இஸ்ரோ
டைரக்டர் பெரும் உற்சாகத்துடன் சொல்ல ஆரம்பித்தார். “நம்ம ஆராய்ச்சில முக்கியமான புகைப்படங்கள்
கருப்படிச்சு தெளிவில்லாமல் போனது நமக்குப் பெரிய பின்னடைவுன்னாலும் அந்தக் கருப்புப்
பறவையோட சில புகைப்படங்களாவது கிடைச்சிருக்கிறது நம்ம பாக்கியம்னு தான் சொல்லணும்.
க்ரிஷ் சாகாததையும் நம்ம அதிர்ஷ்டம்னு நாம சேர்த்திக்கலாம். ஏன்னா அவன் இப்ப எதுவும்
சொல்லாட்டியும் எதிர்காலத்துலயாவது கண்டிப்பா தன்னோட அனுபவத்தை வெளியே சொல்லாம இருக்க
மாட்டான். அவனை மாதிரி ஒரு ஜீனியஸ், விஞ்ஞான வளர்ச்சில ஈடுபாடு இருக்கிறவன், நாட்டுப்பற்று
இருக்கிறவன், நம்ம நாட்டுல நடந்துகிட்டிருக்கிற ஒரு முக்கியமான ஆராய்ச்சிக்குத் தேவைப்படற
தகவல்களை நிச்சயம் மறைச்சு வைக்க மாட்டான்னு நினைக்கிறேன். நம்ம இந்த ஆராய்ச்சி வெற்றிகரமா
முடிஞ்சா உலக அளவுல இந்திய விண்வெளி ஆராய்ச்சி சிறப்பா பேசப்படும்னு நினைக்கிறேன்…..”
உமா
நாயக் அவர் பேசுவதைக் கூர்ந்து கவனித்தபடி தலையாட்டினாள். புதுடெல்லி உயரதிகாரிக்கு
அரசியல்வாதி மாதிரி ஜவ்வாக இழுக்கும் அந்தப் பேச்சு காதில் நாராசமாக விழுந்து கொண்டிருந்தது.
’அந்த முக்கியத் தகவலை முதலில் சொல்லடா’ என்று மனதிற்குள் கத்தினான். வயிற்றுப்போக்கால்
அவஸ்தைப்படுபவன் போல அமர்ந்திருந்த அந்த அதிகாரிக்கு இந்த ஆராய்ச்சியில் உண்மையான ஈடுபாடு
இருப்பது போலத் தெரியவில்லை என்பதால் டைரக்டர் முதல் சில வினாடிகளிலேயே அவனைப் பார்த்துப்
பேசுவதை நிறுத்தி விட்டிருந்தார். அதனால் அவனுடைய கடுமையான முகபாவத்தை அவர் கவனிக்கவில்லை.
ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த உமா நாயக்கிடம் அவர் உற்சாகத்துடன் தொடர்ந்து சொன்னார்.
“அந்தக்
கருப்புப் பறவையோட படங்களை ஒரு தனிக்குழு தீவிரமா
ஆராய்ச்சி செய்துட்டிருக்காங்க. ஒரு வாரத்துக்குள்ளே ஒரு முடிவை எட்டுவாங்கன்னு எதிர்பாக்கிறேன்.
இந்த நிலையில நாசால இருக்கிற நம்ம விஞ்ஞானி ஒருத்தர் கிட்ட நம்ம ஆராய்ச்சி பத்தி எதுவும்
சொல்லாம, சமீப காலங்கள்ல பூமில வித்தியாசமான
ஊடுருவல் அல்லது மாற்றங்கள்னு சொல்லக்கூடிய வகையில் ஏதாவது தகவல் கிடைச்சிருக்கான்னு
கேட்டேன். அப்ப அவர் “கடந்த நாலஞ்சு மாசமா அமேசான் காடுகள் பகுதிகள்ல தொடர்ச்சியாகவும்,
தென்னிந்தியப் பகுதில அமாவாசை நாட்களில் மட்டுமாகவும் அபூர்வமான சக்தி அலைகளை உணர முடிஞ்சுதுன்னும்
தெரிவிச்சார்…..”
