திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி
கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமிருந்தது. மாஸ்டர் தன் ஆன்மீக இரகசிய இயக்கத்தின்
செல்வாக்கைப் பயன்படுத்தி இருந்தால் கூட்டத்தைத் தவிர்த்து ஐந்தே நிமிடங்களில் தெய்வ
தரிசனம் முடித்து விட்டு வந்திருக்க முடியும் என்றாலும் இன்று சாதாரண மனிதராக கூட்டத்தில்
ஒருவராகவே வரிசையில் நின்று கடவுளை வணங்கி விட்டு கோயில் பிரகாரத்திலேயே கூட்டம் அதிகமில்லாத
ஓரிடத்தில் அமர்ந்து கொண்டார். கண்களை மூடி சிறிது நேரம் அங்கேயே தியானிக்க முயன்றார்.
மனம் ஏனோ அன்று தியானத்தில் லயிக்க மறுத்தது. தியான முயற்சியைக் கைவிட்ட மாஸ்டர் தன்னைக்
கடந்து சென்ற பக்தர்களை அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
கடவுளின் தரிசனம் முடிந்து விட்டு
வந்த ஒரு கூட்டத்தினர் ஏராளமான தங்கம், வெள்ளி, வைர நகைகள், செல்வம் எல்லாம் குவித்து
வைத்திருக்கும் பாதாள அறை எங்கே இருக்கிறது. அதைத் தூரத்தில் இருந்தாவது பார்க்க விடுவார்களா
என்று கேட்டு பேசிக் கொண்டபடி சென்றார்கள். அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டே அவர்கள்
பின்னால் வந்த ஒரு முதியவர் மாஸ்டருக்குச் சில அடிகள் தள்ளி அமர்ந்து கொண்டு தன் முழங்கால்களைத்
தடவிக் கொண்டார். மாஸ்டருக்கு அவரை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருப்பதாய் தோன்றியது.
ஆனால் எங்கே எப்போது என்று தெரியவில்லை. அந்த முதியவர் அவரைப் பார்த்தார். ஆனால் அவர்
பார்வையில் மாஸ்டரை முன்பு பார்த்திருக்கும் அறிகுறி எதுவும் தெரியவில்லை.
இரண்டு நிமிடம் கழித்து அவர்களைத்
தாண்டிப் போன ஒரு கணவன் மனைவியும் பாதாள அறையைப் பற்றிப் பேசிக் கொண்டே போனார்கள்.
அங்கிருக்கும் செல்வத்தின் மதிப்பு சுமார் எவ்வளவு கோடிகள் இருக்கும் என்று மனைவி கேட்க
கணவன் ஐநூறு கோடிக்குக் குறையாமல் இருக்கும் என்றான். அனந்தனின் கோவிலில் அனந்தனை விட
அதிகமாக பாதாள அறை பற்றியும், அங்கிருக்கும் அளவில்லாத செல்வம் பற்றியும் மக்கள் பேசியது
மாஸ்டருக்கு வேடிக்கையாக இருந்தது. அவர் மெல்லப் புன்னகைக்க, கிட்டத்தட்ட அதே எண்ணம்
மனதில் ஓடிய அந்த முதியவரும் மாஸ்டரைப் பார்த்துப் புன்னகைத்தார்.
முதியவர் சொன்னார். “திடீர்னு
ஒரே நேரத்தில் அனந்த பத்மநாப சுவாமி தன்னோட திவ்ய தரிசனத்தைக் காட்டறதும், பாதாள அறையை
மக்களுக்குத் திறந்து விடறதும் நடந்தா அனந்த பத்மநாப சுவாமி முன்னாடி நின்னு கும்பிட
அஞ்சு பேராவது மிஞ்சுவாங்களா?”
மாஸ்டர் அந்தக் காட்சியைக் கற்பனை
செய்து பார்த்து சிரித்தபடி சொன்னார். “பாதாள அறை காலியாகிற வரை பகவானுக்கு மக்கள்
தொந்தரவு இருக்கவே இருக்காது.”
முதியவர் சிரித்தார். அந்தச்
சிரிப்பும், பேச்சும் மாஸ்டர் முன்கூட்டியே அறிந்தவை அல்ல என்ற போதும் எங்கேயோ பார்த்திருப்பது
போன்ற உணர்வை மாஸ்டரால் தவிர்க்க முடியவில்லை. தீவிரமாக மாஸ்டர் யோசித்தார். திடீரென்று
நினைவுக்கு வந்தது. அவருடைய ஜாதகத்தை யாரோ பார்த்துக் கொண்டிருப்பதாக உணர்ந்தாரே…..
