவன் இறங்கியிருக்கும் செயலில் காத்திருக்கும் ஆபத்துகளை அவனுக்குச் சொன்னார். அதையும் சிவாஜி முகம் சுளிக்காமல் கவனமாகக் கேட்டுக் கொண்டான். பின் நீண்டதொரு மௌனம் அவர்களுக்குள் நிலவியது.

தாதாஜி கொண்டதேவ் களைப்புடன் கண்களை மூடிக் கொண்டார். தாதாஜி சில நாட்களாகவே உடல்நிலையில் பலவீனமாகிக் கொண்டு வருவதை சிவாஜி கவனித்து வருகிறான். மனிதர் சீக்கிரமே களைத்துப் போகிறார். ஒரு காலத்தில் இருந்த சக்தியும் சுறுசுறுப்பும் அவரிடம் இப்போதெல்லாம் இல்லை. நிர்வாகத்தில் அவருக்கு உதவி செய்ய சில காலம் முன்பே சிலரை ஷாஹாஜி அனுப்பி இருந்தார். அவர்களில் ஒருவர் ஷாஹாஜியின் இரண்டாம் மனைவியின் சகோதரரான பாஜி மொஹிடே. அவருக்கு சுபா பிராந்திய நிர்வாகப் பொறுப்பினையும், மற்றவர்களுக்கு மற்ற பகுதிகளின் நிர்வாகப் பொறுப்பினையும் தந்து தாதாஜி அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டும் அவர்களிடம் இருந்து கணக்குகளையும், வசூல்தொகைகளையும் பெற்று நிர்வகித்து வந்தார். இப்படி இத்தனை பேர் அவருக்கு நிர்வாக உதவிக்கு இருந்தாலும் அத்தனை பேர் கணக்கையும், நடவடிக்கைகளையும் கவனித்து வருவது இந்த வயோதிகத்தில் அவருக்குச் சுலபமாக இல்லை.

அவருக்குச் சமர்ப்பிக்கப்படும் கணக்குகளை அன்றன்றே சரிபார்க்காமல் அவர் இரவில் உறங்கப் போன நாள் ஒன்று இருந்ததேயில்லை. இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் தனிமையில் அமர்ந்து அத்தனை கணக்கையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியரிடம் சிவாஜி “உறங்கச் செல்லுங்கள் ஆசிரியரே. கணக்கை நாளை பார்த்துக் கொள்ளலாம்….” என்று சொல்வதுண்டு.

”நாளை அதற்கான வேலையை எடுத்துக் கொண்டே வருகிறது சிவாஜி. இன்றைய வேலையை நாளை வைத்துக் கொள்வதில் இரண்டு நாள் வேலையும் பாழாகி விடும்….” என்று தாதாஜி சொல்வார்.

என்ன சொன்னாலும் வேலை முடியாமல் உறங்கப் போக மாட்டார் என்பதை உறுதியாக அறிந்ததால் சிவாஜி இரவு வேளைகளில் தானும் அவருக்கு உதவச் சேர்ந்து கொள்வதுண்டு. கணக்கு எழுதும் போது சிறு பிழை ஏற்பட்டாலும் உடனடியாக அவர் சுட்டிக் காட்டுவார். பெரிய எண்களின் கூட்டல் கழித்தல்களில் அவன் எழுத எழுத அவர் முடிவுத் தொகையைக் கூறுவதுண்டு. இந்த வயோதிகத்திலும் உடலின் சோர்வை அவர் மூளை அடைந்து விடவில்லை என்று சிவாஜி வியப்பான்.


எல்லா வேலைகளும் முடித்து விட்டு பெரும் களைப்பால் உறங்கப் போகும் அவர் மறுநாள் அதிகாலை எழவும் அவர் சிரமப்பட்டார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக ஆரம்பித்தது. சிவாஜி அவர் அந்திம காலத்தை நெருங்க ஆரம்பத்ததை வருத்தத்துடன் உணர்ந்தான்….

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, July 26, 2018

இருவேறு உலகம் - 93

தாசிவ நம்பூதிரியின் அதிர்ச்சியை மாஸ்டரால் புரிந்து கொள்ள முடிந்தது. அவர் புன்னகையுடன் சொன்னார். “அவன் எங்க ஜாதகங்களை உங்க கிட்ட கொண்டு வந்து காமிச்சது எங்களோட பலவீனங்களையும், மோசமான நேரங்களையும் சரியா தெரிஞ்சுகிட்டு அதைப் பயன்படுத்திக்கத் தானே ஒழிய எங்களுக்கு எந்த விதத்திலும் உதவற நோக்கம் அவனுக்கில்லை.”

சதாசிவ நம்பூதிரிக்கு நிதானத்திற்கு வர நிறைய நேரம் பிடித்தது. ஒரு குரு தந்த ஜாதங்கள், அந்த இருவரும் யார் என்றே தெரியாது, அவர்கள் மேல் உள்ள அக்கறையால் கேட்கின்றேன் என்று சொன்னதெல்லாம் கட்டுக் கதை!.... அப்படியானால்….. அப்படியானால்…… முந்தின இரவு வந்து வெளியே இருட்டில் கண்காணித்தபடி நின்றிருந்தவன் தான் மறு நாள் காலை மிக நல்லவனாக நடித்து உள்ளே வந்தவன்….. அவருக்கு அதை ஜீரணிக்கவே கஷ்டமாக இருந்தது.

“அவன்…. அவன்….. நீங்களும் அந்தப் பையனும் எதிரிகளானா யார் ஜெய்ப்பாங்கன்னு கேட்டான்…… அப்படியானா ரெண்டு பேரும் அழிஞ்சுடுவீங்கன்னு சொன்னேன். நீங்க ரெண்டு பேரும் எதிரியாயிடலயே…”

“கிட்டத்தட்ட ஆயிருப்போம்….. ஆனா அந்தப் பையன் அதுக்கு இடம் தரலை…. என் சிஷ்யனா மாறிட்டான்….. அதுக்கப்பறம் எங்கே எதிரியாகறது?”

சதாசிவ நம்பூதிரி சந்தோஷப்பட்டார். “எல்லாம் தெய்வ சித்தம்….. அவன் ஏன் உங்க ரெண்டு பேரையும் எதிரியாய் நினைக்கிறான்?”

”நீங்க சொன்ன மாதிரி அவன் எமனோட ஏஜண்ட் தான். நாங்க அவன் பாதைல குறுக்கிடுவோம்னு நினைக்கிறானோ என்னவோ. எங்களுக்கு அவன் உத்தேசம் தெளிவாய் தெரியலை. ஆள் யாருன்னும் தெரியலை…. உங்க மூலமாகவும் பேசிகிட்டது தெரிய வந்ததே ஒழிய அவன் உருவம் எனக்குத் தெளிவாய் தெரியலை…. நீங்க அவன் தோற்றத்தை  முடிந்த அளவு விவரியுங்களேன்…..”

அவர் விவரித்தார். மாஸ்டர் மிகக் கவனமாகக் கேட்டுக் கொண்டார். மிகத் துடிப்பானவன், அறிவாளி, நிதானம் தவறாதவன் என்பது தெளிவாகத் தெரிந்ததே ஒழிய மற்றதை எதிரியின் வேடத்திலிருந்து அவரால் யூகிக்க முடியவில்லை. ஆள் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் சில குழப்பங்கள் இங்கே தீர்ந்து போனதாக மாஸ்டர் உணர்ந்தார். அனந்த பத்மநாப சுவாமியைத் தரிசித்தால் வழி பிறக்கும் என்று குரு சொல்வதாகத் தோன்றி இங்கு வந்தது வீண் போகவில்லை. கோயிலுக்கு உள்ளேயே இந்த நல்ல மனிதரைச் சந்தித்து சில உண்மைகளையும் தெரிந்து கொண்டாயிற்று. மாஸ்டர் பகவானுக்கும் குருவுக்கும் மானசீகமாய் நன்றி சொன்னார்.

சதாசிவ நம்பூதிரியும் சொன்னார். “நான் இதே ஊர்னாலும் இந்தக் கோயிலுக்கு அதிகம் வர்றதில்லை….. காரணம் வீடு ரொம்ப தூரம். எனக்கு முழங்கால் முட்டியும் ரொம்ப வலி. அதனால பக்கத்துல இருக்கற ரெண்டு கோயிலுக்குப் போவேன் அவ்வளவு தான்….. ஆனால் இன்னைக்கு என்னவோ இங்கே வரத் தோணல். இதே ஊர்ல இருந்துட்டே வந்து பார்க்க மாட்டேன்கறியேன்னு அனந்த பத்மநாப சுவாமி கேட்கிறதாய் தோணுச்சு. அதனால தான் வந்தேன். உங்களைப் பார்த்துப் பேச முடிஞ்சதுல சந்தோஷம்…… பகவான்  நல்லவங்களுக்குத் துணையிருப்பான்……”

“ஆனா இப்ப எங்களுக்கு நேரம் சரியில்லைன்னு ஜாதகத்துல நீங்களே பார்த்தீங்களே ஐயா…” உண்மையும், வேடிக்கையும் கலந்து மாஸ்டர் கேட்டார்.

