பீஜாப்பூர் சுல்தான் ஆதில்ஷாவுக்கு உடனடியாக அந்தச் செய்தியை
நம்ப முடியவில்லை. கோட்டை ஒன்றைக் கட்டுவதற்கு அரசர்களே திணறும் போது சிவாஜியால் எப்படி
முடியும் என்ற யோசனையே மேலிட்டது.
“அந்த
அளவுக்குச் செல்வம் சிவாஜியிடம் இருக்கிறதா என்ன?” என்று ஒற்றனைக் கேட்டார்.
“அவனுக்கு
டோரணா கோட்டையில் புதையல் ஒன்று கிடைத்திருக்கிறது அரசே! அந்தப் புதையலை வைத்துத் தான்
சிவாஜி டோரணா கோட்டையை புதுப்பித்திருக்கிறான், ஆயுதங்கள் பல வாங்கியிருக்கிறான், மூர்பாத்தில்
புதிதாய் கோட்டை கட்ட ஆரம்பித்திருக்கிறான்…..”
“டோரணா
கோட்டையில் புதையல் கிடைத்தால் அது எனக்கல்லவா சொந்தம். அதை இங்கே அனுப்பி வைப்பதை
விட்டு அவன் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ள எப்படி துணிந்தான். அங்குள்ள மக்கள் என்ன
சொல்கிறார்கள்?”
”அங்குள்ள
மக்கள் அவனை இறைவனின் பிரதிநிதியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் அரசே. அந்தப்
புதையலோடு பவானிதேவி சிலையும் சேர்ந்து கிடைத்திருக்கிறது. அது அந்த தெய்வத்தின் ஆசிர்வாதம்
என்று அவன் பார்க்கக் கிடைக்கும் அனைவரிடமும் சொல்லிக் கொண்டு இருக்கிறான். அதை மக்கள்
நம்புகிறார்கள்….”
ஆதில்ஷா
யோசித்தார். டோரணா கோட்டையில் புதையல் இருப்பதை அறிந்தே அவன் கைப்பற்றியிருக்கக்கூடுமோ
என்ற சந்தேகம் அவருக்கு வந்தது. சிவாஜி கட்ட ஆரம்பித்திருக்கும் கோட்டையின் அமைப்பு
பற்றி ஒற்றனிடம் கேட்டார். அவன் சொல்லிய தகவல்கள் அவருக்குக் கவலையையும் ஆத்திரத்தையும்
அளித்தன.
நம்பிக்கைக்குப்
பாத்திரமான சிலரை அழைத்து ஆதில்ஷா அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்கள் இரண்டு பிரிவாய்
பிரிந்து அவரை மேலும் குழப்பினார்கள். சிலர் ஷாஹாஜியும் சிவாஜியும் சேர்ந்து நடத்தும்
நாடகம் இது என்றார்கள். அவர்கள் முன்பே ஷாஹாஜியும், சிவாஜியும் சுல்தானிடம் பெற்றிருந்த
நன்மதிப்பை வெறுத்தவர்கள். சிலர் சிவாஜியின் இளமையையும், சுறுசுறுப்பையுமே காரணமாய்
சொன்னார்கள். அவன் சூட்டிப்பானவன், ஏதாவது பெரிதாகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுபவன்.
அதனால் உற்சாகமாக இதில் இறங்கியிருக்கிறான் என்றும் ஷாஹாஜிக்கு இதில் பங்கிருக்க வாய்ப்பில்லை
என்றும் சொன்னார்கள். அவர்கள் ஷாஹாஜியுடன் நட்பு பாராட்டியவர்கள்.
