Monday, May 7, 2018

சத்ரபதி – 19


ஜீஜாபாயும், சிவாஜியும் பீஜாப்பூர் வந்து மூன்று நாட்களாகி விட்டன. ஷாஹாஜி அவர்கள் இருவரிடமும் அழைத்திருந்த காரணத்தை இன்னும் பேசவில்லை. பேசுவதற்கு முன் அவருக்கு மகனைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருந்தது. தாதாஜி கொண்டதேவ் மூலமாக அறிந்து கொண்டதை நேரடியாக சரிபார்க்க எண்ணியிருந்த ஷாஹாஜிக்கு சிவாஜி அதற்கான வாய்ப்பை உடனடியாகத் தந்து விடவில்லை. இயல்பாக இருந்தான். இயல்பாக அனைவரிடமும் பழகினான். புரட்சிகரமான கருத்துக்கள், பேச்சுகள் அவனிடமிருந்து வரவில்லை. ஆனாலும் அவன் ஆழமானவன், அழுத்தமானவன் என்பதை மெள்ள ஷாஹாஜி உணர்ந்தார்.

அவனோடு ஒப்பிடுகையில் அவன் அண்ணன் சாம்பாஜி எல்லா விதங்களிலும் சற்றுக் குறைவாகவே தந்தைக்குத் தெரிந்தான். தனிப்பட்ட முறையில் சாம்பாஜியிடம் எந்தக்குறையும் இல்லை. ஆனால் சிவாஜியிடம் ஒப்பிடும் போது தான் அறிவிலும், ஆழத்திலும், நடந்து கொள்ளும் முறைகளிலும் பெரிய வித்தியாசம் தெரிந்தது. அப்படிப் பார்த்தால் சிவாஜியின் சக வயதினர்களையும், சற்று மூத்தவர்களையும் கூட அவருக்குத் தெரிந்து சிவாஜிக்கு இணையாக அவரால் சொல்ல முடியவில்லை.

ஷாஹாஜியின் சில நண்பர்கள், பீஜாப்பூர் அரசவையின் சில பிரபுக்கள் சிவாஜிக்கு அறிமுகமானார்கள். அவன் கொடுத்த மரியாதை, பேசிய பேச்சுக்கள், நடந்து கொண்ட விதம் எல்லாம் அவன் மீது ஒரு தனி மரியாதையை அவர்களிடமும் ஏற்படுத்தியதை ஷாஹாஜி நேரில் கண்டார். அவரிடம் அவர்கள் வாய்விட்டுச் சொன்னார்கள். “இப்படிப்பட்ட ரத்தினத்தை ஏன் தூர வைத்திருக்கிறீர்கள்? அவன் இங்கே பீஜாப்பூரில் இருக்க வேண்டியவன். சுல்தானிடம் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவன்….”

உருவத்திலும் சிவாஜி அழகாகவும், கட்டிளங்காளையாகவும் மாற ஆரம்பித்திருந்தான். அவன் உயரம் மட்டுமே சராசரியாக இருந்தது. அறிவிலும் வீரத்திலும் அதிகப்படியாகத் தந்து விட்டதால் கடவுள் உயரத்தில் குறைத்து விட்டாரோ என்று எண்ணி ஷாஹாஜி புன்னகைத்தார்.

ஷாஹாஜி சிவாஜியை அடிக்கடி கூர்ந்து கவனிப்பதை ஜீஜாபாயும் கவனித்தாள். மகனிடம் தெரிந்த மாற்றங்கள் நிச்சயமாக அவரைப் பெருமைப்படுத்தின என்பதை அவளால் உணர முடிந்தது.  சில வருடங்கள் கழித்து பிள்ளைகளைப் பார்க்கும் போது இக்கால இடைவெளியில் ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள் என்ன என்று கவனிப்பது பெற்றோருக்கு இயல்பேயல்லவா? அவளும் அப்படித்தான் சாம்பாஜியைக் கவனித்தாள். ஆனால் உடல் வளர்ச்சியையும், வீரத்தையும் தவிர வேறெந்தப் பெரிய முன்னேற்றத்தை அவளால் மூத்த மகனிடம் காண முடியவில்லை. சிவாஜியை வைத்தே ஒப்பு நோக்கியது தான் தன் தவறு என்று தன்னையே அவள் கடிந்து கொண்டாள்.

