எதிரிப்படைகள் ஷாஹாஜியைத் தேடிக் கண்டிப்பாக வருவார்கள் என்று
ஸ்ரீனிவாசராவ் எதிர்பார்த்திருந்தாலும் கூட இவ்வளவு சீக்கிரம் பின் தொடர்ந்து வருவார்கள்
என்று எதிர்பார்த்திருக்கவில்லை. ஒற்றனிடம் கேட்டார். “எத்தனை பேர் இருப்பார்கள்?”
“சுமார்
1500 பேர் இருப்பார்கள் பிரபு” என்றான் ஒற்றன்.
“யார்
தலைமையில் வருகிறார்கள்?” ஸ்ரீனிவாசராவ் கேட்டார்.
“லாக்கோஜி
ஜாதவ்ராவ் தலைமையில் வருகிறார்கள்” என்றவுடன் விதி வலிது மட்டுமல்ல வேடிக்கையானதும்
கூட என்று ஸ்ரீனிவாசராவ் நினைத்துக் கொண்டார். அவரது சிறு மாளிகைக்கு அடுத்தபடியாக
சற்று விசாலமானதும், வசதியானதுமான இன்னொரு சிறு மாளிகையில் தான் ஜீஜாபாயை அவர் தங்க வைத்திருந்தார். அந்த மாளிகைக்கு
அவர் விரைந்தார். ஜீஜாபாய் அவர் அங்குள்ள வசதி குறித்து விசாரிக்க மரியாதை நிமித்தம்
வந்திருக்கிறார் என்று நினைத்து சோகத்தை மறைத்துக் கொண்டு அவரை வரவேற்றாள்.
“இருப்பதிலேயே
இதுவே அதிக வசதி கொண்டது என்று இதை ஒதுக்கியுள்ளேன் சகோதரி. நீங்கள் பெரும் குறையாக
எதையும் உணரவில்லையே” என்று ஸ்ரீனிவாசராவ் கேட்டார்.
கட்டிய
கணவனையும், பெற்ற குழந்தையையும் பிரிந்து நிர்க்கதியாய்
நிற்பவளுக்கு எது தான் வசதியாக இருக்க முடியும் என்று ஜீஜாபாய் மனதில் நினைத்துக் கொண்டாலும்
புன்னகையுடன் “ஒரு குறையும் இல்லை சகோதரரே” என்றாள்.
“எதிரிப்படையினர்
வந்து கொண்டிருப்பதாக ஒற்றன் மூலம் செய்தி வந்திருக்கிறது சகோதரி” என்று ஸ்ரீனிவாசராவ்
மெல்லச் சொன்னார்.
ஜீஜாபாய்
இன்னேரம் கணவரும், பிள்ளையும் எவ்வளவு தூரம் போயிருப்பார்கள் என்று மனக்கணக்குப் போட்டு
நிம்மதியடைந்தாள். “இன்னேரம் என் கணவர் வெகுதூரம் போயிருப்பார். கவலை கொள்ள எதுவுமில்லை
சகோதரரே” என்று அவள் சொன்ன போது ஸ்ரீனிவாசராவ் அவள் தன் நிலையை எண்ணி வருத்தமோ பயமோ
கொள்ளவில்லை என்பதை வியப்புடன் கவனித்தார்.
“அந்தப்
படைக்குத் தலைமை தாங்கி வருவது உங்கள் தந்தை தான் சகோதரி” என்று ஸ்ரீனிவாசராவ் சொன்ன
போது ஒரு கணம் சிலையாய் சமைந்த ஜீஜாபாய் பின் “வருவது என் கணவரின் எதிரி சகோதரரே” என்று
உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் உறுதியாகச் சொன்னாள். ஸ்ரீனிவாசராவ் சிறு தலையசைப்புடன்
விடைபெற்றார்.
தக்காணப்
பீடபூமியின் அரசியல் சதுரங்கத்தில் சின்னாபின்னமானது அந்தப் பெரும் நிலப்பரப்பு மட்டுமல்ல,
எத்தனையோ குடும்பங்களும் தான். அதில் தன் குடும்பமும் ஒன்றாகிப் போனதை ஜீஜாபாய் இப்போது
வருத்தத்துடன் நினைத்துப் பார்க்கிறாள்…..
அவள்
தந்தை லாக்கோஜி ஜாதவ்ராவ் யாதவ அரசர்களின் வம்சாவளியில் வந்தவர். சிந்துகேத் என்ற பகுதியின்
தலைவராக இருந்த அவர் அகமதுநகர் அரசவையில் ஒரு சக்தி வாய்ந்த பிரபுவாகவும் இருந்தார்.