அந்த ‘யாரோ’ போலத் தான் முதியவர் தெரிந்தார். மாஸ்டர் உடனே கேட்டார். “நீங்க ஜோதிடரா?”
அந்தக் கேள்வி முதியவரை ஆச்சரியப்படுத்தியது
போல் தெரிந்தது. அவர் மாஸ்டரைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னார். “ஒரு காலத்தில் தொழில்
ஜோதிடமாய் தான் இருந்தது….. இப்ப இல்லை….. இப்ப மகன் அந்தத் தொழிலைப் பார்க்கிறான்…..”
“உங்க மகன் பார்க்க உங்களை மாதிரியே
இருப்பாரோ?”
“இல்லையே…. அவன் அவங்கம்மா ஜாடை…
ஏன் கேட்கறீங்க?”
மாஸ்டர் மெல்லச் சொன்னார். “சில
நாளுக்கு முன்னால் என் ஜாதகத்தை யாரோ பார்த்துகிட்டிருக்கிற மாதிரி ஒரு உணர்வு. பார்த்துகிட்டிருந்த
ஆள் உங்க மாதிரி தெரிஞ்சார். அது தான் கேட்டேன்…..”
சதாசிவ நம்பூதிரி திகைத்தார்.
எங்கோ பார்த்த மாதிரி இருந்தது என்று சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. அப்படி உணர்ந்ததாய்ச்
சொல்லி அவர் கேட்பது முதல் தடவை. அவர் கண்களைக் சுருக்கிக் கொண்டு மாஸ்டரைக் கூர்ந்து
பார்த்தார். பல வருடங்கள் கழித்து சில நாட்களுக்கு முன் அவர் பார்த்தது இரண்டு ஜாதகங்களை…..
வயது, தோற்றம் எல்லாம் வைத்துப் பார்க்கையில் ஒரு ஜாதகருக்கு இவர் ஒத்து வருகிறார்……
தயக்கத்துடன் சதாசிவ நம்பூதிரி கேட்டார். “உங்க நட்சத்திரம் புனர்பூசமா?”
இப்போது திகைத்தது மாஸ்டர். “ஆமாம்” என்றார். சதாசிவ நம்பூதிரி தன் முழங்கால்
வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல எழுந்து வந்து மாஸ்டர் அருகே அமர்ந்தார். லக்கினம்
ஜாதக அமைப்பு பற்றியெல்லாம் சதாசிவ நம்பூதிரி ஒவ்வொன்றாகச் சொல்ல மாஸ்டருக்கு எல்லாவற்றிற்கும்
‘ஆமாம்” என்று தான் சொல்ல வேண்டி வந்தது. எல்லாவற்றையும் அந்த முதியவர் மிகச் சரியாகச்
சொன்னார்.
மாஸ்டர் திகைப்பு மாறாமல் கேட்டார்.
“அப்படியானால் என் ஜாதகத்தை நீங்கள் பார்த்தது சரிதானா? என் ஜாதகத்தை உங்களிடம் தந்தது
யார்? ஏன் பார்த்தீர்கள்?....”
“ஒரு புண்ணியவான் உங்கள் ஜாதகத்தையும்
இன்னொருத்தர் ஜாதகத்தையும் கொண்டு வந்து கொடுத்து பார்க்கச் சொன்னார். நான் பார்க்கறதில்லைன்னு
சொன்ன பிறகும் விடாமல் வற்புறுத்திப் பார்க்கச் சொன்னார். விசேஷ ஜாதகங்கள்னு சொன்னார்…..
பார்த்துப் பலன் சொன்னேன்….. ஆனால் அந்த ஜாதகர்களில் ஒருத்தரை சில நாட்கள்லயே நேர்ல
பார்ப்பேன்னு நான் கனவுலயும் நினைக்கல…..”
மாஸ்டர் திகைப்பு அதிகரிக்க அடுத்த
கேள்வியைக் கேட்டார். “இன்னொரு ஜாதகம் யாரோடது?”
