Thursday, April 26, 2018

இருவேறு உலகம் – 80


“எல்லா சக்திகளுக்கும் மூலமான அறிவு ஒன்று தான். அது ஒவ்வொருவனிடமும் ஆழமாகப் புதைந்திருக்கிறது. அதைக் கற்றுக் கொண்டால் மற்ற எல்லாமே சுலபமாகக் கற்றுக் கொண்டு விடலாம். ஒவ்வொன்றுக்கும் தேவைப்பட்ட சில கூட்டல்கள், சில கழித்தல்கள் மட்டுமே செய்து கொண்டால் போதும். அந்த மூல அறிவு மனதிற்குப் புரிய வேண்டும்…. மனதில் பதிய வேண்டும். பின் மற்றதெல்லாம் சுலபமே. என்னிடம் அவன் அந்த மூலத்தைக் கற்றுக் கொண்டான். நான் அறிந்த மற்ற சில வித்தைகளைக் கூடக் கற்றுக் கொண்டான். இனி என்னிடம் கற்றுக் கொள்ள ஒன்றுமேயில்லை என்ற நிலைமை வந்த போது போய் விட்டான்……” பக்கிரியின் வார்த்தைகளை அந்தப் பாலைவனமே லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தது போல் சிறிது நேரம் காற்றே இல்லை…..

செந்தில்நாதனுக்கு அந்தப் பக்கிரி சொன்னதெல்லாம் புரிகிற மாதிரியும் இருந்தது. புரியாத புதிர் மாதிரியும் இருந்தது. க்ரிஷே நேரில் வந்திருந்தால் கச்சிதமாகப் புரிந்து கொண்டிருப்பான் போலத் தோன்றியது.

“அவனை மறுபடி எத்தனை தடவை சந்தித்திருக்கிறீர்கள்?” செந்தில்நாதன் கேட்டார்.

”அவனைப் பிறகு ஒரு தடவை கூடப் பார்க்கவில்லை…. ஆனால் அவன் வேறு சில கூடுதல் சக்திகள் தேடி வேறு குருக்களையும் சென்று பார்த்தான் என்று கேள்வி. சரியாகத் தெரியவில்லை…..”

“நடந்து முடிந்ததை எல்லாம் தெரிந்து கொள்ள முடியும் என்று சொன்னீர்களே. பின் ஏன் இங்கிருந்து போன பின் அவனைப் பற்றித் தெரியவில்லை என்கிறீர்கள்”

“சக்தி வாய்ந்தவர்கள் தங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளக் கூடாது என்றால் மறைத்துக் கொள்ள முடியும். அவன் அந்தக் கலையில் கைதேர்ந்த நிபுணனாகி விட்டான். அதனால் நான் பலமுறை ஆர்வத்தில் அவனை அறிய முற்பட்ட போது என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை…… இப்போது அவனிடம் நான் தான் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த அளவு உயர்ந்து விட்டான்…..”

“அவனிடம் அப்படிக் கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?” செந்தில்நாதனுக்குக் கேட்கத் தோன்றியது.

“இல்லை. ஒரு பேச்சுக்குச் சொன்னேன். அவ்வளவு தான். வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் எல்லாமே போதும் என்று தோன்ற ஆரம்பித்து விடுகிறது. அமைதி தவிர வேறெதுவும் வேண்டாம், வேறெதிலும் அர்த்தமில்லை என்று புரிய ஆரம்பித்து விடுகிறது. அந்த ஒரு கட்டத்துக்கு வந்து விட்டேன்… அல்லா என்னை அழைத்தால் சந்தோஷமாகப் போய் விடுவேன்…..”

பக்கிரி மனமாரச் சொன்னது போல் இருந்தது. செந்தில்நாதன் கேட்டார். “உங்களிடமிருந்து போன பின் யாரிடம் என்ன கற்றுக் கொண்டான் என்ற யூகமாவது உங்களுக்கு இருக்கிறதா”

“இல்லை போலீஸ்காரனே… எனக்குத் தெரிந்து உன்னிடம் சொல்ல இனி ஒன்றும் இல்லை. போய் விடு…..”