அவரிடம் 10000 குதிரைகள் கொண்ட சக்தி வாய்ந்த படை இருந்தது. அவருக்குப் பல கிராமங்கள்
சொந்தமாக இருந்தன. ஷாஹாஜியின் தந்தை மாலோஜி உதய்ப்பூர் ராணாக்களின் வீரவம்சத்தவர் என்றாலும்
அச்சமயத்தில் அகமதுநகர் படையில் ஒரு சிறுபிரிவின்
தலைவராக இருந்தார். சிறுபிரிவுத் தலைவராக இருந்த போதிலும் மாலோஜி மீது அப்போதைய அகமதுநகர்
சுல்தான் முதலாம் நிஜாம்ஷாவிற்கும், லாக்கோஜி ஜாதவ்ராவுக்கும் மரியாதை இருந்தது. மாலோஜியும், அவர் மகன் சிறுவன் ஷாஹாஜியும் அடிக்கடி
லாக்கோஜி ஜாதவ்ராவின் மாளிகைக்கு வருவதுண்டு. ஜீஜாபாய் ஷாஹாஜியை விட ஒரு வயது தான்
குறைந்தவள் என்பதால் இருவரும் சேர்ந்து விளையாடுவதுண்டு.
அப்படி
ஒரு ஹோலிப்பண்டிகையின் போது ஷாஹாஜியும், ஜீஜாபாயும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த
போது லாக்கோஜி ஜாதவ்ராவ் நாக்கில் விதி விளையாடியது. குழந்தைகளின் விளையாட்டை ரசித்தவர்
“என்னவொரு அருமையான ஜோடி” என்று வாய்விட்டுச் சத்தமாகச் சொல்ல அருகிலிருந்த மாலோஜி
அவர்கள் இருவரின் திருமணத்தை அவர் உறுதி செய்து விட்டதாக எடுத்துக் கொண்டதுடன் அங்கிருந்த எல்லோரையும் அழைத்துச் சொல்லவும் செய்தார். லாக்கோஜி
ஜாதவ்ராவ் தான் விளையாட்டாகச் சொன்னதை இவர் காரியமாய்ச் சொன்னதாக எடுத்துக் கொண்டு
விட்டாரே என்று திகைத்தார். பின்னால் அவர் அங்கு நடந்ததைத் தன் மனைவி மால்சாபாயிடம்
சொல்ல அவள் அவரைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டாள். தன் அன்பு மகள் ஒரு சாதாரண சிறுபடைப்பிரிவின்
தலைவரின் மகனுக்கு மனைவியாவதை அவளால் சகிக்க முடியவில்லை. “நீங்கள் தான் விளையாட்டாய்
சொன்னீர்கள் என்றால் மாலோஜிக்கு அறிவு எங்கே போயிற்று. நம் அந்தஸ்து என்ன? அவர்கள்
அந்தஸ்து என்ன? ஒரு அரசகுமாரனுக்கு மனைவியாக வேண்டிய என் மகளை இப்படி தாழ்ந்த நிலையில்
இருப்பவர் மகனுக்கு மணமுடித்துக் கொடுக்க நான் சம்மதிக்க மாட்டேன்…..” என்று சாடவே
லாக்கோஜி ஜாதவ்ராவுக்கு மனைவி சொல்வது சரியென்றே தோன்றியது.
மறுநாள்
அவர் மாளிகையில் நடக்க இருந்த விருந்துக்கு அனைவரையும் அழைத்த போது மாலோஜியையும் அழைத்தார்.
விருந்தின் போது நாசுக்காகச் சொல்லி அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார்.
ஆனால் விருந்துக்கு அழைப்பு விடுத்த போதே, “சம்பந்தம் முடியாமல் உங்கள் வீட்டு விருந்தில்
கைநனைப்பது சரியாக இருக்காது” என்று மாலோஜி சொல்லவே லாக்கோஜி ஜாதவ்ராவ் அன்று அப்படிச்
சொன்னது விளையாட்டாகத் தான் என்றும் திருமண எண்ணம் தனக்கு இல்லை என்பதையும் வெளிப்படையாகவே
தெரிவித்து விட்டார். உடனே தான் அவமானப்பட்டதாய்
நினைத்த மாலோஜி அவரை மற்போருக்கு அழைத்தார். அவமானப்படுத்தப்படுவதாய் நினைக்கும் வீரர்கள்
இப்படி தன்னுடன் தனியாக யுத்தம் செய்வதற்கு அழைப்பு விடுவது அக்காலத்தில் சகஜமாய் இருந்தது.