“ஒரு நாளுன்னா காலை, மதியம், சாயங்காலம், ராத்திரின்னு இருக்கறா மாதிரி மனிதர்கள் வாழ்க்கைலயும் கஷ்ட காலம், நல்ல காலம், கண்டம், க்‌ஷேமம்னு எல்லாம் கலந்து தான் இருக்கும். ஒன்னு போய் இன்னொன்னு வரும். அது தான் யதார்த்தம்….. அதை ஞாபகம் வச்சுக்கணும். நல்லதுல அகங்காரப்படவும், கெட்டதுல துவண்டு போகவும் கூடாது. கொடுக்கறதும் பகவான். எடுக்கறதும் பகவான். அவன் சித்தம் என்னவோ அது தான் நடக்கும்……” என்று சொன்னபடி சதாசிவ நம்பூதிரி எழுந்தார்.

ஒரு மிக நல்ல மனிதரைப் பார்த்த மகிழ்ச்சியுடனும், சில குழப்பம் தெளிந்து, சில உண்மைகள் விளங்கக் காரணமாய் இவர் இருந்திருக்கிறார் என்ற நன்றியுணர்வுடனும் அங்கேயே சாஷ்டாங்கமாய் விழுந்து சதாசிவ நம்பூதிரியை மாஸ்டர் வணங்கினார்.

சதாசிவ நம்பூதிரி சுவாமி சன்னிதியை நோக்கிக் கைகூப்பி கண் மூடி “கடவுள் அருளால நல்லதே நடக்கும். அந்தப் பையனுக்கும் என்னோட ஆசிர்வாதத்தைச் சொல்லுங்கோ….” என்று மானசீகமாய் ஆசி வழங்கினார்.

எழுந்த மாஸ்டர் “நன்றி ஐயா உங்க ஆசிர்வாதத்துக்கும், நல்ல மனசுக்கும்” என்றார். இந்த நல்ல மனிதருக்கு என்ன கைம்மாறு செய்வதென்று அவருக்குத் தெரியவில்லை. அவர் சற்று முன் முழங்கால் முட்டி வலி என்று சொன்னதும், அங்கு வந்த போது அந்த முழங்கால்களைத் தடவிக் கொண்டே அமர்ந்ததும் நினைவுக்கு வந்தது. கண்களை மூடித் தன் சக்திகளைக் குவித்த மாஸ்டர் தீட்சண்யத்துடன் சதாசிவ நம்பூதிரியின் முழங்கால் முட்டிகளைப் பார்த்தார். பின் தன் இரு கைகளாலும் அவருடைய இரு கால் முட்டிகளையும் தொட்டார். இரு முட்டிகளிலும் மின்சாரம் பாய்வது போல் உணர்ந்த சதாசிவ நம்பூதிரி ஒரு கணம் நேராக நிற்க முடியாமல் தடுமாறினார். அவரை விழாமல் பிடித்துக் கொண்ட மாஸ்டர் பேரன்புடன் சொன்னார். “ஐயா இனி நீங்க எப்பவுமே அந்த முழங்கால் முட்டி வலியால அவதிப்பட மாட்டீங்க”

மாஸ்டர் புன்னகைத்துத் தலையாட்டிப் போய் விட்டார். சதாசிவ நம்பூதிரிக்கு சில வினாடிகள் ஒன்றுமே புரியவில்லை. முழங்கால்களைத் தொட்டுப் பார்த்தார். இப்போது வலி தெரியவில்லை. அவருக்கு நம்ப முடியவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டு எழுந்தார். எப்போதுமே அப்படி எழும் போது உயிர் போகும் வலியை ஒருசில வினாடிகளாவது அவர் உணர்வார். ஆனால் இப்போது எழும் போதும் அந்த வலியில்லை. பிரமிப்புடன் பார்த்தார். இப்போது தூரத்தில் மாஸ்டர் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. கண்கள் ஈரமாக அங்கிருந்தே சதாசிவ நம்பூதிரி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்…. பின் எழவும் சிரமம் இல்லை. நடக்கையிலும் வலி இல்லை…… கண்களில் பெருக ஆரம்பித்த நீரை அந்த முதியவரால் கட்டுப்படுத்த முடியவில்லை……


ர்ம மனிதனுக்கு சற்று முன் கிடைத்த தகவல் அலட்சியப் படுத்த முடிந்ததாய் இல்லை. “உங்களை இமயமலைப் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி விசாரித்துக் கொண்டிருக்கிறார்.” அவன் செல்போனில் வந்த குறுந்தகவலைப் படித்தவுடனேயே அந்தப் போலீஸ் அதிகாரி யார் என்பதை அவனால் ஊகிக்க முடிந்தது. மனோகர் மூலமாக சென்னையில் விசாரித்த போது செந்தில்நாதன் வட இந்தியாவுக்கு யாத்திரை போயிருப்பதாகச் சொல்லவே சந்தேகம் உறுதிப்படுத்தப்பட்டது. மர்ம மனிதன் மேலும் இரண்டு மனிதர்களுக்குப் போன் செய்து பேசினான். சரியாக ஒன்றரை மணி நேரத்தில் செந்தில்நாதன் மவுண்ட் அபுவில் சதானந்த கிரியைச் சந்தித்ததும், தார்ப் பாலைவனத்தில் பக்கிரியைச் சந்தித்ததும், இமயமலையில் போதை சாதுவைச் சந்தித்ததும் தெரிய வந்தது. இந்த விசாரணைக்கு க்ரிஷ் தான் காரணம் என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. அமானுஷ்ய சக்திகள் எதுவும் இல்லாமலேயே தன் அறிவாலேயே எங்கே எப்படித் தேட வேண்டும் என்று அனுமானித்து இயங்கிய  க்ரிஷுக்கு மர்ம மனிதன் சபாஷ் போட்டான். ஆனால் இந்த விசாரணை வழியில் யாரும் அவனை நெருங்கி விட முடியாது என்பது நிச்சயம். வேலை முடிந்த இடங்களில் அவன் என்றுமே ஒட்டு மொத்தமாக விலகியே வந்திருக்கிறான். எந்த விதத்திலும் சம்பந்தப்பட்ட நபர்களுடன் அவன் தொடர்பில் இருக்கவில்லை. அதனால் இந்த வழியில் அவன் என்ன சக்திகளை எல்லாம் பெற்றிருக்கிறான் என்பது வேண்டுமானால் க்ரிஷுக்குத் தெரிய வரலாமே ஒழிய மற்றபடி அவனை நெருங்க முடியாது. அமானுஷ்ய சக்திகளைப் பெற்றிருக்கும் மாஸ்டருக்கே அவனை நெருங்க முடியாத நிலை இருக்கையில் க்ரிஷ் எந்த மூலை….. ஆனாலும் க்ரிஷ் இந்த அளவு அறிந்து கொள்வதே அவனுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு எண்ணுக்குப் போன் செய்து செந்தில்நாதனை கண்காணிக்கச் சொல்லி விட்டு இந்த மூன்று இடங்களில் அவனைப் பற்றி அவர்கள் என்னவெல்லாம் சொல்லி இருக்கக் கூடும் என்று மர்ம மனிதன் தீவிரமாக யோசித்தான். ஒவ்வொரு இடத்திலும் நடந்த ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் முழுவதுமாக அவன் நினைவில் இருந்தது. அதை எல்லாம் நினைவுபடுத்திப் பார்த்தான். போதை சாதுவிடம் இருந்ததை நினைவுபடுத்திப் பார்க்கையில் ஸ்டீபன் தாம்சன் நினைவுக்கு வந்தார். அந்தப் போதை சாதுவுக்கு ஸ்டீபன் தாம்சன் என்ற பெயர் நினைவில் இருக்க வாய்ப்பேயில்லை……. ஆனால் அவன் அவர் எழுதிய புத்தகத்தை அங்கு இருக்கையில் படித்து முடித்து அதை அங்கேயே விட்டு விட்டு வந்திருப்பது நினைவுக்கு வந்தது. படித்து முடித்த எந்தப் புத்தகத்தையும் அவன் தன்னுடன் வைத்துக் கொள்வதில்லை. எனவே அதை அங்கேயே விட்டு விட்டு வந்திருக்கிறான்……. அந்தப் புத்தகம் மூலமாக ஸ்டீபன் தாம்சனை அவன் தொடர்பு கொண்டதையும் அவர்கள் கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது என்பதை அவன் உணர்ந்த போது சுருக்கென்றது.

மர்ம மனிதன் உஷாரானான்.

(தொடரும்)
என்.கணேசன்


Monday, July 23, 2018

சத்ரபதி – 30



டவுளை நம்புகிறவர்களிலேயே உலகில் இரண்டு வகை உண்டு. முதல் வகை மனிதர்கள் கடவுளிடம் ஒன்றை வேண்டி, அது கிடைக்கும் என்று நம்பிக் காத்திருந்து, அது கிடைத்தவுடன், அதைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் இலக்கை நோக்கிப் பயணிப்பார்கள். இரண்டாவது வகை கடவுளிடம் ஒன்றை வேண்டி, அது கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனேயே இலக்கை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்து விடுவார்கள். நீ கொடுத்தால் நான் செய்வேன் என்ற பேரம் இங்கில்லை. நீ கொடுப்பாய் என்று தெரியும், அதனால் நான் செய்ய ஆரம்பித்து விட்டேன் என்ற பூரண நம்பிக்கை நிலையுள்ள இந்த இரண்டாம் வகை மிக அபூர்வம். சிவாஜி இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவன்.  