அவளால் அந்த மாளிகையைத் தன் சொந்த வீடாக நினைக்க முடியவில்லை. துகாபாயின் வீடாகவே அவளுக்குத் தோன்றியது. துகாபாயும் ஜீஜாபாயைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறாள். சிந்துகேத் அரச வம்சத்தவள், மிகவும் புத்திசாலி, தைரியசாலி என்றெல்லாம் கேள்விப்பட்டிருந்ததால் அவள் அங்கு வந்த போது நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு விடுவாளோ என்று பயந்து போயிருந்தாள். ஆனால் அந்த இடத்தைத் தன்னுடையதாக உணர முடியாததால் ஜீஜாபாய்  தூரமாகவே இருந்தாள். துகாபாயின் குழந்தை வெங்கோஜியைக் கையில் எடுத்து வைத்து கொஞ்சிக் கொண்டு எதிலும் தலையை நுழைக்காமல் ஜீஜாபாய் இருந்ததால் துகாபாயும் திருப்தி அடைந்திருந்தாள்….

சாம்பாஜியும் சிவாஜியும் நெருக்கமாக இருந்தார்கள். பீஜாப்பூர் சிவாஜிக்குப் புதிய இடமானதால் அவனுக்கு இடங்களைச் சுற்றிக் காட்ட சாம்பாஜி அழைத்துப் போனான். அப்படி அழைத்துப் போய் ஒருநாள் திரும்புகையில் சிவாஜி முகத்தில் கடுமை தெரிந்ததைக் கண்டு ஷாஹாஜி துணுக்குற்றார். சகோதரர்களுக்கிடையில் ஏதாவது பிரச்சினையோ என்று தான் ஆரம்பத்தில் அவருக்குச் சந்தேகம் வந்தது. ஆனால் சாம்பாஜி முகத்தில் எந்த வித்தியாச உணர்ச்சிகளும் தெரியவில்லை. அப்படி ஏற்பட்ட உணர்ச்சிகளைக் காட்டாமல் இருக்கும் வித்தையையும் இது வரை சாம்பாஜி கற்றுக் கொண்டிருக்கவில்லை. அதனால் பெரிதாக எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் தன் உணர்ச்சிகளை மறைத்து வைத்துக் கொள்ளும் அளவு சாமர்த்தியசாலியாக அவர் கணக்கிட்ட இளைய மகன் கட்டுப்படுத்த முடியாமல் கோபத்தை வெளிப்படுத்துகிறான் என்றால் காரணம் என்னவாக இருக்கும் என்று அவரால் யூகிக்க முடியவில்லை.

ஷாஹாஜி சிவாஜியிடம் கேட்டார். “ஏன் கோபமாக இருக்கிறாய் சிவாஜி?” 

“இங்கே ராஜவீதியில் கூட பசு மாமிசம் வெளிப்படையாகவே விற்கிறார்கள்”

ஷாஹாஜி இந்தக் காரணத்தை எதிர்பார்த்திருக்கவில்லை. மிகவும் பக்குவமானவனாகவும், அறிவாளியாகவும் தோன்றிய சிவாஜியின் இந்தக் கோபம் சிறுபிள்ளைத்தனமாக அவருக்குத் தோன்றியது. அவர் பொறுமையாகச் சொன்னார். “நம் இந்துக்களுக்குத் தான் பசு புனிதமானது சிவாஜி. மற்றவர்களுக்கு அல்ல. அவர்கள் பசு மாமிசத்தை உண்ணவும் செய்கிறார்கள். அதனால் இங்கே விற்பனை ஆகிறது”