இதைக் கேள்விப்பட்ட சுல்தான் முதலாம் நிஜாம் ஷா இருவரையும் வரவழைத்து நடந்ததை எல்லாம்
கேட்டறிந்தார். அந்தஸ்து தானே பிரச்னை என்று சொல்லி உடனே 5000 குதிரைகள் கொண்ட படைக்குத்
தலைவனாக மாலோஜியை உயர்த்தி, இரண்டு கோட்டைகள் தந்து கவுரவத்திலும் உயர்த்தி, இனி திருமண
ஏற்பாடுகள் நடக்கட்டும் என்று சொல்லி விட்டார். அதன் பிறகு மறுக்க முடியாமல் லாக்கோஜி
ஜாதவ்ராவ் சம்மதித்தார். அரசரே நேரடியாக வந்து
வாழ்த்த ஷாஹாஜி – ஜீஜாபாய் திருமணம் விமரிசையாக நடந்தது. ஆனாலும் பழைய பகை முழுவதுமாக
முடிந்து விடாமல் இரு குடும்பங்களுக்குள் புகைந்து கொண்டே இருந்தது.
அரசியல்
சதுரங்கத்தில் ஷாஹாஜி அகமதுநகரின் சுல்தான் பக்கம் தீவிரமாகப் பிற்காலத்தில்
சென்றுவிட லாக்கோஜி ஜாதவ்ராவ் ஷாஜஹானின் முகலாயப் படையினர் பக்கம் தீவிரமாகச் செயல்பட்டார்.
உறவின் நெருக்கத்தை முற்றிலுமாக இரண்டு பக்கமும் உதறித் தள்ளியது. இருபக்கமும் தீவிரப்
பகைவர்களானார்கள். ஜீஜாபாய்க்குப் பிறந்த வீட்டுடன் இருந்த தொடர்பு என்றென்றைக்குமாய்
அறுந்து போனது. அவள் தன் பெற்றோரைக் கண்டு பல வருடங்கள் ஆகி விட்டன….. தற்போது
மஹூலிக் கோட்டையை முற்றுகை இட்டிருந்த படைக்குத் தலைமை வகித்திருந்தது லாக்கோஜி ஜாதவ்ராவ்
தான். தப்பித்து வந்த அவர்களைத் தொடர்ந்து வந்திருப்பதும் அவர் தான். ஆறு மாத முற்றுகையிலும்
சரி, இப்போதும் சரி, அவர் தன் மகளும் உள்ளே இருக்கிறாள் என்று ஒரு முறையாவது யோசித்திருப்பாரா
என்று ஜீஜாபாய் நினைத்துப் பார்த்தாள்….. உண்மை கசந்தது.!
ஸ்ரீனிவாசராவ் ஷாஹாஜியை வரவேற்ற விதத்தில் ஷாஹாஜியின் மாமனாரை
வரவேற்கத் துணியவில்லை. லாக்கோஜி ஜாதவ்ராவ் படையினருடன் ஷிவ்னேரி கோட்டை வாயிலுக்கு
வந்து சேர்ந்த போது ஸ்ரீனிவாசராவ் கோட்டை வாசலில் காத்து நின்று வரவேற்றார்.
லாக்கோஜி
ஜாதவ்ராவ் அந்த வரவேற்பில் மயங்கி விடவில்லை. ஸ்ரீனிவாசராவ் போன்ற மனிதர்களை அவர் நன்றாக
அறிவார். செய்யும் தவறுகளை மரியாதையால் மறைக்க முற்படும் ஆட்கள் இவர்கள்….
“என்ன
ஸ்ரீனிவாசராவ் மரியாதை எல்லாம் தடபுடலாக இருக்கிறது. இதை வைத்துப் பார்க்கையில் நீ
செய்திருக்கும் தவறும் இதே அளவில் இருக்கும் போலத் தெரிகிறதே” என்று வெளிப்படையாகவே
அவர் கேட்டார்.
“மரியாதைகளை
தகுதி உடையவர்களுக்கு எப்போதும் அளிக்கும் பழக்கம் உடையவன் பிரபுவே நான். தங்கள் வயதுக்கும்,
அறிவுக்கும் பண்புக்கும் அளிக்கும் மரியாதையை இப்படிக் கொச்சைப்படுத்துகிறீர்களே” என்று
ஸ்ரீனிவாசராவ் வருத்தத்தைக் காட்டினார்.
“உன்னை
அறிந்தவன் என்பதால் சந்தேகப்பட்டேன். அது போகட்டும். உள்ளே எதிரி இருக்கிறானா?”
“உங்கள்
எதிரியை உள்ளே விடும் அளவு என்புத்தி இன்னும் கெட்டு விடவில்லை பிரபுவே. அப்படி யாரையும்
நான் உள்ளே அனுமதிக்கவில்லை”
”சில
நாழிகைகளுக்கு முன் எதிரியை நீர் உள்ளே அனுமதித்ததை நேரில் கண்டதாய் என் ஒற்றர்கள்
சொன்னார்களே”” லாக்கோஜி ஜாதவ்ராவ் ஸ்ரீனிவாசராவைக் கூர்ந்து பார்த்தபடியே கேட்டார்.
