Thursday, January 4, 2018

இருவேறு உலகம் – 64


னோகர் சொன்னான். ”முதலமைச்சர் ஆக இப்பவே தயாராக ஆரம்பிச்சிடுங்க”

“தொண்டர்கள் கிட்டயும், மக்கள் கிட்டயும் என்னையும் விட கமலக்கண்ணன் தான் பிரபலம்….” மாணிக்கம் தனக்கிருக்கும் பாதக சூழ்நிலையைச் சொன்னார்.

“அவங்களப் பத்தி கவலைப்படாதீங்க. அவங்க மீடியால என்ன சொல்றாங்களோ அதைத்தான் நம்புவாங்க. மீடியா முழுசும் நாம கண்ட்ரோல் பண்ணிக்கலாம்…. நான் சொன்ன மாதிரி எம் எல் ஏக்கள நம்ம பக்கம் சாய்க்க மட்டும் பணத்தை ரெடி பண்ணுங்க” மனோகர் அமைதியாகச் சொன்னான்.

“கமலக்கண்ணன்?”

“அந்த ஆள் செண்டிமெண்ட்ல இருப்பாரு. ராஜதுரை பிழைச்சிக்க பிரார்த்தனை பண்ணுவாரு. அவர் மனசுல இப்போதைக்கு வேற எதுவும் ஓடாது”

“உதய் அவங்கப்பா மாதிரி இல்லை….. விவரமானவன்….”

“அவனுக்கும் ராஜதுரை சாவார்னு நிச்சயமா தெரியாது. அவன் உஷாராகறதுக்குள்ள காதும் காதும் வச்ச மாதிரி காரியத்தை முடிச்சுடுங்க”

”அப்படின்னா ராஜதுரை உடனடியா செத்துட மாட்டானா?” சங்கரமணி கேட்டார்.

“உடனடியா சாக மாட்டார். தீவிர சிகிச்சைல இருப்பார். டாக்டர்கள் நாம தயாராகற வரைக்கும் அப்பப்ப ஒரு அறிக்கை கொடுத்துட்டிருப்பாங்க….”

சங்கரமணி மனதில் நினைத்துக் கொண்டார். “எமகாதகனா இருப்பான் போல இருக்கே. படிப்படியா யோசிச்சு வெச்சிருக்கான்…”.

“பதிலுக்கு க்ரிஷைக் கொல்ல உதவணுமா?” மாணிக்கம் மெல்லக் கேட்டார். கூட வேறு எதாவது கேட்டு விடுவானோ என்ற பயம் அவருக்கு இருந்தது.

மனோகர் ஏளனமாகச் சிரித்தான். “முதலமைச்சரையே முடிச்சுக்கட்டற எங்களுக்கு க்ரிஷைக் கொல்ல உங்க உதவி தேவைன்னு நினைக்கிறது உங்களுக்கே ஓவரா தெரியலையா? க்ரிஷை எப்படி டீல் பண்றதுன்னு அப்புறம் யோசிப்போம். அதுக்கு முன்னாடி உங்களை முதலமைச்சராக ஆக்கறதுக்கு எங்களுக்கு வர வேண்டியதைப் பேசுவோம்….”

“எவ்வளவு கோடி வேணும்?” மாணிக்கம் கேட்டார்.

“சம்பாதிக்கறதுல பாதி அப்பப்ப தந்துகிட்டே இருக்கணும்…..”

பிளந்த வாயை மூட சங்கரமணிக்கு சிறிது நேரம் தேவைப்பட்டது. மாணிக்கமும் இது மிக அதிகமில்லையா என்பது போல் பார்த்தார்.

“எங்களுக்குப் பாதி தந்தால் கூட மீதி இருக்கிறது, நீங்கள் இது வரைக்கும் சம்பாதிச்சிட்டிருக்கிறதுக்கு ரெண்டு மடங்கா இருக்கும்…..”