ஒரு
சிறுவன் எல்லை மீறி நடந்து கொள்கிறான், கண்டித்து வைத்தால் சரியாகி விடும், ஷாஹாஜியிடம்
கண்டித்து வைக்கச் சொன்னால் சரியாகி விடும் அல்லது பயமுறுத்தி வைத்தால் அடங்குவான்
என்ற அளவிலேயே அனைவரும் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் ஆதில்ஷாவுக்கு சிவாஜியை சாதாரணச்
சிறுவனாய் அலட்சியப்படுத்தி விட முடியவில்லை. துடிப்பும், அறிவுகூர்மையும், சமயோசிதமும்
கொண்டவனாக சிவாஜி இருந்தது எச்சரிக்கையின் அவசியத்தை அவருக்கு வலியுறுத்தியது. அதே நேரத்தில் பீஜாப்பூர் அரசுக்கே சவால் விடுகிறவனாய் சிவாஜியை
உயர்த்திப் பிடிப்பதும் அவருக்கு முட்டாள்தனமாகப் பட்டது. அதனால் நீண்ட ஆலோசனையின்
முடிவில் ஆதில்ஷா மூர்பாத்தில் கோட்டை கட்டும் பணியை உடனே நிறுத்தும்படி சிவாஜிக்கு
ஆணை பிறப்பித்து ஒரு மடலும், நடந்தவற்றுக்கு விளக்கங்கள் கேட்டு ஷாஹாஜிக்கு ஒரு மடலும் அனுப்பினார்.
ஷாஹாஜிக்கு தாதாஜி கொண்டதேவின் மடலும், ஆதில்ஷாவின் மடலும்
அடுத்தடுத்து வந்து சேர்ந்தன. தாதாஜி கொண்டதேவின் மடலில் சிவாஜியின் நடவடிக்கைகள் பற்றி
விரிவாகவே தகவல்கள் இருந்தன. ஷாஹாஜி அந்த மடலைப் பல முறை படித்தார். இந்த முறை தாதாஜியின்
மடலில் தனிப்பட்ட மனவருத்தங்கள் தெரியவில்லை. தெரிவிக்க வேண்டியதை தெரிவிக்கும் மனப்பாங்கே
தெரிந்தது.
முன்பே
டோரணா கோட்டையை மகன் கைப்பற்றிய விதம் ஷாஹாஜியைத் திகைக்க வைத்திருந்தது. அவருக்குத் தெரிந்து இது வரை எந்தக் கோட்டையும்
இப்படி சாமர்த்தியமாகக் கைப்பற்றப்பட்டதில்லை. இப்போது அவனுக்குப் புதையலும் கிடைத்து
மூர்பாத்தில் வலிமையான ஒரு கோட்டையும் கட்டிக் கொண்டிருக்கும் தகவலைப் படிக்கையில்
அவர் மனதில் பெருமிதமே தங்கியது. மகன் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுகிறான் என்று தெரிந்தாலும்
கூட, அவனுக்கு உதவ முடியாத நிலையில் அவர் இருந்தாலும் கூட, அவன் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்
கொள்ளும் விதத்தை அவரால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. அவன் இறைவன் ஒருவனை நம்பியே
இதில் இறங்குவதாய் முன்பு தெரிவித்திருந்தான். அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை
என்பதை அவர் இப்போது கண்கூடாகப் பார்க்கிறார்…..
அடுத்ததாக
ஆதில்ஷாவின் மடலைப் படித்தார். ஆதில்ஷாவின் மடலில் அவர்களுக்கிடையே இருந்த நட்பின்
தொனி சுத்தமாகத் தெரியவில்லை. அரசன் பிரஜையிடம் விளக்கம் கேட்கும் கண்டிப்பான தொனியே
இருந்தது. அவர் ஆதில்ஷாவுக்குப் பதில் எழுதினார்.
“சர்வ
வல்லமையும் பொருந்திய சுல்தான் அவர்களுக்கு தங்களின் ஊழியனான ஷாஹாஜி தலைவணங்கி எழுதிக்
கொண்டது.