மர்ம
மனிதன் உடனே புதுடெல்லி உயரதிகாரி மனதில் கட்டளையிட்டுக் கேட்க வைத்தான். “அந்த அபூர்வ
சக்தி அலைகள் பற்றின முழு விவரங்களையும் கேட்டீங்களா?”
பேசியது
அவன் வாய் தான் என்றாலும் புதுடெல்லி உயரதிகாரிக்கு அந்தக் கேள்வி அவன் கேட்டதல்ல என்று
ஏனோ தோன்றியது. என்ன நடக்கிறது?
டைரக்டர்
வேறு வழியில்லாமல் அவன் பக்கம் திரும்பினார். “கேட்டேன். அவர்கள் அந்த அலைகளின் தன்மைகளை
ஆராய்ந்து கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். முடிந்தவுடன் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வதாகச்
சொல்லி இருக்கிறார்….. நான் அழைத்தது எதற்காக என்றால் புகைப்படங்கள் மூலமாக நாம் தவற
விட்டதையும் அந்த அலைகள் ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லத்தான்…….”
‘இதெல்லாம்
ஒரு முக்கியத்தகவலாடா?’ என்று புதுடெல்லி உயரதிகாரி நினைத்தாலும் மர்ம மனிதன் டைரக்டரின்
வார்த்தைகளில் திருப்தி அடைந்தான். டைரக்டர் புத்திசாலி தான். சரியான பாதையிலேயே போகிறார்……..
இதிலிருந்து அறியப்போகும் தகவல்கள் அவனுக்கு மிக உபயோகமாகவே இருக்கும்…..
செந்தில்நாதன்
சொன்னதை எல்லாம் சுவாரசியத்துடன் க்ரிஷ் கேட்டுக் கொண்டான். எதிரி அவனை நிறையவே பிரமிக்க
வைத்தான். என்ன மனிதனவன்? ”ஒன்று வேண்டும்
என்று தீர்மானித்து விட்டால் அவன் அது கிடைக்கும் வரை விட மாட்டான். பின்வாங்க மாட்டான்.
ஆசையை மாற்றிக் கொள்ள மாட்டான்.. அத்தனை மன உறுதி. அத்தனை பொறுமை. அத்தனை விடாமுயற்சி…..
விழித்திருந்த சமயங்களில் எல்லாம் சொல்லிக் கொடுத்ததைப் பயிற்சி செய்து கொண்டிருப்பான்…..
கவனம் சிதறுவது என்பதே அவனுக்குக் கிடையாது. கவனச்சிதறலுக்கு அவன் மனதில் அனுமதி இல்லை
என்பது போல் தோன்றும்…. அந்த அளவு கட்டுப்பாட்டுடன், விடாமுயற்சியுடன், இது வரை கண்டிராத
அறிவுடன் அவன் கற்றுக் கொண்டான்…….”
சாதாரண
இலக்கிலிருந்து சரித்திரம் படைக்கும் இலக்கு வரை நிச்சயமாய் சென்றடைய இதல்லவா தேவையான
மனநிலையும், முயற்சியும்? எடுத்துக் கொண்ட இலக்கில் எப்படி முயற்சி செய்ய வேண்டும்
என்று எதிரி அழகாய் பாடம் எடுப்பதாய் மனம் சொன்னது. இப்படி எல்லாம் திடமாக முன்னேறியவனை இதை விடக்குறைந்த விதத்தில்
ஜெயித்து விட முடியாது என்பது க்ரிஷுக்குப் புரிந்தது. அந்தப் பக்கிரி பதினைந்து வருடங்களில்
கற்றுக் கொண்டதை அவன் மூன்றே வருடங்களில் கற்றுக் கொண்டான் என்ற தகவல் வேகமாய் இலக்கை
அடைய விரும்பும் அவனுக்குச் சரியான நேரத்தில் கிடைத்திருக்கும் அருமையான அறிவுரை இது
என அடையாளம் காட்டியது. அந்த வழியையே பின்பற்றியாக வேண்டும் என்று க்ரிஷ் மனதில் உறுதி
எடுத்துக் கொண்டான்.
