சிகரம் தொட்ட அகரம்- 4
விதி குறுக்கிடும் வரை மாளவிகா ஐயர் என்ற அந்தச் சிறுமி
ஆனந்தமாகவே இருந்தாள். தமிழ்நாட்டில் கும்பகோணத்தைச் சேர்ந்தவள் அவள். அவளுடைய
தந்தை வேலை நிமித்தமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீரில் குடியேறி இருந்ததால்
அங்கேயே படித்து வளர்ந்து வந்தாள். படிப்பில் சாதாரணமாகவே இருந்த போதும்
விளையாட்டில் மிகுந்த ஆர்வம் அவளுக்கு இருந்தது. நீச்சல், ஸ்கேட்டிங் இரண்டிலும்
அவளுக்கு நல்ல தேர்ச்சி இருந்தது. கதக் நடனத்தை ஏழு வருடங்களாகப் பயின்று சிறப்பாக
நடனமும் ஆடி வந்தாள். எல்லாம் 2002 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி வரை.
அன்று தான் அந்த பதிமூன்று வயது
சிறுமியின் வாழ்வில் விதி விளையாடியது. அன்று அவள் அணிந்திருந்த ஜீன்ஸில் சின்னதாக
ஒரு கிழிசல் இருந்தது. ஃபெவிகால் வைத்து அந்தக் கிழிசலை ஒட்டிய மாளவிகாவுக்கு ஒரு
கனமான இரும்பால் அதைத் தட்டி சமன்படுத்தினால் ஒட்டியது தெரியாது என்று தோன்றியது.
கனமாக ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டே சென்ற போது தெருவில் ஒரு இரும்புக்
குண்டு போல ஏதோ தெரிந்திருக்கிறது. அந்தக் குண்டு வெடிகுண்டு என்று மாளவிகாவுக்குத்
தெரிந்திருக்கவில்லை. அவர்கள் பகுதியில் இயங்கி வந்த வெடிகுண்டுக் கிடங்கு ஒன்று
சில காலத்திற்கு முன் தீக்கிரையாகி அதன் பொருள்கள் அந்தப் பகுதியெங்கும் சிதறிக்
கிடந்தன. அவை செயலிழந்தவை என்று கருதியதால் அப்பகுதி மக்கள் அவற்றிற்குப் பெரிய
முக்கியத்துவம் தரவில்லை.
மாளவிகா எடுத்த வெடிகுண்டு
செயலிழக்காத வெடிகுண்டு. அவள் அதை எடுத்து ஒட்டிய ஜீன்ஸில் பலமாகத் தட்டிய போது
அது வெடித்தது. அந்த இடத்திலேயே மாளவிகா தன் இரண்டு கைகளையும் இழந்தாள். அவளுடைய
கால்கள் இரண்டும் பலத்த சேதத்திற்கு உள்ளாயின. வெளியே ஓடி வந்த அவளுடைய தாய் “என்
குழந்தையின் கைகள் எங்கே?” என்று கதறியது தான் அவள் மயக்கம்
அடைவதற்கு முன் கேட்ட கடைசி வார்த்தைகள்.
அதிகமாய் ரத்தம் வெளியேறி இருந்த, கைகள் இல்லாத, கால்கள்
உடலில் இருந்து அறுபடும் நிலையில் உள்ள அந்தச் சிறுமி பிழைப்பாளா என்ற சந்தேகம்
மருத்துவர்களுக்கு இருந்தது. பிழைத்தாலும் ஒரு காய்கறியைப் போல தான் அசைவற்று
முடங்கி இருக்க வேண்டி இருக்கும் என்று பார்த்தவர்கள் நினைத்தார்கள்.
