பகவத்
கீதையின் பதிமூன்றாம் அத்தியாயமான க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகத்தில் நம்மையும்,
நாம் காணும் உலகத்தையும் க்ஷேத்திரம், க்ஷேத்ரக்ஞன் என்ற இரண்டின் கலவையாக ஸ்ரீகிருஷ்ணர் விளக்குகிறார்.
நம் தேகம் க்ஷேத்ரம். தேகத்தை இயக்கும் ஆத்மா
க்ஷேத்ரக்ஞன். உலகின் வஸ்துக்கள் எல்லாம் க்ஷேத்ரம். வஸ்துக்களை இயக்கும் அறிவு க்ஷேத்ரக்ஞன்.
இரண்டும் இணைவதாலேயே எல்லா இயக்கங்களும், எல்லா நிகழ்வுகளும், உயிரோட்டமுள்ள வாழ்க்கையும்
சாத்தியமாகின்றன.
உடல்
இருக்கின்றது. அதனுள் ஆத்மா நுழைந்து உயிர் பெறாவிட்டால் உடல் ஜடம் தான். அதனால் எந்த
இயக்கமும் இல்லை. எந்தப் பயனும் இல்லை. கைகால்கள் இருக்கின்றன. ஆனால் அவை தானாக இயங்குவதில்லை.
உயிரும் உணர்வுமாய் கலந்த நாம் இயக்கினால் தான் அந்த எண்ணங்களுக்கேற்ற இயக்கமாக அசைவுகள்,
செயல்கள் எல்லாம் நிகழ்கின்றன. நாம் காணும்
உலகமும் அப்படித்தான். அனைத்து வஸ்துக்களும் அவற்றுக்குள் இருக்கும் மகாசக்தியாலேயே
இயக்கப்படுகின்றன. உள்ளிருக்கும் சக்தி தேகத்திலிருந்து விலகி விட்டால் வாழ்க்கை முடிந்து
விடுகிறது. அப்படியே வஸ்துக்களிலிருந்து சக்தி விலகி விடுமானால் இயக்கமும் நின்று விடுகிறது.
இந்தச்
சொற்களை விளக்கிய பின் ஸ்ரீகிருஷ்ணர் ”எல்லா
உடல்களிலும் இருக்கும் க்ஷேத்ரக்ஞன் நானே” என்று அறிவிக்கிறார். நானும், நீயும்,
நாம் காணும் மனிதர்களும் தனித்தனியாக உணரப்பட்டு, நம்பப்பட்டு நம் மாயா உலகம் நடந்து
கொண்டிருக்கையில் மாயையின் திரையின் பின் அனைத்தும் நானே என்று இறைவனே எல்லாம் நடத்திக்
கொண்டிருக்கிறார். இதை நாம் உணரும் போது தனிப்பட்ட “நானின்” பாரங்களும், துக்கங்களும்
நமக்கு உடனடியாக மறைந்து விடுகின்றன. இந்த உணர்தலே ஞானம். உணர மறுத்தலும், உணர மறத்தலுமே
அஞ்ஞானம்.
ஸ்ரீகிருஷ்ணர்
கூறுகின்றார்:
கர்வமின்மை, பகட்டின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, குருவுக்கு
சேவை செய்தல், தூய்மை, அசையாநிலை, சுயகட்டுப்பாடு, இந்திரியங்களுக்குரிய விஷயங்களில்
பற்றில்லாமை, அகங்காரமின்மை, பிறப்பு, இறப்பு, மூப்பு, வியாதி, இவைகளில் இருக்கும்
துக்கத்தையும், குறைபாடுகளையும் சிந்தித்து அறிந்திருத்தல், மகன், மனைவி, வீடு முதலியவற்றில்
பற்றில்லாமை, என்னுடையது என்ற எண்ணமில்லாமை, விருப்பமானவை, விருப்பமில்லாதவை இரண்டை
அடையும் போதும் சம நிலையிலிருத்தல், மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனத்தால்
கொண்ட பிறழாத பக்தி, தனிமையில் இருத்தல், உலகியலில் ஈடுபாடு கொண்ட மனிதக்கூட்டத்தில்
இருக்க விருப்பமில்லாமை, ஆத்மஞானத்தில் நிலைத்திருத்தல் இவையெல்லாம் ஞானம் என்று சொல்லப்படுகிறது.
இவற்றிற்கு மாறுபட்டதெல்லாம் அஞ்ஞானம் ஆகும்.
கர்வம்
என்பதே நம்மைத் தவிர இன்னொன்று இருக்கும் போது தான் சாத்தியமாகிறது. ஒப்பிட இன்னொன்று
இல்லாத போது, கர்வத்தை ஏற்பத்தும்படியாக நம்மை விடக் குறைந்தது ஒன்று இல்லாத போது கர்வம்
எப்படி எழும்? பகட்டின்மையும் அதே போல் தான். பகட்டை யாருக்குக் காட்டுவது? அஹிம்சையும்
அப்படியே சாத்தியமில்லை. நாம் ஹிம்சை ஏற்படுத்தும் உயிர்களிலும் நம்மையே காண முடிந்தால்,
அடிப்படையில் அந்த உயிரும், நாமும் ஒன்றே என்ற புரிதல் இருந்தால் அஹிம்சை தானாக நம்
இயல்பாகி விடும் அல்லவா? பொறுமை நேர்மையும் இதே வழிகளில் நமக்கு சாத்தியாகி விடும்.