கடுமையாகக் காற்று மணலுடன் சேர்ந்து வீச ஆரம்பித்தது. செந்தில்நாதன் கண்களை மூடிக் கொண்டார். காற்று நின்று அவர் கண்களைத் திறந்த போது அந்தப் பக்கிரியைக் காணவில்லை. அவர் போய்விட்டிருந்தார்.


னிமையில், எந்த வெளித்தொடர்பும் இல்லாத போதே மனதை நிறுத்த வேண்டிய உண்மையில் நிலையாக நிறுத்த முடிவதில்லை. இப்படி இருக்கையில் அறையை விட்டு வெளி வந்து முதலில் வீட்டாருடன் இருக்கும் போது அதை சாதித்துக் காட்டு, பின் கல்லூரிக்குப் போய் எல்லோருடனும் இருக்கும் போது அதைச் சாதித்துக் காட்டு என்று மாஸ்டர் சொன்னது க்ரிஷுக்கு குன்றேறி நின்று சந்தோஷப்பட்டவனை மலையேறிக் காட்டு என்று சவால் விட்டது போல் இருந்தது.

வீட்டுக்கு வந்தவன் அறைக்குப் போகாமல் ஹாலில் அமர்ந்தான். அம்மா உதயிடம் அவன் அறையில் பேசியது காதில் கேட்டது.

“ஏண்டா உனக்கு எதாவது பொண்ணைப் பிடிச்சிருக்கா?” அப்படி இருந்தா வெளிப்படையா சொல்லு”

“உட்காரு சொல்றேன்” என்றான் உதய். அவன் அம்மா வாயைக் கிளறப் போகிறான் என்று அர்த்தம். க்ரிஷ் புன்னகைத்தான்.

“புடிச்ச பொண்ண சொல்றதுக்கு நானேண்டா உட்காரணும்” என்றபடியே பத்மாவதி உட்கார்ந்தாள்.

“எனக்கு சில நேரத்துல சில பொண்ணுகளப் புடிக்குது. என்ன பண்ணலாம்?”

“அதுக்கு வெளக்குமாத்தால நாலு சாத்து சாத்துனா சரியாயிடும்…” என்றாள் பத்மாவதி. சத்தமில்லாமல் சிரித்தான் க்ரிஷ்.

“சும்மா கோவிச்சுக்காதம்மா. உண்மையச் சொன்னா தப்பா?”  உதய் கேட்டான்.

“நீ யாரையாவது காதலிக்கிறாயான்னு கேட்டேண்டா தடியா?”

“அதுக்கு உன் சின்னப் பையன் கிட்ட போய் ட்யூஷன் எடுத்துக்கலாம்னு பாக்கறேன்”

“அவன் என்னடா ஜெமினி கணேசனா. அவன் கிட்ட போய் அதுல ட்யூஷன் எடுத்துக்கறதுக்கு……”

அதற்கு மேல் அங்கே உட்கார முடியவில்லை. க்ரிஷ் தன்னறைக்கு ஓடிப் போய் விட்டான். வாய் விட்டுச் சிரித்தான். கூடவே கொஞ்சம் உதய் மேல் கோபமும் வந்தது. அவன் காதலிப்பதை உதய் அறிக்கை விட்டுச் சொல்லாதது தான் பாக்கி. விவஸ்தை கெட்டவன்…

திடீரென்று மாஸ்டர் சொன்னது நினைவுக்கு வந்தது. “ரெண்டு நிமிஷம் பேசின பிறகு மனசைத் திரும்ப அமைதிப்படுத்த ரெண்டு மணி நேரம் தேவைப்படுதுன்னா முதல் பாடத்துல நீ ஜெயிச்சதா சொல்ல முடியாது க்ரிஷ்.” இப்போதும் விட்டால் மனம் ஹரிணி, உதய், அம்மான்னு யோசித்துக் கொண்டே போகும். அதுவாக அலுத்துப் போகும் போது மனதைத் திருப்பிக் கொண்டு வருவதில் அர்த்தமில்லை….. உடனடியாக மாஸ்டர் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் நினைவுபடுத்தி மறுபடி மனதைத் திரும்பக் கொண்டு வந்து நிலை நிறுத்தினான். மனம் மறுபடி அமைதியான சக்தியைத் திரும்பப் பெற ஆரம்பித்தது. மறுபடி அறையை விட்டு வெளியே வந்தான். மாஸ்டரிடம் சொல்லும் போது மனதை இந்த முறை பத்து நிமிடத்தில் திரும்பக் கொண்டு வந்து விட்டதாய்ச் சொல்ல வேண்டும். நூற்றி இருபது நிமிடங்களில் இருந்து பத்து நிமிடங்களுக்கு வந்தது பெரிய விஷயமல்லவா? சொன்னால் அறைக்குப் போய் அப்படிக் கொண்டு வந்தது தவறென்று சொல்வாரோ?