எதிரியின்
ஒரே ஒரு பழக்கம் மட்டும் பின்பற்றுவது மிகவும் கஷ்டம் என்று அவனுக்குத் தோன்றியது. ’அவன் தினமும் அதிகமாக மூன்று மணி நேரம் தான் தூங்குவான்.’
அது முடியும் என்று க்ரிஷுக்குத் தோன்றவில்லை. க்ரிஷ் எதிரியைப் பற்றி நிறைய யோசித்தான்.
கேள்விப்பட்டதிலிருந்து எதிரியை உருவகப்படுத்திப் பார்த்தான். எதிரியின் மூளை போகும்
போக்கு புரிய ஆரம்பித்தது. ஆனால் அழிவுக்கு அழைத்துச் செல்லும் அவன் மனம் பற்றித் தான்
அவனுக்குப் புரியவில்லை. சிறிது யோசித்து விட்டு க்ரிஷ் தன் மனதை எதிரியிடமிருந்து
திருப்பி மாஸ்டர் சொல்லிக் கொடுத்த பாடத்தின் பக்கம் திருப்பினான்.
இரவு
சாப்பாட்டின் போதும் உதயும், கமலக்கண்ணனும் அரசியல் நிலைமை பற்றிப் பேசிக் கொண்டிருந்த
போது பழைய வழக்கப்படி சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்து போய் விடாமல் அங்கேயே
அமர்ந்திருந்தான். பத்மாவதி ஒரு கட்டத்தில் கணவரை இடைமறித்தாள்.
”அரசியல்
பேசினது போதும். இவனுக்கு ஒரு நல்ல பெண்ணா பார்க்கணும். நாலு இடத்துல சொல்லி வைங்க.
அரசியல்ல மசமசன்னு இருக்கற மாதிரி இதுலயும் இருந்துடாதீங்க”
அவர்
மனைவியை முறைத்தார். “அரசியல்ல மசமசன்னு இருக்கறதா யார் சொன்னது?”
பத்மாவதி
சிறிதும் தயங்காமல் உதயைக் கைகாட்டி சொன்னாள். “இவன் தான். சரியா இருந்திருந்தா இன்னேரம்
நீங்க முதலமைச்சர் ஆயிருப்பீங்களாம்……”
கமலக்கண்ணன் கோபப்பார்வையை மூத்த மகன் மீது திருப்பினார். உதய் தம்பியிடம் முணுமுணுத்தான். “கிழவி
கவுத்துடுச்சு பார்த்தியா?”
பத்மாவதி
மகனை முறைத்தாள். “என்ன சொன்னே? கிழவியா?”
“உனக்கு
வர வரக் காது கேட்கறதில்லை…. குளவி மாதிரி இங்கே ஏதோ சுத்திச்சே பார்த்தியான்னு இவனைக்
கேட்டேன்……” என்று உதய் சமாளித்து தம்பியிடம் கண்ணடித்தான்.
பத்மாவதி
சந்தேகத்துடன் மூத்த மகனைப் பார்த்தாள். சிரித்து விடாமல் அண்ணனைக் காப்பாற்றிய க்ரிஷ்
எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் வரை பேச்சில் இடையிடையே கலந்து கொண்டபடி அமர்ந்திருந்தான்.