டோரணா கோட்டையின் பழுது பார்க்கும் வேலையை அவன் ஆரம்பித்த போது ஜீஜாபாய், தாதாஜி கொண்டதேவ் இருவருமே அவன் கண்மூடித்தனமாய் இதில் இறங்கி விட்டானோ என்று சந்தேகப்பட்டார்கள். ஜீஜாபாய் அவன் நம்பிக்கைகளுக்கு எதிராக என்றுமே எதையுமே சொன்னதில்லை. இறைவன் கண்டிப்பாக வழிகாட்டுவான் தாயே என்று சொன்ன போது எதிராக எதையும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டாள். ஆனால் தாதாஜி கொண்டதேவ் கடவுளின் பெயரால் கூட ஒருவன் வாழ்வின் யதார்த்தங்களிலிருந்து விலக அனுமதிக்க அனுமதிக்காதவர். அதனால் “இறைவன் வழிகாட்டுவான்” என்ற வாசகத்தையே சிவாஜி அவரிடமும் சொன்ன போது சொன்னார்.

“வழி காட்டிய பிறகு அந்தப் பாதையில் போ சிவாஜி. அதற்கும் முன் என்ன அவசரம்?”

“அந்தராத்மாவில் வழி காட்டி விட்டான் ஆசிரியரே. அதற்குப் பிறகு தயங்குவது அவன் மீது சந்தேகப்படுவது போல. அதனால் தான் அவன் காட்டிய வழியில் போகிறேன். வேண்டியது வேண்டும் போது கண்டிப்பாகக் கிடைக்கும். அதையும் நான் அந்தராத்மாவில் உணர்கிறேன்”

”அந்தராத்மாவின் குரல் என்று நாம் நம்புவது சில சமயங்களில் சைத்தானின் குரலாய் கூட இருக்கலாம் சிவாஜி”

“சைத்தானின் குரலா, அந்தராத்மா அல்லது இறைவனின் குரலா என்று பிரித்தறிய முடியாத பக்குவத்தில் உங்கள் மாணவன் இருப்பதாக நினைக்கிறீர்களா ஆசிரியரே?”

தாதாஜி கொண்டதேவ் ஒரு நிமிடம் பேசாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மென்மையாகச் சொன்னார். ”நீ அப்படி இல்லை என்று எனக்குத் தெரியும் சிவாஜி. ஆனாலும் நீ வழிதவறி பின் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற எச்சரிக்கையுணர்வை என்னால் கைவிட முடியவில்லை.”

சிவாஜி புன்னகைத்தான். அவன் பெற்றோருக்குப் பிறகு அவன் நலனில் உண்மையான அக்கறை கொண்ட அன்பான மனிதர் அவர். அவர் மனதை அவன் அறிவான்…..

அவன் இறைவன் மீது கொண்ட அசாதாரண நம்பிக்கை வீண் போகவில்லை என்று நிரூபிக்கும் சம்பவம் மறுநாளே நடந்தது. டோரணா கோட்டையை பழுது பார்க்கும் போது பூமிக்கடியில் புதையல் கிடைத்தது. ஒரு பவானி அம்மன் சிலையும், அதனுடன் சேர்ந்து ஏராளமான தங்கக்காசுகளும், நகைகளும் சேர்ந்து கிடைத்த செய்தி சிவாஜியை எட்டிய போது இறைவன் தன் ஆசியை பிரம்மாண்டமான வழியில் வெளிப்படுத்தியதாகவே உணர்ந்தான். தகவல் கிடைத்த போது ஜீஜாபாய் நிறைந்த மனதுடன் பவானி தேவியைப் பிரார்த்திக்க தாதாஜி கொண்டதேவ் மாணவனுக்காக அகமகிழ்ந்தார்.

சிவாஜி தனக்குக் கிடைத்த புதையலை மதிப்பிட்ட போது அது தாதாஜி கொண்டதேவ் டோரணாக் கோட்டையைப் பழுது பார்க்கத் தேவைப்படும் என்று சொன்ன தொகையை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. அன்னை பவானி அள்ளியே தந்திருக்கிறாள் என்று வணங்கி மகிழ்ந்த சிவாஜி ஆயுதங்களை வாங்கவும், தயாரிக்கவும் நிறைய செலவு செய்தான். அதன் பின்னும் நிறையவே மிஞ்சியது.

”மிஞ்சிய செல்வத்தை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறாய்?” யேசாஜி கங்க் கேட்டான்.

உடனடியாகப் பதிலெதுவும் சொல்லாமல் டோரணாக் கோட்டையின் உச்சியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருந்த சிவாஜியின் பார்வை சில மைல்கள் தொலைவில் இருந்த மூர்பாத் என்ற மலையின் மேல் விழுந்தது. பின் அங்கேயே சிறிது நேரம் நிலைத்தது. பிறகு சுற்றிலும் தொலைதூரம் வரை பார்த்த சிவாஜி மீண்டும் மூர்பாத் மலையையே பார்த்தபடி “இந்த மலையின் அமைப்பும் இது அமைந்திருக்கும் இடமும் என்னைப் பெரியதொரு கோட்டை கட்ட அழைப்பு விடுக்கின்றன யேசாஜி” என்று சொன்னான்.

“அதில் கோட்டை கட்ட தாதாஜி சம்மதிப்பாரா சிவாஜி?” பாஜி பசல்கர் கேட்டான்.

“அவர் அதிகார எல்லை நம் பழைய இருப்பிடத்தோடு முடிந்து விடுகிறது பாஜி. டோரணா கோட்டையிலிருந்து என் அதிகார எல்லை ஆரம்பிக்கிறது. அவரிடம் பணம் கேட்காத வரை அவர் சம்மதம் அவசியவில்லை”

“உன் தந்தை மற்றும் பீஜாப்பூர் சுல்தானின் அனுமதி” பாஜி பசல்கர் கேட்டான்.

“இருவர் அனுமதியும் இந்த விஷயத்தில் எனக்கு அவசியமில்லை பாஜி. அன்னை பவானியே தேவையான செல்வத்தையும் தந்து அனுமதித்த பிறகு மானிடர்களின் அனுமதி எனக்குத் தேவையில்லை…. ஒரு நல்ல நாளாகப் பார்த்து கோட்டை கட்டும் வேலையை ஆரம்பித்து விடப் போகிறேன்….”

தானாஜி மலுசரே எச்சரித்தான். “ஒற்றர்கள் மூலம் பீஜாப்பூர் சுல்தானுக்கு செய்தி எட்டாமல் இருக்காது”

சிவாஜி குறும்புப் புன்னகை ஒன்றை பூத்தான். இப்போது அவனுக்கு பீஜாப்பூர் சுல்தான் ஒரு பிரச்சினையே அல்ல. அவன் தாதாஜி கொண்டதேவுக்குத் தான் பயந்தான். அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதை அவன் அறிவான். ஆனாலும் அவன் இந்த விஷயத்தில் முன் வைத்த காலைப் பின் வைக்கப் போவதில்லை. அவர் விருப்பத்திற்கு எதிராக நடந்து அவர் மனவருத்தத்தை சம்பாதிக்கப் போகிறோம் என்பதே அவனுக்கும் வருத்தமாக இருந்தது.

மூர்பாத் மலையில் அவன் கோட்டை கட்ட ஆரம்பித்த போது அவன் எதிர்பார்த்தபடியே அவர் எதிர்ப்பு தெரிவித்தார் என்றாலும் அந்த எதிர்ப்பில் தீவிரம் இருக்கவில்லை. அவன் மாற்றிக் கொள்ளப் போவதில்லை என்று அவர் அறிந்தது போலவும், ஆனாலும் தன் பொறுப்பில் எதிர்ப்பு தெரிவிப்பது கடமை தான் என்பது போலவும் இருந்தது. பின் அவர் அவனைக் கேட்டார். “நீ இதற்கும் பீஜாப்பூர் சுல்தானின் அனுமதியை வாங்கியிருக்கலாமே. காலி மலையில் நீ உன் செலவில் கோட்டை கட்டுவதற்கு முறைப்படி நீ அனுமதி கேட்டால் அவர் கொடுத்திருக்கவும் கூடுமே?”

“ஆசிரியரே. என் செலவில் நான் பெரியதொரு கோட்டையைக் கட்டுவது எதற்காகவென்று அறிய முடியாத அளவு பீஜாப்பூர் சுல்தான் முட்டாள் அல்ல. மேலும் முன்பே அருகிலிருக்கும் இன்னொரு கோட்டையை நான் கைப்பற்றியிருக்கிறேன். அதனால் இனி என் எந்தப் புதிய முயற்சிக்கும் ஆதில்ஷாவின் அனுமதி கிடைக்காது….”

”சிவாஜி உன் தந்தையும் இதை அனுமதிக்க மாட்டார் என்பதை அறிவாயா?”