பிறப்பிலிருந்து
இறப்பு வரை நிகழும் மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. அழகும் வலிமையும் கொண்டவர்களாய்
அகங்காரம் கொள்பவர்கள் கூட மூப்பு வியாதி என்று காலத்தின் ஓட்டத்தால் பாதிக்கப்பட வேண்டி
வருகிறது. அகங்காரம் அர்த்தமில்லாதது என்று உணர்தல் நிகழத்தான் செய்கிறது. நான், எனது
மனைவி அல்லது கணவன், என் பிள்ளை என்ற மாயா பாசங்களும் உறவுகளை அப்படி அப்படியே எடுத்துக்
கொள்கையில் துக்கங்களின் ஊற்றாகவே அமைகிறது. ஆனால் அத்தனைக்கும் பின் எல்லாம் ஒன்றே
என்று உணரும் போது அந்தத் துக்கங்களும் அர்த்தமில்லாதவை என்று உணர முடிகிறது.
இந்த
சுலோகங்களில் மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனம் என்ற வாசகம் மிக முக்கியமானது.
மேலோட்டமாகப் பார்க்கையில் வேறெதையும் நினைக்காமல் ஸ்ரீகிருஷ்ணர் மீதே செலுத்தும் மனம்
என்று தோன்றும். ஆனால் முதலில் ’எல்லா உடல்களிலும் இருக்கும் க்ஷேத்ரக்ஞன் நான்” என்று
சொல்லி விட்டு இதைச் சொன்னதால் அப்படி ’எல்லா உயிர்களிலும் அந்தர்மியாக இருக்கின்றவன்
ஆன ஆண்டவனிடமே செலுத்திய மனம்’ என்று சரியாக எடுத்துக் கொண்டால் அது மிக உயர்ந்த ஞான
வாக்கியமாக நாம் உணர முடியும்.
நான்,
இன்னொருவன், இன்னொருத்தி, இன்னொரு உயிர் என்று மற்றொன்றாய் நினைக்காமல் எல்லாமே அவன்
அல்லது எல்லாமே நாம் என்ற உணர்வுடன் பார்க்கையில் உலகம் அன்பு மயமாகவும், ஆனந்த மயமாகவும்
மாறிவிடும். அப்படி நிகழ்வதே ஞானம். அப்படி உணர்வதே ஞானம். மாறானது எல்லாமே அஞ்ஞானம்
தான்.
இந்தச்
சுலோகங்களில் தனிமை குறித்தும் ஜனக்கூட்டத்தில் இருக்க விருப்பமில்லாமை குறித்தும்
ஸ்ரீகிருஷ்ணர் கூறுவது சிலருக்கு துறவை வலியுறுத்துவது போலவோ, மனிதர்களுடன் சேர்ந்து
வாழ்வதற்கு எதிரானது போலவோ தோன்றலாம். ஆனால் சரியாகச் சிந்தித்தால் அது உண்மையல்ல என்பது
புரியும்.
ஞானம்
என்றுமே, கூட்டமாக இருக்கையில் ஒட்டு மொத்தமாய் அனைவருக்கும் வருவதில்லை. அதுவும் உலகியலில்
ஈடுபாடு கொண்ட கூட்டத்தில் அது கண்டிப்பாக வந்து சேர்வதில்லை. கூட்டங்களில் இருக்கையில்
தனிமனித சிந்தனைகள் மங்கிப் போய் விடுகின்றன. கூட்டத்தின் பிரதான உணர்ச்சிகளே தனிமனிதர்களையும்
ஆக்கிரமிக்க ஆரம்பித்து விடுகின்றன. உணர்ச்சிகள் பிரதானமாக இருக்கையில் ஞானம் மேலோங்க
வாய்ப்பே இல்லை. இதை ஏதாவது கூட்டங்களுக்குச் சென்று தள்ளியிருந்து கூர்ந்து கவனித்தால்
நன்றாக விளங்கும்.
உண்மையான
ஞானம் கூட்டங்களுக்குள் இருக்கையிலும், கூச்சல்களுக்கு மத்தியில் இருக்கையிலும் சாத்தியமில்லை.
இன்னும் சொல்லப் போனால் மனிதன் தனக்குள்ளேயே
பலர் பற்றிய சிந்தனைகளிலும், பல சிந்தனைகளின் கூச்சல்களிலும் இருக்கும் போது கூட ஞானத்தை
எட்ட முடிவதில்லை. தனிமையில், ஆத்ம விசாரத்தில் நிலைக்கையில் மட்டுமே ஞானத்திற்கான
சூழலே உருவாகிறது. அதனால் தான் தனிமையின் உயர்வையும், உலகியல் எண்ணங்கள் மேலோங்கி இருக்கும்
கூட்டங்களிலிருந்து தன்னிலை இழக்க விருப்பமில்லாததன்
அவசியத்தையும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
பாதை
நீளும்…..
என்.கணேசன்
"எல்லாமே அவன்" என்ற வாசகத்திற்கு விளக்கம் அருமை...
ReplyDeleteதனிமை பற்றிய தெளிவான் கருத்துக்களும் சூப்பர்..