அன்று முழுவதும் மாஸ்டர் சொல்லி இருந்த உணர்வை ஓரளவு அவனுக்குத் தக்க வைத்துக் கொள்ள
முடிந்தது. பிரபஞ்ச சக்தியில் ஒரு பங்கு என்கிற சிந்தனை ஒரு வாசகமாக எந்திரத்தனமாக
மனதில் தங்கி விடாமல் இருக்க வேண்டும் என்றும் அப்படிச் சீக்கிரமாக நிகழ ஆரம்பிக்க
வாய்ப்புகள் அதிகம் என்றும் மாஸ்டர் முன்பே அவனை எச்சரித்திருந்தார். அப்படியே உணர்வு
நிலையிலிருந்து வெற்று வாசக நிலைக்கு மனம் செல்ல ஆரம்பித்த போதெல்லாம் உடனடியாக அதை
உணர்ந்து உணர்வு நிலைக்குக் கொண்டு போகும் முயற்சியில் வீட்டுச் சூழலில் அவனால் ஓரளவு
வெற்றி பெற முடிந்தது. உயர்பிரபஞ்ச சக்தியின் உயிர்த்துளி க்ரிஷ் என்ற கதாபாத்திரமாக
தன் வேலையைக் கச்சிதமாகச் செய்வது போன்ற உணர்வு எல்லாவற்றிற்கும் பின்னணியாக இருக்க
ஆரம்பித்தது.
செந்தில்நாதன்
மாஸ்டர் சொல்லியிருந்த ரிஷிகேஷ் ஆசிரமத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். மாஸ்டரின்
குருவும் ரிஷிகேஷைச் சேர்ந்தவர் என்பதால் இந்த ஆசிரமத்தில் எதிரி படித்திருந்தால் அது
மாஸ்டரின் கவனத்திற்கு வந்திருக்காமல் இருக்காது என்பதால் ஆரம்பத்தில் அங்கு செல்வதைத்
தவிர்க்கத் தான் நினைத்தார். ஆனால் மாஸ்டர் மீதே முழு சந்தேகமும் அவருக்கு நீங்கி விடவில்லை.
அந்த மலைக்கு அவர் சென்ற போது காரில் வந்துத்
திரும்பிச் சென்ற ஆள் மாஸ்டர் தான் என்பதை அவர் இப்போதும் நம்பினார். மாஸ்டர் சொன்னது
போல் அந்த “போலீஸ் புத்தி” போய் விடவில்லை….
இயற்கை
எழில் சூழ அமைந்திருந்த அந்த ரிஷிகேஷ் ஆசிரமத்தின் வயதான குரு செந்தில்நாதன் யாரை விசாரிக்கிறார்
என்பதை முதலில் பல கேள்விகள் கேட்டுப் புரிந்து கொண்டு திட்டவட்டமாகச் சொன்னார்.
“நீங்கள்
கூடுதல் விவரம் தெரியணும்னா இந்த மாதிரி ஆசிரமங்கள்ல தேடறது வீண். அந்த ஆள் பல அமானுஷ்ய
சக்திகளைப் படைச்சவனாவும், பயன்படுத்தறவனாகவும் இருந்தா அது தர்மமுறைப்படி நடக்கிற
ஆசிரமங்கள்ல இருந்து கத்துகிட்டதா இருக்க வாய்ப்பேயில்லை. ’ப்ளேக் மேஜிக்’னு சொல்றாங்களே
அந்த மாதிரி விஷயங்களைச் சொல்லித் தர்ற இடங்களா பார்த்துப் போய் விசாரிங்க…..”
அவர்
சொன்னது உண்மையாகவே தோன்ற, செந்தில்நாதன் பெரிய கும்பிடு போட்டு எழுந்தார்.
(தொடரும்)
என்.கணேசன்
மர்ம மனிதன்..புதுடெல்லி அதிகாரி மூலம்.... தகவல்களை திருடிய விதம் அருமை...அவர் மனதில் கட்டளை எழுப்பியது பிரமிக்க வைக்கிறது...
ReplyDeleteகிரிஷ் எதிரியிடம் இருந்து கற்று கொண்டது,பயிற்சி செய்யும் விதம் சூப்பர்...
super sir
ReplyDeleteAmazing as usual.
ReplyDelete