“அறிவேன் ஆசிரியரே!”

“பீஜாப்பூர் சுல்தான் ஒரு படையை இங்கே அனுப்பி வைத்தால் என்ன செய்வாய் சிவாஜி”

சிவாஜி புன்னகையுடன் சொன்னான். “உடனடியாகப் படையை சுல்தான் அனுப்பி வைக்கும் சூழல் பீஜாப்பூரில் இல்லை ஆசிரியரே. என் தந்தையுடன் முக்கிய ஒரு படையும் கர்நாடகத்தில் உள்ளது. தஞ்சாவூர் நாயக்கர் படை ஊடுருவக்கூடும் என்ற பயத்தில் அந்த எல்லையில் ஒரு படை உள்ளது. இந்த நிலைமையில் இன்னொரு படையை சிவாஜி என்ற சிறுவனுக்கு எதிராக அனுப்பி வைப்பது பீஜாப்பூர் சுல்தானுக்கு சமயோசிதமும் அல்ல, கௌரவமும் அல்ல….”

தாதாஜி கொண்டதேவ் தன் மாணவனின் அறிவுகூர்மையை எண்ணி உள்ளூர பெருமைப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கேட்டார். “உன் தந்தை எதிர்த்தால் என்ன செய்வாய்?”

"அவருக்கு என் நிலையைத் தெரிவிப்பேன். தந்தைக்கும் பிள்ளைக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது எங்கும் இல்லாததல்லவே ஆசிரியரே…. இது பவானி தேவியே எனக்குக் காட்டிய வழி. கடவுள் காட்டிய வழியில் நான் போவதை மனிதர்கள் எதிர்ப்பது கடவுளையே எதிர்ப்பது போலத் தானே ஆசிரியரே. இதையும் சுட்டிக் காட்டுவேன்....”
               
முகத்தில் இது வரை காட்டிக் கொண்டிருந்த கடுமையை தாதாஜியால் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை. அவரையும் மீறி புன்முறுவல் ஒன்று அவர் முகத்தில் எட்டிப் பார்த்தது. அடுத்ததாக அவரும் எதிர்க்க வழியில்லை. அது கடவுளை எதிர்ப்பது போல் என்று சூசகமாகச் சொல்லி விட்டான். அன்றே சிவாஜியின் செயல்களைத் தெரிவித்து ஷாஹாஜிக்கு ஒரு மடலை அனுப்பி வைத்தார். நாளை ஷாஹாஜி அவரைக் குற்றப்படுத்தக்கூடாது…..

(தொடரும்)
என்.கணேசன்

Thursday, July 19, 2018

இருவேறு உலகம் – 92


திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின் செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்டத்தைத் தவிர்த்து ஐந்தே நிமிடங்களில் தெய்வ தரிசனம் முடித்து விட்டு வந்திருக்க முடியும் என்றாலும் இன்று சாதாரண மனிதராக கூட்டத்தில் ஒருவராகவே வரிசையில் நின்று கடவுளை வணங்கி விட்டு கோயில் பிரகாரத்திலேயே கூட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். கண்களை மூடி சிறிது நேரம் அங்கேயே தியானிக்க முயன்றார். மனம் ஏனோ அன்று தியானத்தில் லயிக்க மறுத்தது. தியான முயற்சியைக் கைவிட்ட மாஸ்டர் தன்னைக் கடந்து சென்ற பக்தர்களை அமைதியாக வேடிக்கை பார்த்தார்.

கடவுளின் தரிசனம் முடிந்து விட்டு வந்த ஒரு கூட்டத்தினர் ஏராளமான தங்கம், வெள்ளி, வைர நகைகள், செல்வம் எல்லாம் குவித்து வைத்திருக்கும் பாதாள அறை எங்கே இருக்கிறது. அதைத் தூரத்தில் இருந்தாவது பார்க்க விடுவார்களா என்று கேட்டு பேசிக் கொண்டபடி சென்றார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே அவர்கள் பின்னால் வந்த ஒரு முதியவர் மாஸ்டருக்குச் சில அடிகள் தள்ளி அமர்ந்து கொண்டு தன் முழங்கால்களைத் தடவிக் கொண்டார். மாஸ்டருக்கு அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருப்பதாய் தோன்றியது. ஆனால் எங்கே எப்போது என்று தெரியவில்லை. அந்த முதியவர் அவரைப் பார்த்தார். ஆனால் அவர் பார்வையில் மாஸ்டரை முன்பு பார்த்திருக்கும் அறிகுறி எதுவும் தெரியவில்லை.

இரண்டு நிமிடம் கழித்து அவர்களைத் தாண்டிப் போன ஒரு கணவன் மனைவியும் பாதாள அறையைப் பற்றிப் பேசிக் கொண்டே போனார்கள். அங்கிருக்கும் செல்வத்தின் மதிப்பு சுமார் எவ்வளவு கோடிகள் இருக்கும் என்று மனைவி கேட்க கணவன் ஐநூறு கோடிக்குக் குறையாமல் இருக்கும் என்றான். அனந்தனின் கோவிலில் அனந்தனை விட அதிகமாக பாதாள அறை பற்றியும், அங்கிருக்கும் அளவில்லாத செல்வம் பற்றியும் மக்கள் பேசியது மாஸ்டருக்கு வேடிக்கையாக இருந்தது. அவர் மெல்லப் புன்னகைக்க, கிட்டத்தட்ட அதே எண்ணம் மனதில் ஓடிய அந்த முதியவரும் மாஸ்டரைப் பார்த்துப் புன்னகைத்தார்.

முதியவர் சொன்னார். “திடீர்னு ஒரே நேரத்தில் அனந்த பத்மநாப சுவாமி தன்னோட திவ்ய தரிசனத்தைக் காட்டறதும், பாதாள அறையை மக்களுக்குத் திறந்து விடறதும் நடந்தா அனந்த பத்மநாப சுவாமி முன்னாடி நின்னு கும்பிட அஞ்சு பேராவது  மிஞ்சுவாங்களா?”

மாஸ்டர் அந்தக் காட்சியைக் கற்பனை செய்து பார்த்து சிரித்தபடி சொன்னார். “பாதாள அறை காலியாகிற வரை பகவானுக்கு மக்கள் தொந்தரவு இருக்கவே இருக்காது.”

முதியவர் சிரித்தார். அந்தச் சிரிப்பும், பேச்சும் மாஸ்டர் முன்கூட்டியே அறிந்தவை அல்ல என்ற போதும் எங்கேயோ பார்த்திருப்பது போன்ற உணர்வை மாஸ்டரால் தவிர்க்க முடியவில்லை. தீவிரமாக மாஸ்டர் யோசித்தார். திடீரென்று நினைவுக்கு வந்தது. அவருடைய ஜாதகத்தை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தாரே….. அந்த ‘யாரோ’ போலத் தான் முதியவர் தெரிந்தார். மாஸ்டர் உடனே கேட்டார். “நீங்க ஜோதிடரா?”

அந்தக் கேள்வி முதியவரை ஆச்சரியப்படுத்தியது போல் தெரிந்தது. அவர் மாஸ்டரைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னார். “ஒரு காலத்தில் தொழில் ஜோதிடமாய் தான் இருந்தது….. இப்ப இல்லை….. இப்ப மகன் அந்தத் தொழிலைப் பார்க்கிறான்…..”

“உங்க மகன் பார்க்க உங்களை மாதிரியே இருப்பாரோ?”

“இல்லையே…. அவன் அவங்கம்மா ஜாடை… ஏன் கேட்கறீங்க?”

மாஸ்டர் மெல்லச் சொன்னார். “சில நாளுக்கு முன்னால் என் ஜாதகத்தை யாரோ பார்த்துகிட்டிருக்கிற மாதிரி ஒரு உணர்வு. பார்த்துகிட்டிருந்த ஆள் உங்க மாதிரி தெரிஞ்சார். அது தான் கேட்டேன்…..”

சதாசிவ நம்பூதிரி திகைத்தார். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது என்று சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. அப்படி உணர்ந்ததாய்ச் சொல்லி அவர் கேட்பது முதல் தடவை. அவர் கண்களைக் சுருக்கிக் கொண்டு மாஸ்டரைக் கூர்ந்து பார்த்தார். பல வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன் அவர் பார்த்தது இரண்டு ஜாதகங்களை….. வயது, தோற்றம் எல்லாம் வைத்துப் பார்க்கையில் ஒரு ஜாதகருக்கு இவர் ஒத்து வருகிறார்…… தயக்கத்துடன் சதாசிவ நம்பூதிரி கேட்டார். “உங்க நட்சத்திரம் புனர்பூசமா?”

இப்போது திகைத்தது மாஸ்டர்.  “ஆமாம்” என்றார். சதாசிவ நம்பூதிரி தன் முழங்கால் வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல எழுந்து வந்து மாஸ்டர் அருகே அமர்ந்தார். லக்கினம் ஜாதக அமைப்பு பற்றியெல்லாம் சதாசிவ நம்பூதிரி ஒவ்வொன்றாகச் சொல்ல மாஸ்டருக்கு எல்லாவற்றிற்கும் ‘ஆமாம்” என்று தான் சொல்ல வேண்டி வந்தது. எல்லாவற்றையும் அந்த முதியவர் மிகச் சரியாகச் சொன்னார்.