சிவாஜி அவர் சாதாரணமாகச் சொன்னதை ரசிக்கவில்லை. குரலில் உஷ்ணம் குறையாமல் சிவாஜி சொன்னான். “அவர்கள் உண்பதை நான் குறை கூறவில்லை தந்தையே. ஆனால் நாம் வணங்குகிற பசுவின் மாமிசத்தை நாம் அதிகம் நடமாடுகிற பகுதிகளில் பகிரங்கமாக விற்பனை செய்கிறார்கள். நாம் காணவும் கூசுகிற, நம் மனம் பதைபதைக்கும் காட்சி அது என்ற நினைவும் அவர்களுக்கில்லை என்பதையே குறையாகக் காண்கிறேன்…. பசு தெய்வமாகப் பூஜிக்கப்படும் நம் பூமியில் இது நடக்கிறது, நாம் இதை அனுமதிக்கிறோம் என்பதையே குறையாகக் காண்கிறேன்.”

எதையும் நம் பூமி என்று உரிமை கொண்டாட முடியாத யதார்த்தத்தில் வாழ்ந்து பழக்கப்பட்ட ஷாஹாஜிக்கு மகன் இது நம் பூமி என்று சொன்னதே வித்தியாசமாக இருந்தது. தாதாஜி கொண்டதேவ் தன் மாணவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் வரலாற்றை அவன் மேலோட்டமாகப் படித்து மறக்கவில்லை என்று நினைத்துக் கொண்டே சொன்னார். ”மகனே, நம் பூமியில் இப்படி நடப்பது வருத்தத்திற்குரியது தான். ஆனால் இப்போது ஆள்வது நாமல்ல. அதனால் நம் அனுமதியும் அவர்களுக்குத் தேவையில்லை….”

“அன்னியர்கள் ஆளும் போது எத்தனை நாம் இழக்க வேண்டியிருக்கிறது பார்த்தீர்களா தந்தையே. பொதுவாக நம் மக்கள் எவன் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள். ஆனால் ஆள்பவனின் சட்டத்திற்கு அடங்கியும், அதைச் சகித்தும் வாழ வேண்டியிருப்பது மட்டுமல்ல, அவர்கள் ஆட்சியில் நம் உணர்வுகளுக்கும் மதிப்பில்லாமல் போகும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.”

ஷாஹாஜி தர்மசங்கடத்துடன் ஜீஜாபாயைப் பார்த்தார். அவள் மௌன விரதம் மேற்கொண்டவள் போல அமர்ந்திருந்தாள். சாம்பாஜி தம்பியைத் திகைப்புடன் பார்த்தான். இந்த சிந்தனைகளே அவனுக்குப் புதியவை. அவன் கேட்டுமிராதவை…..  மூத்த மகன் திகைப்பையும் ஷாஹாஜி கவனிக்கவே செய்தார்.   இதற்கு மேல் இந்த நிலைமையை நியாயப்படுத்திப் பேச முனைந்தால் சிவாஜி பொது நிலைமையை தனிப்பட்ட நிலைமையாகக்கூட ஆக்கி விடலாம் என்று எச்சரிக்கையானார். ’இது போன்ற சூழ்நிலையில் இந்த அரசவையில் இருக்கிறீர்கள். இந்த நிலைமையைச் சரிசெய்ய நீங்கள் என்ன செய்தீர்கள்?....’ என்ற வகையில் அவன் பேச ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை…. ஷாஹாஜி மௌனமானார்.

ஆனால் அன்றிரவு சிவாஜியைப் பற்றிய எண்ணங்கள் அவரைப் பல விதங்களில் அலைக்கழித்தன. அவன் அவனுடைய வயதில் நினைக்கும் விஷயங்களை அவர் இந்த வயதிலும் நினைத்துப் பார்த்ததில்லையே….. தாதாஜி கொண்டதேவ் அவனைப் பற்றிச் சொல்லி எச்சரித்த போது சிறிது மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்ற சந்தேகம் கூட அவர் மனதின் ஒரு மூலையில் இருந்தது. இந்தச் சின்ன விஷயத்தில் அவன் கோபமும், அவன் வார்த்தைகளும் யோசிக்கையில் அவர் குறைவாகச் சொல்லி விட்ட மாதிரியல்லவா இருக்கிறது? இளைய மகனை யதார்த்த உலகுக்குக் கொண்டு வருவது எப்படி என்று அவருக்குப் புரியவில்லை….