“போன அமாவாசை சமயத்துல செத்திருக்க
வேண்டிய ஒரு ஜீனியஸ் இளைஞனோட ஜாதகம்…..” என்று சதாசிவ நம்பூதிரி சொல்ல மாஸ்டருக்கு
அது யார் ஜாதகம் என்று உடனடியாகத் தெரிந்தது. அந்த இரண்டு ஜாதகங்களையும் சேர்த்துக்
கொண்டு போய் இவரிடம் கொடுத்த ’புண்ணியவான்’ பற்றி முழுவதுமாக உடனடியாகத் தெரிந்து கொள்வது
முக்கியமாகத் தோன்றியது.
மேலும் ஏதோ சொல்ல முற்பட்ட சதாசிவ
நம்பூதிரியை மிகுந்த மரியாதையுடன் கைகூப்பி வணங்கிய மாஸ்டர் “நானே தெரிஞ்சுக்கட்டுமா”
என்றார். குழப்பத்துடன் சதாசிவ நம்பூதிரி தலையசைத்தார். அடுத்த கணம் மாஸ்டரின் சக்தி
அலைகள் அவர் மனதை ஊடுருவிப் பார்க்க ஆரம்பித்தது. இது போன்றதொரு ஊடுருவலை சில நாட்களுக்கு
முன் ஒரு முறை நள்ளிரவில் அவர் உணர்ந்திருக்கிறார். அது ஆபத்து என்றும் தீமை என்றும் அன்று அறிந்திருக்கிறார். ஆனால்
இப்போதைய ஊடுருவலில் அந்த உணர்வுகள் அவருக்கு வரவில்லை. இந்த மனிதரின் ஜாதகத்தை அவர்
விரிவாக அலசி இருக்கிறார். இந்த மனிதரின் நல்லெண்ணம் குறித்து அவருக்கு எந்தச் சந்தேகமும்
இல்லை. கோயிலின் உள்ளே தெய்வத்தின் ஆசிர்வாதத்துடன் நடக்கும் நன்மையாகவே இதை எண்ணி
சதாசிவ நம்பூதிரி சாந்தமாக அமர்ந்திருந்தார்….
மனோகர் சதாசிவ நம்பூதிரியைச்
சந்தித்து ஜாதகங்களைப் பார்க்க வற்புறுத்திய அந்தக் கணத்திலிருந்து மாஸ்டரால் நடந்தவை
அனைத்தையும் அறிய முடிந்தது. திரைப்படம் பார்ப்பது போல் பார்த்து வந்த மாஸ்டருக்கு
மர்ம மனிதன் நள்ளிரவில் வெளியே நின்று சதாசிவ நம்பூதிரியைக் கவனித்த காட்சியில் எவ்வளவு
முயன்றும் அந்த வெளியிருட்டை ஊடுருவி மர்ம மனிதனை உணர முடியவில்லை. சதாசிவ நம்பூதிரி
உணர்ந்ததை மட்டுமே அவரால் உணர முடிந்தது. அதே போல மர்ம மனிதன் நேரில் வந்து சதாசிவ
நம்பூதிரியிடம் பேசிய காட்சியிலும் அவன் பேசியது தெளிவாகக் கேட்டதே ஒழிய அவன் மங்கலாகவே
தெரிந்தான். அவன் முன்னெச்சரிக்கையாக தன்னைச் சுற்றி ஒரு சக்தி அரணை எழுப்பி விட்டே
வந்திருப்பது போல் தோன்றியது. வேடம் ஏதாவது அணிந்தே அவன் வந்திருப்பான் என்றாலும் வேடத்துடன்
பார்க்க முடிந்தாலும் கண்கள் மூலமாகவாவது கூடுதலாக அவனை அறிய முயன்ற மாஸ்டருக்கு அது
ஏமாற்றமாக இருந்தது. ஏமாற்றத்தை ஒதுக்கி வைத்து விட்டு மாஸ்டர் அவன் கேட்ட கேள்விகளையும்,
சதாசிவ நம்பூதிரி சொன்ன பதில்களையும் மிகவும் கவனமாகக் கேட்டார். முன்பு இருந்த சந்தேகங்கள்
விலகி, எதிரி வேற்றுக்கிரகவாசி அல்ல, அந்த மர்ம மனிதன் தான் என்பது மாஸ்டருக்கு இப்போது
தெளிவாகியது.