மாஸ்டர் திகைப்பு மாறாமல் கேட்டார். “அப்படியானால் என் ஜாதகத்தை நீங்கள் பார்த்தது சரிதானா? என் ஜாதகத்தை உங்களிடம் தந்தது யார்? ஏன் பார்த்தீர்கள்?....”

“ஒரு புண்ணியவான் உங்கள் ஜாதகத்தையும் இன்னொருத்தர் ஜாதகத்தையும் கொண்டு வந்து கொடுத்து பார்க்கச் சொன்னார். நான் பார்க்கறதில்லைன்னு சொன்ன பிறகும் விடாமல் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார். விசேஷ ஜாதகங்கள்னு சொன்னார்….. பார்த்துப் பலன் சொன்னேன்….. ஆனால் அந்த ஜாதகர்களில் ஒருத்தரை சில நாட்கள்லயே நேர்ல பார்ப்பேன்னு நான் கனவுலயும் நினைக்கல…..”

மாஸ்டர் திகைப்பு அதிகரிக்க அடுத்த கேள்வியைக் கேட்டார். “இன்னொரு ஜாதகம் யாரோடது?”

“போன அமாவாசை சமயத்துல செத்திருக்க வேண்டிய ஒரு ஜீனியஸ் இளைஞனோட ஜாதகம்…..” என்று சதாசிவ நம்பூதிரி சொல்ல மாஸ்டருக்கு அது யார் ஜாதகம் என்று உடனடியாகத் தெரிந்தது. அந்த இரண்டு ஜாதகங்களையும் சேர்த்துக் கொண்டு போய் இவரிடம் கொடுத்த ’புண்ணியவான்’ பற்றி முழுவதுமாக உடனடியாகத் தெரிந்து கொள்வது முக்கியமாகத் தோன்றியது.

மேலும் ஏதோ சொல்ல முற்பட்ட சதாசிவ நம்பூதிரியை மிகுந்த மரியாதையுடன் கைகூப்பி வணங்கிய மாஸ்டர் “நானே தெரிஞ்சுக்கட்டுமா” என்றார். குழப்பத்துடன் சதாசிவ நம்பூதிரி தலையசைத்தார். அடுத்த கணம் மாஸ்டரின் சக்தி அலைகள் அவர் மனதை ஊடுருவிப் பார்க்க ஆரம்பித்தது. இது போன்றதொரு ஊடுருவலை சில நாட்களுக்கு முன் ஒரு முறை நள்ளிரவில் அவர் உணர்ந்திருக்கிறார். அது ஆபத்து  என்றும் தீமை என்றும் அன்று அறிந்திருக்கிறார். ஆனால் இப்போதைய ஊடுருவலில் அந்த உணர்வுகள் அவருக்கு வரவில்லை. இந்த மனிதரின் ஜாதகத்தை அவர் விரிவாக அலசி இருக்கிறார். இந்த மனிதரின் நல்லெண்ணம் குறித்து அவருக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. கோயிலின் உள்ளே தெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் நடக்கும் நன்மையாகவே இதை எண்ணி சதாசிவ நம்பூதிரி சாந்தமாக அமர்ந்திருந்தார்….

மனோகர் சதாசிவ நம்பூதிரியைச் சந்தித்து ஜாதகங்களைப் பார்க்க வற்புறுத்திய அந்தக் கணத்திலிருந்து மாஸ்டரால் நடந்தவை அனைத்தையும் அறிய முடிந்தது. திரைப்படம் பார்ப்பது போல் பார்த்து வந்த மாஸ்டருக்கு மர்ம மனிதன் நள்ளிரவில் வெளியே நின்று சதாசிவ நம்பூதிரியைக் கவனித்த காட்சியில் எவ்வளவு முயன்றும் அந்த வெளியிருட்டை ஊடுருவி மர்ம மனிதனை உணர முடியவில்லை. சதாசிவ நம்பூதிரி உணர்ந்ததை மட்டுமே அவரால் உணர முடிந்தது. அதே போல மர்ம மனிதன் நேரில் வந்து சதாசிவ நம்பூதிரியிடம் பேசிய காட்சியிலும் அவன் பேசியது தெளிவாகக் கேட்டதே ஒழிய அவன் மங்கலாகவே தெரிந்தான். அவன் முன்னெச்சரிக்கையாக தன்னைச் சுற்றி ஒரு சக்தி அரணை எழுப்பி விட்டே வந்திருப்பது போல் தோன்றியது. வேடம் ஏதாவது அணிந்தே அவன் வந்திருப்பான் என்றாலும் வேடத்துடன் பார்க்க முடிந்தாலும் கண்கள் மூலமாகவாவது கூடுதலாக அவனை அறிய முயன்ற மாஸ்டருக்கு அது ஏமாற்றமாக இருந்தது. ஏமாற்றத்தை ஒதுக்கி வைத்து விட்டு மாஸ்டர் அவன் கேட்ட கேள்விகளையும், சதாசிவ நம்பூதிரி சொன்ன பதில்களையும் மிகவும் கவனமாகக் கேட்டார். முன்பு இருந்த சந்தேகங்கள் விலகி, எதிரி வேற்றுக்கிரகவாசி அல்ல, அந்த மர்ம மனிதன் தான் என்பது மாஸ்டருக்கு இப்போது தெளிவாகியது.

மாஸ்டரின் சக்திகளைப் பற்றி எதிரி அறிந்திருந்ததும், க்ரிஷ் எப்படி தனக்கு இணையான எதிரியாவான் என்று அறிய எதிரி ஆர்வம் காட்டியதும் மாஸ்டரை யோசிக்க வைத்தது. அதற்கு சதாசிவ நம்பூதிரி சொன்ன பதில் அவரைப் புன்னகைக்க வைத்தது.

“அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா சாதாரணமா இருந்துட மாட்டான். இப்போதைக்கு அவன் இன்னும் விதையா தான் இருக்கலாம். ஆனா ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், எத்தனை காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்!”

மாஸ்டரின் ஊடுருவல் நின்றவுடன் உணர்ந்த சதாசிவ நம்பூதிரி ஆர்வத்துடன் கேட்டார். “அந்த இன்னொரு ஜாதகன் உயிரோட தான் இருக்கிறானா? உங்களுக்கு அவனைத் தெரியுமா? உங்க ரெண்டு பேருக்கும் எதிரி யார்னு நீங்க கண்டுபிடிச்சுட்டீங்களா?”

“அந்த ஜாதகன் உயிரோட தான் இருக்கான் ஐயா. எங்க ரெண்டு பேருக்கும் எதிரி தான் எங்க ஜாதகங்களை உங்க கிட்ட காட்டியிருக்கான். அவன் யார்னு எங்களால இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை….”

சதாசிவ நம்பூதிரி அதிர்ச்சியுடன் மாஸ்டரைப் பார்த்தார்.

(தொடரும்)
என்.கணேசன்


Wednesday, July 18, 2018

முந்தைய சிந்தனைகள் 34

சில சிந்தனைக்குரிய வரிகள் என் நூல்களில் இருந்து.....












என்.கணேசன்

Monday, July 16, 2018

சத்ரபதி – 29



சிவாஜி தாதாஜி கொண்டதேவுக்கு வாக்களித்தபடியே அன்றே பீஜாப்பூர் சுல்தானுக்கு நீண்டதொரு ஓலை அனுப்பினான். அவரை வானளாவப் புகழ்ந்து வணக்கம் தெரிவித்து விட்டு எழுதினான்.

“தங்கள் பரந்த ராஜ்ஜியத்தில் சுபிட்சத்திற்குக் குறைவில்லை. அதை நான் தங்கள் ராஜ்ஜியத்தின் பிரஜையாகவும், தங்களிடம் அன்பு பாராட்டும் ஒருவனாகவும் உறுதியாகக் கூறுவேன். ஆனால் நிலவில் களங்கம் இருப்பது போல் தங்கள் அதிகாரிகள் சிலர் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பினை உணர்ந்து அதைத் திறம்படச் செய்யத் தவறுகிறார்கள் என்பதைக் காணுகையில் மிகுந்த வருத்தம் அடைகிறேன். எங்களுக்கு மிக அருகில் இருக்கும் டோரணா கோட்டை நிர்வாகத்தையே நான் இதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். தலைநகருக்குத் தொலைவில் இருக்கும் காரணத்தினால் தங்களுடைய மேலான கவனத்திற்கு வர வாய்ப்பில்லை என்று கருதி டோரணா கோட்டையை கோட்டைத் தலைவர் மிகவும் இழிந்த நிலையிலேயே வைத்திருக்கிறார். அதைக் கண்டு வேதனையடைந்த நான் எங்கள் பகுதிக் கோட்டைகளை நாங்கள் வைத்திருக்கும் முறையினை அவருக்குச் சுட்டிக் காட்டினேன். ஆனாலும் அது அவர் மனப்போக்கை மாற்றி விடவில்லை. மேலும் சில சமயங்களில் அவர் கோட்டையிலேயே இருப்பதில்லை. அடிக்கடி கோட்டையை அலட்சியப்படுத்தி விட்டு எங்காவது சென்று விடுகிறார். ஒரு கோட்டைக்கு அதைவிட ஆபத்து வேறிருக்க முடியாதல்லவா? தங்களை எதிர்க்கும் வல்லமை பெற்றவர்கள் இந்தப் பிராந்தியத்தில் யாரும் இல்லை என்ற போதும் காவல் சரியில்லாத கோட்டைகளை எதிரிகள் எளிதாகக் கைப்பற்றி விடுவது சாத்தியமே அல்லவா? இதை எல்லாம் கண்டு நான் வெகுண்டு, தங்கள் ராஜ்ஜியத்தின் மேலான சிறப்பைக் கருதி, தங்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் டோரணா கோட்டையை நிர்வகிக்கும் பொறுப்பை என்வசம் ஏற்றிருக்கிறேன்.”