நினைவு திரும்பியவுடன் மாளவிகா தாயிடம் தன் விளையாட்டுச்
செயலால் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக முதலில் மன்னிப்பு தான் கேட்டாள். கண்
கலங்கிய பெற்றோர்க்கு தங்கள் மகளை முடிந்த வரை சரியாக்க வேண்டும் என்ற உறுதியான
எண்ணம் இருந்தது. மருத்துவ விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் தங்களால் முடிந்ததை
எல்லாம் செய்தார்கள். முதலில் கால்களை சரி செய்யப்
பார்த்தார்கள். ஒரு காலில் அவளுக்கு உணர்ச்சியே இருக்கவில்லை. இன்னொரு காலை அவளால்
சிறிதளவுக்கே உயர்த்த முடிந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்து ஓரளவு
அவற்றைச் சரி செய்தார்கள். ஆனால் நடந்து நடந்து தான் ஓரளவாவது இயல்பு நிலைக்குத்
திரும்ப முடியும் என்று சொல்லி விட்டார்கள்.
தன் பெற்றோர் இத்தனை முயற்சிகள் எடுக்கும் போது அவர்கள்
மனதில் சிறிய அளவிலாவது திருப்தி ஏற்பட வேண்டும் என்று எண்ணி, உயிர் போகும் அளவு வலி
எடுத்தாலும் அதைப் பொருட்படுத்தாது சில மாதங்கள் நடந்து மாளவிகா ஓரளவு
இயல்புநிலைக்குத் திரும்பினாள். அவளுக்கும் முடங்கி விடுவதில் சிறிதும்
விருப்பமில்லை.
அடுத்ததாக செயற்கை உயிர் மின்சாரக் கைகள் (bio-electric
hands) அவளுக்கு சென்னையில் பொருத்தப்பட்டன.
அவற்றையும் பயிற்சிகள் மூலமாகவே அவளால் பயன்படுத்த முடியும் என்கிற நிலை. அதையும்
சலிக்காமல் செய்த மாளவிகா அந்தக் கைகளைக் கொண்டு மெல்ல எழுதவும் கற்றுக் கொண்டாள்.
ஆரம்பத்தில் மிகப் பெரியதாகத் தான் அவளால் எழுத்துக்களை எழுத முடிந்தது.
இதற்குள்
இரண்டாண்டு காலம் ஓடி விட்டது. மகள் தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறாளே என்று
பெற்றோர் ஆறுதல் அடைந்தனர். ஆனால் மாளவிகா அதில் திருப்தி அடையவில்லை. அவளுக்கு
அவளுடைய பள்ளித் தோழி ஒருத்தியின் தொடர்பு போன் மூலம் இருந்து கொண்டே இருந்தது.
பத்தாம் வகுப்பு பரிட்சைக்கு இன்னும் மூன்று மாதங்களே இருப்பதால் அதற்கு
மும்முரமாகப் படித்துக் கொண்டிருப்பதாக அந்தத் தோழி தெரிவித்தாள்.
மாளவிகாவுக்கு
தானும் அந்தப் பொதுத் தேர்வை எழுத வேண்டும் என்கிற ஆசை எழுந்தது. அதை அவள் தன்
பெற்றோரிடம் தெரிவித்தாள். எட்டாம் வகுப்பு வரை தான் படித்திருந்த மகள், ஒன்பது
மற்றும் பத்தாம் வகுப்புப் பாடங்களை இது வரை தவற விட்டு பத்தாம் வகுப்புப் பொதுத்
தேர்வுக்கு மூன்று மாதங்களில் தயாராக முடியுமா என்ற சந்தேகம் அவர்களுக்கு
இருந்தாலும் மகளின் ஆர்வத்திற்கு முட்டுக்கட்டை போட அவர்கள் விரும்பவில்லை.
இது போல் உடல் ஊனமுற்றவர்கள் சொல்லச் சொல்ல எழுத அரசு ஆட்களை
நியமித்து தேர்வு எழுத அனுமதிப்பதால் அவளை அவளால் முடிந்த வரை படிக்க மட்டும்
சொன்னார்கள். மூன்று மாதங்கள் தனியார் பயிற்சி நிறுவனத்தில் மாளவிகா படித்தாள்.
வீடு வந்த பிறகும் மாலையும் இரவும் விடாப்பிடியாகப் படித்தாள்.