மூர்பாத்
மலையில் கட்டப்பட்டு வரும் கோட்டை குறித்து தாங்கள் கேட்டெழுதியதைப் படிக்கும் வரை
நான் அதுபற்றி ஒன்றும் அறியேன். இது குறித்து சிவாஜி என்னிடம் விவாதிக்கவோ, அனுமதி
பெறவோ இல்லை. இயல்பிலேயே புதிய முயற்சிகளில் துடிப்பாகவும் வேகமாகவும் இறங்கக்கூடிய
அவன் சகாயாத்ரி மலைப்பகுதியில் நம் அரசிற்கு சொல்லிக் கொள்ளும்படியான வலிமையான கோட்டைகள்
இல்லை என்பதற்காக இந்தப் புதிய கோட்டையை அமைக்கத் தீர்மானித்தானா என்பதை நான் அறியேன்.
நோக்கம் எதுவாக இருப்பினும் தங்களின் அனுமதி பெறாமல் அவன் இந்த முயற்சியில் இறங்குவதை
நான் பெரும் குற்றமாகவே கருதுகிறேன்.
அவனுக்குப்
புத்திமதி சொல்லி நல்வழிப்படுத்தும்படி நான் தாதாஜி கொண்டதேவ் அவர்களைக் கேட்டுக் கொண்டு
இப்போதே கடிதம் அனுப்புகிறேன். கோட்டை நிர்மாணப்பணியையும் உடனே நிறுத்தி வைக்கும்படி
சிவாஜிக்கு ஆணையிட்டும் இப்போதே மடல் அனுப்புகிறேன்.
தங்கள்
விருப்பமே என் விருப்பம், தங்கள் நலனே என் நலன் என்று முன்பும், இன்றும், என்றும் வாழும்
தங்கள்
ஊழியன்
ஷாஹாஜி
ஆதில்ஷாவுக்கு
எழுதியபடியே தாதாஜி கொண்டதேவுக்கும், சிவாஜிக்கும் கடிதங்கள் எழுதி அனுப்பிய ஷாஹாஜி
இந்த விஷயத்திலிருந்து மானசீகமாக விலகிக் கொண்டார். எந்த இறைவனை நம்பி அவர் மகன் இந்த வேலையில் இறங்கியிருக்கிறானோ
அந்த இறைவன் அவர் மகனைக் கடைசி வரை காத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற பிரார்த்தனையைத்
தவிர சிவாஜிக்காக அவர் எதுவும் செய்வதாக இல்லை….
தந்தை அனுப்பிய மடலையும், சுல்தான் அனுப்பிய மடலையும் கர்மசிரத்தையுடன்
படித்து விட்டு அவற்றை சிவாஜி எடுத்து வைத்துக்
கொண்டான். தாதாஜி கொண்டதேவ் தனக்கு ஷாஹாஜி அனுப்பிய மடலை சிவாஜிக்குப் படித்துக் காட்டினார்.
அதையும் கவனமாகக் கேட்டுக் கொண்டான். தாதாஜி அவன் இறங்கியிருக்கும் செயலில் காத்திருக்கும்
ஆபத்துகளை அவனுக்குச் சொன்னார். அதையும் சிவாஜி முகம் சுளிக்காமல் கவனமாகக் கேட்டுக்
கொண்டான். பின் நீண்டதொரு மௌனம் அவர்களுக்குள் நிலவியது.
தாதாஜி
கொண்டதேவ் களைப்புடன் கண்களை மூடிக் கொண்டார். தாதாஜி சில நாட்களாகவே உடல்நிலையில்
பலவீனமாகிக் கொண்டு வருவதை சிவாஜி கவனித்து வருகிறான். மனிதர் சீக்கிரமே களைத்துப்
போகிறார். ஒரு காலத்தில் இருந்த சக்தியும் சுறுசுறுப்பும் அவரிடம் இப்போதெல்லாம் இல்லை.
நிர்வாகத்தில் அவருக்கு உதவி செய்ய சில காலம் முன்பே சிலரை ஷாஹாஜி அனுப்பி இருந்தார்.