மாணிக்கம் மாமனைப் பார்த்தார். சங்கரமணி கணக்கு சரி தான் என்பது போல் தலையசைத்தார். அவருக்கு மெல்ல அவனை ஆழம் பார்க்காமல் இருக்க முடியவில்லை. “ஒருவேளை எங்களுக்குத் தர முடியாத நிலைமை வந்தா?”

மனோகர் அலட்டாமல் சொன்னான். “இன்னொரு முதலமைச்சர் சாவார்”

இருவர் முகத்திலும் ஈயாடவில்லை. சங்கரமணி எச்சிலை விழுங்கிக் கொண்டு சொன்னார். “சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்”

“நான் சும்மா சொல்லலை” என்றான் அவன்.

மாணிக்கம் சொன்னார். “நான் உங்க குறி க்ரிஷ்னு தான் நினைச்சேன்”

“அவன் தான் எங்க குறி. ஆனால் அவனை டீல் பண்றதுல நிறைய யோசிக்க வேண்டி இருக்கு. அதான் பின்னாடி பாத்துக்குவோம்னு சொன்னேன். பின்னே ஒருத்தனுக்கு எக்கச்சக்கமா சம்பாதிக்க உதவினா திரும்ப அதுக்கேத்த மாதிரி வாங்கிக்கறது தான் வியாபாரத்துல ஒரு மரியாதை”

சங்கரமணி மெல்லக் கேட்டார். “அப்படின்னா எம் எல் ஏக்களை வாங்கற செலவுலயும் பாதி தருவீங்களா?”

“தர மாட்டோம். அதே மாதிரி முதலமைச்சரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பறது, டாக்டர்களை அறிக்கை தர வைக்கிறது இதுக்கெல்லாம் ஆகிற செலவுல நீங்களும் எதுவும் தரவேண்டியது இல்லை. சரி தானே”

சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் மாணிக்கம் சொன்னார். “சரி தான்”

”இந்த ஒப்பந்தத்துல வேறயும் சில நிபந்தனைகள் இருக்கு” மனோகர் சொன்னான்.

சங்கரமணி மனதிற்குள் கூவினார். ’இன்னும் என்னடா?’ மாணிக்கமும் என்ன என்பது போல் அவனைப் பார்த்தார்.

மனோகர் சொன்னான். “இனி எந்தக் காரணத்தைக் கொண்டும் மாஸ்டரை நீங்க யாரும் சந்திக்கக் கூடாது…”

சங்கரமணி சத்தமாகவே சொன்னார். “அதுவும் சரிதான். சந்திச்சா அந்த ஆள் எல்லாத்தையும் நம்ம மனசுல இருந்தே தெரிஞ்சுக்குவார். அது தேவை இல்லாத இம்சை….”

மாணிக்கம் மெல்லக் கேட்டார். “ஒருவேளை அவராய் எங்களைச் சந்திக்க வந்தால் என்ன செய்யறது?”

“அவரா வர மாட்டார்.” மனோகர் உறுதியாய் சொன்னான்.

“அந்த ஆள் உங்களுக்கு எதிரியோ?” மெல்ல சங்கரமணி கேட்டுப் பார்த்தார். ஆனால் அவருக்குப் பதில் சொல்வது அவசியம் என்று அவன் நினைக்கவில்லை. அவன் கிளம்ப எழுந்து நின்றான்.

சங்கரமணி டீப்பாயில் இருந்த புகைப்படத்தைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு மனோகரிடம் சொன்னார். “நண்பன்னு சொன்னீங்க. பிசினஸ்லயும் பார்ட்னராயிட்டோம். அப்படி இருக்கறப்ப இந்த ஃபோட்டோ செட்டை எங்க கிட்ட குடுத்துடறது தானே நியாயம்”

“உங்களை எங்க நண்பர்களாவே இருக்க வைக்க அந்த ஃபோட்டோஸ் உதவும். அதனால அது என் கிட்டயே இருக்கட்டும். நீங்கள் நண்பர்களாகவே இருக்கற வரைக்கும் அது வெளியே யார் கைக்கும் கிடைக்காது. நான் கிளம்பட்டுமா?”