மாஸ்டரின் சக்திகளைப் பற்றி எதிரி
அறிந்திருந்ததும், க்ரிஷ் எப்படி தனக்கு இணையான எதிரியாவான் என்று அறிய எதிரி ஆர்வம்
காட்டியதும் மாஸ்டரை யோசிக்க வைத்தது. அதற்கு சதாசிவ நம்பூதிரி சொன்ன பதில் அவரைப்
புன்னகைக்க வைத்தது.
“அந்தப் பையன் சாகாமல் இருந்தான்னா
சாதாரணமா இருந்துட மாட்டான். இப்போதைக்கு அவன் இன்னும் விதையா தான் இருக்கலாம். ஆனா
ஒரு விதைக்குள்ளே எத்தனை மரங்கள், எத்தனை காடுகள் ஒளிஞ்சிருக்குன்னு யாரால சொல்ல முடியும்!”
மாஸ்டரின் ஊடுருவல் நின்றவுடன்
உணர்ந்த சதாசிவ நம்பூதிரி ஆர்வத்துடன் கேட்டார். “அந்த இன்னொரு ஜாதகன் உயிரோட தான்
இருக்கிறானா? உங்களுக்கு அவனைத் தெரியுமா? உங்க ரெண்டு பேருக்கும் எதிரி யார்னு நீங்க
கண்டுபிடிச்சுட்டீங்களா?”
“அந்த ஜாதகன் உயிரோட தான் இருக்கான்
ஐயா. எங்க ரெண்டு பேருக்கும் எதிரி தான் எங்க ஜாதகங்களை உங்க கிட்ட காட்டியிருக்கான்.
அவன் யார்னு எங்களால இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை….”
சதாசிவ நம்பூதிரி அதிர்ச்சியுடன்
மாஸ்டரைப் பார்த்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
Very interesting twist. Thanks sir for this interesting novel
ReplyDeleteகதை அற்புதமாக போகிறது
ReplyDeleteமுக்கியமான இடத்தில் தொடரும்
ஆஆஆஆஆஆஆஆ
super sir, very very interesting
ReplyDeleteஎன்ன ஒரு அர்புதமான திருப்பம்...?
ReplyDeleteமுதியவர்னு நீங்க குறிப்பிடும் போதே அது சதாசிவ நம்பூதிரியா தான் இருக்கும்னு நினைத்தேன்... சதாசிவ நம்பூதிரிக்கு மர்ம மனிதனின் ஜாதகம் தெரியுமே?... அதை வைத்து மாஸ்டர் அறிந்து கொள்வாரா????
மர்ம மனிதன் எப்போதும் பாதுகாப்பாக செயல்படுவது சூப்பர்... அவன் விட்ட சிறு ஓட்டை வழியாக மாஸ்டர்,கிரிஷ்...அவனை நெருங்குவதும் சூப்பர்...
“போன அமாவாசை சமயத்துல செத்திருக்க வேண்டிய ஒரு ஜீனியஸ் இளைஞனோட ஜாதகம்…..”
ReplyDelete... சதாசிவ நம்பூதிரி என்று கூறுவதில்....
ஒரு முதியவர்..."ஜீனியஸ்" என்ற வார்த்தையை பயன்படுத்துவது... சற்று ஒட்டாதது போல எனக்கு தோன்றுகிறது...
மாஸ்டர் திருவனந்தபுரம்,, என்றதும் எடக்கு ஜோதிடர் தான், ஞாபகம் வந்தார் ...
ReplyDeleteமாஸடருக்கு இப்ப மர்ம யார், தான், எதிரி என்று தெரிந்து விட்டது....
ஆனால் அவனைப் பற்றி அறியமுடியவில்லை...
அருமை
ReplyDeleteமிக அருமை.கற்பனை என்றாலும் உங்கள் எழுத்து நடையில் கதையினூடே நாங்களும் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்தியது.அடுத்த வியாழன் வரை பொறுமையாக இருக்க முடியவில்லை.
ReplyDeleteIs it available mind programming by stephen thompson. Pl. reply
ReplyDeleteNo. It is a fictitious name
ReplyDeleteமாஸ்டரால் அவன்தான் எதிரி என்று மட்டுமே கணிக்க முடிகிறது கிரிஷ் ஐயப்பாட்டில் இருந்து விலகிவிட்டான் waiting......
ReplyDelete