அவர்களில் ஒருவர் ஷாஹாஜியின் இரண்டாம் மனைவியின் சகோதரரான பாஜி மொஹிடே. அவருக்கு சுபா
பிராந்திய நிர்வாகப் பொறுப்பினையும், மற்றவர்களுக்கு மற்ற பகுதிகளின் நிர்வாகப் பொறுப்பினையும்
தந்து தாதாஜி அவர்களை மேற்பார்வையிட்டுக் கொண்டும் அவர்களிடம் இருந்து கணக்குகளையும்,
வசூல்தொகைகளையும் பெற்று நிர்வகித்து வந்தார். இப்படி இத்தனை பேர் அவருக்கு நிர்வாக
உதவிக்கு இருந்தாலும் அத்தனை பேர் கணக்கையும், நடவடிக்கைகளையும் கவனித்து வருவது இந்த
வயோதிகத்தில் அவருக்குச் சுலபமாக இல்லை.
அவருக்குச்
சமர்ப்பிக்கப்படும் கணக்குகளை அன்றன்றே சரிபார்க்காமல் அவர் இரவில் உறங்கப் போன நாள்
ஒன்று இருந்ததேயில்லை. இரவு விளக்குகளின் வெளிச்சத்தில் தனிமையில் அமர்ந்து அத்தனை
கணக்கையும் பார்த்துக் கொண்டிருக்கும் ஆசிரியரிடம் சிவாஜி “உறங்கச் செல்லுங்கள் ஆசிரியரே.
கணக்கை நாளை பார்த்துக் கொள்ளலாம்….” என்று சொல்வதுண்டு.
”நாளை
அதற்கான வேலையை எடுத்துக் கொண்டே வருகிறது சிவாஜி. இன்றைய வேலையை நாளை வைத்துக் கொள்வதில்
இரண்டு நாள் வேலையும் பாழாகி விடும்….” என்று தாதாஜி சொல்வார்.
என்ன
சொன்னாலும் வேலை முடியாமல் உறங்கப் போக மாட்டார் என்பதை உறுதியாக அறிந்ததால் சிவாஜி
இரவு வேளைகளில் தானும் அவருக்கு உதவச் சேர்ந்து கொள்வதுண்டு. கணக்கு எழுதும் போது சிறு
பிழை ஏற்பட்டாலும் உடனடியாக அவர் சுட்டிக் காட்டுவார். பெரிய எண்களின் கூட்டல் கழித்தல்களில்
அவன் எழுத எழுத அவர் முடிவுத் தொகையைக் கூறுவதுண்டு. இந்த வயோதிகத்திலும் உடலின் சோர்வை
அவர் மூளை அடைந்து விடவில்லை என்று சிவாஜி வியப்பான்.
எல்லா
வேலைகளும் முடித்து விட்டு பெரும் களைப்பால் உறங்கப் போகும் அவர் மறுநாள் அதிகாலை எழவும்
அவர் சிரமப்பட்டார். அவர் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாக ஆரம்பித்தது. சிவாஜி அவர்
அந்திம காலத்தை நெருங்க ஆரம்பத்ததை வருத்தத்துடன் உணர்ந்தான்….
(தொடரும்)
என்.கணேசன்
Sivaji rocks!
ReplyDeleteபல நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த கேரக்டர்களைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள் அருமை. அருமை.
ReplyDeleteinteresting
ReplyDeleteBook pls
ReplyDeleteநாளை அதற்கான வேலையை எடுத்துக் கொண்டே வருகிறது சிவாஜி. இன்றைய வேலையை நாளை வைத்துக் கொள்வதில் இரண்டு நாள் வேலையும் பாழாகி விடும்….” என்று தாதாஜி சொல்வார்.
ReplyDeleteReading many times .... Golden words of time management.
இந்த பகுதியும் அருமை... "சிவாஜி வரும் எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வான்?"..என்பதை அறிய காத்திருக்கிறேன்.
ReplyDelete