“அதை ஏற்ற பிறகு கணக்குகளைச் சரிபார்த்த போது தங்கள் ஊழியனாக சிறந்த முறையில் செயலாற்ற கோட்டைத்தலைவர் தவறியிருப்பதை கணக்குகளில் குறையிருப்பதன் மூலமாகவும் கண்டு துணுக்குற்றேன். வரிவசூலில் மந்தத் தன்மை, வசூலித்ததிலும் ஒழுங்காகக் கணக்கு வைக்காத தன்மை எல்லாம் கண்ட போது தங்கள் கஜானாவுக்குச் சேர வேண்டிய பெருந்தொகை அங்கு வந்து சேராமலிருப்பதையும் வேதனையுடன் கண்டுபிடித்தேன்.”

“முறைப்படி தங்களிடம் சொல்லி அனுமதி பெற்று விட்டுத் தான் கோட்டையை நான் நிர்வாகிக்க முடியும் என்ற போதும் அதற்காகக் காத்திருக்கும் வேளையில் நாளுக்கு நாள் சீரழிந்து கொண்டிருக்கும்  கோட்டை மேலும் வீழ்ச்சியைக் கண்டுவிடுமோ என்ற அச்சத்தில் கோட்டையின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்ட என் செயலை அங்கீகரித்து தங்களுக்குத் தொடர்ந்து சேவை செய்ய என்னை அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இது வரை தங்கள் கஜானாவுக்கு அரைகுறையாய் வந்து கொண்டிருந்த இந்தக் கோட்டையின் வரிவசூல் இனி முழுமையாகவும் அதிகமாகவும் வந்து சேரும் என்று உறுதியளிக்கிறேன்.

தங்கள் மேலான அனுமதியை வேண்டி நிற்கும்
தங்கள் ஊழியன் சிவாஜி

ஓலையை அனுப்பிய வீரனிடமே ரகசியமாக பீஜாப்பூர் நிதி அதிகாரிக்குத் தரப் பரிசுப் பொருள்களையும் சிவாஜி தந்தனுப்பினான். அந்த நிதி அதிகாரி அவன் பீஜாப்பூர் சென்ற காலத்திலேயே நட்பானவர். சுல்தான் கண்டிப்பாக அந்த நிதி அதிகாரியை அழைத்து டோரணாக் கோட்டையின் வரவு செலவுகள் குறித்து விசாரிக்கக்கூடும் என்று அவன் எதிர்பார்த்தான். டோரணா கோட்டையின் வரவு செலவுகளில் பல ஒழுங்கீனங்களை சிவாஜியே கண்டுபிடித்திருந்தான். ஆனால் அதை விரிவாக அவன் சொல்வதை விட நிதி அதிகாரி மூலமாக சுல்தான் அறிவது தனக்குச் சாதகமாக இருக்குமென்று சிவாஜி நம்பினான்….


சிவாஜியின் ஓலை பீஜாப்பூர் சுல்தான் கையில் கிடைத்த போது சிவாஜி எழுதியுள்ளதை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரியாமல் ஆதில்ஷா திகைத்தார். கோட்டைகள் அவருக்குத் தெரிந்த வரை இப்படிக் கைமாறியது இல்லை. அவரது அனுமதி இல்லாமல் தானாக அவன் கோட்டையை ஏற்றுக் கொண்டதும் குற்றம், கோட்டைத்தலைவன் ஒப்படைத்ததும் குற்றம்….. ஆனால் சிவாஜியின் உத்தேசம் கோட்டையைக் கைப்பற்றுவது என்பதாக இருந்தால் முறைப்படி கடிதம் எழுதியிருக்க மாட்டான். கோட்டை நிர்வாகத்தைப் பற்றி மிக மோசமாக வேறு எழுதியிருக்கிறான்…. உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ள அவர் சிவாஜி எதிர்பார்த்தபடியே நிதி அதிகாரியை வரவழைத்தார்.

சிவாஜியின் ஓலையைப் படிக்கக் கொடுத்து விட்டு அந்த அதிகாரியிடம் டோரணா கோட்டையின் நிதி நிர்வாகம் குறித்துக் கருத்து கேட்டார்.

“அந்தக் கோட்டையின் தலைவர் குழப்பவாதி அரசே. சரியாக வரி வசூலித்து கணக்குடன் அனுப்புவதில்லை. அனுப்பும் கணக்கிலும் நிறைய பிழைகள் இருக்கின்றன. செலவினங்களிலும் முரண்பாடுகள் வெளிப்படையாகவே தெரியும். அது குறித்துக் கேள்விகள் எழுப்பினால் சம்பந்தமில்லாத பதில்கள் அனுப்புவது வாடிக்கை. அவரது ஊதியத்தில் மட்டும் அக்கறையாக இருப்பார்….”

ஆதில்ஷா கேட்டார். “பின் ஏன் அந்த நபரை நாம் அந்தக் கோட்டையின் பொறுப்பில் வைத்திருக்கிறோம்?”

“சகாயாத்ரி மலைத்தொடர் பகுதிகளில் இருக்கும் கோட்டைகளை நிர்வகிக்க நமக்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை அரசே. அதனால் கிடைப்பவர்களை நாம் வைத்துக் கொள்கிற சூழல் தான் இருக்கிறது. கோட்டையின் பராமரிப்பும் எளிதானதல்ல. அதற்கும் ஆள் பற்றாக்குறை. திறமையான ஆட்கள் கிடைப்பதேயில்லை. இது ஒரு கோட்டையின் நிலைமை மட்டும் அல்ல. அப்பகுதியில் பெரும்பாலான கோட்டைகளின் நிலைமை அப்படியே தானிருக்கிறது…..”

ஆதில்ஷா யோசித்தார். முகலாயர்கள் கிடைத்த கோட்டைகளையும் அவரிடம் ஒப்படைத்து விட்டு அதற்குப் பதிலாக அவரிடமிருந்து பணம், தங்கம், வெள்ளி என்று பெற்று அள்ளிக் கொண்டு போனது நினைவு வந்தது. முகலாயர்கள் இந்த விஷயத்தில் விவரமானவர்கள்….  

நிதி அதிகாரி தொடர்ந்தார். “எனக்குத் தெரிந்தவரை அந்தப் பகுதியில் வளமாக இருப்பவர்களும், சீராக நிர்வாகம் செய்பவர்களும் ஷாஹாஜியின் ஆட்களே. அதனால் டோரணா கோட்டை சிவாஜியின் கைக்குப் போவது நமக்கு ஒருவிதத்தில் நல்லதென்றே தோன்றுகிறது அரசே. கேட்டவுடன் கோட்டையை ஒப்படைத்து விட்டுப் போகும் அற்பங்களிடம் கோட்டையை விட்டு வைப்பதும் ஆபத்து. அவரிடம் கணக்கும் இல்லை, பொறுப்புணர்வும் இல்லை….. சிவாஜியை மறுத்து விட்டு வேறு ஒரு ஆளை நாம் தேடி ஒப்படைக்கவும் இப்போது நம்மிடம் காலமில்லை. அப்படியே தேடினாலும் சரியான ஆள் கிடைப்பதரிது….”

ஆதில்ஷாவுக்கு நிதி அதிகாரி சொல்வது சரியென்றே பட்டது. கோட்டை கை மாறியது முறையாக நடக்கவில்லை என்றாலும் ஒழுங்கீனமான, பொறுப்பற்றவன் கையிலிருந்து கோட்டையை சிவாஜி எடுத்துக் கொண்டது நல்லது தான்…..


சிவாஜியின் செயலை அங்கீகரித்து, சிவாஜி அனுசரிக்க வேண்டிய ஷரத்துக்களை எல்லாம் தெரிவித்து சுல்தான் ஆதில்ஷா அனுப்பிய நீண்ட ஓலை ஒருவழியாக சிவாஜிக்கு வந்து சேர்ந்தது. ஓலை வருவதற்கு முன்பே சிவாஜி டோரணா கோட்டையைப் பழுது பார்க்கும் பணியை ஆரம்பித்திருந்தான். அந்த ஷரத்துக்களை அவன் படிக்கும் சிரத்தையை மேற்கொள்ளவில்லை. காரணம் அவருடைய எந்த ஷரத்தையும் அவன் அனுசரிப்பதாய் இல்லை. அந்த ஓலையை தாதாஜி கொண்டதேவிடம் கொண்டு போய் காட்டிய போது அவர் நிம்மதியடைந்தார். போகின்ற வழி சரியோ தவறோ அவருடைய மாணவன் நினைத்ததைச் சாதித்து விடுகிறான் என்று நினைத்து உள்ளுக்குள் பெருமிதம் அடைந்தாலும் அதை அவர் வெளியே காட்டவில்லை. ஆனால் அவரைக் கண்ணாடி போல் படிக்க முடிந்த அவரது மாணவன் படித்துப் புன்னகைத்தான்.