மறுநாள் அரசவையில் சிலர் சிவாஜியின் அறிவையும், அவன் பெரியவர்களிடம் காட்டும் மரியாதையையும் புகழ்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டது சுல்தான் முகமது ஆதில்ஷா காதில் விழ “யாரைப் பற்றிப் பேசிக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“நம் ஷாஹாஜியின் இளைய மகன் சிவாஜியைப் பற்றித் தான் பேசிக் கொள்கிறோம் மன்னரே”

ஆதில்ஷா ஷாஹாஜியைப் பார்த்தார். “என்ன ஷாஹாஜி. இவர்களுக்கெல்லாம் தெரிந்த உங்கள் இளைய மகனை என்னிடமிருந்து மட்டும்  மறைத்து வைக்கிறீர்களே, இது நியாயமா?”

ஷாஹாஜி தர்மசங்கடத்துடன் நெளிந்து பின் சமாளித்தார். “அவன் வந்து மூன்று நாட்கள் தான் ஆகின்றன மன்னரே! உங்களிடம் அனுமதி பெற்ற பின் அவனை அழைத்து வரலாமென்றிருந்தேன். அவ்வளவு தான்…”

“நாளையே அழைத்து வாருங்கள் ஷாஹாஜி. இவர்கள் இத்தனை புகழ்கிற உங்கள் மகனைப் பார்த்து அவனுடன் அளவளாவ வேண்டும் என்று எனக்கும் ஆர்வமாய் இருக்கிறது…..” ஆதில் ஷா சொன்னார்.

சுல்தானிடம் ஷாஹாஜியால் மறுக்க முடியவில்லை. ஆனால் சிவாஜியை அரசவைக்கு அழைத்தால் வருவானா, வந்தாலும் அவன் குணத்திற்கு ஆபத்துகள் உருவாக வாய்ப்புகள் அதிகமாயிற்றே என்று உள்ளுக்குள் ஷாஹாஜி சங்கடத்தை உணர்ந்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

6 comments:

  1. சுஜாதாMay 7, 2018 at 6:41 PM

    சுவாரசியமாகப் போகிறது. சுல்தானும் சிவாஜியும் சந்திப்பது எப்படி இருக்கும் என்று அறிய ஆவலாக உள்ளது.

    ReplyDelete
  2. Each character is excellently portrayed. Very interesting.

    ReplyDelete
  3. சிவாஜியின் கருத்துக்கள் சூப்பர்...
    "நம்பூமியை நாம் தான் ஆளவேண்டும்" என்ற கருத்து உண்மையிலே உணர்வுப்பூர்வமானது.

    அடுத்து அரசவைக்கு வந்து சுல்தானை மதிக்காமல் நடந்து கொள்வானா?
    அல்லது தன் நிலை அறிந்து அனுசரித்து நடந்து கொள்வானா?
    என்பதை அறிய காத்திருக்கிறேன்....

    ReplyDelete
  4. அருமை...! ஒரு விஷயத்தை மற்றவர்கள் பார்க்கும் பார்வையும், சிவாஜி பார்க்கும் பார்வையும் வேறாக இருப்பதை நன்றாக சுட்டி காட்டியுள்ளீர்கள்...!

    ReplyDelete
  5. எவன் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள். ஆனால் ஆள்பவனின் சட்டத்திற்கு அடங்கியும், அதைச் சகித்தும் வாழ வேண்டியிருப்பது மட்டுமல்ல, அவர்கள் ஆட்சியில் நம் உணர்வுகளுக்கும் மதிப்பில்லாமல் போகும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.” சத்திய வாக்கு இங்கு இன்றும் பொருந்தும்

    ReplyDelete
  6. "எவன் ஆண்டால் நமக்கென்ன என்று இருந்து விடுகிறார்கள்" ராபர்ட் கிளைவ் இந்தியர்களைப் பற்றி இப்படித்தான் கூறினாராம்

    ReplyDelete