ஸ்ரோ பெண் விஞ்ஞானி உமா நாயக்கை டைரக்டர் அவசரமாக புனேவுக்கு வரச் சொல்லி இருந்தார். அவள் பரபரப்புடன் மாஸ்டருக்குப் போனில் தெரிவித்து விட்டுப் போனாள். “பெரும்பாலும் அந்த ஏலியன் சமாச்சாரமாகத் தான் இருக்கும் மாஸ்டர்.  கிடைக்கிறது புதுத் தகவலாய் இருந்தா நான் அங்கிருந்தே போன் செஞ்சு சொல்றேன்”

புனே அலுவலகத்திற்குப் போன போது டைரக்டர் முன் புதுடெல்லி உயரதிகாரியும் அமர்ந்திருந்தான். டைரக்டர் அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். “சார் இவங்க தான் இந்தப் ப்ராஜெக்டோட முக்கியமான விஞ்ஞானி உமா நாயக். உமா, சார் தான் இந்தப் ப்ராஜெக்ட்டுக்கு அரசாங்க தரப்பு பிரதிநிதி. சார் கிட்ட தான் நாம எல்லாத்தையும் ரிப்போர்ட் பண்றோம்…..”

உமா நாயக் வணக்கம் தெரிவித்தாள். புதுடெல்லி உயரதிகாரி வேண்டா வெறுப்பாக தலையசைத்தான். அவனுக்கு அந்த டைரக்டர் அவளுக்காக இத்தனை நேரம் காக்க வைத்ததில் எரிச்சல். முக்கியமான தகவல் கிடைத்திருக்கிறது என்று தெரிவித்து வரவழைத்த டைரக்டர் “அஞ்சே நிமிஷத்தில் எங்க முக்கிய விஞ்ஞானியும் வந்துடுவாங்க. அவங்க வந்தவுடனேயே சொல்றேனே. இல்லாட்டி ரெண்டு தடவை சொல்ல வேண்டு வரும்” என்று சொல்லி விட்டிருந்தார். அவள் வருவதற்கோ பதினைந்து நிமிடம் ஆகியது. அவனுக்குக் காத்திருப்பது கஷ்டமாக இருந்தது. மறுபடியும் அவனை யாரோ ஆக்கிரமித்து அவனுக்குள் புகுந்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டு விட்டது. ஏன் அடிக்கடி இப்படி ஆகிறது என்று அவனால் ஊகிக்க முடியவில்லை. எல்லாம் டெல்லி சர்ச்சில் ஆரம்பித்த உணர்வு. ஒரு வேளை மனோவியாதியோ என்று சந்தேகித்தான்…..

தன் சக்தி மூலம் அவனை ஆக்கிரமித்திருந்த மர்ம மனிதனுக்கு அவன் எண்ண ஓட்டம் வேடிக்கையாக இருந்தது. அவன் மூலம் அந்த டைரக்டர் முக்கியமாக என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிய அவனும் ஆவலாய் இருந்தான்.

(தொடரும்)
என்.கணேசன்

2 comments:

  1. Fakir-Senthilnathan and Padmavathi-Uday dialogues are super.What the director wants to inform, like marma manithan we are also eagerly waiting to know.

    ReplyDelete
  2. பக்கரி சொன்ன "மூல அறிவு ஒன்றுதான்" என்ற எளிமையான விளக்கம் அருமை...
    இறுதியில் சொன்ன தத்துவமும் சூப்பர்...

    மர்ம மனிதனின் ஆக்கிரமிப்பில் எதை உணர்வான்...?
    எலியன் தான் வரவில்லையே... புதிய தகவல் என்னவாக இருக்கும்?

    ReplyDelete