அவரையும் ஜீஜாபாயையும் சிவாஜி அந்தக் கோட்டைக்கு அழைத்துச் சென்று காண்பித்தான். “இதற்கு ’பிரசண்டகாட்’ என்று பெயர் மாற்றியிருக்கிறேன் ஆசிரியரே” என்று சொன்னான். மராத்தியில் பிரசண்டகாட் என்றால் பிரம்மாண்டமான கோட்டை என்று அர்த்தம்.

தாதாஜி கொண்டதேவ் அந்தக் கோட்டையில் ஒவ்வொரு இடத்திலும் செய்ய வேண்டிய மாற்றங்களை மாணவனுக்கு விவரித்தார். அதைச் செய்வதால் என்ன பலன், செய்யா விட்டால் என்ன பிரச்னை என்பதை எல்லாம் விவரித்தார். சிவாஜி முழுக் கவனத்துடன் கேட்டுக் கொண்டு வந்தான்.

கடைசியில் “இதற்கெல்லாம் எத்தனை செலவாகும் ஆசிரியரே?” என்று சிவாஜி கேட்டான். செலவுக் கணக்கில் அவரால் எதையும் துல்லியமாகவே சொல்ல முடியும்! அவர் சொன்ன தொகை பெருந்தொகையாக இருந்தது. அவனிடம் அதில் பத்தில் ஒரு பகுதி கூட இல்லை. ஆனாலும் அமைதியாகவே அவன் இருந்தான்.

“அந்தத் தொகைக்கு என்ன செய்யப் போகிறாய் சிவாஜி?” ஜீஜாபாய் கேட்டாள். அவளுக்கு மகன் கையிருப்பில் எவ்வளவு இருக்கக்கூடும் என்று தெரியும். அவன் திட்டம் என்ன என்று அறிய நினைத்த அவளுக்கு தாதாஜி கொண்டதேவ் கஜானாவில் இருந்து எதாவது தருவாரா என்பதையும் அறிய வேண்டியிருந்தது. ஷாஹாஜியின் அனுமதி இல்லாமல் காலணா அவர் தர மாட்டார் என்பது அவள் அனுமானம். அதை மெய்ப்பிப்பது போலவே அவரும் கவலையுடன் சிவாஜியை என்ன செய்யப் போகிறாய் என்பது போல பார்த்தார்.

தாய் வார்த்தையாலும், ஆசிரியர் பார்வையாலும் கேட்ட கேள்விக்கு சிவாஜி அசராமல் உறுதியாகப் பதில் சொன்னான். “இறைவனை மட்டுமே நம்பி நான் இறங்கியிருக்கும் வேலையிது. இறைவன் கண்டிப்பாக ஏதாவது வழிகாட்டுவான் தாயே, கவலையை விடுங்கள்”

அவன் குழந்தையாக இருந்த போது இறைவன் உடன் இருப்பான் என்று சொல்லி வைத்தது வெறும் வார்த்தையாக இல்லாமல் அவன் மன ஆழம் வரை அசைக்க முடியாத நம்பிக்கையாக மாறி இருந்ததில் ஜீஜாபாய் நெகிழ்ந்து போனாள். ஆனால் இறைவன் எப்படி வழிகாட்டுவான் என்பதற்கு அவள் அறிவுக்கெட்டிய வரை எதுவும் புலப்படவில்லை.

(தொடரும்)
என்.கணேசன்

Friday, July 13, 2018

எனது சமீபத்திய நாவல்களும், வரவிருக்கும் அடுத்த நாவல்களும்!


வாசகர்களுக்கு வணக்கம்.

எனது சமீபத்திய நாவல்கள் குறித்தும், அடுத்த நாவல்கள் குறித்தும், இல்லுமினாட்டி குறித்தும் நான் பேசியுள்ள காணொளி இதோ! அமானுஷயன் அக்‌ஷய் திரும்ப வருவானா என்று அடிக்கடி கேட்கும் அமானுஷ்யன் ரசிகர்களுக்கு ஒரு இனிய செய்தியும் இதில் காத்திருக்கிறது.



அன்புடன்
என்.கணேசன்

Thursday, July 12, 2018

இருவேறு உலகம் – 91


மெரிக்காவின் அட்லாண்டா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த கணத்திலிருந்து க்ரிஷை உதயின் நண்பன் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு நிறுவனம் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. கிட்டத்தட்ட ஆறேகால் அடி உயரத்தில்  ஆஜானுபாகுகளாக இருந்த இரண்டு தனியார் காவலர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவனைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள். அழைத்துச் செல்லும் போது இருவர் பார்வையும் சுற்றும் முற்றும் வர முடிந்த ஆபத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஆனால் அதற்கு அவசியம் இருக்கவில்லை. போக்குவரத்துக்கும் அவர்களுடைய வாகனமே வந்திருந்தது. அட்லாண்டாவில் ஓட்டல் ஒன்றிற்கு அழைத்துப் போய் அவனைச் சிறிது இளைப்பாற வைத்து பின்னர் அவர்களே ஸ்டீபன் தாம்சன் வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.

ஸ்டீபன் தாம்சனின் வீடு அட்லாண்டாவின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருந்தது. அழகான தோட்டத்தின் நடுவே கலைநயத்துடன் அவர் வீட்டைக் கட்டியிருந்தார். சுமார் அறுபது வயதை எட்டியிருந்தாலும் தொப்பை விழாமல் மெலிதான உடல்வாகைக் கொண்டவராய் சதா புன்னகை தவழ்ந்த முகமுடையவராக இருந்தார். பல நாள் பழகியவர் போல் க்ரிஷை அன்பாக வரவேற்றார். அவன் பயணம் சுகமாக இருந்ததா என்று விசாரித்தார்.

சில நிமிடங்கள் பரஸ்பர விசாரிப்புகளில் கழிந்தன.  பின் நிஜமாகவே அவர் எழுத்துக்களைப் படித்ததில் தனக்கு எழுந்திருந்த சந்தேகங்களை க்ரிஷ் நிவர்த்தி செய்து கொண்டான். ஸ்டீபன் தாம்சன் பொறுமையாகப் பதில் சொன்னார். அவர் கஷ்டமான பதில்களைச் சொன்ன போதும் அதைக் கூர்ந்து கேட்டு சிரமம் இல்லாமல் புரிந்து கொண்ட அந்த இளைஞனின் புத்திசாலித்தனம் அவருக்குப் பிடித்திருந்தது. அவருக்கு அவன் இந்தியாவில் அவர் பார்த்த இன்னொரு மனிதனை நினைவுறுத்தினான்…..   

மெல்ல க்ரிஷ் அவரிடம் சொன்னான். “எங்கள் குடும்ப நண்பர் ஒருவரின் சகோதரர் ஒருவரும் உங்கள் தீவிர ரசிகர்….. நீங்கள் இந்தியா வந்திருந்த சமயத்தில் சொந்த ஊரிலிருந்து உங்களைப் பார்க்க வந்த அவர் நீங்கள் திரும்பிப் போகும் வரை வரவில்லை……”

அவர் முகம் பெரிதாக மலர்ந்தது. “நீங்கள் சார்லஸைச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்….. உங்களிடம் பேசும் போது சற்று முன் தான் நானும் அவரை நினைவுகூர்ந்தேன்…… சார்லஸ் உங்கள் குடும்ப நண்பரா?” என்று ஆர்வத்துடன் ஸ்டீபன் தாம்சன் கேட்டார்.

எதிரி அவரிடம் தந்திருந்த பெயர் சார்லஸ் என்பது தெரிந்ததும் க்ரிஷும் அதே பெயரைப் பயன்படுத்தினான். “சார்லஸின் சகோதரர் தான் எங்கள் குடும்ப நண்பர். அவர் தான் இருக்கிற வேலைகளை எல்லாம் விட்டு விட்டு அவர் சகோதரர் உங்களைச் சந்திக்கப் போனதைப் பற்றி எங்களிடம் சொன்னார். ஊர் திரும்பி வந்த பிறகு கூட உங்கள் Mind Programming புத்தகத்தை ஆழமாகப் படித்துக் கொண்டிருந்தாராம்….”