அவன் போய் விட்டான். மாமனும், மருமகனும் சிறிது நேரம் பல சிந்தனைகளுடன் மௌனமாக அமர்ந்திருந்தார்கள். சங்கரமணி மெல்ல அந்தப் புகைப்படத்தைக் கை நடுங்க எடுத்தார். ”இந்தப் போட்டோ மலை மேல் இருந்து எடுத்த மாதிரி இருக்கு. இதை அந்த க்ரிஷே தான் எடுத்துருக்கணும். அந்த அமாவாசை ராத்திரில வேற எந்த லூசும் அங்கே இருந்திருக்க வாய்ப்பே இல்லை. அவன் மாயாவி வேலை எல்லாம் பாக்கறான்….. என்ன ஆராய்ச்சியோ என்ன இழவோ….. அவன் எடுத்த ஃபோட்டோன்னா இவன் கைல இது எப்படிக் கிடைச்சுது? எனக்கு மண்டையே வெடிக்கற மாதிரி இருக்கு மாணிக்கம். அன்னைக்கு என்ன நடந்துது…. இன்னைக்கு என்ன நடக்குது….. ஒன்னுமே புரிய மாட்டேங்குது….”

மாமனின் புலம்பலுக்கு மாணிக்கம் பதில் சொல்லவில்லை. வந்தவனுக்கு எதிராக அவர்கள் இயங்காத வரை அவன் அதை வெளியே விட மாட்டான் என்பதால் அதைப் பற்றி இப்போது கவலைப்படுவதற்கு அவசியமில்லை என்று நம்பினார். அவர் மனம் இன்னொரு சந்தேகத்தில் நிலைத்து நின்றது. முதலமைச்சராக இருக்கிற ராஜதுரைக்கு இருக்கும் பலத்த பாதுகாப்பை மீறி யார் உள்ளே போக முடியும். அப்படிப் போனாலும் ஒரேயடியாகக் கொல்லாமல் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு அனுப்பும் அளவு மட்டும் ஆரோக்கியத்தைக்  கெடுப்பது மேலும் கஷ்டமான காரியமல்லவா? இந்த ஆள் எப்படி சாதிப்பான்? இதெல்லாம் நடக்கிற காரியம் தானா? ஒருவேளை இவனோ இவன் ஆளோ அந்த முயற்சியில் மாட்டிக் கொண்டால்….? நினைக்கவே நடுங்கியது…


ராஜதுரைக்கு அன்றிரவு நீண்ட நேரம் உறக்கம் வரவில்லை. சங்கரமணி சம்பந்தமாக செந்தில்நாதன் தந்து விட்டுப் போன தகவல்கள் அவரை மிகவும் பாதித்தன. செந்தில்நாதன் சொன்னது போல் அந்த ஆள் எந்தக் கெட்டதிலும் சம்பந்தப்பட சாத்தியம் இருந்தால் கண்டிப்பாய் சம்பந்தப்படுபவர். இது வரை அந்த ஆள் மீது வந்திருக்கும் புகார்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஒரு வாடகைக் கொலையாளியை க்ரிஷ் மீது ஏவும் அளவு இறங்கியிருந்தால் கண்டிப்பாக அதைச் சும்மா விடக்கூடாது. க்ரிஷுக்கு எதாவது ஆகியிருந்தால்,,,, நினைத்துப் பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. இதில் மாணிக்கத்திற்குப் பங்கிருக்குமா என்பதை அவரால் தீர்மானிக்க முடியவில்லை. புத்திசாலி என்றாலும், கமலக்கண்ணன் அளவு நேரான ஆள் மாணிக்கம் இல்லை என்பதை அவர் அறிவார்.  இந்தச் சம்பவம் நடந்த போது மாணிக்கம் வெளிநாடு போயிருந்ததால் அவருக்குத் தெரியாமல் இது நடந்திருக்கவும் வாய்ப்புண்டு. ஒருவேளை தெரிந்தே நடந்திருந்தால் என்கிற கேள்வி அவரைத் தூங்க விடவில்லை. செந்தில்நாதனிடம் இந்த வழக்கைத் தொடர்ந்து கண்காணிக்கும்படி சொல்லி இருந்தார். மாணிக்கத்திடமும் போன் செய்து நாளை காலை கட்சி அலுவலகத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். சங்கரமணி குறித்து ஒரு உறுதியான முடிவை எடுத்தாக வேண்டும் என்பதைக் கறாராகச் சொல்ல நினைத்திருக்கிறார்…..