“அதை
நான் மறுக்கிறேன் ஐயா. இன்று தங்கள் மருமகனைத் தவிர வேறு வெளியாட்கள் யாரும் இந்தக்
கோட்டைக்குள் புகவில்லை பிரபு” சொல்லும் போது முகத்தை வெகுளியாய் ஸ்ரீனிவாசராவ் வைத்துக்
கொண்டார்.
லாக்கோஜி
ஜாதவ்ராவின் முகம் உடனே கருத்தது. “அவனை என் மருமகனாக நான் அங்கீகரிக்கவில்லை ஸ்ரீனிவாசராவ்.
அப்படிப்பட்டவனை உன் கோட்டைக்குள் அனுமதித்ததோடு என் மருமகன் என்று சொல்லி என்னை அவமதிக்கவும்
செய்கிறாய். இந்தக் குற்றத்திற்காகவே உன் நாக்கை அறுத்தாலும் தப்பில்லை….”
“அங்கீகரிக்க
மறுப்பதால் உறவுகள் இல்லாமல் போய் விடுவதில்லை பிரபு. அவர் தனியாக வந்திருந்தால் உங்கள்
எதிரணியில் இருப்பதால் எதிரி என்று நினைத்திருப்பேன். ஆனால் உங்கள் மகள் மற்றும் பேரப்பிள்ளையோடு
அவர் வந்ததால் தான் உறவை வைத்தே அவரை அனுமதித்தேன்…..”
மகளையும்
பேரனையும் பற்றிச் சொன்னதால் லாக்கோஜி ஜாதவ்ராவ் சற்று மென்மையானது போல் தோன்றியது.
ஆனாலும் அவர் அவர்களைப் பற்றி எதுவும் கேட்காமல் “அவன் உள்ளே தான் இருக்கிறானா….” என்று
சந்தேகத்தோடு அவர் தன் எதிரியையே விசாரித்தார்.
“இல்லை
ஐயா அவர் போய் விட்டார். அதையும் தங்கள் ஒற்றர்கள் தங்களிடம் கண்டிப்பாகத் தெரிவித்திருப்பார்கள்.
உள்ளே தங்கள் மகள் மட்டும் தான் இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியான தங்கள் மகளை உடன்
அழைத்துச் செல்வது அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்று பயப்பட்டு அவருக்கு மட்டும்
தான் ஷாஹாஜி அடைக்கலம் கேட்டார். பெண்மையையும், தாய்மையையும் போற்றும் மரபில் வந்த
எனக்கு மறுக்க முடியவில்லை. மேலும் ஒருவேளை நான் மறுத்து அனுப்பி விட்டால், அழைத்துச்
செல்லும் வழியில் கர்ப்பிணியான உங்கள் மகளுக்கு ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால்
உங்கள் கோபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே என்பதாலும் தான் நான் சம்மதித்தேன்….”
(தொடரும்)
என்.கணேசன்
(பொங்கல் திருநாளையொட்டி சத்ரபதி-3 அடுத்த திங்கட்கிழமைக்குப் பதிலாக அடுத்த ஞாயிறு 14.01.2018 அன்று மாலையே பதிவாகும்)
(பொங்கல் திருநாளையொட்டி சத்ரபதி-3 அடுத்த திங்கட்கிழமைக்குப் பதிலாக அடுத்த ஞாயிறு 14.01.2018 அன்று மாலையே பதிவாகும்)
Going Very interesting sir.
ReplyDeleteபாட புத்தகத்தில் சில வரிகளில் சிவாஜி பற்றி படித்து முடித்ததாய் ஞாபகம். சிவாஜியின் பெற்றோர் வாழ்வில் இருக்கும் இச்சிக்கல், அவர் தந்தைக்கு எதிராக தாத்தாவே இருந்தது எல்லாம் புதிதாய் இருக்கிறது. சுவாரசியமாகவும் இருக்கிறது. வீர சிவாஜி பற்றி விவரமாக தமிழர்கள் தெரிந்து கொள்ள இந்த சரித்திர நாவலை எழுத ஆரம்பித்ததற்கு நன்றி கணேசன் சார்.
ReplyDeleteசரித்திரத்தின் அறியா பக்கங்களை படிக்கும் பொழுது சுவராஸ்யமாக இருக்கின்றது...
ReplyDeleteநன்றி G
supper
ReplyDeleteசற்று சுவாரஸ்யமாக இருக்கிறது... ஐயா....
ReplyDeleteஆனால்..பெயர்கள் தான் குழப்பமாக உள்ளது..
New Year and Pongal Wishes to you and your Family, Sir.
ReplyDeleteஸ்ரீனிவாசராவ் நன்றாகவே வார்த்தை ஜாலம் புரிகின்றார்
ReplyDelete