ஸ்டீபன் தாம்சன் புன்னகைத்தார். “நான் அந்த மாதிரி ஒரு கூர்மையான புத்திசாலியை இது வரை பார்த்ததில்லை. மிக நல்ல மனிதரும் கூட. நல்ல அறிவு தாகம் அவருக்கு.  நான் இந்தியாவில் சுற்றுலா போகிற ஊர்களுக்கெல்லாம் வந்தார். பகலில் நான் சுற்றிப் பார்க்கப் போய் விடுவேன். மாலை நேரத்திலிருந்து நள்ளிரவு வரை நாங்கள் நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம்…. நான் இந்தியாவிலிருந்து கிளம்பும் போது தொடர்பில் இருப்போம் என்றெல்லாம் உறுதியாகச் சொன்னார்….. ஆனால் பின் அவர் தொடர்பு கொள்ளவேயில்லை. நான் தொடர்பு கொண்ட போது கூட அவர் போன் நம்பர் உபயோகத்தில் இல்லை என்ற தகவல் தான் எனக்கு வந்தது…. அவர் இப்போது எப்படி இருக்கிறார்….? எங்கே இருக்கிறார்?.....”

க்ரிஷ் சொன்னான். ”உங்களைச் சந்தித்து விட்டு வந்து இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் வீட்டை விட்டுப் போனவர் பிறகு திரும்பி வரவேயில்லை. அவர் எப்படி இருக்கிறார், எங்கே இருக்கிறார் என்று அவர் குடும்பத்திற்கே தெரியாமல் இருக்கிறது. அவரிடமிருந்து அவர்களுக்கும் எந்தத் தகவலும் இல்லை. நான் அமெரிக்கா வந்து உங்களைச் சந்திக்கிறேன் என்று தெரிந்தவுடன் உங்களுடனாவது தொடர்பில் இருக்கிறாரா என்று கேட்டுச் சொல்லச் சொன்னார்கள்……. ஆனால் எனக்குத் தான் கேட்கத் தயக்கமாய் இருந்தது. எத்தனையோ பேரைப் பார்க்கிறீர்கள், இத்தனை வருடங்கள் கழித்து அவரை நீங்கள் நினைவு வைத்திருப்பீர்களோ மாட்டீர்களோ என்று எனக்குச் சந்தேகம்……”

“சார்லஸை ஒரு முறை சந்தித்தவர்கள் அவரை மறக்க முடியாது. பைபிளை வரிக்கு வரி மேற்கோள் காட்டுவார். ஏசு கிறிஸ்து மேல் அசைக்க முடியாத பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்…… “ சொல்லும் போதே ஸ்டீபன் தாம்சனுக்கு குரல் கரகரத்தது.

க்ரிஷுக்குத் தலைசுற்றியது. இது என்ன புதுக்கதை. ஏசு பக்தனா? பைபிளை வரிக்கு வரி மேற்கோள் காட்டுவானா?.... தன் உணர்வுகளை முகம் வரைக் கொண்டு வராமல் லேசான வருத்தத்தை மட்டும் கொண்டு வந்து க்ரிஷ் சொன்னான். “அப்படிப்பட்ட அறிவுஜீவியான, நல்லதொரு ஆள் சொல்லிக் கொள்ளாமல் தலைமறைவானால் அந்தக் குடும்பத்தினருக்கு எப்படி இருக்கும்னு நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை…… அவர்களுக்கு அவர் கடைசி கடைசியாக உங்கள் எழுத்துக்களில் ஆர்வம் வைத்திருந்தது தான் ஞாபகம் இருக்கிறது. வேறெதுவும் ஞாபகம் இல்லை. வேறு எதில் எல்லாம் அவர் ஆர்வம் வைத்திருந்தார் என்று தெரிந்தால் அது சம்பந்தமான இடங்களில் அவரைத் தேடலாமே என்று நினைக்கிறார்கள்…..”

ஸ்டீபன் தாம்சன் சொன்னார். “சார்லஸ் ஏசுகிறிஸ்துவின் கருணையிலும், மன்னித்தலிலும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். மனிதர்கள் அன்பாகவும், அமைதியாகவும், வாழ வேண்டும் என்று நினைத்தார். அப்படி வாழ விடாமல் அவர்களைத் தடுப்பது எது என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார். மனித மனம் எப்படியெல்லாம் ப்ரோகிராம் செய்து கொண்டு அதன்படியே இயங்குகிறது என்று நான் எழுதியதை வைத்து நிறைய பேசினார். விவாதம் செய்தார். தனிமனித மனப் ப்ரோகிராம்கள் போலவே குழுக்கள், கூட்டங்கள் இவற்றிற்கும் நம்பிக்கைகள், கொள்கைகள் என்கிற பெயர்களில் பல ப்ரோகிராம்கள் இருக்கின்றன என்று நான் சொன்னதை பிரமிப்புடன் கவனமாகக் கேட்டார். தனிமனிதனின் மனசாட்சி கூட்டமாக இயங்கும் போது எப்படிக் காணாமல் போகிறது என்பதைப் பற்றி ஒரு நாள்  பேசியிருக்கிறோம்….. இறைவனின் பெயரைச் சொல்லிக் கொண்டு எப்படி எல்லாம் இறைவன் சொன்ன வழிக்கெதிராகவே ஒரு சமுதாயம் போகிறது, அப்போதும் கூட சரியான வழியில் போவதாகவே நம்புகிறது என்பதைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறோம். வருத்தப்பட்டிருக்கிறோம்…….”

திகைப்புடன் க்ரிஷ் கேட்டுக் கொண்டிருந்தான். இது என்ன புதிய அவதாரம்…? மெல்லக் கேட்டான். “உங்களிடம் அமானுஷ்ய சக்திகள் பற்றி அவன் பேசி இருக்கிறானா?”

“இல்லையே” என்று அவர் சொன்னது க்ரிஷுக்கு எதிரியின் புதிய பரிமாணத்தைக் காட்டியது. ஒரே கால கட்டத்தில் ஒரு இடத்தில் நோக்கு வர்மம் படித்தவன் இன்னொரு பக்கம் அதன் சாயலைக் கூடக் காட்டாமல் மனித மனப்போக்கை ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது அந்த எதிரிக்கு மட்டுமே முடிந்த வித்தை….
க்ரிஷ் மெல்லச் சொன்னான். “அவருக்கு நோக்கு வர்மம், அமானுஷ்ய சக்திகள் போன்ற விஷயங்களிலும் ஆர்வம் இருந்ததென்று அவருடைய குடும்பத்தினருக்குத் தெரிய வந்திருக்கிறது. அதனால் உங்களிடம் ஏதாவது அவர் அதைப் பற்றிப் பேசியிருக்கலாம் என்று நான் நினைத்தேன்……..”

“இல்லையே…” என்று சொல்லி இழுத்த ஸ்டீபன் தாம்சன் பின் மெல்லச் சொன்னார். “ஆனால் அவர் கூட நான் இருந்த சந்தர்ப்பங்களில் எதையாவது நான் பாதி அவரிடம் சொல்லி மீதியைச் சொல்ல விருப்பமில்லாமல் தவிர்த்தாலும் அவர் என் மனதைப் படித்து விடுகிற உணர்வு எனக்கு ஒருசில நேரங்களில் ஏற்பட்டிருக்கிறது….. அதை அவரிடம் ஒருமுறை தெரிவித்தும் இருக்கிறேன்……”

“அதற்கு அவர் என்ன சொன்னார்?” க்ரிஷ் ஆர்வத்துடன் கேட்டான்.

“நான் சாதாரண மனிதன்….. எனக்கு அன்பும், கருணையும், இறை நம்பிக்கையும் நிறைந்ததாய் மனித மனம் இருக்க வேண்டும், இந்த உலகம் சமாதான பூமியாகத் திகழ வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தவிர வேறு எதிலும் ஆர்வமும் இல்லை….. அடுத்தவர் மனத்தைப் படிக்கிற சக்தியெல்லாம் என்னைப் போன்ற எளியவனுக்கு எப்படி வரும் என்று அவர் மறுத்திருக்கிறார்…”

க்ரிஷ் அங்கு மேலும் ஒரு மணி நேரம் அவரிடம் பேசிக் கொண்டிருந்தான். தனிமனிதமன ப்ரோகிராம், கூட்டுமனித மன ப்ரோகிராம் பற்றி தான் எதிரி அவரிடம் அதிகம் பேசிக் கொண்டிருந்தான் என்பதால் அது குறித்து அவன் கேட்ட கேள்விகள் என்ன அவர் சொன்ன பதில்கள் என்ன என்பதை விரிவாக அவன் தெரிந்து கொண்டான். ஸ்டீபன் தாம்சன் அந்தப் பேச்சுக்களைக் கூடுமான அளவு அப்படியே சொன்னார். அவன் கேட்ட சில கேள்விகள் போல் யாரும் அவரிடம் கேட்டதில்லை. நல்ல கேள்விகள் வராமல் நல்ல பதில்களும் வருவதில்லை என்பதால் தன்னைப் புதிய புதிய சிந்தனை ஓட்டத்தில் செல்ல வைத்த அவன் கேட்ட வித்தியாசமான கேள்விகளை அவரால் மறக்க முடிந்ததில்லை….. அவற்றை எல்லாம் அப்படியே  சொன்னார். தன் பதில்களையும் சொன்னார்.

க்ரிஷுக்கு சிறிது சிறிதாக திரை விலகுவது போல் இருந்தது. திரை விலகித் தெரிந்ததோ பேராபத்தாய் இருந்தது.

(தொடரும்)
என்.கணேசன்