அவர் அறைக்குள் யாரோ நுழைந்தது போல் இருந்தது. யார் என்று பார்க்கத் திரும்பினார். யாரும் தெரியவில்லை. ஆனால் யாரோ மறைந்து இருப்பது போன்ற உணர்வு தோன்றியது. அடுத்த கணம் அவரை எதோ ஒரு சக்தி கட்டிப் போட்டது. கைகாலை அசைக்க முடியவில்லை.  சிறிது சிறிதாக அவர் சுயநினைவை இழக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)
என்.கணேசன்

11 comments:

  1. பதிவை படிக்கும் பொழுது, நடந்து போன விஷயங்களுடன் நம்மை அறியாமலே
    ஒப்பிட தோன்றுகிறது.........இதில் சம்பந்தேமே இல்லாத ராஜதுரை பாதிக்கப்படுகிறார்...
    மர்ம மனிதனின் திட்டத்தால் செந்தில் நாதனுக்கு எதாவது பாதிப்பு ஏற்படுமா ?

    ReplyDelete
  2. மனோகரும் சங்கரமணி-மாணிக்கமும் பேசும் பேச்சு ரொம்ப யதார்த்தம். அதே நேரத்தில் சுருக் சுருக். எதிரியை இப்படி வளர்த்து விடறீங்களே எங்கள் க்ரிஷ் எப்படி சமாளிப்பான்?

    ReplyDelete
  3. Political deals are crisp and apt. Eagerly waiting for what next.

    ReplyDelete
  4. அரசியல் பேரம்
    திடுக் திடுக் என்று இருந்தது இந்த அத்யாயம்
    மர்ம மனிதன் முதல் அமைச்சர் அறையில் நுழைந்து விட்டான்
    அவன் நினைத்தது போல் அவன் எல்லா விஷயத்தையும் நடத்திக்கொண்டானா?

    waiting

    ReplyDelete
  5. Very short this week:-((((

    ReplyDelete
  6. "உடனடியாக சாகமாட்டார். தீவிர சிகிச்சைல இருப்பார். டாக்டர்கள் நாம தயாராகர வரைக்கும் அப்பப்ப ஒரு அறிக்கை கொடுத்திட்டிருப்பாங்க".... -னு படிக்கும்போது சமீபத்திய தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிழையை கலந்து சொல்றமாதிரி இருக்கு.... அருமை. எதுக்கும் ஒரு டிஸ்‌க்லேமர் போடுங்க...

    ReplyDelete
  7. உண்மை கலந்த பொய் எப்பொழுதும் நம்பும்படி மணதில் பதிந்துவிடுகிறது.

    ReplyDelete
  8. Apollo hospitalla mattum admit pannidathinga

    ReplyDelete
  9. ஹா ஹா 'உங்களை எங்கள் நண்பர்களாகவே வைக்க ஆதாரம் உதவும்' கட்டாய நண்பர்கள் ரசித்தேன் அரசியல் சூதாட்டத்தில் வெல்வதற்க்கு காய்கள் வெட்டுப்பட வேண்டியது நடந்தேறுகிறது

    ReplyDelete
  10. அப்ப ராஜதுரை சாமாதியில... யாரு தியானம் பண்ணுவாங்க..?

    ReplyDelete