மாளவிகா தேர்வு எழுதினாள். எட்டாம் வகுப்பு
வரை சாதாரண மாணவியாக இருந்த மாளவிகா இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில் தேர்வெழுதி
மாநில அளவில் ரேங்க் வாங்கியது தான் தேர்வு முடிவுகள் வெளியான தினத்தில்
பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தி. கணிதம் மற்றும் அறிவியலில் சதமடித்த அவள்
ஹிந்தித் தேர்வில் 97% எடுத்து மாநிலத்தில் ஹிந்தியில் முதல் மதிப்பெண்
பெற்றிருந்தாள். பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சியாளர்கள் எல்லாம் அவள்
வீட்டுக்கு ஓடி வந்த போது மாளவிகா பெருமகிழ்ச்சி அடைந்தாள் என்றாலும் பெற்றோர்
அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. எல்லாம் முடிந்தது என்று ஊர் நினைத்த
வேளையில் தங்கள் மகள் சாதித்துக் காட்டியதில் அவர்கள் மனம் நிறைந்து போனது. அதன்
பின் மாளவிகா ஒன்றன் பின் ஒன்றாகப் பல சாதனைகள் புரிந்தாள்.
அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது மாளவிகாவை
குடியரசுத்தலைவர் மாளிகைக்கு வரவழைத்து பாராட்டி இருக்கிறார்.
பி.எச்.டி பட்டம் பெற்ற மாளவிகா யார் உதவியும்
இல்லாமல் தானே பயணங்கள் செய்கிறார். இன்று உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று பேசும்
அளவு உயர்ந்திருக்கிறார். பல அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறார். பெங்களூரில்
ஒரு நிகழ்ச்சியில் நடனம் கூட ஆடி பார்வையாளர்களை பிரமிக்கவும்
வைத்திருக்கிறார். அழகாக உடைகள்
உடுத்துவதில் ஆர்வம் உள்ள அவர் உடல் ஊனமுற்றவர்களுக்கான ஆடைகள் விளம்பரத்திலும்
இன்று மிளிர்கிறார்.
தைரியத்திற்கும், கடுமையான முயற்சிகளுக்கும் முன் உதாரணமாக
இருக்கும் மாளவிகா ஐயருக்கு தனக்கு நடந்த அந்த கோர விபத்தில் சிறிதும்
வருத்தமில்லை. அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால் பலரோடு ஒருவராக அடையாளம் தெரியாமல்
வாழ்ந்து கொண்டிருக்க வேண்டி வந்திருக்கும் என்கிறார் அவர். தன் உள்ளே இருக்கும்
சக்தியை முழுமையாக வெளியே கொண்டு வந்திருக்க முடிந்திருக்காது என்கிறார்.
இன்று உடல் ஊனமுற்ற குழந்தைகள் பலருக்கும் ஒரு மகத்தான
வழிகாட்டியாக நாட்டில் வலம் வரும் அவர் அது போன்ற எத்தனையோ குழந்தைகளிடம் தானும்
நிறைய கற்க இருப்பதாக உணர்ந்து கற்று வருவதாகவும் பணிவாகச் சொல்கிறார்.
எல்லாம் சரியாக இருந்தும், இருப்பதில் அது சொத்தை, இது சொத்தை
என்று குறை கண்டு புலம்பி எதையும் முறையாகப் பயன்படுத்தாமல், எதையும்
சாதிக்காமல் ஏனோ தானோ என்று வீண் வாழ்க்கை வாழ்ந்து மடியும் வேடிக்கை
மனிதர்களுக்கு மாளவிகா ஐயரிடம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறதல்லவா?
என்.கணேசன்
தன்னம்பிக்கை துளிர்க்கிறது... அருமை
ReplyDeleteதன்னம்பிக்கை தரும் பகிர்வு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteArumai
ReplyDeleteவாழ்க வளமுடன் மாளவிகா
ReplyDeleteNo words to express Sir. I am proud of Malavika the great.
ReplyDeleteAwesome
ReplyDelete